ஞாயிறு, 19 மார்ச், 2017

டெல்லி மாசு கொங்கு நீர் காற்று ஐம்பூதம் உயிர் மாணிக்கவாசகர்

aathi tamil aathi1956@gmail.com

16/11/16
பெறுநர்: எனக்கு
காற்று மாசுபட்டால், உயிர் சிதைவதாகப் பொருள்!
-டெல்லி மூச்சுத் திணறல் குறித்து…
ம.செந்தமிழன்

வயல்களில் கொளுத்தப்படும் கூளங்கள்தான் எவ்வளவு ஆபத்தானவையாக
இருக்கின்றன! டெல்லி மாநகரையும் அதன் சுற்றுவட்டாரங்களையும் மூச்சு முட்ட
வைக்கின்றனவே அக் கூளங்கள். அமைச்சர்கள் அலறுகிறார்கள், முதல்வர் உதவி
கேட்கிறார், ஊடகங்கள் கதறுகின்றன, மக்களோ மூச்சு விடுவதற்கே
சிரமப்படுகிறார்கள். காற்றைத் துல்லியமாக வடிகட்ட முடியாது. ஆனாலும்,
காற்று வடிகட்டி முகமூடிகள் விற்பனை உச்சகட்டத்தை எட்டிவிட்டது.
டெல்லியின் காற்று மாசுபாடு இப்போது சர்வதேசச் செய்திகளில் இடம்
பிடித்துவிட்டது.

இவ்வளவுக்கும் காரணம், வயல்களில் கொளுத்தப்படும் வைக்கோல்களும் பிற
தாவரச் சக்கைகளும்தான்!

டெல்லியைச் சுற்றிலும் கரும்புகையை, வெண்புகையைக் கக்கிக்கொண்டுள்ள
மாபெரும் தொழிற்சாலைகள் இந்நிலையை உருவாக்கவில்லை. ஒரு லிட்டர்
பெட்ரோலுக்கு வெறும் ஐந்து கிலோ மீட்டர் மட்டும் ஓடும் கார்களும்,
இருபத்தைந்து கிலோ மீட்டர்கள் ஓடும் இருசக்கர வாகனங்களும் இந்நிலைக்குக்
காரணமல்ல. வீட்டுக்கு வீடு குளிர்சாதனப் பெட்டி வைத்துள்ள நடுத்தர
வர்க்கத்தினரும், அறைக்கு ஒரு பெட்டி வைத்துள்ள மேட்டுக்குடிகளும்,
மாளிகை போன்ற வீட்டின் கழிவறையைக்கூட குளிரூட்டி சுகம் காணும்
பெருந்தனக்காரர்களும் இந்நிலையை உருவாக்கவில்லை. கிலோ மீட்டர் கணக்கில்
ஆழ்துளை இட்டு நிலத்தடி நீரை உறிஞ்சி வெளியே துப்பும் எந்தத்
தொழிற்சாலையும், நீரை விற்றுப் பணமாக்கும் எந்த நிறுவனமும், ஆற்றில்
கழிவு கொட்டும் எந்த ஆலையும் இந்த நிலைக்குக் காரணமல்ல. வயல்வெளிப்
புகைமூட்டம்தான் காரணம்.

இந்தச் சமூகம் அழியப் பிறந்தது என்றால் இந்தக் கதைகளை
நம்பிக்கொண்டிருக்கும். வாழப் பிறந்தது என்றால், இந்நேரம் எண்ணற்ற
கேள்விகளை எழுப்பி இருக்கும். நான் கவனித்தவரை, அவ்வாறான கேள்விகளை
எழுப்புவோர் மிகக் குறைவாக இருக்கிறார்கள். பெரும்பான்மையருக்கு டெல்லி
மூச்சுத் திணறல் என்பது ஒரு செய்தியாகவும், வயல்களால் உருவான
சிக்கலாகவும்தான் தெரிகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு, பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர், ‘காற்று
மாசுபாடு அதிகரிக்கிறது. மக்கள் முகமூடியுடன் அலையும் காலம்
நெருங்கிவிட்டது’ என்று வேதனைப்பட்டார். தொழிற்சாலைகளின் பெருக்கத்தையும்
வன அழிப்பையும் கட்டுப்படுத்த வேண்டும் என அவரும் பசுமைத் தீர்ப்பாயம்
அமைப்பும் கடந்த சில மாதங்களாக, கடுமையான கருத்துகளைக் கூறி வருகின்றன.
மிகையான வயல் வெளிப் புகையால் மாசு உருவாகும் என்பது உண்மை என்றால்,
மிகையான தொழிற்சாலைகளால் அதைக் காட்டிலும் அதிகமான மாசு உருவாகும்.

டெல்லியில் காற்றுத் தாக்குதல் நடக்கும் இதே நேரம், தமிழகத்திலும் காற்று
தன் தாக்குதலை நடத்திக்கொண்டுதான் உள்ளது. வடமேற்குப் பருவமழையைக்
காற்றுதான் அழைத்து வர வேண்டும். தமிழகத்திற்குள் அக்காற்று தன் மேகக்
கூட்டத்துடன் இதுவரை நுழையவில்லை. இப்போது நாம் ஐப்பசி மாதத்தின் இறுதிப்
பகுதியில் இருக்கிறோம். இந்நேரம் அடைமழை பொழிந்துகொண்டிருக்க வேண்டும்.
ஆங்காங்கே தூறல்களும் சிறிதளவு மழையுமாக ஐப்பசி கழிகிறது. தென்மேற்குப்
பருவமழையும் பல இடங்களில் பொழியவில்லை.

காங்கேயம் உள்ளிட்ட பல ஊர்களில் கடந்த மாதம், வறட்சி காரணமாக ஒரு
விபரீதச் செயல் நிகழ்ந்தது. புல் கூட முளைக்காத அளவுக்கு நிலம்
வறண்டதால், மாடுகளுக்குத் தீவனம் இல்லை. மாடு வளர்ப்போர் பலர், பஞ்சு
மூட்டைகளை வாங்கி, அவற்றை நீரில் ஊறவைத்து மாடுகளுக்கு ஊட்டினார்கள்.
பருத்திக்கொட்டையை ஆட்டுக் கல்லில் இட்டு, மாவு போல் அரைத்து,
மாடுகளுக்கு ஊட்டி விட்ட சமூகம் இது. இப்போது, நீரில் ஊறிய பஞ்சை
தீனியாக்கொண்டுள்ளது.

எப்போதும் குளுமையாக இருந்த பொள்ளாச்சியில் இப்போது வறண்ட காற்று
வீசுகிறது. திடீரென, வத்தலகுண்டில் வெள்ளம் பாய்கிறது. காவிரி நீர்ப்
பிடிப்புக் காடுகளில் இந்நேரம் கடும் மழை பொழிய வேண்டும். சிறு ஓடைபோல
அந்தப் பேராறு ஓடுகிறது. இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை
மாவட்டங்களில் குளங்களும் ஏரிகளும் வெடித்துக் கிடக்கின்றன.

தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் கோடையில் துவங்கிய வறட்சி இன்னும்
நீடிக்கிறது. நாமக்கல், கோவை, ஈரோடு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம்
மோசமான ஆழத்திற்குச் சென்றுவிட்டது. பதினைந்து குதிரைத்திறன் (15hp)
எந்திரங்களை  வைத்து நீர் இறைக்கும் நிலை பல இடங்களில் உள்ளது. பொதுவாக,
மூன்று, ஐந்து குதிரைத் திறன் எந்திரங்களோ போதுமானவை. நீர்மட்டம்
குறைந்தால், எந்திரங்களின் திறனை உயர்த்த வேண்டும் என்ற அறிவு
இச்சமூகத்தினருக்கு உள்ளது. நீர் மட்டம் குறைந்தால், பூமியைச் சீரழிப்பதை
நிறுத்த வேண்டும் என்ற மனசாட்சி இல்லாமல் போய்விட்டது.

’தமிழகம் தொழிற்துறையில் பின் தங்கிவிட்டது’ என்று இப்போது ஊடகங்கள் கவலை
தெரிவிக்கின்றன. ‘தமிழகத்தில் எந்தப் பன்னாட்டு நிறுவனமும் தொழில் துவங்க
வருவதில்லை’ என பல மேதைகள் கருத்து தெரிவிக்கிறார்கள். எய்ம்ஸ்
மருத்துவமனை தமிழகத்திற்கு வேண்டும், இன்னும் பல ஸ்மார்ட் நகரங்கள்
தமிழகத்திற்கு வேண்டும் என்றெல்லாம் குரல்கள் எழுகின்றன. ’இந்தக்
கூட்டத்துடன் நம் பிள்ளைகள் எப்படி வாழப் போகிறார்கள்?’ என்ற கவலை
அடிக்கடி எழுகிறது.

குடிக்கத் தண்ணீரில்லாத மக்கள், பணம் கொடுத்து வேதி நீரை வாங்கும்
மக்கள், நோய்களை உடலெங்கும் சுமந்து திரியும் மக்கள் இவ்வளவு பேர்
இருக்கும் இந்த நாட்டில் இன்னும் பல தொழிற்சாலைகளை வரவேற்பது
தற்கொலைக்குச் சமமானது. கடலூர், புதுச்சேரி ஆகிய இரு நகரங்களைச்
சுற்றிலும் உள்ள நுரையீரல் நோயாளிகளைப் பற்றிய கணக்கெடுப்பு
நடத்தப்பட்டால் குலை நடுக்கம் வரும். வடசென்னையும் அதன் புறநகரங்களும்
தொழிற்சாலைகளால் சந்திக்கும் சீர்கேடுகளைக் கண்டால் படித்த  சமூகத்தின்
மீது அருவருப்புதான் உருவாகிறது.

வெட்டப்படும் மலைகளைத் தடுப்பதற்கும், அழிக்கப்படும் காடுகளைக்
காப்பதற்கும், கொள்ளையிடப்படும் ஆறுகளை அரவணைப்பதற்கும் திராணியற்ற
கூட்டம்,  அயல்நாட்டு முதலீடுகள் இன்னும் வரவில்லை என ஒப்பாரி வைக்கிறது.
இவ்வாறெல்லாம் தொழில் வளர்ச்சியை ஆதரிப்பதுதான் ’முற்போக்கு’. எந்தத்
தொழிற்சாலையும் வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக நமது இயற்கைவழி
வாழ்வியலுக்குத் திரும்புவோம் எனக் கூறினால், அது பிற்போக்கு.

அயல்நாட்டு முதலீடுகள் வந்து குவியட்டும். முற்போக்குவாதிகள் அவற்றில்
பணி செய்யட்டும். அவர்கள் வங்கிக் கணக்குகளில் பணம் பெருகட்டும்,
இல்லங்களில் பொருட்கள் குவியட்டும், உணவு, நீர், காற்று யாவும்
மாசடையட்டும், மருத்துவத் தொழிற்சாலைகள் மேலும் செழிக்கட்டும், பணம் பணம்
பணம் என பணம் சிறகு முளைத்துப் பறக்கட்டும். பறக்கும் பணப் பறவைகளைப்
பிடிக்க, முற்போக்குவாதிகள் வலைவிரிக்கட்டும். புதிது புதிதாக கருவிகள்
அறிமுகமாகட்டும், வாகனங்கள் பெருகட்டும், புகை மூட்டம் விண்ணை முட்டடும்,
நீரும் நிலமும் கதறி அழட்டும். அக்கதறல் காதில் விழாதவகையில், கேளிக்கைக்
கூடங்களில் கூத்து நடக்கட்டும்.

மனிதர்களின் பேராசைகள் வெற்றி பெற்றால், முதல் அழிவு மனிதர்களுக்குத்தான்
ஏற்படும். முற்போக்குவாதிகளின் பேராசைகள் வெல்லும் முன், முட்டாள்களின்
பிற்போக்குத்தனங்கள் அதிகரிக்க வேண்டும். எனக்குத் தொழிற்சாலை வேண்டாம்,
நவீன சாதனங்கள் வேண்டாம். நல்ல நீரும் காற்றும் வேண்டும். உண்பதற்கு நல்ல
உணவு வேண்டும். வாழ்வதற்கு இயற்கையான சூழல் வேண்டும் என்ற விருப்பங்களில்
நிலை பெறுங்கள்.

டெல்லிக்கு அடுத்த நிலையில் காற்று மாசு உருவாகியுள்ள நகரம், பெங்களூர்.
அதற்கு அடுத்த இடம் சென்னைக்கு உள்ளது.

நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன். இது ஊழிக் காலம். இன்றைய தேதியில்
புவியெங்கும் நிகழ்ந்துகொண்டுள்ள மாற்றங்களைச் சற்றே கவனித்துப்
பாருங்கள். இப்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பெருநிறுவனத்தினரும்
அவற்றின் அடிமைகளும் நம்மிடம் பொய் பேசிக்கொண்டுள்ளனர். நிகழும் சூழல்
மாற்றங்களைப் பற்றி அவர்கள் எதுவும் சொல்வதில்லை.

ஊழியைத் தடுப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால், ஊழியில் தப்புவதற்கு நமக்கு
வழிகள் உள்ளன. மனதளவில் உங்களிடம் மாற்றம் வர வேண்டும். இந்தப் பூமி
நமக்காகவும் பிர உயிரினங்களுக்காகவும் படைக்கப்பட்டுள்ளது. நாம் அனைத்து
உயிரினங்களுடனும் நல்லிணக்கமாக வாழ வேண்டும். பூமியைச் சிதைக்கும் எந்தத்
தொழில்நுட்பத்தையும் நிராகரிக்க வேண்டும். உடனடியாக மரபுக்குத்
திரும்புவது, இயலாததுதான். ஆனால், திரும்ப வேண்டும் என்ற சிந்தனையை
விருப்பமாகக் கொள்ள வேண்டும். அந்த விருப்பத்தில் மாறாமல், நிலைபெற
வேண்டும். பிசாசுகளின் நவீன அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், உள்ளத்தில்
தெளிவுகொண்டு இயற்கையின் பாதையில் நடக்க வேண்டும்.

நேற்று சென்னையைத் தாக்கிய வெள்ளத்தை உலகம் வேடிக்கை பார்தது. இன்று
டெல்லியின் மூச்சுத் திணறலை வேடிக்கை பார்க்கிறது. அன்றாடம் ஏதேனும் ஒரு
நகரம் தாக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பதுதானே இப்போதைய நாகரிகம்! புகுசிமா
எனும் ஊரில் அணு உலை வெடித்து, பல்லாயிரம் மக்கள் அழிந்ததை வேடிக்கை
பார்த்த பின்னரும், கூடங்குளத்தில் அணு உலை அமைக்க ஆதரவு கொடுக்கும்
சமூகம்தானே இது! இது எல்லாவற்றையும் வேடிக்கையாகத்தான் பார்க்கும்.

நீங்களும் வேடிக்கை பார்க்காதீர்கள். இந்தச் செய்திகள், சம்பவங்கள்
உணர்த்தும் கருத்தைப் புரிந்துகொள்ளுங்கள். வீடுகளில் உள்ள நவீன
சாதனங்களை படிப்படியாகக் குறையுங்கள். வாகனப் பயன்பாட்டை, எரிபொருள்
பயன்பாட்டை குறையுங்கள். குறைந்தளவு பணம் இருந்தாலும் நன்றாக
வாழும்படியான வாழ்க்கைக்குத் திரும்புங்கள். ஏதேனும் வெளிநாட்டுக்கு
அனுப்பலாம் அல்லது வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே வந்தால் வேலையில்
அமர்த்தலாம் என்ற சிந்தனையுடன் பிள்ளைகளை வளர்க்காதீர்கள். இந்த
நிலத்திலேயே நமக்கான எல்லா வளங்களும் படைக்கப்பட்டுள்ளன. இயற்கையைச்
சுரண்டாத எண்ணற்ற தொழிலகங்களை நம்மால் உருவாக்கி நீடு வாழ முடியும்.

திருவாசகத்தில் ஆசான் மாணிக்கவாசகர் இறைவனது வடிவங்களைப் பின்வருமாறு குறிக்கிறார்,
‘நிலம் நீர் நெருப்பு உயிர் நீள் விசும்பு….’
- நீயே நிலமாகினாய், நீராகினாய், நெருப்பாகினாய், வான் வெளியாகினாய்
என்று கூறுகையில், காற்றாகினாய் என்று குறிப்பிடாமல், ‘உயிராகினாய்’
என்கிறார். காற்றும் உயிரும் ஒன்று என்பது இதன் பொருள்.
எப்போது காற்று மாசுபட்டு, சுவாசிக்க இயலாத நிலை வந்துவிட்டதோ அப்போதே,
உயிர்களின் சிதைவும் அழிவும் துவங்கிவிட்டது என்று பொருள்.

மரபுக்குத் திரும்புங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக