வியாழன், 21 செப்டம்பர், 2017

வெள்ளையர் க்கு செவ்விந்தியர் எழுதிய கடிதம் இயற்கை அழிவு அமெரிக்கா

சுவிஸ் தமிழ் சங்கம்
# கதிராமங்களம்காப்போம்
கி.பி.1851 இல் ஃபிராங்க்ளின் பியர்ஸ் என்ற அமெரிக்க அதிபர், சுக்வாமிஷ்
என்ற செவ்விந்திய இன மக்களுக்குச் சொந்தமான 20 லட்சம் ஏக்கர் நிலத்தை
விலைக்குக் கேட்டார். அதற்குப் பதிலளித்து அந்தக் குழுவின் தலைவர்
சியாட்டில் அமெரிக்க அதிபருக்கு எழுதியதாகக் கூறப்படும் பிரபலமான
கடித்திலிருந்து சில வரிகள்
"எப்படிப் பார்த்தாலும், எங்கள் பாதைகள் வேறு, உனது பாதைகள் வேறுதான்.
எங்களுக்கு உங்கள் நகரங்களைப் பார்க்கும் போதே எரிகிறது, வேதனை வாட்டி
எடுக்கிறது. காட்டுமிராண்டிக
ளுக்கு நகரங்களை விளங்கிக் கொள்ள முடியாதென்கிறாய்.
வெள்ளையனின் நகரங்களில் அமைதியான ஒரே ஒரு இடத்தைக் கூட உன்னால் காட்ட
முடியாது; வசந்த காலத்தில் இலைகள் விரியும் ஓசைகளை அங்கே கேட்க முடியாது.
ஒரு பூச்சியின் சிறகுகள் அசையும் ஓசையைக் கூடக் கேட்க முடியாது.
ஒருவேளை, நான் காட்டுமிராண்டி என்பதால் எனக்குப் புரியாது என்பாய்.
உனது நகரங்களின் இரைச்சல் காதைக் கிழிக்கிறது. இரவில் ஒற்றைப் பறவையின்
ஏக்கம் தொனிக்கும் குரலோ, குளத்தின் அருகே தவளைகளின் சுவையான விவாதங்களோ
கேளாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? நான் ஒரு செவ்விந்தியன், எனக்கு
விளங்கவில்லை.
குளத்தின் மேல் தடவிச் செல்லும் காற்றின் ஒலியை விரும்புகிறான் ஒரு
செவ்விந்தியன். பகலில் பெய்யும் மழை சுத்தப்படுத்திய காற்றின் ஊசி
இலையில் பரவி வந்த காற்றின் வாசனையே அவன் விரும்பும் வாசனை.
காற்று அவனது பொக்கிஷம். விலங்குகள், மரங்கள், மனிதர்கள் என்று எல்லா
சீவராசிகளுமே ஒரே மூச்சுக் காற்றைத்தான் சுவாசிக்கின்றன.
ஒரு வெள்ளையன் தான் சுவாசிக்கும் காற்றை என்றைக்காவது நின்று கவனித்திருப்பானா?
பல நாட்களாகவே மரணப் படுக்கையில் விழுந்து விட்டவனைப்போல அல்லவோ நாறும்
காற்றில் அவன் மூச்சிறுகிக் கிடக்கிறான்.
உங்களுக்கு நிலத்தை விற்கிறோம் என்றால் காற்று எங்களின் பொக்கிஷம் என்று
அறிந்து கொள்ளுங்கள். எல்லா உயிருக்கும் காற்றே ஆதாரம், அவற்றில் எல்லாம்
காற்றின் ஆன்மா பாய்ந்து ஓடுகிறது. எங்கள் பாட்டனுக்கு எது முதன்முதலில்
உயிரானமூச்சைக் கொடுத்ததோ அதே காற்றுதான் அவருக்கு மரணத்தின்போது
பெருமூச்சையும் கொடுத்தது.
எங்கள் நிலத்தை விற்கிறோம் என்றால் தனியே அதை நீ புனிதமாகக்
கருதவேண்டும், பாதுகாக்க வேண்டும். அங்கே போகிற வெள்ளையன்கூட பூக்களின்
இனிய மணம் நிறைந்த காற்றைச் சுவாசிக்கலாம்.
நானொரு காட்டுமிராண்டி; எனக்கு வேறு விதமாகப் புரிந்து கொள்ளவும் தெரியவில்லை.
புல்வெளியில் ஆயிரம் எருதுகளின் சடலங்கள் அழுகிக் கிடப்பதைப்
பார்த்திருக்கிறேன் அவை, அருகே ரயிலிலிருந்து வெள்ளையர்களால்
பொழுதுபோக்குக்காகச் சுட்டுக் கொல்லப்பட்டவை. புகை விட்டுச் செல்லும் உன்
ரயில் எங்கள் எருதுகளை விட எந்த விதத்தில் உயர்ந்தது? எனக்கு
விளங்கவில்லை நானொரு காட்டுமிராண்டி.
விலங்குகள் இல்லை என்றால் மனிதன் ஏது? விலங்குகள் எல்லாம் ஒழிக்கப்பட்டு
விட்டால் ஆன்மாவை விட்டு விட்ட கூடுபோல மனிதன் செத்துப் போவான்.
விலங்குகளுக்கு என்னவெல்லாம் நேர்ந்ததோ, மனிதனுக்கு அவை சீக்கிரத்திலேயே
நடக்கும். எல்லாமே ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை.
உன் குழந்தைகளுக்கு நீ கற்றுத்தா அவர்களின் காலடியில் உள்ள மண்
பாட்டன்மாரை எரித்த சாம்பல் என்று. அதனால்தான் அவர்கள் நிலத்தைப் போற்ற
வேண்டும் என்கிறேன். எங்கள் சுற்றத்தாரின் வாழ்க்கையால் நிரம்பிய
பொக்கிஷமே இந்தப் பூமி என்பதை உன் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்.
பூமி நமது தாய் என்று நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக்
கொடுத்தோம்; அதை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
பூமிக்கு எதெல்லாம் நேரிடுமோ அதுவே அவன் பிள்ளைகளுக்கும் ஆகும்.
பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல மனிதன் தான் பூமிக்குச் சொந்தம்
உங்கள் நரம்புகளில் ஓடும் ரத்தம் கடலைச் சேரும் பொழுது
உங்கள் எலும்புகளில் இருக்கும் மண் நிலத்தைச் சேரும் பொழுது
ஒருவேளை அப்பொழுது நீங்கள் நினைவு கூறலாம், இந்த நிலம் உங்களுக்குச்
சொந்தமானது இல்லை என்று
நீங்கள்தான் நிலத்திற்குச் சொந்தமானவர்கள் என்று"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக