திங்கள், 19 பிப்ரவரி, 2018

வேள்பாரி 15 ஆயர் இடையர் தோற்றம் பாரி முன்னோர் செம்மலை மாடு வளர்ப்பு 5 பிரிவு பெண்ணெடுக்க தடையில்லை சிகையலங்காரம் கோலம்

aathi tamil aathi1956@gmail.com

1/11/17
பெறுநர்: எனக்கு
நவீனன்  7,710
  Posted January 26
வீரயுக நாயகன் வேள்பாரி - 15
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.,
இரண்டாம் நாள் நள்ளிரவுக்கு முன்பே தெய்வவாக்கு விலங்கு, மரம் இறங்கி
பழத்தை எடுத்தது. முன்புறம் நடப்பதுபோலவே பின்புறமும் நடப்பது இந்த
விலங்கின் இயல்பு. பழம் எடுத்ததும், சில நேரம் திரும்பி நடந்து
மரக்கிளையின் மீது ஏறும்; சில நேரம் யாரும் தன்னை நெருங்கிவிடுவார்களோ
என்ற பயத்தால் முன்பக்கம் பார்த்தபடியே கால்களைப் பின்னால் நகர்த்திப்
போகும். இந்த முறை அப்படித்தான் போனது. அது பின்னால் நடந்து போனால்,
இரட்டை விளக்கு ஏற்றப்பட வேண்டும் என்பது வழக்கம். மரத்துக்கு முன்பு
வைக்கப்பட்டிருந்த தீச்சட்டியில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.
எண்ணெயில் முக்கி எடுத்த சிறு மரத்துண்டுகளைக் கொண்டுவந்து அதில்
பக்குவமாக வைத்தனர். குலநாகினியின் கண்கள் அதைப் பார்த்துக்கொண்டிருக்க,
பிற நாகினிகள் அந்த வேலையைச் செய்தனர்.
விளக்கில் தீயின் கனஅளவு அதிகமாகி, தழல் இரு கூறுகளாகப் பிரிந்து
எரிந்தது. தீயின் கனஅளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும், தழல்
எத்தனை கூறுகளாகப் பிரிய வேண்டும் என்பதையும் அவர்கள் முடிவுசெய்தனர்.
நீர்பாய்ச்சுவதைப்போல, தீயையும் கட்டுப்படுத்திப் பாய்ச்ச அவர்கள்
கற்றிருந்தனர். குலநாகினி பார்த்துக்கொண்டிருக்க, எழும் நெருப்பின் தழல்
பல கூறுகளாகப் பிரிந்து இரு கூறுகளாக நிலைகொண்டது.
நேற்றைப்போலவே தெய்வவாக்கு விலங்கு பழம் எடுத்ததும் பாணர் கூட்டம்
உள்ளிறங்கும் என எதிர்பார்த்திருந்த கபிலருக்கு, சற்றே ஏமாற்றமாக
இருந்தது.
“கூத்து தொடங்க நேரமாகும். வாருங்கள் நாம் இந்த மரத்தைச்
சுற்றிப்பார்த்துவிட்டு வருவோம்” எனச் சொல்லி, கபிலரை அழைத்துக்கொண்டு
நடந்தான் பாரி.
கொற்றவை நிலைகொண்டிருக்கும் மரக்கூட்டம் பெரும் அடர்த்திகொண்டது.
மனிதனால் உள்நுழைய முடியாத அளவுக்குப் பின்னிக்கிடப்பது. பாரியோடு கபிலர்
அந்த மரத்தைச் சுற்றி நடந்துகொண்டிருந்தார். அடர்ந்த காட்டில், பந்த
வெளிச்சத்தில் ஆங்காங்கே தனித்தனியான வீடுகள் இருப்பது தெரிந்தது.
“இந்த அடர்வனத்தில் தனி வீடுகள் ஏன் இருக்கின்றன?” எனக் கேட்டார் கபிலர்.
“இது ஒரு மர விலங்கு. காலகாலமாக இந்த ஒரு மரத்தில் மட்டுமே இந்த விலங்கு
வாழ்கிறது. வேறு எந்த மரத்திலும் இது ஏறாது. எனவே, இந்த இடம் தவிர, வேறு
எங்கேயும் இந்தப் பிராணியை நீங்கள் பார்க்க முடியாது. இந்த விலங்கு,
வேட்டை விலங்குகளுக்கு மிகவும் பிடித்த உணவு. இந்த மரப் புதருக்குள்
நுழைந்து இதை எப்படியாவது தின்றுவிட அவை முயல்கின்றன. அதனால்தான் இதைப்
பாதுகாக்க காவற்குடிகள் இங்கு இருக்கின்றனர்.”
பேசிக்கொண்டிருக்கும்போது துடிப்பறையின் ஒலி கேட்கத் தொடங்கியது.
`‘வாருங்கள்’’ எனச் சொல்லி வேகமாக முன் நடந்தான் பாரி.
செம்பாதேவியின் கதை இது. எனவே, ஆடுகளம் முழுவதையும் நிறைத்து ஓர் அழகிய
கோலம் போடப்பட்டிருந்தது. பாரியும் கபிலரும் இருக்கையில் வந்து
அமர்ந்தனர். அப்போதுதான் தரையை மெழுகி, கோலம் போட்டிருந்ததால் சாணத்தின்
வாசனை எங்கும் வீசியது. அதன் ஈரம் காயவில்லை. கோலத்தின் நடுவில்
வெண்ணெயில் தானியங்களை உருட்டிச் செய்யப்பட்ட `வெண்சாந்து உருண்டை’
வைக்கப்பட்டிருந்தது. அந்த உருண்டையின் நடுவில் மாட்டின் இரு கொம்புகளை
நட்டுவைத்திருந்தனர். வெண்சாந்து உருண்டையின் வாசனை எங்கும்
பரவியிருந்தது.
கோலத்தின் முன்பு பெண் ஒருத்தி அமர்ந்து உடுக்கை வகையைச் சேர்ந்த
துடிப்பறையை அடிக்கத் தொடங்கினாள்.
“இவர்கள் பாணர்களா?” எனக் கேட்டார் கபிலர்.
“இல்லை... பறம்பு மக்கள்” என்றான் பாரி.
துடியின் ஓசை பேராந்தையின் ஓசையைப்போல அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது.
நீருக்குள் பொடி கரைவதைப்போல, இருளுக்குள் துடி கரையத் தொடங்கியது.
தங்களுக்கு என்று பாணர்கள் அற்ற குலம் இவர்களுடையது. அந்தக் குலப்பெண்
செம்பாதேவியின் கதையைத் தொடங்கினாள். கபிலர் கேள்விப்பட்டிராத கதை இது.
ஆதிகாலத்தில் மலைமக்களில் ஒரு பிரிவினர் கால்நடைகளை வளர்க்கப் பழகியபோது,
மேய்ச்சல் நிலங்களை நோக்கி தந்தரைக்கு இறங்கினர். குறிஞ்சி நிலத்தைவிட்டு
இறங்கிய ஐந்து குடும்பங்கள் செம்மலையின் அடிவாரத்தில் குடில் அமைத்தனர்.
கால்நடைகளை மேய்த்துப் பல்கிப் பெருக்கினர். ஐந்து வகைக் குடும்பத்தின்
குலவழி தழைத்தது.
அந்தக் குலவழியின் வகையை அடிப்படையாகக்கொண்டு அடையாளங்களை
உருவாக்கவேண்டிய தேவை வந்தது. குலத்துக்கு ஒரு வகை என ஐவகையான
சூட்டுக்காயங்களை ஆண்கள் தம் வலது தோளிலே உருவாக்கிக் கொண்டனர்.
பெண்களுக்கு அதே போல சூட்டுக்காயத்தை உருவாக்கினால் திருமணத்துக்குப்
பின்னர் அவளது குடும்ப அடையாளம் மாறும், எனவே சூட்டுக்காயம் சரிப்பட்டு
வராது. வேறு வழிகளைச் சிந்தித்தனர். பெண்களே அதற்கு ஒரு முடிவும்
கண்டனர். தங்களின் தலைமுடியை, குலத்துக்கு ஒரு வகை என ஐந்து வகைகளாகப்
பின்னிக்கொள்வது என முடிவு எடுத்தனர்.
ஐவகைக் கொண்டைகளை உருவாக்கினர். அந்தக் காலத்தில், எல்லா நாட்டுப்
பெண்களுக்கும் தலைமுடியைச் சுருட்டி கொண்டைபோடும் பழக்கம் மட்டும்தான்
இருந்தது. ஆனால், உச்சந்தலையில் வகிடு எடுத்து இரு பக்கங்களும் முடி சரிய
இரு கொண்டைகள்... அதேபோல மூன்று, நான்கு, ஐந்து என ஐந்து விதமான
கொண்டைகளை இவர்கள் முடிந்தனர். ஐந்து விதங்களிலும் சடைகளைப் பின்னினர்.
அதில் மேய்ச்சலுக்குச் செல்லும் வெவ்வேறு நிலத்தின் பூக்கள் சூடப்பட,
இவர்களைப் பார்க்கும் ஆணும் பெண்ணும் சொக்கிப்போனார்கள். `அழகைப் பேணும்
அதிசயக் கூட்டம்' என இவர்களைப் பற்றி திசை எங்கும் பேச்சு பரவியது.
மேய்ச்சலின்போது கால்நடைகளின் கோமியம் வெவ்வேறு வகையில் வளைந்து வளைந்து
வடிவம்கொள்வதை, காலம்பூராவும் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இந்தப்
பெண்கள். அந்த நீர்க்கோலம் மனதுக்கு எப்போதும் ஒரு காட்சி இன்பத்தை
ஏற்படுத்தக்கூடியது. ஆனால், கணப்பொழுதில் அந்தக் காட்சி மறைந்துவிடும்.
புன்னகை, காற்றில் மறைவதைப்போல மண்ணில் மறையும் மஞ்சள் வண்ண நீர் அது.
தனது குடிலின் வாசலில் அதே போன்ற ஒரு கோலத்தை வரைந்தால் என்ன என
எண்ணினர். இடித்த குருணையின் தொலியைச் சிறுகத் தூவியபடி அவர்களின்
விரல்கள் வலமும் இடமுமாக வளைய ஆரம்பித்தன. ஐந்து விதமாக தலைமுடியைப்
பின்னியும் கொண்டைபோட்டும் பழக்கப்பட்ட விரல்களுக்கு வளைந்து நெளியும்
கோலம் எளிதில் வசப்பட்டது. மாடு பெய்த நீரின் எல்லா வளைவுகளையும் தனது
ஒற்றைக் கோலத்துக்குள் கொண்டுவர அவர்களுக்கு அதிக காலம் ஆகவில்லை.
செம்மலையின் அடிவாரத்தில் உள்ள பெண்கள் விதவிதமாகக் கொண்டை போட்டு, தரை
எங்கும் கோலம் போடும் அழகு அரசிகள் என எல்லோராலும் பேசப்பட்டனர். காட்டு
வழியிலும் உமணர்களின் காது வழியிலும் இந்தச் செய்தி எல்லா பகுதிகளுக்கும்
பரவியது. இவர்கள் இருக்கும் பகுதிக்கு `கோலநாடு' எனப் பெயர் உருவாயிற்று.
புதிய நாகரிகத்தின் அடையாளமாக செம்மலை மாறியது. இதில் வெளி உலகுக்குத்
தெரியாத இன்னொன்றும் இருந்தது. ஐந்து குடும்பங்களும் தங்களின் மாடுகளை
மேய்ச்சலுக்கு அழைத்துப்போய்விட்டு வந்து, ஐந்து தனித்தனிப்
பட்டியில்தான் அடைக்க வேண்டும். அப்படி என்றால், அவற்றுக்கும் தனித்தனி
அடையாளம் தேவை. மாடுகளுக்கு, பிற இடங்களில் சூட்டுக்குறி, காது அறுத்தக்
குறிகள் எல்லாம் போட்டிருப்பதைக் கேள்விப்பட்டனர். கால்நடைகளே தங்களின்
தெய்வம். எனவே, அவற்றைத் துன்புறுத்தாத வழியில் அடையாளம் இட விரும்பினர்.
மூத்த கிழவி ஒருத்தி, `இந்தச் செம்மலையில் இத்தனை வகையான வண்ணக்கற்கள்
கிடக்கின்றன. அவற்றை எடுத்து, ஒரு குடும்பத்துக்கு ஒரு வண்ணம் என
முடிவுசெய்யுங்கள். அந்த வண்ணக்கல்லையே அந்தக் குடும்பத்தின்
மாடுகளுக்கும் நெற்றிப்பட்டமாகச் சூட்டுங்கள்’ என்றாள். அதில் இருந்து
ஐந்து வகையான வண்ணக் கற்களைக்கொண்டு கொம்புகளுக்கு இடையில் கயிறு
முடிந்து நெற்றிப்பட்டத்தை உருவாக்கினர்.
மாடுகள் எந்த நிலையிலும் துன்பப்படக் கூடாது என்பதே இவர்களின் எண்ணமாக
இருந்தது. கிடைமாடுகளின் மேல் சிறுபூச்சிகளும் உண்ணிகளும்
நிறைந்துகிடந்தன. அவற்றைக் கொத்தித் தின்ன எந்த நேரமும் பறவைகள் அவற்றின்
மீதே அமர்ந்து இருந்தன.
இதைத் தடுக்க ஒரு வழியைக் கண்டறிந்தனர். திரட்டப்பட்ட வெண்ணெயில்
தானியங்களைக் கலந்து, பெரிய வெண்சாந்து உருண்டைகளை உருவாக்கினர். அந்த
உருண்டையை நாணல்கூடையில் வைத்து கிடையின் ஓரம் ஏதாவது ஓர் இடத்தில்
வைத்துவிட்டால் போதும். பறவைகள் முழுக்க வெண்சாந்து உருண்டையைத்தான்
மொய்த்துக்கிடந்து, மாடுகளின் பக்கம் போகவே போகாது.
ஒருநாள் இரவு வெண்சாந்து உருண்டை வைக்கப்பட்டிருந்த நாணல் கூடையை
குடிலுக்குள் வைக்காமல், மறந்து வெளியில் வைத்துவிட்டுத் தூங்கிவிட்டனர்.
நாணல் கூடையின் இண்டு இடுக்குகளில் ஒட்டியிருப்பதை இரவு முழுவதும்
பறவைகள் கொத்தித் தின்றுள்ளன. காலையில் எழுந்து பார்த்தபோது, நாணல் கூடை
நார்நாராக உதிர்ந்துகிடந்தது. வெண்சாந்து உருண்டையின் சுவை, பறவைகளையே
வெறிகொள்ளச் செய்துள்ளது.
நாடோடி நாகரிகம் எல்லா உயிர்களையும் தனதாக்கி நேசித்தது. இவர்களின் குலம்
தலைமுறைத் தலைமுறையாகத் தழைத்து முன்னேறியது. மனிதர்களும் கால்நடைகளும்
பல்கிப் பெருகின.
கோல நாட்டினர், பல்வேறு குழுக்களாக ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதம்
பிரிந்து மேய்ச்சலுக்குப் போவார்கள்; மீண்டும் ஆவணி மாதம் செம்மலைக்குத்
திரும்புவார்கள். எல்லோரும் கொண்டுவரும் மாடுகள் குடும்ப அடையாளத்தோடு
பிரிக்கப்பட்டு, கணக்கு வைத்துக்கொள்ளப்படும்.
வழக்கம்போல் மார்கழி மாதம் கோல நாட்டில் இருந்து மேய்ச்சலுக்காகப்
பல்வேறு திசைகளில் கிடைபோட குழுக்கள் புறப்பட்டுப் போயின. ஒரு குழு,
காவிரி ஆற்றின் படுகையில் நகர்ந்தது. பதினெட்டுக் குடும்பங்களையும்
இருநூறு மாடுகளையும் கொண்டிருந்தது அந்தக் கிடை. அந்தக் கிடையில்
சுடர்ந்து ஒளிவீசும் தழல்போல் இருப்பவள் செம்பா. வகிடு எடுத்து இரு சடை
பின்னிய குடும்பம் அவளுடையது. கோவனின் தோள்கள் மாட்டின் திமில்போல்
உருத்திரண்டு இருக்கும். அவனது வலது தோளில் பொறிக்கப்பட்ட மூன்று சூட்டு
அடையாளத்தின் மீது சிறுவயதில் விரல்வைத்துப் பார்த்த செம்பா, இப்போது
இதழ் பதித்துப் பார்க்கவே ஆசைப்படுகிறாள்.
கிடையின் முன்னால் நடந்துபோகும் கோவனின் நடையைத் தொடர்ந்து மொத்த
மாடுகளும் நகர்ந்தன. கிடையின் இடது ஓரம், நாணல் கூடை தூக்கி நடக்கும்
செம்பாவைச் சுற்றி பறவைக் கூட்டம் மிதந்து வந்தது. மாட்டின் காதுகள்
விடைத்து ஆட, பறவைகளின் இறக்கைகள் படபடத்து அடிக்க, பசுக்களுக்கும்
பறவைகளுக்கும் நடுவில் செழித்து வளர்ந்தது அவர்களின் காதல்.
கிடைமாடு நடந்துகொண்டிருக்கும்போதே குட்டியை ஈனும். அந்தக் குட்டியால்
உடனடியாக கிடையின் வேகத்துக்கு நடக்க முடியாது. பால் குடிக்கும் நேரம்
தவிர, பிற நேரத்தில் அதைத் தோளிலே தூக்கித்தான் நடக்க வேண்டும். கோவன்
இளங்குட்டியைத் தோளில் தூக்கி நடக்க, ஈன்ற பசு அவனை உரசியே நடந்து வந்து,
குட்டியை நாவால் நக்கி இன்புற்றது. செம்பாவின் கண்கள் அவனையே
பார்த்துக்கொண்டிருந்தன. தோளில் கிடக்கும் இளங்குட்டியின் மீது ஒரு கணம்
பொறாமை வந்து விலகியது.
மாலையில் மாடுகளைக் கிடைபோட்டு, இரவு கஞ்சி குடித்து, தங்களின்
குடிலுக்கு நடுவில் சிறு கூத்து நிகழ்த்துவர். எல்லோருக்கும் பாடத்
தெரியும். ஆள் மாற்றி ஆள் பாடுவர். கிடையில் காவலுக்கு நிற்பவன்கூட எட்ட
இருந்தே தனது பாடலைப் பாடுவான். எல்லோரின் பாடலுக்கும் துடிப்பறை முழங்கி
இசை கொடுப்பவன் கோவன்தான். இடது கை துடியை இழுத்துப் பிடிக்க வலது கை
விரல்களால் அதன் வலதுபுறத்தை அடித்து அடித்து தாளம் எழுப்பும் அழகைப்
பார்த்து மகிழ்வாள் செம்பா. அன்று கோவனின் துடியிசை வழக்கத்துக்கு
மாறாகத் துள்ளலோடு இருந்தது. கூத்து முடிந்ததும் எல்லோரும் தங்களின்
குடிலுக்குப் போக செம்பா, கோவனின் காது அருகே போய்ச் சொன்னாள், “துடியின்
இடப்பக்கம் போலவே நானும் உனது விரல்படாமல் இருக்கிறேன்.”
கோவன் கலங்கிப்போனான். அன்று இரவு முழுவதும் துடியின் இடதுபுறம் பற்றியே
நினைத்திருந்தான். கிடைக் காவல்காரனின் பார்வைக்குத் தப்பி குடில் தாண்ட
முடியாது. வேறு வழியின்றி கோவன் ஒடுங்கிப் படுத்தான்.
மறுநாள் பக்கத்தில் இருக்கும் ஊருக்கு வெண்ணெய் விற்கப் போனாள் செம்பா.
வெண்ணெய் விற்று, தானியம் பெற்றுவருவது பெண்களின் வேலை. உழவு செழிப்பாக
நடந்துகொண்டிருந்த ஊர் அது. இரு தெருக்களைத் தாண்டும் முன்பே அவள்
கொண்டுவந்த வெண்ணெய் விற்றுத் தீர்ந்தது. தானியங்களைப் பெற்றுக்கொண்டு மர
அடிவாரத்தில் காத்திருந்தாள். எதிர்ப்பக்கம் விற்கப்போன அவள் தோழி
இன்னும் வரவில்லை. அங்கும் இங்குமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். சற்றுத்
தொலைவில் நின்றிருந்த இளைஞன் ஒருவன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்ததை
அவள் கவனித்தாள். தோழியை கண்கள் தேடிக்கொண்டிருக்க, தன்னைக் கடந்துபோகும்
பெரியவரிடம், ``இந்த ஊர் பெயர் என்ன?’’ எனக் கேட்டாள்.
“உறையூர்” என்றார் அவர்.
பார்த்துக்கொண்டிருந்தவனைக் கடந்து தோழி நடந்து வந்தாள். இருவரும் கிடை
நோக்கி தானியங்களைத் தூக்கிக்கொண்டு நடந்தனர். தானிய முடியை மறுதோளுக்கு
மாற்றியபடியே தோழி சொன்னாள். “உன்னைப் பார்த்துக்கொண்டே நின்றவன் இந்த
ஊர் குலத்தலைவரின் மகனாம். ஊருக்குள் நுழைந்ததில் இருந்து உன்
பின்னால்தான் வந்துகொண்டிருக்கிறானாம். கிள்ளி என அவனை அழைத்தார்கள்.”
``புதுவிதமான பெயராக இருக்கிறதே?”
“ `எதிரிகளின் தலையைக் கிள்ளி எடுத்ததால் இந்தப் பெயர் உருவாயிற்று’
என்று ஒரு மூதாட்டி சொன்னாள். ஆனால், உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த
அவனது கண்களும் அதே வேலையைத்தான் செய்தன.”
அவள் சொல்வதைப் பொருட்படுத்தாத செம்பா, மகிழ்வோடு சொன்னாள், “இன்று சிறு
சோளம் கிடைத்திருக்கிறது. காரமாட்டுப்பாலில் இருந்து கடையப்பட்ட
இளவெண்ணெயைப் பிசைந்து சாப்பிட்டால், அப்படி ஒரு சுவை இருக்கும்.
நினைக்கும்போதே நாவூறுகிறது” என்றாள்.
இரவு, கஞ்சி குடித்த பிறகு கூத்து முடிந்து எல்லோரும் கலைந்தனர். அன்றைய
கிடைக்காவல் முறையில் கோவனும் உண்டு. செம்பா அவனுக்காகச் சமைத்த
கஞ்சியைச் சிறு கலயத்தில் ஏந்தி குடிலுக்குப் பின் காத்திருந்தாள். இருள்
நன்றாக அடங்கிய பிறகு குடிலுக்குப் பின்புறமாக மறைவாக வந்து சேர்ந்தான்
கோவன். அந்த இடமே சுவையால் மணத்துக்கிடக்க, பூத்து நின்றாள் செம்பா.
பிசைந்த உணவை ஊட்ட அவன் வாய் அருகே கையைக்கொண்டு சென்றபோது நாவால் விரல்
தொட்டு வாங்கினான்.
அந்தச் சிறு தொடுதல் மொத்த உடலையும் குலுக்கியது. காதலின் கூர்மிகு
ஆயுதம் நீர்சுரக்கும் நுனி நாக்கு. சற்றும் எதிர்பாராமல் கோவன் அதைப்
பயன்படுத்தியபோது செம்பா நடுங்கிப்போனாள்.
உணவு அருந்தியபடியே துடியின் இடதுபுறத்தின் மீது அவனது விரல்கள் படரத்
தொடங்கின. அவள் உள்நடுங்கிக் குலுங்கினாள். அவள் கண்செருகி மீண்டபோது
கடைசிக் குடிலுக்குப் பின்னால் குதிரையில் ஒருவன் போவது தெரிந்தது.
கிடையில் கிடந்த நாய்கள் சுதாரித்து அந்தத் திசைநோக்கிப் பாயத் தொடங்கின.
ஆனால், குதிரை படுவேகத்தில் மறைந்தது. நாயின் குரைப்பொலியில் அனைவரும்
எழுந்துவிட்டனர். வேல்கம்பைத் தூக்கியபடி முன்னால் ஓடி நின்றான் கோவன்.
அவிழ்ந்த நூல்களைக் கட்டியபடி குடிலுக்குள் நுழைந்த செம்பாவிடம்
எதிர்ப்பட்ட தோழி சொன்னாள்... “வந்தது அவன்தான்”. சொல்லியபோது செம்பாவின்
கட்டு கழன்று இருந்ததை அதிர்ச்சியோடு பார்த்தாள் தோழி.
செம்பா, தலையை மறுத்தபடி ஆட்டி, சற்றே வெட்கப்பட்டுச் சொன்னாள்...
“கோவன்.”
தோழி திரும்பிப் பார்த்தாள். கோவன் வேல்கம்போடு முன்னிலையில்
நின்றுகொண்டிருந்தான். காதல், கண நேரத்துக்குள் எல்லோரையும் கண்ணைக்கட்டி
விளையாடிக்கொண்டிருந்தது. நாய்கள் திருடனோடு சேர்ந்து ஓடுபவனைக்
குரைத்தன. தோழி கோவனின் அருகில் போய் காதோடு சொன்னாள், “இனி நீ
கிடைக்காவல் நிற்கும் நாள் எல்லாம், நான் இடைக்காவலுக்கு நிற்பேன்.”
மறுநாள் மாலையில், கிடைக்கு இடப்புறம் இருந்த பெருமேட்டிலே தந்தையோடு
வந்து நின்றான் கிள்ளி. சற்றுத் தொலைவில் மாட்டுக்கிடையும் குடில்களும்
இருந்தன. தந்தையின் கண்கள் மாடுகளை எண்ணின.
“இருநூறுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. இதைவிட பெருஞ்செல்வம்
இருக்கும் இடத்தில் பெண் எடுப்போம்” என்றார்.
அவனோ அவர் சொல்வதை ஏற்கவில்லை. “அவள் பேரழகு, அதற்கு இணையான செல்வம்
எதுவும் இல்லை” என்றான்.
அவரோ மறுத்துப் பேசி அவனது மனதை மாற்ற முயன்றுகொண்டிருந்தார்.
நடக்கவில்லை. சரி, நமது மாளிகைக்குப் போய் பேசிக்கொள்வோம் என முடிவு
எடுத்து குதிரையின் மீது ஏறப்போகும்போது சொன்னான்... “இன்னும் சிறிது
நேரத்தில் குடிலுக்கு நடுவில் பந்தம் ஏற்றி கூத்து நிகழ்த்துவார்கள்.
அப்போது அவள் குடிலுக்குள் இருந்து வெளியில் வருவாள். அவளை நீங்கள்
பாருங்கள். நான் சொல்வதை ஏற்பீர்கள்” என்றான்.
இருள் கூடியது. பந்தங்கள் ஏற்றப்பட்டன. எல்லோரும் வந்து கோலத்தைச் சுற்றி
அமர்ந்தனர். கோவன் வழக்கம்போல துடியோடு வந்து உட்கார்ந்தான். நேர்
எதிரில் தோழி வந்து உட்கார்ந்தாள். கோவன் சற்றே தலையைத் திருப்பி
தனக்குள் சொல்லிக்கொண்டான்... “துடியின் இடப்புறத்தை ஊர் திரும்பி மணம்
முடிப்பது வரை நினைக்கக் கூடாது.”
அவள் இன்னும் ஏன் குடில்விட்டு வெளிவரவில்லை என ஆவலோடு பார்த்தபடி
தொலைவில் நின்றுகொண்டிருந்தான் கிள்ளி. எங்கும் கும்மிருட்டுச்
சூழ்ந்திருந்தது. பந்த வெளிச்சத்தில் எதிர்சுடர் வீச அவள் குடிலுக்குள்
இருந்து வெளியேறி வந்து, கோவனுக்கு எதிரில் உட்கார்ந்தாள். நேற்று கலைந்த
வெட்கம், இன்று கூடி நின்றது. கோவனால் அவளை நேர்கொண்டு பார்க்க
முடியவில்லை. அவனது விரல்கள் துடியின் மீது படவே அஞ்சின. தாளம்
கூடவில்லை. ஓசையும் அவனைப்போலவே பம்மியது. கிடையின் பெரியாம்பளைச்
சொன்னார், “டேய்... நேத்து கஞ்சி குடிச்சவன் மாதிரி அடிச்சுக்கிட்டு
இருக்க, சத்தமே கேட்கலை. இழுத்து அடிடா.”
தோழி சொன்னாள்...
“பெருசு, நேத்தும் அவன் கஞ்சி குடிக்கலை. அதுதான் விரல் செத்துப்போய் கிடக்கு.”
செம்பா அதிர்ச்சியோடு தோழியைப் பார்த்தபோது, அவளோ சற்றே ஆணவச் சிரிப்போடு
கோவனைப் பார்த்தாள்.
தொலைவில் இருந்து பார்த்தபடி அவள் பேரழகில் மயங்கி வாய்பிளந்து நின்ற
கிள்ளி, தந்தையிடம் காட்ட அவரை நோக்கித் திரும்பினான். அவரோ ஒலியற்ற
இருளின் திசையை நோக்கி வாய்பிளந்து பார்த்தபடி, அதிர்ச்சியில் உறைந்து
நின்றார்!
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
http://www.vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக