திங்கள், 19 பிப்ரவரி, 2018

வேள்பாரி 7 மூவேந்தர் பறம்பு எல்லை சூழ்தல் உளவு குட்டநாடு

aathi tamil aathi1956@gmail.com

31/10/17
பெறுநர்: எனக்கு
நவீனன்  7,700
  Posted December 2, 2016
வீரயுக நாயகன் வேள் பாரி - 7
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சு.வெங்கடேசன் - ஓவியங்கள்: ம.செ.
இருட்டும்போது, நடுமலையின் மேற்குத் திசை அடிவாரத்தில் இருந்து புலிவால்
குகைக்கு வந்து சேர்ந்தார்கள். இவர்கள் வரும் முன்னரே அந்தக் குகையில்
பலர் இருந்தனர். எல்லோரும் கொற்றவைக் கூத்து பார்க்க, பறம்பு நாட்டின்
வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள். புலிவால் குகை, மிக நீளமானது.
எத்தனை பேர் வேண்டுமானாலும் படுத்துறங்கிப் போகலாம். அதன் கீழ் மூலையில்
கொடுங்கோடையிலும் வற்றாத நீரூற்று உண்டு. முன்னால் வந்தவர்கள்,
பந்தத்தைப் பொறுத்திவைத்திருந்தனர். ஏந்திவந்த ஆயுதங்கள் ஓர் ஓரத்தில்
சாய்த்துவைக்கப்பட்டிருந்தன. வேட்டூர் பழையனைப் பார்த்ததும்
எல்லோருக்கும் பெருமகிழ்ச்சி. ஆசையோடு வந்து பேசினர். வயோதிகத்திலும்
தளர்ந்துவிடாத பழையனைப் பற்றி பேச எவ்வளவோ இருக்கின்றன!
ஆணும் பெண்ணுமாக, பெருங்கூட்டம் கூடியிருந்தது. தாங்கள் கொண்டுவந்த
உணவுகளைப் பறிமாறிக்கொண்டனர். அவித்த பன்றிக்கறியை உப்பு போட்டுப்
பிசைந்து, பெருங்கூடையில் தூக்கி வந்திருந்தது ஒரு கூட்டம். மூன்று
மலைகளை ஏறி இறங்கியவர்களின் பசியை அதுதான் தாங்கும். விரல்களுக்கு
இடையில் பன்றியின் ஊண் ஒழுகக் கடித்து இழுத்தனர்.
மிகவும் களைத்துப்போயிருந்த கபிலருக்கு, பனையோலை நிறையத் துண்டங்களை
எடுத்துவந்து நீலன் கொடுத்தான். உப்புக்கறியின் சுவை மிகவும்
பிடித்திருந்தது. விரும்பிச் சாப்பிட்டார் கபிலர். இன்னும் சாப்பிட
வேண்டும்போல் இருந்தது. அரை இருட்டில் நீலனை அடையாளம் காண முடியவில்லை.
மற்றவர்களுக்கு எடுத்துக் கொடுத்துக்கொண்டிருப்பான். சத்தம்போட்டு அவனை
அழைக்கத் தயங்கியபடி இருந்தார் கபிலர். பச்சிளங்குழந்தை ஒன்று, பசித்து
அழுதது. அப்போதுதான் கை நிறையக் கறித்துண்டங்களை வாங்கிய அந்தத் தாய்,
அப்படியே பக்கத்தில் இருந்த கபிலரின் கையில் அவற்றைக் கொடுத்துவிட்டு,
சேலைத்துணியில் கையைத் துடைத்தபடியே ஓடிப்போய், மூலையில் தோல்விரித்துப்
படுக்கப்போட்டிருந்த குழந்தையைத் தூக்கி பால் கொடுத்தாள்.
கபிலர், கையில் கறித்துண்டங்களோடு உட்கார்ந்திருந்தார். அவள் மறுமுலை
தாங்கி குழந்தையை அணைத்தாள். அது வயிறு நிறைந்ததும் உதடு பிதுக்கி
மறுத்தது. அதை மீண்டும் படுக்கப்போட்டு, அழகிய சிரிப்போடு கன்னத்தைத்
தொட்டுக் கொஞ்சிவிட்டு எழுந்தாள். இந்தக் கூட்டத்தில் யாரிடம்
கறித்துண்டங்களைக் கொடுத்தோம் என்பது அவளுக்கு நினைவில் இல்லை. எல்லோரும்
கறியைக் கடித்து இழுத்துக்கொண்டிருந்தனர். பனங்கூடையின் அருகில் போனாள்.
கறி தீர்ந்துவிட்டது. அவள் மிகவும் சோர்ந்துபோனாள். அந்த அரை இருட்டில்,
அவளின் தவிப்பு யார் கண்ணிலும்படாமல் இருந்தது. சற்றே கலங்கியபடி அவள்
திரும்பும்போது, “மகளே... உனக்கான உணவு எனது கையில் இருக்கிறது” என்றது
கபிலரின் குரல்.
அவள், குரல் கேட்ட இடம் நோக்கி வந்தாள். கை தாழ்த்தாமல் அப்படியே
பிடித்திருந்தார் கபிலர். வாங்கிய அவள், கனிந்த சிரிப்பில் நன்றி
சொல்லியபடி கறித்துண்டங்களைக் கடித்தாள்.
“கடும் பசி. சுவை வேறு இழுத்தது. கையில் இருப்பதில் ஒரு துண்டையாவது
சாப்பிடலாமா என, பலமுறை தோன்றியது. ஆனால் கைநிறையக் கறித்துண்டங்களை
வாங்கிய நீ, குழந்தையின் குரல் கேட்ட கணத்தில் மொத்தத்தையும் உதறிவிட்டு
ஓடினாயே! தாய்மைக்கு முன்பு ஆண்களாகிய நாங்கள் அற்பப்புழுவம்மா” என்றார்
கபிலர்.
“பெரிய சொல் சொல்கிறீர்கள். இருட்டில் உங்களின் முகம் தெரியவில்லை.
ஆனாலும் தந்தையை முகத்தைப் பார்த்துதான் அடையாளம் காண வேண்டுமா என்ன?” -
சாப்பிட்டுக்கொண்டே பேசினாள்.
ஈச்சமதுவுக்கு வறுத்த கறிதான் சரியான ஈடு. ஆனாலும் வெப்பத்தை
அடைகாத்திருக்கும் கற்குகைக்குள் உப்புக்கறித்துண்டுகள் எல்லாவற்றையும்
விஞ்சும். அலுப்புத்தீர எடுத்து முடித்தது அந்தக் கூட்டம். வலி பொறுக்க
இன்னொரு குவளையும் சேர்த்துக் கொடுத்தான் நீலன். குடித்த கபிலர், ஓர்
ஓரமாகப் படுத்துச் சமாளிப்போம் என முயற்சி செய்தார்.
எத்தனை ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தாலும், ஒவ்வொரு நாளும் புதுப்புது
அனுபவத்தைத் தரவல்லது காடு. அன்றைய அனுபவத்தின் கதை காக்காவிரிச்சியைப்
பற்றியதாக இருந்தது. இளம்வயது, எந்த விலங்கையும் வீழ்த்தும் துணிவோடு
வேல்கம்பைத் தூக்கி நிற்கும். வயோதிகம், எவ்வளவு கொடும்விலங்கிடம்
இருந்தும், எளிதில் தப்பிக்கும் வித்தையைக் கக்கத்தில் வைத்துக்
காத்திருக்கும். பழையனின் கம்புக்கூட்டுக்குள், அவன் மரணத்தை வென்ற பல
கதைகள் இடுக்கிக் கிடந்தன. அதில் இன்னொன்றாக இன்றைய கதையும்
சேர்ந்துகொண்டது.
கபிலர், தூக்கமின்றி எழுந்து உட்கார்ந்தார். தாகம் எடுத்தது. `சுனை
நோக்கிப் போகலாம்!' என நினைத்து எழுந்தார். அதைப் பார்த்த நீலன், உடன்
வந்து அவரை அழைத்துச் சென்றான்.
“மடிப்புப் பாறைகள், கால்களைக் கவனமாகத் தூக்கிவையுங்கள்” என்றான். அவர்
பதில் ஏதும் சொல்லாமல் தலையாட்டியபடி வலது கையை மெள்ள உயர்த்தி, நீலனின்
தோள்பட்டையைப் பிடித்தார். அவரது கையின் உள்நடுக்கத்தை நீலனால் உணர
முடிந்தது. பந்த வெளிச்சத்தைவிட்டு விலகி, நீரின் சத்தத்தை நோக்கி
அவர்கள் நடந்தனர்.
“நான் உங்களை எதிர்பாராமல் கீழே தள்ளியதால் உடல் முழுவதும் காயம்
ஏற்பட்டுவிட்டது. என்னை மன்னியுங்கள்” என்றான் நீலன்.
``எனது உயிரைக் காப்பாற்றிய உனக்கு, நான் அல்லவா நன்றி சொல்ல வேண்டும்”
என்றார் கபிலர்.
“உங்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட்டிருக்காது!” என்று நீலன்
சொல்லிக் கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட கபிலர், “முதலில் அது
என்னைத்தான் நேர்கொண்டு பார்த்தது.”
நீலன் அதிர்ச்சியடைந்தான்.
“அதை நீங்கள் பார்த்தீர்களா?”
“ஆம், கருவேங்கை போல… மரக்கொப்புகளில் தாவி உட்காரும் ஏதோ ஒரு விலங்கு
என்றுதான் நினைத்தேன். இறக்கைகளை விரித்த பிறகுதான் அது பறவை எனப்
புரிந்தது. நீ என்னைக் கீழே தள்ளியபோதுதான், நம்மைக் கடந்துபோன பருந்தை
அது அடித்தது. பழையன் முன்னால் இருந்ததைத்தான் பார்த்தார். வந்தது ஒன்று
அல்ல, இரண்டு.”
நீலன் நடுக்கமுற்றான்.
“எங்களின் கண்களுக்கு மட்டும் எப்படி அது தெரியாமல்போனது?”
“அதைப் பற்றி நீங்கள் அறிந்திருந்ததால், அதனிடம் இருந்து தப்பிக்கவே
முதலில் முயன்றீர்கள். நீங்கள் பதுங்க இடம் தேடிப் பாய்ந்தபோது என்ன
நடக்கிறது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்த நான், அண்ணாந்து பார்த்து
அதைக் கண்டறிந்தேன். இவை எல்லாம் அறியாமை ஏற்படுத்திக்கொடுக்கும்
வாய்ப்புகள்; அறிந்தவர்களுக்குக் கிடைக்காது.”
நீலனுக்கு அவர் சொல்லவருவது புரியவில்லை. விளக்கமாகக் கேட்பதற்குள்
நீரூற்றை அடைந்தனர். கபிலர் குனிந்து இரு கைகளாலும் நீரை அள்ளினார்.
நீரின் குளிர்ச்சி, உடல் முழுவதும் பரவியது. நீலன், முகத்தை நீரால்
அடித்து மயக்கம் கலைத்தான்.
“ஆதிமலையின் வடமேற்கு மூலை, மிகவும் செங்குத்தான பாறைகளும் அடர்ந்த
மரங்களும் நிறைந்த பகுதி. அதை `ஆளிக்காடு' என்று நாங்கள் சொல்வோம். அங்கே
இரு கடவுகள் உண்டு. ஆதிகால மாந்தர் அவற்றைப் பயன்படுத்தினராம். அந்தக்
குத்துப்பாறைகளுக்கு இடையில்தான் காக்காவிரிச்சிகள் தங்குவதாகச்
சொல்வார்கள். அந்தத் திசையில் மலையைவிட்டு மிகத் தள்ளி குட்டநாட்டு எல்லை
தொடங்குகிறது” என்றான் நீலன்.
“காக்காவிரிச்சி பற்றி நீண்டகாலமாகவே மலைமக்கள் அறிவார்களா?” என்று
கேட்டார் கபிலர்.
“ஆதிகாலத்தில் இருந்தே அதைப் பற்றிய கதைகள் உண்டு. ஆனால், அதைப்
பார்த்தவர்கள் மிகச் சிலரே. இப்போது பறம்புநாட்டில் உயிரோடு
இருப்பவர்களில் அதைப் பார்த்தவர்கள் பத்துபேர்தான் இருக்கும்”
“இப்படி ஒரு பறவையைப் பற்றி சமவெளியில் வாழும் மக்களுக்கு எதுவும்
தெரியவில்லையே. நாடு எல்லாம் சுற்றும் எனக்கே இன்றுதான் இப்படி ஒரு பறவை
இருப்பது தெரியும்.”
“காட்டில் நமக்குத் தெரியாதவை எத்தனையோ உண்டு. நாம் ஆச்சர்யப்பட
ஆரம்பித்தால், அதற்கு எல்லையே கிடையாது.”
பேசியபடியே குகைக்குள் நுழைந்தனர். சிறிது நேரத்தில் கபிலர்
படுக்கப்போனார். உடல் எங்கும் வலி திரண்டிருந்தது. எந்தப் பக்கம்
திரும்பிப் படுத்தாலும் வலித்தது. வேறு வழியின்றி சமாளித்துக்கொண்டு
படுத்தார்.
வேட்டூர் கூட்டத்தோடு வந்திருக்கும் புதிய மனிதரைப் பற்றி நள்ளிரவுக்குப்
பின் பேச்சுத் தொடங்கியது.
“எழுத்து கற்ற புலவர் என்று சொன்னார். பாரியைப் பார்க்கவேண்டுமாம்.
அழைத்து வருகிறோம்” என்றார் பழையன்.
அப்போதுதான் ஆழ்ந்த உறக்கத்துக்குப்போன கபிலருக்கு, தன்னைப் பற்றி
பேசுவது காதில் அரைகுறையாகக் கேட்டது. தொலைவில் படுத்துக்கிடந்த
இன்னொருவர் கேட்ட கேள்வி காதில் சரியாக விழவில்லை. அதற்கு பழையன் பதில்
சொன்னார் “ஒற்றனுக்கு உரிய திறன் எதுவும் அவரிடம் இல்லை.”
கபிலருக்கு கேள்வி விளங்கியது.
“அப்படி நம்பவைப்பதுதானே சிறந்த ஒற்றனின் தகுதி” என்றது இன்னொரு குரல்.
பழையனின் பேச்சை மடக்கிப் பேசுவது யார் என, குரல் வந்த திசையை எல்லோரும்
பார்த்தனர். இருட்டுக்குள் இருந்த அந்த மனிதனை மற்றவர்கள் பார்த்து
அறியும் முன் குரல் கேட்டே பழையன் கேட்டார்...
“வந்திருப்பது கூழையனா?”
“கிழவா... கண்ணும் காதும் அப்படியே இருக்கடா உனக்கு” - அருகில் வந்து
பழையனைக் கட்டி அணைத்தான் பறம்புநாட்டு தென்பகுதி எல்லைக்காவலன் கூழையன்.
உயரத்தில் மிகக் குள்ளனாக இருந்தாலும், வீரத்திலும் பலத்திலும் யாராலும்
விஞ்ச முடியாதவன் என பெயர் எடுத்தவன்.
படுத்துறங்கும் கபிலரைவிட்டு இருவரும் சற்று தூரம் நகர்ந்தனர்.
“காலம் மாறிவிட்டது கிழவா. எண்ணற்றக் குலங்களை அழித்து
வலுக்கொண்டிருக்கின்றனர் வேந்தர் மூவரும். எல்லோரின் கண்களுக்கும்
உறுத்தலாக இருப்பது பாரிதான். பறம்பின் செல்வத்தைச் சூறையாட பாரியே தடை
எனக் கருதுகின்றனர். மூவரும் தனித்தனியாக எத்தனையோ திட்டங்களைத்
தீட்டுகின்றனர். ஒற்றர் படை இல்லாத நம் காதுகளுக்கே இவ்வளவு செய்திகள்
வந்து சேர்கின்றன. அப்படியென்றால், எவ்வளவு திட்டங்கள் தீட்டப்படுகின்றன
என்பதை எண்ணிப்பார்.”
“ஆகட்டும்... அவர்கள் என்ன திட்டம் தீட்டினாலும் நம்மை ஒன்றும் செய்ய
முடியாது” - கிழவனின் நம்பிக்கையின் மீது அச்சத்தை ஏற்றும் வல்லமை,
கூழையனுக்கு இல்லை. ஆனாலும், காலமாற்றத்தை பழையனுக்கு உணர்த்த வேண்டும்
என்று விரும்பினான்.
``உங்களின் காலம் அல்ல இது. சேரனின் மிளகைப் பின் தள்ளி, வணிகத்தில்
முன்னேறிக் கொண்டிருக்கின்றன கொற்கை முத்துக்கள். யவன வணிகத்தில் தனக்கு
இருக்கும் முதல் இடத்தைத் தக்கவைக்க உதியஞ்சேரல் எதையும் செய்வான்.
மிளகுச்செடி தழைத்துச் செழிக்கும் எண்ணற்றக் குன்றுகள் நம்மிடம் உண்டு.
அதுமட்டும் அல்ல, ஏற்கெனவே பறம்பு நாட்டிடம் அடைந்த தோல்விக்குப்
பழிவாங்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறான். இதுபற்றி பாரியிடம்
பேசிவிட்டுத்தான் திரும்புகிறேன்.”
“என்ன சொல்கிறாய், நீ கொற்றவைக் கூத்தில் பங்கெடுக்கவில்லையா?”
“இல்லை கிழவா. எல்லைக்குத் திரும்பியாக வேண்டும்.”
“கொற்றவைக் கூத்தில் பங்கெடுக்காமல் திரும்பும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதா?”
“நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆனால், உண்மை அதுதான்.”
கிழவன் குறுகுறுவென கூழையனையே பார்த்தான்.
``எதை வைத்துச் சொல்கிறாய்?”
“எல்லைப்புற ஊர்களில் புதிய மனிதர்கள் நடமாடுகின்றனர். நாம் அறியாத
வேட்டை நாய்கள் காடுகளுக்குள் அலைகின்றன. பள்ளத்தூருக்கு வரும் உப்பு
வணிகர் முன்புபோல் உடனுக்குடன் புறப்படுவது இல்லை. தேவைக்கு அதிகமாகத்
தங்கிவிட்டுப் போகின்றனர். பறம்பு நாட்டுக்கு வந்த எந்த ஒரு பாணர்
குழுவும் கடந்த ஆண்டில் ஒருமுறைகூட, வரும் வழியில் உள்ள முல்லை நிலக்
காடுகளில் கொள்ளையர்களிடம் அகப்படவில்லை. இவை எல்லாம் நமது ஐயத்தை
வலுப்படுத்தவே செய்கின்றன.”
“கொள்ளையரிடம் சிக்காமல் இருப்பதற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?”
“காடுகளில் வேந்தர்களின் படைகள் நிலைகொண்டுள்ளன எனப் பொருள். படைகள்
இருக்கும் காடுகளில் கொள்ளையர் இருக்க மாட்டார் அல்லவா! நம்மை, பலரும்
நெருங்கியுள்ளனர். வழக்கத்துக்கு அதிகமாக இந்த ஆண்டு அதிக விருந்தினர்
வந்துள்ளனர். போருக்கு முன்னர் விருந்தினரின் எண்ணிக்கை பெருகும் எனக்
கேள்விப்பட்டது இல்லையா?”
“அதற்காக, விருந்தினரை எல்லாம் சந்தேகப்பட முடியுமா?”
“சந்தேகப்பட முடியாது. ஆனால், கண்டறிய முடியும். அதற்கான எந்த
முயற்சியும் செய்யாமல்தான் நீங்கள் இவரை அழைத்துக்கொண்டு போகிறீர்கள்.”
“என்ன செய்திருக்க வேண்டும்?”
“பாணருக்குத்தான் வறுமை காரணமாக பரிசல் பெறவேண்டிய தேவை இருக்கிறது.
புலவனுக்கு இங்கு என்ன வேலை? எழுத்து கற்றவனுக்கு உதவத்தான் மூவேந்தரும்
போட்டிபோடுகின்றனரே! அவரிடம் கிடைக்காத பொன்னா... பொருளா? அப்படியிருக்க,
இவ்வளவு கடினமான ஒரு மலைப்பயணத்தைச் செய்யவேண்டிய தேவை என்ன? இவை
எல்லாவற்றையும் பற்றிகூட நீ அவரிடம் பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால்,
தனித்த தேரில் வந்து இறங்கி காட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.
இறக்கிவிட்டுப் போனது யாருடைய தேர்? தேரில் வந்து இறங்கும் வளம்கொண்டவன்,
காட்டின் கடுமையை அனுபவிப்பது எதனால்?”
பழையனின் கண்கள் நீலனைத் தேடின. அவன் கூழையனுக்குப் பின்னால் நின்றிருந்தான்.
“ஆகட்டும்... நாளை காலையில் அவரிடம் பேச்சுக்கொடுத்துப் பார்க்கிறேன்”
என்றார் பழையன்.
கூழையனின் முகத்தில் சிரிப்புப் படர்ந்தது.
“ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டார் பழையன்.
“நம்பிய பிறகு ஒருவனைச் சந்தேகப்படுவது எளிது அல்ல. அதுவும் உன்னால்
உறுதியாக முடியாது. நானே காலையில் அவருடன் பேசுகிறேன். உங்களோடு
அனுப்பிவைப்பதா, என்னோடு அழைத்துச் செல்வதா என்பதை அவர் அளிக்கும்
பதில்கள் முடிவுசெய்யட்டும்” என்றான் கூழையன்.
பழையனும் நீலனும் அதன் பிறகு பேசிக்கொள்ளவில்லை. நீலன், திசைக்காவல்
வீரன்; கூழையனின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டவன். நிச்சயமாக அவனுக்கு
அதிகமான வசவு கிடைத்திருக்கும் என்பது பழையனுக்குத் தெரியும். வீரர்களின்
கட்டளை ஒழுங்குகளில் பழையனுக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை. ஒரு மனிதனின்
முகத்தையும் சொல்லையும் பார்த்துக் கணிக்க முடியாதது எதுவும் இல்லை என்று
நம்புகிறவர் பழையன். ‘காடு, மிகவும் தூய்மையான இடம் மட்டும் அல்ல; மனித
இதயத்துக்கு மிக நெருக்கமான இடமும்கூட. ஒருவனுக்குள் இருக்கும் உண்மைகளை
எளிதில் உதிர்க்கச் செய்யும் ஆற்றல் காட்டுக்கு உண்டு. காட்டின் ஊடே
பயணப்படும் ஒருவனால் கபடத்தனத்தை மறைத்து இவ்வளவு தொலைவு எடுத்து வர
முடியாது. இதை உணர முடியாத அளவுக்கு கூழையனைப் பதற்றம் தொற்றியுள்ளது.
காலையில் என்னதான் நடக்கிறது பார்ப்போம், என்ற முடிவோடு தலை சாய்த்தான்
பழையன்.
காலையில் பறவைகளின் ஒலியால் காடு நிரம்பி இருந்தது. கபிலரின் தூக்கம்
கலைந்தது. உடல் முறுக்கி எழுந்தார். முடிச்சுகள் பிரிவதைப்போல தசைநார்கள்
பிரிந்து அவிழ்ந்தன. வலி இலகுவாகிறதா...விட்டுப்பிடிக்கிறதா எனத்
தெரியவில்லை. இரவு முழுவதும் கேட்டுக்கொண்டேயிருந்த பேச்சுச் சத்தம்
எதுவும் இப்போது இல்லை. மெள்ள கண்கள் விழித்துப் பார்த்தார். குகைக்குள்
யாரும் இருப்பதுபோலத் தெரியவில்லை. ‘அதிகாலையிலே எழுந்து போய்விட்டனரா!
மற்றவர் போயிருந்தாலும் அழைத்துச் செல்ல நீலன் இருப்பானே, எங்கே அவனைக்
காணோம்' என்று நினைத்தபடியே எழுந்து உட்கார்ந்தார்.
குகை முகப்பின் வழியே சூரிய ஒளி பாய்ந்து வந்துகொண்டிருந்தது. அப்போது
ஓரத்தில் இருந்த பாறையின் மீது ஒருவர் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தார் கபிலர். முகம் தெரியவில்லை. நெடு
உயரம். திரண்டு விரிந்திருந்த தோள்கள், உடல் அமைப்பின் கம்பீரத்தைச்
சொல்லின.
கபிலர் எழுந்துவிட்டதைப் பார்த்த அந்த மனிதர், முன்னோக்கி நடந்துவந்தார்.
முழு சூரியனையும் அவரது முதுகு அடைத்திருக்க, பின்புறம் இருந்து சூரிய
ஒளி பீச்சியடித்துக் கொண்டிருந்தது. தோள்பட்டையில் விழுந்து
சுருண்டிருக்கும் தலைமுடியின் வழியே பாய்ந்துவரும் ஒளி மேல்படர, கபிலர்
கையூன்றி எழுந்தார். மஞ்சள் ஒளியால் கண்கள் கூசின. ஆனாலும் காட்சியின்
அபூர்வம் அவரை இமை கொட்டாமல் பார்க்கவைத்தது.
குகைக்கு முன்புறம் இருந்த மலைச்சரிவில் மொத்தக் கூட்டமும்
நின்றுகொண்டிருப்பது அரைகுறையாகத் தெரிந்தது. எட்டிப்பார்க்கும் போது
முன்நகர்ந்து வருபவரின் குரல் குகை எங்கும் ஒலித்தது.
“முதல் நாளே கால் தசை பிறண்டுவிட்டது. நாக்கறுத்தான் புற்கள் உடல்
எங்கும் கீறியுள்ளன. காக்காவிரிச்சி நிலைகுலையவைத்துள்ளது. நீலன்,
எதிர்பாராமல் தூக்கி அடித்திருக்கிறான். இவ்வளவு தாக்குதல்களையும்
வலியையும் தாங்கியபடி விடாமல் மலைகள் கடந்து வந்திருக்கிறீர்களே,
இனியாவது உங்களை எனது தோளிலே தூக்கிச்செல்ல அனுமதிப்பீர்களா?”
திகைப்பில் இருந்து மீளாத கபிலர், நெருங்கிவரும் அந்த மாமனிதனைப்
பார்த்துக் கேட்டார், “நீங்கள் யார்?”
``வேள்பாரி!’’
- பாரி வருவான்...
http://www.vikatan.com

அதிசயம் விலங்கு இருப்பிடம் யாளி போன்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக