திங்கள், 19 பிப்ரவரி, 2018

வேள்பாரி 16 சோழர் ஆயர் போர் ஹனிபல் பாணி விலங்கு ஏவி போர் இடையர் நவரத்தினம்

aathi tamil aathi1956@gmail.com

1/11/17
பெறுநர்: எனக்கு
நவீனன்  7,710
  Posted February 2
வீரயுக நாயகன் வேள்பாரி - 16
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,
து டிப்பறை அடிக்கும் பெண், மரம் நோக்கி உட்கார்ந்திருந்தாள். அவளது
விரல்கள், துடியின் வலதுபுறத்தை இழுத்து இழுத்து அடித்து ஓசையை
எழுப்பிக்கொண்டிருந்தன. நான்கு பின்னல் சடையைப் பின்னிய பெண்கள்
உள்ளிறங்கினர். உச்சி எடுத்து இருபக்கச் சடைப்பின்னல் மட்டும் யாரும்
போடவில்லை. எனவே, அது துடி வாசிக்கும் பெண்ணுக்கு உரியது என்பது
கபிலருக்குப் புரிந்தது. அந்தப் பெண்ணை இதற்கு முன்னால் பார்த்ததுபோல்
இருக்கிறது. ஆனால், எங்கு என்று நினைவில்லை.
உள்ளிறங்கிய பெண்கள், தாங்கள் பின்னியிருந்த சடைமுடியை அவிழ்த்தனர்.
கூந்தல் பரவி தோள் முழுக்கச் சரிந்தது. மெள்ள தலையை ஆட்டியபடி இருந்தனர்.
“அணங்குகள் இறங்குகின்றன’’ என்றான் பாரி.
`மோகினி’ என அஞ்சப்படும் வனதேவதைகளே அணங்குகள் ஆவர். அணங்குகள் முனங்கும்
ஓசை விரிந்த கூந்தலின் வழியே வெளிவரத் தொடங்கியது. கபிலர்
உற்றுப்பார்த்தபடி இருந்தார். அவரது கவனம் பாடுபவள் சொல்லிச் செல்லும்
கதையின் மீதே இருந்தது.
உறையூரைவிட்டு கிடை புறப்பட்டது. கோடைவெயில் தகித்துக்கொண்டிருந்தது.
அவர்கள் அதற்கு ஏற்ற நிலப்பகுதியைப் பார்த்து கிடையைச்
செலுத்திக்கொண்டிருந்தனர். தோழியைக் கண்டு பம்மியபடி நகர்ந்து
கொண்டிருந்தான் கோவன். அவனது பம்மலுக்கான காரணம் செம்பாவுக்கு முதலில்
புரியவில்லை. நிலைகொண்டு தங்காமல் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது கிடை.
கோவன் மறைந்து மறைந்து சிரித்துக்கொண்டு இருந்தான். ஒரு பிற்பகல்
நேரத்தில் தோழி நாணல்கூடையில் வெண்சாந்து உருண்டையைத் தூக்கியபடி
கிடையின் பின்புற ஓரத்தில் வந்துகொண்டிருந்தாள். முன்புறத்தின் இடது
ஓரத்தில் நடந்துகொண்டிருந்தான் கோவன். அவனது தோளில், ஈன்றகுட்டி ஒன்று
கிடந்தது. பின்னால் வரும் தாய்ப்பசு நாவால் நக்க, அது துள்ளியபடி
இருந்தது. அந்தக் கன்று துள்ளிவிடாதபடி அதன் கால்களை தனது இரு கைகளாலும்
இறுகப்பிடித்து நடந்துகொண்டிருந்தான். அவனைக் கடந்துபோன செம்பா,
தாய்ப்பசு கத்தும் ஓசையோடு சேர்த்து வலதுபுற இடுப்பில் இரு விரல்கொண்டு
ஒரு நிமிண்டு நிமிண்டினாள்.
பால் பீச்சும் விரல்கள் மூங்கில் நாரைவிட வலுமிக்கவை. நிமிண்டிய விரல்களை
எடுக்கும் முன்னர் துள்ளி வில்லைப்போல் வளைந்தான் கோவன். அவனைத் தாண்டி
குதித்தோடியது தோளில் கிடந்த குட்டி. அது வேறு திசையில் ஓடிவிடக் கூடாது
என்பதற்காகப் பாய்ந்து விழுந்து பிடித்தான். விழுந்தவனின் அருகில்
புன்முறுவலோடு மண்டியிட்டு உட்கார்ந்தாள் செம்பா. அவன் பிடியில் இருந்து
குட்டியை விடுவித்தாள். அவளது பிடியில் இருந்து, தன்னை விடுவித்துக்கொள்ள
அவன் முயற்சி செய்யவில்லை. முயன்றாலும் அது நடக்காது எனத் தெரியும்.
கிடைமாடுகள் அவர்களைச் சுற்றி விலகி நடந்தன. அவளின் கன்னத்தை வாலால்
தட்டிவிட்டுப்போனது கிடாரி ஒன்று.
பறவைகள் மொய்த்துக்கிடக்கும் நாணல் கூடையைத் தூக்கிவந்த தோழியின் கண்கள்
கிடையை மேய்ந்தன. இருவரையும் காணவில்லை. குறுக்கும் நெடுக்குமாக பறவைகள்
பறந்தபடியிருக்க, அவளால் எந்தப் பகுதியையும் உற்றுப்பார்க்க முடியவில்லை.
இளங்கன்று, வயிறு நிறைய பால் குடித்து முடித்தது. கோவன் மீண்டும் கன்றைத்
தோளில் தூக்கியபடி எழுந்தான். உடன் எழுந்தபடி செம்பா சொன்னாள், “அவள்
இன்னொரு முறை வந்து கேட்டாள் சொல்... நீ இடைக்காவல்தான் இருக்க முடியும்.
இதழுக்குக் காவல் இருக்க முடியாது என்று.''
உரசி நகரும் கிடை வாழ்க்கை எந்நேரமும் காதலைப் பற்றவைத்தபடியே இருந்தது.
கடையப்பட்ட தயிர் மத்தின் விளிம்புகளுக்கு இடையில் விரல் தேய்த்து
வெண்ணெயை எடுப்பதைப்போல, திரளத்திரளக் காதலை எடுத்துக்கொண்டே நடந்தனர்
செம்பாவும் கோவனும். அவர்கள் சற்றே கவனக்குறைவாக இருந்தாலும், தோழி
அடிக்க வருவதாக நினைத்து புது மத்தைக் கையில் கொடுத்துவிட்டுப்
போய்விடுவாள். அதற்குள் இன்னொரு பசு கன்றை ஈனும். துள்ள முடியாதபடி கோவன்
கன்றையும், செம்பா அவனையும் பிடித்தபடி இருப்பார்கள். அவ்வப்போது
விரல்கள் நிமிண்டித் திருகின. விலகும் கிடைக்கு இடையில் நிலம்தொட்டு
காதல் துள்ளி எழுந்தது.
அ ந்தக் கிடைக்குப் பின்னால், வெகுதொலைவில் குதிரை வீரர்கள் சிலர் பல
நாட்களாக வந்துகொண்டிருந்தனர். குலத்தலைவனின் உத்தரவு அது. செம்பாவை வாய்
பிளந்து பார்த்தபடி கிள்ளி நின்றுகொண்டிருந்த போது, அவனது தந்தை
இருட்டுக்குள் இருந்த கிடை மாடுகளைத்தான் வாய்பிளந்து பார்த்துக்
கொண்டிருந்தான். மாடுகளின் கொம்புகளுக்கு இடையில் கயிறு முறுக்கிக்
கட்டப்பட்டிருந்த நெற்றிப்பட்டத்தில் இளஞ்சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை,
கருஞ்சிவப்பு என ஐந்து வண்ணங்களில் கற்கள் ஒளிவிட்டுக்கொண்டிருந்தன.
அவனது கண்களையே அவனால் நம்ப முடியவில்லை.
மாளிகைக்கு அழைத்துப்போய் மகனைக் கட்டித்தழுவி முத்தமிட்டான் தந்தை.
“ `இருளிலும் சுடர்போல் ஒளிரும்’ என்று நீ சொன்னபோது பெண்ணைச் சொல்கிறாயோ
எனத் தவறாக நினைத்துவிட்டேன். எல்லாம் மணிக்கற்கள். யாருக்கும் கிடைக்காத
மணிக்கற்கள். அவற்றை நாம் அடையவேண்டும்” எனச் சொல்லி கிடையை அறிந்து வர
ஆள் அனுப்பினான்.
போய்வந்தவர்கள் சொன்னார்கள்... “அவர்களின் ஊர் இருக்கும் மலை முழுவதும்
இந்தக் கல் கிடக்கிறதாம். அதைவைத்துதான் மாட்டுக்குப் பட்டம்
கட்டியுள்ளனர்.”
“அவர்களின் மலை எங்கும் கிடப்பது மணிக்கற்கள் என அந்த மூடர்களுக்குத்
தெரியவில்லை. நாம் இந்த இருநூறு கற்களோடு ஏமாந்துவிடக் கூடாது. இந்தக்
கிடையைப் பின்தொடர்ந்தே போங்கள். அந்த ஊரை அடைந்ததும் தகவல் சொல்லுங்கள்”
எனச் சொல்லி அனுப்பினான். வீரர்கள் அவர்களின் பின்னால் வந்துகொண்டே
இருந்தனர்.
ஒரு முன்மாலைப்பொழுதில் கிடை நகர்ந்துகொண்டிருந்தபோது, தோழி ஓசை எழுப்பி
செம்பாவை அழைத்தாள்.
“அருகில் இருக்கும் ஓடையில் நீர் அருந்தி வருகிறேன். அதுவரை நீ தூக்கி
வா” எனச் சொல்லி வெண்சாந்து உருண்டை இருந்த நாணல்கூடையை செம்பாவின்
தலைக்கு மாற்றினாள்.
கூடை மாற்றுவதை மிகக் கவனமாகச் செய்ய வேண்டும். வெண்சாந்து உருண்டைகள்
தோளில் சிந்திவிட்டால், அவற்றைக் கையால் தட்டும் முன் பறவையின் அலகு
கொத்தி எடுத்துவிடும். காக்கை கொத்தினால் தோளில் சிறு கீறல் ஏற்படும்.
மைனாவின் அலகோ சிறு துளையிட்டு எடுக்கும். அதுவே மரங்கொத்தியாக
இருந்தால், காயம் ஆற ஒரு வாரம் ஆகும்.
பறவைக் கூட்டம் இப்போது செம்பாவின் தலையைச் சுற்றி இடம் மாறியது.
பறவைகளின் இடைவிடாத கீச்சொலிக்கு இடையில் செம்பா கூப்பிட்டது கோவனுக்குக்
கேட்கவில்லை. முதுகிலே சுள்ளென கல் விழுந்த பிறகுதான் திரும்பிப்
பார்த்தான்.
தோழியைச் சுற்றும்முற்றும் பார்த்தபடி செம்பாவின் அருகில் வந்தான் கோவன்.
அவள் கூடையை அவன் தலைக்கு மாற்றினாள். பறவைகள் தேனீக்கள் மொய்ப்பதைப்போல
அவர்கள் இருவரையும் சுற்றி, படபடத்து, மொய்த்துக்கொண்டிருந்தன. உடல் மேல்
சிந்திய வெண்சாந்து உருண்டையை பறவைகள் கொத்தி எடுப்பதால்தான், அவன்
இப்படி நெளிந்தும் வளைந்தும் பாடாய்ப்படுகிறான் எனப் பார்த்தவர்கள்
நினைத்தனர்.
பசுக்களுக்கு இடையில் படர்ந்ததைப்போல, பறவைகளுக்கு இடையிலும் சுழன்றது
அந்தக் காதல். பசுக்கள் விலகி நடக்கவும், பறவைகள் கூடிப்பறக்கவும்
இவர்களுக்காகவே கற்றுக்கொண்டதுபோல் இருந்தது. குருவி ஒன்று அவர்களின்
இதழைக் கொத்திய பிறகுதான், செம்பா அவனைவிட்டு விலகி, நீர் அருந்தி
வருவதாகக் கூறி, ஓடையை நோக்கிச் சென்றாள்.
தோழி போன அதே ஓடைப்பாதையில் அவள் நடந்தபோது எதிரில் வந்துகொண்டிருந்தாள் தோழி.
“பறவையின் இறகு ஒன்று கண்ணில் விழுந்துவிட்டது, ஊதிவிடு” எனச் சொல்லி
தோழியிடம் முகத்தை நீட்டினாள் செம்பா. அவள், இடது கன்னத்தைப் பிடித்து
கண்ணுக்குள் ஊதப்போகும் போதுதான் இவளுக்கு நினைவு வந்தது,
பதிந்துகிடக்கும் பல் தடத்தை அவள் பார்த்துவிடுவாளோ என்று. சட்டெனக்
கன்னத்தை அவள் கையில் இருந்து விலக்கி, “சரியாகிவிட்டது” என்றாள் செம்பா.
தோழியோ,  “இன்னும் ஊதவே இல்லையடி” எனச் சொன்னபோதும், “இல்லை…
இல்லை...சரியாகிவிட்டது” எனக் கூறி விலக முயன்ற செம்பாவின் முகத்தை, இரு
கைகளாலும் அழுத்திப் பிடித்து நிறுத்தினாள் தோழி.
செம்பா அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தாள்.
“திரும்பிப் பார்க்காதே, குதிரைகள் இன்னும் நம்மைப் பின்தொடர்ந்துதான்
வந்துகொண்டி ருக்கின்றன.”
தோழியின் சொல் செம்பாவை இடி எனத் தாக்கியது. கலங்கியிருந்த கண்களைப்
பார்த்த தோழி, “தூசி இன்னும் இருக்கிறது” எனச் சொல்லியபடி இழுத்து
மூச்சுவாங்கி ஊதிவிட்டாள். செம்பாவின் கண்ணீர்த்துளி, காற்றில் பறந்தது.
இரவு, கிடை பெரியாம்பளைகளிடம் செய்தியைச் சொன்னார்கள். கிடையின்
திசைவழியை மாற்றி ஊர் நோக்கி நடந்தார்கள். துள்ளிக்குதித்து கிடை எங்கும்
பரவியபடி இருக்கும் செம்பாவின் சிரிப்பை அதன் பிறகு கோவன் பார்க்கவே
இல்லை. இரு நாட்களுக்கு ஒருமுறை புதிதாக ஈனும் குட்டிகளை, அவன் தோளில்
சுமந்தபடி நடந்துகொண்டே இருந்தான். செம்பா அருகில் வரவே இல்லை.
பெரியாம்பளைகள் ஏன் கிடையின் போக்கை மாற்றி ஊருக்குப் போக முடிவு
எடுத்தார்கள் என்பதும் அவனுக்கு விளங்கவில்லை. சரி, ஊருக்கு வேகமாகப்
போனால், செம்பாவுடனான தனது திருமணம் வேகமாக நடக்கும். அதனால் நாமும்
வேகமாகவே நடப்போம் என முடிவு எடுத்த கோவனின் கால்கள் கிடையின்
முன்கால்களாக மண் மிதித்துச் சென்றன.
இரு மாதங்களுக்கு முன்னரே இந்தக் கிடை ஊர் திரும்பிவிட்டது. ஊரில்
இருந்தது கிழவன்களும் கிழவிகளும்தான். மற்றவர்கள் எல்லாம் கிடை போட
போயிருக்கின்றனர். வழக்கம்போல ஆவணி மாதம்தான் வருவார்கள். ஊர் முழுவதும்
இடையில் திரும்பிய கிடையைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது. கோவனுக்குச்
செய்தி இப்போதுதான் தெரியவந்தது. பெரியாம்பளைகளோடு சண்டைக்குப் போனான்.
``அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டீர்கள் அவர்கள் இப்போது செம்பாவைத்
தூக்க ஊருக்குப் படை திரட்டி வந்தால் என்ன செய்வது? நமது கூட்டம்
வந்துசேர இரண்டு மாதங்கள் ஆகும்” என்றான்.
பெரியவர் ஒருவர் சொன்னார், “ஆளுக்கு ஒரு திசையில் போய், கிடைகளை வேகமாக
வரச் சொல்வோமா?”
“ஓடித் திரும்பும் வலுவோடு இருப்பது இருபது பேர். அவர்களையும்
அனுப்பிவிட்டு என்ன செய்வது?”
எல்லோருக்குள்ளும் பதற்றம் இருந்தது. ஆனால், குதிரைக்காரர்கள் யாரும்
கண்ணில் படவில்லை. நாட்கள் கழிந்துகொண்டிருந்தன.
“வரும் நான்காம் நாள் செம்பாவுக்கும் கோவனுக்கும் மணம் முடித்துவிடுவோம்”
என யோசனை சொன்னார் ஒரு பெரியாம்பளை.
“முடிப்பது என்று முடிவான பிறகு நான்காம் நாள் வரை ஏன் காத்திருக்க
வேண்டும்? இன்று இரவே மணம் முடிப்போம்” என்றாள் கிழவி.
அச்சத்தை மகிழ்ச்சிகொண்டு கடக்க முடிவுசெய்தனர். மணவிழாவுக்கான
ஏற்பாடுகள்  தொடங்கின. சாணம் கரைத்து தெரு எங்கும் மெழுகினர். கோவன்
இளைஞர்களோடு செம்மலையின் குகைகளுக்குள் அமர்ந்து பாதுகாப்புக்கான
திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தான். இப்போது அந்த இருபது இளைஞர்களோடு
இருநூறு மாடுகளும் பதிமூன்றும் கிடை நாய்களும் மட்டுமே இருந்தன.
அவற்றைக்கொண்டு எதையும் சமாளிக்க முடியும் என அந்த இருபது பேரும்
நம்பினர்.
“நான், அந்த ஊருக்குள் போகவில்லை. ஆனால், வளமான ஊர். படைபலம் சற்றே
அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு ஏற்ப திட்டம் வேண்டும்”
என்றான் கோவன்.
செம்மலையின் மேற்கிலும் வடக்கிலும் அடர்ந்த காடு. அதற்குள் எந்தப்
படையும் ஊடுருவி வர முடியாது. படைகள் வந்தால்  கிழக்கிலும் தெற்கிலும்
இருந்துதான் வர முடியும். வருவதை அறிய பல காதத் தொலைவுக்கு முன்னரே கிடை
நாயோடு ஆட்கள் நிறுத்தப்பட்டார்கள்.
மலை எங்கும் கோவனைத் தேடி அலைந்த சிறுவன் உச்சிவெயிலில் பச்சைக்
குகைக்குள் அவனைப் பார்த்தான்.
“இன்னிக்கு இரவுல உனக்கும் செம்பாவுக்கும் திருமணமாம். பெரியாம்பளை
சொல்லிவிட்டாரு” என்றான் அவன்.
கோவனுக்கு ஆத்திரம் ஏறி வந்தது.
“எல்லாம் தப்புத்தப்பா முடிவு எடுக்கிறான் அந்தக் கிழவன்” எனக்
கொதித்தான். மற்றவர்கள் அவனைச் சமாதானப்படுத்தினர். சிறுவனிடம்,
“மாலையில் மணமேடைக்கு கோவன் வருவான்” எனச் சொல்லி அனுப்பினர்.
இருநூறு மாடுகளில் கொள்ளிக்கொம்பு மாடுகள் இருபது இருந்தன. விரிகொம்பு
மாடுகள் முப்பது இருந்தன. நெற்றியில் மூன்று சுழியும் ஒன்றுடன் ஒன்று
எதிர்த்திருக்கும் இடிமேலி மாடுகள் இருபத்தி ஆறு இருந்தன. மற்றவை எல்லாம்
சொல்லிக்கொள்ளும்படியான மாடுகள் இல்லை. ஆனாலும் கொம்பு உள்ள மாடுகள்தான்.
அவற்றைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தை வகுத்துக்கொண்டிருந்தான் கோவன்.
மலையைவிட்டு ஊருக்குள் இறங்கி வந்த மூன்று இளைஞர்கள், கோவன் சொல்லி
அனுப்பிய எரிசாற்றுப் பச்சிலையை அரைத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டனர்.
அதைக் கேள்விப்பட்டு ஊரே நடுங்கியது.
“குலமே அழிந்தாலும் செய்யக் கூடாத செயல் இது. எங்களின் உயிரே போனாலும்
நாங்கள் அதை அரைத்துக் கொடுக்க மாட்டோம்” என்று எல்லா கிழவிகளும்
சொல்லிவிட்டனர். வேறு வழி இன்றி இளைஞர்கள் மலை திரும்பும்போது
குறுக்கிட்ட செம்பா, மூன்று கலயங்களை நீட்டினாள். அவர்கள் கேட்டதைவிட
அதிகமானதாகவே அது இருந்தது.
பொழுது இறங்கத் தொடங்கியது. ஊர் முழுவதும் சாணம் மெழுகி, கோலம்போட்டு
முடித்தனர். ஊரே கூடிக் கொண்டாடவேண்டிய திருமணம், இப்படி கையளவு ஆட்களை
வைத்து நடத்தவேண்டியது ஆகிவிட்டதே என்று எல்லோருக்குள்ளும் கவலை
படர்ந்திருந்தது. ஆனால், வாசலில் கோலம் மலர்ந்துவிட்டால், கவலைகள்
எல்லாம் காற்றாகப் பறந்துபோகும்.
நீராட்டுச் சடங்கு தொடங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. பிற நான்கு
வீட்டுப் பெண்களும் செம்பாவை அழைத்துக்கொண்டு, ஊரின் மேற்குப் பக்கக்
காட்டுக்கு நடுவில் இருக்கும் செங்குளத்துக்குப் போனார்கள்.
சூரியன் இறங்கத் தொடங்கியபோது தூரத்து மேட்டில் கிடை நாய் ஒன்று
பாய்ந்துவருவதை மலை மேல் இருந்து கவனித்தான் கோவன். திட்டங்களைச்
செயல்படுத்தும் நேரம் நெருங்கிவிட்டது.
``ஊரார்களை மலைக்கு மேல் ஏற்றுங்கள்’’ என்றான்.
பேரோசைக்கும் கூச்சலுக்கும் நடுவில் எல்லோரும் மலை ஏறினர். செம்பாவைத்
தேடின கோவனின் கண்கள். மண நீராட்டுக்காக செங்குளத்துக்கு
அழைத்துச்செல்லப்பட்டி ருப்பதாகச் சொன்னார்கள். இந்த ஏற்பாடுகளைச் செய்த
கிழவனை வெட்டிக் கொல்ல வேண்டும்போல் இருந்தது. ``மின்னல் எனப் போய்த்
திரும்புகிறேன்'' எனச் சொல்லி மேற்குத் திசைக் காட்டுக்குள் ஓடினான்
கோவன். போகும்போது அவனுக்குப் பிடிபட்டது, கிழவன் செய்த செயல்
ஒருவிதத்தில் நல்லதே.
செம்பாவை, நான்கு வீட்டுத் தோழிகளும் நீராட்டினர். உச்சி எடுத்துப்
பின்னியிருந்த அவளது இரட்டைப் பின்னல் கூந்தலை மெள்ளக் கழற்றி, கோவனின்
வீட்டு அடையாளமான மூன்று சடைப்பின்னலைப் பின்னத் தொடங்கினர். வழக்கமாக
இந்தச் சடங்கின்போது கேலிப் பேச்சும் கிண்டல் சொல்லுமாக செங்குளமே
கலங்கிப்போயிருக்கும். ஆனால், இன்று அப்படி அல்ல.
நான்கு பெண்களும் மூன்று பின்னல் சடையைப் பின்னி முடித்தபோது,
குளக்கரையில் வந்து நின்றான் கோவன். அவர்கள் நால்வரை மட்டும் தனியாக
அழைத்தான். சுற்றிமுற்றிப் பார்த்தான். வெண்சாந்து உருண்டை வைக்கப்
பயன்பட்ட பழைய நாணல்கூடை ஒன்று நைந்த நிலையில் கிடந்தது. அதை
எடுத்துவந்து அதன் மீது கைவைத்தபடி வாக்கு கேட்டான்.
“என்ன நடந்தாலும் செம்பாவை ஊருக்குள் கூட்டி வரக் கூடாது. அவர்கள் கையில்
சிக்காமல் வெளியேற வேண்டும்.”
நான்கு பெண்களும் பயந்து தயங்கியபடி இருக்க, செம்பாவின் கை நாணல்கூடையை
இறுக்கிப் பிடித்து அவனுக்கான வாக்கை அளித்தது. கோவன் மலை நோக்கி
ஓடினான்.
தீப்பந்தங்களோடு அவர்களின் படை கிழக்கிலும் தெற்கிலுமாக ஊரைச் சூழ்ந்தது.
ஊருக்குள் எதிர்ப்புகள் எதுவும் இல்லை. உறையூர் படைக்கு வாள் வீசாமலே
வெற்றி கைகூடுவதுபோல் இருந்தது. ஊருக்கும் செம்மலைக்கும் இடையில்
இருக்கும் இடைவெளிக்கு அந்தப் படை வரட்டும் எனக் காத்திருந்தான் கோவன்.
அவன் எதிர்பார்த்த இடத்துக்குப் படை வந்தது. கொம்பின் உச்சிமுனை வாள்போல
மடித்து நீட்டியபடி இருக்கும் கொள்ளிக்கொம்பு மாடுகளை, இரு திசைகளுக்கும்
பத்து எனப் பிரித்த கோவன், அவற்றின் மூக்கில் பச்சிலையை வைத்து
நுழைத்தபடி கயிறுகளை உருவிவிட சைகை செய்தான். உற்றுப்பார்த்தால் தீ
நிறத்தில் இருக்கும் அவற்றின் கண்கள் பச்சிலைச் சாறு மூக்கில் ஏறியபோது
கண்ணில்பட்ட தீப்பந்தங்களை எல்லாம் குத்திக் கிழித்துக்கொண்டு நுழைந்தன.
இடது பக்கமும் வலது பக்கமும் இரு கைகளை விரித்ததைப்போல் கொம்புகள்
விரிந்துகிடக்கும் ‘விரிகொம்பு’ மாடுகள் முப்பதும் உள்ளிறங்கின. அவை
உள்ளே ஓடினாலே இரு பக்கங்களும் உள்ள குதிரைகளின் விலாவினைச் சீவிச்
சரிந்தபடி இருக்கும். பச்சிலை உருண்டையை  இரு காதுகளுக்குள்ளும் திணித்த
பிறகு தலையை மறுத்து மறுத்து ஆட்டி, ஆவேசம்கொண்டு உள்ளிறங்கின. அவற்றின்
மண்டைக்குள் இறங்கும் பச்சிலையின் எரிசாறு கணப்பொழுதில் நூறுமுறை தலையை
மறுத்தாட்டி வெறிகொள்ளச் செய்தது.
மீதி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் எல்லாம் சிறப்புத்
தகுதியற்ற மாடுகள்தான். ஆனால், கொம்பு உள்ளவை. அது ஒன்று போதும். பிற
மாடுகளைவிட வலிமையாக அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பது கோவனுக்குத்
தெரியும். அவற்றின் குதத்துக்குள் கைகளை நுழைத்து இலை உருண்டைகளை
அமுக்கினர். சிறிது நேரத்தில் அவற்றின் குடல் பிறண்டு தலைக்கு
ஏறிக்கொண்டிருந்தது. பின்புறக் கால்களை உதறியபடி அவை வந்த வேகத்தில்
பாறைகள் உருண்டன. மாடுகளின் நிலைகொள்ளாத சீற்றம் குதிரைகளைக்
கலங்கடித்தது. தாவிச் சரிந்து உள்நுழைந்தன மாடுகள்.
ஊருக்குள் பட்டிபோட்டு அடைக்கப் பட்டிருந்தன கிடை நாய்கள். வயல்வெளிகளில்
கிடையைவிட்டுத்
தனித்துப் பிரியும் முட்டுக்காளைகளையே குரைத்தபடி மிரட்டி நகர்த்தும்
பழக்கம் உள்ள நாய்கள் அவை. குதிரையைத் தாண்டிக் குதிக்கக்கூடியவை. நாக்கை
மடித்து சீழ்க்கை அடித்தபடி ஒரு வங்கிழவன் பட்டியைத் திறந்துவிட்டான்.
பெரும் குரைப்பொலியோடு குதிரைகளின் பின்னங்கால் சப்பைகளின் மீது அவை
பாய்ந்துகொண்டிருந்தன. உறையூர் படைக்கு என்ன நடக்கிறது என்றே
புரியவில்லை. நாய்களின் பாய்ச்சலையும் மாடுகளின் ஆவேசத்தையும்
எதிர்கொள்ளத் திணறிய நேரத்தில், கோவன் தனது இறுதி ஆயுதத்தை இறக்க
முடிவுசெய்தான்.
மலையின் பின்புறம் நின்றுகொண்டிருந்த இடிமேலி மாடுகள் இருபத்தியாறையும்
மலையுச்சியில் அணிவகுத்து நிறுத்தினான். இடிமேல் இடிவிழுந்தாலும்
அஞ்சாமல் முன்னால் நகரும் மாட்டு இனம் அது. தான் செய்யப்போகும்
செயலுக்கான கலக்கம் எதுவும் இல்லாமல்தான் கோவனின் முகம் இருந்தது. பெரிய
பெரிய வைக்கோற்கட்டுகளை அவற்றின் கொம்புகளின் மேல் செருகினர். இரு
திசைகளிலும் பாய்ந்து இறங்குவதைப்போல அவை நின்றுகொண்டிருந்த போது,
வைக்கோல் கட்டுகளின் மேல் தீவைத்து கழுத்துக் கயிறுகளை உருவிவிட்டனர்.
மிகப்பெரிய மர உருளைகளில் தீயைப் பற்றவைத்தபடி மலை உச்சியில் இருந்து
ஆயிரக்கணக்கானவர்கள் இறங்குவதைப்போல அந்தக் காட்சி இருந்தது. உறையூர் படை
கதிகலங்கிய நேரத்தில், எரிந்து இறங்கும் தீப்பந்தத்தின் தழலில்
செம்மலையின் மணிக்கற்கள் எல்லாம் ஒளிவீசின. மலை எங்கும் இருந்து
பல்லாயிரம் பேர் பந்தங்களோடு இறங்குவதைப் போல் தெரிந்தது. இது கோவனாலும்
திட்டமிடப்படாதது. நிலைமை அதிபயங்கரமானதை உணர்ந்த உறையூர் படை, உயிர்
தப்பித்தால் போதும் என ஓடத்  தொடங்கியது. குறுக்கும் நெடுக்குமாக
ஆவேசத்துடன் அலையும் கிடைமாடுகள் நிலைகொண்ட இடத்தில் இருந்து எளிதில்
வெளியேறாதவை. அவற்றைக் கடந்து வெளியேற முடியாமல், உறையூரின்
முழுப்படையும் அழிந்துகொண்டிருந்தது. வலையைத் தாண்டி மீன்கள்
தவ்வுவதைப்போல குதிரைகளைத் தாண்டியபடி நாய்களின் பாய்ச்சல்
நிகழ்ந்துகொண்டே இருந்தது. மிச்சம் மீதியை கோவனின் கூட்டாளிகள்
உள்ளிறங்கி வெட்டிச் சரித்தனர்.
பொழுது புலர்ந்தது. உறையூர் படை தோற்று ஓடியதை உறுதிப்படுத்தினான் கோவன்.
குடல் சரிந்த குதிரைகளும் உறையூர் வீரர்களின் உடல்களும் எங்கும் கிடந்தன.
அவற்றுக்கு நடுவில் நடந்துகொண்டிருந்தான். பெரும்வாள் கொண்டு தலை
இருகூறுகளாகப் பிளக்கப்பட்ட விரிகொம்பு மாடு ஒன்று செத்துக்கிடந்தது.
`மாடுகளை, பூச்சிகளும் உண்ணிகளும் கடிப்பதையே பொறுத்துக்கொள்ள முடியாமல்
வெண்சாந்து உருண்டை செய்த குலத்தில் பிறந்த நான், எம் மாடுகள் அனைத்தும்
அழிய பச்சிலை எரிச்சாற்றை என் கையாலே தந்துவிட்டேனே’ எனக் கதறியபடி,
செத்துக்கிடந்த மாட்டின் முன் மண்டியிட்டு உட்கார்ந்தான். சரிந்துகிடந்த
அதன் இருபக்கக் கொம்புகளையும் பிய்த்து எடுத்தான். தான் செய்யப்போகும்
செயலுக்கான கலக்கம் எதுவும் இல்லாமல்தான், அவனது முகம் இருந்தது. சூரியன்
அவனுக்கு நேர் எதிராக மேலே எழுந்தபோது, இரு கொம்புகளையும் முழு விசையோடு
செலுத்தி, தொண்டைக்குள் இறக்கினான் கோவன். சூரியனைப் பார்த்தபடி அவனது
உடல் மண்ணில் சரிந்தது.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
http://www.vikatan.com/anandavikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக