வெள்ளி, 31 மார்ச், 2017

தமிழ் புத்தாண்டு தை தென்னன் மெய்ம்மன்

aathi tamil aathi1956@gmail.com

14/1/16
பெறுநர்: எனக்கு
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016

2-ஆம் பதிவு

நாள்: 13.01.2016



                பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் முதல்
முழு நிலவு நாள் கடந்த 09.01.2016-ல் செவ்வனே அமைந்தது. 08.01.2016
விடியற்காலை 06.30-க்கு மெல்லிய கீற்றாகப் பிறை கீழ்வானில் தெரிந்தது.
ஆண்டின் 27-ஆம் நாளில் அமைய வேண்டிய முதல் மறைநிலவானது சரியாக 26-ஆம்
நாளில் பொருந்தியிருப்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். கடந்த முதல்
முழுநிலவு ஒரு நாள் தடுமாறியதன் விளைவே இதுவாகும்.

     09.01.2016-ன் மறைநிலவை அச்சாகக் கொண்டு அடுத்து வரும் 15-ஆம்
நாளில் இரண்டாவது முழுநிலவானது முறைமுற்றியும் நாள் முதிர்ந்தும் தோன்ற
வேண்டும். அதாவது 24.01.2016 அன்று தோன்றிட வேண்டும்.

     மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 இனி ஒவ்வொரு
நாளையும் உள்ளது உள்ளபடி ஆவணப்படுத்தும் வல்லுநர்களைப் பயிற்றுவிக்கும்.
தொடர் நாள்களை விடாது கணக்கிடும்.

பட்டி பல்கப் பல்க:-

     15.01.2016-ல் பொங்கல் நாள் என்றும் அன்றே தை முதல் நாள் என்றும்
பஞ்சாங்கம் சொல்கிறது. தமிழர்கள் இதுவரை நம்பியது போதும். இனிமேல்
உண்மையான தை முதல் நாளில் பொங்கல் இட்டு அன்றே புத்தாண்டையும் கொண்டாட
முன் வர வேண்டும். பொங்கல் நாள் வேறு, புத்தாண்டு நாள் வேறு என்று கருத
வேண்டாம். மஞ்சு விரட்டுக் கூட்டும் நாளும் அந்தப் புத்தாண்டு நாளிலேயே
அமைந்திடப் பெரு முயற்சி தேவை.

நாளும் கிழமையும்:-

     நாளும் கிழமையும் பொருந்துவது என்பது இயற்கை நிகழ்வு அல்ல. அது
இயற்கையைத் திறம்படக் கையாளும் அரச கொற்றம். இந்த ஆற்றல் இவ்வுலகில்
தமிழர்களைத் தவிர எவரிடமும் இல்லை. இருப்பதாக எவரும் நம்பினால் அது
பேதைமை. இந்த அறிவுக்குத் தமிழர்களைத்தான் இவ்வுலகம் சார்ந்து இயங்க
வேண்டும்.

தை முதல்நாள் – பொங்கல் – தொழூஉப்புகுத்தல்:-

     வானவியலின் அடிப்படையில் தை முதல் நாளும், பொங்கல் நாளும், தொழூஉப்
புகுத்தல் எனும் மஞ்சு விரட்டுக் கூட்டும் நாளும் ஒன்றே என்பதில்
தமிழர்களுக்கு எந்த ஐயமும் தேவையில்லை. தமிழ்த் தேசியத் தலைவர்கள் எவரும்
தொடை நடுங்கவும் தேவை இல்லை.

     மாநாகன் இனமணி 2 மற்றும் 56, முல்லைக்கலியில் இருந்து வலுவான அகச்
சான்றுகளை எடுத்து வைத்திருக்கிறது. அந்த வகையில் 15.01.2016-ல்
இவ்வாண்டின் 32-ஆம் நாள் கணக்கிடப்பட வேண்டும். இவற்றுள் முதல்நிலவின்
ஒருநாள் தடுமாற்றம் போக 11 நாள், முதல் மறைநிலவுக்கு 15 நாள் அதிலிருந்து
15.01.2016 வரையில் 6 நாள்கள் ஆக 11+15+6=32 நாள்கள் என்பதை நன்கு
புரிந்து கொள்ள வேண்டும்.

     ஒருவேளை பஞ்சாங்கத்தைத் திருத்தி, பார்ப்பனர்க்குத் தீச்சை கொடுத்து
எல்லோரும் வரட்டும் பொங்கல் வைக்கலாம் என்று சிறுபிள்ளைத்தனமாக எவரும்
கற்பனை செய்தால் அது அவர்களது மூளை வளர்ச்சியில்லாத அவலத்தையே
குறிக்கும்.

தமிழ்ப் புத்தாண்டு அரசியல்:-

     தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவதில் அரசியல் இருக்கிறது. அரசியல் தான்
இருக்கிறது. இதுதான் அரசியல். தமிழ்த் தேசிய நுண் அரசியல்.

     கொல்லேறுகளின் நெற்றிக்கு நேரே ஆரத்தி எடுக்கும் தமிழ் மரபும்,
பசுமாடுகளின் பின்புறம் சூடம் காட்டிக் கோ பூசை செய்யும் பார்ப்பு இனப்
பண்பாடும் ஒன்றல்ல. வெவ்வேறானவை.

     மஞ்சு விரட்டை, விரட்டி விரட்டித் தடை செய்ய முயலும் இந்திய அரசின்
உச்சதம நியாய ஆலயம்(Supreme court of India) மற்றும் மஞ்சு விரட்டின்
மேன்மையை மறைக்கும் பாரத சம்ஸ்கிருதி மந்த்ராலயம் (Ministry of Culture –
Govt. of India) இரண்டும் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல், மஞ்சு விரட்டு
இவற்றோடு தமிழ்த் தேசியம் பூண்டுள்ள ஆழமான உணர்வைத் தீண்ட முடியாது.
என்பதனை உண்மைத் தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இனவரைவின் அடிப்படையில் தமிழ்ப்புத்தாண்டு:-

     தமிழர்களின் முன்னோரில் ஆழ்ந்த நினைவு அலைகளை எழுப்பும் அவுணர் ஒர்
கூட்டியக்கமாகக் கோட்டை கட்டியும் முருகனை முதன்மைப் படுத்தியும்,
தமிழ்த்தேசிய அரசைக் கட்டியெழுப்பும் தவமுயற்சியே தமிழ்ப்புத்தாண்டுப்
புரிதல் ஆகும். உரிய முறையில் தக்கார் இனம் தலையெடுக்கும். தலையெடுத்துச்
சில அடிப்படை வேலைகளைச் செய்யும். அவற்றுள் முதன்மையானது இனவரைவு ஆகும்.

                தக்கார் இனத்தனாய்த்தான்ஒழுக வல்லானைச்

                செற்றார் செயக்கிடந்தது இல்    -- (திருக்குறள்-446)



     வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்

      தகை மாண்ட தக்கார் செறின்   -- (திருக்குறள்-897)



                தெரிந்தஇனத்தொடுதேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு

      அரும்பொருள் யாதொன்றும் இல் – (திருக்குறள்-462)



     இவற்றுள் தக்கார் இனம், தகை மாண்ட தக்கார், தெரிந்த இனம்
என்பதெல்லாம் திருத்தகுதியுடைய திருத்தக்கார் ஆவர்.

திருக்குறளும் தமிழ்ப்புத்தாண்டும்:-

     சங்க இலக்கியங்களின் அகப்புறச் செய்திகளின் பிழிவாகவே திருக்குறள்
இருக்கக் கூடும் என்ற நம்பிக்கை தமிழறிஞர்களிடையே இருக்கிறது.
திருக்குறள் ஆக்கப்பட்ட காலத்தில் வேறு வேறு நூல் மரபுகளும் தொழில்
மரபுகளும் தமிழ்ப்புத்தாண்டினைப் புரியும் படி உணர்த்தியிருக்க வேண்டும்.
எல்லாம் அறிந்தும் தமிழ்ப்புத்தாண்டுப் புரிதலை திட்ட மிட்டு மறைத்தாரா
வள்ளுவர் என்று எவரும் ஐயப்படலாம்.

                அழுக்காறு என ஒருபாவிதிருச்செற்றுத்

                தீயுழி உய்த்து விடும்  - (திருக்குறள்-168)

     ஊழி என்பது ஆண்டுத் தொடர்ச்சி அதன் சீர்மையே திரு. அதனை மறைத்து ஊழ்
என்ற கருத்தியலை அயன்மை இனப் பார்வையில் வலிந்து திணித்தாரா என்றும்
ஐயப்படலாம். ஒருவேளை தமிழ்ப் புத்தாண்டுப் புரிதலில் வள்ளுவன் குற்றவாளி
என்று தெரிந்தால் வள்ளுவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் துணிச்சல்
எவருக்கு வருமோ அவரே தக்கார். தம் கொம்புகளால் தன்னை அடக்க வரும் வீரனை
குத்தித் தூக்கி எறிந்து கால்களால் மிதித்து துவைக்கும் கொல்லேறுகள்
போன்றோர் தக்கார். அதனால் தூக்கி போட்டு மிதிக்கும் ஆற்றல் என்பது அறச்
சீற்றத்தின் வெளிப்பாடு. அது தமிழ்ப் புத்தாண்டின் சீற்றமும் ஆகும். எந்த
வள்ளுவனை விடவும், வல்லவனை விடவும் தமிழ் தமிழ் உயர்ந்தது.

 திருக்குறளை உயர்த்திப்பிடிக்கும் அயன்மை இனம்:-

     திருக்குறளை உயர்த்திப் பிடித்துத் தமிழ் இனவரைவுக்கு உலைவைக்கும்
அயன்மை இனம் இன்று பெருகி வருகிறது. இவர்களை விழிப்போடு கையாள
வேண்டுமானால், வள்ளுவனுக்குச் சிலை எடுப்பது, பிறந்த நாள் கொண்டாடுவது,
வாழ்க்கை வரலாறு எழுதுவது போன்ற எற்று வேலைகளில் ஈடுபடாமல், திருக்குறள்
என்ன கூறுகிறது? மாங்குடி மருதனார் என்ன கூறுகிறார்? நக்கீரன் சொல்வது
என்ன என்பது போன்ற திறனாய்வுப் பார்வையைத் தமிழர்கள் வளர்த்துக் கொள்ள
வேண்டும். தமிழ்ப்புத்தாண்டுப் புரிதல் என்றுமே பகைச் சீற்றம்
உடையதுதான்.

      மனத்தால் மறுஇலரேனும் தாம் சேர்ந்த

      இனத்தால் இகழப்படுவர் ---(நாலடியார் – 18-10)



     தமிழர் தமிழர் அல்லாதார் என்ற இன வரைவின் முதல் அடையாளமே
தமிழ்ப்புத்தாண்டுதான். தமிழ்ப்புத்தாண்டின் பகைவர்களைத் தமிழர்கள் தம்
இனத்தின் பகைவர்களாகவே கருதுவர்.

 இவ்வாண்டின் முதல் ஒன்று கூடல்:

     09.01.2016 அன்று இவ்வாண்டின் முதல் மறைநிலவு நாளில் வள்ளியூருக்கு
அருகில் உள்ள தெற்கு கள்ளிகுளம் என்ற இடத்தில் மரபு வழித் தமிழ்த்
தேசியத் தக்கார் அவையம் 2016-ன் முதல் ஒன்று கூடல் மற்றும் முழுநாள்
கலந்தாய்வு இனிதே நடந்தது.

      பணியா மரபின் உறுப்பினரும் தக்கார் அவையத்தின் உறுப்பினருமான
தென்னவன் பனிவளன் அவர்களின் அழைப்பின் பேரிலும் ஒருங்கிணைப்பின் பேரிலும்
ஏற்பாட்டின் பேரிலும் நடந்த அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும்
நன்றி. உணவு அளித்த திரு தென்னவன் பனிவளன் அவர்களுக்கு நன்றி.

      தமிழ்ப் புத்தாண்டுப் புரிதலில், ஓராயிரம் தமிழறிஞர்களோடு
வகைப்படுத்திக் கொண்ட அறிவுத்துறை வல்லுநர்களை இணைத்து இயங்கும் அமைப்பாக
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தினை வடிவமைத்திடும் ஆண்டுத்
திட்டம் பற்றிப் பேசப்பட்டது. சில முடிவுகள் எட்டப்பட்டன. தமிழ்த்
தேசியத்தின் எழுச்சி என்பது தமிழ்ப் புத்தாண்டினை முதல் படிக்கட்டாக
கொண்டுள்ளது என்பதனைப் புரியும்படி எடுத்துச் சொல்ல இவ்வாண்டில் பல
உத்திகள் வகுக்கப் பட வேண்டியிருக்கிறது. அது பற்றிய அக்கறை உள்ளவர்களின்
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது.

  >>>OOO000OOO<<<

      மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 இன் வெளியீடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக