ஞாயிறு, 11 ஜூன், 2017

மாயூரம் வேதநாயகம் 1870 தமிழ் வழக்காடு மொழியாக போராடியவர் கிறித்தவர் முதல் நாவல்

aathi tamil aathi1956@gmail.com

11/10/14
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
'தமிழ்மொழி மீட்பு போராளி' மாயூரம் ச.வேதநாயகம்
பிறந்தநாள்
11.10.1826
வக்கீல்கள் ஆங்கிலத்தில் வாதிடுவது அக்கிரமம்!
வேதநாயகம் தமிழில் கவிதைகள் இயற்றும் ஆற்றல்
பெற்றிருந்தார். இவர் இயற்றிய கவிதைகள் 'சர்வ சமய
சமரசக் கீர்த்தனை' என்னும் பெயரில் நூல் வடிவில்
வெளி வந்துள்ளன. வேதநாயகர், மாவட்ட
நீதிபதி (முனிசீப்) பதவியில்
இருந்து பணி புரிந்திருக்கிறார். மாயூரம் (இன்றைய
மயிலாடுதுறை) நகர மன்றத் தலைவராகவும்
இருந்திருக்கிறார். தமிழில் 'பிரதாப முதலியார்
சரித்திரம்' என்னும் நாவல் இயற்றி, தமிழ்
உரை நடைக்குச் சிறப்புத் தேடியுள்ளார். இவரின் சம
காலத்தவரான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, இராமலிங்க
வள்ளலார், கோபால கிருஷ்ண பாரதியார்
ஆகியோரோடு நெருங்கிய உறவும் கொண்டவர்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஆங்கில மொழி மோகம்
கொண்டு வழக்கறிஞர்கள் திரிவதைக்
கண்டு வேதனை அடைந்தார். 'நீதி மன்றத்தில் தமிழ்
வேண்டும்' என்று முதன் முதலில் முழக்கமிட்ட
தமிழ்ப்போராளியின் கனவு இன்னும்
நிறைவேறாமலே உள்ளது.
தமது சீற்றத்தை எழுத்தாகவும் பதிவு செய்துள்ளார்.
அவற்றை 'மாயூரம் வேத நாயகம்'
நூலிலிருந்து தொகுக்கப்பட்டதை கீழே தருகின்றோம்!
"ஆங்கிலம் ஒன்றையே கற்றார்; தங்கள்
ஆவியோடு ஆக்கையை விற்றார்
தாங்களும் அந்நியர் ஆனார் இன்பத்
தமிழின் தொடர்பற்றுப் போனார்".
தமிழகக் கோர்ட்டுகளிலே தமிழ் வக்கீல்கள் தமிழில்
வாதிக்காமல், ஆங்கிலத்திலே வாதிக்கிறார்கள். தேச
மொழியும் தமிழ்; கோர்ட்டிலே வழங்குகிற மொழியும்
தமிழ் நியாயாதிபதியும் தமிழர்; வாதிக்கிற
வக்கீலும் தமிழர்; கட்சிக்காரர் தமிழர் -எல்லாம் தமிழ்
மயமாக இருக்க, யாருக்குப் பிரதியாக அவர்கள்
ஆங்கிலத்தில் விவாதிக்கிறார்களோ தெரிய வில்லை.
நியாயாதிபதி அல்லது வக்கீல் ஆங்கிலராய் இருந்தால்
ஆங்கிலத்திலே வாதிப்பது நியாயம். தமிழ்
நியாயாதிபதி முன், தமிழ் வக்கீல்
ஆங்கிலத்திலே வாதிப்பது ஆச்சரியமல்லவா?
தமிழ் வக்கீல்கள் தாய்மொழியைத் தள்ளி விட்டு அந்நிய
மொழியிலே வாதிப்பது அசந்தர்ப்பமல்லவா?
தமிழ் நன்றாகத் தங்களுக்குப் பேச
வராது என்று கெளரவம் போலச் சொல்லிக்
கொள்ளுகிறார்கள். இதனினும்
இழிவு வேறொன்றுமில்லை.
சட்ட நூல்கள் ஆங்கிலத்திலே அமைந்து கிடப்பதாலும்,
சட்ட நுணுக்கங்களுக்குரிய சரியான பதங்கள்
தமிழிலே இல்லாமையாலும் தாங்கள் ஆங்கிலத்தைப்
பயன்படுத்துவதாகச் சிலர் சொல்லுகிறார்கள்.
அது அறியாமையே; உண்மையல்ல. தமிழ் நூல்களைத்
தக்கபடி ஆராய்ந்தால் பதங்கள் அகப்படாமல் போகா.
இரண்டொரு குழூஉக் குறிகளுக்குத் தமிழ் சொற்கள்
இல்லையென்றால் அவற்றை மட்டும்
ஆங்கிலத்திலே வழங்கினால் அவர்களை யார் கோபிக்கப்
போகிறார்கள்!
தமிழ் நியாயாதிபதிகளும் வக்கீல்களும் தாங்கள்
பயின்ற ஆங்கிலம் மறந்து போகாதிருக்க அதை வழங்கி,
நியாய பரிபாலகத்தைக்
குளறுபடி செய்வது ஒழுங்கா?
விசாரணைகள், தீர்ப்புகள், அபராதங்கள்,
ஆக்கினைகளை அனைவரும் அறிவது நல்லதல்லவா?
விவகாரங்களைக் கேட்டு, அதனால் விவேகம்
அடைவதற்காகக் கோர்ட் வாசல்களிலே மக்கள்
கூடுகின்றனர். ஆனால் அவர்களுக்குத் புரியாத
மொழியிலே விவகாரம் நடப்பதால் குருடன் கூத்துப்
பார்க்கப் போன கதையாய் முடிகிறது.
சுருங்கச் சொன்னால், தமிழ் நியாயாதிபதி முன்
ஆங்கிலத்திலே வாதிக்கின்ற தமிழ் வக்கீல்கள் தமிழ்
மொழியையும் தமிழ் மக்களையும் அவமதிக்கிறார்கள்.
ஒவ்வொரு வழக்கிலும் உண்மையைக்
கண்டு பிடித்து நீதி வழங்குவது கோர்ட்டார் கடமை.
தாய்மொழியிலே கோர்ட் நடவடிக்கைகள் நடந்தால்
மட்டுமே உண்மை வெளியாகுமேயன்றி, மக்களுக்குப்
புரியாத மொழியில் நடந்தால்
எப்படி உண்மை வெளியாகும்?
சிலர் ஆங்கிலம், இந்தி முதலிய பிற மொழிகளைப்
படிக்கத் தொடங்கி, அந்த மொழியும் தெரியாமல், பேசத்
தெரியாதவர்களாய் விடுகிறார்கள். இவர்கள்
பிறமொழிகளில் முழு அறிவுடையவர்களாக இருந்தும்
சொந்த மொழியைப் படிக்காமல் இடை வழியில்
விட்டு விடுகிறார்கள்.
வக்கீல்கள் ஆங்கிலத்தில் வாதிப்பது அக்கிரமம்
என்று சில தமிழ் நியாயாதிபதிகளுக்குத்
தெரிந்திருந்தும் அதைக் கண்டித்தால்,
தங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று மற்றவர்கள்
நினைப்பார்களே என்று ஆங்கில வாதத்திற்கு இடம்
கொடுத்திருக்கிறார்கள். நடவடிக்கைகளையும் அவர்கள்
ஆங்கிலத்திலேயே நடத்துகிறார்கள். சில
சமயங்களிலே நியாயாதிபதியும் வக்கீலும்
ஆங்கிலத்தை நன்றாகப் படியாதவர்கள். அதனால் ஒருவர்
சொல்வது ஒருவருக்குத் தெரியாமல்
கைச்சண்டை செய்து சங்கடப்படுகிறார்கள். கோர்ட்டுகள்
நாடகச் சாலையாகத் தோன்றுகின்றன.
சொந்த மொழியில் பிழை இல்லாமல்
இரண்டு வரி சேர்த்தெழுதத் தெரியாமலும் தங்களுடைய
பெயர்களையே ஒழுங்காக எழுதத் தெரியாமலும்,
'வைத்திய நாதன்' என்பதற்குப் 'பைத்திய நாதன்'
என்று கையெழுத்துப் போட்டுக் கொண்டு உயிர்
வாழ்கிறார்கள்.
ஐரோப்பாக் கண்டத்தில் தன்னுடைய
கையெழுத்தையே பிழையற எழுதத்
தெரியாதவனுக்கு ஓர் அலுவலும் கிடைக்காது.
பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளைப்
பயின்று விட்டுத் தாய்மொழியாகிய
தமிழை அறியாதவர்கள் மாதா வயிறெரிய
மகேசுவரி பூஜை செய்பவர்களுக்கு ஒப்பாவார்கள்.
தமிழைப் புறக்கணிப்பவர்கள் தமிழ் நாட்டில் வசிக்க
யோக்கியதை உடையவர்கள் அல்லர். அவர்கள் எந்த ஊர்
பாஷையைப் படிக்கிறார்களோ, அந்த ஊரே அவர்களுக்குத்
தகுந்த இடம்"
-மாயூரம் வேதநாயகம்.
(ம.பொ.சிவஞானம் எழுதிய 'ஆங்கில ஆதிக்க
எதிர்ப்பு வரலாறு' நூலிலிருந்து)

வேதநாயகம்பிள்ளை முதல் இந்திய நீதிபதி 
விஜய் ஆண்டனி கொள்ளுத்தாத்தா 
வெள்ளாளர் வேளாளர் மொழிப்பற்று தமிழ்ப்பற்று ஆங்கிலேயர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக