திங்கள், 19 பிப்ரவரி, 2018

வேள்பாரி 3 முருகன் வள்ளி குலம் கடந்த காதல் கதை குறவர் கொடியர் வேடர்

aathi tamil aathi1956@gmail.com

31/10/17
பெறுநர்: எனக்கு
நவீனன்  7,700
  Posted November 3, 2016
வீரயுக நாயகன் வேள் பாரி - 3
வள்ளியைத் தேடி...
செழித்து வளர்ந்திருந்த புற்கள், தோள் அளவுக்கு இருந்தன. அதற்கு நடுவில்
மெல்லிய கோடுபோல இருக்கும் ஒற்றையடிப் பாதையை கவனமாகப் பார்த்து, நீலன்
முன் நடந்தான். சிறிது நேரம் எந்தப் பேச்சும் எழாமல் இருந்தது. சூரியன்,
காரமலையின் பின்புறம் இடுப்பு அளவுக்கு இறங்கியிருந்தான். வலி சற்றுக்
குறைந்ததுபோல் இருந்தது. கபிலர் பேச்சைத் தொடங்கினார்.
“இந்தக் காட்டில் எவ்வளவோ அழகான, வடிவுகொண்ட வாசனைப் பூக்கள்
இருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு, பனம் பூவை ஏன் பறம்பு
நாட்டின் குலச் சின்னமாக ஆக்கினார்கள்?”
“பனம் பூ வெறும் அழகு அல்ல; ஆயுதம். அது ஆயுதம் மட்டும் அல்ல; பேரழகு.
இந்த மலைத்தொடர் எங்கும் அலைந்து திரியும் வேளீர் மக்கள், பனம் பூவின்
குருத்து ஒன்றை எப்போதும் தங்களின் இடுப்பில் செருகிவைத்திருப்பார்கள்.
குட்டையில் தேங்கிக்கிடக்கும் நீரில் விஷம் ஏறியிருக்கும். அலைந்து
திரிபவர்களுக்குத் தாகம் எடுத்தால், எந்தக் குட்டை நீரிலும்
பனங்குருத்தைப் போட்டு, சிறிது நேரம் கழித்து அந்த நீரை அருந்துவார்கள்.
எவ்வித விஷமும் தாக்காது. அது ஒரு விஷமுறி. பனம் பூ அழகு, ஆயுதம்,
அருமருந்து... இன்னும் எவ்வளவோ இருக்கின்றன”- பேசிக்கொண்டே நடையின்
வேகத்தைக் கூட்டினான் நீலன். கதை சொல்ல ஆரம்பித்தால், கபிலர் பசுவின்
பின்னால் வரும் கன்றைப்போல வருவார் என்பதை அவன் கண்டறிந்து நீண்ட
நேரமாகிவிட்டது.
“பறம்பு மலையின் பனைமரத்துக் கள்ளை அருந்தியிருக்கிறீர்களா?”
“இல்லை.”
“இன்னும் சற்று விரைவாக நடந்தால், இன்றே அருந்தலாம்.”
கபிலர், நீண்ட நேரம் கழித்து வலி மறந்து சிரித்தார். கள்ளைச் சொல்லி
இழுக்கிறான் எனத் தெரிந்தது.
“ஏன்... நேரம் கழித்துப் போனால், கள் தீர்ந்துவிடுமா?”
“இறக்கப்பட்ட கள்ளுக்கு ஒரு நேரம் இருக்கிறது. கள் மதப்பேறித்
திரண்டிருக்கும்போது அருந்த வேண்டும். அப்போதுதான் கீழ் நாக்கில் இருந்து
உச்சந்தலைக்குப் பாய்ந்தோடி கிறங்கச்செய்யும். நேரம் தவறினால், அந்த
ஆட்டம் தவறும்.”
“உன் பேச்சே கள்ளூறிக்கிடக்கிறதே?”
“நான் சிறுவன். நீங்கள் பாரியோடு அமர்ந்து கள் அருந்த வேண்டும். மஞ்சள்
கொடியில் இருந்து இறங்கும் சாற்றைத் துளித்துளியாக இறக்கி, சுண்ணத்தின்
அளவைக் கூட்டிக் குறைத்து, கள்ளுக்குள் இருக்கும் போதைக்கு
வித்தைகாட்டுவான் பாரி. அவனோடு அமர்ந்து கள் அருந்தும் நாள்தான் வாழ்வின்
திருநாள்.”
கபிலர், வாஞ்சையோடு அவனைப் பார்த்தார். `கள்ளையும் மிஞ்சிய இடத்தில்
பாரியை வைத்திருக்கிறானே!’ என யோசிக்கையில், நீலன் தொடர்ந்தான்...
“பெருங்குடி பாணன் ஒருவன், பாரியை `பனையன் மகனே..!’ என வர்ணித்துப்
பாடியுள்ள பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?”
“இல்லை.”
“முழுநிலா நாளில் அந்த அரிய காட்சியைக் காணவேண்டுமே! ஆதிமலை அடிவாரம்,
ஊர் மன்றலில் எல்லோரும் திரண்டிருக்க, பேரியாழ் மீட்டி, பறை முழங்கி,
`பனையன் மகனே...பனையன் மகனே!’ எனப் பாடலைப் பாடத் தொடங்கினால், பறம்பு
நாடே எழுந்து ஆடும்” - சொல்லும்போதே துள்ளிக் குதித்தான் நீலன்.
`தனி ஒரு வீரன், நாட்டை ஆளும் தலைவனை இவ்வளவு நேசிப்பதா!' - பிற
நாட்டில், அரசனுக்கும் அரசத் தொழில் செய்யும் வீரர்களுக்கும்
குடிமக்களுக்கும் இடையே இல்லாமல்போன அன்புமயமான ஓர் அடிச்சரடு பறம்பு
நாட்டில் இருப்பதைப் பார்த்தார் கபிலர். `இதுதான் குலவழியில் நடக்கும்
ஆட்சிக்கும், பிற அரசாட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு' என நினைத்தபடி கபிலர்
கேட்டார்.
“உனக்குப் பாடத் தெரியுமா?”
“பறம்பைப் பற்றியும் பாரியைப் பற்றியும் இன்று முழுவதும் பாடிக்கொண்டே
இருப்பேன். அது மட்டும் அல்ல... எங்கள் குலப்பாடலும் எனக்குத் தெரியும்.”
“உனது குலப்பாடல் இருக்கட்டும். பாரியின் குலப்பாடல் உனக்குத் தெரியுமா?”
“தெரியும். மாவீரன் `எவ்வி’யிடம் இருந்து அது ஆரம்பிக்கிறது.”
“அதைப் பாடுவாயா?”
“நான், பாணனும் அல்ல; பாரியின் குலத்தவனும் அல்ல. எனவே, நான் அதைப்
பாடுவது முறையும் அல்ல.”
இவ்வளவு நேரம் பேசிவந்த நீலனிடம் இருந்து முதன்முறையாக ஒரு தகவல்
கபிலருக்குக் கிடைத்தது. பறம்பு மலையில் பாரியின் குலமக்கள் மட்டும்
அல்ல, வேறு குலத்தவரும் இருக்கிறார்கள் என்று. குலத் தலைவன் ஆளும்
நாட்டில் வேறு குலத்தவர்கள் இருப்பது இல்லை. அப்படியே இருந்தாலும்,
மரத்துக்குள் நெருப்பு மறைந்து இருப்பதைப் போல, ஆள்வோருக்கான ஆபத்து
அதற்குள் மறைந்திருக்கும். யோசித்தபடி வந்து கொண்டிருந்த கபிலரின் நடை,
சற்றே பின்தங்கியது.
“விரைந்து வாருங்கள்” என்றான் நீலன்.
“இந்தத் தர்ப்பைப் புற்களின் சுனை மேலெல்லாம் அறுக்கிறது. அதுதான்...”
என்று சமாளிக்க ஒரு காரணத்தைச் சொன்னார்.
“இந்தப் புற்களுக்கு என்ன பெயர் சொன்னீர்கள்?”
“தர்ப்பைப் புற்கள். சேரன் வேள்வி நடத்தியபோது, அந்தணர்கள் இதுபோன்ற
தர்ப்பைப் புல்கொண்டுதான் சடங்குகளைச் செய்தார்கள்.”
“நாங்கள் இதை `நாக்கறுத் தான் புல்' எனச் சொல்வோம்.”
“அப்படியா? இது யாருடைய நாக்கை அறுத்தது... ஏன் இந்தப் பெயர்?”
“அது முருகன் காதலித்த போது நடந்த நிகழ்வு.”
“கள்ளின் சுவையைவிடக் களிப்பூட்டக்கூடியது அல்லவா காதலின் சுவை! அதுவும்
முருகனின் காதல் கதையை காலம் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாமே...
சொல்” என்றார் ஆர்வத்துடன்.
“எனது காதலியைப் பார்க்க, ஒரு குன்று தாண்டிப் போவதையே, `இவ்வளவு
தொலைவா?’ எனக் கேட்டவர் ஆயிற்றே. முருகனின் கதையைக் கேட்டால், இங்கேயே
மயக்கம் அடைந்துவிடுவீர்கள்.”
“ஏற்கெனவே எனக்கு சற்று மயக்கமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் காதலின்
ஆற்றலே, மயக்கம் நீங்காமல் வைத்திருப்பதுதானே!”
“முருகனாவது பரவாயில்லை. ஆறு குன்றுகள் தாண்டிப் போனான். ஆனால் வள்ளியோ,
அவனைப் பார்க்க பதினொரு குன்றுகள் தாண்டி வந்தாள். என்ன இருந்தாலும்
வள்ளி நிலமகள் அல்லவா? அவளின் ஆற்றல் சற்றே அதிகம்.”
`குறிஞ்சி நிலத் தலைவன் முருகனைப் பற்றி எவ்வளவோ
கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இவன் முற்றிலும் புதியதோர் இடத்தில்
இருந்து கதையைத் தொடங்குகிறானே!’ என்று கபிலர் ஆச்சர்யப்பட்ட கணத்தில்
இருந்து அவன் கதையைத் தொடங்கினான்.
“இந்தக் காரமலையின் அடிவாரத்தில் குடில் அமைத்து, குலம் தொடங்கியதொரு
காலம். இந்தக் காலத்தில் பயிர்கள் விளையவைத்து தினையை அறுத்தும்,
கிழங்குகளைப் பிடுங்கியும், கொண்டுவந்து சேர்ப்பதும் இவ்வளவு கடினமாக
இருக்கின்றன. அப்போது எப்படி இருந்திருக்கும்? காவலுக்குப் போய்
பறவைகளிடம் இருந்தும், விலங்குகளிடம் இருந்தும் காப்பாற்றிக்
கொண்டுவருவது பெரும்பாடு.
விளைச்சல் காலம் தொடங்கி விட்டால், முருகனும் எவ்வியும் தினைப்புலம்
காக்கப் போவார்கள். வயதிலே இளையவனான `எவ்வி’தான், முருகனுடன் எந்நேரமும்
இருக்கும் தோழன். கீழ்மலையின் விளைச்சலைப் பாதுகாத்துக் கொண்டுவந்து
சேர்ப்பது அவர்களின் வேலை. அந்த ஆண்டு பயிர்கள் மிகவும் செழித்து
வளர்ந்திருக்கின்றன. பயிர்கள் முற்றத் தொடங்கும் போதுதான் வேலையின்
கடினம் தெரிய ஆரம்பிக்கும். மானும் மிளாவும் கிளியும் குருவிகளும்
இன்னும் பிற உயிரினங்கள் எல்லாம் பயிர்களை மேய, பகலிலே வரும்; யானைகளும்
பன்றிகளும் இரவு வரும். இவற்றிடம் இருந்து விளைச்சலைக் காக்க வேண்டும்.
வயலுக்கு நடுவே புன்னைமரத்தில் பரண் அமைத்து தட்டை, தழல், கவண் எனப் பல
கருவிகளை வைத்து விதவிதமாக ஓசை எழுப்பி, விளைச்சலைப் பாதுகாத்தனர்.
இரவு-பகலாகக் கண்விழிப்போடு இருக்க வேண்டும். காட்டிலே கிடைக்கும்
தேனையும் கிழங்கையும் தின்றுகொண்டு, பல நாட்கள் இருவரும் பரணிலே
தங்கியிருந்தனர்.
ஒருநாள் காலை, காட்டுப்பன்றிக் கூட்டம் ஒன்று உள்நுழைந்துவிட்டது.
காட்டுப்பன்றி, பயிர்களை அழிப்பதில் மிக வேகமாகச் செயல்படக்கூடியது. மிக
வலுவான பற்களை உடைய அது, புலியுடனும் போர் புரியும் வல்லமை உடையது.
பரணில் இருந்து இறங்கி வந்து இருவரும் விரட்டியிருக்கின்றனர். அது
ஓடுவதுபோல் சிறிது தூரம் ஓடி புதரில் மறைந்துகொண்டு, இவர்கள் மீண்டும்
பரண் ஏறியதும் விளைச்சலைத் தின்ன உள்ளே நுழைந்துவிடும். மறுபடியும்
விரட்டி இருக்கின்றனர். இப்படியே பலமுறை நடந்திருக்கிறது. அந்தப்
பன்றிக்கூட்டம் போவதாக இல்லை.
``எவ்வி... நீ பரணிலேயே காவலுக்கு நின்றுகொள். நான் இந்தப் பன்றிக்
கூட்டத்தை காரமலைக்கு அப்பால் விரட்டிவிட்டு வருகிறேன்” என, வில்லோடு
புறப்பட்டுப் போனான் முருகன்.
யானைக் கூட்டத்தைக்கூட எளிதில் விரட்டிவிடலாம். ஆனால், பன்றிக்கூட்டத்தை
விரட்டிச் செல்வது எளிது அல்ல. புதருக்குள் ஒளிந்துகொள்ளும்; திசை மாற்றி
நம்மை ஏமாற்றும்; எளிதில் ஓடாது. தனது உயிருக்கு ஆபத்து என அது
உணர்ந்தால் மட்டுமே தப்பி ஓட ஆரம்பிக்கும். இல்லை என்றால், அதை நகர்த்த
முடியாது. முருகன் அதை நகர்த்தப் பெரும்பாடுபட்டான். அவனுடைய தோல்
உறையில் இருந்த அம்புகள் ஒவ்வொன்றாகத் தீர்ந்தன. முருகன்,
வேட்டையாடுவதில் மிக வல்லவன். அவன் அம்பு எறியும் எந்த இலக்கும் தப்பாது.
ஆனால், அன்று அவனுடைய எந்த வித்தையும் பலன் அளிக்கவில்லை. பன்றிக்
கூட்டத்தைக் கண்டால், புலியே பின்வாங்கும். ஒற்றை வீரனால் என்ன செய்ய
முடியும்? எல்லா அம்புகளும் தீர, கடைசியில் ஓர் அம்பு மட்டுமே மிஞ்சியது.
அதைக் குறிபார்த்து எறிய நீண்ட நேரம் எடுத்தான். அந்தப்
பன்றிக்கூட்டத்தின் தலைவன் யார் என்பதை அவன் கண்டறிந்து, அதற்குக்
குறிவைத்து அடித்தான். அவை புதருக்குள் ஓடிய வேகத்தில் அம்பு தைத்ததா...
இல்லையா எனத் தெரியாத நிலையில், உள்ளே இருந்து காதைக் கிழிப்பதுபோல ஒரு
சத்தம் வந்தது. பன்றிகளின் ஓட்டம் என்ன என்பது அதன் பிறகுதான் தெரிந்தது.
மலையைக் கடக்கும் வரை அவை நிற்கவில்லை.
அவற்றை விரட்டிவிட்டு தனது பரண் நோக்கி நடக்கத் தொடங்கினான் முருகன். கை,
கால்கள் எல்லாம் குச்சிகளால் கீறி, ரத்தம் வழிந்தது. உச்சிப்பொழுது
ஆகிவிட்டது. முருகனுக்கு நா வறண்டு உள்ளிழுத்தது. அந்தத் திசையில் வேங்கை
முடுக்குக்கு அருகில் ஓர் அருவி இருப்பது தெரியும். நீர் அருந்த அந்த
இடத்துக்குப் போனான். பெரும் ஓசையுடன் அருவி கொட்டிக்கொண்டிருந்தது.
கையில் இருந்த வில்லையும் தோல் பையையும் சிறு பாறையில் வைத்துவிட்டு,
நீரை நோக்கி நடந்தான். நீர்த்துளிகள் காற்றில் மிதந்துவந்து அவன் மீது
படிந்தன. குளிர்ச்சியை உணர்ந்தபடி நீர் பருகக் குனிந்தான். பாறையின்
பின்புறம் இருந்து சிரிப்பொலி கேட்டது. அருவியில் யாரோ
குளித்துக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. யார் என உற்றுப்பார்த்தான்
தெரியவில்லை. `சற்று அருகில் போய்ப் பார்ப்போம்' என நகர்ந்து முன்னே
சென்றான். அவனது கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. கொட்டும் அருவிக்குள்
இருந்து சற்றே விலகி அவள் வெளியே வந்தாள். தான் வாழ்வில் இதுவரை
பார்த்திராத பேரழகு. முருகன் இமை மூடாமல் பார்த்தான். நீர் வடியும்
கூந்தலைச் சிலுப்பியபடி இந்தப் பக்கம் திரும்பினாள். இவ்வளவு நேரம் அவன்
எறிந்த மொத்த அம்புகளும் கூந்தலுக்குள் இருந்து பாய்ந்து வந்து அவன் மீது
எகிறின.
எவ்வி, எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தான், ``தினைக்கதிர் பரிந்து
நிற்கிறது. அறுப்பு முடிந்ததும் அவளைத் தேடிப் போவோம்’' என்று. ஆனால்
முருகனோ, ஒருநாள்கூடத் தாமதிக்கத் தயாராக இல்லை. அப்புறம் கதிரை எங்கே
காப்பாற்றுவது? எல்லா பறவைகளும் விலங்குகளும் அவர்கள் காவல்காத்த
நிலத்துக்கு வந்து சேர்ந்தன. பறவைகள் எல்லாம் தினைக்கதிரைத் தின்றுவிட்டு
பரண் மேல் உட்கார்ந்து ஓய்வெடுத்தன. விலங்குகள் பரணின் அடிவார நிழலில்
இளைப்பாறின.
பல நாட்கள் அலைந்து, பச்சைமலைத்தொடரின் இரண்டாவது அடுக்கில் இருக்கும்
வள்ளியின் இருப்பிடத்தைக் கண்டறிந்தனர். அந்த இடத்தைப் பார்த்ததும் எவ்வி
சொன்னான், “இவர்கள் நம்மை ஏற்க மாட்டார்கள்.”
“ஏன்?”
“இவர்கள் கொடிக் குலம். நாமோ வேடர் குலம். எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?”
“ஏற்றுக்கொள்ளவேண்டியது வள்ளி மட்டும்தான். மற்றவர்களைப் பற்றி ஏன்
யோசிக்கிறாய்? அவளது சம்மதம் பெற வழி சொல்.”
பேசிக்கொண்டிருந்தபோது, வள்ளி தன் தோழிகளோடு போவதைப் பார்த்ததும் எவ்வி
சொன்னான், “இந்த மலைத் தொடரிலேயே அழகான மனிதன் நீதான் என்று
நினைத்திருந்தேன். ஆனால் இப்போதுதான் தெரிந்தது.”
“என்ன?”
“அழகு என்றால் என்னவென்று?”
எவ்வி சொன்னபோது முருகன் மகிழ்ந்து சிரித்தான். இதுவரை இல்லாத ஒரு
பேரழகாக அந்தச் சிரிப்பு இருந்தது. அதன் பிறகு அவளைச் சந்தித்துப் பேசி,
அவளின் சம்மதம் பெற நடந்த முயற்சிகள் எத்தனையோ. ஆனால், ஒன்றும்
கைகூடவில்லை. இந்தக் காட்டில் அவள் அறியாதது எதுவும் இல்லை. எனவே,
எதைக்கொண்டும் அவளின் மனதில் தனித்த இடத்தைப் பெற முடியவில்லை. முருகன்
என்ன முயற்சி செய்தாலும், வள்ளி ஏறெடுத்துக்கூடப் பார்ப்பதாக இல்லை.
தினைப்புலம் காப்பதும் பறவைகளைக் கவன்கல் கொண்டு விரட்டுவதும், மான்கள்
வந்தால் தப்பையால் ஒலி எழுப்பித் துரத்துவதுமாக வள்ளி வழக்கம்போல தனது
வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
முருகனுக்குத்தான் வழியே பிறக்கவில்லை. ஒருநாள் எவ்வி ஓர் ஆலோசனை
சொன்னான். “அவள் தினைப்புலம் காத்து வீடு திரும்பும் வழியில், அருவி
கடந்து சிறிது தூரத்தில் சரக்கொன்றை மரம் ஒன்று இருக்கிறது. அந்த இடம்
அவள் போகும்போது, நீ அவளின் எதிர்ப்பட்டு நின்று பேசு. உன் காதலைச்
சொல்.அவள் ஏற்றுக்கொள்வாள்.”
“அந்த இடத்தில் அப்படி என்ன இருக்கிறது?” என்று முருகன் கேட்டான்.
“அந்த இடம் முழுக்க முல்லைக்கொடி படர்ந்துகிடக்கிறது. அவள் மாலை
நேரம்தான் வருவாள். அப்போதுதான் முல்லை மலரத் தொடங்கும். அந்த மனம்
யாவரையும் மயக்கும். காற்று எங்கும் சுகந்தம் வீசும். உன் காதல் அங்கே
கைகூடும்” என்று சொல்லி அனுப்பினான்.
முருகனும் அவன் சொன்ன இடத்தில் அவளை எதிர்கொண்டு பேசினான். முதல் முறையாக
அவள் அவனிடம் பேசத் தொடங்கினாள். ஆனால், அந்தப் பேச்சில் காதல்
இருப்பதுபோல தெரியவில்லை. காட்டுக்குள் தப்பிப்போன ஆட்டுக்குட்டியை
விசாரிப்பதைப் போலத்தான் அந்த விசாரிப்பு இருந்தது.
எவ்வி, இன்னொரு யோசனை சொல்ல முன்வந்தபோது, முருகன் தடுத்துவிட்டான்.
“காதல், சம்பந்தப்பட்டவர்களின் சாமர்த்தியத்தால்தான் கைகூடும்” என்று
சொல்லிவிட்டுப் புறப்பட்டான். வழக்கம்போல வள்ளி செல்லும் வழியில்
எதிர்ப்பட்டான்.
“உன்னை ஓர் இடத்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். நீ என்னோடு வா”
என்று அழைத்தான்.
அவளோ, ``தினைப்புலத்துக்குப் போக வேண்டும். தோழிகள் காத்திருப்பார்கள்'’
என்று காரணம் சொல்லி மறுத்தாள்.
“அதிக நேரம் இல்லை. சிறிது நாழிகை வந்தால் போதும்” என வலியுறுத்தினான்.
வள்ளியும் வேறு வழியின்றி, “சரி” எனத் தலையாட்டினாள்.
முருகன், அவளை அழைத்துக்கொண்டு சென்றான். இருவரும் எதையும் பேசிக்
கொள்ளவில்லை. கூச்சம் தவிர்த்து முருகன் பேச்சைத் தொடங்கினான்...
“உன் தாய் வள்ளிக்கிழங்கு எடுக்கப் போன இடத்தில் இடுப்பு வலி கண்டு உன்னை
ஈன்றெடுத்ததால், `வள்ளி' எனப் பெயர் வைத்தார்களாமே?”
“அது ஊரார் சொல்லும் காரணம். உண்மைக் காரணம் வேறு” என்று மட்டும் சொல்லி
நிறுத்திக் கொண்டாள், என்னவென்று சொல்லவில்லை.
சிற்றோடையில் நீர் ஓடிக்கொண்டிருந்தது. கல் மேல் கால் பதித்து அதைத்
தாவிக் கடந்தனர். அந்த இடத்தில் தனியாக ஒற்றை மரம் இருந்தது. முருகன்,
வள்ளியை அந்த மர அடிவாரத்தில் போய் சிறிது நேரம் நிற்கச் சொன்னான்.
அவளும் மரத்தின் அருகே போனாள். முருகனோ, நீரோடையின் அருகில் இருக்கும்
சிறு பாறையில் அமர்ந்துகொண்டு அவளைப் பார்த்தபடி இருந்தான்.
`எதற்கு இங்கே நிற்கச் சொல்கிறான்?' என்ற யோசனையிலேயே அவள்
நின்றுகொண்டிருந்தாள். மேலே பார்த்தாள். மரம் முழுக்கக் காயும் மொட்டுமாக
இருந்தன. ஒரு பூகூட இல்லை. `இது என்ன மரம்? இதுவரை பார்த்ததில்லையே...’
என யோசித்தாள். மரத்தின் மீது கை வைத்து, பட்டையைச் சிறிது உரித்து
நுகர்ந்துபார்த்தாள். என்ன மணம் என்பதை அவளால் அனுமானிக்க முடியவில்லை.
“நின்றது போதுமா?” என்று கேட்டாள்.
முருகனோ, “இன்னும் சிறிது நேரம்” என்றான்.
மரப்பட்டைகளுனூடே எறும்பின் வரிசை ஒன்று போய்க்கொண்டிருந்தது. அதை
உற்றுப்பார்த்தபடி விரல்களால் பட்டைகளை மெள்ள வருடினாள். அவளுக்கு, ஏதோ
ஓர் உள்ளுணர்வு தோன்றியது. என்னவென்று தெரியவில்லை.
“புறப்படலாம்” என்றான் முருகன்.
அவளும் புறப்பட்டாள். நடந்துவரும்போது அந்த மரத்தை மீண்டும் மீண்டும்
திரும்பிப் பார்த்தாள். ஆனால், முருகனிடம் எதுவும் கேட்கவில்லை. இவளை
எதிர்பார்த்து தோழிகள் காத்திருந்தனர். வந்ததும், சற்றே
கோபித்துக்கொண்டனர்.
மறுநாள் பொழுது விடியவும் முருகன் புறப்பட்டான். “எங்கே?” என்று எவ்வி கேட்டான்.
“நேற்று வள்ளியை அழைத்துச் சென்ற இடத்துக்கு” என்றான்.
“மீண்டும் அதே இடத்துக்கா?”
“ஆம்... காரணத்தை வந்து சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டவன்,
“புதிய பரண் ஒன்று அமைத்துவை. நான் திரும்பி வரும்போது வள்ளியும் உடன்
வருவாள்” என்று சொல்லிச் சென்றான்.
எவ்வி ஆச்சர்யத்தோடு பார்த்தான். முருகன் வழக்கத்தைவிட உற்சாகத்தோடு சென்றான்.
நேற்று சந்தித்த இடத்திலேயே வள்ளியைச் சந்தித்தான். ``சிறிது நேரம்
என்னுடன் வா'’ என்று அழைத்தான். அவள் தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி
மறுத்தாள். முருகன் மீண்டும் அழைத்தான். வள்ளியோ, “மரங்களில்
எறும்பூறுவது ஒன்றும் அதிசயம் அல்ல” என்று சொல்லிவிட்டு நடக்கத்
தொடங்கினாள்.
“இந்த ஒருமுறை மட்டும் வா. இனி நான் உன்னை அழைக்க மாட்டேன்” என்றான் முருகன்.
அந்தக் குரலை மறுக்க முடியவில்லை.
“சரி... இந்த முறை மட்டும் வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டாள்.
இருவரும் நேற்று சென்ற வழியில் நடந்தனர்.
வள்ளி கேட்டாள்... “முருகு என்று ஏன் உனக்குப் பெயர் வைத்தார்கள்?”
“நான் மிக அழகாக இருந்ததால், இந்தப் பெயர் வைத்ததாக எனது தாய் சொன்னாள்”
- பதிலைச் சொல்கையில் முருகனின் முகம் எல்லாம் வெட்கம் பூரித்தது.
“எங்கள் ஊரில் எட்டு வகை கள் உண்டு. அதில் ஒரு வகை கள்ளுக்கு `முருகு'
எனப் பெயர்” என்றாள் வள்ளி.
“கள்ளுக்கு எதற்கு இந்தப் பெயர் வைத்தார்கள்?” என்று கேட்டான் முருகன்.
“தெரியவில்லை. மயக்கும் தன்மை இருப்பதால் இந்தப் பெயர் வைத்திருப்பார்கள்
என நினைக்கிறேன்” என்றாள் வள்ளி.
முருகன் திரும்பி அவளைப் பார்த்தான். அவள் தலை குனிந்திருந்தாள். ஆனாலும்
அவளது முகத்தில் படர்ந்த வெட்கத்தை மறைக்க முடியவில்லை.
பேசியபடியே அந்த நீரோடை அருகில் வந்தார்கள். முருகன் வழக்கம்போல் அந்த
இடத்தில் இருந்த சிறு பாறையின் மீது ஏறி அமர்ந்தான். வள்ளி, மரத்துக்கு
அருகே போக ஓடையைத் தாண்டிக் குதித்து, தலைதூக்கிப் பார்த்ததும் அப்படியே
அதிர்ந்து நின்றாள். அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை.
உறைந்துபோனவளாக, கண்ணிமை கொட்டாமல் பார்த்தாள். எதிரில் இருந்த அந்த மரம்
முழுவதும் பூக்கள் பூத்துக் குலுங்கின. மஞ்சளும் நீலமும் ஒன்றுகலந்த
வண்ணத்தில் முயல் காதைப்போல நீண்டு விரிந்த மலர்கள். மரமே நிரம்பி
வழியும் பூக்கூடையாக நின்று ஆடியது. ஒரு சிற்றிலைகூட தெரியவில்லை. மலரின்
மனம் காற்று எங்கும் பரவ, அந்த வெளியே மணத்துக்கிடந்தது. நம்பவே முடியாத
அதிசயத்தைப் பார்த்தபடி இருந்த வள்ளி, திரும்பி முருகனைப் பார்த்தாள்.
“நேற்று ஒரு பூ கூட இல்லாத மரத்தில், இன்று மரம் எங்கும் பூக்கள்
பூத்துக் குலுங்குகின்றனவே எப்படி?”
முருகன் சொன்னான், “பெண்ணுடைய அணுக்கத்தால் மலரும் மரம் இது. நேற்று நீ
இதைத் தொட்டுத் தழுவினாய். உன் மூச்சுக்காற்றை அதன் பட்டைகளும்
கணுக்களும் நுகர்ந்தன. இதன் அத்தனை மொட்டுக்களுக்குள்ளும் உன் பெண்மை
பாய்ந்தோடியது. பல ஆண்டுக் காத்திருப்புக்குப் பிறகு அது
பூப்பெய்தியுள்ளது. இதன் பெயர் ஏழிலைப் பாலை. இந்த வனத்தில் இருக்கும்
பத்து பேரதிசயங்களில் இதுவும் ஒன்று.”
அந்த மொத்தப் பூக்களும் தனக்குள் இருந்து மலர்ந்தனவா? வள்ளிக்கு உடல்
சிலிர்த்தது. ஓடிச்சென்று அந்த மரத்தைக் கட்டித் தழுவினாள். பட்டைகளின்
மீது இதழ் குவித்து முத்தமிட்டு, இறுகத் தழுவினாள். கண்களில் நீர்
வழிந்தது. அவளது மார்பகங்களை கணுக்கள் குத்தி அழுத்தின. மெய்மறந்து
கண்கள் செருகினாள். மரம் குலுங்கி பூக்களை உதிர்த்தது.
அவளது அணைப்புக்குள் இப்போது முருகன் இருந்தான். அவளது கரங்கள் இணைந்து
முருகன் கழுத்தை இறுக்கின. அவளது கீழ் உதடு நடுங்கியது. அதன் விளிம்பில்
இருந்த சிறு மச்சத்தில் இருந்து முருகனின் பார்வை நகரவே இல்லை. இருவரது
மூச்சுக்காற்றும் மோதித் திரும்பின. காதல் அனல் அடிக்க, ஏழிலைப் பாலையும்
சூடேறியது. பூக்கள் சொரிந்து அவர்களது உடல்களை மூடின. ஆனாலும்
உள்ளுக்குள் மலர்ந்துகொண்டே இருந்தன.
- பாரி வருவான்...
http://www.vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக