திங்கள், 19 பிப்ரவரி, 2018

வேள்பாரி 8 புற்று மணல் கட்டுமானம் அறுபட்ட உடலை சேர்க்கும் மருந்து

aathi tamil aathi1956@gmail.com

31/10/17
பெறுநர்: எனக்கு
நவீனன்  7,700
  Posted December 8, 2016
வீரயுக நாயகன் வேள்பாரி - 8
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.
அ டுத்து வந்த நாட்களில், எவ்வியூரில் நிகழ்ந்த கொண்டாட்டங்களை வர்ணிக்க
வார்த்தைகள் இல்லை. திரும்பும் திசைகள் எல்லாம் ஆட்டமும் பாட்டும்
கூத்துமாக, காடே கலகலவென இருந்தது. கபிலரின் வரவு பெரும் விழாவானது.
பாரியின் பீறிடும் அன்பை வெளிக்காட்ட வடிவங்கள் ஏது? கொண்டாட்டங்கள்...
கொண்டாட்டங்கள்...கொண்டாட்டங்கள்!
`கபிலரைத் தோளிலே சுமந்து வந்தான் பாரி' என்ற செய்தி, நாடு எங்கும்
பரவியது. கபிலர் யார் என, பறம்பு மக்களுக்கு நேற்று வரை தெரியாது. ஆனால்,
தங்களின் தலைவன் தோளிலே சுமந்த ஒரு மாமனிதனைப் பற்றித்தான் இப்போது காடு
எங்கும் பேச்சு.
ஒரே நாளில் கபிலர், காட்டின் கதையாக மாறினார். அவரை அழைத்து வந்த நீலனும்
வேட்டூர் பழையனும் இப்போது எல்லோராலும் தேடப்படும் மனிதராக
இருக்கின்றனர். வேட்டுவன் குன்றில் கால் பதித்ததில் இருந்து,
எவ்வியூருக்குள் நுழையும் வரையிலான கபிலரின் ஒவ்வோர் அடியும் இப்போது
பழையனின் கதைக்குள் மிதந்துகொண்டிருக்கின்றன.
தனது வீரத்தால் பேர் எடுத்த நீலனின் புகழ், கபிலரால் இன்னும்
உச்சத்துக்குப்போனது. எந்நேரமும் இளம்பெண்கள் சூழ இருக்கும் நீலனைக்
கண்டு, அவனது நண்பர்கள் சற்றே பொறாமைகொள்கின்றனர். காலிலே தசைப்பிடிப்பு
ஏற்பட்டவுடன் திருப்பி அனுப்பாமல் அழைத்து வந்த நீலனைக் கட்டி அணைத்தான்
பாரி.
`கண நேரத்துக்குள் அவருக்குத் தனைமயக்கி மூலிகை கொடுக்க வேண்டும் என நீ
துணிந்ததுதான் மிக முக்கியம். சிறந்த வீரனால் மட்டுமே அந்நிலையில் நாகக்
கிடங்குக்குள் நுழைய முடியும்' - பாரி சொன்ன சொற்களை இப்போது எல்லோரும்
சொல்கின்றனர்.
கொற்றவை விழா தொடங்க ஒரு வார காலம் இருக்க, இப்போது கபிலருக்கான விழா
தொடங்கியது. “கபிலரின் வருகை, காட்டின் திருவிழா” என்று பாரி சொன்ன
சொல்லில் இருந்து அது தொடங்கியது. காட்டின் விழா என்றால், அதன் முதல்
வெளிப்பாடு வேட்டைதான். பெரும் உற்சாகத்தோடு பல குழுக்கள் வேட்டைக்குப்
புறப்பட்டுப் போகும். சொல்லிவைத்த பொழுதுக்குள் ஊர்வந்து சேர வேண்டும்.
வேட்டையில் சிக்கும் முக்கியமான விலங்கு எதுவோ, அதுதான் அன்றைய
விருந்தைத் தீர்மானிக்கும்.
ஒவ்வொரு விலங்கின் ருசிக்கும் ஏற்ற மதுவகை உண்டு. மதுவின் தன்மைக்கு
ஏற்றபடியே இசை முழங்கும். இசைக்கு ஏற்பவே ஆட்டம். அன்றைய ஆட்டத்தின்
ஆரம்பம் வேட்டையாடப்படும் விலங்கில் இருந்தே தொடங்குகிறது. அது
மானாட்டமா, மயிலாட்டமா, மிளா கூத்தா, காட்டு எருமையின் கொம்பாட்டமா
என்பது மதுவோடும் உணவோடும் இசையோடும் ஆட்டத்தோடும் கலந்தது.
மான்கறிக்கு ஈச்சங்கள் எடுபடாது. பறவைகளின் கறிக்கு தென்னங்கள்
பொருந்தாது. ஈனா கெடாரிக்கு மூன்றாம் நாள் பனங்கள்தான் சிறந்தது. அத்தி
மதுவுக்கும் அறுபதாங்கோழியின் கறிக்கும் ஈடு இவ்வுலகில் கிடையாது.
`அறுபதாங்கோழி அகப்படாதா!' என ஏக்கத்தோடு இருந்தான் பாரி. `வேட்டைக்குப்
போன ஒரு குழுவாவது அறுபதாங்கோழியைப் பிடித்துவரும்' என, மூன்று நாட்களாக
பாரி ஆசையோடு காத்திருக்கிறான். கபிலர் எனும் பெரும்புலவர்
வந்திருக்கிறார். அந்த வருகையைக் கொண்டாட அறுபதாங்கோழியே பொருத்தமானது.
பாரியின் ஆசை இன்றாவது நிறைவேற வேண்டும் என, எவ்வியூரில் இருக்கும்
ஒவ்வொருவரும் ஆசைப்படுகின்றனர். முதல் நாளும் கிடைக்கவில்லை, அடுத்த
நாளும் கிடைக்கவில்லை. இந்தச் செய்தி எங்கும் பரவ, பறம்பு நாட்டில்
இருக்கும் எல்லா ஊர்களும் காட்டுக்குள் அறுபதாங்கோழியைத் தேடி தினமும்
அலைகின்றன.
`காட்டின் பிரமாண்டத் துக்குள் சின்னஞ்சிறு கோழியைக் கண்டுபிடிப்பது என்ன
சாதாரணச் செயலா? அறுபதாங்கோழி, தான் பிடிபடுவதை அதுதான் முடிவுசெய்யும்'
என்பார்கள். பாரி, அதன்மீதுதான் நம்பிக்கைகொண்டிருக்கிறான். “எனக்காகவா
கேட்கிறேன்? கபிலருக்காக அது இந்நேரம் வந்து அகப்பட்டிருக்க வேண்டாமா!”
என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஒரு குழந்தையைப்போல
அடம்பிடிக்கும் பாரியின் ஆசையை நிறைவேற்ற, ஒவ்வொருவரும் துடியாகத்
துடிக்கின்றனர். “இந்நேரம் ஆயிரம் யானைகளைக்கூட ஓட்டிவந்திருக்கலாம்.
ஆனால், காட்டுக்குள் கோழி பிடிப்பது எளிதான செயலா? இது பாரிக்கு ஏன்
புரியவில்லை? பச்சிளம் பிள்ளையைப்போல அடம்பிடிக்கிறானே!'' என்று
புலம்பியபடியே காட்டின் இண்டு இடுக்கு எல்லாம் நுழைந்து தேடுகின்றனர்
பறம்பு மக்கள். விவரம் தெரிந்தவர்கள், புலிகளின் நடமாட்டப் பகுதியை
நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றனர்.
கபிலர் திகைத்துப்போய் இருந்தார். ஒவ்வொரு நாளும் பெரும்
விருந்துகளோடுதான் தொடங்குகிறது. மறுநாள் அதைவிடச் சிறந்த விருந்து
அரங்கேறுகிறது. அவர் யவனத்தேறலை பாண்டியக் கிழவனோடு உட்கார்ந்து
நாட்கணக்கில் குடித்திருக்கிறார். சேரனோடு பெருவிருந்து உண்டு
மகிழ்ந்திருக்கிறார். ரசனையில் சோழனே சிறந்தவன் எனக் கருதுபவர் கபிலர்.
அவனது உபசரிப்பும் ஏற்பாடுகளும் அவ்வளவு எழில் வாய்ந்தவையாக இருக்கும்.
அவை எல்லாம் அதிகாரத்தாலும் ஆடம்பரத்தாலும் நடப்பவை; செல்வத்தின்
திளைப்பில் நடப்பவை. ஆனால், இங்கு நடப்பது முற்றிலும் வேறானது.
பாவனைகளும் அலங்காரமும் படியாத மானுட அன்பின் தூய வடிவம். அதே
தூய்மையுடன் இருக்கும் ஒருவனால்தான் இதை அனுபவிக்க முடியும்.
மனதின் ஓரத்தில் இருக்கும் அழுக்குகூட நம்மை வெட்கித் தலைகுனியச்
செய்யும் அளவுக்கு உக்கிரம் ஏறிய பேரன்பு இது. கபிலர் திணறிப்போனார்.
அறுகநாட்டுச் சிறுகுடி மன்னன் செம்பனிடம், தான் சொல்லிவந்த வார்த்தைகள்
உள்ளத்தை அறுத்துக் கொண்டிருந்தன. ‘பாரியின் தூய்மையான அன்புக்கு முன்
நான் கூனிக்குறுகியே நிற்கிறேன். நான் அதற்குத் தகுதியானவன் அல்ல. அவனது
புகழ் மீது ஐயங்கொண்டு அதைக் கண்டறியவே, நான் இங்கு வந்தேன். இதை அவனிடம்
சொல்ல வேண்டும்' என்று கபிலரின் மனம் தவித்தது.
பாரியின் நிழல்போல் எந்நேரமும் உடன்நிற்பவன் முடியன். வேகமும்
வீரமும்கொண்ட இளைஞன். அவனது இடுப்பில் ஒரு பக்கம் வாளும் இன்னொரு பக்கம்
மாட்டுக்கொம்பும் தொங்கிக்கொண்டிருந்தன. பழைமையும் புதுமையுமான இரண்டு
ஆயுதங்களை ஒருசேர வைத்திருந்தான். ‘முடியன்’ என்பது அவனது பெயர்
என்றுதான் கபிலர் முதலில் நினைத்தார். ஆனால், அது `தளபதி'போல ஒரு பட்டம்
என்பது பின்னர்தான் கபிலருக்குத் தெரியவந்தது.
அதேபோல் எவ்வியூரில் எல்லோரும் வணங்கும் மனிதராக, பெரியவர் தேக்கன்
இருக்கிறார். அதுவும் பட்டமா அல்லது பெயரா என கபிலருக்குத் தெரியவில்லை.
இருவரிடமும் தனது நிலையை விளக்க வேண்டும் என கபிலர் முயற்சிசெய்ய,
அவர்களோ அறுபதாங்கோழி கிடைக்கும் வரை எதையும் காதுகொடுத்துக் கேட்கவே
தயாராக இல்லை. கபிலர் என்ன செய்வது எனத் தெரியாமல் திக்கித்திணறிக்
கிடந்தார்.
ஆனால், கபிலரைவிட திணறிக் கிடப்பது பறம்பு மக்கள்தான். அறுபதாம்கோழிக்காக
அவர்கள் இப்போது காடு எங்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர், பாரியின்
குடும்பம் உள்பட. ஆசைப்பட்டது பாரி என்பதால், அதை நிறைவேற்றுவதை
கடமையாகவே எல்லோரும் கருதுகின்றனர். அறுபதாம்கோழி, காட்டின் அதிசயங்களில்
ஒன்று. கோழியைப்போல் உடலும் சேவலைப்போல் வாலும் கொண்டிருக்கும்.
வண்ணமயமான வாங்கருவாள் போல் வாலின் இறகுகள் சிலிர்த்து நிற்கும். அது
அறுபது நாட்களுக்கு ஒருமுறைதான் முட்டையிடும். அன்னப்பறவை சாவதற்கு முன்,
ஒரே ஒருமுறை பெருங்குரல் எழுப்பிக் கூவிவிட்டு செத்துப்போவதைப் போலத்தான்
இதுவும். சாவதற்கு முன் பகற்பொழுதில் சேவலைப்போல் பெருங்குரல் எடுத்துக்
கூவிவிட்டு செத்துப்போகும்.
அந்த ஓசைதான் அதை `அறுபதாங்கோழி' என்று அடையாளப்படுத்துவது. ஓசை வந்த
பகுதியில் தேடினால், ஏதேனும் ஓர் இண்டுஇடுக்குக்குள் செத்துக்கிடக்கும்.
அறுபதாங்கோழியைத்தான் முருகன் தனது கொடியில் வைத்திருந்தான். முன்புறம்
கோழி போன்றும், பின்புறம் சேவல் போன்றும் அது காட்சியளித்தது.
`அது முருகனின் மாயவித்தை' என, பின்னால் வந்தவர்கள்
சொல்லிக்கொண்டிருந்தபோது `எவ்வி'தான் ஒருநாள் அறுபதாங்கோழியைக்
கண்டறிந்தான். முருகன் கொடியாக வைத்திருந்தது இதுதான் என்பது அவன்
சொல்லித்தான் மற்றவர்களுக்குத் தெரியும். அந்தக் கோழியின் பெரும் அதிசயம்
என்ன என்றால், அதன் கழிவில் இருந்துதான் `தீப்புல்' முளைக்கும். அதன்
கறியின் சுவைக்கு ஈடுஇணை இல்லை. முருகனிடம் இருக்கும் ஒன்றின் சுவையைப்
பற்றி தனித்துச் சொல்லவேண்டியது இல்லை.
அறுபது நாட்களுக்கு ஒருமுறை முட்டையிடும். அது காட்டுக்குள் எந்த
விலங்கின் உணவாகவும் மாறாமல், மண்ணுக்குள் பாதுகாப்பாக இருந்து பொறிக்க
வேண்டும். அதன் சுவை வேட்டை விலங்குகளுக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால்,
அதை வேட்டையாடுவது எளிது அல்ல. புலி போன்ற வேட்டை விலங்கு அதன் சுவைக்கு
மயங்கி அதன் வாசனையை நுகர்ந்தபடி, காட்டின் குறிப்பிட்ட பகுதியில்
அலைந்துகொண்டே இருக்கும். புலியால் எளிதில் அறுபதாங்கோழியைப் பிடிக்க
முடியாது, அதே நேரம் அதன் வாசனையைவிட்டு விலகவும் முடியாது. எந்நேரமும்
புதருக்குள் பதுங்கியபடியே நகர்ந்துகொண்டு கிடக்கும். தன்னைக்
கடந்துபோகும் மான் கூட்டத்தைக் கண்டும் புலி அமைதியாக இருக்கிறது
என்றால், அங்கு அறுபதாங்கோழி இருக்கிறது என அர்த்தம். புலியின் இந்த
மயக்கச் செயலின் வழியே அங்கு அறுபதாங்கோழி இருப்பதை, காடு அறிந்தவர்கள்
அறிவார்கள்.
நான்காம் நாள் அதிகாலை, தென்புறக் காட்டுக்குள் சரசரவெனக் கீழ்
இறங்கினான் பாரி. உடன் வீரர்கள் சிலரும் சென்றுகொண்டி ருந்தனர். புலியின்
நடமாட்டம் பற்றிய தகவல் வந்திருக்கலாம். எனவே, `அறுபதாங்கோழி இருக்கும்
வாய்ப்பு இருக்கிறது. நாமே செல்வோம்' என முடிவெடுத்து பாரி
போய்க்கொண்டிருக்கிறான் என்று மற்றவர் நினைத்தனர். சிற்றோடையைத் தாண்டிய
சிறிது தொலைவில் செழித்து வளர்ந்திருந்த கடம்பமரத்தின் முன் நின்றான்
பாரி. குறி சொல்லும் வேலன் பூசாரி முன்னரே அங்கு வந்திருந்தார்.
வீரருக்கு அப்போதுதான் புரிந்தது. சற்று தொலைவில் நின்று முருகனை
நோக்கிக் கைதொழு தனர்.
தமிழ் நிலத்தில் எஞ்சியிருக்கும் மலைமக்களின் அரசுகள் இருபத்திரண்டு
மட்டுமே. அவற்றுள் முதன்மையாக அறியப்படுவது பறம்புநாடு. அதன் தலைவன்
பாரி. இந்த நாட்டைப் பற்றி மூவேந்தருக்கும் சமவெளியில் வாழும்
மக்களுக்கும் இதுவரை தெரிந்த உண்மைகள் பாணர் பலரால் சொல்லப்பட் டவையே!
தமது வறிய நிலையைப் போக்க வரும் பாணர், பாரியின் அள்ளித் தரும் வள்ளல்
தன்மையையே மீண்டும் மீண்டும் பாடினர்.
ஆனால், வேளீர்களின் பறம்புநாடு எத்தகைய வளத்தைக்கொண்டுள்ளது, அந்த மக்கள்
தமது வாழ்வை எப்படி அமைத்துக்கொண்டுள்ளனர், பாரி நடத்தும் ஆட்சியின்
தனித்துவம் என்ன என்று, எதுவும் வெளி உலகில் இருப்பவர்களுக்குத்
தெரியாது. ‘மலைமகன் ஒருவன் ஆளுகிறான்; இல்லாதவர்கள் போனால் `இல்லை' எனச்
சொல்லாமல் அள்ளித் தருகிறான்' என்றுதான் நினைத்திருந்தனர்.
முதன்முறையாக வயிற்றுப்பாட்டுக்காக அல்லாமல், பாரியையும் அவனது
பறம்புநாட்டையும் அளந்து பார்க்க வேண்டும் என்று முடிவோடு ஒருவர்
வந்திருக்கிறார். வெளி உலகின் கண்கொண்டு இந்த நாடு இப்போதுதான்
பார்க்கப்படுகிறது.
இவர்கள் காட்டின் பழைமையான மைந்தர்கள்தான். ஆனால், காலமாற்றத்தின்
கரங்களை இறுகப் பற்றியுள்ளனர். இந்த மண்ணில் இருந்து அழிக்கப்பட்ட
எத்தனையோ குலங்களின் கண்ணீரும் ரத்தமும் இவர்களை உருமாற்றியபடி
இருக்கின்றன. பத்து ஆண்டுகளாக இந்தக் குலத்தின் தலைவனாக இருக்கிறான்
வேள்பாரி. வேளீர்குல வீரன் ஒருவன் எறியும் ஈட்டியைக் கண்டு, வேந்தனே
ஆனாலும் விலகி நிற்கும் மனநிலையை உருவாக்கிய மாவீரன் வேள்பாரி.
`நாடு என்பது அரசும் அரச நியதியும்தான்' என விதி செய்பவர்களுக்கு
மத்தியில், `நாடு என்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம்' என நிலைநிறுத்தி
உள்ளான். இந்த நிலத்தில் நடந்துவரும் கபிலருக்கு, கண்ணில் படுபவை எல்லாம்
ஆச்சர்யத்தையே உண்டு பண்ணின. அதிகாரம் உயிர்பெறாத இடத்தில் அன்பு மட்டுமே
தழைத்திருக்கும். ஆசை, கோபம், சோகம் எல்லாமே அன்புமயமாக நிகழும் ஓர்
உலகின் நிகழ்வைக் கனவில்கூட காண முடியாதே! நிஜத்தில் என்ன செய்வார்
கபிலர்? நிலைகுலைந்துபோனார்.
கபிலரின் கண்களில் முதலில் பட்டது பறம்பின் தலைநகரான `எவ்வியூர்'.
வேட்டூரில் இருந்து நடந்து வரும்போது நீலன் சொன்னான், ``பாம்புத்
தச்சன்தான் எவ்வியூருக்கு வடிவம் கொடுத்தவன்'' என்று.
“பாம்புத் தச்சனா, அது யார்?” எனக் கேட்டார் கபிலர்.
“பாம்புக்கு வீடு கட்டும் தச்சன் யார்? எனத் திருப்பிக் கேட்டான் நீலன்.
“கறையான்” என்றார் கபிலர்.
“கறையான் கட்டியுள்ள புற்றைப்போல, ஆதிமலையின் நடுவில் உள்ள கரும்பாறையைச்
சுற்றி பாறையோடு பாறையாகச் சற்றே குடைந்து, முன்னால் புற்றுமண்ணால் சுவர்
எடுத்து மரச்சட்டகங்களால் வடிவமைக்கப்பட்ட வீடுகளைக்கொண்டது எவ்வியூர்.
கார்காலத்தில் மழை கொட்டித்தீர்க்கும். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும்
உச்சியில் இருந்து கீழ்நோக்கிப் பாய்ந்தோடும் நீர், சிறு துளிகூடத்
தேங்கி நிற்காது. கோடையில் கொடுங்காட்டுத் தீ பரவினாலும் உள்ளுக்குள்
ஏறாது. சுட்டமண், மழைக்கு உறுதியானது; நெருப்பை உள்வாங்கும்; அனல்
தாங்காமல் இளகி உருகும். ஆனால், புற்றுமண் நெருப்பை ஒட்டவிடாது,
விலக்கிக் கொடுக்கும். நீரும் நெருப்பும் ஒன்றும் செய்துவிட முடியாத ஒரு
கட்டுமானம். இவற்றுள் மிக வியக்கவைப்பது எவ்வி கட்டியுள்ள அரண்மனை. அதை
நேரில் பார்த்தால்தான் உமக்குப் புரியும்” என்றான் நீலன்.
எவ்வியூரைக் காணும் வரை இதன் வடிவம் கபிலருக்குப் பிடிபடவில்லை.
உண்மையில் ஆச்சர்யம் நிரம்பிய கட்டுமானம்தான் இது. இன்னும் அரண்மனையைப்
பார்க்கவில்லை. அதைப் பற்றி ஒற்றை  வரியில் முடித்துக் கொண்டான் நீலன்.
பார்த்ததன் வியப்பு பார்க்காததன் மீதே படிகிறது. அவருக்கு அரண்மனையைப்
பார்க்க ஆசைதான். ஆனால், இந்த ஊரில் எந்தத் தெருவுக்குள் போனாலும்
ஆச்சர்யத்தின் வழியாகத்தான் கடக்க வேண்டியிருக்கிறது.
பறம்புநாட்டில் மனிதன் உழைத்து விளைவிக்கக்கூடிய எந்த ஒரு பொருளும்
இல்லை. தினை வகைகள், பழ வகைகள், காய்கறி வகைகள் எல்லாம் இயற்கையில் தாமாக
விளைகின்றன. உணவு என்பது சேகரிப்புதானே தவிர, உற்பத்தி அல்ல.
பிறநாடுகளைப்போல் உணவு உற்பத்திக்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தவேண்டிய
தேவை இல்லை. பிறநாடுகளில் பெரும்பகுதி மக்கள் செய்யும் வேலைக்கு, இங்கு
சிறு பொழுது மட்டுமே செலவழிக்கப்படுகிறது.
ஆண்களின் வாழ்வு முழுவதும் ஆயுதங்களோடுதான் கழிகிறது. வேட்டை தொடங்கி
போர் வரை எல்லாவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்தும் அசாதாரணமான கலையை
ஒவ்வொருவரும் கற்றிருக்கின்றனர். எட்டு வயதில் காடு அறிந்துவர
வீட்டைவிட்டு வனத்துக்குள் அனுப்பப்படும் சிறுவர், அதன் பிறகு
மாவீரராகத்தான் குடில் திரும்புகின்றனர். இவரின் முயற்சிக்கு இணையான
முயற்சிகள் வேறு எங்கும் இல்லை.
இரண்டாவது, இயற்கையை அறிதல். தாவரங்கள், விலங்குகள், பறவைகள், காலநிலைகள்
ஆகியவற்றைப் பற்றி இவருக்கு இருக்கும் பேரறிவுக்கு இணை சொல்லும் அறிவு
வேறு எவருக்கும் இல்லை. அதனாலேயே இவர்கள் மருத்துவத்தில் அற்புதங்களைக்
கைவரப்பெற்றவராக இருக்கின்றனர். மருத்துவம் கைவரப்பெற்றதாலேயே வீரத்தின்
எல்லையை இன்னும் கூட்டுகின்றனர்.
பயிற்சியின்போது வாள்முனை நெஞ்சைக் கீறிப்போனாலும் கவலைகொள்ளும் வீரன்
எவனும் இல்லை. `அத்தாப்பொறுத்தி' மூலிகையைக் கண்டறிந்த பிறகு, சதையை
அறுத்துக்கொண்டுபோனாலும் அறுத்ததைப் பொறுத்திக்கொடுக்கிறான் மருத்துவன்.
பறம்பு நாடு அபரிமிதமான ஆற்றலோடு இருக்கிறது.
வெளிஉலகுக்குப் பெரிதாகத் தெரிவது பாரியின் புகழ்தான். ஆனால், அதைவிட
பெரிய ஆற்றலும் அறிவும் ஆச்சர்யங்களும் இங்கு இருக்கின்றன. ஆனால், இவை
எல்லாவற்றையும்விட கபிலர் அதிசயித்தது இந்த மக்களின் வாழ்முறையைத்தான்.
ஒவ்வொருவருக்கு எனத் தனித்த சொத்தும், எப்பாடுபட்டாயினும் அதைச்
சேமித்துப் பெருக்க வேண்டும் என்ற பெருந்தாகமும் இங்கு இல்லை. இயற்கை பிற
உயிரினங்களுக்கு வடிவமைத்த குண எல்லைகளைக் கடந்து மனிதன் போகவில்லை. மழை
வந்ததும் செழிப்புறத் தழைத்து, வெயில் காலத்தில் வாடித் துவண்டு,
மலரும்போது நறுமணம் வீசி, கனியும்போது அள்ளி வழங்கி, உதிரும்போது சத்தம்
இல்லாமல் மண்ணில் மக்கி தம்மை உரமாக்கியபடி பயணத்தை முடித்துக்கொள்ளும்
இந்த வாழ்க்கை, கபிலரை மண்டியிட்டு வணங்கவைத்தது.
கடம்ப மரத்தின் முன் மண்டியிட்டு வணங்கிய பாரி, நீண்ட நேரம் கழித்தே
எழுந்தான். வேலன்பூசாரி குறி சொன்ன வார்த்தைகள் எவையும் அவனது காதுகளில்
விழவில்லை. அவன் முருகனை வணங்கி நின்றான். ஆனால், அவன் மனம் வணங்கவில்லை.
அவனுக்கு இருந்தது கோபம். அதைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இறங்கி
வந்தான். காற்றின் அசைவின்றி இறுகி நின்றது கடம்ப மரம். பாரியும் கோபம்
தளர்த்தாமலே திரும்பினான். எதிரில் செய்தி சொல்ல ஒருவன் வேகமாக இறங்கி
வருவது தெரிந்தது. பாரிக்கு ஆவல் மேலிட்டது. ‘அறுபதாங்கோழியைப் பற்றிய
செய்தி வருகிறதோ!' என எண்ணினான். வந்தவன் வணங்கிவிட்டுச் சொன்னான்,
“குடநாட்டு அமைச்சர் கோளூர் சாத்தன் தங்களைக் காண வந்திருக்கிறார்.”
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
http://www.vikatan.com

கட்டடக்கலை புதுமுயற்சி கட்டிடக்கலை மருத்துவம் அறுவைசிகிச்சை மண் தொழில்நுட்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக