ஞாயிறு, 4 ஜூன், 2017

சென்னை மீனவர் குடியிருப்பை தாக்கிய ஆந்திரா மீனவர் தமிழர்களுக்கு இடையே மோதலை தூண்டும் தெலுங்கர்

பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை: 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம்

 
தமிழக - ஆந்திர மாநில எல்லையில், 60 ஆண்டுகளாக நிலவி வந்த மீன்பிடி தகராறு, நேற்று, கலவரமாக வெடித்தது. பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்த ஒரு கிராமத்தினர் மீது ஆத்திரம் கொண்ட, தமிழக - ஆந்திர மாநில கூட்டு மீன்பிடி சங்கத்தினர், அவர்கள் கிராமத்தில், பெட்ரோல் குண்டு வீசி, தீக்கிரையாக்கினர். தாக்குதலைத் தடுத்த, போலீஸ் அதிகாரிகள் உட்பட மூன்று பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, பழவேற்காடு ஏரி, 250 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. பழவேற்காடு கிராமத்தில் இருந்து, ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதி வரை பரந்து விரிந்துள்ள இந்த ஏரியில், இரு மாநில மீனவர்கள் தங்களுக்கு எல்லை வகுத்து, மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.இதில், கும்மிடிப்பூண்டி அடுத்த, ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள தமிழக பகுதிகளான, நொச்சிகுப்பம், பாட்டைகுப்பம், வெங்கடேச பெருமாள் நகர் உள்ளிட்ட, எட்டு மீனவ கிராமத்தினரும், ஆந்திர மாநிலத்தின், 16 குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களும் இணைந்து, தமிழக- - ஆந்திர மாநில கூட்டு மீன்பிடி சங்கம் அமைத்து, பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.தமிழக எல்லைக்கு உட்பட்ட எட்டு கிராம மீனவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மீன்பிடிப்பு பகுதி போதுமானதாக இல்லை; கூடுதலாக இடம் ஒதுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக, அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இதனால், அருகில் உள்ள சின்ன மாங்கோடு, பெரிய மாங்கோடு, புதுக்குப்பம் உள்ளிட்ட, சங்கத்தில் சாராத, மற்ற ஒன்பது மீனவ கிராமங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அந்த நேரத்திலெல்லாம், வாக்குவாதம், தகராறு ஏற்படுவது, பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
கடந்த 8ம் தேதி, நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 30 பேர், ஒன்பது படகுகளில், பழவேற்காடு ஏரியில் உள்ள குருவிதிட்டு பகுதியில், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.தகவல் அறிந்த மாங்கோடு தரப்பு மீனவர்கள், 300 பேர், 75 படகுகளில், அங்கு சென்று தகராறு செய்தனர். அவர்கள் தாக்கியதில், நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, ஏழு பேர் காயமடைந்தனர்.
300 படகுகளில் முற்றுகை :இதனால், கோபம் அடைந்த நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்களும், ஆந்திர மாநில மீனவர்கள், 1,000க்கும் மேற்பட்டோர், 300 படகுகளில், ஈட்டி, வேல் கம்பு, பெட்ரோல் வெடிகுண்டு உள்ளிட்ட, ஆயுதங்களுடன், நேற்று காலை, சின்ன மாங்கோடு மீனவ கிராமத்தை முற்றுகையிட்டனர்.இந்த தகவலை அறிந்து, திருவள்ளூர் கூடுதல் எஸ்.பி., ஸ்டாலின் தலைமையிலான, 250 போலீசார், சின்ன மாங்கோடு கிராமத்தில் குவிக்கப்பட்டனர்.
நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள் ஊடுருவுவதை கண்டதும், சின்ன மாங்கோடு மீனவர்கள் வீடுகளை பூட்டி, ஓட்டம் பிடித்தனர். அவர்களை தாக்க, நொச்சிக்குப்பம் மீனவர்கள் வந்தனர். அவர்களை தடுத்து, எச்சரிக்கும் வகையில், போலீஸ் அதிகாரி ஒருவர், துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டார். பதிலுக்கு அவர்கள், பெட்ரோல் வெடிகுண்டை, போலீசார் மீது வீசி, முன்னேறினர்.இதில், ஏ.டி.எஸ்.பி., ஸ்டாலின், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், ஆயுதப்படை காவலர் ராமமூர்த்தி ஆகியோருக்கு, பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும், சென்னை அப்பல்லோ மற்றும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களை தவிர, மேலும் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
மேலும், போலீசாரின் மூன்று கார், இரண்டு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை, அடித்து உடைத்து, அவற்றின் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
வீடுகள், படகுகள் மீது வெடிகுண்டு :கூட்டத்தை கட்டுப்படுத்த, போலீசாரால் முடியாத நிலையில், சின்ன மாங்கோடு கிராமத்திற்கு புகுந்த நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள், படகுகள் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசினர். இதில், அவை எரிந்தன.பின், ஊருக்குள் சென்று, வீடுகளை சூறையாடி, தீயிட்டு கொளுத்தினர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது.இதில், 50 வீடுகள், 60 படகுகள் மற்றும் வீட்டில் இருந்த, மின்னணு மற்றும் மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன.
அருகில் உள்ள கிராமத்தினர், அச்சத்தில் வீடுகளை காலி செய்து வெளியேறினர். பதற்றமாக சூழல் நிலவுவதால், மேற்கண்ட மீனவர்கள் பகுதியில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- -நமது நிருபர்- -


Advertisement



தெலுங்கு கடற்படை தாக்குதல் வேட்டொலி search

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக