செவ்வாய், 21 மார்ச், 2017

ஜெயமோகன் ஈழ வெறுப்பு தமிழ்நதி எழுத்தாளர் பெண்ணுரிமை

aathi tamil aathi1956@gmail.com

2/8/16
பெறுநர்: எனக்கு
வரலாற்றுப் பிழையான ஜெயமோகன்

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக ‘தடம்’ இதழில் கேட்கப்பட்ட
கேள்விக்கு கீழ்க்கண்டவாறு பதிலளித்திருக்கிறார் ஜெயமோகன்.

“முதலில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை…
எந்தவோர் அரசும் தமக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை
ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப்
பார்க்காது.”

இனப்படுகொலை குறித்து எந்தவொரு அடிப்படை அறிவும் இல்லாத ஒருவரால்தான்
இவ்வாறு மொண்ணைத்தனமாக பேச இயலும். இனப்படுகொலை என்றால் என்ன என்பதை
வரையறுப்பதற்குக் காரணமான ஆர்மீனிய படுகொலை பற்றிக் கூட இவர்
அறிந்திருக்க மாட்டார் போல. இதற்குப் பிறகும் ஜெயமோகனைத் தூக்கிப்
பிடிக்கும் இலக்கியவாதிகளது மனச்சாட்சி நாசமாய்ப் போகட்டும்!

அதேபோல, ஈழத்து எழுத்தாளர்களைப் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு,
“தமிழ்நதி வாஸந்தி லெவலில்தான் எழுதுகிறார். வாஸந்தி எழுதியதை விட
முக்கியமான எதையும் தமிழ்நதி எழுதிவிடவில்லை. அதனால் அவரை முக்கியமான
எழுத்தாளராக நான் கருதவில்லை”என்று பதிலளித்திருக்கிறார்.

வாஸந்தி அவர்களின் எழுத்தை குறைவாக மதிப்பிட்டு இந்த எதிர்வினையை
ஆற்றவில்லை. ஜெயமோகனுக்கு வாஸந்தி பற்றி என்ன அபிப்பிராயம் இருக்கிறது
என்பது எனக்குத் தெரியும். எனவே, என்னைத் தரந்தாழ்த்துவதை நோக்கமாகக்
கொண்ட ஜெயமோகனின் காழ்ப்புணர்வை அம்பலப்படுத்துவதற்காகவே இதை
எழுதுகிறேன்.

ஜெயமோகனிடமிருந்து இப்படியொரு காழ்ப்புணர்வு வெளிப்பட்டேயாகும் என்று
எனது நாவல் வெளியான நாளிலிருந்து நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இந்திய தேசியத்தை வானளாவ உயர்த்திப்
பிடிக்கிற இந்துத்துவவாதியாகிய ஜெயமோகன், என்னைப் பற்றி இவ்வாறு
சொல்லாமலிருந்தால்தான் நான் ஆச்சரியப்பட்டுப் போயிருப்பேன். தவிர,
கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டு அனுமானத்தின் அடிப்படையில் கதைக்கக்கூடிய
ஜெயமோகன் ‘பார்த்தீனியத்தை’யும் வாசித்திருக்க வாய்ப்பில்லை.

வானத்திற்குக் கீழே இருக்கிற எல்லாவற்றையும் பற்றி எழுதிவிடவேண்டும் என்ற
அங்கலாய்ப்பில், ஈழத்தைப் பற்றிய அடிப்படை அரசியல் அறிவற்று ஜெயமோகனால்
எழுதப்பட்ட ‘உலோகம்’ என்ற ‘திக்திக் க்ரைம்’ நாவலைக் குறித்து எனது
வலைத்தளத்தில் என்னால் ‘கிழித்து’எழுதப்பட்ட கட்டுரையை அவர்
படிக்காமலிருந்திருக்க மாட்டார்.

தவிர, மே 2012-இல், ‘கற்பழித்ததா இந்திய இராணுவம்?’(கற்பழிக்கிறதாம்
கருமாந்திரம்) என்ற தலைப்பின் கீழான தனது கட்டுரையில், ‘இந்திய இராணுவம்
ஈழத்தில் வன்புணர்வு எதனையும் செய்யவில்லை’என வரலாற்றுப் பிரக்ஞையே
இல்லாமல் நிறுவ முயன்று, தனது சகபாடிகளாலேயே மூக்குடைபட்டிருந்தார்.
இந்தியாவின் வல்லாண்மையை ஈழத்தில் நிலைநாட்டுவதற்காக, இந்திய இராணுவம்
அங்கு என்னென்ன அட்டூழியங்களைச் செய்தது என்பதை, குறிப்பாக, அவர்களால்
அங்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை எனது நாவல் முடிந்தளவுக்கு
பதிவு செய்து, ஜெயமோகனது மூக்குக்கு மேலதிகமாக சேதாரம்
விளைவித்திருக்கிறது. இந்நிலையில், அவர் தனது விமர்சனமற்ற தேசபக்தியை,
இத்தகைய நேர்காணல்களிலேனும் வெளிப்படுத்தாமல் எங்கே கொண்டுபோய்
வெளித்தள்ளுவார், பாவம்!

2014-இல் நாஞ்சில் நாடன் அவர்களால் இதே விகடனில் இடப்பட்ட பட்டியலில்
எனது பெயரும் இருந்தது. அந்தப் பட்டியலுக்கு எதிர்வினையாற்றிய ஜெயமோகன்
கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்.

“பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக
எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன்.
ஆனால், பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள்
மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள்.

இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக
தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது.”

‘பலவகை உத்திகள் மூலம் ஊடகப் பிம்பங்களாக ஆனதாக’அவரால் கூறப்பட்ட
பெண்களிலொருத்தி நாவலொன்றை எழுதியிருப்பதையும், அந்நாவல் வாசகர்களால்
பரவலாக வரவேற்கப்படுவதையும், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அந்நாவல்
தமிழில் முக்கியமான வரவு என எழுதுவதையும், ஆனந்த விகடனில் பட்டியலிட்ட
நாஞ்சில் நாடன் அவர்களே எனது  நாவலுக்கு நடத்தப்பட்ட விமர்சனக்
கூட்டத்தில் கலந்துகொண்டு ‘அப்போது எழுந்த சர்ச்சைக்கு தமிழ்நதி தனது
எழுத்தினால் பதிலளித்திருக்கிறார்’என்று உரையாற்றுவதையும் ஜெயமோகனால்
எங்ஙனம் ஜீரணித்துக்கொள்ள இயலும்?

ஜெயமோகன் போன்ற அடிப்படைவாதி ஒருவரால் விதந்தோதப்பட்டால் அது எனக்கு
நேரும் இழுக்கு. பொறுக்கவியலாத அவமானம்!

கீழ்வரும் தகவலையும் ஜெயமோகனின் அன்பர்கள், தொண்டரடிப்பொடிகள் அவரிடம்
சேர்ப்பியுங்கள்.

‘பார்த்தீனியம்’வெளியாகி மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது பதிப்பு
கண்டுவிட்டது. அது அரசியல் பிரக்ஞையுள்ள வாசகர்களால் எனக்கு அளிக்கப்பட்ட
அங்கீகாரம். ஜெயமோகன் போன்ற ஒருவரின் அங்கீகாரம் என்போன்ற சுயமரியாதை
மிக்க படைப்பாளிக்குத் தேவையற்றது.

ரொம்ப மகிழ்ச்சி!!!

முகநூலில் : Thamizhnathy Nathy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக