செவ்வாய், 21 மார்ச், 2017

வெண்பா சீர் தளை குறள் திருவள்ளுவர் தமிழர் நேர் தேமா

aathi tamil aathi1956@gmail.com

24/9/16
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம் .
திருக்குறள் குறள்வெண்பாவில் எழுதப்பட்டது ஏன்?
...........................................................................
........
சு.தங்கமணி Tanggamani Sugumaran
இது என் பதிவாகும். இதில் ஏதேனும் குறையோ அல்லது பிழையோ இருந்தால் அதற்கு
முழுப்பொறுப்பும் நானாவேன். ஒரு வேளை நண்பர்கள் யாராவது அவர்கள்
முகநூலில் பகிர்ந்தால் அவர்களிடம் பிழைக்கானக் காரணத்தைக் கேட்காமல்,
தயவு செய்து என்னிடத்தில் கேட்கவும். பிழை இருந்தால் நிச்சயம்
திருத்திக்கொள்வேன். நன்றி.
ஆயிரம் ஆயிரம் மதங்களும், அவைகள் புணைந்த, படைத்த, உருவாக்கிய புனித
நூல்கள் திடலில் படர்ந்த புற்கள் போல் கொட்டிக்கிடந்தா
லும், முக்காலமும் வகுத்தளித்த வள்ளுவனின் திருக்குறள் எனும்
பெரும்படைப்புக்கு அவைகள் வெறும் தூசியே. இறைவன் கிருட்டிணன் 3 அடிகளில்
உலகை அளந்தாராம். வள்ளுவன் வெறும் ஒன்னே முக்கால் அடியில் அகில
அண்டங்களையும் அளந்தவர் என்றால் வள்ளுவத்தின் சிறப்பு எத்தகையது என்று
கருதிகொள்ளுங்கள். வள்ளுவத்தின் சிறப்புகளையும் அதில் ஆழப் பொதிந்துள்ள
கருத்துகளையும் எடுத்துக்கூற நான் இறைவனிடம் சாகா வரம் பெற்றால் ஒழிய
சாத்தியம் ஆகாது. இருப்பினும், இன்று வள்ளுவன் படைத்த திருக்குறளின்
பாவகையை ஆராய்ந்து, ஏன் அந்த பாவகையில் எழுதப்பட்டது என்று கண்டறிவோம்.
திருக்குறள் என்பது பதினெண்கீழ்கணக்கில் வரும் ஓர் அரிய படைப்பு. இத்திருக்குறளான
து குறள் வெண்பா எனும் பாவகையில் இயற்றப்பட்டது. அது என்ன குறள் வெண்பா?
தமிழில் மரபு வழி பாக்கள் மருட்பா, பரிபாடல் சேர்க்காமல் மொத்தம் 4
வகைகள் உள்ளன. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா மற்றும் வஞ்சிப்பா ஆகும்.
அதில் ஒரு வகையான வெண்பாவில் பல உள்வகைகள் உண்டு. குறள் வெண்பா,
சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, பஃறொடை வெண்பா மற்றும்
கலிவெண்பா. இக்குறள் வெண்பா என்பது வெண்பாவுக்கான இலக்கணத்தைப் அனைத்து
பயின்று வரும்.
குறள் வெண்பா மற்ற வெண்பா வகையைக் காட்டிலும் சற்று வேறுபடும். இதன்
அமைப்பானது ஈற்றடியில்(இறுதி அடியில்) சிந்தியல் அடியாகவும்(3 சீர்கள்)
ஏனைய அடி அளவடியாகவும் (4 சீர்கள்) பயின்று வரும். இது இரண்டே அடிகளில்
வர வேண்டும்.. இதற்கு ஏன் குறள் வெண்பா என்று பெயர் வந்தது என்றால்
குறுகி இருப்பதால் தான். எடுத்துக்காட்டா
க குறளன் என்றால் தமிழில் குட்டையானவன் என்று பொருள். அதே பொருள் தான்
இங்கேயும். குறுகல், குறுகி, குறைவு, குன்று இவைகளின் வேர்ச்சொல் குறள்.
அதனால் இந்த வெண்பா வகைக்கு “குறள்” என்று பெயர்வர காரணம்.
குறள்வெண்பா மட்டும் அல்ல வெண்பா என்றாலே மரபுவழி பாக்களில் மீமிக
சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த பாவகையானது மரபு பாவின் அத்தனை
இலக்கணங்களும் இருத்தல் வேண்டும். நான் ஏற்கனவே “வள்ளுவர் தமிழரா” என்ற
கட்டுரையில் யாப்பிலக்கணம் பற்றி கூறியுள்ளேன். மீண்டும் ஒரு தெளிவுக்காக
சற்று விளக்கிவிடுகிறேன். யாப்பிலக்கணத்தில் மொத்தம் 6+1 உறுபியல் உள்ளன.
அவைகள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை மற்றும் அணி. இவைகள் ஒன்றோடு
ஒன்று தொடர்புடையவையாகும். ஒரு சிறிய எடுத்துக்காட்டு காண்போம்
எழுத்து
எளிமையான விளக்கம் என்பதால் அளபெடை, குறுக்கம் இவைகளைத் தவிர்த்து விட்டு
பார்த்தால், குறில், நெடில், ஒற்று எழுத்திலக்கணத்தில் அடங்கும். குறில்
மற்றும் நெடில் எழுத்து என்றால் அனைவருக்கும் தெரியும். ஒற்று என்றால்
ஆய்தம் எனலாம். குறிப்பாக இவைகள் மெய்யெழுத்து என்று தான் சொல்லவேண்டும்.
எழுத்துகள் எழுதும் போது மட்டுமே அசைகள் பிரிக்க இயலும்.
அசை
எழுத்துகள் எழுதும் போது அசை பிறக்கும். அசைகள் இரண்டு வகை. அவை நிரையசை
மற்றும் நேரசை. எழுத்துகளைப் பிரித்து தான் அது எந்த அசையில் வருகிறது
என்று அறியமுடியும். அசைப்பிரிக்க எழுத்திலக்கணம் அவசியம்.
முதல் எழுத்து குறிலாக வந்தால் அசைப்பிரிக்க முடியாது. முதல் எழுத்துக்
குறில் என்று வந்தால் அதன் சார்பெழுத்துக்கள் குறிலோ, நெடிலோ, ஒற்றோ
வந்தால் மட்டுமே அசைப்பிரிக்க முடியும். மாறாக முதல் எழுத்து நெடிலாகவோ
அல்லது நெடில் ஒற்றோடு வந்தால் அசைப்பிரிக்க இயலும். மேலும் தனி நெடில்
எழுத்தோ, குறிலோடு ஒற்றோ, அல்லது குறிலோடு குறில் எழுத்து முடிந்து
சீரில் ஈறில் தனிக்குறில் எழுத்து வந்தால் அது அசையாய் ஏற்க முடியும்.
எடுத்துக்காட்டாக
• பல்லவர்கள் என்பதை எப்படி அசைப்பிரிப்பது என்று பார்ப்போம்
பல்/லவர்/கள் என்று வரும். அது எந்தெந்த அசையில் வரும் என்றால்
நேர்/நிரை/நேர் என்று வரும். இது தான் அசைப்பிரிக்கும் முறை. அசைகளைப்
பிரித்த பின் தான் அது எந்த சீர் என்று அறிய முடியும்.
சீர்
அசையும் அசையும் பிரிக்கும் போது ஏற்படும் விளைவை சீர் என்று
சொல்வார்கள். வாக்கியத்தில் சொல் என்பதை பாக்களில் சீர் என்று
சொல்வார்கள். சொல் என்றால் முழுமைப்பெற்றது. சீர் என்றால் முழுமையும்
பெற்றிருக்கும், பெறாமலும் இருக்கும். சீர் நான்கு வகைப்படும்.
ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைசீர். ஓரசை, ஈரசைசீர்களை நாம்
எளிதில் நினைவில் வைத்துக்கொள்வோம். மூவசைச்சீர் நாலசைச்சீர் என்று
வரும்போது சற்று தடுமாற்றம் ஏற்படும் என அதற்கு வாய்ப்பாடு அமைத்தார்கள்
பண்டையத் தமிழர்கள். நாலசைச்சீர்களை விட்டுவிட்டு ஏனைய சீர் வகைகளை
சுருக்கமாக பார்ப்போம்.
ஓரசைச்சீர்
நிரை அல்லது நேர் மட்டும் வரும். இதன் வாய்ப்பாடு நிரை என்றால் மலர் நேர்
என்றால் நாள்.
ஈரசைச்சீர்
1. நேர்-நேர் - தே.மா
2. நிரை-நேர் -புளி.மா
3. நிரை-நிரை -கரு.விளம்
4. நேர்-நிரை -கூ.விளம்
மூவசைச்சீர்
1. நேர்-நேர்-நேர் - தே.மாங்.காய்
2. நேர்-நேர்-நிரை -தே.மாங்.கனி
3. நிரை-நேர்-நேர் -புளி.மாங்.காய்
4. நிரை-நேர்-நிரை -புளி.மாங்.கனி
5. நிரை-நிரை-நேர் -கரு.விளங்.காய்
6. நிரை-நிரை-நிரை -கரு.விளங்.கனி
7. நேர்-நிரை-நேர் -கூ.விளங்.காய்
8. நேர்-நிரை-நிரை - கூ.விளங்.கனி
இது தான் சீரும் அதன் வாய்ப்பாடும். பல்லவர்கள் என்று அசைப்பிரித்தது
எந்த சீரில் அமையும் என்றால், நேர்-நிரை- நேர் மூவசைச்சீரான
கூவிளங்காயில் அமையும். சீர் கெட்டால் என்னவாகும் என்றால் தளைக்கெட்டு
போகும்.
தளை
முதல் சீரும் இரண்டாம் சீரும் இணையும் போது அவைகளுக்கு இடையில்
கட்டப்படுவதே தளை. இந்த தளைதான் பாவின் வகையை தீர்மானிக்கும். வெண்பாவின்
தளைகள் என்னவென்றால் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகும்.
இயற்சீர் வெண்டளை மாச்சீர் முடிந்தபின் நிரையசையிலும், விளச்சீர்
முடிந்ததும் நேரசையிலும் அடுத்த சீர் தொடங்கவேண்டும். இதனை மா முன் நிரை
என்றும் விளம் முன் நேர் அழைப்பார்கள். வெண்சீர் வெண்டளை வெண்பாவிற்கே
உரிதான ஒரு தளை. இது காய்ச்சீர் முடிந்ததும் நேரசையில் சீர் தொடங்கும்
போது ஏற்படும் தளைக்கட்டு. இதனை காய் முன் நேர் என்பார்கள்.
எடுத்துக்காட்டாக
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே என்ற திருக்குறளின் முதல் அடியை எடுத்துக்கொள்வோம்.
உடுக்கை- இழந்தவன்= மாச்சீர்- நிரை= இயற்சீர் வெண்டளை
இழந்தவன்- கைபோல= விளச்சீர்- நேர்= இயற்சீர் வெண்டளை
கைபோல- ஆங்கே= காய்ச்சீர்- நேர் = வெண்சீர் வெண்டளை
இப்படியான தளைகளின் அமைவது வெண்பாவின் தளைகள்.
அடி
சீர்களின் தொகுப்பு 'அடி' எனப்படும். சீர்கள் அடுத்து, அடுத்து அடி
எடுத்து நடப்பதால் 'அடி' என்ற காரணப் பெயர் அமைந்தது. பா நடப்பதற்கு
அடிபோல் உதவுவதால் இப்பெயர் அமைந்ததாகவும் கொள்ளலாம்.
ஐந்து வகையான அடிகள் உண்டு.
இரண்டே சீர்களைக் கொண்டது குறளடி. மூன்று சீர்களைக் கொண்டது சிந்தடி.
நான்கு சீர்களைக் கொண்டது அளவடி.
ஐந்து சீர்களைக் கொண்டது நெடிலடி.
ஆறு சீர்களும் அதற்கு மேலும் கொண்டது கழி நெடிலடி. செய்யுளில் உள்ள
சீர்களின் தொகுப்பை 'வரி' என்று சொல்வதில்லை. அது 'அடி' என்றே சொல்லப்பட
வேண்டும். ‘வரி’ உரைநடைக்குரியது.
தொடை மற்றும் அணி
தொடை மற்றும் அணி இலக்கணம் மீமிக எளிமை. தொடையில் முதல் அவசியமான மூன்று
விடயம் மோனை, எதுகை, இயைபு. முதல் எழுத்து ஒரே இனத்தில் பயின்று வந்தால்
அது மோனை. இரண்டாம் எழுத்து ஒரே இனத்தோடுப் பயின்று வந்தால் அது எதுகை.
இறுதி எழுத்தி ஒரே மாதிரியான எழுத்தோடு வந்தால் அது இயைபும். அணிகள் பாவை
இன்னும் மெருகூட்ட இணைக்கப்படும் ஒரு இலக்கணம். எடுத்துக்காட்டாக உவமை,
உவகை, வஞ்சப் புகழ்ச்சியணி, உயர்வு நவிற்சி அணி என்று இன்னும் பல நூறுகள்
உள்ளன.
ஏன் குறள் வெண்பா
மரபு பாவில் இலக்கணம் இப்படி இருக்கையில் ஏன் வள்ளுவன் குறள்வெண் பாவில்
தனது படைப்பை வடித்தார். அவர் நினைத்திருந்தால் ஆசிரிப்பாவில்
எழுதியிருக்கலாம். ஏன் ஆசிரியப்பாவில் எழுதவில்லலை. அளவொத்து நான்கு
அடியில் மிக அழகாக வரும் இந்த ஆசிரியபாவில் ஏன் எழுதவில்லை வள்ளுவன்.
ஆசிரியப்பாவில் மாச்சீர் மற்றும் விளச்சீர் மட்டும் தான் வரவேண்டும்.
மற்றசீர்கள் வரக்கூடாது. இருந்தபோதிலும் வெண்சீர் வெண்டளை வந்தால் அது
சிக்கல் இல்லை. இறுதி சீர் எகரத்திலோ அல்லது ஏகாரத்திலோ மட்டும் தான்
முடிய வேண்டும். அப்படி இல்லாமல் அது ஒகரத்திலோ , இகரத்திலோ, உகரத்திலோ
முடிவுற்றாலும் சிக்கல் இல்லை.
ஒருவேளை ஐயன் வள்ளுவன் கலிப்பாவில் எழுதியிருக்கலாமே. பாக்களிலே மீமிக
கடினமான பாவகை கலிப்பா. அதில் எழுதி வள்ளுவன் தான் மிகப்பெரிய அறிவாளி
என்று தன்னை நிலைநாட்டி இருக்கலாமே . ஏன் அவர் அப்படி செய்யவில்லை.
கலிப்பாவில் அடிகளுக்கான கட்டுப்பாடு இல்லை. எத்தனை அடிகளில் வேண்டும்
என்றாலும் அமையலாம். மேலும் இதில் மாசீரும் விளங்கனிச்சீரும் வரக்கூடாது.
மாறாக இச்சீரில் மாச்சீர் வந்தால் சிக்கலில்லை.
அதுவும் இல்லாமல் வஞ்சிப்பாவில் எழுதி இருக்கலாமே. வஞ்சி என்ற பெயர்போல
பெண்ணைப்போல் அழகான பாவகை இதுவாயிற்றே. அதுமட்டுமன்றி இந்த பாவில் கூட
குறளடி பாவினம் உள்ளதே. ஏன் இதில் வள்ளுவர் எழுதவில்லை. இந்த பாவகை
கனிச்சீர் மட்டுமே பயின்று வர வேண்டும். மற்ற சீர்கள் வரக்கூடாது. அப்படி
ஏனைய சீர்கள் வந்தாலும் குறையேதும் இல்லை மறைமூர்த்திகண்ணா.
அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும். வெண்பாவிலே பல உள்வகைகளும் பாவினங்களும்
உள்ளதே. ஏன் அதில் வள்ளுவன் எழுதவில்லை. மூன்று அடியான சிந்தியல்
அடிமுதல் கட்டுப்பாடு இல்லாத கலிவெண்பாவில் கூட எழுதியிருக்கலாமே.
வெண்துறை, வெண்டாழிசை, வெப்செந்துறை என்று பல பாவினம் இருக்கும் போது
இதையெல்லாம் ஏன் கையாளவில்லை வள்ளுவன். வெண்பாவினம் கூட சிலசமயங்களில்
நாலைசீரோ, கனிச்சீரோ , வேறு தளைகள் கூட வரும். அது வெண்பாவினத்தில்
குற்றம் இல்லை. மேலும் சிந்தியல் என்று வந்துவிட்டதாலே அது நீண்டு
விட்டது என்று தான் பொருள்படும். நீண்டு கொண்டே போனால் நாம் முதலில்
படிப்போமா? விளையாட்டாக சொல்வோம். இந்த பதிவு ஒரு நீண்ட பதிவு. இதை
எத்தனைப் பேர் படிப்பார்கள் என்பது ஒரு கேள்விக்குறிதான். அதனால் அவர்
இந்த முறைகளைக் கையாளவில்லை.
மேலும் மற்ற பாவகைகளில் இதுவில்லை என்றால் அது என்று சமரசம் செய்ய
முடியும். வெண்பாவில் அப்படி இல்லை. சமரசம் என்ற பேச்சுக்கு இடம் கொடுக்க
கூடாது என்ற ஒரு காரணத்தினால் மட்டுமே ஐயன் வள்ளுவன் குறள் வெண்பாவில்
எழுதினார். குறள் வெண்பாவில் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை
தான் வரவேண்டும். மற்ற தளைகள் வந்தால்? வரவே கூடாது. மீறி வந்தால் அது
எந்த பாவகையும், எந்த பாவினத்திலும் சேராது. இதன் அடியானது முதல் அடி 4
சீர்களிலும், ஈற்றடி 3 சீர்களிலும் இருத்தல் வேண்டும். வேறுபட்ட அடிகள்
இருத்தல் கூடாது. இறுதி சீர் கட்டாயமாக மலர், நாள், காசு, பிறப்பு என்று
முடியவேண்டும். அதிலும் காசு பிறப்பு என்று முடிவுற்றால் அது உகரத்தில்
மட்டும் தான் முடிவடைய வேண்டும். இல்லையேல் அது எந்த பாவகையாகவும்
ஏற்கப்படாது. இப்படி எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்க கூடாது என்று தான்
வள்ளுவன் குறள் வெண்பாவில் எழுதியுள்ளார் என்பது என் ஐயம். இருந்தும்
நான் பார்த்தவரைத் திருக்குறளில் 2 குறட்பாக்களில் இலக்கணப் பிழைகள்
உள்ளன. அவை எவையென்று சொல்லி வள்ளுவனைக் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை.
ஒரு வேளை அவைகள் அச்சில் ஏற்றும் போது நிகழ்ந்த பிழைகளாக இருக்கலாம்.
அதனால் நான் இறந்து கல்லறையில் போகும் போது கூட அக்குறட்பாக்கள் யாது
என்று சொல்ல மாட்டேன்.
நமது முன்னோர்கள் எல்லோரும் திருக்குறளைப் படித்தார்கள். அதன் படி
வாழ்ந்தார்கள். சிலப்பதிகாரம் சொல்வது போல்
“தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்
தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்”
என்றும் மணிமேகலை சொல்வது போல்
“தெய்வந் தொழாஅள் கொழுநற்றொழு தெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்”
சங்க காலம் முதற்கொண்டே நம் முன்னோர்கள் திருக்குறளைப் பயின்றார்கள்
என்பது உறுதி. சமரசம் செய்யாமல் வாழ்ந்தான் அக்கால தமிழன்.அதனால் சிறந்த
வாழ்க்கை வாழ்ந்தான் அவன் என்பது நமது வரலாற்றைப் படித்தால் தெளிவுற
புரியும். என்று தமிழன் அடுத்தவனின் மதத்தையும், இறைவனையும்,
பணப்பாட்டையும் மொழியையும் சமரசம் செய்து ஏற்றானோ அன்றோடு அழிந்தான்.
இன்று எவன் எவனோ உதைக்கிறான், சிதைக்கிறான். இருந்தாலும் போனால்
போகட்டும் என்று சமரசம் செய்து கொண்டு இழிபிறவியினும் கீழாக வாழ்கிறான்.
இவர்களை திருத்த ஒரே வழி திருக்குறள் தான். அதனால் தான் என்னவோ
வெள்ளையனின் ஆட்சியில் அவன் குளிரடிப்பில் சருகுகள் போல் தீக்கிரையான
ஓலைச்சுவடிகள் மத்தியில் திருக்குறள் மட்டும் அழியாமல் அச்சில்
ஏற்றப்பட்டது போல. இது விதியின் விளையாட்டு என்று தான் கூறவேண்டும்.
இனியாவது குறளைக் கற்போம் ; குறள் வழி நிற்போம். சமரசம் என்ற ஒன்றைச்
செய்யாதே தமிழா..
“இரந்து உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் “
நன்றி
நேற்று, 07:57 AM · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக