வியாழன், 30 மார்ச், 2017

கெயில் குழாய் பதிப்பு தமிழகம் வஞ்சிக்கப்பட்டது

aathi tamil aathi1956@gmail.com

3/2/16
பெறுநர்: எனக்கு
கெயில் தீர்ப்பும் வந்தே மாதரமும்!
கெ யில் தீர்ப்புக்கும், ’வந்தே மாதரம்’ சொல்லும் சராசரி இந்தியக்
குடிமகனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. என்ன தொடர்பு என்பதை
கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.
தமிழக மக்களுக்கு எதிராக மீண்டுமொரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி
உள்ளது. “கெயில் திட்டத்திற்கு தடைவிதிக்க முடியாது. இந்த விவகாரத்தில்
தலையிட தமிழக அரசுக்கு உரிமையில்லை. சந்தை மதிப்பில் 40 சதவீத  இழப்பீடு
வழங்கி திட்டத்தை தொடரலாம்” என்று கெயில் திட்டத்திற்கு தடைவிதிக்க கோரி
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
வழக்கம் போல இத்தீர்ப்பின் வீரியம், தீவிரம் உணராமல் தமிழக அரசியல்
கட்சிகள் கூட்டணி லாபிக்காக லாலி பாடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில்
கெயில் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள். இங்கே...
.
கெயில் சிறு அறிமுகம்:
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, கர்நாடக மாநிலம் மங்களூர் வரை குழாய்
மூலம் எரிவாயு எடுத்துச் செல்லும் இந்த திட்டத்திற்காக கேரளம், கர்நாடகம்
மற்றும் தமிழகத்தில் மொத்தம் 871 கி.மீ க்கு குழாய் பதிக்க கெயில்
நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. அதில், தமிழகத்தில் மட்டும் இந்த எரிவாயு
குழாய் 310 கி.மீ நீளத்திற்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம்,
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட  ஏழு மாவட்டங்களில் உள்ள 136
கிராமங்கள் வழியாக பயணிக்கிறது.
இந்த திட்டத்திற்காக விவசாயிகளிடம் எந்த அனுமதியும் வாங்காமல், அவர்களது
நிலங்களில் குழாய் பதிக்கப்பட்ட போது, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து
பல போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த திட்டத்தினால் பாதிக்கப்படும் ஏழு
மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து, ‘விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு’
அமைத்து தொடர்ந்து போராடியதன் விளைவாக, அந்த திட்டத்திற்கு தமிழக அரசு
தடை விதித்தது. இதை எதிர்த்து கெயில் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை
அணுகியது. உயர் நீதிமன்றமும், கெயில் நிறுவனத்திற்கு ஆதரவாக நவம்பர் 25,
2013 தீர்ப்பு வழங்கியது. அதன் தீர்ப்பில், கெயில் நிறுவனத்திற்கு தமிழக
அரசு உரிய பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தி இருந்தது. அதை எதிர்த்து
தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பும்
தமிழக அரசிற்கு எதிராகவே உள்ளது.
மத்திய அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா...?
கெயில் திட்டத்திற்கு எதிராக மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து போராடிய
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகனிடம் பேசியபோது,
“தொடர்ந்து தமிழக மக்களுக்கு எதிராக மத்திய அரசு மாற்றாந் தாய்
மனப்பான்மையுடன் நடந்து கொண்டு வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை
அழிக்கும் என்று தெரிந்தே இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டிய நோக்கம்
என்ன...?” என்று கேள்வி எழுப்பியவர், ‘’இது பாதுகாப்பான திட்டமும் அல்ல.
கடந்த காலங்களில், நாட்டில் பல இடங்களில் இவர்கள் பதித்த குழாய் வெடித்து
பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதே வேளையில் நாங்கள் இந்த திட்டத்தை
முற்றாக எதிர்க்கவில்லை, விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத மாற்று பாதையில்
செயல்படுத்தவே கோருகிறோம். அதையும் மீறி, இத்திட்டத்தை செயல்படுத்த
முயன்றால், விவசாயிகளை திரட்டி  தொடர்ந்து போராடுவோம்’’ என்கிறார்.
உச்ச நீதிமன்றம் தன் எல்லையை மீறுகிறதா?
“வாக்கு வங்கி அரசியலுக்காக தமிழக அரசு இந்த திட்டத்தை எதிர்க்கிறதா...?”
என்று தம் தீர்ப்பில் குறிப்பிட்டு இருப்பதன் மூலம், உச்ச நீதிமன்றம் தன்
எல்லையை மீறுகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது. மாநில அரசுகள் அரிதினும்
அரிதாகவே மக்கள் பக்கம் நிற்கும். அதை தீர்ப்பில் கிண்டல் செய்ய வேண்டிய
தேவை என்ன...? இந்த தீர்ப்பு உள்நோக்கம் கொண்ட தீர்ப்பு என்பதை இந்த
வரிகளே காட்டுகிறது. அரசியலமைப்பு வழங்கிய நில உரிமை இன்னும் மாநிலப்
பட்டியலில் இருக்கிறது. நிலம் குறித்த அனைத்து அதிகாரங்களும் இன்னும்
மாநில அரசிடமே இருக்கிறது. இந்த தீர்ப்பானது அரசியலமைப்பையே கிண்டல்
செய்வதுபோல் இருக்கிறது!’’ என்கிறார் தமிழக உழவர் முன்னணியில் மாநில
ஆலோசகர் கி.வெங்கட்ராமன்.
தமிழக அரசு உடனடியாக அரசியலமைப்பு ஆயத்திடம் (Constitution Bench) மேல்
முறையீடு செய்ய வேண்டும், என்ற ஆலோசனையை முன்வைக்கிறார் வெங்கட்ராமன்.
திலீபன்களை அரசுதான் உருவாக்குகிறது:
வேல்முருகனிடம் பேசும் போது, “தமிழக மக்கள் மத்திய அரசின் மேல் நம்பிக்கை
இழந்துவிட்டனர் ” என்றார்.
அது போல், தீர்ப்பு வந்த மறு நிமிடமே, முகநூலில் நெட்டிசன்கள் உச்ச
நீதிமன்றத்திற்கு எதிராகவும், மத்திய அரசிற்கு எதிராகவும் கொதிக்கத்
துவங்கிவிட்டனர். மாற்றுப் பாதையில் செயல்படுத்த வாய்ப்பிருந்தும், தமிழக
மக்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சிதான் இத்திட்டத்தை ஏற்கெனவே திட்டமிட்ட
பாதையில் செயல்படுத்தக் காரணம் என்பது போல் பல பதிவுகள் முகநூலில் உலா
வருகின்றன. இது, மத்திய அரசு தொடர்ந்து தமிழக மக்களை திட்டமிட்டே
வஞ்சிக்கிறது என்ற மனநிலையில் மக்கள் இருப்பதை காட்டுகிறது. இது எதுவும்
சுமூகமான குடியாட்சிக்கு நல்லதல்ல. இந்த மனநிலையின் வெளிப்பாடுதான் சில
குடிமகன்கள் தேசியக் கொடியை எரிப்பது. ’வந்தே மாதரம்’ எனும் கோஷத்தை
வேண்டா வெறுப்பாகச் சொல்வது... அல்லது சொல்லாமல் தவிர்ப்பது.
மத்திய அரசு தம் குடிகளிடம் இழந்த நம்பிக்கையை பெற, மக்கள் பக்கம் நிற்க
வேண்டும். ஏனெனில், அரசியலமைப்பு வழங்கிய 'Right to Property' என்ற
உரிமை, பெருநிறுவனங்களுக்கு மட்டுமானது அல்ல; அது, எளிய மக்களுக்குமானது.
- மு. நியாஸ் அகமது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக