திங்கள், 19 பிப்ரவரி, 2018

மீத்தேன் கெயில் போராளி ஜெயராமன் கைது அரசவன்முறை பாஜக


aathi tamil aathi1956@gmail.com

31/10/17
பெறுநர்: எனக்கு
*பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கினைத்
திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி
https://goo.gl/q8WK69

பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கினை ரத்து
செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
அவர்கள் இன்று (31-10-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு ஆளுமையாகத் திகழ்கிற மண்ணுரிமைப்போராளி
பேராசிரியர் த.ஜெயராமன் அவர்கள் எழுதிய, ‘நதிநீர் இணைப்புத்திட்டம் –
ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா’ எனும் நூலுக்காகத் தேசத்துரோக
வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பது சனநாயக மாண்புகளுக்கும், நெறிகளுக்கும்,
கருத்துரிமைக்கும் முற்றிலும் எதிரானதாகும்.

நீண்ட நெடிய காலமாகவே அடிமைத்தேசிய இனமாய்த் தாழ்த்தி வீழ்த்தப்பட்டுக்
கிடக்கிற அன்னைத்தமிழ்ச்சமூகத்தின் விடுதலைக்காக மாபெரும் சிந்தனைகளைத்
தனது எழுத்துகளின் மூலமாகவும், பேச்சுகளின் மூலமாகவும், வலிமைமிக்கக்
களப்போராட்டங்களின் வாயிலாகவும் விதைத்துவரும் பெருமதிப்பிற்குரிய ஐயா
பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் மீது இந்திய ஒற்றுமைக்குத் தீங்கு
விளைவித்ததாகக்கோரி தேசத்துரோக வழக்குப் பாய்ச்சப்பட்டிருப்பதனை
எதன்பொருட்டும் ஏற்க முடியாது. தமிழக அரசின் இவ்வடக்குமுறை போக்கானது
காட்டாட்சி தர்பார் நடத்துகிற சர்வாதிகார மனநிலையினையே வெளிக்
காட்டுகிறது. மாற்றுக்கருத்தினை முன்வைப்பவர்களையும், ஆட்சியாளர்களை
விமர்சிப்பவர்களையும் சிறைப்படுத்தி வதைப்படுத்தினால் தாங்கள் ஆடும்
ஆட்டங்களுக்கு எதிர்க்குரலெழுப்ப ஆளிலிருக்காது என்கிற மமதையில் இவ்வகை
அடக்குமுறைகள் ஏவப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

பாஜக அரசானது பதவியேற்றது முதல் அவர்களது கோர ஆட்சிக்கு எதிரான
விமர்சனங்களை முன்வைப்போரையும், மக்களுடன் களத்தில் போராடுவோரையும்,
கருத்தியல் பரப்புரையில் ஈடுபடுவோரையும், பகுத்தறிவு
சிந்தனையாளர்களையும், முற்போக்கு எழுத்தாளர்களையும் ஆளும் வர்க்கத்தின்
துணைகொண்டு மிரட்டுவது, தாக்குவது, கொலைசெய்வது போன்ற கொடுஞ்செயல்கள்
நாடு முழுக்க நடந்தேறி வருகின்றன. பாஜகவின் கைப்பாவையாக முழுமையாக
மாறிவிட்ட அதிமுக அரசு அதனைப்போலவே தமிழகத்தையும் களம்
அமைக்கத்துடிக்கிறது. தங்கை வளர்மதியின் கைது, பேராசிரியர் ஜெயராமன் கைது
என ஆளும் வர்க்கத்தின் கோர முகத்திற்கு எதிராகப் பரப்புரை
செய்வோரையெல்லாம் அந்தவகையில்தான் அடக்கிஒடுக்க முனைகிறார்கள். அதிலும்
பேராசிரியர் ஜெயராமன் போன்ற அரசியல் தளங்களுக்கு அப்பாற்பட்ட
சிந்தனையாளர்கள் மீது பொய்வழக்கு புனைந்து சிறையிலடைத்து அடக்குமுறையை
ஏவுவது தமிழகத்தில் தொடர்கதையாக மாறியிருக்கிறது.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுத்தல், ஒ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாய்களைப்
பதித்தல் போன்ற பேராபத்து மிக்கத் திட்டங்களுக்கு எதிராக மக்களைத்
திரட்டிப் போராடும் சமரசமற்ற போராளியாகப் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள்
திகழ்வதால் ஆளும் வர்க்கத்திற்கு எழுந்த காழ்ப்புணர்ச்சியே அவர் மீது
இதுபோன்ற பொய் வழக்குகளைப் புனையச் செய்திருக்கிறது. ஏற்கனவே,
கதிராமங்கலத்தைக் காப்பதற்கான போராட்டத்தில் கைதாகி குண்டர் சட்டம்
பாய்ச்சப்பட்டு அரசின் பல்வேறு விதமான அடக்குமுறைகளுக்கு உள்ளான அவர்
மீது மீண்டும் தேசத்துரோக வழக்குப் பாய்ச்சப்பட்டிருப்பது கொடுமையிலும்
கொடுமை என்றே கருதுகிறேன். பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் தனிமனிதரல்ல!
தமிழ்த்தேசிய இனத்தின் போர்க்குணமிக்கப் பேராளுமை என்றவகையில் அவர் மீதான
தேசத்துரோக வழக்கு பாய்ச்சப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக்
கண்டிக்கிறது. அவர் மீது புனையப்பட்டிருக்கும் தேசத்துரோக வழக்கு
உள்ளிட்ட பொய்யான வழக்குகள் யாவற்றையும் உடனடியாகத் திரும்பப் பெற
வேண்டும் எனவும், சமூகச்செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ச்சியாக ஏவப்படும்
இவ்வடக்குமுறைகளைத் தமிழக அரசானது உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்
எனவும் வலியுறுத்துகிறேன். மாறாக, இது தொடரும்பட்சத்தில், மக்களை
அணிதிரட்டி மாபெரும் போராட்டங்களை ஆளும் வர்க்கத்தின் அடாவடித்தனத்திற்கு
எதிராக முன்னெடுப்போம் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வலைதளம்: https://goo.gl/q8WK69

---
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 - 4380 4084

ஹைட்ரோகார்பன் கதிராமங்கலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக