வியாழன், 22 பிப்ரவரி, 2018

தமிழி ல் இருந்து அசோகர் பிராமி எழுத்துரு பிறந்தது

athi tamil aathi1956@gmail.com

3/11/17
பெறுநர்: எனக்கு
தமிழ் – எழுத்துக்களின் தோற்றம் காலம் மற்றும் வளர்ச்சி
– பேராசிரியர் சு. இராசவேல்
ஏறக்குறைய 2500 ஆண்டுகால எழுத்தியல் வரலாற்றைக் கொண்டிருக்கும்
தமிழ்நாட்டில் முதன்முதலில் 1882 ஆம் ஆண்டு இராபர்ட் சீவல் கண்டுபிடித்த
மாங்குளம் கல்வெட்டே தமிழ்நாட்டில் கிடைக்கின்ற தொன்மையான தமிழ்-பிராமி
(இனி இதனை தமிழிக் கல்வெட்டுக்கள் என்றே குறிப்பிடலாம்) கல்வெட்டாகும்.
அதன் பிறகு தொடர்ச்சியாக மதுரைப் பகுதியிலும் திருநெல்வேலிப் பகுதியிலும்
பல புதிய தமிழிக்கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு ஆய்வாளர்களால்
பலவாறாகப் படிக்கப்பட்டன. மாங்குளம் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு 42
ஆண்டுகள் கழித்து கல்வெட்டு அறிஞர் கே.வி.சுப்பிரமணிய அய்யர்,
இக்கல்வெட்டு எழுத்துகள் தமிழ்மொழியுடன் தொடர்புடையவை என்றும்
இவ்வெழுத்துகள் அசோகன் பிராமியிலிருந்து முற்றிலும் தமிழுக்காக
உருவாக்கப்பட்ட எழுத்துகள் என்றும் இவ்வெழுத்துகளில் அசோக
பிராமியிலிருந்து மாறுபட்ட தமிழ் மொழிக்கே உரித்தான எழுத்துகளான ள், ழ்,
ற், ன் ஆகிய மெய்யெழுத்துகள் உள்ளன என்பதையும் கண்டறிந்தார்.
இவ்வெழுத்துகள் இந்திய எழுத்துகளில் வேறு  எந்த மொழிகளிலும்
காணப்படவில்லை என்பது இங்கு ஈண்டு நோக்கத் தக்கது.
சுப்பிரமணிய அய்யருக்குப்  பிறகும் தமிழ்நாட்டில் கிடைக்கின்ற தொன்மையான
எழுத்துகளைப் படிப்பதில் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் ஆய்வாளர்களிடம்
இருந்து வந்தது. இருப்பினும்  சில அறிஞர்கள் இவ்வெழுத்துகள் தமிழ்
எழுத்துகள் என்றும் இவை தமிழ் மொழியில் உள்ளன என்றும் ஆய்வு நுட்பத்துடன்
கூறினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் இராசமாணிக்கனார், மயிலை சீனி
வேங்கடசாமி நாட்டார் போன்றோர்.
இவர்களைத் தொடர்ந்து இவ்வாய்வில் ஈடுபட்ட ஐராவதம் மகாதேவன், 1966 ஆம்
ஆண்டு தமிழ்நாட்டில் அதுவரை கிடைத்த அனைத்து தமிழிக்கல்வெட்டுகளையும்
திறம்பட வாசித்து அவை தமிழ் மொழியில் உள்ள தொன்மையான கல்வெட்டுகள் என
உலகிற்கு உணர்த்தினார். அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் மேனாள்
இயக்குனர்களான இரா. நாகசாமியும் நடன காசிநாதன் அவர்களும் தமிழிக்
கல்வெட்டு ஆய்வுகளில் ஈடுபட்டனர். கடந்த 2003 ஆம் ஆண்டு  இவ்வாய்வில்
மீண்டும் மீள் ஆய்வு செய்து ஒரு முழுமையான ஆய்வு நூலை வெளியிட்ட ஐ.
மகாதேவன் கீழ் கண்ட முடிவுகளைத் தெரிவித்தார்.
இவ்வாய்வுகள் மூலம் தமிழ்நாட்டில் கிடைக்கின்ற தொன்மையான எழுத்து வடிவம்
தமிழ்-பிராமி என்றும் அவற்றின் மொழி தமிழ் என்றும் இவற்றின் காலம் கி.
மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு பிற்பட்டதென்றும் வட இந்தியாவில் ஆட்சி
புரிந்த மௌரியப் பேரரசன் அசோகன் காலத்தில் முதன்முதலில் பயன்பாட்டில்
இருந்த அசோக-பிராமியிலிருந்து அவனுக்குப் பின் வந்த மௌரிய மன்னர்கள்
பயன்படுத்திய எழுத்து வகையான மௌரிய பிராமியிலிருந்து தமிழ்-பிராமி
(தமிழி) தோற்றுவிக்கப்பட்டது எனவும்  ஐ. மகாதேவன் தம் ஆய்வின் மூலம்
வெளிப்படுத்தினார்.
அவரது வாசிப்புகள் பெரும்பாலும் ஏற்கக்கூடிய நிலையில் உள்ளன எனினும் அவர்
தமிழ்-பிராமி எழுத்துகளுக்கு கொடுத்துள்ள தொடக்ககால எல்லை, அதன் தோற்றம்
பற்றிய அவரது கருத்து ஆகியவற்றைப் பல்வேறு காரணங்களால் மீளாய்வு
செய்யவேண்டிய நிலை உள்ளது.
அசோகன்-பிராமி
வடஇந்தியாவில் கிடைக்கின்ற தொன்மையான எழுத்து வரிவடிவங்களுள்
முதன்மையானதாக விளங்கும் எழுத்து வரிவடிவம் பிராமி எனப்படும். மௌரியப்
பேரரசன் அசோக மாமன்னன் (கி. மு. 273-236) தன் பௌத்த மதக் கொள்கைகளைப்
பரப்புவதற்காக அவன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கல்வெட்டுகளை
வெட்டிவைத்தான். அவ்வாறு வெட்டப்பட்ட கல்வெட்டுகள் இந்தியாவில்
மேற்குறித்த பிராமி எழுத்தில் வெட்டப்பட்டதால் அதனை அசோக-பிராமி என
அறிஞர்கள் குறிப்பர். இவ்வெழுத்தைத் தவிர அசோக மாமன்னன் ஆட்சிக்கு
உட்பட்ட வடமேற்கு இந்தியப் பகுதிகளில் கரோஷ்டி என்ற எழுத்து வகையும்
காந்தகார் பகுதியில் கிரேக்க, அராமிக் எழுத்து வகையிலும் கல்வெட்டுகளை
மௌரியப் பேரரசன் அசோகன் வெளியிட்டான். அசோகரின் காலத்தில் வழக்கிலிருந்து
மொழி வழக்கு பிராகிருதம் மற்றும் அராமிக், கிரேக்க மொழிகளாகும்.
அசோக-பிராமிக்கு முற்பட்ட பிராமி
அசோகனுக்கு முன் வடஇந்தியாவில் பெருமளவில் பிராமி எழுத்துகள்
காணப்படவில்லை. இருப்பினும் அசோக பிராமிக்கு முன் வடஇந்தியாவில்
தொடக்கநிலை பிராமி எழுத்துப் பொறிப்புக்கள் மிகக் குறைந்த அளவில் (5
பொறிப்புகள்) கிடைத்துள்ளதை அப்பொறிப்புக்களின் அமைப்பிலிருந்து
அசோகனுக்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் கருதுவர். அவை (1) பட்டிப்பொருலு
பேழைக் கல்வெட்டு, (2) ஈரான் நாணயப் பொறிப்பு, (3) பிப்ரவா பேழைக்
கல்வெட்டு, (4) மகஸ்தான் கல்வெட்டு, (5) சௌகார செப்புத் தகடுப்பொறிப்பு,
(6) கோசுண்டி எழுத்துப் பொறிப்பு இவற்றுள் முதலாவதாகக்
குறிப்பிடப்பட்டுள்ள பட்டிப்பொருலு ஆந்திராவில் உள்ள பௌத்ததொடர்புடைய
பகுதி. இப்பேழையில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறிப்பு
மேற்குறித்த 4 ஊர்களில் கிடைத்த எழுத்துகளை விட மாறுபட்டது. எனவே இதனை
தென்னக பிராமி வகை என்பர். இவ் அனைத்து எழுத்துப் பொறிப்புகளின் காலம்
கி. மு. 4 ஆம் நூற்றாண்டு என ஆய்வாளர்கள் வரையறுப்பர்.
மகஸ்தான், சௌகாரா பொறிப்புகள் சந்திரகுப்த மௌரியர் காலத்தில்
வெளியிடப்பட்டவை. இவை இரண்டும் வட இந்தியாவில் அக்காலத்தில் ஏற்பட்ட
பஞ்சத்தைப் பற்றிக் குறிப்பிட்டு அரசு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட அரச
ஆணைகளாகும். வடஇந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தைச் சமண நூல்களும்
குறிக்கின்றன. பிற பொறிப்புகள் சமயத் தொடர்புடையவை. இக்கல்வெட்டுக்களில்
அசோக-பிராமியில் காணப்படுவதுபோல் கூட்டெழுத்துகள் காணப்படவில்லை. எனவே
இவை அசோகபிராமிக்கும் முற்பட்டவை என கருதப்படுகின்றன. இவற்றைத் தவிர
இக்கால கட்டத்தில் மக்கள் வழக்கில் எழுத்துமுறை இருந்ததற்கான சான்றுகள்
இதுவரை கிடைக்கவில்லை. எனவே அசோகனுக்கு முன்பு, வட இந்தியாவில்
எழுத்தறிவு என்பது அரிதாகவே இருந்துள்ள நிலையை அறியமுடிகிறது.
இப்பொறிப்புக்களை அடுத்து வடஇந்தியாவில் கிடைக்கின்ற எழுத்துச்சான்றுகள்
யாவும் அசோகன் வெளியிட்ட கல்வெட்டுகளே ஆகும். இக்கல்வெட்டுகள் நன்கு
வளர்ச்சியடைந்தவை. அசோக-பிராமியில் பயன்படுத்தப் பட்ட மொழி பிராகிருதம்
எனப்படும். அதிலும் குறிப்பாக அதனை மகதப் பகுதியில் வழக்கிலிருந்த மொழி
வகை என்பர். அசோகன் வெளியிட்ட கல்வெட்டுகள் பெரும்பாலும் தன்
அலுவலர்களுக்கு அனுப்பப்படும் செய்தியாகவே நேரிடையாக மன்னரால்
சொல்லப்பட்டவைபோல் எழுதப்பட்டன. இவற்றைப் படித்து மக்களுக்குச்
சொல்லுங்கள் என கூறுவதாகவே இக்கல்வெட்டுகள் அமைந்துள்ளன. எனவே அசோகரின்
காலத்தில் வடஇந்தியாவில் எழுத்தறிவு மேல்மட்ட அளவிலேயே இருந்துள்ளமையை
அறியமுடிகிறது.
தமிழி  (தமிழ்-பிராமி)
மேற்குறித்த பொதுவான செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் கிடைக்கின்ற
தமிழி எழுத்துகளின் காலத்தை எளிதாக அறியமுடியும். இவ்வெழுத்திலிருந்தே
இலங்கை மற்றும் வடஇந்தியாவில் வழங்கி வந்த மொழிகளுக்கு ஏற்ப வர்க்கங்கள்
உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இவ் வளர்ச்சி அடைந்த பிராமி
எழுத்துகள் இலங்கை வழியாகவும் ஆந்திரப் பகுதி மற்றும் ஒரிசா வழியாகவும்
வடஇந்தியாவிற்கு சென்றன. அவற்றிற்கான சான்றுகளை காண்பதற்கு முன் தமிழி
மற்றும் அவற்றில் இருந்து பிறந்த அசோக-பிராமியின் வரிவடிவங்களை பார்ப்பது
ஆய்விற்கு உகந்ததாக அமையும்.
அசோகன்-பிராமி
தொன்மைத் தமிழியின் உயிர் எழுத்துகளில் உள்ள உயிர் எழுத்துக் குறியீடுகளே
(மொத்தம்-8) அசோக-பிராமி கல்வெட்டுகளிலும் பயின்று வருகின்றன.  இவற்றுடன்
அசோக-பிராமியில் ‘ம’ வடிவத்தின் பாதி எழுத்தை அனுஸ்வரமாக
உருவாக்கியுள்ளனர்.  அவை – அ ஆ இ ஈ உ  ஊ எ ஒ அம் (அனுஸ்வரம்).
தமிழியில் மெய்யெழுத்துகள் 18. அசோக பிராமியின் மெய் எழுத்துகள் 33. அவை
அசோகனின் காலத்தில் வழக்கிலிருந்த பிராகிருத (மகதைப்பிராகிருதம்)
மொழிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டன. இம்மொழிக்கு ஏற்ப வர்க்க ஒலி உச்சரிப்பு
வடிவங்களை கொண்டுள்ளன. பெரும்பாலும் இவ்வர்க்க உச்சரிப்பு வடிவங்கள்
தமிழின் மெய் எழுத்துகளின் வல்லின எழுத்துகளை (க, ச, ட, த, ப )
அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர பிராகிருத
மொழிக்கு ஏற்ப அசோகன் பிராமியில் சில கூடுதல் எழுத்துகளும்
உருவாக்கப்பட்டன. இவை வல்லொலி, மொல்லொலி என ஒரு ஒலிக்கு ஒரு எழுத்தாக
வகைபடுத்தப்பட்டன. தமிழில் ஒலி மாற்றம் பேசுகின்ற நிலையில் இருப்பினும்
அடிப்படையான ஒரு எழுத்தே எழுதுவதற்குப் பயன்பட்டு வருகின்றன.  எ-கா.
கப்பல், ((Kappal) காந்தி (Gandhi).
அசோக பிராமியின் வர்க்க எழுத்துகள் பொதுவாகத் தமிழின் மூல எழுத்துகளான
வல்லினத்தில் இருந்து தோன்றியுள்ளமை அதன் அமைப்பில் இருந்து
அறியமுடிகிறது. மேலும் தமிழில் உள்ள மூக்கொலி எழுத்துகளே எவ்வித
மாறுபாடும் இன்றி அசோகன்-பிராமியிலும் (ங்-வரிவடிவத்தைத் தவிர்த்துப்)
பின்பற்றப்பட்டன.
தமிழ் மொழிக்கே உரித்தான சிறப்பு எழுத்துகளான ள, ழ, ற, ன ஆகிய எழுத்துகள்
தமிழ்நாட்டில் மட்டுமே வழக்கில் இருந்துள்ளன.  தமிழி எழுத்துகள்
அசோகன்-பிராமிக்கும் முற்பட்டவை என்பது கீழ்கண்ட பல்வேறு ஆய்வுகளின்
மூலம் அறியமுடிவதுடன் இன்றைய இந்திய எழுத்துகளுக்குத் தாயாகத் தமிழ்
எழுத்துகள் விளங்கியுள்ளமையையும் அறியமுடிகிறது.
1. வர்க்கம் அற்ற தன்மை
தமிழி எழுத்துகளுக்கு வர்க்க எழுத்துகள் இதுநாள் வரை பயன்பாட்டில் இல்லை.
தமிழின் வல்லெழுத்து உருவமே அனைத்து வர்க்க வல்லொலி, மெல்லொலிகளுக்குப்
பயன்படுத்தப்படுகிறது. இவ்வர்க்க எழுத்துகள் தமிழ்மொழிக்கு தேவையில்லை
என்பது ஐ. மகாதேவன் கருத்து. இது தவறான கருத்தாகும். காரணம் தமிழில் பல
சொற்கள் வர்க்க வல்லொலி, வர்க்க மெல்லொலியைப் பெற்று விளங்குகின்றன.
வங்கம், அங்கம், கலிங்கம், அக்கம், பக்கம், மஞ்சள், கொஞ்சல், ஊஞ்சல்,
ஆகிய நடைமுறையில் உள்ள சொற்களின் உச்சரிப்புக்களை நாம் வலிந்தும்
மெலிந்தும் உச்சரிக்கின்றோம். இவற்றை ஆங்கிலத்தில் எழுதுவோர் ((Vangam,
Angam, kalingam, akkham, pakkham manjal, konjal, Unjal)) என்று தான்
உச்சரிப்புக்கு ஏற்றவாறு எழுதுவர். மொழி தோன்றிய பின்பே எழுத்துகள்
உருவாக்கப்பட்டன. மொழிகின்ற தமிழ் மொழிக்கு எழுத்துகளே இல்லாத கால
ட்டத்தில் அசோக-பிராமியில் எழுத்துகளை வாங்கிப் பயன்பாட்டிற்கு தமிழர்கள்
பயன்படுத்தும்போது வர்க்க உச்சரிப்புக்கள் உள்ளவற்றிற்கு ஏன்
அவ்வடிவங்களைப் பயன்படுத்தவில்லை. காலத்தால் முற்பட்டதாகக் கருதத்தக்க
மாங்குளம் கல்வெட்டில் உள்ள மன்னன் நெடிஞ்சழியன் பெயர் உச்சரிப்பை
ஆங்கிலத்தில் nedinzeliyan என்று தான் எழுதுவோம். வடஇந்தியாவில் இருந்து
வந்த சமணமுனிவர்கள்தான் தமிழ்எழுத்துகளை உருவாக்கினர் என்றால்
அவர்களுக்குத் தெரிந்த வடமொழி அசோகன் பிராமி எழுத்துகளிலேயே வர்க்க
எழுத்துகளை கல்வெட்டுகளில் பயன்படுத்தி இருக்கலாமே. இதேபோன்று
தமிழிக்கல்வெட்டுகளில் உள்ள பல்வேறு பிராகிருத சொற்கள் தமிழ்
எழுத்துகளிலேயே எழுதப்பட்டுள்ளன.
வர்க்க எழுத்துகள் தமிழ்ச் சொற்களுக்கு (மொழிக்கு) தேவையில்லை என்ற
வாதத்தை பெயரளவில் ஏற்றுக்கொண்டாலும் தமிழ்-பிராமியில் 35 விழுக்காடுகள்
பிராகிருத சொற்கள் மலிந்துள்ளதாக ஐ. மகாதேவன் பட்டியலிடுகிறார்.
இச்சொற்களுக்காவது ஏற்கனவே ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட அசோக-பிராமியைப்
பயன்படுத்தி இருக்கலாமே? எடுத்துக்காட்டாக தமிழகத்தில் உள்ள
கல்வெட்டுகளில் அதிட்டானம், அதியன், அரிதி, அனாசனம், ஆராதனி, இகுவன்,
உதயன, கடிகை, கணக, கணி, குடும்பிக, கோப, சாத்தன், தேவ, நந்தசிரி,
நிகமம்,தம்மம், பாணித, பூதி, ஆரிதன் போன்ற பிராகிருதச் சொற்கள் உள்ளன.
இவையும் தமிழி எழுத்தில் தான் எழுதப்பட்டுள்ளன.
தமிழி எழுத்துகள் தொடக்க நிலை எழுத்துகள். அக்காலகட்டத்தில் அசோகன்
பயன்படுத்திய வர்க்க எழுத்துகள் தோன்றவில்லை. பிராகிருத மொழிக்கு ஏற்ப
தமிழி எழுத்துகளை பயன்படுத்தும்போது இலங்கை மற்றும் வடஇந்திய சமணர்களும்
பௌத்தர்களும் வணிகர்களும் இணைந்து வர்க்க எழுத்துகளைப் அசோகனின்
காலத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன் உருவாக்கி உள்ளனர். அக்கால
கட்ட்த்திற்கும் முற்பட்டதே தமிழி எழுத்துகள். தமிழகத்திற்கு வருகை
புரிந்த சமணத் துறவிகள் தமிழகத்தில் வழக்கில் இருந்த தமிழி எழுத்துகளை
கற்று அதனை அடிப்படையாக வைத்து தங்களது மொழிக்கு ஏற்ப வர்க்க எழுத்துகளை
உருவாக்கிக்கொண்டனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட இரண்டு வடமொழிக்கான
எழுத்துகள் தமிழ்நாட்டிலும் கிடைக்கின்றன. அவ்வாறு உருவானதே ஸ மற்றும் த3
(தம்மம்.)
தமிழ்நாட்டில் பல்லவர் ஆட்சிக்காலமான கி.பி. 5 ஆம் நூற்றாண்டில்
வடமொழிக்கு சிறப்பிடம் அளிக்கப்பட்டது. இதன் விளைவாக தமிழ் எழுத்துகளில்
வடமொழிக் கல்வெட்டுகளை எழுதுவதில் தடுமாற்றம் ஏற்பட்டதின் விளைவாக
அசோகன் பிராமியில் இருந்து வளர்ச்சிபெற்று ஆந்திராவில் கி.பி. 3ஆம்
நூற்றாண்டில் இருந்த தென்னக பிராமியிலிருந்தும் அடிப்படைத் தமிழ்
எழுத்துகளில் இருந்தும் புதியதாக எழுத்துகள் உருவாக்கப்பட்டன. அவை பல்லவ
கிரந்தம் எனப்பட்டது. எனவே தமிழ்நாட்டில் முழுமையான வடமொழியின் தாக்கம்
கி.பி. 5ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில்தான் தோன்றியது என்பது
கல்வெட்டுகளின் மூலம் புலப்படும் உண்மையாகும். ‘சிரி’ என தமிழ் பிராமிக்
கல்வெட்டுகளில் எழுதப்பட்ட சொல்லே கி.பி. 5ஆம் நூற்றாண்டில் அசோகனின்
கூட்டெழுத்து அடிப்படையில் ‘ஸ்ரீ’ என எழுதப்பட்டது. இதிலிருந்து
அசோகனுடைய பிராமியிலிருந்து வளர்ச்சிபெற்ற வர்க்க எழுத்து முறை பல்லவர்
காலத்தில் பல்லவ கிரந்தமாக உருவாக்கப்பட்டு பிராகிருத-சமஸ்கிருத
கல்வெட்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதை அறியலாம்.
2. எழுத்துகளின் அமைப்பு
தமிழிக் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள் பெரும்பாலும் தொடக்கநிலை
அமைப்புடையவை. கல்வெட்டாய்வாளர்களுக்கு தொல்லெழுத்தியல் அடிப்படையில்
காலத்தைக் கணிப்பது அவ்வெழுத்துகளின் வளர்ச்சிப் பரிமாணங்களைக் கருத்தில்
இருத்தியே. இதன்படி அசோகனுடைய கல்வெட்டு எழுத்துகள் யாவும் சில தமிழிக்
கல்வெட்டுகளுக்குப் பிற்பட்டவையாகவே விளங்குகின்றன. அசோகன்-பிராமி
எழுத்துகள் ஒழுங்கான அமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளன. முழுமை பெற்ற
அமைப்புடையவையாக விளங்குகின்றன. மேலும் ஒரு எழுத்தே பல்வேறு வகையில்
எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, பூலர் என்னும் ஆய்வாளர் ‘அ’ உயிர்
எழுத்து 8 வகையாக அசோகன் கல்வெட்டில் உள்ளதைக் குறிக்கின்றார். தமிழியில்
உள்ள அ, ஆ, ம, ர, த மற்றும் பல எழுத்துகள் எழுத்தமைதியில் காலத்தால்
முற்பட்டதாக விளங்குகிறது. அசோகனுடைய எழுத்தமைதியை ஜம்பை அதியமான்
கல்வெட்டில் காணலாம். இக்கல்வெட்டில் உள்ள அதியன் அசோக பிராமியில்
குறிக்கப்படும் சதியபுதொ மரபினன் ஆவான்.
3. கூட்டெழுத்துகள் அற்ற தன்மை
அசோக-பிராமியின் மிகப் பெரிய வளர்ச்சி கூட்டெழுத்து முறையாகும். இது
அசோகனுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் மேற்குறித்த வட இந்தியக்
கல்வெட்டுகளிலோ இலங்கையில் காணப்படும் பிராமி கல்வெட்டுகளிலோ
காணப்படவில்லை. தமிழில் இன்று வரை இக்கூட்டெழுத்து வழக்கம் இல்லை.
முதன்முதலாக அசோகனுடைய காலத்திலேயே கூட்டெழுத்து முறை பயின்று வருகிறது.
எனவே இச்சொற்கள் யாவும் எழுதப்பட்டோரால் தவறாகவே குறிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மெய்யெழுத்துகள் உயிர்மெய் எழுத்துக்கள் வேறுபடுத்திக்
காட்டப்பட்டன.
கூட்டெழுத்து முயற்சி மூலம் மெய்யெழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகளும்
அசோகன்-பிராமியில் இனம் காணப்பட்டு எளிதாக்கப்பட்டன. ஆனால்
தமிழ்-பிராமியில் தொடாக்க நிலையில் மொழியை அறிந்தே சொற்களைப் படித்தல்
வேண்டும். காரணம், தொடக்ககாலத் தமிழ்-பிராமிக் கல்வெட்டுகளில்
மெய்யெழுத்துகளும் உயிர்-மெய் எழுத்துகளும் ஒரே குறியீட்டில்
எழுதப்பட்டன. மெய் எழுத்துகள் புள்ளி அற்று காணப்பட்டன.
மேலும் கி.மு.500 எனக் கருதத்தக்க மாங்குளம் மற்றும் சில தொடக்க காலக்
கல்வெட்டுகளில் சில சொற்கள் மெய் உயிர்க் குறிகள் தனித்தனியாகக்
குறிக்கப்பட்டு உயிர் ஏறிய மெய்யாகக் குறிக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டு: குவ் + அன் = குவன், இத்த + அ = இத்தா, பாண + அன் =
பணான் (அல்) பாணான், கடல் + அன் = கடலன், கொட்டுபித்த + அ =
கொட்டுபித்தா, பாளி + இய் = பாளீய் (மாங்குளம்). இதே போன்று
தமிழகத்திலும் இலங்கையிலும் கிடைத்த சில நாணயங்களிலும் மேற்குறித்தவாறு
மெய்யும் உயிரும் மெய் எழுத்துகளாகக் கொள்ளப்பட்டன. (எ.கா) கொல் +
இப்புறை, கடல் + அன். இதன் மூலம் தமிழ்நாட்டில் கிடைக்கின்ற சில
கல்வெட்டுகளும் நாணயங்களும் தொடக்கநிலையில் உள்ள கல்வெட்டுகளாகும்.
இவற்றின் காலம் அசோக-பிராமிக்கும் முற்பட்டதாகும் என்பது விளங்கும்.
மேலும் அசோகன்-பிராமியிலிருந்து தமிழ் தோன்றியிருந்தால் மெய்யெழுத்துகள்
கூட்டெழுத்து முறையில் எழுதப்பட்டுப் படிப்போருக்குக் குழப்பநிலை
ஏற்படாவண்ணம் இடர்ப்பாடு தடுக்கப்பட்டிருக்கும். இவ்விடர்ப்பாட்டைக்
களையும் முயற்சி கி.மு. 3ஆம் நூற்றாண்டிற்கு மேல் அசோக-பிராமியைப்
பின்பற்றித் தமிழ்நாட்டிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
தமிழ்நாட்டிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 கே.வி இராமன் அவர்களால் வெளியிடப்பட்ட பொன்மோதிரம் ஒன்றில் நெல்வேட்டை
‘ஸஞ என்ற பெயர் கூட்டெழுத்துமுறையில் பொறிக்கப்பட்டுள்ளது இங்கு
நோக்கத்தக்கது. இதேபோன்று கொடுமணல் அகழாய்வில் சில பானை ஓடுகளில்
கூட்டெழுத்து முறையில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. எனவே கி.மு. 3ஆம்
நூற்றாண்டளவில் கூட்டெழுத்து முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டு இறுதியில்
அம்முறையையும் கைவிடப்பட்டு மெய்க்குப் புள்ளியிடும் வழக்கத்தை கி.மு.
இரண்டாம் நூற்றாண்டளவில் தமிழர்கள் ஏற்படுத்திக்கொண்டனர். புள்ளியுடன்
கூடிய மெய்யெழுதுக்கள் உள்ள தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் பல
தமிழ்நாட்டில் கிடைத்துள்ளமையை இதற்குச் சான்றாகக் கூறலாம்.
சாதவாகனர் வெளியிட்ட தமிழ் நாணயங்களிலும் மெய் எழுத்துகளுக்குப்
புள்ளியிடும் வழக்கம் இருந்துள்ளதை இங்குக் குறிப்பிடலாம்.
மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிடும் வழக்கம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரை
தமிழ்க் கல்வெட்டுகளில் நீடித்தது.
4. தமிழி  – மக்கள் எழுத்து – அகழாய்வுச் சான்றுகள்
தமிழகத்தில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்ற அனைத்து ஊர்களில்
குறிப்பாக அகழாய்வுகள் செய்யப்பட்ட இடங்களில் பாமரமக்கள் பயன்படுத்திய
பானை ஓடுகளில் தமிழ்-பிராமி எழுத்துப்பொறிப்புகள் காணப்படுகின்றன.
இவற்றைத் தவிர மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் தமிழ்வணிகர்கள் மூலம்
கொண்டுசெல்லப்பட்ட மட்கலன்களில்  தமிழ் எழுத்துப் பொறிப்புள்ள பானை
ஓடுகள் கிடைத்துள்ளன.
வணிகர்களின் மூலமாகவும் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த எழுத்துகள்
வடஇந்தியாவில் பரவியுள்ளன. கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பானை ஓடுகளில்
வடஇந்திய வணிகர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. இங்கு கிடைக்கின்ற
எழுத்துப் பொறிப்பு மட்கலன்களில் 20 விழுக்காடுகள் வடஇந்தியத் தாக்கம்
உள்ளவை. எனவே கொடுமணலுக்கு வந்த வணிகர்கள் தங்களது பெயர்களை பிராகிருத
மொழியில் எழுதுவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இவற்றுள் பெரும்பாலான எழுத்தாக ஏற்கனவே தமிழகத்தில் வழக்கில் இருந்த ‘ஸ’
எழுத்து விரவி உள்ளது. மேலும் அசோக பிராமியின் ஒரு சில எழுத்துக்களும்
காணப் படுகின்றன. அவை ஜ, ஹ, த3 போன்ற எழுத்துகளாகும். இவ்வெழுதுக்கள்
உள்ள மட்பாண்டங்கள் கிடைத்த மண்ணடுக்கின் காலத்தை அறிவியல் முறையில்
கணக்கிடுதல் வேண்டும். இவை அசோக பிராமி வழக்கத்திற்கு வந்த பிறகே
தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால் அதற்கும் கீழ்நிலையில் உள்ள மண்ணடுக்குகளில் தமிழ்-பிராமி
எழுத்துப் பொறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. மேலும் பெரும்பாலான பானை
ஓடுகளில் வடமொழிப் பெயர்கள் தமிழ்-பிராமி எழுத்திலேயே எழுதப்பட்டுள்ளன.
எனவே வட இந்தியாவில் இருந்து வந்த வணிகர்கள் தங்களின் எழுத்துகளை
எழுதுவதற்குத் தடுமாறியுள்ளனர். அதனால் ஏற்கனவே தமிழர்களின் வழக்கில்
இருந்த தமிழ்-பிராமி எழுத்துகளில் தங்களது பெயர்களை எழுதியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மட்கலன்களில் கீறல் குறியீடுகள் மிகுந்த
அளவில் கிடைக்கின்றன. கீறல் குறியீடுகளுடன் தமிழ்-பிராமி எழுத்துகள்
சேர்ந்தும் கிடைக்கின்றன. தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் தனித்தும்
கிடைக்கின்றன. இவற்றையும் ஆய்விற்கு உட்படுத்துதல் வேண்டும். கீறல்
குறியீடுகள் புழக்கத்திற்கு வந்தபின் கீறல் குறியீடுகளுடன் எழுத்துகளைச்
சேர்த்து எழுதுகின்றனர். எனவே இக்குறியீடுகள் பொருள்மிக்கதாகவே
இருந்திருக்கவேண்டும். இக்குறியீடுகளில் இருந்தே தமிழ்-பிராமி எழுத்துகள்
உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவில் மட்கலன்களில் பெருமளவில்
கீறல் குறியீடுகள் கிடைத்துவருகின்ற இடம் தமிழகம் ஆகும். பிற
மாநிலங்களில் இக்குறியீடுகள் குறைவாகவே கிடைத்துள்ளன.
தொல்லியலாளர் நரசிம்மய்யாவும் இக்கருத்தை வலியுறுத்தி அசோகனுக்கும்
முற்பட்ட காலத்தில் தமிழகம் எழுத்தறிவு கொண்ட மாநிலமாக விளங்கியிருத்தல்
வேண்டும் என்றும் கீறல் குறியீடுகளில் இருந்தே தமிழி எழுத்துகள்
தோன்றியிருத்தல் வேண்டும் என்றும் இத்தமிழ் எழுத்துகளில் இருந்தே அசோகன்
பிராமி தோன்றியிருத்தல் வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார். கீறல்
குறியீடுகளுக்கும் பொருள் இருந்திருக்கவேண்டும் என்று இவர் கருதுகிறார்.
மௌரியர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த மெகஸ்தனிஸ் எழுதிய
இண்டிகா நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை; எனினும் அவர் குறிப்பிடுகின்ற
சில குறிப்புகள் அக்காலத்தில் வட இந்தியாவில் நிலவியிருந்த சமுதாய நிலையை
அறிவதற்குப் பேருதவி புரிகின்றன.
அக்காலத்தில்  வட இந்தியாவில் மக்கள் எழுத்தறிவு அற்று விளங்கினர்
என்பதும் நினைவாற்றல் மூலமே அனைத்து நிகழ்ச்சிகளையும் ஞாபகத்தில்
வைத்துக்கொண்டனர் என்பதையும் மெகஸ்தனிஸ் குறிக்கின்றார். இதனை ஸ்ட்ராபோ,
அர்ரியன் ஆகியோரும் உறுதி செய்கின்றனர். இந்நிலை அசோகன் காலத்திலும்
நீடித்திருந்தது. இதனை இம்மன்னனின் கல்வெட்டுகளின் மூலமும் அறிய
முடிகிறது.
அசோகர் தாம் வெளியிட்ட கல்வெட்டுகளின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைக்க
நகர நீதிபதிகளையும் குமாரர், மகாமாத்திரர் போன்ற அலுவலர்களையும்
நியமித்தான்.
மேலும் தாம் வெளியிடுகின்ற தர்ம சாசனம் வருங்கால சந்ததியருக்காக
ஏற்படுத்துவதாகவும் இக்கல்வெட்டுகளில் தெரிவித்துள்ளார். மேற்குறித்த
செய்திகள் மூலம் அசோகனுடைய காலத்தில் பெரும்பகுதி மக்கள் எழுத்தறிவு
அற்றவர்களாகவே விளங்கினர் என்பது புலப்படும்.
இதேபோன்று கொடுமணல் மற்றும் அழகன்குளம் அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட
எழுத்துப் பொறிப்பு மட்கல ஓடுகள் கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை
எனக் காலம் கணிக்கப்பட்டிருக்கையில் ஐராவதம் அவர்கள் இவற்றை எந்த
அடிப்படையில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு எடுத்துச்சென்றுள்ளார்
என்பது விளங்கவில்லை. முனைவர் க. இராஜன், நடன காசிநாதன் போன்றோர்
கருதுவதுபோல் தமிழ் நாட்டில் நடந்த அகழாய்வுகளின் தரவுகளையும்
காலத்தையும் உண்மைக்கு மாறாக, தவறாகக் கணிக்கவேண்டிய சூழல்
ஏற்பட்டுள்ளது. அழகன் குளம் அகழாய்வில் கி.மு. 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த
மண்ணடுக்குகளில் தமிழ்-பிராமி பொறித்த மட்கல ஓடுகள் கிடைத்திருப்பதை அதன்
அகழாய்வாளர் நடன காசிநாதன் சுட்டியுள்ளார்.
இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் வாழ்ந்த இரும்புக்கால மக்கள் படிப்பறிவு
மிக்கவராக விளங்கியுள்ளனர் என்பது நன்கு விளங்கும். வடஇந்தியாவில் பல
இடங்களில் மிக அதிக அளவில் அகழாய்வுகள் மேற்கொண்டபொழுதும் மக்களின்
பயன்பாட்டில் இருந்த மட்கலன்களில் எழுத்துப் பொறிப்புகள் காணப்படவில்லை.
ஐராவதம் கூற்றுப்படி  காலத்தால் முற்பட்ட அசோகன்-பிராமி எழுத்துக்கள் அது
தோன்றிய வட இந்தியாவில் மக்களின் வழக்காக இல்லாதபொழுது எவ்வாறு மிகக்
குறுகிய காலத்திற்குள் தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பரவி
இருந்தது? அண்மையில் திண்டுக்கல் பகுதியில் நடுகற்களில் தமிழி
எழுத்துப்பொறிப்புக்கள் புளிமான் கோம்பை, தாதப்பட்டி ஆகிய இடங்களில்
கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் இரண்டு நடுகற்கள் தொல்லெழுத்தியல்
அடிப்படையில் கி. மு. 5ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை.
தமிழகத்தில் அசோகனின் காலகட்டத்தில் அல்லது அதற்கும் சற்று முற்பட்ட கால
கட்டத்தில் (கி.மு. 500 அளவில்) இரும்புக்காலப் பண்பாடு தழைத்தோங்கி
இருந்ததைப் பல்வேறு அகழாய்வுகளின் மூலம் அறிய முடிகிறது. அதற்கும்
முன்பாகவே தமிழகத்தில் இரும்புக்காலப் பண்பாடுக்கும் முற்பட்ட பண்பாடு
இருந்துள்ளதை ஆதிச்சநல்லூர், தாண்டிக்குடி அகழாய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் இரும்புக்காலத்திற்கு முன்பாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்
ஏறக்குறைய கி. மு. 1500 ஆண்டளவில் மக்கள் வாழ்க்கைத் தரம் மிக்கு
விளங்கியதை அல்சின் அவர்கள் குறிப்பிடுகிறார். இதற்கு எடுத்துக்காட்டாக,
ஆதிச்சநல்லூர் அகழாய்வும் கடந்த காலத்தில் கொடைக்கானல் பகுதியில் பாதர்
ஆங்க்லெட் செய்த அகழாய்வுகளூம், சமீபத்தில் அதே பகுதியில் உள்ள
தாண்டிக்குடியில் க.இராஜன் நடத்திய அகழாய்வுகளும் மெய்ப்பிக்கின்றன.
தமிழகத்தின் இரும்புக்காலப் பண்பாட்டின் காலம் கி.மு. 500 என்ற
நிலையிலிருந்து சற்று முன்நோக்கி எடுத்துச்செல்ல வேண்டிய கட்டாயம்
உள்ளது. இதனைக் கொற்கை அகழாய்வும் உறுதி செய்கிறது.
அகழாய்வுகளின் தரவுகள் இரும்புக் காலத்தில் மக்களின் வழக்கில் இருந்த
தமிழி எழுத்துகளின் காலத்தைக் கி. மு. 500க்கும் முன்பாகவே நிர்ணயிக்க
வேண்டிய நிலை உள்ளது. இக்கால கட்டத்தில் தமிழ்மக்களின் எழுத்தாக விளங்கிய
தொன்மைத் தமிழி எழுத்துகள் இலங்கைக்கும் வடஇந்தியாவிற்கும் சமண, பௌத்தத்
துறவிகளாலும் வணிகர்களாலும் எளிதாக எடுத்துச்செல்லப்பட்டு அவர்களின்
மொழிக்கு ஏற்பப் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. அண்மையில் பொருந்தல்
மற்றும் கொடுமணல் அகழாய்வுகளில் கிடைத்த மட்கலன்களை அறிவியல்
காலக்கணிப்பு செய்த பொழுது எழுத்துப்பொறிப்புகளுடன் கூடிய மட்கலன் கி.மு.
500ஆம் ஆண்டளவைச் சார்ந்த்து என உறுதிசெய்யப்பட்டது.
இத்தகைய சூழலில் அசோகன் பயன்படுத்திய எழுத்துகளான பிராமி, கரோஷ்டி,
அராமிக், கிரேக்க எழுத்துவகைகள் இம்மன்னனின் காலத்தில் ஆட்சிபுரிந்து
வந்த அயலக நாடுகளில் இருந்தே பெறப்பட்டு, அந்த அந்தப் பகுதிகளுக்கு
ஏற்றவாறு பயன்பாட்டிற்கு வந்தன. பிராமி எழுத்தில் இம்மாற்றம் ஏறக்குறைய
கி.மு. 4ஆம் நூற்றாண்டளவில் பட்டிபொருலு மற்றும் கங்கைச் சமவெளியில்
இருந்த பௌத்த-சமணத் துறவிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிராகிருத
மொழிக்கு ஏற்ப ஏற்பட்ட இம்மாற்றத்திற்கு இலங்கையுடன் கொண்ட சமயத்
தொடர்பும் மூல காரணமாக இருந்தது.
5. சந்திரகுப்த மௌரியரின் தென்னக வருகை
வடஇந்திய சமணத்துறவிகள் கருநாடகத்தின் சிரவண பொலகோலாவிற்கு வந்து
அங்கிருந்து தமிழகம் வந்து தங்கிக் கி.மு.2 ஆம் நூற்றாண்டில்
தமிழ்-பிராமிக் கல்வெட்டுகளை உருவாக்கினர் என்ற கருத்தும் உறுதியான
சான்றுகள் அற்றுள்ளது. வடஇந்தியாவில் இருந்த சமணர்கள் சிரவணபெலகோலாவில்
வந்து தங்கி சமயப் பணி ஆற்றிய காலத்தில் ஒரு பிராமிக்-கல்வெட்டையும்
வெட்டிவைக்காததின் காரணம் யாது? அவ்வாறு தமிழகம் வந்த சமணத்துறவிகள்
தமிழகம் வந்தபொழுது வடமேற்குத் தமிழகத்தில் உள்ள மலைக்குகைகளில் தங்கி,
சமயப் பணி ஆற்றிக் கல்வெட்டுக்களை வெட்டாது மதுரைப் பகுதிகளில் தங்கி
அங்குக் கல்வெட்டுக்களை வெட்டுவித்ததற்கான காரணங்கள் யாவை?
மேலும், சிரவணபெலகோலாவில் கிடைக்கின்ற முதன்மையான கல்வெட்டு கி.பி.6ஆம்
நூற்றாண்டைச் சார்ந்தது. சமண நூல்களில் குறிக்கப்படும் பத்ரபாகு,
சந்திரகுப்த மௌரியர் சிரவணபெலகோலா வருகை பிற சான்றுகளால் உறுதி
செய்யப்படவில்லை. இக்கால கட்டத்தில் மதுரை சங்கத்தமிழின் தலைநகரமாக
வளர்ச்சி பெற ஆரம்பித்திருந்தது. தமிழும் எழுத்தும் வளர்ச்சியுறுவதற்கான
சூழல்களும் தமிழகத்தில் இருந்துள்ளன. சந்திரகுப்த மௌரியர் கால மெகஸ்தனீஸ்
தமிழகத்தில் பாண்டியர் ஆட்சி இருந்ததைக் குறிப்பிடுகின்றார்.
6. தமிழ் இலக்கியச் சான்றுகள்
தமிழ் இலக்கியங்கள் மௌரியருக்கு முன்பு இருந்த சில வடஇந்திய அரசுகளைப்
பற்றியும் குறிப்பிடுகிறது. குறிப்பாக, நந்தர்கள் கங்கைச் சமவெளியில்
ஆட்சிபுரிந்ததையும் அவர் தம் தலைநகர் பாடலிபுத்திரத்தையும் நந்தர்கள்
எதிரிகளுக்கு அஞ்சி பெருநிதியைப் புதைத்து வைத்திருந்ததையும்
குறிப்பிடுகின்றன. இதிலிருந்து அசோகருக்கு முற்பட்ட காலத்திலேயே வட
இந்திய வரலாற்றைத் தமிழர்கள் நன்கு அறிந்துள்ளனர். மேலும் மௌரியர் தென்னக
படையெடுப்பையும் அப்படைகளுக்கு தமிழ்மன்னர்கள் உணவு வழங்கியது குறித்தும்
சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அசோகனுடைய ஆட்சி தற்கால கர்நாடகத்தின்
மாஸ்கி வரை நீடித்திருந்ததை இங்கே நினைவுகூர்தல் வேண்டும். மேலும்
இராசமாணிக்கனார் கருதுகோளான துளுநாட்டை ஆண்ட கோசருடன் இணைந்து மௌரியர்
வந்தனர் என்ற கூற்று மெய்ப்படும் வகையில் அசோகனுடைய கல்வெட்டுக்கள்
இப்பகுதி வரை கிடைத்துள்ளது இங்கு நோக்கத் தக்கது.  எனவே தமிழகத்தில்
இருந்த வலிமை மிக்க அரசுகளால் மக்கள் கல்வி கேள்விகளில் சிறந்து
விளங்கியிருந்தனர். வணிகர்கள் சமயத்துறவிகள் மூலம் வடஇந்தியாவிற்கு
எழுத்துக்கள் பரவ இச்சூழல் ஏதுவாக அமைந்திருந்தது.
7. ஹாதிகும்பா கல்வெட்டு
ஒரிசாவை ஆண்ட காரவேலனின் ஹாதிகும்பா கல்வெட்டில் தமிழ்மன்னர்கள்
இம்மன்னனின் ஆட்சியாண்டிலிருந்து 175 ஆண்டுகளுக்கு முன்னரே கூட்டணி
அமைத்துச் செயல்பட்டதைக் குறிப்பிடுகிறது. இதன் காலம் ஏறக்குறைய கி.மு.
3ஆம் நூற்றாண்டாகும் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இக்கூட்டணி
அசோகனின் தென்னகப் படையெடுப்பை தடுப்பதற்காக ஏற்பட்டிருக்கலாம்.
8. அசோகன் கல்வெட்டுகள்
அசோகனுடைய கல்வெட்டுகளில் அவனது ஆட்சிக்காலத்தில் கிரேக்கநாட்டை
ஆட்சிபுரிந்த 5 அரசர்களைப் பற்றியும் தமது பேரரசின் அண்டைப் பகுதியில்
ஆட்சி புரிந்த சோழர், பாண்டியர், சத்தியபுத்திரர் எனும் அதியமான்,
கேரளபுத்திரர் ஆகியோரைப் பற்றியும் குறிப்பிடுகின்றார். எனவே அசோகரின்
காலத்தில் தமிழகம் அயல்நாட்டு அரசுகளுக்கு இணையான வலிமை மிக்க அரசுகளைப்
பெற்று விளங்கியிருந்தது என்பது விளங்கும்.
இக்காலகட்டத்திற்கு முன்னரே பல பெருநில அரசர்களும் குறுநில அரசர்களும்
தமிழ் பிராமி எழுத்து பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக
பெருவழுதி, குறவன், தித்தன் நாணயங்களைக் குறிப்பிடலாம்.  இத்தகைய வலிமை
மிக்க அரசியல் சூழலில் தமிழ்மொழி வளமை பெற்று அதற்கான வரிவடிவங்கள்
தோன்ற, வளர எவ்வித இடர்ப்பாடும் இருக்க வாய்ப்பில்லை.
9. தமிழக இலங்கைத் தொடர்பு
மேலும் இக்கால கட்டத்தில் இலங்கைக்கான தொடர்பும் இலங்கை சமணத் தொடர்பும்
தமிழகத்தில் இருந்து மூல எழுத்துகள் சென்று அவர்களின் மொழிக்கு ஏற்ப
கூட்டெழுத்து அற்ற எழுத்துகளுக்கு வழிகோலப்பட்டது. மகாவம்சம் என்னும்
பௌத்த நூலில் இலங்கையின் நிர்கந்த சமணர்களின் தமிழகத் தொடர்பு
குறிக்கப்பட்டுள்ளது. இத்தொடர்பு கி. மு. 4 அல்லது அதற்குச் சற்று
முற்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கவேண்டும். தமிழ்-பிராமியின் ஒத்த
எழுத்துகள் பல இலங்கைக் கல்வெட்டுக்களில் பயின்று வந்துள்ளமையை இங்குக்
குறிப்பிடலாம். ம, ர போன்ற வடிவங்கள் தமிழ்-பிராமியின் தாக்கத்தை உடையவை.
மேலும், இலங்கையின் மொழிக்கு ஏற்ப வர்க்க எழுத்துகள்
உருவாக்கப்பட்டபொழுது அசோக-பிராமியில் காணப்படும் ம மற்றும் ர
எழுத்துகளும் இங்குப் பயின்று வந்துள்ளன. சமீபத்தில் இலங்கையில்
நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த எழுத்துப் பொறிப்பு இங்குக் கி.மு.
ஐந்தாம் நூற்றாண்டளவிற்கான சான்றாக அமைந்துள்ளது. மேலும் இலங்கை வேந்தன்
பாண்டிய மன்னனுடன் திருமண உறவு வைத்திருந்ததை மகாவம்சம் குறிப்பிடுகிறது.
இதன் மூலம் பாண்டிய நாட்டுடன் இலங்கைத் தொடர்பு நன்கு வெளிப்படுகிறது.
சந்திரகுப்த மௌரியர் காலத்தில் இலங்கையின் வங்காளத் தொடர்பு, எழுத்துகளை
வட இந்தியாவில் பரப்ப வழி வகுத்தது.  மேலும் இதே கால கட்டத்தில்
தமிழகத்தின் வடக்கில் இருந்த ஆந்திரர் தொடர்பால், பட்டிப்பொருலு பௌத்த
துறவிகள், தமிழகத்தில் வழக்கில் இருந்த தமிழ்-பிராமி எழுத்துகளை
அடிப்படையாகக் கொண்டு, பிராகிருத மொழிக்கு ஏற்ப வர்க்க வடிவங்களுக்கு
புதிய வரிவடிவங்களை உருவாக்கினர். மேலும் இங்குத் தமிழ்-பிராமியின் அகர
ஆகாரத் தடுமாற்றத்திற்கு முடிவு செய்யப்பட்டுப் புதிய குறியீடுகளும்
ஏற்படுத்தப்பட்டன.
10. மௌரிய பிராமி
ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழி எழுத்துக்கள் அசோகனுக்குப் பின்வந்த
மௌரிய பிராமியிலிருந்து தோன்றியது என கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனால்
அசோகனுக்குப் பின் கி. மு. 2ஆம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் எழுத்து
வளர்ச்சி மிக விரைவாகப் பாமரமக்கள் வரை சென்றடைந்த நிலையில் பிராமி
தோன்றிய வட இந்தியாவில் இக்கால கட்டத்தில் இன்னும் அதிக வளர்ச்சியைப்
பெற்றிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக கி.மு. 200க்கும் 100க்கும்
இடையில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில கல்வெட்டுகளே  வட இந்தியாவில்
நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக, அசோகனின் பேரன் தசரதன் வெளியிட்ட
நாகர்ஜுனி குகைக் கல்வெட்டு. (கி.மு.220), ஹாதிகும்பா கல்வெட்டு மற்றும்
சில நாணயங்கள். இவற்றிலிருந்து தமிழி எழுத்துகள் தோன்றியது என்பது
முற்றிலும் ஏற்புடையதல்ல. எழுத்துகளின் வளர்ச்சி அதன் தொன்மையையும்
பரவலையும் அடிப்படையாகக் கொண்டது. அசோக-பிராமி மௌரிய பிராமியாக பரிமாணம்
பெறும் காலத்தில் அது வட இந்தியாவில் பரந்த அளவிலோ அல்லது மக்கள்
வழக்கிலோ இல்லை என்பதிலிருந்து அசோக-பிராமி காலத்தால் தமிழ்-பிராமியைவிட
பிற்பட்டது என்பதை எளிதில் அறியலாம்
ஆனால் இதற்கு மாறாக தமிழி எழுத்துகள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில்
தொடங்கி கி.மு. 4-3 ஆம் நூற்றாண்டுகளில் மக்களின் வழக்கத்திற்கு
வந்துள்ளதை தமிழ்நாட்டில் கிடைத்த மேற்குறித்த எழுத்துப் பொறிப்புள்ள
மட்கலன்களும் மற்றும் நாணயங்கள், முத்திரைகள், மோதிரங்கள்
உறுதிசெய்கின்றன. மேலும் தமிழ் நாட்டில் புலிமான் கோம்பை, தாதப்பட்டி,
பொற்பனக்கோட்டை ஆகிய பகுதிகளில் கிடைத்த நடுகற்கள் கால்நடை மேய்க்கின்ற
சமுக மக்களும் எழுத்தறிவு மிக்கவர்களாக விளங்கியுள்ளனர் என்பதை அறிய
முடிகிறது. இந்நடுகற்களில் புலிமான் கோம்பை நடுகற்கள் இரண்டு கி.மு. 5
ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.
11. அசோகன்-கால தமிழிக் கல்வெட்டுகள்
விழுப்புரம் மாவட்டம், ஜம்பைத் தமிழிக் கல்வெட்டின் காலத்தை
தொல்லெழுத்தியல் அடிப்படையில் அசோகனுடைய காலத்திற்கு எடுத்துச்
செல்லலாம். அசோகனுடைய கல்வெட்டில் குறிக்கப்படும் ஸதியபுதோ என்ற
மரபினரில் இலக்கியங்கள் மூலம் பெறப்படும் அதியமான் அரசர்கள் மூவர்.
அவர்களுள் நெடுமான் அஞ்சி மிகச் சிறந்த மன்னனாக விளங்கியுள்ளான்.
அசோக-பிராமியின் தாக்கம் ஜம்பைக் கல்வெட்டில் ஸதியபுதோ என்ற சொல்லின்
மூலமும் ‘அ’ எழுத்தின் வடிவமைப்பு மூலமும் தெரிய வருகிறது.
இக்கல்வெட்டின் காலத்தை ஐராவதம் கி. பி. முதலாம் நூற்றாண்டிற்கு
எடுத்துச்செல்வார். சங்க இலக்கியங்களில் 1. அதியமான் நெடுமான் அஞ்சி,
அவனது மைந்தன் 2. அதியமான் பொகுட்டெழினி, அவனது மைந்தன் 3. அதியமான்
நெடுமிடல் ஆகியோர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளனர். ஐராவதம்
காலக்கணிப்புப்படி அதியமான் நெடுமான் அஞ்சியின் காலம் கி.பி. 1ஆம்
நூற்றாண்டு எனில் ஒவ்வொரு மன்னனுக்கும் 25 ஆண்டுகள் ஆட்சியாண்டாகக்
கணக்கிட்டால் இம்மூவரின் ஆட்சி கி.பி. 75 லேயே முற்றுப்பெற்றுவிடும்.
அல்லது கி.பி. 125 வரை முடிவுக்கு வந்துவிட்டும். அப்படி எனில் அசோகன்
கல்வெட்டில் குறிக்கப்படும் அதியமான் என்ற சத்தியபுத்திரர் யார்? எனவே
ஜம்பைக் கல்வெட்டின் காலம் கி. மு. 3ஆம் நூற்றாண்டாகும். இக்கல்வெட்டில்
குறிக்கப்படும் அதியமன் நெடுமான் அஞ்சியும் அசோகன் கல்வெட்டில்
குறிக்கப்படும் சதியபுதோ அதியன் நெடுமான் அஞ்சியும் ஒருவரே ஆவர். இதை
இக்கல்வெட்டின் எழுத்தமைதியும் உறுதிசெய்கின்றது.
12. பிற்காலம்
இதேபோன்று திருப்பரங்குன்றம் கல்வெட்டில் ‘ஆ’ எழுத்து அசோக-பிராமியின்
‘ஆ’ போன்று எழுதப்பட்டுள்ளது. வளைவுக் கோடான அசோகன் ‘ர’ வும்
தமிழ்நாட்டில் கி. மு. இரண்டாம் நூற்றாண்டளவில் காணப்படுகிறது.
அம்மன் கோவில் பட்டியில் கிடைத்துள்ள கல்வெட்டின் அடிப்படையிலும்
வளர்ச்சி பெற்ற தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ள கல்வெட்டுகளின்
அடிப்படையிலும் தொடக்ககால தமிழ் மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களின்
அடிப்படையிலும் அசோக-பிராமி எழுத்துகளின் காலத்தை முதற்கட்ட தமிழ்-பிராமி
காலத்திற்கு பிற்பட்ட காலமாக நிர்ணயிக்க முடியும் எழுத்துகளின் வளர்ச்சி
நிலை அடிப்படையில் இதனை எளிதாக அறியலாம். அம்மன் கோவில் பட்டி எழுத்து
வகை சன்னதி மற்றும் மகாராஷ்டிரப் பகுதிகளில் கிடைக்கின்ற சாதவாகணர் கால
எழுத்துகளின் காலத்தை ஒத்துள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு
கல்வெட்டிற்கும் காலத்தை நிர்ணயிக்க முடியும்.
13. எண்கள்
அசோக-பிராமி தமிழி எழுத்துகளுக்கும் பிற்பட்ட காலகட்டத்தைச் சார்ந்தது
என்பதற்கு அசோகன் கல்வெட்டுகளில் காணப்படும் சில எண்களின் குறியீடுகளும்
ஆகும். 1 முதல் 4 எண்களுக்கும் 100,400 என்ற எண்களுக்கும் அசோகன்
கல்வெட்டுக்களில் குறியீடுகள் உள்ளன. இது வளர்ச்சி நிலையைக்
காட்டுவதாகும். தமிழிக் கல்வெட்டுகளில் எண்களுக்கான குறியீடுகள்
காணப்படவில்லை. அசோக-பிராமிக்கும் பிற்பட்ட காலமாக விளங்கும் தொண்டூர்
கல்வெட்டில் மூன்றிற்கான குறியீடு உள்ளது. அதேபோன்று புகளூர் கல்வெட்டில்
மூன்றிற்கான மூன்று படுக்கைக் கோடுகளுடன் மூன்று என்ற சொல்லும் உள்ளன.
இதனை முன்றில் என ஐராவதம் மகாதேவன் படித்து முற்றம் எனப்
பொருள்கொண்டுள்ளார். இக்கல்வெட்டில் மிகத் தெளிவாக மூன்றிற்கான மூன்று
படுக்கைக்கோடுகளும் உள்ளன. மேற்குறித்த இரண்டு கல்வெட்டுகளும் காலத்தால்
பிற்பட்டவை. அசோக-பிராமியின் தாக்கம் இக்கால கட்டத்தில் இருந்துள்ளதால்
எண்களுக்கான குறியீடுகள் தமிழகத்தில் வழக்கத்திற்கு வந்தன. பல்லவர் கால
செப்பேடுகளில் இவை பெரிதும் பயன்படுத்தப்பட்டன.
14. சமணக் குகைக் கலை
தமிழ்நாட்டில் தமிழி எழுத்துகள் கிடைக்கின்ற துறவிகள் தங்கியிருந்த
இடங்களான குகைகள் யாவும் இயற்கையாக அமைந்தவை. இயற்கையான குகைகளிலும்
வங்குகளிலும் அவர்கள் தங்கியபொழுது மழை நீர் உள்ளே விழாதவாறு குகையின்
நெற்றியில் மழைநீர் வடிகால்களை கொத்தியும் உயரமான குகைகளை அடைய பாத
அளவில் பள்ளங்களை ஏற்படுத்தியும் முனிவர்கள் படுப்பதற்கான கற்படுக்கைகளை
வழவழப்பாக வடிவமைத்தும் குடைவரைக் கலைக்கு வித்திட்டனர். இவற்றைத் தவிர
இக்குகைகளில் குடைவரைக் கலையின் சிறப்பான அமைப்பைக் காணமுடியாது. ஆனால்
வட இந்தியாவில் அசோகன் காலத்தில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் குடைவரைக்
கலை பரவியிருந்தது. அதற்குச் சான்றாக பராபர், நாககார்ஜுனிக் குடைவரைகளை
இங்கு குறிப்பிடலாம். வட இந்தியாவில் இருந்து வந்த முனிவர்கள் இக்கலையை
அறிந்திருக்க பெரிதும் வாய்ப்பு உள்ளபொழுது இயற்கையான குகைகளில் தங்க
வேண்டிய அவசியம் யாது? காரணம் இக்குகைகளில் தங்கிய துறவிகல் அசோகனின்
காலத்திற்கும் முற்பட்டவர்கள். அதற்குப் பின்னர் வந்த சமணத் துறவிகள்
இக்குகைகளில் தங்கி சமணக் கடவுளர்களைப் பாறைகளில் புடைப்புகளாக உருவாக்கி
வட்டெழுத்துகளில் எழுதியுள்ளனர். ஒரிசா பகுதியில் எவ்வித கலை அமைப்பும்
இல்லாத சிறிய பெட்டி போன்ற அமைப்புடைய குடைவரைகள் பல உள்ளன. அத்தகைய
அமைப்பு கூட தமிழக குகைகளில் காணப்படவில்லை. இவற்றிலிருந்தும் தமிழி
எழுத்துகள் காலத்தால் முற்பட்டவை என்பது விளங்கும்.
தொன்மைத் தமிழி எழுத்துகள் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த பாறை மற்றும்
பானைகளில் காணப்படும் கீறல் குறியீடுகளில் இருந்து கி.மு. 500 அளவில்
தோற்றுவிக்கப்பட்டு, தமிழ் மக்களால் சீர் செய்யப்பட்டு, தமிழகத்திற்கு
வந்த சமண முனிவர்களால் கற்றுக்கொள்ளப்பட்டு, அவர்கள் மூலமாக இலங்கைக்கும்
வட இந்தியாவிற்கும் சென்று, அங்குப் பிராகிருதம் எனப்படும் பாகத
வடமொழிக்கு ஏற்ப, மூல தமிழ் எழுத்துகளில் இருந்து வர்க்க எழுத்துகளும்
பிற எழுத்துகளும் தோற்றுவிக்கப்பட்டு, மௌரியப் பேரரசன் அசோகனால் பெரிதும்
பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாக அறிய முடிகிறது.
தமிழ்நாட்டின் தமிழி எழுத்திலிருந்து நாளடைவில் இருவகை எழுத்துகள்
வளர்ச்சி பெற்றன. அவை தமிழ் மற்றும் வட்டெழுத்து. இதே காலகட்டத்தில்
பல்லவர்களின் ஆட்சியால் வடமொழி வளர்ச்சியுறத் தொடங்கியது. வடமொழிக்
கல்வெட்டுகளை எழுத தமிழில் எழுத்துகள் இல்லாமையால் பல்லவர்கள் அசோக
பிராமியிலிருந்து வளர்ச்சி பெற்ற தென்னக எழுத்து வகையிலிருந்தும்
தமிழின் மூல எழுத்துகளையும் பயன்படுத்தி புதியதாக கிரந்த எழுத்துகளை
உருவாக்கினர். இதுவே பல்லவ கிரந்தம் எனப்பட்டது.  இவையே இன்று வடமொழி
எழுதுவதற்குத் தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்
எழுத்துகளிலிருந்து அசோகன் பிராமி கி.மு 3 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி
பெற்றது. தமிழகம் தவிர பிற மாநிலங்களில் வடமொழியின் தாக்கம்
மிகுந்திருந்தபடியால்  இவ்வெழுத்துகள் இந்தியாவின் பல்வேறு
மாநிலங்களிலும் வழக்கத்தில் வந்தன. அவ்வகையில் தெலுங்கு மொழிக்கான முதல்
கல்வெட்டு எரிக்கல் முத்துராஜ தனஞ்செயனின் எர்ரகுடிபாடு களமல்லா என்ற
கல்வெட்டாகும். இது கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. கன்னட மொழிக்கான
கல்வெட்டு ஹல்மிதி கல்வெட்டு ஆகும். இதன் காலமும் கி.பி. 5ஆம்
நூற்றாண்டாகும் . 13ஆம் நூற்றாண்டு வரை கேரளாவில் தமிழே மொழியாக இருந்து
மலையாள மொழி வடமொழிக்கலப்பாக உருவாக்கப்பட்டது. மலையாள மொழிக்கான முதல்
கல்வெட்டு அத்திங்கள் கல்வெட்டாகும். இது 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.
வரலாற்று அடிப்படையில் தமிழ் மொழியும் எழுத்தும் இந்தியாவில்

http://unnatham.net/tamil-ezhuthukalin-thotram/
சு.இராசவேல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக