புதன், 20 செப்டம்பர், 2017

சென்னை அருகே முல்லைப்பூ வேளாண்மை விவசாயம் புதுமுயற்சி

சென்னை என்றாலே....,
சட்டமன்றம், தலைமைச் செயலகம், போக்குவரத்து மிகுந்த சாலைகள், மக்கள்
கூட்டம் , மென்பொருள் நிறுவனங்கள், பிரியாணி கடைகள் ,மெரினா கடற்கரை...
போன்றவைதான் நினைவுக்கு வரும்.
ஆனால், பரபரப்பான அந்த மாநகரத்திலும் ஆங்காங்கே விவசாயம் நடந்து வருகிறது
என்பது பலருக்கு ஆச்சர்யம் அளிக்கக்கூடும். அப்படி இன்னமும் விவசாயம்
நடந்துவரும் ஒரு கிராமம், கவுல் பஜார். மீனம்பாக்கம் விமான நிலையத்தின்
பின்புறம் இருக்கிறது, இக்கிராமம். பல்லாவரத்திலிருந்து ஐந்து
கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்கு முல்லைப் பூ சாகுபடியில்
ஈடுபட்டு வருகிறார், ராஜேந்திரன்.
விமான நிலையத்தின் பின்புறச் சுற்றுச்சுவரை ஒட்டி இருக்கிறது,
ராஜேந்திரனின் பச்சைப்பசேல் மலர்த் தோட்டம். “எங்க ஏரியாவுல முன்னாடி
முழுக்க விவசாயம்தான் இருந்துச்சு. இப்போ, ஆள் பற்றாக்குறையால கொஞ்ச
இடத்துலதான் விவசாயம் நடக்குது. அதிகமா மல்லி, முல்லை, காக்கரட்டான்னு பூ
விவசாயம்தான். எல்லோருமே ரெண்டு, மூணு வகையான பூக்களைச் சாகுபடி
செய்வோம். அதோட காய்கறி, கீரையும் பயிர் செய்வோம். இப்போ தண்ணீர்ப்
பற்றாக்குறையா இருக்கிறதால, கிணத்துல இருக்குற கொஞ்ச நஞ்ச தண்ணியை
வெச்சு, முல்லைப் பூவை மட்டும் சாகுபடி செஞ்சுகிட்டிருக்கேன். கொஞ்சமா
மிளகாய், அரைக்கீரை, சிறுகீரை, முருங்கை போட்டிருக்கேன்.
2015-ம் வருஷம் வெள்ளம் வந்ததுல தோட்டம் முழுசா அழிஞ்சுப் போச்சு.
அப்புறமா எல்லாத்தையும் சீரமைச்சு, இப்போ விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன்.
மொத்தம் இரண்டரை ஏக்கர் நிலமிருக்கு. 40 சென்ட் நிலத்துலதான் முல்லைப் பூ
இருக்கு. அதில்லாம இந்தப்பக்கம் பூப்பறிக்க ஆள் கிடைக்கிறதில்ல. அதனால
குறைந்தளவுல நட்டாதான் சமாளிக்க முடியும்” முன்கதை சொன்ன ராஜேந்திரன்,
தொடர்ந்தார்.
“முல்லைப் பூ, வறட்சியில நல்லா வரும்னு சொன்னதால, வேலூர்ல இருந்து நாத்து
வாங்கிட்டு வந்து நடவு செஞ்சேன். வறட்சியிலும் முல்லைப் பூ நல்ல மகசூல்
கொடுத்திட்டு இருக்கு. முதல்ல மல்லிகைப் பூ நடவு செஞ்ச நிலம்தான் இது.
அதைப் பராமரிக்க முடியாமத்தான் முல்லைப் பூவுக்கு மாறினேன். 40 சென்ட்
முல்லை, அரைக்கீரை, மணத்தக்காளி கீரை, மிளகாய், முருங்கைனு கிடைக்கிற
வருமானத்தை வெச்சு, குடும்பத்தை நடத்திட்டு இருக்கேன்.
பக்கத்துல இருக்குற பல்லாவரம் மார்க்கெட்லதான் பூவை விற்பனை செய்றேன்.
தினமும் காலையில் பூவைப் பறிச்சு மார்க்கெட்டுக்க
ுக் கொண்டு போயிடுவேன். சில நேரங்கள்ல என் நிலத்துக்கே வந்து பூவை
வாங்கிக்கிறாங்க. ஒரு தடவை நடவு செஞ்சுட்டா, இருபது வருஷம் வரை
பூப்பறிச்சுட்டே இருக்கலாம். நடவு செஞ்ச ஆறு மாசத்துல இருந்து,
பூப்பறிக்க ஆரம்பிக்கலாம்” என்ற ராஜேந்திரன், முல்லைப் பூ கொடுக்கும்
வருமானம் குறித்துச் சொன்னார்.
“இப்போ, ஒரு நாளைக்கு 10 கிலோ அளவுக்குப் பூ கிடைக்குது. மழைக்காலமா
இருந்தா, தினமும் 50 கிலோவுல இருந்து 80 கிலோ வரைக்கும்கூட பூக்கள்
கிடைக்கும். இப்போ ஒரு கிலோ பூ 150 ரூபாய்னு விற்பனையாகுது. அந்த வகையில
தினமும் 1,500 ரூபாய் கிடைக்குது.
முழுக்க ரசாயன முறையிலத்தான் சாகுபடி செய்றேன். இதுல ரசாயன உரம்,
பூச்சிக்கொல்லி, பறிப்புக் கூலினு பாதியளவு செலவாகிடும். மீதி 750 ரூபாய்
லாபமாக நிக்கும். நானும் என் மனைவியும் சேர்ந்து உழைக்கிறதால ஆள் கூலி
குறையுது” .
“விவசாயம்தான் எங்க குலத்தொழில். விவசாயம் பார்த்துதான் என் பசங்களைப்
படிக்க வெச்சேன். ஆனா, அவங்க விவசாயம் பக்கம் வர்றதுக்கு யோசிக்கிறாங்க.
இந்தப் பகுதிகள்ல இன்னும் கொஞ்ச நாள்ல விவசாயம் போயிடும்னு தோணுது.
ஏற்கெனவே விமான நிலைய விரிவாக்கம்னு ஆரம்பிச்சப்பவே விவசாயம் காலியாகுற
சூழ்நிலை வந்தது. ஆனா, அந்த வேலைகளை நிறுத்திட்டதால இன்னமும் விவசாயம்
பார்த்துட்டு இருக்கோம். விவசாயம் செய்யுறதுல பல நெருக்கடிங்க
இருந்தாலும், மனசுக்கு நிம்மதியான தொழில் விவசாயம்தாங்கிறதை மறுக்க
முடியாது” . என்கிறார் ராஜேந்திரன்.
இவர் ரசாயன முறையை விட்டு இயற்க்கை முறைக்கு மற்றும் பட்சத்தில் செலவு
பாதியாக குறையும் வாய்ப்புள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக