புதன், 20 செப்டம்பர், 2017

1986 பிரபாகரன் பேட்டி கொடுத்த ராவ் கட்டுரை அண்ணாதுரை உடன் ஒப்பீடு இந்தியா ஆதரவு மதன் விகடன்

பிரபாகரன்.
அவரை பார்த்து-பேட்டி கண்டு பழகிய காரணத்தால்-அவர் பின்னர் எடுத்த
'முடிவுகளை கண்டு' இது சரியாக இருக்குமா ? என்று கலங்கி இருக்கிறேன்.
இப்போது அவர் பற்றிய செய்திகள் அறிந்து நெஞ்சு கனத்து கண்ணீர் பொங்குகிறது.
அவருடன் முதல் சந்திப்பு-டெலோ சபாரத்தினத்தை விடுதலை புலிகள் கொன்றதால்
தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட சமயத்தில்.கலைஞர் கருணாநிதி
போன்றோர் 'சகோதர யுத்தம் கூடாது' என்று பிரபாகரனை கண்டித்து
கொண்டிருந்தனர்.
புலிகள் ஆலோசகர் பாலசிங்கம் எனக்கு அறிமுகமாகி இருந்தார்.அவர்
எப்படிப்பட்ட சூழ்நிலையில் டெலோ இயக்கத்தினர் கொல்லப்பட்டனர் என்று கூற,
அது ஒரு பேட்டியாக நான் பணியாற்றிய ஜூ.வி யில் எழுதினேன்.
அதுவும் கண்டனத்துக்கு ஆளாயிற்று,ஆனால் தன்னை சந்திக்க வருமாறு
பிரபாகரனிடம் இருந்து அழைப்பு வந்தது.
பிரபாகரன் அப்போது இலங்கை ராணுவத்தை 17 நாட்கள் நடந்த போரில் வெற்றி
கண்டு, யாழ்பாணத்தை தன் கட்டுப் பாட்டில் கொண்டுவந்து வாகை சூடிய நேரம்.
ஜூ. வி ஆசிரியர் மதனும், நானும் பிரபாகரனை சந்தித்தோம் .
பேபி சுப்பிரமணியம் என்கிற புலிகளின் அரசியல் பிரிவு சீனியர்,எங்களை
மாருதி வேனில் அழைத்து சென்றார்.அடையார் பகுதி இந்திரா நகருக்குள் வேன்
சென்றது.ஆங்காங்கே புலிகள் கண்காணிப்பதை பார்த்தேன்.
பிரபாகரன் இருந்த தெருவில் மொட்டை மாடிகளில் இருந்து புலிகள்
கண்காணித்தனர்.இந்திரா நகர் அவர்கள் வசம் இருப்பது போல் இருந்தது.
சென்னையில் ஒவ்வொறு பகுதியில் ஒவ்வொறு இயக்கத்தினர் தங்க இடம் ஒதுக்கி
இருந்தது எம்.ஜி.ஆர். ஆட்சி. ஈராஸ்
பாலகுமார்-கோடம்பாக்கத்திலும்,மிச்சமிருந்த 'டெலோ'-அண்ணா நகரில் !.
பிரபாகரன் தங்கி இருந்த பங்களாவை அடைந்த போது திலகர்,யோகி போன்றோர்
புன்முறுவலுடன் வரவேற்றனர்.பிறகு அவர்களை சந்திக்கவில்லை.
ஓர் அறையில் நீளமான மேஜை எதிரே மதனும் நானும் அமர்ந்தோம். நான் கேட்க
வேண்டிய கேள்விகளை சரிபார்த்தவாறு இருந்தேன்.
திடீர் என்று ஏதோ ஒரு வழி திறக்கபட எதிரே வந்து அமர்ந்தார்
பிரபாகரன்.மீசைக்கு நடுவே அன்பான சிரிப்பு.
'உங்கள் கார்ட்டூனின் ரசிகன் நான்' என்று மதனிடம் சரளமாக
பேசினார்.அறையில் நேத்தாஜியின் உருவப்படமும்,இந்திரா காந்தியின்
உருவப்படமும் மாட்டபட்டிருந்தது.
'எனக்கு நேத்தாஜியை மிகவும் பிடிக்கும்,அவர் இந்திய மண்ணை நேசித்த
விதம்,விடுதலையை உடனடியாக பெற அவர் துடித்த துடிப்பு,அவரது வீரம்,அவரது
வெற்றி,எல்லாம் எனக்கு ஒரு சக்தியை கொடுக்கிறது.விடுதலை கிடைக்கும் வரை
நடந்த இந்திய சுதந்திர போராட்டம் ஒரு போராளிக்கு பல விஷயங்களை கற்று
தருகிறது' என்று கூறினார் பிரபாகரன்.
17 நாட்கள் யுத்தத்தில் வெற்றி கண்டது எப்படி என்பதை அவர்
விவரித்தார்.வீரமும் ராஜ தந்திரமும் அதில் வெளிப்பட்டது.டெலோ இயக்கம்
தவறான திசை நோக்கி சென்றது என்று அவர் குற்றம் சாட்டினார்.டெலோ இயக்கத்தை
அழித்ததும் சபாவை கொல்ல நேர்ந்ததையும் நியாயபடுத்தினார்.
நீண்ட நேரப் பேட்டி அது. பிறகு கார்ட்டூன்களை பற்றி பேச்சு
வந்தது.பிரபாகரனுக்கு படம் வரைய தெரியும் ! 'உங்கள் எதிரே படம் வரைய
பயமாக இருக்கிறது ' என்று மதனை பார்த்து தமாஷாக கூறினார்.
பிறகு சில ஓவியங்களை வரைந்து காட்டினார் பிரமாதம் !.
கொக்கு படம் வரைந்தார்.அதில் கொக்கு ஒரு காலால் நிற்கும்,மறு காலை
வளைத்து தூக்கிக் கொண்டு இருக்கும்,முன் பக்கமாக அந்த காலை வளைத்து
இருந்தார்.'கொக்கு கால் முன் பக்கமாக வளையாது உள் வாங்கி வளையும் 'என்று
மதன் சுட்டி காட்டினார்.
'ஓ' என்ற பிரபாகரன் மாற்றி வளைத்து காட்டினார்.
நேரம் சென்றது பிரிய மனம் வரவில்லை.
பிரபாகரன் அவர்களிடம் ஒரு வித காந்த சக்தி.அவருடைய வளையத்தை விட்டு நாம்
விலகி வராமல் அந்த காந்த சக்தி இழுத்தது.
இதே போன்ற காந்த சக்தியை அறிஞர் அண்ணா அவர்களிடம் பார்த்திருக்கிறேன்.
இளமையில் கல்லூரி விழாக்களுக்கு அழைக்க அடிக்கடி அறிஞர் அண்ணாவை
சந்திப்போம்.பேசி ஒப்பு கொள்ள வைத்த பின்னரும் அவர் எதிரே நின்று கொண்டே
இருப்போம். நகரவே தோணாது,'சரி...' என்று புன் முறுவல் பூத்தவாறு அண்ணா
மெதுவாக எழுந்து மாடிக்கு போய்விடுவார்!.
பிரபாகரனை அன்றும் சரி பிறகும் சரி நான் சந்தித்தபோது விடை பெற தோன்றியதே இல்லை.
பிரபாகரன் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,தி.மு.க. தரப்பில்
கண்டனங்கள் கிளம்பியது,அது வேறு விஷயம்.
பிறகு ஒரு முறை - யாழ் நகரில் நடந்த மாபெரும் சிங்கள எதிர்ப்பு ஊர்வலம்
ஒன்றை வீடியோவில் பார்க்க பிரபாகரனிடம் இருந்து அழைப்பு வர
சென்றேன்,விடியோவை நான் பார்த்தவாறு இருந்தேன்.
'அட.. நம்முடைய கிட்டு ' என்று குரல் கேட்க - திரும்பினால் பிரபாகரன் ஒரு
நாற்காலியில் அமர்ந்து வீடியோ பார்த்தவாறு இருந்தார்.
எப்போது உள்ளே நுழைந்தார் என்பதும்-எப்போது எழுந்து போகிறார் என்பதும் தெரிவதில்லை.
ராஜிவ் காந்தி ஆட்சியில்- சிங்களர்- தமிழர் ஒப்பந்தத்திற்கு பெரும்
முயற்சிகள் நடந்தன.ராஜிவ் காந்தி உண்மையில் தமிழர் பிரச்சனை தீர்க்கும்
நல்ல எண்ணத்தில் தான் இருந்தார் .
டெல்லிக்கு வரவழைக்க பட்ட பிரபாகரன் ஓர் ஓட்டல் அறையில் யாரையும்
சந்திக்க விடாமல் பாதுகாப்பாக வைக்கப்பட்டார்.ஜெயவர்த்தனே- ராஜிவ்
ஒப்பந்தத்தில் அவரும் கையெழுத்திட வற்புறுத்தபட்டதாக சொல்லபட்டது.
தன்னை நடத்திய விதத்தில் பிரபாகரன் கடும் கோபம் அடைந்தார்.அந்த கோபத்தில்
ராஜிவ் காந்தியின் நல் எண்ணம் அவருக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை என்றே
சொல்ல வேண்டும்.ஜி.பார்த்தசாரதி என்கிற வயதில் மூத்த அதிகாரி இந்திரா
காலத்தில் இருந்தார்.அவரை ஒதுக்கிவிட்டனர் வயதில் சிறிய வெளிவிவகார
அதிகாரிகள். பிரபாகரனின் ஈழத்தமிழர்களின் ஒரே தலைவர் என்கிற அந்தஸ்த்தை
புரிந்து கொள்ளவில்லை.
கோபத்துடன் சென்னை வந்த பிரபாகரன் ஹெலிகாப்டர் மூலம் யாழ்பாணத்துக்கு
அழைத்து செல்லப்பட்டார்.
அதற்கு முன் அவரை சந்திக்க காத்து இருந்தேன்.
பிரபாகரன் வந்தார்,'இனி இந்திய மண்ணில் உங்களை சந்திப்பேன் என்று
தோன்றவில்லை' என்றார்.
பிரபாகரனிடம் ஏதோ சொல்ல தோன்றியது,அந்த வீரம் மிக்கத் தலைவன் முன் பேச நா
எழவில்லை. ' இந்தியாவுடன் எப்போதும் நட்பாக இருங்கள்' என்று சொல்ல
தோன்றியது,நா எழவில்லை ! அவருக்கு யோசனை சொல்வதா.?
பிரபாகரன் புறப்பட்டார், காந்த சக்தியை அறுத்து கொண்டு நான் வெளியே வந்தேன்.
அதன் பிறகு ஏதேதோ நடந்துவிட்டது. 'விதியே விதியே எங்கள் தமிழ் சாதியை
என்ன செய்ய போகிறாய்' என்று அப்போதெல்லாம் என் நெஞ்சு கதறும்,இப்போதும்
அதே வார்த்தை நெஞ்சில் எழுகிறது.
- ராவ்,மூத்த பத்திரிகையாளர்.
பிரபாகரனின் மனவோட்டத்தை முதலில் விரிவாக பதிவு செய்த பத்திரிகையாளரான
ராவ் அந்திமழைக்காக எழுதிய பிரத்தியேகக் கட்டுரை இது.

விதியே...விதியே...தமிழ்ச்சாதியை என்ன செய்ய போகிறாய்?

andhimazhai.com/news/view/seo-title-9923.html

மே 20 2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக