|
1/11/17
| |||
நவீனன் 7,700
Posted December 29, 2016
வீரயுக நாயகன் வேள்பாரி - 11
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,
இருள் விலகாத இரவின் கடைசி நாழிகையில், கபிலரை எழுப்ப அவரது அறை நோக்கி
வந்துகொண்டிருந்தான் வீரன் ஒருவன். அவனது காலடி ஓசை மிகத் தொலைவில்
இருந்தே கேட்கத் தொடங்கியது. படுக்கையில் இருந்து மெள்ள அசைந்தார். ஓசை,
அறைக்குள் நுழைவதற்குள் எங்கு இருந்தோ வந்த மலரின் மணம் அவரது
மூக்குக்குள் ஏறியது. சற்றே மூச்சை இழுத்து முகர்ந்தார். காலடி ஓசை
அருகில் வந்து நின்றது.
நள்ளிரவில் மலரும் மயிலை மலரின் மணம். நள்ளிரவு மலருக்கு எனத் தனிக்
குணங்கள் உண்டு அது வண்ணங்களை எல்லாம் வாசனையாக்கி ஒளி வீசக்கூடியது.
ஆம்பலும் முசுண்டையும் நள்ளிரவிலே பூப்பவை. ஆனாலும், மயிலையின் தனித்துவ
மிக்க வாசத்துக்கு அவற்றை இணைசொல்ல முடியாது. மயிலையின் மணம் அறை எங்கும்
பரவியது. காட்சிக்கு முன்பே நறுமணத்தால் இதயம் நிரம்பியது. அகமகிழ்வோடு
கண் விழித்தார் கபிலர்.
மலர்க் கூடையை அறையில் வைத்துவிட்டு ஒரு பெண் வெளியேறினாள். அருகே வந்த
வீரன் சொன்னான், “பறம்பின் தலைவர் உங்களை அழைத்துவரச் சொன்னார்”. மலர்
மணத்தோடு இணைந்தது இனியவனின் அழைப்பு. சிறிது நேரத்தில் வருவதாகக்
கூறினார்.
மாளிகையின் முகப்பில் தயாராக நின்றுகொண்டிருந்தான் பாரி. கபிலர் வெளியேறி
வந்ததும், ``வாருங்கள் போகலாம்” என உற்சாகமாக அழைத்துச் சென்றான். இரவின்
கடைசி இதழ் இப்போதுதான் உதிரத் தொடங்கியிருந்தது. தீப்பந்தங்களை அணைக்க
வீரர்கள் மூடுகுவளைகளோடு போய்க்கொண்டிருந்தனர். பறவைகளின் சத்தம் இன்னும்
வெளியேற வில்லை. எவ்வியூரின் நடுவீதியின் வழியே கபிலரை அழைத்துக்கொண்டு
மேலே ஏறினான்.
பாரி அணிந்திருந்த உடையில் இருந்து நறுமணம் பரவியது. அறைக்குள்
நிரம்பியிருந்த மயிலையின் மணத்தை அது விஞ்சியது. வீதியில்
நடக்கும்போதுகூட வாசனை கரையாமல் ஆடையோடு வந்துகொண்டிருக் கிறது. கபிலரை
எவ்வியூரின் மேலே இருக்கும் உச்சிப்பாறைக்கு அழைத்துச் சென்றுகொண்டி
ருந்தான் பாரி. நாய்களின் குரைப்பொலி அங்கும் இங்குமாகக்
கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் மேல்நோக்கி நடந்துகொண்டிருந்தனர்.
புலர்காலையில் வீதிகளின் உள்ளழகை ரசித்தபடி நடந்துகொண்டிருந்த கபிலர்,
பாரியிடம் கேட்டார், “யவனத்தில் இருந்து நறுமண எண்ணெய்களை வாங்கி, பூசிக்
கொள்ளும் வேந்தர்களையும் பெரு வணிகர்களையும் அறிவேன். ஆனால், அந்த
வாசனைகூட இவ்வளவு மணமூட்டுவதாக நான் உணர்ந்தது இல்லை. உனது ஆடையின் வாசனை
அளவற்ற நறுமணத்தைப் பரப்புகிறதே...”
“அதிகாலைக் காற்று மணம்கொண்டுதானே மிதந்துவரும். அதனால் இருக்கலாம்.”
“இல்லை. காலடியோசை என்னை எழுப்பியபோது காற்றில் கலந்திருந்த மெல்லிய
மணத்தை நான் உணர்ந்தேன். பின்னர் மயிலையின் மணத்தால் அறையே நிறைந்தது.
அதை நுகர்ந்த எனது மூக்கு அதைவிடச் சிறப்பான ஒரு மணத்தைக் கண்டறியாதா
என்ன?”
இருவரும் உச்சிப்பாறையின் அருகே வந்தனர். வெளிச்சம் மெள்ளப்
பரவிக்கொண்டிருந்தது. பறவைகளின் குரல் கேட்கத் தொடங்கியது. பாரி
சொன்னான், ``தாழை மலரில் பெண் பூ, ஆண் பூ இருக்கின்றன அல்லவா? அவற்றுள்
ஆண் பூவின் அரும்பு மிகவும் மணமூட்டக்கூடியது. காய்ந்த ஆண் பூவின்
இதழ்களை ஆடைகளுக்குள் போட்டுவைத்தால், சிறுபூச்சிகள் ஆடைக்குள் நுழையாது.
அதுமட்டும் அல்ல; நல்ல மணமூட்டி யாகவும் அவை இருக்கும். இவை எல்லாம்
சொல்லத்தான் கேள்வி. இப்போது நீங்கள் சொல்வ தால்தான் இவ்வளவு மணம்
வீசுவது தெரிகிறது. எங்களுக்கு இது பழகிவிட்டதால் தெரியவில்லை” எனச்
சொல்லியபடி, பாறையின் மேலே கபிலரைக் கைதூக்கி ஏற்றினான் பாரி.
கைபிடித்து மேலேறியபடி கபிலர் கேட்டார் ``பெண் பூவைவிட அதிக மணம் வீசும்
ஆண் பூ ஆடையின் மீது இருக்கிறதா... ஆடையை அணிந்திருக்கிறதா?”
பாரி சற்றே வெட்கப்பட்டு அந்தக் கேள்வியைக் கடந்தான். இருள் அகன்று
எவ்வியூரின் மீது வெளிச்சம் பரவிக்கொண்டிருந்தது. கபிலர் உச்சிப்பாறையில்
இருந்து நாற்புறமும் பார்த்தார். எவ்வியூரின் பேரழகு அவரது கண்களைச்
சுழற்றிக்கொண்டிருந்தது. முழுவட்டமும் சுற்றியபோது நகரின் அழகில் தன்னை
மறந்தார். இயற்கையான பாறை அமைப்புகளுக்கு ஏற்ப, மடித்து மடித்துக்
கட்டப்பட்ட வீடுகள். இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கிளைபரப்பி நிற்கும்
பெரும் மரங்கள். கரும்பாறைகளை அரணாகக்கொண்டு கட்டி எழுப்பப்பட்டுள்ள
அரண்மனை.
அரண்மனை இருக்கும் தென்திசையில் மிகத் தொலைவில், மலை நோக்கிச் செல்லும்
சாலையில் தேர் ஒன்று விரைந்துபோவது தெரிந்தது. அதைக் கவனித்த கபிலர்
கைநீட்டியபடி பாரியைப் பார்த்தார். பாரி சொன்னான், ``அந்தப் பக்கம் இரு
குன்றுகளுக்குப் பின்னால்தான் பாழி நகர் இருக்கிறது. அங்குதான்
ஆயுதசாலைகள், பயிற்சிக்கூடங்கள், தொழிலகங்கள் எல்லாம் இருக்கின்றன.
எவ்வியூரைவிட அதிகமான மக்கள் அங்கு வாழ்கின்றனர். விருந்தினர்கள் தங்கும்
இல்லங்கள் அங்குதான் இருக்கின்றன. பாணர் கூட்டம் வந்து தங்கிச் செல்வது
எல்லாம் அந்த இடத்தில்தான்.”
``பாழி நகரில்தான் வேளீர்கள் செல்வங்களை எல்லாம் பாதுகாத்து வைத்துள்ளனர்
என்று கேள்விப் பட்டுள்ளேன். அங்குதான் இருக்கிறதா பாழி நகர்?”
கபிலரின் கேள்விகண்டு புன்னகைத்தான் பாரி. எங்கும் பறவைகளின் ஓசை
கேட்டுக்கொண்டிருந்தது. கிழக்கு திசையைப் பார்த்தபடி நின்றிருந்த பாரி,
மறுபக்கம் திரும்பாமல் கபிலரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்
கொண்டிருந்தான். கபிலரின் கண்கள் சுற்றிச்சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தன.
வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடும்போது, கரும்பாறையின் மீதுள்ள நகரம்
தனது மேனியின் எழிலைக் கூட்டிக் கொண்டிருந்தது. மக்கள், வீடுகளில்
இருந்து வெளியில் வரத் தொடங்கினர். பறவைகளின் கீச்சுக்குரல்கள் காட்டையே
எழுப்பிக் கொண்டிருந்தன. தீபத்தின் உச்சியில் இருந்து அடிபெருத்த
அகல்விளக்கைப் பார்ப்பதைப் போன்று இருந்தது அந்த நகரம். இளங்காற்று
உச்சிப்பாறையைத் தழுவி மேலே ஏறியபடி இருந்தது.
கபிலர், “காணக் கிடைக்காத காட்சி” என்றார்.
கிழக்கு திசையைப் பார்த்து நின்று கொண்டிருந்த பாரி, அவரின் தோள்
தொட்டுத் திருப்பினான். கபிலர் கிழக்குப் பக்கமாகத் திரும்பும்போது பாரி
சொன்னான், “இப்போது நீங்கள் காணப்போவதுதான் காணக் கிடைக்காத காட்சி.”
கபிலர் இன்முகத்தோடு கிழக்கு திசை பார்த்தார். எல்லா திசைகளிலும்
இருக்கும் அதே அழகோடுதான் எவ்வியூரின் கிழக்கு திசையும் இருந்தது. ‘இதில்
கூடுதல் சிறப்பு என்று பாரி சொல்வது எதை?’ என்று கபிலரின் கண்கள்
தேடிக்கொண்டிருந்தன.
கிழக்கு திசையில் ஆதிமலைக்கு நடுவே இருந்த மெல்லியப் பிளவின் வழியே
சூரியனின் செந்நிறக் கதிர் மெள்ளக் கசிந்துகொண்டிருந்தது. பார்க்கும்
கணத்தில் ஒளிபெருகிக் கூரிய வாள்போல் பாய்ந்து வந்தது. கபிலர்
இமைகொட்டாமல் பார்த்தார். எவ்வியூரின் கிழக்குப் பகுதி இருளை இரண்டு
துண்டாக்கியது. `காணக் கிடைக்காத காட்சி’ என்று கபிலரின் வாய்
முணுமுணுத்துக்கொண்டிருக்கும்போ து அந்தக் கூரிய ஒளி வாள் கபிலரின்
மார்பில் இறங்கியது. கபிலரின் நாடிநரம்புகள் எல்லாம் சிலிர்த்தன.
மெய்மறந்து இரு கைகளையும் மேலே உயர்த்தினார். எவ்வியூரின் அடிவாரம் வரை
இரு திசைகளும் அவரது கரங்களின் நிழல் படர்ந்து அசைந்தது. கதிரவனைப்
பார்த்து அவர் கைகளை உயர்த்தி வணங்கினார்.
பெருங்குலவை ஒலி எவ்வியூர் முழுக்க மேலெழுந்தது. நான்கு திசை வாயில்களில்
இருந்தும் பறைகள் முழங்கின. முழவின் ஓசையில் காடு நடுங்கியது. மக்கள்
எல்லோரும் தங்களின் வீடுகளின் மேலேறி குலவையிட்டு அந்த அருங்காட்சியைக்
கண்டு மகிழ்ந்தனர். துல்லியமான இடத்தில் கபிலரை நிறுத்திய பாரி, ஈரடி
கீழிறங்கி நின்று அண்ணாந்து பார்த்தான். `பேரறிவின் தீச்சுடர் இதுதானா?’
நினைக்கும்போதே மெய்சிலிர்த்தது பாரிக்கு.
கணநேரத்துக்குள் பிளவின் மேல்விளிம்பை சூரியன் தொட்டவுடன் அந்த ஒளி வாள்
மறைந்தது. எங்கும் புலர்மஞ்சள் நிரம்பியது. கபிலர் உறைந்துபோய் நின்றார்.
மக்கள் கூட்டம் கூட்டமாகப் பாறையை நோக்கி வரத் தொடங்கினர். குலவைச்சத்தம்
எங்கும் எதிரொலித்தது. பாரி, உச்சிப்பாறையின் மீதேறி கபிலரின் அருகில்
வந்தான்.
“நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, தெற்கு ஓட்டக்காலத்தின் ஆறாம் நாளில்
ஆதிமலையில் உள்ள பெருங்கடவின் நடுவில் இருந்து கதிரவன் வேலெழும்பி
வருவான். நெருப்பை உருக்கி ஊற்றியதைப்போல கண்ணிமைக்கும் நேரத்தில் நீளும்
ஒளி வாள். அரை நாழிகை நேரம் மட்டுமே நீண்டிருக்கும். கதிரவன் ஒளி வாளை
எவ்வியூரின் மேல் இறக்கிய மூன்றாம் நாள் கொற்றவைக் கூத்து தொடங்கும்”
என்று கூறிவிட்டு இறங்கி நடந்தான் பாரி.
திரண்ட மக்கள் கூட்டம் உணர்ச்சிப் பெருக்கோடு குலவையிட்டபடி அவன் பின்னே
சென்றுகொண்டிருந்தது. அவர்கள் அரண்மனைக்குள் நுழையும் வரை
பார்த்துக்கொண்டிருந்தார் கபிலர்.
இயற்கையைப் பற்றிய வியப்பு, பாரியின் சொல்கேட்ட கணத்தில் இயற்கை அறிவைப்
பற்றிய வியப்பாக மாறியது. வானியல் வசப்படுவதுதான் கணிதத்தின் உச்சம்.
கணிதம் வசப்படுதல் அறிவின் உச்சம். நோக்கறிவு கொண்டு விண்மீன்களைக்
கணித்தலும், கதிரவனின் நகர்வை அளத்தலும் மனிதனின் அபாரச் சாதனை. இந்தச்
சாதனைகளைச் சொந்தமாக்கிவைத்துள்ளவர்கள் மூவேந்தர்கள். வானியலையும்
கணிதத்தையும் தலைமுறை, தலைமுறையாகக் கற்று ஆளும் ‘கணியர்கள்’ அவர்களிடமே
இருக்கின்றனர். அதனால்தான் நீரும் நிலமும் வானும் வேந்தர்களுக்கு
வசப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தப் பேரறிவு, சின்னஞ்சிறு வேளீர்
கூட்டத்துக்கு எப்படி வசப்பட்டது?
ஒரு வாரத்துக்கு முன்பே கொற்றவைக் கூத்து தொடங்கப்போவது பற்றி வேட்டூர்
பழையன் சொன்னது கபிலருக்கு நினைவு வந்தது. ‘நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை
அரை நாழிகை நேரம் மட்டுமே நிகழும் ஒளி வாளின் கோலக்காட்சியை நாளும்
நேரமும் தவறாமல், எப்படி இவர்கள் கணக்கிட்டனர்?’ அடுத்தடுத்து எழுந்த
கேள்விகள் கபிலரைத் திக்குமுக்காடச் செய்தன.
கதிரவன் தகதகத்து மேலேறிக்கொண்டிருந்தான். திகைப்பில் இருந்து மீளா
கபிலர் சிறிது நேரத்துக்குப் பின்னர் பாறையைவிட்டு கீழே இறங்கினார். அவரை
அழைத்துச்செல்ல வீரர்கள் நின்றிருந்தனர். ஊரின் தென்திசைக்குப்
போய்விட்டு அரண்மனைக்கு வருவதாகச் சொல்லி அவர்களை அனுப்பினார்.
அவரைச் சந்திக்கக் காத்திருந்த மக்களுடன் ஆங்காங்கே நின்று பேசியபடி கீழே
இறங்கிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் அவருடன் பெரும் மகிழ்வைப்
பகிர்ந்து கொண்டனர். தென்திசையின் அடிவாரம் வந்துசேர்ந்தவர், அரண்மனையை
நோக்கி நடக்கத் தொடங்கினார்.
பாண்டிய நாட்டுப் பெருங்கணியன் திசைவேழரின் நினைவு வந்தது. நீளும்
நிழல்கொண்டு உலகை அளக்கும் அவரை கபிலர் தன் ஆசான்களில் ஒருவராக
எண்ணுவார். கண்சிமிட்டாத விண்மீனைப்போல வானத்தைப் பார்த்துக்கொண்டே
இருக்கும் வானியலாளர்; தலைமுறை தலைமுறையாகச் சேகரித்த அறிவுச்சேகரத்தின்
உறைவிடம். கபிலர், அந்த வான் உழவனின் தாள்பணிந்து பாடிய கவிதைகள் ஏராளம்.
அவர்தம் முன்னோர்கள் கண்டறிந்து பெயர்சூட்டிய வெள்ளியைக் கண்டுதான் இன்று
நாளும் நேரமும் கணிக்கப்படுகின்றன.
வானம், மிதந்துகொண்டிருக்கும் ஒரு மாயத்தட்டு; கற்பனைக்கு எட்டாத
பேருலகு. மனிதன் தனது அறிவால் அதைக் கணிப்பது என்பது நம்ப முடியாத
அதிசயம். தரத்தரவென தனது கையை இழுத்துக்கொண்டுபோய் இயற்கையின்
கூர்முனையின் எதிரில் துல்லியமாக நிறுத்திவிட்டான் பாரி.
‘பெருங்கணியன் திசைவேழர் இந்த நாளில் தன்னோடு இருந்திருந்தால் எப்படி
இருந்திருக்கும்? பாரியைக் கட்டி அணைத்திருப்பார். நாட்டுத் தலைவர்கள்
யாருக்கும் இல்லாத நாள் அறிவும் கோள் அறிவும் பாரியிடம் இருப்பதைக் கண்டு
திகைத்திருப்பார்.
திசைகள் மட்டுமே திகைப்பை ஏற்படுத்தக்கூடியவை. திக்குத்தெரியாத திகைப்பை
நிலமும் கடலும் வானும் ஒவ்வொரு கணத்திலும் உருவாக்கும். அந்தத் திகைப்பை
வெல்லத் தெரிந்தவர்களே திசையாளும் கணியர்கள். எனவே, அவர்கள் மனிதர்களைக்
கண்டு ஒருபோதும் திகைக்க மாட்டார்கள். ஆனால், இன்று பாரியின் செய்கையை
பெருங்கணியன் கண்டிருந்தால், திகைக்காமல் இருந்திருக்க மாட்டான்’ என
எண்ணியபடி இடப்புற வீதியின் வழியே திரும்பி நடந்தார் கபிலர்.
எதிர் வந்த பெண் ஒருத்தி கை நீட்டி அவரின் பாதையை மறித்தாள். விலகிப்போக
முயல்கிறாளோ என நினைத்த கபிலர் வலப்புறம் நகர்ந்தபோது, அவள் இன்னொரு
கையையும் நீட்டி வழியை அடைத்தாள்.
பெருங்கணியன் இரு பக்கங்களும் கைகளை விரித்து நீளும் நிழலின் நகர்வுகளைத்
தனக்குச் சொல்லிக்கொடுத்தது நினைவுக்கு வந்தது. உள்மனதில் கணியனின்
உருவம் படிந்திருக்க, அந்தக் கையை விலக்கி நடக்க முயன்றார். ஆனால்,
அந்தப் பெண்ணின் கைகள் அவருக்கு இடம் தரவில்லை. மறித்த கைகள் தட்டி
நின்றன.
அப்போதுதான் கணியனின் நினைவில் இருந்து மீண்டு அந்தப் பெண்ணை உற்றுப்
பார்த்தார் கபிலர். நேர்கொண்டு பார்த்த அந்த இளம்பெண்ணின் கண்கள்
கோபத்தைக் கக்கின.
“ஏனம்மா வழி மறிக்கிறாய்?”
கபிலரின் கண்களையே கூர்ந்து பார்த்தாள்.
``பாரியிடம் நட்புக்கொள்ளும் தகுதியுண்டோ உம்மிடம்?”
கபிலர் அதிர்ந்துபோனார். நெஞ்சில் கூர்மைகொண்டு இறங்கியது சொல்.
``ஏனம்மா இப்படிக் கேட்கிறாய்... என்ன தவறு இழைத்தேன் நான்?”
மெளனத்தின் வழியே கபிலரின் அதிர்ச்சியை அதிகப்படுத்தினாள். எந்த
வகையிலும் அவளின் கோபத்துக்கான காரணத்தை கபிலரால் தொடர்புபடுத்திக்கொள்ள
முடியவில்லை.
``எவ்வளவு பதற்றமான சூழ்நிலையிலும் கார்காலத்து இரவில், இங்கு இருந்து
பாழி நகருக்குத் தேர் ஏறிச் செல்ல மாட்டான் பாரி. தெரியுமா உமக்கு?”
கபிலர் பதில் எதுவும் சொல்லாமல் அவளின் கண்களையே பார்த்தார். அவள் தொடர்ந்தாள்.
“கார்காலத்து இரவுகளில் மான்கள் இணை சேரும். தனது தேரின் ஒலி அவற்றின்
இணக்கத்தைக் குலைத்துவிடும் என்பதால், தேரில் செல்ல மாட்டான். ஆனால்,
உமது செயல் அதற்கு நேர் எதிராக இருக்கிறது.”
இளம்பெண் உதிர்த்த சுடுசொல் கண்டு அஞ்சினார் கபிலர்.
“யான் செய்த பிழை என்ன மகளே?”
அவளின் கண்கள் குளமாகின.
``அழகிய பூக்காடாக இருந்த எம் காதலில் புயல்காற்று வீசச் செய்துவிட்டீர்.”
``கலங்கி நிற்கும் உனது கண்கள் என்னைப் பதறவைக்கின்றன. எனக்கு விளங்கும்படி சொல்.”
“உங்களால்தான் அவன் புகழின் உச்சியை அடைந்திருக்கிறான். எனது கைகள்
தழுவிக்கிடந்த அவனது தோளின் மீது இப்போது பாரியின் கை கிடக்கிறது.
புகழால் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது எனது காதல்.”
“நீ யாரைச் சொல்கிறாய்... உன் காதலன் யார்?”
“நீலன்.”
கபிலர் பெருமூச்சு விட்டார். சின்னதாக ஒரு சிரிப்பு உதட்டின் ஓரம்
பரவியது. அவளோ வேகம் குறையாமல் தொடர்ந்தாள்.
“சிறு கல்லைத் தாண்டுவதைப்போல இருபெரும் குன்றுகளைத் தாண்டி, நினைத்தபோது
எல்லாம் என்னைப் பார்க்க வந்தவன், அடுத்த தெருவில் நான் இருப்பது
தெரிந்தும் இன்னும் என்னை வந்து பார்க்கவில்லை. எந்தப் பெண்ணைப்
பார்த்தாலும் அவனைப் பற்றித்தான் பேசுகிறாள். என் நீலனின் பெயர்கொண்டே
என் நெஞ்சைச் சுடுகிறார்கள்.”
“உன் காதலன் பற்றி பெருமை பேசினால் நீ மகிழத்தானே வேண்டும். ஏன் கவலைகொள்கிறாய்?”
உடைந்து அழுதாள் அவள்.
“இந்தக் கேள்வியை நானே பலமுறை கேட்டுவிட்டேன். என்னால் விடை காண
முடியவில்லை. அவனது உறுதியை நன்கு அறிந்தவள் நான். ஆனாலும் கைப்பற்ற
அவனது கண்பார்வை கிடைக்காமல் தவிக்கிறேன்.”
குறுக்கிட்ட கைகளை மடக்கி பக்கத்தில் இருந்த வீட்டின் திண்ணையில்
உட்கார்ந்தாள். நெஞ்சொடிந்து விழுவதைப்போல்தான் அது இருந்தது.
“எங்களின் குன்று எவ்வளவு அழகானது தெரியுமா? யார் கண்பட்டதோ தெரியவில்லை,
பொழுது எல்லாம் எங்கள் காதல் செழித்து வளர்ந்த அந்த நிலத்தின்
அடிவாரத்தில், ஒரு தேர் வந்து நின்றது.”
கபிலர், சற்றே சுதாரித்துப் பார்த்தார்.
“எனது மடி மீது தலைசாய்த்து இருந்தான். நான்தான், `யாரோ ஒருவர் தேரில்
இருந்து இறங்கி வேட்டுவன் பாறையில் கால் பதிக்கிறார்’ என்றேன். எனது
காதலின் அமைதியை எனது சொல்கொண்டே கெடுத்துவிட்டேன்”
சொல்லிக்கொண்டிருக்கும்போது கண்ணீர் வழிந்தோடியது.
துடைத்தபடி தொடர்ந்தாள்... ``குயில்கள் கூவும் அந்த மாமர நிழலில்,
இதழ்விட்டு நழுவிப்போன அவனது மறுமுத்தத்துக்காக அன்று முழுவதும்
காத்திருந்தேன். வரவில்லை. மறுநாள் அவன் ஊருக்குப் போனேன்.
`வந்திருப்பவருக்குக் காலில் அடிபட்டுள்ளது. நீ எவ்வியூருக்குப் போ.
இரண்டு நாளில் நான் அவரை அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறேன். கொற்றவை விழா
முடியும் வரை நாம் அங்கு மகிழ்ந்திருப்போம்’ ” என்று சொல்லி அனுப்பினான்.
கபிலர், தனது கதையைத் தானே கேட்டுக்கொண்டிருந்தார். ‘எனது காலடிக்குப்
பின்னால் ஒரு காதல் நடந்து வந்திருக்கிறது. இவ்வளவு அழகிய இளம்பெண்ணின்
இதழ்முத்தம் விலக்கிவந்தவனா, தசை பிறண்ட பின்னும் என்னைத்
தாங்கிவந்தான்?’ - நீலன் மீதான மரியாதை இன்னும் கூடியது.
அவள் தொடர்ந்தாள்... “எவ்வியூருக்கு வந்த பின்பாவது நான் வாய்
பொத்தியிருக்க வேண்டாமா? உனது காதலன் வருவானா எனக் கேட்ட எனது தோழியிடம்,
‘கபிலர் என்று ஒருவர் கால் ஒடிந்துகிடக்கிறார். அவரை அழைத்துக்கொண்டு வர
வேண்டுமாம். இரண்டு நாட்கள் ஆகும் என்று சொல்லி அனுப்பியுள்ளான்
என்றேன்.”
கபிலருக்கு அவளை, ‘மகளே...’ என அணைத்துப் பிடித்துக் கதைகேட்க
வேண்டும்போல் இருந்தது.
“எல்லாம் எனது போதாத காலம். எதைச் சொன்னாலும் அது பிரச்னையாக மாறித்தான்
போகும். நான் சொன்ன சொல் பாரியின் காதுக்கு எட்ட, உடனடியாக என்னை
அரண்மனைக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். நான் கபிலருக்கு கால்
ஒடிந்ததால், எனது காதலின் நாள் ஒடிந்த கதையைச் சொன்னேன். அவ்வளவுதான்
இரவோடு இரவாக பாரியே புறப்பட்டு புலிவால் குகைக்குப் போய்விட்டான்.”
கபிலருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. தன்னை ஒருகை பிடித்து நீலன் அழைத்து
வந்ததைப்போலவே, மறுகை பிடித்து இவளும் அழைத்துவந்திருக்கிறாளே என
மகிழ்ந்து கிறங்கினார்.
“போதாத காலத்தைப் புலம்பித்தான் தீர்க்க வேண்டும் என்பார்கள். கபிலரை,
பாரி தனது தோளில் ஏற்ற, என்னைத் தனது நெஞ்சில் ஏற்றிவைத்திருந்தவன் எங்கு
சென்றானோ தெரியவில்லை.”
கண்ணீரைத் துடைத்தபடி சொன்னாள்... “ஊரே பேசுகிறது, நேற்று இரவு அவனுக்கு
அறுபதாங்கோழிக்கறி விருந்து படைக்கப் பட்டதாம். உள்ளங்கையில் கஞ்சி
காய்ச்சி அவனது உதடு விலக்கி ஊட்டிவிட்ட எனது அன்புக்கு இணையாகுமா இந்த
உலகு? சொல்லுங்கள் அந்தக் கொடியவனை என்ன செய்யலாம்?”
கணநேரமும் தாமதிக்காமல் பதில் சொன்னார் கபிலர், “அது தெரியாமல்தான்
நானும் விழித்துக்கொண்டிருக்கிறேன். நான் தங்கியுள்ள இடத்தில்
என்னோடுதான் அவனும் தங்கியுள்ளான். நேரம் கிடைக்கும்போது எல்லாம்,
“மயிலா… மயிலா…” என்று எவளோ ஒருத்தியின் பெயரைச் சொல்லிப்
புலம்பிக்கொண்டே இருக்கிறான். அந்தப் பெண்ணுக்கு நள்ளிரவு பூக்கும் மயிலை
மலர் மிகவும் பிடிக்குமாம். முழுநிலா நாளில் மயிலம் பூச்சூடி, அவள் மீது
காதல்கொண்டானாம். இன்று எப்படியாவது அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக
எனக்குத் தெரியாமல், நான் கேட்டதாக அரண்மனையில் சொல்லி, மயிலை மலரைக்
கொண்டுவந்து வைத்திருந்தான். இன்று காலை அவளுக்குச் சூட்டப்போயிருப்பான்
என்று நினைக்கிறேன்.”
வெட்கமும் ஆசையும் பீறிட்டு மேலெழும்பியது. ஆடைகொண்டு கண்ணீர்
துடைத்தாள். அதையும் மீறிச் சிந்தியது சிரிப்பு. மகிழ்வை மறைக்க
மெனக்கிட்டாள். முடியவில்லை. கண்ணீர் வெடித்துக் காதலாக மலரும் அந்த
அதிசயத்தை அருகே இருந்து ரசித்தபடி அவளின் கரம்பிடித்தார் கபிலர்.
“விடுமய்யா கையை, இன்னொரு நாளும் உம்மால் வீணாகிவிடக் கூடாது” எனச்
சொல்லியபடி, பிடித்த கையை உதறிவிட்டு ஓடினாள் மயிலா!
- பறம்பின் குரல் ஒலிக்கும்...
http://www.vikatan.com/ anandavikatan

முணுமுணுத்துக்கொண்டிருக்கும்போ

http://www.vikatan.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக