ஞாயிறு, 11 ஜூன், 2017

ஆரியர்கள் யார் - வழிப்போக்கன்


JUN
17
வரலாற்றினை நாம் திருப்பிப் பார்க்கும் பொழுது ஒன்று நமக்குத் தெளிவாகப் புலனாகின்றது.
சில விடயங்கள் மறக்கப்பட்டு இருக்கின்றன.
சில விடயங்கள் மறைக்கப்பட்டு உள்ளன.

அதுவும் இந்தியாவின் வரலாற்றினைப் பார்க்கும் பொழுது தெளிவானப் பக்கங்களை விட குழம்பிய பக்கங்கள் தான் அதிகம் தெரிகின்றது. குழம்பிய பக்கங்களில் பொதுவாக யாரும் அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை. ஆனால் நமது பயணத்திற்கான சில விடயங்கள் அந்த குழம்பியப் பக்கங்களில் இருப்பதினால் நாம் அப்பக்கங்களை இப்பொழுது கண்டுத் தான் ஆக வேண்டி இருக்கின்றது. அதற்கு முன் ஒருக் கேள்வி...

இந்தியாவின் மேல் இது வரை எத்தனை பேர் படை எடுத்து வந்து இருக்கின்றனர்?. இக்கேள்விகளுக்கு நாம் வரலாற்றில் படித்த பதில்கள் அனேகமாக முஹம்மது கோரியில் தொடங்கி ஆங்கிலேயர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் வரை சென்று முடியும். அதாவது கி.பி 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றைய தேதி வரை இப்பட்டியல் நீளும். இல்லை கோரிக்கு முன்னரும் படையெடுத்து வந்தவர்கள் தெரியும் என்கின்றீர்களா. நல்லது தான். ஏனெனில் நாம் அவர்களைத் தான் இப்பொழுது பார்க்கப் போகின்றோம். அதற்கு முதலில் கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு செல்ல வேண்டி இருக்கின்றது. நமக்காக அங்கே பெர்சியப் பேரரசர் சைருஸ் இந்தியாவின் மேற்கு பகுதியான காந்தாரப் பகுதியில் காத்துக் கொண்டு இருக்கின்றார் ஒரு பெரும் படையோடு. வரலாற்றுக் குறிப்புகள் படி இந்தியாவின் மேல் படையெடுக்கும் முதல் அந்நிய அரசர் இவர். பொதுவாக இந்தியாவின் தெற்குப் பகுதிகளை விட வட மேற்குப் பகுதிகளே அதிகமாக தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. காரணம் தெற்கினை தாக்க வேண்டும் என்றால் கடல் வழியே வருவதை தவிர வேறு வழி இல்லை. ஆனால் வட மேற்கோ அவ்வாறு இல்லை. திறந்தே இருக்கின்றது.

இந்நிலையில் தான் பெர்சியாவின் அரசர் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துகின்றார். வெற்றியும் பெறுகின்றார். இந்தியாவின் மேற்குப் பகுதிகளான காந்தாராவில் பெர்சிய ஆதிக்கம் தொடங்குகின்றது. காலப்போக்கில் இன்றைய ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகள் முழுக்கவும் பெர்சியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. இது நடப்பது கி.மு 520 ஆம் ஆண்டு. நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் இவர்கள் பின்னர் அலெக்ஸாண்டரின் இந்தியப் படை எடுப்பின் பொழுது தோற்க்கடிக்கப்படுகின்றனர். அவர்களின் கீழே இருந்தப் பகுதி இப்பொழுது கிரேக்கர்களின் வசம் போகின்றது. இதன் காலம் கி.மு நான்காம் நூற்றாண்டு. அலெக்சாண்டர் இந்தியாவின் மீது போர் தொடுத்த நூற்றாண்டு. இந்தியாவில் அலெக்சாண்டர் பல வெற்றிகள் பெற்றதும் பின்னர் பின் வாங்கியதும் வரலாறு. அது நமக்கு இப்பொழுது முக்கியமில்லை. முக்கியம் என்னவெனில் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் வேற்றவர்களின் தாக்குதல்கள் இருந்து இருக்கின்றது.

கி.மு ஆறாம் நூற்றாண்டில் பெர்சியர்களும், கி.மு நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்களும் இந்தியாவின் மேற்குப் பகுதியினை தாக்கி இருக்கின்றனர். முதலில் பெர்சியர்களுக்கும் காந்தாரப் பகுதியில் இருந்த இந்தியர்களுக்கும் யுத்தம் நடந்து இருக்கின்றது. அதில் வெற்றிப் பெற்ற பெர்சியர்கள் அங்குள்ள இந்தியர்களை ஆளுகின்றனர். அவர்களை தங்களுடைய மற்ற போர்களுக்கும் பயன்படுத்துகின்றனர். பின்னர் கி.மு நான்காம் நூற்றாண்டில் அலெக்சாண்டர் பெர்சியர்களை தோற்கடித்து காந்தாரப் பிரதேசத்தினைக் கைப்பற்றுகின்றார். இவ்வாறு முதலில் பெர்சியர்களின் தாக்கத்திற்கு உட்பட்ட காந்தாரம் பின்னர் கிரேக்கர்களின் தாக்கத்திற்கு உட்படுகின்றது. நிற்க.

மேலே உள்ள செய்திகள் மூலம் நாம் பல யுத்தங்கள் கி.மு ஆறாம் நூற்றாண்டில் இருந்து வடக்கே நிகழ்ந்துள்ளன என்று அறியப் பெறுகின்றோம். இவற்றை நாம் காண்பதற்கு காரணம் இந்த யுத்த காலத்திலேயே தான் ரிக் வேதத்தில் குறிக்கப்பட்டு உள்ள சில யுத்தத் தொடர்பான பாடல்கள் பாடப்பட்டு உள்ளன என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

"ஆரியர்கள் இரானியர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை பெற்று இருந்தனர் என்பது அவர்களது செய்யுள்களான அவேசுடாவிலும்(Avesta Scriptures) (ஈரானியர்கள் அல்லது பெர்சியர்கள்) ரிக் வேதத்திலும் காணப்படும் வழிபாட்டு முறைக்கும் மொழிக்கும் உள்ள ஒற்றுமையை வைத்தே நன்கு புலனாகின்றது." என்கின்றார் எ.வ. தோம்ப்சன் தனது 'இந்தியாவின் வரலாறு' என்ற புத்தகத்தில் (E.W.Thompson - History of India). மேலும் ர.ச. ஷர்மாவின் " சோம பானம் என்னும் பயன்பாடு ஹோம (Haoma) என்று அவேசுட மொழியில் வழங்கப்படும். இந்தப் பயன்பாடு ஆரியர்கள் மத்தியிலும் சரி இரானியர்கள் மத்தியிலும் சரி ஒன்று போல் இருக்கின்றது." என்றக் கூற்றும் கவனிக்கத்தக்கது (புத்தகம் - ஆரியர்களைத் தேடி) (R.S.Sharma - Looking for the Aryans).

டேவிட் பிரௌலே தனது 'ஆரியர் படையெடுப்பு என்றொரு கற்பனை (David Frawley - The Myth of the Aryan Invasion of India)' என்ற தனது புத்தகத்திலே 'ஆஸ்கோ பர்பொலோ வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தங்கள் இந்தியாவில் நடை பெற்ற யுத்தங்களே அல்ல அவை ஆப்கானிஸ்தானில் இரு வேறு இந்திய - ஈரானிய இனக்குழுக்களுக்குள் நடந்தவையே ஆகும்என்று கூறுகின்றார்' என்று குறிப்பிட்டு உள்ளார்.

இங்கே நாம் காண வேண்டி இருக்கின்றது இந்திய- ஈரானிய இனக்குழுக்கள் என்ற சொல்லையே. ஆய்வாளர்களின் கூற்றின் படி காந்தாரத்தை படை எடுத்து வென்ற பெர்சியர்கள் அங்கே இருந்தவர்களோடு திருமண முறைப்படி கலக்கின்றனர். அவ்வாறு மேற்கு இந்தியாவில் பல இனக்குழுக்கள் அக்காலத்தில் தோன்றின. அவர்களின் மூலமே இந்தியாவின் அரசியல் அமைப்புகள் வெளியே கசிந்து பின்னர் கிரேக்கம் மற்றும் பக்ட்ரியன் இனத்தவரும் இந்தியாவின் மேல் படை எடுத்தனர் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கு சான்றாக தட்சசீலத்தை ஆண்ட அம்பி என்ற அரசன் தான், இந்தியா அரசனான புருசோதமனின் மேல் தான் கொண்ட பொறாமைக் காரணமாக அலேசேண்டேருக்கு இந்தியாவின் மேல் படை எடுத்து வர ஒரு ஓலை அனுப்புகின்றான் என்பது வரலாறு. அந்த அம்பியும் ஒரு பெர்சிய கலப்பினத்தவன் என்று கே.ல.குரானா தான் எழுதிய 'இந்தியாவின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு' என்ற நூலில் குறிப்பிடுகின்றார் (K.L.Khurana - The Political and Cultural History of India).

"பெர்சிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவின் அரசியலில் உள்ள பலவீனங்களை உலகுக்கு வெளிப்படுத்தினர். இதுவே கிரேக்கர்களையும் பின்னர் பக்ட்ரியன்களையும் இந்தியாவின் மீது படையெடுத்து பின்னர் வரச் செய்தது."

"அம்பி பண்டைய இந்திய வரலாற்றில் தனது அரசியல் சுய நலத்துக்காக புருசோதமனுக்கு தோற்கடிக்க அலேசேண்டேரை இந்தியா வரக் கூறி ஓலை அனுப்பிய ஒரு துரோகியாகவே குறிக்கப்படுகின்றான்."

சரி... இப்பொழுது இந்தியாவின் மேற்கில் பல இனக்குழுக்கள் தோன்றிவிட்டன. அலேசேண்டேரும்இந்தியாவின் மீது போரிட்டு சென்று விட்டார். கிரேக்க தாக்கமும் பெர்சிய தாக்கமும் இந்தியாவின் மேற்கில் இருக்கின்றன. இக்காலத்தில் தான் இந்தியாவின் வரலாற்றில் குறிக்கப்பட்ட ஒரு மாபெரும் வீரன் தோன்றுகின்றான்.

சந்திர குப்த மௌரியன். - தோன்றி மௌரியப் பேரரசினை நிறுவுகின்றான். இவன் காலத்தில் சிதறுண்ட இந்தியாவின் மேற்குப் பகுதிகள் இவனது பேரரசில் இணைய ஆரம்பிகின்றன. அவற்றுடனே அந்த இந்திய - ஈரானிய இனக்குழுவினரும் தான். சந்திரா குப்தனுக்கு பின்னர் அவன் மகன் பிந்துசாரா வருகின்றான். அவன் பின்னர் இந்தியா கண்ட மாபெரும் சக்கரவர்த்தி அசோகன்வருகின்றார். கிட்டத்தட்ட முழு இந்தியாவுமே மௌரியப் பேரரரசின் கீழ் வருகின்றது. தெற்கே பாண்டியர்களையும் சோழர்களையும் தவிர்த்து. மௌரியப் பேரரசு அதனது பொற்காலத்தை அடைகின்றது. அந்த காலத்துடனையே ஒரு மாற்றமும் வருகின்றது.

அசோகன் புத்தத்தை தழுவுகின்றான். வன்முறையை கை விடுகின்றான். அன்பினைக் கைப் பிடிக்கின்றான். அன்பு வளர ஆரம்பிக்கின்றது. அதன் கூடவே பௌத்தமும். ஆனால் பேரரசு தளர்கின்றது. சிறு மன்னர்கள் தங்களை மௌரியப் பேரரசில் இருந்து பிரித்துக் கொள்ள தொடங்குகின்றனர்.

இந்நிலையில் தான் காலங்கள் ஓடுகின்றன. மௌரியப் பேரரசு இறுதியில் பிரகதரத்தனை வந்து அடைகின்றது. அவனுடைய பரமரையில் யாருக்கும் கிட்டாத ஒரு பெயர் இவனுக்கு கிட்டுகின்றது - 'மௌரியப் பேரரசின் கடைசி அரசன்' என்று. அதற்கு காரணமாக அமைவது புஷ்யமித்ர சுங்கன் (Pushyamitra sunga) என்ற இவனது படைத் தளபதி ஆவான்.

தன்னுடைய படை அணிவகுப்பை பிரகதரத்தன் காண சென்று இருந்த பொழுது அவனால் மிகவும் நம்பப்பட்ட படைத் தளபதியான புஷ்யமித்ர சுங்கனால் கொலை செய்யப்படுகின்றான். மன்னனைக் கொன்ற புஷ்யமித்திரன் சதியால் அரசைப் பிடிக்கின்றான். இந்த புஷ்யமித்ர சுங்கன் - ஒரு பெர்சிய வம்சாவளியைச் சார்ந்தவன் என்பது வரலாறு. நமது மொழியில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஆரியன்.

இவ்வாறு கடைசி மௌரியப் பேரரசனைக் கொன்று மௌரியப் பேரரசை ஒரு முடிவுக்கு கொண்டு வந்த இவன் சுங்க அரசை நிறுவுகின்றான். இதுவே இந்திய மண்ணில் அமைந்த முதல் ஆரிய அரசு. காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு.

புத்தத்தை ஆதரித்த மண்ணில் புஷ்யமித்திரன் வேத வேள்விக் கொள்கைகளை வளர்க்கின்றான். இவனது காலத்திலையே இந்தியாவில் முதல் முறையாக வேத கால வழிபாட்டு முறைக்கு சான்றுகள் கிடைக்கின்றன. இக்காலத்துக்கு முன்னால் வேத வேள்விப் பழக்கம் இந்தியாவில் இருந்ததற்கு சான்றுகளே இல்லை. மேலும் இவனே இந்திய வரலாற்றில் அசுவமேத யாகம் செய்த முதல் ஆளாகவும் அறியப்படுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இவனின் காலத்தில் மீண்டும் மேற்குப் பகுதி கிரேக்கர்களின் வசம் செல்கின்றது. பக்ட்ரியன்(Bactria) இடத்தை ஆண்டு வந்த டெமெத்ரிஉஸ் (Demetrius) என்ற கிரேக்க அரசன் காந்தாரத்தை பிடிக்கின்றான். அதில் இருந்து நீண்ட காலத்துக்கு தட்சசீலம் கிரேக்கர்களின் கையிலேயே இருக்கின்றது. சரி இப்பொழுது மீண்டும் புஷ்யமித்ர சுங்கனிடம் வருவோம். புஷ்யமித்ரனின் பின்னர் அவனுடைய மகன் அக்னிமித்திரன் அரியணைக்கு வருகின்றான். அவ்வாறே சுங்கர்களின் ஆட்சி தொடர்கின்றது. வேத வேள்வியும் தான்.
ஆனால் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதைப் போல சுங்கர்களும் ஆட்சியையும் சூழ்ச்சியால் ஒரு முடிவுக்கு வருகின்றது.

இம்முறை ஆட்சியை பிடிப்பவர்கள் கன்வர்கள் (Kanvar). ஒற்றுமை என்னவெனில் இவர்களும் ஒரு பெர்சிய இனக் குழுவை சேர்ந்தவர்கள் தான். இது நடப்பது கி.மு முதல் நூற்றாண்டில். இம்முறை ஆட்சியைப் பிடிப்பவன் வாசுதேவன் எனப்படும் ஒரு கன்வன். ஆனால் இவர்களின் ஆட்சியையும் நீண்ட நாள் நீடிக்கவில்லை கி.மு 75 இல் ஆரம்பித்த இவர்கள் ஆட்சி கி.மு 26 இல் முடிவடைகின்றது.

முடித்து வைப்பவர்கள் தெற்கில் இருந்து வந்த சாதவாகனர்கள் (Satavahanas). மௌரியப் பேரரசினை அடுத்து அன்னியரின் ஆட்சியினால் நிலவி வந்த குழப்பத்தை இவர்கள் ஒரு முடிவுக்கு கொண்டு வருகின்றனர்.அந்நியர்களின் ஆட்சி ஒரு முடிவுக்கு இந்தியாவில் வருகின்றது. தற்காலியமாக.

கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை இவர்கள் ஆண்டு வந்தக் காலத்தில் இந்தியா அமைதி நிலவும் ஒரு தேசமாக இருக்கின்றது. ஆனால் கிரேக்கர்கள் கைப்பற்றி இருந்த மேற்குப் பகுதியிலோ இன்னும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. மேற்கில் இருந்தும் சரி... மத்திய ஆசியாவிலும் இருந்தும் சரி அப்பகுதி எப்பொழுதும் தாக்குதலுக்கு உட்பட்டுக் கொண்டே இருந்தது.

கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி ஒன்றாம் நூற்றாண்டு வரை மேற்குப் பகுதி பல மாற்றங்களைச் சந்தித்து வந்து இருக்கின்றது. கிரேக்கர்களின் வசம் இருந்த காந்தாரப் பகுதியை கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் சகர்கள் (Sakar or Scythian) தாக்கிக் கை பற்றுகின்றனர். சகர்கள் என்பவர்கள் ஒரு ஈரானிய நாடோடி இனத்தவர். மத்திய ஆசியாவில் இருந்த அவர்களை குஷானர்கள் (Kushanars) என்ற சீன நாடோடி இனத்தவர் தோற்கடித்து துரத்த சகர்கள் இந்தியாவின் மேற்குப் பகுதியில் நுழைகின்றனர். இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் இவர்களிடம் அக்னியை வழிபடும் பழக்கம் இருக்கின்றது. அவ்வாறு மேற்குப் பகுதியில் நுழைந்து இன்றைய ஆப்கானிஸ்தான் பகுதியை பிடிக்கின்றனர்.

ஆனால் இவர்களால் நீண்ட காலம் அங்கே ஆட்சியில் நீடித்து இருக்க முடியவில்லை. காரணம் பார்தியர்களின் (Parthian) படை எடுப்பு. பார்தியர்கள் என்பவர்கள் இன்னொரு இரானிய நாடோடி இனத்தவரே. சகர்களை விட பலம் பொருந்திய இவர்களின் முன் சகர்கள் தோற்கின்றனர். காந்தாரம் பார்தியர்களின் கை வசம் செல்கின்றது. கி.மு முடிவில் இருந்து கி.பி முதல் நூற்றாண்டு வரை இவர்கள் வடமேற்கு இந்தியாவினை ஆட்சி செய்கின்றனர். இவ்வினத்தில் தான் நாம் முன்னர் கண்டு இருந்த கொண்டாபோராஸ் (Gondophares) என்ற அரசன் இருக்கின்றான். கொண்டாபோராஸ் இவனைத் தான் தோமா சென்று சந்தித்தார் என்று வரலாறு கூறுகின்றது.

இதுவே கி.மு வின் முடிவில் இந்தியா இருந்த நிலைமை.
வடமேற்கில் பல இரானிய படையெடுப்புக்கள் நிகழ்ந்து இருந்து இறுதியில் பார்தியர்கள் ஆட்சியில் இருக்கின்றனர். மத்தியில் சாதவாகனர்கள் இருக்கின்றனர். தெற்கில் பாண்டியர்களும் சோழர்களும் இருக்கின்றனர். மேலும் நாம் புஷ்யமித்திர சுங்கனைக் கண்டதுப் போல் பல பல இந்திய - இரானிய இனத்தவர் வடக்கே மக்களுள் இருக்கின்றனர். தெற்கே வணிகத்திற்காக வந்த ரோமர்கள் சிலர் தமிழ் மண்ணிலேயே தங்கியும் இருக்கின்றனர்.

பொதுவாக இந்தியாவில் அன்னியர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதுவரை சமசுகிருதம் குறித்தோ அல்லது பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்ற பிரிவுகள் இந்தியாவில் நிலவியதாகவோ எந்த ஒரு சான்றும் இல்லை.

இந்நிலையில் கி.பி யில் நடந்தது என்ன என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்...!!!
சென்ற பதிவில் இந்தியாவினை கி.பி காலத்தின் தொடக்கத்தில் விட்டு விட்டு வந்தோம். அப்பொழுது இந்தியாவில் அன்னியர்கள் பலர் இருந்ததாகவும் மேற்கு பகுதிகள் முழுமையாகவே அவர்களிடம் இருந்ததையும் நாம் கண்டோம். இனி கி.பி யில் நடந்தது என்ன என்றுக் காண்போம்.

இந்தியாவின் மேற்குப் பகுதியில் பார்தியர்கள் ஆண்டுக் கொண்டு வந்தனர் என்றுக் கண்டோம் அல்லவா. ஆனால் அவர்களின் ஆட்சி நீண்டக் காலம் நீடிக்க வில்லை. காரணம் - குஷானர்களின் படையெடுப்பு. நாம் சென்ற பதிவில் கண்டு இருந்தோம் அல்லவா சகர்களை மத்திய ஆசியாவில் இருந்து குசானர்கள் துரத்தி அடித்தனர் என்று, அதே குசானர்கள் தான் இப்பொழுது மத்திய ஆசியாவினைப் பிடித்து இந்தியாவின் மேற்கே வந்து இருக்கின்றனர். இவர்களின் முன் தாக்குப் பிடிக்க முடியாது பார்தியர்களின் அரசு வீழ மேற்கு இந்தியா இப்பொழுது குசானர்களின் வசம் செல்கின்றது.

இந்த குசானர்கள் என்பவர்கள் கிழக்கு மத்திய ஆசியாவில் இருந்து கிளம்பிய ஒரு சீன நாடோடிக் கூட்டம் ஆகும். அதாவது பிற்காலத்தில் வரலாற்றில் புகழ் பெற்ற மங்கோல் இனத்தவரின் முன்னோடிகள் இவர்கள் என்றும் சொல்லலாம். ஆயிரம் வருட முன்னோடிகள். அப்பேர்ப்பட்ட இவர்களின் வலிமைக்கு முன்னால் நிற்க முடியாது வரிசையாக மத்திய ஆசிய நாடுகள் வீழ இறுதியில் பார்தியர்களின் அரசும் வீழ்கின்றது. இந்தியாவின் மேற்குப் பகுதி சீன நாடோடி இன மக்களின் கட்டுப்பாட்டுக்கு வருகின்றது.

இத்தனைப் படையெடுப்புகளிலும் நாம் காண வேண்டியது இந்தியாவின் மேற்குப் பகுதியினைப் பிடித்தவர்கள் பெரும்பாலும் நாடோடி இன மக்களே. அவ்வாறு பிடித்தவர்கள் அங்குள்ள மக்களுடன் கலந்து கொண்டே ஆட்சியினைத் தொடருகின்றனர். அதாவது மக்களுடன் அவர்கள் கலந்தே விடுகின்றனர். இதன் காரணமாக மேற்கில் பல இனக் குழுக்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. சரி இப்பொழுது மீண்டும் குசானர்களிடம் வருவோம்.

குசானர்கள் கிட்டத்தட்ட மேற்கு இந்தியா முழுவதையுமே பிடித்து விடுகின்றனர். ஏன் மத்தியிலும் அவர்களின் செல்வாக்கினை விரிவு படுத்துகின்றனர். மத்திய இந்தியாவில் சாதவாகனர்கள் வலிமையுடன் இருந்தாலும் குசானர்களை ஒரு அளவு கட்டுப்படுத்த முடிகின்றதே தவிர அவர்களை முழுமையாக விரட்ட முடியவில்லை. இவ்வாறே காலங்கள் ஓட கி.பி மூன்றாம் நூற்றாண்டும் வந்து விடுகின்றது. இக்காலத்திலேயே குசானர்கள் மற்றும் சாதவாகனர்களின் ஆட்சிகள் ஒரு முடிவுக்கு வருகின்றன.

சாதவாகனர்கள் இந்தியாவின் மேற்கில் குசானர்களின் ஆதரவில் வீற்று இருந்த ஒரு சகர் அரசால் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது. குசானர்களின் ஆட்சியோ மேற்கில் மீண்டும் வலுப்பெற்று எழுந்த பெர்சியர்களின் அரசால் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது. ஆனால் குசானர்கள் முழு ஆட்சியையும் இழக்கவில்லை. பஞ்சாப் பகுதியினை அவர்கள் அப்பொழுதும் அவர்களின் ஆட்சியில் வைத்து இருந்தனர். மத்திய இந்தியாவில் குப்தர்களின் ஆட்சி வரும் வரை குசானர்களின் ஆட்சி இந்தியாவில் மறையவில்லை. ஆனால் இந்தக் காலத்தில் தமிழகத்தின் சரித்திரம் ஒரு இருண்டக் காலத்தினுள் நுழைகின்றது. தமிழகம் களப்பிரர்களின் கைகளுக்கு செல்கின்றது. இருண்டக் காலம் என்றுக் கூறுவதன் காரணம் அக்காலத்தில் தமிழகத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. களப்பிரர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? என்ன நடந்தது என்று ஆய்வுகள் தான் கூற வேண்டும். சரி இப்பொழுது நாம் மீண்டும் குப்தர்களை காண செல்வோம்.

குப்தர்கள் ஆட்சி மலருவது கி.பி நான்காம் நூற்றாண்டில். குப்தர்களின் காலம் மீண்டும் இந்தியாவின் ஒரு பொற்காலம். இக்காலத்தில் தான் இழந்த பகுதிகள் அனைத்தையும் இந்தியா திரும்ப பெறுகின்றது. சந்திர குப்தர், சமுத்திர குப்தர் போன்ற மாபெரும் வீரர்கள் தோன்றுகின்றனர். பெர்சியர்களை வீழ்த்தி மேற்குப் பகுதியில் பெருன்பான்மையான பகுதிகள் மீட்கப் படுகின்றன. கிட்டத்தட்ட முழு இந்தியாவுமே இந்தியர்களின் கையில் வருகின்றது. மேற்குப் பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வந்தாலும் குப்தர்களின் முன் அவை தோற்றே போகின்றன. ஆனால் வலிமையுடன் இருப்பவன் வலிமையாகவே இருக்க முடியுமா. குப்தர்களின் ஆட்சியிலும் அவர்கள் சறுக்கும் காலம் வருகின்றது. இந்த சறுக்கம் கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்குகின்றது. காரணம் ஹுன்னேர்கள் (Huns). வட ஆசியப் பகுதிகளில் இருந்துக் கிளம்பிய மற்றுமொரு நாடோடி இனத்தவர். இவர்களைப் பற்றி சாதாரணமாக எண்ணி விட முடியாது. குதிரை வில்லாளிகளையே முக்கிய ஆயுதமாகக் கொண்டு இருந்த இவர்கள் கிட்டத்தட்ட அனைத்து ஆசிய நாடுகளுக்கும் சரி ரோமப் பேரரசுக்கும் சரி தலைவலியாகத் தான் திகழ்ந்தனர். அப்பேர்ப்பட்ட இவர்கள் தான் இந்தியாவின் மேற்குக் கதவினை இப்பொழுது தட்டிக் கொண்டு இருக்கின்றனர். எத்தனைக் காலம் தான் குப்தர்களாலும் அக்கதவினைக் கட்டிக் காத்துக் கொண்டு இருக்க முடியும். குப்தர்கள் பின் வாங்குகின்றனர். ஹுன்னேர்கள் இந்தியாவின் உள்ளே நுழைகின்றனர். இது நடப்பது கி.பி ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில்.

இந்நிலையில் இந்தியாவின் மேற்குப் பகுதியில் ஹுன்னேர்களின் ஆதிக்கம் பெருகுகின்றது. குப்தர்கள் வலு இழக்கின்றனர். பஞ்சாப் முதற்கண்ட பகுதிகளில் ஹுன்னேர்கள் பரவுகின்றனர். இறுதியாக கி.பி ஆறாம் நூற்றாண்டில் குப்த வம்சம் பல சிறு சிறு பிரிவுகளாக பிரிகின்றது. அத்தருணத்தில் தான் வரதர்கள் ஆட்சிக்கு வருகின்றனர். சிதறிக் கிடக்கும் பிரிவுகளை ஒன்றிணைத்து ஹுன்னேர்களை எதிர்க்கின்றனர். ஆனால் எவ்வாறு இறுதி மௌரியப் பேரரசன் சதியினால் வீழ்த்தப்பட்டு இறந்தானோ அவ்வாறே இறுதி வரத மன்னனும் சதியினால் இறக்கின்றான். அவனை கொள்பவன் அவனது அமைச்சன். அவனுடன் சேர்ந்தே அவனது இரு மகன்களும் கொல்லப்பட வரத அரசும் அதன் முடிவுக்கு வருகின்றது. இதன் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு.

எவ்வாறு பிரகதரத்தன் மரணத்தோடு மௌரியப் பேரரசு ஒரு முடிவுக்கு வந்ததோ. அதேப்போல் இறுதி வரத மன்னனான ஹர்ஷ வரதனின் (Harsha vardhan) மரணத்தோடு வட இந்தியாவில் திராவிடர்களின் இறுதிப் பேரரசும் ஒரு முடிவுக்கு வந்தது. அவனே இறுதியாக வட இந்தியாவினை ஆண்ட ஒரு உண்மையான இந்திய அரசன்.

அவனின் மறைவுக்குப் பின் வட இந்தியா ஒரு குழப்பமான நிலைக்குச் செல்கின்றது. பெரிய அரசர்களோ அரசுகளோ இல்லாத ஒரு நிலை வட இந்தியாவினில் இருக்கின்றது. தெற்கே அப்பொழுது தான் பல்லவர்கள் நிலைப்பெற்று இருக்கின்றனர்.

இந்நிலையில் தான் புதிதாய் ஒரு பெயரினை வைத்துக் கொண்ட சிறு குழுக்கள் வட மேற்குப் பகுதியில் இருந்து தோன்றுகின்றன. இனி வட இந்தியாவினை அடுத்த ஐநூறு ஆண்டுகள் ஆளப்போவது இந்த குழுவினரே. இக்குழுக்களின் பெயர்களை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள். அட அது என்ன பெயர் அப்படின்னு கேட்கின்றீர்களா.

அது தான் ராஜ்புட்ஸ் (Rajputs). இன்றைய வட இந்தியாவிலும் பிரபலமான ஒரு பெயர். வட மேற்கில் பல காலத்தில் இந்தியா மீது படையெடுத்து வந்து இந்தியாவிலேயே தங்கி இருந்த சகர்கள், குசானர்கள் மற்றும் ஹுன்னேர்கள் போன்றவர்களே ஒன்றிணைந்து, குழப்பம் மிக்க அன்றைய இந்திய அரசியலிலில் தங்களுக்கு ஆதாயம் கிடைக்க ராஜ்புட்ஸ் என்ற பெயரில் வருகின்றனர். அரச வரதனின் மரணத்துக்கு பின் இவர்கள் வலு பெற்று வெளியே வருவதை வைத்து அரச வரதனின் கொலையில் இவர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்றே அறிஞர்கள் எண்ணுகின்றனர். அதுவும் குறிப்பாக அக்காலம் தொடங்கி இசுலாமியர்களின் படையெடுப்பு வரை வட இந்தியாவின் காலம் ராஜ்புட்ஸ் காலம் என்றே அழைக்கப் பெருவதும் இங்கே கவனிக்கத் தக்கது.

"ராஜ்புட்ஸ் என்பவர்கள் இந்தியா வந்து அங்கேயே தங்கிய சகர்கள், ஹுன்னேர்கள் மற்றும் குசானர்களின் வம்சாவளியினரே ஆவர். காலப்போக்கில் முற்றிலுமாக இந்திய மக்களுள் அவர்களை இணைத்துக் கொண்டு அவர்களின் தனித்தன்மையை இழந்து விட்டனர்." என்கின்றார் கே.ல.குரானா தான் எழுதிய 'இந்தியாவின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு' என்ற நூலில.

மேலும் இன்றும் உள்ள ராஜ்புட்டுக்களின் இன வரலாற்றினை ஆராய்ந்தோம் என்றால் அவை நம்மை சகர்களுக்கோ அல்லது ஹுன்னேர்களுக்கோ அல்லது குசானர்களுக்கோ .. ஏன் கிரேக்கர்களுக்கு கூட நம்மை இட்டுச் செல்லும் என்கின்றனர் ஆய்வாளர்கள். சில ராஜ்புடுக்களின் இனமே 'ஹுனா ஜட் (Huna Jat)' என்று இருக்கின்றது...ஹுன்னேர்களுக்கு சாட்சியாக. நிற்க. இப்படிப்பட்ட ராஜ்புட்டுக்களைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது. காரணம் அவர்களைக் காணாது இன்றைக்கு நம் நாட்டில் நாம் காணும் வருணாசிரம தருமத்தை நாம் அறிந்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் திகழும் ஒரு அரசியல் குழப்பமான தருணத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அது வரை இந்தியாவை வெவ்வேறு தருணங்களில் படையெடுத்து வந்து ஆண்டு பின்னர் மக்களுடன் கலந்த அன்னியர்கள் ராஜ்புட்ஸ் என்ற பெயரில் ஒன்று சேருகின்றனர். நீண்ட நாட்கள் இந்தியாவினை அவர்கள் கண்டு இருக்கின்றனர். இந்தியா மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கின்றது. ஆன்மீக ரீதியிலும் சரி அரசியல் ரீதியிலும் சரி. நிலைமை அவர்களுக்கு தோதாக இருக்கின்றது. வட இந்தியாவினை அவர்கள் கைக்கு கொண்டு வருகின்றனர். வட இந்தியாவில் அவர்களின் ஆட்சியை அமைக்கின்றனர்.

அந்த ஆட்சி தான் ஆரியவர்தம். ராஜஸ்தானில் உள்ள அபு மலையில் தான் ஆரியவர்த்தம் தொடங்கப்பெருகின்றது. இந்தியாவின் மீது படை எடுத்து வந்த சகர்கள், குசானர்கள், ஹுன்னேர்கள், பெர்சியர்கள், கிரேக்கர்கள் ஆகியோரின் வம்சத்தினரும் இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்து அங்கேயே தங்கி இருந்த ரோமர்களும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் இந்த ஆரியவர்த்தம் என்றும் அவர்கள் தான் ஆரியர்கள் என்றும் இக்காலத்திலேயே மனு தர்மமும், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்றப் பிரிவுகளும் பிறந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பிராமணர்கள் - மத சம்பந்த செயல்களைச் செய்யும் ஆரியர்கள்.
சத்திரியர்கள் - யுத்தம் செய்யும் ஆரியர்கள்.
வைசியர்கள் - வணிகம் செய்யும் ஆரியர்கள்.
சூத்திரர்கள் - இந்தியர் அனைவரும்.

என்பதே அந்தப் பிரிவுகளின் அர்த்தம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இப்பிரிவுகளைக் கொண்டே சதிகளால் மக்களை ஏமாற்றி அவர்களின் சமயங்களைப் பிடித்து இந்திய மக்களை அடிமையாக்க அவர்களுக்கு அமைதியான ஐநூறு கால ஆண்டுக் காலங்கள் கிடைக்கின்றன என்றும் அக்காலங்களிலேயே சமய நூல்களின் அர்த்தங்களும் சரி வரலாறும் சரி மாற்றப் படுகின்றது, மேலும் காலப்போக்கில் சூத்திரர்கள் என்ற பிரிவுகளில் தங்களுக்கு ஏற்றார்ப்போல் பல பிரிவுகளை உருவாக்கிக் கொள்கின்றனர் அதாவது,

சிவாச்சாரியார் - பிராமண மயமாக்கப்பட்டவர்கள்.
சற்சூத்திரர் - ஆரியருக்கு துணை போனவர்கள்.
சூத்திரர் - ஆரியருக்கு அடிபணிந்தவர்.
பஞ்சமர் - ஆரியரை எதிர்த்தவர்கள்.
மலை சாதியினர் - மலைக்குத் தப்பி ஓடிப் போனவர்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கு அவர்களுக்கு துணை போகும் பல விடயங்களில் ஒன்று தமிழர்கள்/இந்தியர்கள் உருவாக்கிய சமசுகிருத மொழியும் அவர்கள் உருவாக்கிய சைவ வைணவ சமயங்களுமே.

பல இனத்து மக்கள் கூடி இருக்கும் இந்தியாவில் கருத்துக்களைப் பரப்புவதற்கு தோதாக அனைத்து மொழிகளையும் கலந்த ஒரு மொழியை இந்தியர்கள் உருவாக்குகின்றனர் என்றும் அம்மொழியே பின்னர் அவர்களுக்கு எதிராய் பயன்படுகின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூற்றினை மெய்ப்பிப்பது போல் கி.பி நூற்றாண்டுகளிலேயே அதுவும் ஐந்தாம் நூற்றாண்டுக்கு பின்னரே தெளிவான சமசுகிருத படைப்புகள் நமக்கு கிடைக்கின்றன. மேலும் சமசுகிருதத்தில் பல மொழிச் சொற்கள் இருப்பதும் அவர்களின் கூற்றுக்கு சான்றாகத் தான் அமைகின்றது. அதாவது சமசுகிருதத்தில் தமிழ், பாலி, அர்த்தமாகதி, கிரேக்கம், லத்தின், பாரசீகம் மற்றும் அரமேயச் சொற்கள் இருப்பது இது அந்த மொழிகளின் கலப்பில் உருவாக்கப்பட்ட ஒரு மொழியே ஆகும் என்றும் நாம் கருத வழி செய்கின்றது. சரி... இம்மொழியினை தங்களுக்கு உதவுமாறு ஆரியர் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதனை நாம் ஆராய்ந்துப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

எனவே இந்தியாவின் மீது படை எடுத்து வந்த சகர்கள் (Scythian), குசானர்கள் (Kushan), ஹுன்னேர்கள் (Huns), பெர்சியர்கள் (சுங்கர்கள் கன்வர்களை நினைவில் கொள்க), கிரேக்கர்கள் ஆகியோரின் வம்சத்தினரும் இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்து அங்கேயே தங்கி இருந்த ரோமர்களும் தான் ஆரியர்கள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

முற்றும்.

தெலுங்கர் ஆட்சி கோவில்களில் பண்டாரம் நட்ட ஈடு கொடுத்து வெளியேற்றம்


1) விஜயநகர பேரரசுக் காலத்தில் தான் தமிழ் கோவில்களில் இருந்து பெருமளவில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு பிராமணர்கள் கருவறையினுள் நுழைகின்றனர் என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் பல இருக்கின்றன என்று நமக்குத் தெரியுமா?



 2) பள்ளர், பறையர், சானார், சக்கிலியர் என்ற சாதியினைச் சார்ந்த மக்கள் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் பஞ்சமர்களாக வைக்கப்பட்டு இருந்தனர். அதில் சானார் சாதியினைச் சார்ந்த மக்களை பார்க்கத்தகாதவர்களாக வைத்து இருந்தனர்.

நாயக்கர் கோவில் கோயில் தமிழர் வெளியேற்றம் பிராமணர் பண்டாரம் நம்பி பார்ப்பனர் 
http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/05/1_6.html

இந்தியா ஏழு சாதி படிநிலை நால்வர்ணம் இல்லை - மெகஸ்தனிஸ்


மெகஸ்தனீஸ்.
பேரைக் கேட்ட உடனே ‘இது எங்கேயோ கேள்விப் பட்ட ஒரு பெயர் போல இருக்கின்றதே’ என்ற எண்ணம் நம்மில் பலருக்கு வரத் தான் செய்யும். காரணம் நாம் பள்ளியில் பயின்ற நமது வரலாற்றுப் புத்தகங்களில் இவரை நாம் கடந்து தான் வந்து இருப்போம். சரி அப்பொழுது கண்ட இம்மனிதரை நாம் இப்பொழுது மீண்டும் காண வேண்டியத் தேவை என்ன….? காண்போம்.
வரலாற்றின் பக்கங்கள் என்றுமே மர்மமான ஒன்றாகத் தான் இருந்து இருக்கின்றன. காரணம் இன்று இருப்பது போன்று அன்று வரலாற்றினை சேகரித்து வைக்க விடயங்கள் பல இருக்க வில்லை. மேலும் அவ்வாறு சேகரித்து வைத்த விடயங்களும் பல போர்களாலும் இயற்கையாலும் காலம் தோறும் அழிக்கப்பட்டே வந்து இருக்கின்றன. இந்நிலையில் மிஞ்சி இருக்கும் நூல்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள் போன்றியவற்றினை வைத்தே நம்முடைய இன்றைய வரலாறு கணிக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வாறு கணிக்கப்பட்டு இருக்கும் வரலாற்றில் மிக முக்கிய பங்கினை ஆற்றியோர் பயணிகளும் வணிகர்களும் தான்.
இவர்கள் தான் தாங்கள் செல்லும் ஒவ்வொரு ஊரினைப் பற்றியும் அதன் சிறப்புகள் வளங்கள் அரசுகள் போன்றவற்றினைப் பற்றியும் குறிப்புகளை எடுத்துக் கொண்டு பல நாகரீகங்களுக்கு இடையில் ஒரு இன்றி அமையாத இணைப்பாக விளங்கினர். அவர்களின் குறிப்புகளைக் கொண்டே ஒவ்வொரு நாகரீகமும் மற்ற நாகரீகங்களுடன் தொடர்பினை பலப்படுத்திக் கொண்டன. வணிகர்களும் பயணிகளுமே நாகரீகங்களுக்கு மத்தியில் தொடர்புக் கருவியாக அன்று செயலாற்றி வந்தனர். இன்றைய வரலாற்றில் பல விடயங்கள் இவர்களின் குறிப்புகள் மூலமாகவே நமக்கு கிடைக்கப்பட்டவை. நிற்க.
இப்பொழுது நாம் காணப் போகும் பயணியும் அப்பேர்ப்பட்ட பயணி தான். 
பெயர் : மெகஸ்தனீஸ் (Megasthenes).
ஊர் : கிரேக்கம்.
வந்த ஊர் : இந்தியா.
காலம் : கி.மு நான்காம் நூற்றாண்டு (இல்லை இது கி.பி நான்காம் நூற்றாண்டு என்றும் கூறுவோர் இருக்கின்றனர்).
சந்தித்த அரசன் – சந்திரகுப்த மௌரியன் – மௌரியப் பேரரசு (இல்லை இது சந்திரகுப்தன் – குப்தப் பேரரசு என்றும் கூறுவோரும் உளர்)
கிரேக்க சிற்றரசன் செலேயுகிசின்(Seleucus) சார்பாகவே இவர் இந்தியா வருகின்றார். சுற்றுப் பயணமும் செய்கின்றார். இவர் எத்தனை காலம் இங்கே தங்கி இருந்தார் என்று உறுதிப்பட தெரியவில்லை. ஆனால் இவர் பல முறை இந்தியா வந்ததாகவும் பாடலிபுத்திரம் (அன்றைய மௌரியப் பேரரசின் தலைநகரம்) மற்றும் மதுரை மாநகருக்கும் வந்ததாக இவரின் நூல்கள் கூறுகின்றன. அவ்வாறு அவர் தங்கி இருந்த பொழுது அவர் இந்தியாவினைப் பற்றியும் அதன் அன்றைய அரசியல் நிலைப் பற்றியும் எழுதிய குறிப்புகளை எல்லாம் தொகுத்து ‘இந்திக்கா (Indika)’ என்னும் நூலினையும் தொகுக்கின்றார். அவர் காலத்தில் இருந்த இந்தியாவினைப் பற்றி அறிந்துக் கொள்ள அந்நூல் இன்றும் ஆய்வாளர்களுக்கும் சரி வரலாற்றில் ஆர்வம் மிக்கவர்களுக்கும் சரி ஒரு சிறந்தக் கருவியாகவே திகழ்கின்றது. நிற்க.
அந்நூலினை முழுக்கவே ஆராய்ந்து மொழிபெயர்த்து பதிவிட வேண்டும் என்ற ஆவல் இருப்பினும், தற்பொழுது இந்த பின்வரும் பகுதியினை மட்டும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கலாம் மற்றதை பின்னர் கண்டுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கியதாலேயே இந்தப் பதிவு. அவர் காலத்தில் மக்களின் மத்தியில் இருந்த பிரிவுகளை அவர் விவரித்ததின் மொழிபெயர்ப்பே பின் வரும் பதிவு.
இந்தியாவின் ஏழு சாதிகள் பற்றி,
                                                                                                                                                                          
௧) மொத்த இந்திய சனத்தொகையும் ஏழு சாதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றுள் முதன்மையான இடத்தினில் இருப்பது தத்துவஞானிகளின் குழு. இவர்கள் எண்ணிகையில் மற்ற பிரிவினரைக் காட்டிலும் சிறியராக இருப்பினும் அவர்களின் மதிப்பு மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்து இருக்கின்றது. அனைத்து பொது கடமைகளிலும் இருந்தும் விடுவிக்கப்பட்டு இருக்கும் இவர்கள் யாருக்கும் அடிமைகளும் அல்லர் யாருக்கும் முதலாளிகளும் அல்லர். இருந்தும் இவர்கள் சில தனி நபர்களால் இறந்தவர்களுக்கு உரிய கடன்களை செய்யவும், ஒருவரது வாழ்நாளில் செய்யவேண்டிய தானங்களை செய்யவும் பயன்படுத்தப்படுகின்றார்கள். ஏனெனில் இந்த தத்துவஞானிகள் இறைவனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களாக நம்பப்படுகின்றார்கள். மேலும் இவர்கள் ஹதேஸ் (கிரேக்க மரணக் கடவுள்) உடன் தொடர்புடைய விடயங்களைப் பற்றி அதிகம் பேச முடிபவர்களாகவும் அறியப்படுகின்றனர். அவர்கள் அவ்வாறு செய்யும் கடனுக்கு பதிலாக பரிசுகளையோ சலுகைகளையோ பெற்றுக் கொள்கின்றனர். மேலும் இந்திய மக்களுக்கு இவர்கள் வேறு பெரும் பேற்றினையும் அளிக்கின்றனர், வருடத்தின் தொடக்கத்தில் இவர்கள் குழு கூடும் பொழுது மக்களுக்கு அவ்வருடம் வரக்கூடிய வானிலை, வறட்சி, நோய், காற்றின் திசை போன்றியவற்றோடு இன்ன பிற விடயங்களையும் கூறுகின்றனர். அதற்க்கேற்றார்ப் போல் மக்களும் அரசனும் தகுந்த நடவடிக்கை எடுத்து எது வருமோ அதை எதிர் கொள்ள ஆயுத்தமாகிக் கொள்கின்றனர். அவர்களின் கூற்றால் பின்னால் வரப் போகும் ஆபத்தை உணராது இவர்கள் தயார் நிலையில் இல்லாது இருக்கும் நிலையே இல்லாது இருக்கின்றது. அப்படி பிற்காலத்தில் வரப் போகும் விடயத்தை தப்பாக கணித்துக் கூறிய ஒருவருக்கு விமர்சனத்தை தவிர வேறு தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. அவர் தன் வாழ்வில் பின்னர் எப்பொழுதும் மௌனத்தையே கடைப்பிடிக்க வேண்டும் என்பது சட்டமாக உள்ளது. ஒரு வேளை அவரின் கணிப்பு சரியானதான ஒன்றாக இருப்பின் அவருக்கு வரி விலக்கு முற்றிலுமாக அளிக்கப்படுகின்றது.
௨) இரண்டாவது சாதி விவசாயிகளால் அமைக்கப்பட்டு இருக்கின்றது. மற்ற பிரிவினரை விட இவர்களே எண்ணிக்கையில் அதிகமாக காணப்படுகின்றனர். மற்ற பொது கடமைகளிலும் இருந்தும் போர் செய்வதில் இருந்தும் விடுவிக்கப்பட்டு இருக்கும் இவர்கள் தங்கள் காலத்தில் பெரும் பகுதியை நிலத்தினை உழுதே செலவிடுகின்றனர். மேலும் ஒரு விவசாயி அவனது நிலத்தில் உழுதுக் கொண்டு இருக்கும் பொழுது ஒரு எதிரி கூட அவனைத் தாக்க மாட்டான், காரணம் இவர்கள் பொது நலனுக்காக பாடுபடுபவர்களாக அறியப்படுகின்றனர். ஆகையால் எதிரிகள் கூட இவர்களுக்கு தீங்கு விளைவிப்பது இல்லை. மாறாக அனைத்து வித இன்னல்களிலும் இருந்தும் இவர்கள் பாதுகாக்கப் படுகின்றனர். இதன் மூலமாக, நிலமும் அழிக்கப்படாது பெரும் விளைச்சலைத் தந்து, அனைத்து மக்களும் அவர்கள் தேவைகள் அனைத்தும் பெறப் பெற்று வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ வழி செய்கின்றது. விவசாயிகளும் கிராமப்புறங்களிலேயே தங்களது மனைவி மக்களுடன் வாழத் தான் நினைக்கின்றனர். நகரத்துக்கு செல்ல அவர்கள் விரும்புவது இல்லை. அதை தவிர்க்கவும் பார்க்கின்றனர். அவர்கள் தங்களது நிலத்துக்கு நில வரியினை அரசனுக்கு கட்டுகின்றனர். காரணம் இங்கே அனைத்து நிலங்களும் அரசுடமை, தனி உடைமை என்று எங்கும் இல்லை. தனி நபர் சொந்தமாக நிலம் வைத்து இருப்பதற்கு உரிமை இல்லை. நில வரி போக அரசாங்க கருவூலத்திற்கு அவர்கள் மண்ணில் இருந்து விளைந்த விளைச்சலில் நான்கில் ஒரு பங்கு செலுத்தி விடுகின்றனர்.
௩) மூன்றாவது சாதி ஆடு மேய்ப்பவர்களாலும் மாடு மேய்ப்பவர்களாலும், பொதுவாக நகரத்திலும் சரி கிராமத்திலும் சரி தங்காது குடில் இட்டு தங்கும் மேய்ப்பவர்களாலும் 
அமைக்கப்பட்டு இருக்கின்றது. வேட்டையாடுவதன் மூலமும் பொறி வைத்து மிருகங்களைப் பிடிப்பதன் மூலமும் அவர்கள் தீய மிருகங்களிடம் இருந்தும் பறவைகளிடம் இருந்தும் நாட்டினைக் காக்கின்றனர். இப்பணிகளில் தங்களை முழுவீச்சில் இவர்கள் இவர்களையே ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் விவசாயிகளின் தானியங்களுக்கும் சரி மக்களுக்கும் சரி தொல்லைத் தரும் வன வினங்குகளில் இருந்து இவர்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர். இதற்கு பலனாக அரசனிடம் இருந்து இவர்கள் உணவுப் பொருட்களும் வாங்கிக்கொள்கின்றனர்.
௪) நான்காவது சாதி ஆசாரியார்களாலும் வணிகர்களாலும் உருவாக்கப்பட்டு உள்ளது. இவர்களுள் சிலர் ஆயுதம் செய்பவர்களாக இருக்கின்றனர், சிலர் விவசாயிக்கு தேவையான பொருள்களை செய்பவர்களாக இருக்கின்றனர் மேலும் மற்றவர்கள் பல் வேறு செயல்களுக்குத் தேவையான பல்வேறுப் பொருள்களை உருவாக்குபவர்களாக இருக்கின்றனர். கப்பல் செய்பவர்களும் மாலுமிகளும் இந்த சாதியிலையே இருக்கின்றனர்.
இந்த சாதியினரில் போர் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பொருட்கள் செய்பவர்கள் மட்டும் முழு வரி விலக்கு பெற்று இருக்கின்றனர். மேலும் இவர்கள் அரசிடம் இருந்து மானியமும் பெறுகின்றனர். சிலர் அரசுக்கு வரி கட்டி அரசு அனுமதித்த சில சேவைகள் செய்கின்றனர். கப்பல் படைத் தலைவன் படகுகளை மக்களின் போக்குவரத்துக்கும் சரி வணிகத்துக்கும் சரி வாடகைக்கு தருகின்றான்.
௫) ஐந்தாவது சாதியாக போர்வீரர்கள் இருக்கின்றனர். போர் முறைகளில் நேர்த்தியாகவும் கட்டுப்பாட்டோடும் இருக்கும் இவர்கள் யுத்தத்திற்கு  ஆயுதங்களுடன் ஆயுத்தமாகியும், எண்ணிக்கையில் விவசாயிகளுக்கு அடுத்த நிலையிலும் இருக்கின்றனர். அமைதிக் காலங்களில் களிப்பு நிகழ்சிகளில் பங்கு எடுத்துக் கொண்டும் குடித்துக் கொண்டும் தங்களின் நேரத்தினை இவர்கள் கழிக்கின்றனர். முழுப்படையும், அதாவது காலாட்படை,போர்க்குதிரைகள், போர்யானைகள் மற்றும் இன்ன பிற படை அனைத்தும் அரசனின் செலவிலேயே இயங்குகின்றன. அவர்கள் எப்பொழுது போர் என்று அழைப்பு வந்தாலும் அதற்கு ஆயுத்தமாகவே இருக்கின்றனர். காரணம் அவர்கள் அவர்களின் உடல்களைத் தவிர அவர்களின் பொருள் என்று வேறு எதையும் சுமந்து கொள்வது இல்லை.
௬) ஆறாவது சாதி ஒற்றர்களால் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இவர்களின் பொறுப்பில் நாட்டில் நடக்கும் அனைத்து விடயங்களை ஆராய்வதும், அவற்றை மேற்ப்பார்வைப் பார்த்து அனைத்தையும் ரகசியமாக அரசனிடம் கொண்டு வந்து சேர்ப்பதும் ஆகிய செயல்கள் அடங்கும். சிலர் நாட்டினை கவனிக்கும் பொறுப்பில் இருக்கின்றனர். சிலர் படைகளை ரகசியமாக கவனிக்கின்றனர். அவர்கள் அந்த அந்த முகாம்களிலேயே இருந்து தங்களது பணியை ரகசியமாக செய்கின்றனர்.எனவே மிகவும் திறமை உடையவர்களே அப்பணிகளுக்கு
 தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். அரசன் இல்லாத நிலையில் இவர்கள் தங்களின் தகவல்களை அந்தந்த ஊர் நீதிபதியிடம் தெரிவிப்பர்.
௭) ஏழாவது சாதியில் பொதுக் கடமைகளை நிர்வாகம் பண்ணுபவர்களும், ஆலோசகர்களும் ஆய்வாளர்களும் இருக்கின்றனர். அளவில் மிகவும் சிறியதாக இருந்தாலும் அதிகம் மதிக்கப்படும் ஒரு சாதியாக இவர்கள் இருக்கின்றனர். காரணம் இவர்களின் உயர்ந்த குணமும் அறிவுமே ஆகும். இவர்களில் இருந்தே அரசின் ஆலோசகர்களும் பொருளாளர்களும் நாட்டுக்கு தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். மேலும் விவாதங்களைத் தீர்த்து வைக்கும் நபர்களும் இவர்களிடம் இருந்தே தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். படைத் தளபதிகளும், நீதிபதிகளுமே கூட இவர்களிடம் இருந்தே தேர்வு செய்யப் படுகின்றனர்.
இவையே, அரசியல் அமைப்பில் இந்தியா பிரிந்து இருக்கும் பல்வேறு பாக நிலைகள் ஆகும். ஒரு சாதியில் இருந்து மற்றொரு சாதியில் பெண்ணெடுக்க அல்லது மணம் முடிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. அதேப் போல் ஒருவர் செய்யும் ஒரு செயலை மற்றொருவர் செய்யவும் அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு போர்வீரன் விவசாயி ஆக முடியாது. அதேப் போல் ஒரு ஒரு பொருள் உற்பத்தியாளன் தத்துவ ஞானியாக முடியாது. மேலும் ஒருவன் பல வணிகம் செய்வதற்கும் அனுமதி கிடையாது. ஒருவன் ஒரு வியாபாரம் தான் செய்ய வேண்டும். இந்த நியதி தத்துவ ஞானிகளுக்கு மட்டும் தளர்த்தப்பட்டு உள்ளது.
மொழிபெயர்ப்பு முடிந்தது.
மேலே கூறியவை தான் மெகஸ்தனீஸ் கண்ட இந்தியாவில் இருந்த மக்கள் பிரிவுகள். நாம் இன்றுக் காணும் பிரிவுக்கும் அன்று நிலவியது என்று நாம் அறியப்படும் பிரிவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் சிந்திக்க வைக்கின்றன.
மெகஸ்தனீஸ் கூறிய கருத்துக்கள் சரியானவையா?…அல்லது அவை தவறானவையா… பண்டைய இந்தியா எவ்வாறு இருந்தது…ஆராய வேண்டும். இந்தியாவினை நேசிப்பவர் அனைவரும் ஆராய்ந்து பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. உண்மை என்ன என்று அப்பொழுது தான் நாம் அறிய முடியும்.
வரலாற்றின் பக்கங்கள் பெரியவை…இருந்தும் முயல்வோம்…!!!

nanri http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/06/blog-post.html

வர்ணம் வர்ணாசிரமம் ஆரியர் நுழைவு கற்பனை மனு மனுதர்மம் மனுஸ்மிருதி 

வேதங்கள் பழமை ஆனவை கிடையாது

வேதங்கள் என்றால் என்ன?

இந்தக் கேள்வியினை நீங்கள் இன்று மக்கள் மத்தியில் கேட்டீர்கள் என்றால் பொதுவாக "வேதங்கள் என்றால் அவை ஆன்மீகச் சிறப்புமிக்கவை. அவை எண்ணிக்கையில் நான்காகும்.

ரிக் வேதம்
யசுர் வேதம்
சாம வேதம்
அதர்வண வேதம்."

என்ற விடையே விரைவாக நமக்கு கிட்டும். காரணம் நமது சமுகத்தில் நாம் இப்படித் தான் கற்கின்றோம். வேதங்கள் நான்கு. அவை இறைவனின் வாக்குகளைக் கொண்டு இருக்கின்றன. சமயங்கள் அனைத்தும் அவற்றில் இருந்தே தோன்றின. இவ்வாறு தான் வேதங்களைப் பற்றியக் கருத்துக்களும் கற்பிக்கப்படுகின்றன. நிற்க.

ஆனால் இந்தக் கருத்துக்களை மறுப்பவர்களும் நம்முடைய சமுகத்தில் இருக்கத் தான் செய்கின்றனர். அதுவும் குறிப்பாக சைவ வைணவ மற்றும் தமிழ் பெரியோர்கள், வேதத்தில் இருந்து தான் சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றக் கருத்துக்களை தொன்று தொட்டே மறுத்து வந்து உள்ளனர். அவர்களுள் சிலர் தேவநேயப் பாவாணர், மறைமலைஅடிகள், திரு. கா.சு.பிள்ளை போன்றவர்களாவர். இந்நிலையில், வேதத்திற்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் வேதங்களைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. பார்க்கலாம்.

முதலில் வேதங்கள் என்றால் என்னவென்றே காண்போம். பொதுவாக வேதங்கள் நான்கு எனப்படினும், அவற்றுள் முக்கியமானதொன்றாக விளங்குவது ரிக் வேதம் தான். ஏனைய வேதங்கள் ரிக் வேதத்தின் மறு வடிவமைப்புகளாகவே திகழ்கின்றன என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றன. விரிவாக பார்க்க வேண்டும் என்றால்,

"நான்கு வேதங்களுள் முதன்மையானதும் பழமையானதுமாக இருப்பது இருக்கு வேதமே. யசுர், சாமம், அதர்வணம் எனும் மற்றைய மூன்று வேதங்களும் இருக்கு வேதத்தின் மறுவமைப்புகளே" என்றே திரு சே.டால்போயிஸ் வீலர்(J.Talboys wheeler) என்னும் ஆராய்ச்சியாளர் தனது 'India of the Vedic age with reference to Mahabharata-Vol.1 of the history of India' நூலில் கூறுகின்றார்.

இவரதுக் கூற்றுகளை உறுதிப் படுத்துவது போல " மற்றைய மூன்றையும் இருக்கு வேதத்தின் பிற சேர்க்கை என்றும், இருக்கு வேதத்தின் விளக்கம் என்றும் சாரம் அல்லது சுருக்கம் என்றும் கூறலாம். இம்மூன்றில் யசுர் வேதம் பெரும்பாலும் இருக்கு வேதத்தின் பாடல்களைக் கொண்டு இருப்பதுடன் பலி செய்வதற்குரிய முறைகளை விளக்கும் பாடல்களையும் கொண்டுள்ளது. இரண்டாவதாக சாம வேதம், சோம பானம் தொடர்பான பாடல்களைக் கொண்டு விளங்குவதுடன் இருக்கு வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தின் பாடல்களையும் அதிகமாகக் கொண்டு உள்ளது. அதர்வண வேதம் இருக்கு வேதத்தின் பெரும்பாலான பாடல்களைக் கொண்டு இருந்தாலும் மந்திரம் மாயம் தொடர்பான பாடல்களையே அதிகமாகக் கொண்டுள்ளது" என்றே மற்றொரு ஆய்வாளரான கே.சு.மாக்டொனால்ட்ஸ் (K.S.Macdonalde) அவர்கள் அவரது 'The Vedic Religion' நூலில் குறிப்பிடுகின்றார்.

அதுவும் சாம வேதத்தில் இருக்கும் 1875 பாடல்களும் 75 பாடல்கள் மட்டுமே புதியவைகளாக இருக்கின்றன. ஆய்வாளர்கள் கருத்துப் படி இசையமைக்கப்பட்ட இருக்கு வேதப் பாடல்களே சாம வேதம் என்று வழங்கப்படுகின்றன.

அதாவது நான்கு வேதங்கள் என்று இவை தனித்தனியே இன்று வழங்கப்பட்டாலும் பொதுவாக பார்த்தால் அனைத்து வேதங்களும் இருக்கு வேதத்தை சார்ந்தே இருக்கின்றன. நிற்க.

இப்பொழுது நாம் வேதங்களில் காணப்படும் வழிபாட்டு முறைகளையும் தெய்வங்களையும் பற்றி சற்று கண்டு விடலாம்.

இருக்கு வேதத்தில் காணப்படும் தெய்வங்கள் பலர் இயற்கையின் உருவகங்களாகவே உள்ளனர். காற்று, மரம், ஆறு, மலை, வானம், கதிரவன் போன்றவை வழிப்படப்பட்டு உள்ளன. மேலும் "சோமபானம் என்னும் குடிவகையும் தெய்வமாக வழிப்படப்பட்டது. தெய்வங்களாக வழிப்படப்பட்டவற்றில் மருத், இந்திரன் போன்றோர் வீரர்களாகக் காட்டப்படுகின்றனர். சமயக் குருக்களாக அக்னி, பிரகசுபதி ஆகியோர் காட்டப்பட்டு உள்ளனர்" என்று மற்றொரு ஆராய்ச்சியாளரான எ.எ.மாக்டொனால்ஸ் (A.A.Macdonell) அவர்கள் அவரது 'India's Past' புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் வேதங்களில் பல பெண் தெய்வங்களைப் பற்றியும் கூறப்பட்டு உள்ளன. கூடுதலாக தமிழர்களிடம் இருந்தது போல் நினைவுத் தூண் வழிபாடும் வேதங்களில் குறிக்கப்பட்டு இருக்கின்றது. இன்னும் பலி வழிபாடும் சரி மர வழிபாடும் சரி வேதங்களில் இடம் பெற்று இருக்கின்றன.

மேலே நாம் கண்ட விடயங்களை வைத்துப் பார்க்கும் பொழுது இன்று நம்மிடையே இருக்கும் முழு முதற் கடவுளை வணங்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் சரி இயற்கை வழிபாடுகளை உடைய வேதங்களுக்கும் சரி தொடர்பு இருப்பது போன்றா தெரிகின்றது?

"அட...நில்லுங்கள். வேதங்களைப் பற்றிப் பேசினீர்கள். வேதாந்தங்களைப் பற்றி ஏன் கூறவில்லை. வேதங்களின் ஒரு பகுதி தான் அவை அல்லவா...அவை முழு முதற் கடவுளைப் பற்றிப் பேசுகின்றது அல்லவா" என்று எண்ணினீர்கள் என்றால் முதலில் ஒரு விடயம், வேதாந்தங்கள் என்பவை உண்மையில் உபநிடங்கள் என்றே வழங்கப்பட்டன. பின்னரே ஏதோ ஒரு காரணத்திற்காக பிராமணர்களால் அவை வேதங்களின் ஒரு பகுதியாக ஆக்கப் பட்டன. அதனைத் தவிர்த்து வேதங்களுக்கும் சரி வேதாதங்களுக்கும் சரி தொடர்பு இல்லை என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதாரணத்துக்கு இதோ தேவநேயப் பாவாணரின் கூற்று,

"ஆரிய வேதம் பற்பல சிறுதெய்வ வழுத்துத் திரட்டேயாதலால் ஓரேமுழுமுதற் கடவுளை உணர்த்தும் உபநிடதத்திற்கும் அதற்கும் மண்ணிற்கும் விண்ணிற்கும் போன்று அடைக்கமுடியாத இடைவெளியுள்து” என்று கூறுகிறார் (தமிழ் இலக்கிய வரலாறு   - தமிழ் மண் பதிப்பகம்).

இவரின் கூற்றினை மெய்ப்பிப்பதை போன்றே பல விடயங்கள் வேதங்களுக்கும் சரி உபநிடங்களுக்கும் சரி வேறுபட்டுத்தான் இருக்கின்றன.

வேதங்கள் 'இறைவனிடம் நாம் ஏதாவது பெற வேண்டும் என்றால் அவனுக்கு எதையாவது நாம் காணிக்கையாகத் தர வேண்டும். அதாவது பலி வேண்டும் என்கின்றது'
உபநிடங்களோ 'இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றிப் பேசி மனிதனை இறைவன் அறிவான்...அவன் பலி எதுவும் வேண்டுவது இல்லை' என்றுக் கூறி பலியினை மறுக்கின்றது.
வேதங்கள் ஆன்மாவினைப் பற்றிப் பேசவே இல்லை. உபநிடங்களோ ஆன்மாவினை அடிப்படையாக கொண்டு இருக்கின்றன.
வேதங்கள் இயற்கை வழிபாட்டினை உடையதாக இருக்கின்றது. உபநிடங்களோ பக்தி வழிபாட்டினை உடையனவாக இருக்கின்றன. நிற்க.
இப்பொழுது நாம் இந்தத் தலைப்பினைப் பற்றி மேலும் காண வேண்டும் எனில் வேதங்களின் காலத்தையும் அவை யாரால் யாருக்காக எதுக்காக உருவாக்கப்பட்டன என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

பொதுவாக வேதங்களின் காலம் என்றாலே அது ஏதோ ஒரு மிகப் பழமையான காலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே பலரின் எண்ணத்திற்கும் வரும். காரணமில்லாமல் இல்லை, ஏனெனில் அப்படிப்பட்ட கருத்துக்கள் தாம் நம்மிடையே பரப்பப்பட்டு இருக்கின்றன. வேதங்கள் என்பது காலகாலமாக வாய் வழியாகச் சொல்லப்பட்டு வந்த ஒன்று. அவற்றின் காலம் இன்னதென்று வரையறுத்துக் கூற இயலாத வண்ணம் பழையக் காலம் என்றே போதிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் நீண்ட காலமாக வேதங்களைப் பொது மக்கள் படிக்க முடியாத வண்ணமே சூழ்நிலைகளும் இருந்தமையினால் அந்தக் கூற்றுக்களின் உண்மைத் தன்மையை மக்கள் ஆராய முடியாத நிலையே இருந்தது. ஆனால் இன்றோ அக்கருத்துக்களை மறுத்து அறிஞர்கள் சிலர் புதுக் கருத்துக்களை கூறுகின்றனர். அவர்கள் வேதங்களின் தொன்மையை மறுக்க ஒரு முக்கியமானக் காரணம் வேதங்களைப் பற்றிய சான்றுகள் எவையும் பழமையான காலத்தில் கிட்டப்பெறாமையே.

"வேதங்கள் மிகப் பழமையானவை என்றுக் கூறப்படினும், இக்கருத்தைக் கூறுவதற்கு அடிப்படையான தொல்பொருள் சான்றுகளோ, வரலாற்றுச் சான்றுகளோ, நினைவுச் சின்னங்களோ, நாணயங்களோ கிடைக்கப் பெறவில்லை என்பதும், கிடைத்துள்ள எழுத்துப் படிவங்களும் அண்மைக் காலதிற்குரியவனவாக உள்ளன" என்ற Bloomfield பதிப்பகத்தாரின் 'The religion of the Vedas' புத்தகத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
சரி அவர்களின் கருத்து இருக்கட்டும். இப்பொழுது நாம் வேறு சில விடயங்களைக் காண்போம்.

வேதங்களும் சரி...உபநிடங்களும் சரி சமசுகிருத மொழியிலேயே கிடைக்கப் பெறுகின்றன. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் சமசுகிருதம் என்ற மொழியின் சான்றுகள் நமக்கு கி.பி இரண்டாம் நூற்றாண்டிலேயே தான் கிட்டப்பெற ஆரம்பிக்கின்றன என்று. மேலும் சமசுகிருதம் என்றால் செம்மையாக செய்யப்பட்ட மொழி என்றும் பொருள் தருகின்றது. எனவே வேதங்களின் காலமும் சமசுகிருதத்தின் காலமாகத் தான் இருக்க முடியும். எனவே வேதங்களின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கு பின்னரே என்று முன்னர் பதிவினில் கண்டு இருந்தோம். (பார்க்க: சமசுகிருதத்தின் காலம்)

பொதுவாக எவராலும் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்து தான். அதுவும் வேதங்களைப் பொறுத்த வரைக்கும் இக்கருத்தினை எவரும் ஏற்றுக் கொள்வது முதலில் அரிது தான். காரணம் வேதங்கள் வாய் வழியாகவே சொல்லப்பட்டு வந்துள்ளன என்றே நம்மிடம் கூறப் பெறுகின்றது, "அவ்வாறு இருக்கையில் எவ்வாறு அவை எழுத்துருவில் கிடைக்கப் பெரும் காலத்தையே வேதங்களின் காலம் என்றுக் கூற முடியும், ஏனெனில் கி.மு 12 ஆம் நூற்றாண்டில் நடைப் பெற்ற சில சரித்திர நிகழ்ச்சிகளில் வேதக் கடவுளர் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றனவே...அவ்வாறு இருக்கையில் அவற்றின் காலத்தை எவ்வாறு அவை எழுத்துரு பெற்றக் காலத்தினை வைத்துக் கூறுகின்றீர்கள்...அது சரியான ஒன்றாக அமையாதே" என்றக் கேள்வி எழுவது இயல்பே.

உண்மை தான். இக்கேள்விக்கு பதில் தேடும் முன் ஒரு கேள்வியினை இங்கே முன் வைக்க விரும்புகின்றேன். ஆயிரமாயிரம் காலமாக வாய் வழியாகவே கூறப்பட்டு வந்த ஒன்றை திடீர் என்று எழுத்து வடிவத்தில் கொண்டு வர வேண்டிய தேவை யாது வந்தது? நிற்க.

இப்பொழுது வேதத்தின் காலத்தினைப் பற்றிக் காணலாம். அதற்கு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டினைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது. "அட என்னங்க வேதம் அப்படின்னு சொல்லிட்டு விவிலியத்தினைப் பார்போம் என்கின்றீர்களே" என்கின்றீர்களா, சற்று பொறுங்கள் பொருள் இருக்கத் தான் செய்கின்றது.
பழைய ஏற்பாட்டின் காலம் என்ன? என்ற கேள்விக்கு
கி.பி ஒன்றாம் நூற்றாண்டு அல்லது இரண்டாம் நூற்றாண்டு என்ற விடைகளே கிட்டும். ஆனால் பழைய ஏற்பாட்டில் உலகம் தொடங்கிய செய்திகள் முதற்கொண்டு ஏனைய பல வரலாற்றுச் செய்திகள் இருக்கின்றன. அதனை எல்லாம் கணக்கில் கொண்டா பழைய ஏற்பாட்டின் காலத்தினைக் கணிக்க முடியும்? அவ்வாறு கணித்தால் உலகம் தோன்றிய பொழுதே பழைய ஏற்பாடும் தோன்றி இருக்க வேண்டும். மாறாக பல செய்திகள் ஒன்றாக தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வந்ததே பழைய ஏற்பாடு. இது புது ஏற்பாட்டுக்கும் பொருந்தும். மற்ற தொகுக்கப்பட்ட நூல்களுக்கும் பொருந்தும். எனவே அந்த நூல்கள் என்று தொகுக்கப்பட்டனவோ அக்காலம் தான் அந்த நூல்களின் காலமாக கருதப்பட வேண்டும். அது தான் சரியான ஒன்றாகவும் இருக்கும்.

இந்த விதியே வேதங்களுக்கும் பொருந்தும். காரணம் வேதங்கள் என்பவை தொகுக்கப்பட்ட நூல்களே ஆகும் என்கின்றார் ஆய்வாளர் பேராசிரியர் தெய்வநாயகம் அவர்கள். அவரின் கூற்றின் படி, கி.பி காலத்தில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு புது மொழியினில் அக்காலத்தில் இந்திய தேசத்தில் இருந்த மக்கள் பலருக்கும் ஒருக் கருத்தினைத் தெரிவிக்க தொகுக்கப்பட்டவை தான் வேதங்கள். தமிழர்களால் உருவாக்கப்பட்ட அந்தப் புதிய மொழி தான் சமசுகிருதம் என்றும் அவர் கூறுகின்றார். (வேதங்களைத் தொகுத்தவர் வியாசர் என்னும் திராவிடர் என்ற கருத்து நமக்கு ஏற்கனவே தெரியும்)

நம்புவதற்கு கடினமான விடயங்கள் தான். ஆனால் அவர் கூறும் கூற்றுகளை மெய்ப்பிக்கும் வண்ணம் சில சான்றுகளையும் அவர் தரும் பொழுது, அவற்றை முற்றிலும் நம்மால் புறக்கணிக்கவும் முடியவில்லை. அவ்வாறு அவர் தரும் சான்றுகள் என்ன...

காண்போம்...!!!


பின்குறிப்பு:ஆய்வாளர் தேவகலா அவர்களின் 'தமிழ் பக்தி இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (விவிலிய ஒளியில்)' என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் இருந்து நான் அறிந்தவனவற்றை எனக்கு புரிந்த வகையிலேயே இங்கே பதிவிட்டு உள்ளேன்.
nanri http://vazhipokkanpayanangal.blogspot.in/

எம்டன் செம்பகராமன்

முதலாம் உலக யுத்தம்...!!!

நீண்ட காலமாக பல்வேறு நாடுகள் தமக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருத்த வெறுப்பு உணர்ச்சிகள் வெடித்து எரிமலையாய் சிதறியதொரு தருணம்...!!! நாடு பிடிக்கும் ஆசையில் உலகத்தில் இருந்த பலம் பொருந்திய நாடுகள் அனைத்தும் தங்களது இராணுவத்தினை களம் இறக்கிக் கொண்டிருந்தன.

அனைத்தையும் செம்பகராமன் கண்டுக் கொண்டு இருந்தான்.

'நீண்ட நெடியப் போராக இது இருக்கப் போகின்றது...அதில் சந்தேகமே இல்லை...அதுவும் குறிப்பாக இங்கிலாந்து இந்தப் போரினில் மிகத் தீவிரமாகவே ஈடுபடும்...ஈடுப்பட்டே ஆக வேண்டும்...அதற்கு வேறு வாய்ப்புகள் கிடையாது...இது தான் சரியான தருணம்...இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தினை முழு மூச்சாய் தொடங்க காலம் கனிந்து இருக்கின்றது. ஆரம்பிப்போம்...!!!" என்று எண்ணிக் கொண்டே செம்பகராமன் தனது செயல் திட்டத்தினை ஆரம்பிக்கின்றான்.


இந்திய சுதந்திரத்திற்காக போராடும் ஒரு இந்திய இராணுவத்தினை அமைப்பதே அவனது முதல் இலக்காய் இருந்தது. அவனது இலக்கிற்கு செர்மனி உதவிப் புரிந்தது...செம்பகராமனின் செயலும் பேச்சும் ஆட்களை கவர்ந்தன...வெகு விரைவில் ஒரு தோற்றம் பெற்றது இந்தியாவின் முதல் இராணுவம்...'இந்தியத் தேசியத் தொண்டர் படை (Indian National volunteers Corps)' என்றப் பெயரினைக் கொண்டே.

யுத்தம் காத்து இருக்கின்றது...படையும் தயாராக இருக்கின்றது...போதாது. களத்தில் குதித்தான் செம்பகராமன்...நேரடியாகவே. முதலாம் உலக யுத்தத்தில் செர்மனியின் புகழ் பெற்ற நீர் மூழ்கிக் கப்பலான எம்டன் (Emden) என்றக் கப்பலின் பொறியாளராகவும் இரண்டாம் பொறுப்பதிகாரியாகவும் செயல் புரிந்தது செம்பகராமனே ஆகும்.

அன்றைய காலத்தில் இந்தியப் பெருங்கடல் முழுமையும் ஆங்கிலேயக் கப்பல் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. ஆங்கிலேயப் படைகளின் செல்வாக்கு அப்படி. அப்படி இருந்தும், ஆங்கிலேய கப்பல் படையிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்டனில் இந்தியாவினை வலம் வந்து, சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை, நீதி மன்றம் மற்றும் எண்ணெய்க் கிடங்குகள் போன்றவற்றின் மீது ஆங்கிலேய அரசிற்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் தாக்குதல் நிகழ்த்தி விட்டு சென்றான் செம்பகராமன்.

ஆங்கிலேயர்களின் செல்வாக்கு மிகுந்த கடற்பரப்பில் தைரியமாக கப்பலினை எடுத்து வந்து அவர்கள் கொண்டாடிய சென்னையின் மீதே தாக்குதல் நிகழ்த்தி வெற்றிக்கரமாக செம்பகராமன் திரும்பிச் சென்று ஆண்டுகள் பல ஆகலாம்...ஆனால் அந்தச் செயல்...அந்தத் தைரியம் வரலாற்றில் பதிந்து விட்டது,ஒரு வட்டாரச் சொல்லாய்...'எம்டன்' என்றச் சொல்லாய்...இன்றும் அந்தச் சொல் திறமைசாலிகளைக் குறிக்கும் ஒருச் சொல்லாக தமிழகம் அதுவும் குறிப்பாக சென்னைப் பகுதிகளில் வழங்கப்பட்டு வந்துக் கொண்டு இருக்கின்றது.

இது போதாதென்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1915 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இன்றைக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகராக உள்ள காபூலில் இந்தியாவின் சுதந்திர அரசினை நிறுவவும் அவன் செயலாற்றினான். அதாவது இந்தியாவினை ஆண்டுக் கொண்டு இருந்த ஆங்கிலேய அரசிற்கு எதிராக இந்தியாவிலேயே சுதந்திரமாக இந்திய அரசினை அமைத்தான். அவ்வாறு அமைந்த அந்த அரசினில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தான் அவன்.

அனைத்தும் நன்றாகத் தான் தொடக்கத்தினில் சென்றுக் கொண்டு இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல செர்மனியின் வலுக் குறைய ஆரம்பித்தது...வெற்றிகள் இங்கிலாந்தின் வசம் செல்ல ஆரம்பித்தன...முடிவில் இங்கிலாந்தே போரில் வெல்ல செம்பகராமனின் முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருந்தும் செர்மனியில் இருந்துக் கொண்டே தொடர்ந்து செயலாற்றத் தொடங்கினான் செம்பகராமன்.

பின்னர் செர்மனி மீண்டும் ஹிட்லரின் கீழ் எழுச்சிப் பெற்ற பொழுதும் செர்மனியில் ஒரு முக்கிய நிலையில் தான் செயலாற்றிக் கொண்டு இருந்தார் அவர்.

1933 ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் செர்மனியில் இருக்கும் வியன்னா என்னும் நகரில் ஒரு மாநாட்டிற்குச் சென்றிருந்த பொழுது செம்பகராமனைக் கண்டு வெகு நேரம் பேசி இருவரும் தங்களது கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். செம்பகராமனின் அனுபவங்களையும் சிந்தனைகளையும் கேட்ட பின்பு தான் 'இந்தியாவிற்கென்று தனி இராணுவம்' என்ற தனது சிந்தனையினை மேலும் விரிவாக்கிக் கொண்டார் சுபாஷ் சந்திர போஸ் என்ற கருத்துக்களும் இருக்கின்றன.

மிராவதி என்பவர் அவரது 'Lest We forget' என்னும் நூலிலே 'இந்தியா சுதந்திரம் பெற்று இருக்கும் இந்த நாளினை காண சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருந்து இருப்பார் எனில் நிச்சயமாக அவருடைய குருவான செம்பகராமன் பிள்ளைக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் அவர் வழங்கி இருப்பார்" என்றே குறிப்பிடுகின்றார். சரி இருக்கட்டும்...இப்பொழுது நாம் மீண்டும் செர்மனிக்கே செல்ல வேண்டி இருக்கின்றது.

செர்மனி அசுர வேகத்தில் வளர்ந்துக் கொண்டு இருக்கின்றது...அதனுடையே நாஜிக்களும் தான். இரண்டையும் வளர்த்துக் கொண்டு இருக்கின்றார் ஹிட்லர் ஒரு கனவோடு...ஒரே கனவோடு. அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் இந்தியாவைப் பற்றியும், இந்தியர்களால் சுயமாக அவர்களை அவர்களே ஆழ முடியாது என்பதனைப் போன்றும் தவறாக ஹிட்லர் பேசி விட...அங்கேயே ஹிட்லரை எதிர்கின்றான் செம்பகராமன்.

"ஹிட்லர் பேசியது தவறு...இந்தியர்களின் வரலாற்றினை அறியாது கருத்தினைக் கூறி இருக்கின்றார்...அதற்கு ஹிட்லர் நிச்சயமாக மன்னிப்பு கேட்டாக வேண்டும்..."

செம்பகராமன் அவனது நிலையில் உறுதியாக நின்றான். இறுதியாக ஹிட்லர் அவன் தெரிவித்தக் கருத்துக்களுக்காக செம்பகராமனிடன் மன்னிப்புக் கோரினான்.

ஆனால் காலம் போக போக செர்மனியில் ஹிட்லரின் செல்வாக்கு வேறு யாருக்கும் இல்லாத அளவிற்கு உயர ஆரம்பித்தது....எங்கும் அவன் குரல்...எங்கும் நாஜிக்கள்...எங்கெங்கும் ஹிட்லர். அந்த நிலையிலே மற்ற தலைவர்களின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது.

செர்மானியத் தலைவர்களின் செல்வாக்கே குறைந்தப் பொழுது இந்தியனான செம்பகராமனின் செல்வாக்கு மட்டும் சரியாமல் இருக்குமா? செம்பகராமனின் செல்வாக்கும் செர்மனியில் சரிய ஆரம்பித்தது.
 ஏற்கனவே ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்ததற்காக செம்பகராமனின் மீது பகை உணர்வுடன் இருந்த நாஜிக்கள் சிலர் அந்தத் தருணத்தினை பயன் படுத்திக் கொள்கின்றனர்.

செம்பகராமனின் உணவில் விஷம் இடப்படுகின்றது.

ஆங்கிலேயர்களுக்கு தனது சிறு வயதில் இருந்தே ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த அந்த வீரன் இறுதியாக சூழ்ச்சிக்கு பலியாகின்றான்...தனது 43 ஆம் அகவையில். அது 1934 ஆம் ஆண்டு. இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு மாவீரனை இழந்த ஒரு ஆண்டு. சூழ்ச்சிக்கு பலியான தமிழர்களில் அவன் முதலானவனும் அல்ல...இறுதியானவனும் அல்ல...தமிழர்களின் வரலாற்றில் அவனும் ஒரு பகுதி ஆகின்றான்.

சாகும் தருவாயில் அவனது மனைவியிடம் அவன் கூறிய இறுதி வார்த்தைகள்

"பதினேழு வயதிலே பிறந்த நாட்டினை விட்டு, பிற நாடு ஓடி வந்தேன்; 26 ஆண்டுகள் கழிந்தன. எனது பிறந்த நாட்டினில் அடி எடுத்து வைக்கும் பாக்கியமில்லாது இறக்கப் போகின்றேன்...எனது தாய் நாட்டு மக்களை எனது வாழ்நாளில் காணாது சாகப் போகின்றேன்... சாகத்தான் போகின்றேன்...நான் செத்த பிறகாவது... எனது அஸ்தியை செந்தமிழ்நாட்டு வயல்களிலே தூவுங்கள்... எனது எண்ணத்தை நீராக...எனது அஸ்தியை உரமாகக் கொண்டு அந்தப் பச்சைப் பசும் பயிர்கள் வளரட்டும். அந்தப் பயிர்கள் விடுக்கும் கதிர்கள்... அந்தக் கதிர்கள் கொடுக்கும் கொடுக்கும் மணிகள்... அந்த மணிகளை உண்ணும் மக்கள்... அந்த மக்களின் இரத்தத்தோடு இரத்தமாக...சித்தத்தோடு சித்தமாகக் கலந்து விடுகின்றேன்...அங்கே, என்னைப் போல் ஆயிரமாயிரம் செம்பகராமன்கள் தோன்றட்டும்...!!!"

அவர் இறந்து 34 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது அஸ்தி இந்தியாவில் கரைக்கப்பட்டது. 17 வயதில் தனது நாட்டினை விட்டு போராட சென்ற வீரன் ஒருவனின் வரலாறும் அத்துடன் முடிவிற்கு வருகின்றது.

மேலும் சில குறிப்புகள்:

1) 'ஜெய் ஹிந்த்' என்றொரு முழக்கத்தினை நாம் இன்று அறிந்து இருப்போம்...அந்த முழக்கத்தினை அறிமுகப்படுத்தியது ஒரு தமிழன் என்றச் செய்தி நம்மில் பலரும் அறிந்து இருக்க மாட்டோம். அந்தத் தமிழன் வேறு யாரும் இல்லை... செம்பகராமன் தான் அது. அவனது 16 ஆம் வயதில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மேடையில் முழங்கியப் பொழுது அவன் பயன்படுத்திய அந்த முழக்கம் தான் இன்று இந்திய தேசம் முழுவதும் பரவி இருக்கின்றது.

2) செம்பகராமன் ஆரம்பித்த இராணுவமான 'இந்தியத் தேசியத் தொண்டர் படை'யினைத் பின்பற்றித் தான் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் பின்னாளில் தமது இந்தியத் தேசிய இராணுவத்தினை அமைக்கின்றார்.

3) செர்மனியின் உயர்ந்தப் பட்டமான 'வான் (Von)' என்றப் பட்டத்தினை செம்பகராமனுக்கு வழங்கி பெருமைப்படுத்தி இருக்கின்றது செர்மானிய அரசு. சுதந்திர இந்தியா அமையுமானால் அதன் முதல் சனாதிபதியாக செம்பகராமன் வர வேண்டும் என்றே செர்மானிய சக்கரவர்த்தியான கெய்செர் அவர்கள் கூறி உள்ளார்.

இப்படிப்பட்ட ஒருவனுக்கு 2008 ஆம் ஆண்டில் சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டப வளாகத்தில் தமிழக அரசால் ஒரு முழு உருவச் சிலைத் திறக்கப்பட்டு உள்ளது. அதைத் தவிர வேறு ஏதாவது செய்யப்பட்டு உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு வீரனின் வரலாற்றினை மக்களை அறியச் செய்து இருக்க வேண்டியது யார் கடமை? ஏன் இந்த வீரனின் வரலாறு மக்களிடம் சென்றடையவில்லை... இதனைப் போன்று இன்னும் எத்தனைப் பேர்கள் வரலாற்றின் இருண்டப் பக்கங்களில் உலாவுகின்றனரோ?

தெரியவில்லை...இருந்தும் அவர்களை அறிய முயல்வோம்...!!!

தொடர்புடைய இடுகைகள்:
1) வீரன் செண்பகராமன் - தமிழோசை பதிப்பகம்
2) http://www.frontlineonnet.com/fl2621/stories/20091023262112500.htm
3) http://en.wikipedia.org/wiki/SMS_Emden_%281908%29#Madras_to_Penang
4) http://en.wikipedia.org/wiki/Chempakaraman_Pillai
5) http://en.wikipedia.org/wiki/Bombardment_of_Madras
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் பக்கங்களை திருப்பிப் பார்க்கும் பொழுது ஒரு வருத்தமான விடயம் கண்ணுக்கு புலனாகின்றது. அப்பக்கங்களில் சில இருட்டடிக்கப்பட்டு இருக்கின்றன. இருண்ட அப்பக்கங்களில் சிலர் மறக்கப்பட்டு கிடக்கின்றனர். சிலர் மறைக்கப்பட்டுக் கிடக்கின்றனர். ஏன் சற்று உற்றுப் பார்த்தால் இந்தியாவின் வரலாறே இவ்வாறு பல இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்களைக் கொண்டு தான் விளங்குகின்றது.

சரி இருக்கட்டும், இருட்டடிப்பு செய்யப்பட்ட அனைத்துப் பக்கங்களைப் பற்றியும் அவற்றின் காரணிகளைப் பற்றியும் பேசினால் பேசிக் கொண்டே போகலாம். ஆனால் நமக்கு இப்பொழுது அவற்றிற்கு நேரமில்லை. காரணம் நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்களில் இருந்த ஒருவர் இப்பொழுது நம்மை சந்திக்க ஆவலுடன் காத்து இருக்கின்றார்.

அவர் பெயர் செம்பகராமன் பிள்ளை.

1891 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் பிறந்து 1934 இல் செர்மனியில் மரணம் அடைந்த இவரின் வரலாற்றினைப் பார்க்கும் பொழுது சற்று பிரமிக்க தான் வைக்கின்றது. அப்படி என்ன செய்து விட்டார் இவர்... காண்போம்!!!.

இன்றைக்கு போராட்டம், சுதந்திர வேட்கை போன்றச் சொற்கள் நம்மிடையே வெறும் வார்த்தைகளாக மட்டுமே பெரும்பாலும் இருந்துக் கொண்டு வருகின்றன...ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சொற்கள் தான் சிலருக்கு வாழ்க்கையாகவே இருந்து வந்தன...அதுவும் குறிப்பாக இளைஞர்களிடம்...மாணவர்களிடம்!!!

செம்பகராமனும் அப்படி ஒரு மாணவன் தான்...!!!

"வேண்டும் புரட்சி... திறமையான மக்கள் இங்கே நம் நாட்டிலேயே இருக்க அன்னியர்கள் எதற்காக நம்மை ஆள வேண்டும்...அடிமையாய் இருப்பதும் ஒரு வாழ்க்கையா?...இந்த நிலை மாற வேண்டும்...நிச்சயமாய்!!! மாற்றங்கள் தானாக என்றுமே வந்ததில்லை...எனவே நாம் தான் மாற்ற வேண்டும்...சுதந்திரத்தினை வென்றெடுக்க வேண்டும்...வருவாய் தோழனே...கடமைகள் நமக்காக காத்துக் கொண்டு இருக்கின்றன" என்று சுதந்திர வேட்கையுடன் இந்தியத் தெருக்களில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த மாணவர்களின் தலைவனாய் இருந்தான் செம்பகராமன்...!!!

"பதினைந்தே வயது சிறுவன் நம்மை எதிர்த்துப் பேசுகின்றான்...செயல் புரிகின்றான்...வெறும் பேச்சாக இருந்தால் கூட விட்டு விடலாம்...ஆனால் இவன் பேச்சு மக்களை கவருகின்றதே...மக்கள் ஒன்று சேருகின்றார்களே...இவனை இப்படியே விட்டால் நமக்கு பின்னால் பிரச்சனைகள் எழலாம்...எனவே இவன் மக்களிடம் பேசுவதற்கு தடை விதிப்பது சரியானதொன்றாக இருக்கும்" என்று எண்ணி ஆங்கிலேய அரசும் செம்பகராமன் பொது இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு தடையினை அறிவித்தது. செம்பகராமனும் ஆங்கிலேய காவல்துறையின் கண்காணிப்பிற்கு கீழ் வந்தான்.

ஆனால் எத்தனை நாள் தான் சுதந்திர வேட்கை அடுக்குமுறைக்கு கட்டுப்பட்டுக் கிடக்கும்...சுதந்திரமாக செயலாற்ற எத்தனித்த செம்பகராமனுக்கும் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு வருகின்றது... ஒரு ஐரோப்பிய தாவரவியல் அறிஞர் வாயிலாக.

அவர் பெயர் சர். வால்டர் வில்லியம் ஸ்ட்ரிக்லேன்ட்!!! ஆங்கிலேய பரம்பரையினைச் சார்ந்தவராக அவர் இருந்தாலும் அவரது தாயார் செர்மனி நாட்டினைச் சார்ந்தவர். எனவே அவர் அக்காலத்தில் மறைமுகமாக செர்மானிய அரசுக்காக இந்தியாவில் உளவுப் பார்த்துக் கொண்டு வந்தார் ஆராய்ச்சி என்றப் பெயரில். அவர் கண்ணில் தான் துடிப்பான இளைஞனான செம்பகராமன் சிக்குகின்றார்.

"ஆங்கிலேயர்கள் ஆளும் நாட்டில் இருந்துக் கொண்டே அவர்களை எதிர்ப்பது கடினமான ஒரு செயல் என்று உனக்குத் தெரியாதா?"

"தெரியும்...ஆனால் அதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கு இல்லை...!!!" என்றான் செம்பகராமன்.

சிரித்தார் ஸ்ட்ரிக்லேன்ட்...!!!

"உன்னிடம் வேகமும் விவேகமும் இருக்கின்றது இளைஞனே...ஆனால் ஆங்கிலேயர்களை மீறி நீ போராட வேண்டும் என்றால் அவை மட்டுமே உனக்குப் போதாது... நீ இன்னும் அநேக விடயங்களைக் கற்க வேண்டும்...அதற்கு உனக்குச் சுதந்திரம் வேண்டும்" என்றார்.

அவரை உற்றுப் பார்த்தான் செம்பகராமன்.

"இதனை தாங்கள் என்னிடம் சொல்வதற்கு காரணம்...?"

மீண்டும் சிரித்தார் ஸ்ட்ரிக்லேன்ட்...!!!

"பழைய கோட்பாடு தான் இளைஞனே...எதிரிக்கு எதிரி நண்பன்...அது தான் காரணம்" என்றார்.

"புரியவில்லையே...!!!" என்றான் செம்பகராமன்.

"உலகில் ஆங்கிலேயர்களுக்கு பகை நாடுகளும் இருக்கின்றன...அவைகளுக்கு இங்கிலாந்து வீழ வேண்டும்...அவ்வளவே...அதற்காக அவைகள் பல காரியங்களை செய்வதற்கு தயாராக இருக்கின்றன. அந்த நாடுகள் உனக்கு...உன்னுடைய குறிக்கோளுக்கு உதவி நிச்சயமாய் செய்யும்...! உனக்கு உன்னுடைய நாடு விடுதலை அடைய வேண்டும்...எங்களுக்கு இங்கிலாந்தின் செல்வாக்கு குறைய வேண்டும்...அவ்வளவே...!!! இலக்கு ஒன்றாக இருக்கும் பொழுது ஒன்றாக செயலாற்றலாம் தானே... என்ன சொல்கின்றாய்..." என்றுக் கூறி செம்பகராமனின் பதிலுக்காக காத்திருக்க ஆரம்பித்தார் ஸ்ட்ரிக்லேன்ட்.

யோசித்தான் செம்பகராமன்.

"என்னை இப்பொழுது என்ன செய்ய சொல்லுகின்றீர்...?"

"கிளம்பு...ஐரோப்பா உனக்காக காத்திருக்கின்றது... அறிவை வளர்த்துக் கொள்...அங்கே உனக்கு உதவிகள் செய்ய நண்பர்கள் பலர் இருக்கின்றனர்..."
இதற்கு மேல் சிந்திப்பதற்கு ஒன்றும் இருப்பதுப் போன்று செம்பகராமனுக்குத் தோன்றவில்லை.

அவன் முடிவெடுத்து விட்டான்.

"சரி...கிளம்பலாம்...!!!"

ஸ்ட்ரிக்லேன்ட் அவர்களுடன் கப்பலேறி ஐரோப்பாவினை நோக்கி1908 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் தேதி பயணிக்க ஆரம்பித்தப் பொழுது அவனது வயது 17!!!

முதலில் இத்தாலி...அங்கே ஒரு பட்டப்படிப்பு...பின்னர் சுவிச்சர்லாந்து...அங்கும் படிப்பு...பின்னர் செர்மனி...அங்கும் கல்வி...பட்டம்...சாதாரண செம்பகராமன் ... டாக்டர். செம்பகராமன் ஆகின்றான். ஆனால் படிப்பினை மட்டுமே அங்கே அவன் கவனிக்கவில்லை... சென்ற இடங்களில் எல்லாம் மாணவர்கள் மத்தியில் கூட்டம் போடுவது...ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தினை தோலுரிப்பது... இந்தியர்களின் நியாயமானமான கோரிக்கைகளை உலக மக்களின் முன்னர் கொண்டு சேர்ப்பது போன்ற வேலைகளையும் கல்வியுடன் சேர்த்து அவர் செய்துக் கொண்டு தான் இருந்தார். இவரது இந்தச் செயல்கள் இந்தியாவின் குரலினை உலக மக்களிடையே கொண்டு போய் சேர்த்தன.

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக பெர்லினில் 'இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி' என்ற ஒரு இயக்கத்தினை ஆரம்பித்து அதன் தலைவராகவும் செயலாற்றினார். அந்த இயக்கத்தின் வழி 'ப்ரோ இந்தியா' என்ற ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையும் நடத்தி உலக மக்களின் பார்வைக்கு இந்திய மக்களின் கோரிக்கைகளையும் நியாயங்களையும் கொண்டு சேர்த்தார்.

செயல் வேகம் இருக்கின்றது... அறிவாற்றலும் இருக்கின்றது...அதனுடன் திறமையும் இருக்கின்றது...போதாதா...செர்மனியின் அரசியல் தலைவர்கள் செம்பகராமனின் நண்பர்களாக விருப்பம் கொள்ள, செர்மனியில் செம்பகராமனின் செல்வாக்கு உயர்கின்றது.... செர்மனியின் சக்கரவர்த்தியான கெய்சர் அவர்கள் அவரது நெருங்கிய நண்பனாக கருதும் அளவுக்கு அவனின் செல்வாக்கு உயர்கின்றது. செர்மனியின் சக்கரவர்த்தி எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்னும் செம்பகராமனின் ஆலோசனையைக் கேட்கும் அளவு இருந்தது செம்பகராமனின் திறமை.

அத்தோடு அவன் நிற்கவில்லை...உலகில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அவன் குரல் எழுப்ப விரும்பினான்... அதற்காக அவன் ஆரம்பித்த இயக்கங்கள் தான் 'ஒடுக்கப்பட்ட மக்களின் சங்கம்' மற்றும் 'கீழ் நாட்டவர் சங்கம்'. இந்த இயக்கங்கள் மூலம் உலகின் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்டோருக்கும் அவன் குரல் எழுப்ப ஆரம்பித்தான்.

இங்கிலாந்தோ அவன் தலைக்கு ஒரு விலை (ஒரு இலட்சம் பொன்) வைத்து உலகம் முழுவதும் காத்துக் கொண்டு இருந்தது...ஆனால் அதனை துளிக் கூட பொருட்படுத்தாது உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டு இருந்தான் செம்பகராமன்... தென் ஆப்பிரிக்கா, பர்மா, அமெரிக்கா, சீனா, எகிப்து...இப்படி பல நாடுகளுக்குச் சென்று அங்கே மக்களுக்காக குரல் எழுப்பினான்.

அமெரிக்காவில் சென்று அங்கிருந்த ஆப்பிரிக்க மக்களின் நலனுக்காக குரல் எழுப்பினான். அன்று இருந்த அமெரிக்க சனாதிபதியான உட்ரோ வில்சனை நேரில் கண்டு ஆப்பிரிக்க மக்களின் நலனுக்காக பேசினான். சுதந்திரம் என்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உரிய உரிமை என்று எண்ணியே அவன் மனிதத்திற்காக குரல் கொடுத்தான்.

கூடவே இந்தியாவில் இருந்த தலைவர்கள் மற்றும் போராளிகளுடனும் அவன் தொடர்பில் இருந்துக் கொண்டே தான் இருந்தான். போராளிகளுக்கு செர்மனியில் இருந்து ஆயுதங்களை பெற்றுத் தருவது, தலைவர்களின் குரல்களை உலகிற்க்குக் கொண்டுச் செல்வது என்று அவனால் இயன்ற அனைத்தையும் அவன் செய்துக் கொண்டே தான் இருந்தான். இந்தியத் தலைவர்களின் அகிம்சை வழிப் போராட்டத்தினை அவன் ஏற்றுக் கொண்டாலும், ஆயுதங்களுடன் இருக்கும் ஆங்கிலப் படையினர் அவர்களை நொடியில் அடக்கி விடுவர் என்றும் அவன் அறிந்து வைத்து இருந்தான்...அந்த எண்ணத்திலேயே இந்தியாவிற்காக போரிடும் ஒரு படையினையும் அவன் உருவாக்கத் திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தான்.

அவன் எதிர்பார்த்தக் காலமும் வந்தது.

1914 ஆம் ஆண்டு...முதலாம் உலக யுத்தம் தொடங்கப்பெருகின்றது.

23 வயதான வீரன் செம்பகராமன் தன்னுடைய திட்டத்தினை செயல்படுத்த ஆரம்பிக்கின்றான்.
nanri http://vazhipokkanpayanangal.blogspot.in

search "எம்டன்" செண்பகராமன் - ஹிட்லரை அடக்கிய நேதாஜியின் குரு