சனி, 25 மார்ச், 2017

மநகூ கிழி திருமாவேலன் வைகோ திருமா

aathi tamil aathi1956@gmail.com

2/4/16
பெறுநர்: எனக்கு
Saravanan Thangappa
போர்வாள் அட்டகத்தி ஆன கதை!
‘தம்பி’ பிரபாகரனை தமிழ் ஈழத்தின் அதிபராக்கப் போராடிவந்த வைகோ, இன்று
‘கேப்டன் பிரபாகரன்' படத்தில் நடித்த விஜயகாந்தை, தமிழ்நாட்டின்
முதலமைச்சராக்கத் துடிக்க ஆரம்பித்திருக்கிறார். சயனைட் சாப்பிடுவதற்கும்
இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
1967-ம் ஆண்டில் பேரறிஞர் அண்ணாவை ஆட்சியில் அமர்த்த, விருதுநகர்
வீதிகளில் கல்லூரிப் பருவத்தில் கால்கடுக்க அலைந்த வைகோ, 50-வது
பொதுவாழ்வு பொன்விழாவைக் கண்ட பிறகு வேகாத வெயிலில் விஜயகாந்தை
முதலமைச்சராக்க அலையத் தயாராகிவிட்டார். அழகாக ஆரம்பித்த பயணம்
அதலபாதாளத்தில் விழுந்திருக்கிறது. தவறுகளைச் சத்தமாகவும் நல்லவற்றை
மறைமுகமாகவும் செய்யும் இயல்புகொண்ட வைகோ, தே.மு.தி.க-வுக்கு விருப்பம்
உள்ள பி.ஆர்.ஓ-வாக மாறிவிட்டார்.
கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக சங்கநாதம் எழுப்பி மாற்று
தி.மு.க-வைத் தொடங்கிய வைகோ, அதே கோபாலபுரத்து குடும்பத்தோடு
கூட்டணிவைத்துச் சிரித்ததும், ‘ஜெயலலிதாவின் ஊழல் ஆட்சியை வீட்டுக்கு
அனுப்புவேன்' என மறுமலர்ச்சி நடைப்பயணம் கிளம்பிய வைகோ, அதே போயஸ்
தோட்டத்தோடு கூட்டணிவைத்து மகிழ்ந்ததும், ‘கருணாநிதிக்கும்
ஜெயலலிதாவுக்கும் மாற்று நம் தலைவர்தான். அவர்களை வீழ்த்தி முதலமைச்சர்
ஆகும் தகுதி நம் தலைவருக்குத்தான் இருக்கிறது’ என்று லட்சக்கணக்கான
தொண்டர்களை நம்பவைத்து கட்சி ஆரம்பித்த வைகோ, இன்று ‘விஜயகாந்த்தான்
கிங்... நாங்கள் கிங் மேக்கர்கள்' எனச் சொல்லி ஜோக்கர் ஆனதும், தனக்கான
புதைகுழியைத் தானே தேடிக்கொண்டதன் அடையாளம்.
யாரை ‘கிங்' ஆக்குகிறோம் என்பதை வைத்துதான் ‘கிங் மேக்கர்'களுக்கு
மரியாதை. நேருவின் தீர்க்கதரிசனம் லால்பகதூர் சாஸ்திரிக்கு இருந்தது.
நேருவின் துணிச்சல் இந்திராவுக்கு இருந்தது. இவர்களை ‘கிங்' ஆக்கியதால்
‘கிங் மேக்கர்' ஆனார் காமராஜர். ஊழல் புகாரால் இரண்டு முறை உச்சந்தலையில்
அடிவாங்கி பதவிவிலக நேர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தை உட்காரவைத்ததால்
ஜெயலலிதா ‘கிங் மேக்கர்' ஆகிவிடுவாரா என்ன?
இவர்கள் அறிவித்திருக்கும் ‘கிங்' யார்? சட்டமன்றத்துக்கும் போகாத,
மக்கள் மன்றத்துக்கும் வராத விஜயகாந்தை, மக்களின் எல்லா
பிரச்னைகளுக்காகவும் போராடிவந்த வைகோவும், ஜி.ராமகிருஷ்ணனும்,
முத்தரசனும், தொல்.திருமாவளவனும் தங்களின் ‘கிங்' எனத்
தேர்ந்தெடுத்துள்ளார்கள். யார் நம் பின்னால் வருகிறார்கள் என்பதைவிட யார்
பின்னால் நாம் போகிறோம் என்பதே முக்கியம். இவர்கள் செய்திருப்பது
அபத்தம்!
மக்கள் நலக் கூட்டு இயக்கம், கடந்த ஆண்டு (2015-ம் ஆண்டு ஜூலை 27-ம்
நாள்) உதயம் ஆனது. மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத
நடவடிக்கைகளுக்கு எதிரான போராட் டங்களை முன்னெடுப்பதுதான் இவர்களது
நோக்கம். மதுவிலக்குப் போராளி சசிபெருமாள் மரணம்தான் இந்தத் தலைவர்களை
ஒன்றிணைத்தது. ஆகஸ்ட் மாதம் 4-ம் நாள், மதுவிலக்குக்காக முழு அடைப்புப்
போராட்டம் அறிவித்தார்கள். தமிழகத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து
ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்
கொல்லப்பட்டதற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்கள். இந்தக் கூட்டு
இயக்கமே ஏன் கூட்டணியாக மாறக் கூடாது என்ற சிந்தனை பரவி, குறைந்தபட்ச
செயல்திட்டத்தை உருவாக்கினார்கள். ‘இதுவே எங்கள் அணியின் முதலமைச்சர்
வேட்பாளர்' என்றார்கள். ‘முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பது ஜனநாயக
விரோதம்' என்றார்கள். `கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்று
நாங்கள்தான்' என்றார்கள். ‘மாற்றமே நாங்கள்தான்' என்றார்கள். நான்கு
தலைவர்களும் பிரசாரப் பயணம் போனார்கள். கருணாநிதியை விரும்பாத,
ஜெயலலிதாவை விரும்பாத, விஜயகாந்தையும் விரும்பாத சக்திகளால் மாற்று
அணியாக மக்கள் நலக் கூட்டணி பார்க்கப்பட்டது.
நல்லதோர் வீணை செய்து நலங்கெடப் புழுதியில் எறிந்தது மாதிரி, அதைக்
கொண்டு போய் விஜயகாந்த் காலில் வைத்துவிட்டார்கள். `மக்கள் நலக் கூட்டணி
இனி ‘கேப்டன் விஜயகாந்த் அணி' என்று அழைக்கப்படும்’ என அறிவித்துவிட்டார்
வைகோ. கருணாநிதி அணி, ஜெயலலிதா அணி... இதோடு விஜயகாந்த் அணி. அவ்வளவுதான்
மாற்றம். இதுதான் இந்த நான்கு பேரும் தமிழ்நாட்டுக்குத் தர நினைத்த
மாற்றமா? விஜயகாந்தை தி.மு.க-வுடன் சேரவிடாமல் தடுத்துவிட்ட ஒரு
மகிழ்ச்சியே, ம.தி.மு.க-வின் வளர்ச்சிக்குப் போதுமா? விஜயகாந்த்
முதலமைச்சர் ஆகிறாரா இல்லையா என்பது வேறு விவகாரம். விஜயகாந்தை
முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததன் மூலமாக ஜெயலலிதா, கருணாநிதி
உள்ளிட்டவர்களோடு சேர்ந்து, இனி விஜயகாந்தைப் பற்றி எதிர்காலத்தில்
பேசும் தகுதியையும் வைகோ இழந்துவிட்டார்.
மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க-வை இணைத்தது, இந்தக் கூட்டணிக்கு
உண்மையான பலம்தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. கூட்டிப்பார்த்தால் 6
சதவிகித வாக்குகளைக் கொண்டுள்ள இந்த நான்கு கட்சிகளோடு விஜயகாந்த்
சேருவதன் மூலமாக, 5 சதவிகிதம் கூடி... 11 ஆக வாய்ப்பு உள்ளது. ஆனால்,
விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவதன் மூலமாக `மாற்றுச்
சக்தி’ என்ற நம்பிக்கையையே இழந்துவிட்டது இந்த அணி.
‘நாங்கள்தான் மாற்று அணி’ எனச் சொன்னதுதான் இதுவரை இவர்களுக்கு இருந்த
பலமே. அதையே இழக்கத் தயாராக இருந்தார்கள் என்றால், இவர்களுடைய பின்னணியே
சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. மு.க.தமிழரசு மகன் திருமணத்தில்
தனக்கு முதல் வரிசையில் நாற்காலி போடவில்லை, தமிழிசை சௌந்தர ராஜனுக்கு
முன்னால் தன்னைப் பேசச் சொல்லி அவமானப்படுத்தினார்கள் என்று எல்லாம் ஈகோ
பார்த்த வைகோ, முதலமைச்சர் நாற்காலியையே விஜயகாந்துக்குத் தூக்கித் தர
முன்வந்தது மர்மமாகவே பார்க்கப்படுகிறது. வைகோவும் விஜயகாந்தும் பால்ய
நண்பர்கள் அல்ல.
`19 மாதங்கள் வைகோ சிறையில் இருந்துவிட்டு வந்தபோது, எல்லோருமே அவரது
வீட்டுக்குப் போய் வாழ்த்து தெரிவித்தார்கள், விஜயகாந்த் நீங்கலாக’
என்கிறார்கள் ம.தி.மு.க தொண்டர்கள். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து 10
ஆண்டுகாலம் இருவரும் பரஸ்பரம் சந்தித்ததே இல்லை.
2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான் சந்தித்தார்கள்.
தேர்தலுக்குப் பிறகும் அந்த நட்பு தொடரவில்லை. இப்போது இரண்டு ஆண்டுகள்
கழித்து பார்த்தார்கள். மொத்தமாக நான்கைந்து நாட்கள் மட்டுமே
நெருக்கமாகப் பார்த்த ஒரு மனிதருக்கு, முழு வக்காலத்து வாங்க வைகோ
முடிவுக்குவருகிறார் என்றால், அவருக்கு விஜயகாந்தை முதலமைச்சர் ஆக்குவது
என்ற லட்சியத்தைவிட, கருணாநிதி, ஸ்டாலினின் நாற்காலி கனவைத் தடுக்கும்
தந்திரம் மட்டுமே தூக்கலாகத் தெரிகிறது. கருணாநிதியை வீழ்த்த தன்னையேவா
காவுகொடுப்பது? அடுத்தவன் மீது சாக்கடையை அள்ளி வீசிவிட்டு, தனது
முகத்திலேயேவா கையைத் துடைப்பது?
மக்கள் நலக் கூட்டணிக்கு முதலில் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை. ‘இதன்
தலைவராக அண்ணன் வைகோ இருக்கட்டும்' என திருவாரூர் கலந்துரையாடலின்போது
திருமாவளவன் சொன்னார். ‘நான் தலைவராக இருக்க மாட்டேன்; ஒருங்கிணைப்பாளராக
இருக்கிறேன்’ என்று வைகோ மறுத்தார். ‘வெற்றிபெற்று வரும் சட்டமன்ற
உறுப்பினர்கள் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பார
்கள்’ என்றும் சொன்னார்கள். ஆனால், விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த
ரவிக்குமாரும், எஸ்.எஸ்.பாலாஜியும் `திருமாவளவனை முதலமைச்சர் வேட்பாளர்
ஆக்க வேண்டும்’ என சர்ச்சைக்கு தூபம் போட்டார்கள். `இதை ஏற்கிறேன்’
என்றோ... `மறுக்கிறேன்’ என்றோ வைகோ அறிவிக்கவில்லை. இதை ஏற்க வேண்டும்
என்று வலியுறுத்தாத திருமா, ‘நாடு இன்னமும் பக்குவம் அடைய வில்லை' என
விரக்திவாதம் பேசினார். தனக்கு வேண்டாம் எனச் சொல்லிவிட்டு, வைகோ பெயரை
திருமா முன்மொழியவும் இல்லை. திருமாவை அறிவிக்க மனம் இல்லாத வைகோவும்,
வைகோவை ஏற்க விரும்பாத திருமாவும் சேர்ந்து விஜயகாந்தை முன்மொழிகிறார்க
ள். `நல்லகண்ணுவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்’ என
முத்தரசன் அறிவித்தார். ஆனால், இந்த ‘நல்லவர்கள்’ அனைவருமே அப்போது
கருத்துச் சொல்லா மெளனிகளாக இருந்தார்கள்.
திருமா இதுவரை மீசையை முறுக்கிக் கேட்டது என்ன? ‘நாங்கள் அனைவருக்கும்
இதுவரை பயன்பட்டோம். இனி பயன்பெறுவோம். இனி யாரோடு கூட்டணி அமைத்தாலும்
கூட்டணி ஆட்சிதான்' எனச் சொல்லி கருத்தரங்கு தொடங்கினார். அதற்கு
ஜி.ராமகிருஷ்ணனை அழைக்கப்போனபோதுதான் மக்கள் நலக் கூட்டமைப்புக்கான விதை
விழுந்தது. திருமா சொல்லித்தான் வைகோவை அழைக்க ஜி.ராமகிருஷ்ணன் போனார்.
கூட்டமைப்பு தொடங்கியது. எனவே இந்தக் கூட்டணியின் கருவே, கூட்டணி
ஆட்சிதான். அந்த லட்சியச் சொல், விஜயகாந்துடன் இந்த நான்கு தலைவர்களும்
கையெழுத்துப்போட்ட ஒப்பந் தத்தில் இல்லை. ‘விஜயகாந்த்தான் முதலமைச்சர்'
என்பதை ஒப்புக்கொண்ட நான்கு தலைவர்கள், அப்படி அமையும் ஆட்சி இந்த நான்கு
கட்சிகளும் அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியாக அமையும் என விஜயகாந்திடம்
ஏன் கையெழுத்து வாங்கவில்லை? ‘கூட்டணி ஆட்சிக்கு விஜயகாந்த் ஒப்புக்
கொண்டார்’ என வைகோ பேசும்போது சொல்கிறார். அவ்வளவுதான். ஒப்பந்தமாக
எழுதப்படவில்லை.
மார்ச் 10-ம் தேதி ராயப்பேட்டையில் நடந்த மகளிர் மாநாட்டில்,
‘தனியாகத்தான் நிற்பான் இந்த விஜயகாந்த்’ என்று சொன்ன விஜயகாந்த்,
கோயம்பேட்டில் மார்ச் 23-ம் தேதி, ‘கூட்டணி அமைத்துள்ளோம்' என எந்தக்
கூச்சமும் இல்லாமல் சொல்ல முடிகிறது என்றால், அவரது ‘சின்னக் கவுண்டர்'
வாக்கு தவறாமை சினிமாவில் வேண்டு மானால் மாறாது. சிந்தனைச்
செல்வனுக்கும், வன்னி அரசுக்கும், ஆளூர் ஷா நவாஸுக்கும் கேட்காமலேயே
அமைச்சர் பதவியை விஜயகாந்த் தருவார் என நம்புகிறாரா திருமா?
திருமாவுக்கு மறந்திருக்கும்... விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அதற்கு
எதிராக திருமாவளவன் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதைவிட ஒரு ‘காமெடி' அந்த
அறிக்கையில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணியும் கையெழுத்துப் போட்டிருப்பார்.
ஓர் அரசியல் கட்சிக்கு எதிராக இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்கள்
சேர்ந்து அறிக்கைவிட்ட விநோதத்தை தமிழகம் அன்று பார்த்தது. பொதுவாழ்வில்
வெள்ளிவிழா கண்ட அந்த திருமா, இப்போது விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக
ஏற்றுக்கொண்டு விட்டார். ‘விஜயகாந்தின் முடிவு 50 ஆண்டுகள் அரசியல்
வரலாற்றை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது’ என்கிறார்.
ஆம்! புரட்டிப்போட்டுவிட்டதுதான். ம.தி.மு.க-வையும் விடுதலைச்
சிறுத்தைகளையும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும்!
தான் என்ன செய்கிறோம் என்பதையே அறியாமல் பாவம் செய்பவர்களில்
தேர்ந்தவர்கள் தமிழக கம்யூனிஸ்ட்கள். கருணாநிதியுடன் சொந்தப் பகையால்
சண்டைபோட்டுவிட்டு வெளியேறிய எம்.ஜி.ஆருக்கு, தத்துவார்த்த முகமூடியை
முதலில் மாட்டியவர் அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் எம்.கல்யாண
சுந்தரம். ‘எம்.ஜி.ஆர் மீது துரும்பு பட்டாலும் கீறல் பட்டாலும் சும்மா
இருக்க மாட்டோம்’ எனப் பேசியவர் சித்தாந்தவாதி பாலதண்டாயுதம்.
திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக தனது கட்சி வேட்பாளர்
என்.சங்கரய்யாவை வாபஸ் பெறவைத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்
பி.ராமமூர்த்தி. ஒரு கொள்ளியில் இருந்து காப்பாற்ற இன்னொரு கொள்ளியை
மூட்டுவதே கம்யூனிஸ்ட்களின் மாற்றுப்பாதை. அன்றைய கருணாநிதி ஆட்சி மீதான
மக்களின் கோபத்தை எம்.ஜி.ஆர் எளிமையாக அறுவடைசெய்ய பாதை அமைத்துக்
கொடுத்தவர்கள்தான் தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்கள். ‘மக்களிடம் இருந்த
தி.மு.க எதிர்ப்பு உணர்ச்சியை நாம் திரட்டி வைத்திருந்தோம். அறுவடைக்கு
ஒருவர் திருட்டு எண்ணத்துடன் ஓடிவருகிறார்’ என அன்றே எச்சரித்தார்
காமராஜர். அன்று எம்.ஜி.ஆர்; இன்று விஜயகாந்த். அன்று பி.ராமமூர்த்தி;
இன்று ஜி.ராமகிருஷ்ணன். அன்று கல்யாணசுந்தரம்; இன்று முத்தரசன்.
அன்று மூலதனம் பேசிய கம்யூனிஸ்ட்கள், இன்று மகாபாரதம் பேசுகிறார்கள்.
விஜயகாந்தை தர்மனாகவும், வைகோவை அர்ஜுனனாகவும், ஜி.ராமகிருஷ்ணனை
நகுலனாகவும், தொல். திருமாவளவனை பீமனாகவும் தன்னை சகாதேவனாகவும்
முகம்காட்டுகிறார் முத்தரசன். சபாஷ்! நீங்கள் கட்சி நடத்தவில்லை.
கதாகாலட்சேபம் நடத்துகிறீர்கள் என்பது தெரிகிறது.
மக்களுக்குத் தெரியாதது ஒன்றுதான்... உங்களை இயக்கும் கிருஷ்ணன் யார்?
நன்றி : ஆனந்தவிகடன்..
ப.திருமாவேலன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக