புதன், 20 செப்டம்பர், 2017

பாஜக குறுக்குவழி ஆட்சி பிடிப்பு விகடன் கட்டுரை

படையெடு... ஆக்கிரமி... ஆட்சி செய் .! - பா.ஜ.க. பின் பாதை பாலிடிக்ஸ்..!
கொல்லைப்புற வழியாக வந்து தமிழ்நாடு அரசாங்கத்தைக் குத்தகைக்கு
எடுத்துள்ளது பா.ஜ.க. குத்தகைப் பணம் தரும் திட்டம் இல்லை. மிரட்டல்
ஒன்றே ஆயுதம். முடியாட்சிக் காலத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் வெளிதேசத்தில்
இருந்து வருவார்கள். குடியாட்சிக் காலத்தில் முன்னேறியிருக்க
ிறோம். சொந்த தேசத்துக்குள்ளே
யே அவர்களும் இருக்கிறார்கள். ‘அச்சுறுத்து; ஆக்கிரமி; ஆட்சி செய்’
என்பதுதான் பா.ஜ.க-வின் அரசியல் வேதம்.
‘அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப கிடைக்கும்?’ என்று தம்பிமார்கள்
காத்திருக்க... அஞ்சலி செலுத்த வந்தவர்கள் திண்ணையைப் பட்டா போட்டது
மாதிரி அ.தி.மு.க-வைக் கபளீகரம் செய்து கொண்டு வருகிறது பா.ஜ.க. சொந்த
செல்வாக்கால் ஆட்சியைப் பிடிப்பது ஒரு வகை. அடுத்தவர் செல்வாக்கைக்
குலைத்து ஆட்சியை அபகரிப்பது ஒரு கலை. இதைத்தான் பா.ஜ.க. செய்யத் தொடங்கி
தொடர்ந்து வருகிறது.
இலட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தை தனது நடிப்பால் ஈர்த்து, அவர்களை
அரசியல் சக்தியாக மாற்றி மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாகத்
தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருந்தவர் எம்.ஜி.ஆர். அவரால்
அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட ஜெயலலிதா, தனது அச்சுறுத்தும் ஆளுமைத்
திறத்தால் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் நான்கு முறை (1991, 2001, 2011,
2016) தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்து ‘மகாராணியா’கவே மறைந்தும் போனார்.
சும்மா சாகவில்லை ஜெயலலிதா. பலநூறு கோடி மதிப்பிலான சொத்துகளை விட்டுச்
சென்றுள்ளார். 135 சட்டமன்ற உறுப்பினர்களையும், 37 நாடாளுமன்ற
உறுப்பினர்களையும் வாங்கிக் கொடுத்துச் சென்றுள்ளார். 135 பேரால் தமிழக
ஆட்சி அதிகாரம் தக்க வைக்கப்பட்டுள்ளது. 37 நாடாளுமன்ற உறுப்பினர்களின்
தயவு, ஆடும் மத்திய அரசாக இருந்தால் நிச்சயம் தேவைப்படும். அகில இந்திய
அளவில் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையும்
அ.தி.மு.க-வுக்கு உண்டு.
யார் வாரிசு என்று சொல்லாமல் போனதால், சொத்துகள் அநாதை ஆவதைப் போலவே
ஆட்சியும் அநாதை ஆகிக்கொண்டிருக்கிறது. புதிய காப்பாளராக புறப்பட்டு
வருகிறார் நரேந்திர மோடி. இப்படி நடந்துகொள்ள கூச்சப்படவில்லை அவர்.
‘மோடியா? லேடியா?’ என்று கேட்டு அகில இந்திய அளவில் நரேந்திர மோடிக்குச்
சவால் விட்டவர் ஜெயலலிதா மட்டும்தான். எப்படியாவது அவரிடம் ஐந்து
தொகுதிகள் வாங்கிவிட்டால் போதும் என்று போயஸ் கார்டன் வீட்டுக்கு வலிய
விருந்து சாப்பிட வந்தவர் மோடி. இதற்கான பேச்சு வார்த்தையையே அவரைத்
தொடங்கவிடாமல் திணறடித்தவர் ஜெயலலிதா. ஒருவேளை சாப்பாட்டுடன் மோடியைத்
திருப்பி அனுப்பியவர் ஜெயலலிதா. அதன்பிறகுதான் விஜயகாந்த், ராமதாஸ், வைகோ
என திக்குத் தெரியாமல் அலைந்தது பா.ஜ.க.
அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்னால், வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்தவர்
ஜெயலலிதா. `அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா' என்று சொன்னவர் ஜெயலலிதா.
ஜார்ஜ் ஃபெர்னான்டஸும், ஜஸ்வந்த் சிங்கும், யஷ்வந்த் சின்ஹாவும் போயஸ்
கார்டன் வாசலில் திருமலைச் சாமிகளுக்குப் போட்டியாக ‘தேவுடு’ காத்து
நின்றுகொண்டு இருந்தார்கள். ‘எனது வாழ்க்கையின் மிகக் கசப்பான நாட்கள்’
என்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத வாஜ்பாயே புலம்பினார். இதுதான்
ஜெயலலிதாவுக்கும் - பா.ஜ.க-வுக்கும் இருந்த நல்லுறவு!
இது எல்லாமே நரேந்திர மோடி அறிவார். ஜெயலலிதா இருந்தவரை அவரால் எதுவும்
செய்யமுடியவில்லை. இறந்தபிறகு, ஆபரேஷனை ஆரம்பித்துவிட்டார்.
பொதுவாகவே பா.ஜ.க-வினர் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கும்போது அதை
‘இயற்கை கூட்டணி’ என்பார்கள். அதாவது இருவரும் ஒரே வகைப்பட்ட சிந்தனை
கொண்டவர்கள் என்பது இதன் பொருள். தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த காலத்தில்,
‘தேர்தலுக்கான கூட்டணி’ என்பார்கள். அதாவது வெறும் ஓட்டுக்கான கூட்டணி
என்பது இதன் பொருள். ஆனால், இப்போது அ.தி.மு.க-வுடன் நரேந்திர மோடி
வைத்துக்கொண்டிருப்பது இயற்கைக் கூட்டணியும் அல்ல. செயற்கைக் கூட்டணியும்
அல்ல.இது கயமைக் கூட்டணி.
ஊழலால், லஞ்ச லாவண்யத்தால், முறைகேட்டால் கோடிக்கணக்கான சொத்துகளைச்
சேர்த்து, அதனைக் காப்பாற்றிக்கொள்ள அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி
இருக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர் செல்வமும். எடப்பாடி
பழனிசாமி இன்று தமிழ்நாட்டு முதலமைச்சர். அவரது நாற்காலியில் உட்காரத்
துடிக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். விட்டுத்தர மறுக்கிறார் எடப்பாடி.
இரண்டு பேருமே நாற்காலிக்குத் துடிப்பதற்குக் காரணம், இந்த நாற்காலி
போனால், திரும்பக் கிடைக்காது என்று இருவருக்குமே தெரியும். அதனால்
துடிக்கிறார்கள். மேலும் ஏதாவது ஒரு நாற்காலியில் இருந்தால்தான்
நடவடிக்கைகளில் இருந்து தப்ப முடியும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
இப்படிப் பயந்து சாகும் பலவீன மனிதர்களுக்கு ஆபத்பாந்தவன் டெல்லி இரும்பு
மனிதர்.
ஊழலற்ற ஆட்சி நடத்துவதே என் நோக்கம் என்று சொல்லிக்கொள்ளும் எவரும்
எடப்பாடி பழனிசாமியிடமும், ஓ. பன்னீர் செல்வத்திடமும் கலர் கலர் சால்வையை
வாங்க மாட்டார்கள். வாங்குகிறார் மோடி என்றால், அவரது நோக்கம் ஊழல்
ஒழிப்பு அல்ல. அ.தி.மு.க. அழிப்பு.
2016 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மூன்று மாத காலம் தமிழ்நாட்டில்
ஆட்சியே இல்லை. அந்தக் கோமா நிலையைக் கேள்வி கேட்டிருக்க வேண்டும் மோடி.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு என்ன ஆனது என்றே தெரியாத வகையில்
தலைநகரத்திலேயே சிறை வைக்கப்பட்டதுபோல மருத்துவமனையில் மறைத்து
வைக்கப்பட்டு இருந்த மர்மத்தை மத்திய அரசு உடைத்திருக்க வேண்டும். இவை
இரண்டையுமே செய்யாமல் மௌனம் காக்கக் காரணம், அ.தி.மு.க-வை வளைக்கும்
தந்திரம் தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான அ.தி.மு.க-வை கமலாலயத்தின்
கெஸ்ட் ஹவுஸாக மாற்றும் முயற்சி அப்போதே தொடங்கியது.
ஆர்வக்கோளாறாக ராகுல் காந்தியை ம.நடராசன் அழைத்து வந்தது வசதியாய்ப்
போனது. இதனாலேயே சசிகலாவிடம் இருந்து ஓ.பன்னீர் செல்வம்
பிரிக்கப்பட்டார். டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டார். இப்போதுதான்
ம.நடராசனுக்கு, கருணாநிதி அல்ல நரேந்திர மோடி எனத் தெரிய வந்துள்ளது.
அமித் ஷாவுடன் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள் நடராசன் ஆட்கள். இப்போது
அ.தி.மு.க-வின் அனைத்து அணிகளும் டெல்லிவாலா பக்கம்.
எம்.ஜி.ஆருக்கு அக்டோபரில் நூற்றாண்டு விழா எடுக்கிறார் பன்னீர். அதற்கு
மோடி வருகிறார். உடனே எடப்பாடியால் இருக்க முடியுமா? ஜூலையில் ஒரு தேதி
வாங்கி ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைக்க அழைக்கிறார். மோடி
வருகிறார். டிசம்பர் மாதம் தனது அணி சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு
விழா கொண்டாடப்போகும் எடப்பாடி அதற்கும் மோடியை அழைத்துள்ளார். மோடி
வருகிறார்.
மோடிக்கு மூன்று பதவிகள் இப்போது. இந்தியப் பிரதமர் ஒன்று. அ.தி.மு.க.
அம்மா அணியின் தலைவர் என்பது இரண்டாவது. அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா
அணியின் தலைவர் என்பது மூன்றாவது.
அதனால்தான் இலங்கைக்குப் போனாலும் அவருக்கு எம்.ஜி.ஆர். ஞாபகம்தான்
வருகிறது. எம்.ஜி.ஆரின் ஏதாவது ஒரு படமாவது பார்த்திருப்பாரா?
எம்.ஜி.ஆர். படம் வேண்டுமானால் பார்த்திருக்கலாம்!
‘புரட்சித் தலைவி அம்மாவின் படத்தைத் திறந்து வைக்க நரேந்திர மோடியை
விடத் தகுதியானவர் யார்?’ என்று எடப்பாடி பழனிசாமி சொன்னதைக் கேட்டு
சமாதியில் புரண்டு படுத்திருப்பார் புரட்சித் தலைவி. ஆவி சுற்றுகிறது
என்கிறார்கள். எடப்பாடி ஜாக்கிரதையாக இருக்கவும்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இரண்டு பலவீனமான மனிதர்களின்
கையில் அ.தி.மு.க. போனதால், பா.ஜ.க. தனது அறுவடையைத் தொடங்கி உள்ளது. இனி
எந்தத் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க-விடம் இருந்து தங்களுக்குத் தேவையான
தொகுதிகளை பா.ஜ.க. பறித்துக் கொள்ளும்.
பாரதிய ஜனதா கட்சி அகில இந்திய அளவில் தொடங்கப்பட்டு 37 ஆண்டு காலம்
ஆகின்றன. 98-ல் ஜெயலலிதா தயவால் மூன்று பேரும், 99-ல் கருணாநிதி தயவால்
நான்கு பேரும் தமிழகத்தில் இருந்து எம்.பி. ஆனார்கள். இப்போது
பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே எம்.பி. தமிழ்நாடு சட்டமன்றத்தில் பா.ஜ.க.
உறுப்பினர் இப்போது எவருமில்லை. 1996 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப்
போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் பி.ஜே.பி. உறுப்பினர் வென்றார். 2001-ல்
தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி சேர்ந்து போட்டியிட்டது. நான்கு
தொகுதிகளில் வென்றது. இப்படி 37 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டில் அடுப்பு
பற்ற வைக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் பா.ஜ.க-வுக்கு எருவாக
எடப்பாடியும், விறகாக பன்னீரும் கிடைத்திருக்கிறார்கள். விடுவாரா
நரேந்திர மோடி?
வேறொரு செடியில் முளைத்த இரட்டை இலைகளைக் கொண்டுவந்து தாமரையில் ஒட்டுவது
அயல் மகரந்தச் சேர்க்கையா; துயர் மகரந்தச் சேர்க்கையா? என்பது வர
இருக்கும் தேர்தலில் தெரிந்துவிடும். எதிலும் கலப்பு கூடாது, பரிசுத்தம்
வேண்டும் என்பவர்கள் செய்யும் காரியங்கள்தான் கயமைக் கூட்டணி என்று சொல்ல
வைக்கின்றன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக