|
10/5/16
| |||
பாண்டிய மன்னனின் டைனோசர்
சில நாட்களாகப் படித்துக் கொண்டிருந்த ஒரு தமிழ் நாவலை நேற்று மாலை
முடித்தேன். டான் ப்ரவ்னின் ‘தி லாஸ்ட் கீ’ போல் அற்புதமாக வந்திருக்க
வேண்டிய கதைக்களம் கொண்ட அந்த நாவல் படிப்பதற்கே படு திராபையாக, ஏதோ
ரமணிச்சந்திரன் நாவலொன்றை வாசிப்பது போன்ற அசட்டுத்தனத்தைத் தந்தது. ராணி
பத்திரிகையில் இல்லத்தரசிகளைக் குறிவைத்து எழுதப்படும் தொடர் கதைகளின்
தரத்திலான நடை. முதல் பக்கத்திலேயே இந்த உணர்வை அது ஏற்படுத்திவிட்ட
போதும் 322 பக்கங்களையும் படித்தேன்.
நாவலின் பெயர் “யாளி”. எழுதியிருப்பவர் மணி தனிகை குமார்.
தான் ஒரு எழுத்தாளன் அல்ல என்பதை அவரே நாவலின் முன்னுரையில்
சொல்லிவிட்டார். ”நான் பெரிய அளவில் எழுத்துப் பயிற்சியோ, மொழி அறிவோ
உள்ளவன் அல்ல. ஒரு பக்கம் எழுதினால் அதில் ஐந்து பிழைகளேனும் செய்யும்
சாதாரண தமிழ் வழியில் அறிவியல் கல்வி கற்று, ஆங்கில வழியில் தொழில்
பயிற்சி பெற்ற மாணவன் நான்” என்று அவர் சொல்வது உண்மை என்பதை நாவல் நெடுக
உணர முடிகிறது. ஆனால் இந்தக் கதைக் கரு மட்டும் எழுத்துப் பயிற்சியும்
அபார மொழிபுத் திறனும் கைவரப் பெற்றிருக்கும் ஜெயமோகனிடம்
சிக்கியிருந்தால் எத்தகையதொரு காவியத்தைத் தமிழ் அடைந்திருக்கும் என்று
மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டேன். உண்மையில் இந்நாவலை வாசிக்கும்
பல இடங்களில் அதை ஜெயமோகன் எழுதியிருந்தால் எப்படி வந்திருக்கும் என்று
கற்பனித்துக் கொண்டேன்.
யாளி என்பது தென்னகத்துக் கோயில்களில் சிற்பங்களாகக் காணப்படும் ஒரு
விலங்குருவம். சிங்கம் + யானை = யாளி என்பது போல் சிங்கத்திற்குத்
துதிக்கை வைத்தது போல் இருக்கும். யாளியில் இன்னொரு வகை சிங்க
வாயிலிருந்து நீண்ட நாக்கு கொண்டதாக இருக்கும். சிங்கத்திற்குச் சிறகுகள்
முளைத்த வடிவ யாளியும் உண்டு. மீனினம் போன்றதொரு யாளியையும் இந்நாவல் வழி
அறிந்தேன். இந்த வடிவங்கள் கோயில்களின் சிலைகளில் காணப்படுகின்றன.
எல்லோருமே கருதுவது போல் இவை Mythological fantasy beings என்னும்
கோணத்தில் இருந்துதான் தன் நாவலை மணி தணிகை குமார் ஆரம்பிக்கிறார். ஆனால்
அவர் இந்த நாவலை எழுதியதன் நோக்கம் அவை முற்காலத்தில் (Jurassic age)
இம்மண்ணில் வாழ்ந்த நிஜ உயிரினங்கள் என்பதை நிறுவுவதுதான். நூலின்
இறுதியில், பாலயோகேஷ் என்பவர் இந்நாவலின் கதையை ஆங்கிலத்தில் எட்டுப்
பக்கங்களில் எழுதியிருப்பதையும் தந்திருக்கிறார். YALI என்னும்
அக்கட்டுரையின் ஆரம்ப வரி ஆங்கில நாவல்களின் அட்டையில் கொடுக்கப்படும்
thematic வாக்கியம் போல் இருக்கிறது: “Ever wondered that just as for
any other civilization, India was the first home for dinosaur too..!”
ஆமாம், கோயில் சிற்பங்களில் காணலாகும் யாளியை டைனோசர் இனத்தைச் சேர்ந்த
உயிர்வகையாகவே மணி தணிகை குமார் கருதுகிறார். “சென்ற நூற்றாண்டின்
இறுதியில்தான் மானுட இனம், தனக்கும் ஐந்து, ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்
இந்த பூமியில் வாழ்ந்த ராட்சத விலங்குகளான டைனோசர் பற்றிய ஓரளவு தகவல்களை
உறுதி செய்தது. அதன் தொடர்ச்சியாக உலகத் திரைப்படங்கள் டைனோசரை
கதாநாயகனாக கொண்டு பல படங்களை வெளியிட்டு உலகையே தன் பக்கம் திரும்ப
வைத்தன. அதன் தாக்கம் இன்று பிறக்கும் குழந்தைகள் வரை காணமுடிகிறது.
ஆனால், அந்த டைனோசரின் ஆய்வில் எங்கோ இன்னும் கண்டறியப்படாத சில உண்மைகள்
மறைந்திருக்க வேண்டும் என்றும், அந்த அறிய முடியாத உண்மைகளுக்கு எல்லாம்
நமது யாளி விடை அளிக்கும் என்றும் என் சிற்றறிவு சொல்கிறது” என்று
சொல்லும் ம.த.குமார் டைனோசர் பற்றி ஆய்வு செய்பவர்கள் இந்த யாளியையும்
ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்.
யாளி எனக்கு என் பால்ய வயதிலேயே அறிமுகம் ஆகிவிட்டது. திருவையாற்றுக்
கோயிலில் அதன் சிலைகளைக் கண்டிருக்கிறேன். அப்போது என்னுடன் படித்த
வித்யாசாகர் அதன் படத்தை ஒரு நாள் ரஃப் நோட்டில் வரைந்தான். கோயில்
புரோகிதரான திருநந்தி என்பவரின் மகன் ஆதலால் அவனுக்குப் புராணக்
கதைகளெல்லாம் அத்துப்படி. அதன் பெயரை அவன் சொல்லித்தான் முதன் முதலில்
கேட்டேன். ’யாழி’ என்று சொன்னான். (ம.த.குமார் ’யாளி’ என்று
பயன்படுத்தியுள்ளார். யாழி என்று சொல்லப்படுவதும் இதுவே என்று ஓரிடத்தில்
சொல்கிறார். யாழி என்று சிறப்பெழுத்துடன் சொல்வதுதான் எனக்குச் சுவையாக
இருக்கிறது. யாழி பாழி நாழி வாழி ஆழி காழி கோழி சோழி மேழி ரேழி சீர்காழி
என்று குழந்தைகளுக்கு உச்சரிப்புப் பயிற்சி கொடுக்கலாம்.)
யாளி போன்ற தொன்ம உயிரினங்களைப் பற்றிய செய்திகள் பழம்பெரும் நாகரிகப்
பதிவுகள் அனைத்திலும் உண்டு. அவையெல்லாம் மனிதனின் கற்பனை என்றே
கொள்ளப்படுகின்றன. அவற்றின்மீது உரைக்கப்படும் கருத்துக்கள் அவ்வாறு
முடிவு கட்ட ஏதுவாகின்றன. உதாரணமாக, சீனக் கலாச்சாரத்தில் உள்ள டிராகன்.
உடும்பு வகைகளை டிராகன் என்று சொல்லப்பட்டாலும் சீனக் கலாச்சாரத்தில்
அவர்களின் ஆல்யங்களில் காணலாகும் டிராகன் வித்தியாசமானது. பல கால்கள்
கொண்ட நீளமான பாம்பு அது. ஆனால் அதன் தலை நாயினது போல் இருக்கும்.
பாம்பிற்குரிய பிளவான நாக்கும் உண்டு. இது போல் உண்மையிலேயே ஏன் ஒரு
பிராணி இருந்திருக்கக் கூடாது என்று வாதிடலாம். ஆனால் அதைப் பற்றிய ஒரு
செய்தி அதை வெறும் கற்பனை என்று சொல்லத் தூண்டுகிறது. அது தன் வாயைத்
திறந்து ஊதும்போது தீயின் ஜுவாலைகள் வெளிவரும் என்பது. உண்மையில் அப்படி
வந்தால் அதன் தலை வெந்து போய் ’டிராகன் ரோஸ்ட்’ ஆகிவிடாதா? என்னும் வாதம்
அதை ஒரு கற்பனை மிருகமாக்கிவிடுகிறது.
ஆனால் விவாதம் என்று வரும்போது இப்படியும் அப்படியும் மாற்றி மாற்றிப்
பேச இடம் இருக்கிறது. ஏன், மின்மினிப் பூச்சிக்குள் விளக்கு எரிவது போல்
ரசாயனக் கலவை மாற்றத்தால் வெளிச்சம் உண்டாகும் போது, அசல் தீ அல்ல
எனினும் தீயை ஒத்த மிகையான வெப்பமூச்சு டிராகனின் வாய் வழியே ஏன்
வெளிப்பட்டிருக்க முடியாது? என்று கேட்கலாம். சாத்தியமே இல்லை என்று
மறுக்க முடியாது. அந்த வெப்ப மூச்சையே கவித்துவ மொழியில் மிகைப்படுத்தி
நெருப்பு என்று சொல்லியிருப்பார்கள். பழம் பெரும் நாகரிகங்கள் ஆழமான
ஆன்மிகப் பிரக்ஞை உடையவை என்பதையும் அவற்றின் மொழிபு முறை உபநினைவு
மனத்தின் கவித்துவமான வெளிப்பாடாகவே இருந்தது என்பதையும் இவண் கவனத்தில்
கொள்ள வேண்டும்.
டிராகனைப் போலவே, எகிப்தியப் புராணங்களில் வரும் தொன்மப் பறவையான
ஃபீனிக்ஸ் என்பதும் உலகப் பிரசித்தம். ஃபீனிக்ஸின் சிறப்பு என்னவெனில்
அது சூரியனைத் தொடவேண்டும் என்னும் நோக்கில் பறந்து அருகில் சென்றதும்
எரிந்து சாம்பலாகி வீழ்ந்து பின்னர் சாம்பலிலிருந்து மீண்டும் பறவையாக
உயிர்த்தெழுந்துவிடும் என்பதுதான். அதன் லட்சியம் நிறைவேறும் வரை அதற்கு
இந்த உயிர்த்தெழுதல் என்பது உண்டாம். உண்மையில் இப்படி லட்சியதாகம் கொண்ட
எந்தவொரு அசட்டுப் பறவையும் உலகில் இல்லை! நினைத்துப் பாருங்கள், கூடு
கட்டவும் கனிகள் தரவும் மரமே இல்லாத சூரியனுக்குள் போயே விடுகிறது என்று
வைத்துக் கொள்வோம், அங்கே பிறகு என்ன செய்துகொண்டிருக்கும்? உணவில்லாமல்
எப்படி உயிர் வாழும். இல்லை, அது தீயைத் தின்னும் என்று ஏதேனுமொரு உப
ஐதீகம் இருக்கிறதா? ஃபீனிக்ஸ் என்பதை நேரடிப் பொருளில் எடுத்துக்
கொண்டால் இப்படித்தான் அது காமடி ஆகிறது. ஆனால், அதன் உட்பொருளாக நான்
விளங்கிய ஓர் ஆன்மிகச் சிந்தனை மிகவும் அற்புதமானது. சூரியன் என்பது
பண்டைய எகிப்தியர்களுக்கு இறைவனைச் சுட்டும் குறியீடு, குறைந்தபட்சம்.
எனவே, சூரியனைத் தொட்டுவிட வேண்டும் என்று சிறகடிக்கும் ஃபீனிக்ஸ்
ஆன்மிகச் சாதகனுக்கான குறியீடு. இறைவனை அடைய வேண்டும் என்னும்
லட்சியத்தில் ஒருவன் செய்யும் முயற்சிகளில் அவன் தோல்வி அடைந்தாலும்
மீண்டும் மீண்டும் புதிய உத்வேகத்துடன் முயலும் வரத்தை அவனுக்கு இறைவன்
வழங்கிக் கொண்டே இருப்பான் என்பதுதான் ஃபீனிக்ஸ் உணர்த்தும் ஞானம் என்று
நான் விளங்குகிறேன்.
ஃபீனிக்ஸைச் சொல்லும் போது இன்னொரு பறவையும் நினைவுக்கு வருகிறது.
சக்கரவாகம் என்னும் சாதகப்பட்சி / பறவை / புள் பூமியில் உள்ள தண்ணீரை
அருந்தவே அருந்தாதாம். இது என்ன ஜைனர்களை விடவும் கடுமையான பத்தியத்தில்
இருக்கிறது? ஜைனர்களாவது பூமிக்குள் விளையும் பூண்டுகளையும்
கிழங்குகளையும்தான் உணவில் சேர்த்துக்கொள்ளவே மாட்டார்கள்.
ஆனால் இந்த சாதகப்பட்சி பூமியில் பட்ட தண்ணீரைக் குடிக்கவே செய்யாதாம்.
வானத்திலிருந்து பொழியும் மழைத்துளி அல்லது பனித்துளிகளைத்தான்
பருகுமாம். தேவைதானா? இப்படியொரு பறவை இருப்பதான ஐதீகம் இந்தியாவில்
மட்டும்தான் இருக்கிறது. அப்படி ஒரு லட்சியத்தை வைத்துக் கொண்டு
வாழ்வதற்கு நல்ல நாடாகத் தேர்ந்தெடுத்தது பாருங்கள். ஒரு
ஸ்விட்ஜர்லாந்திலோ ரஷ்யாவிலோ அமெரிக்காவிலோ வாழக்கூடாதா அது? தப்பித்
தவரி திருச்சிப்பக்கமோ திருநெல்வேலி பக்கமோ மாற்றலாகி வந்தால் அதன் கதி
என்னவாகும் என்பதை நினைக்கும் போதே எனக்குக் குலை நடுங்குகிறது!
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இப்படியொரு பறவை நிஜமாக இருப்பதாகவே நம்பினார்.
ஆனால் அவருக்கு அப்பறவையைக் கொண்டு உணர்த்தப்படும் ஆன்மிகச் சிந்தனை
தெரியும். “சாதகப்பட்சி வானின் நீரை மட்டுமே உண்ணும். மழை பெய்யும்
நாளில் வாயைத் திறந்து வைத்துக்கொண்டு பறக்கும். பூமியில் பட்ட நீரை அது
அருந்தாது. அது போல் ஆன்மிகச் சாதகனின் மனம் இம்மை வாழ்வின் இச்சைகளை
ருசிக்கக்கூடாது. இறைவனின் ஞான ஒளியையே அது ருசிக்க வேண்டும்” என்று அவர்
சீடர்களுக்குப் போதனை செய்தார். ஒருநாள் விவேகானந்தர் அரக்கப் பரக்க
அவரிடம் வந்து, ‘குருவே! சாதகப் பறவை மண்ணில் நீரருந்தாது என்று நீங்கள்
சொன்னது தவறு. இதோ நான் பார்த்துவிட்டு இங்கே ஓடி வந்தேன், நதிக்கரையில்
அமர்ந்தபடி ஒரு சாதகப் பறவை தண்ணி குடிக்கின்றது’ என்றார்.
ராமகிருஷ்ணருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. தப்பாகச் சொல்லிவிட்டோமோ
என்று வருந்தினார். ‘வாடா போய்ப் பார்த்துவிடலாம்’ என்று சொல்லி அந்தத்
தனது பிரியமான சீடனுடன் கிளம்பிப் போனார். ‘எங்கே நரேந்திரா அது?’. ‘அதோ
பாருங்கள்’. விவேகானந்தர் காட்டிய இடத்தில் அவர் பார்த்தார். விலா அற
விழுந்து விழுந்து சிரித்தார். விவேகானந்தருக்கு அசட்டுத்தனமாக இருந்தது.
ஏன் சிரிக்கிறார்? என்று. ‘அடப் பயலே! இது சாதகப் பறவையாடா ஒனக்கு,
சாதாரண வௌவால்றா இது’ என்றார் ராமகிருஷ்ணர்!
இது போன்ற தொன்மப் பறவை ஒன்று சூஃபி இலக்கியங்களிலும் வரும். உள்ளமையில்
இல்லாத நமது கற்பனையில் மட்டுமே உள்ள விஷயங்களை லா-மும்கினாத் என்னும்
வகையில் சூஃபிகள் அடக்குவர். அதாவது, பரம்பொருள் என்பது அவசிய உள்ளமை
(வாஜிபுல் உஜூது). அது இல்லாமல் வேறு எதுவுமே இல்லை என்னும் நிலையில்
இருப்பது. தாது தாவரம் விலங்கு மனிதன் வானவர் உள்ளிட்ட படைப்புக்கள்
எல்லாம் சாத்திய உள்ளமை (மும்கினுல் உஜூது). அதாவது உள்ளமையில் தோற்றும்
சாத்தியக்கூறு இறைவனால் வழங்கப்பட்டவை. சொர்க்கவாசிகள் விரும்பியவை
அனைத்தும் உடனே சொர்க்கத்தில் கிடைக்கும் என்பது இப்படித்தான். ஹல்வா
வேண்டும் என்று நினைத்தவுடனே ஒரு ப்ளேட்டில் வந்து முன்னால் நிற்கும்.
கோதுமை விளைந்து அறுவடையாகி மாவாகி, கரும்பு வளர்ந்து பிறகு சக்கரை ஆகி,
இரண்டையும் கொண்டு கலந்து.. இப்படியெல்லாம் தயாரிக்க வேண்டிய அவசியம்
இல்லை. இறைவன் தன் உள்ளமையில் ஹல்வாவை நேரடியாகவே தோன்றச் செய்து தரும்
அருட்கொடை. இறைவன் தன் உள்ளமையில் தோன்ற அனுமதிக்காதவை நாம் எவ்வளவு
கற்பனை செய்தாலும் நிஜத்தில் வராது. அவை சாத்தியமற்றவை (லா-மும்கினாத்)
என்று சொல்லப் படுகின்றன. இதற்கு சூஃபி ஞானி இப்னுல் அரபி அவர்கள் ஓர்
உதாரணமாகச் சொல்லும் பறவைதான் ”அன்கா மக்ரிப்” என்பது. அதாவது, “சூரியன்
மறையும் இடத்தில் கோஹெ காஃப் என்னும் ஒரு மலை உள்ளது. அதன் உச்சியில்
உள்ள கூட்டில் அன்கா பறவை வசிக்கிறது” என்பது அதன் விவரணை. பூமி உருண்டை
என்பதால், உண்மையில் அப்படிச் சூரியன் மறையும் இடத்திற்கு எவரும் சென்று
சேரவே முடியாது. உலகம் அழியும் நாள்வரை அல்லது நாம் சாகும்வரை சுற்றிக்
கொண்டே இருக்க வேண்டியதுதான். இதன் உள்ளர்த்தம் என்னவெனில், சூரியன்
மறையும் இடம் என்பது சூரியனால் வெளிச்சமிடப்படும் இந்த சடதத்துவம்
மறைந்து ஆன்ம தத்துவம் ஆரம்பமாகும் இடம். அவ்விடத்தில் உள்ள மலை என்பது
தியானம். அதில் வாழும் அன்கா பறவை என்பது மனிதனின் ஆன்மாவே.
எதார்த்தத்தில் இருக்கும் விலங்குகளை மிகைப்பாடுகளினாலோ அல்லது தவறான
விளக்கங்களாலோ அதிசய உயிரினங்களாக மாற்றிவிடுவதும் உண்டு. அதற்குத்
தமிழிலக்கியத்தில் சில சான்றுகள் உள்ளன.
“திட்டி விடமன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ இது விதியின் வண்ணமே”
என்று இராவணனை நொந்துகொள்கிறான் தம்பி கும்பகர்ணன். சீதையைச் சொலும்போது
திட்டி விடம் என்னும் பாம்பினைப் போன்ற கற்பு உடையவள் என்று அவன்
சொல்வதன் அர்த்தம் என்ன? ”திட்டி விடம் என்னும் பாம்பு ஆளைப் பார்த்தாலே
விஷம் ஏறி அவன் செத்துப் போவானாம். அது போல் சீதை என்னும் கற்புக்கரசி
கோபத்துடன் கண்டாலே இராவணன் செத்துவிடுவான்” என்பதுதான் அதன் பொருள்.
இந்த மிகைப்பாடு கவித்துவமாகவும் சொல்ல வரும் கருத்தின் வேகத்திற்குப்
பொருத்தமாகவும் இருக்கிறது. ஆனால் திட்டிவிடம் என்பது பார்த்தாலே விஷம்
ஏறும் பாம்பு என்பது எதார்த்தமாக இருக்க முடியாது. ஒருவேளை அது
வர்மக்கலையில் உள்ள நோக்கு வர்மம் என்பதைக் கேரளாவிற்குப் போய்
கற்றுக்கொண்டு வந்திருந்தால் அப்படி நிகழலாம். அதற்குச் சாத்தியமில்லை
என்றே தோன்றுகிறது. எதிரியை / இரையை நோக்கித் தன் கூர்துளைப் பற்களின்
வழியே விஷத்தைப் பீய்ச்சி அடிக்கும் பாம்புகள் உண்டு. அந்தக் கலையில்
மிகவும் தேர்ந்தது இந்திய நாகம். (இதனை விலங்கியலில் Naja என்னும்
வகைமையாகப் பாகுபடுத்துகிறார்கள். நாக் என்னும் வடமொழிச் சொல்தான்
ஆங்கிலத்தில் ஸ்நேக் ஆகியிருக்கிறது.) என்வே, கம்பர் குறிப்பிடும் திட்டி
விடம் என்பது நாகப் பாம்புதான். விஷத்தைத் துப்புவதால் அதற்குத்
திட்டிவிடம் என்னும் பெயர் வந்திருக்க வேண்டும்.
”மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்”
என்னும் திருக்குறளைப் போல் தவறான விளக்கம் பெற்ற திருக்குறள் வேறு
இருக்க முடியாது. ‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா’ என்பதற்குச் சில
பழம்புலவர்கள் ‘ஒரு மயிர் உடலிலிருது விழுந்தாலும் செத்துப் போய்விடும்
கவரிமான்’ என்று உரை அருளிவிட்டார்கள். திருக்குறளில் அது கவரிமான் என்றே
இல்லை, கவரிமா என்றுதான் இருக்கிறது. சேர்த்தெழுதும் போது ‘கவரிமா
வன்னார்’ என்று எழுதுவதால் அது ’கவரிமா’தானே அன்றி கவரிமான் அல்ல என்பது
உறுதி. மா என்பது தமிழில் ஒரு பொதுவான சொல். அதற்கு, பெரிய – விலங்கு –
கால்நடைகள் (ஆடு மாடு குதிரை) – வியப்பு – கனிவகை முதலிய ஏகப்பட்ட
அர்த்தங்கள் இருக்கின்றன. இடம் பார்த்துப் பொருள் சொல்ல வேண்டும். ஒரே
ஒரு மயிர் விழுந்தாலும் மான் செத்துவிடுமா, எப்படி? என்று கேட்க, ‘மயிரை
இழந்த துக்கத்தில் / அவமானத்தில் அது ஒரு அடிகூட எடுத்து வைக்காமல் நின்ற
இடத்திலேயே ஒன்னும் உண்ணாமல் நின்றுகொண்டிருந்து செத்துவிடும்’ – அதாவது
உண்ணாவிரதம் இருந்து செத்துவிடும் – என்பதாக மணக்குடவர் போன்ற
உரையாசிரியர்கள் கப்சா அடித்திருக்கிறார்கள். நவ்வி, இரளை முதலிய பிற
மான்களும் தமிழ் மான்கள்தானே? அவற்றுக்கெல்லாம் இல்லாத அளவுக்கு இதற்கு
மட்டும் ஏன் இவ்வளவு மானவுணர்வு? ம்ஹும், இதெல்லாம் விலங்கியல் அறிவு
இல்லாததால் எழுந்த அபத்த உரைகள்.
வந்தார் பாண்டிச்சேரி கலெக்டர் பி.எல்.சாமி ஐ.ஏ.எஸ். கவிரிமா என்பது
திபெத் தேசத்தில் காணப்படும் YAK என்னும் மாடு என்று போட்டார் ஒரு போடு!
Y for Yak என்று படத்துடன் எல்.கே.ஜி ஆங்கில நூலில்கூட போட்டிருக்கும்.
அந்த மாட்டின் உடலெங்கும் நீண்ட நீண்ட கூந்தலன்ன முடிகள் தொங்கும். இமய
மலைமீது வாழ்வதற்கு அப்படியான அமைப்பு அதற்குத் தேவை. அரேபியர்களுக்கு
ஒட்டகம் போல் திபெத்தியர்களுக்கு யாக். பாலும் இறைச்சியும் தருகிறது;
வாகனம் ஆகிறது; கம்பளி தந்து ஆடையாகிறது. அதன் உடலில் உள்ள அனைத்து
மயிர்களையும் சிரைத்து விடுவார்கள். குளிர் தாங்காது விறைத்துச்
செத்துப்போகும். ’மயிர் நீப்பின் வாழாக் கவரிமா’ என்று வள்ளுவர் சொன்ன
செய்தி இதுதான். அந்த மயிருக்குத்தான் கவரி என்று பேர். சிம்மாசனத்தின்
இருபுறமும் இரண்டு இளம்பெண்கள் நின்று மன்னருக்கு வீசும் சாமரம் என்பது
அந்தக் கவரிமுடியால்தான் தயாரிக்கப்பட்டது. பெண்கள் தங்கள் கூந்தலின்
நீளம் அதிகமாய்த் தெரிய சேர்த்துக் கட்டியதும் அதையே. கவரி என்பதுதான்
மருவி சவுரி ஆனது! எத்தகைய அருமையான விளக்கம். சொல்லுங்கோ: பி.எல்.சாமி,
இ.ஆ.ப வாழ்க வாழ்க!
இதேபோல் ’பறைபட வாழா அசுணமா’, ‘நீரொழியப் பாலுண் குருகு’ போன்ற
பிராணிகளுக்கும் எதார்த்தமான விளக்கங்களைச் சொல்லலாம். அந்தப் பிராணிகள்
உண்மையில் அப்ராணிகளாகத்தான் இருக்க வேண்டும், நம்முடைய புலவர்களின்
கற்பனை வளம் அவற்றை அதிசயப் பிராணிகளாக்கி விடுகின்றன.
இது போன்ற விசித்திரமான விலங்குகள் ஒருபக்கம் இருக்கட்டும். சாதாரண
விலங்குகள் மீது மனிதர்களின் நம்பிக்கை ஏறி அவைகளைப் புனிதப்படுத்தி
விடுவதும் உண்டு.
வருணங்களின் அடிப்படையிலான மறுபிறவி விளக்கம் ஒன்று இருக்கிறது அல்லவா?
தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவன் இப்பிறவியில் மனுநெறி வகுத்துரைக்கும்
கடமைகளைச் செவ்வணே செய்வான் எனில் அடுத்த ஜென்மத்தில் அவன் அதற்கு ஒரு
படி மேலான வருணத்தில் பிறப்பான். இப்படியாகச் சூத்திரன் அடுத்த
ஜென்மத்தில் வைசியன் ஆவான். பிறகு அவன் முறையே சத்திரியனாகவும்
பிராமணனாகவும் பிறந்து மோட்சம் அடைவான். இந்த விளக்கத்தை இந்து மதத்தின்
ஞானிகளிலேயே பலரும் நம்பவில்லை என்பது வேறு. பல வருடங்களுக்கு முன்
பிராமணர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் வினோதமான ஒரு கருத்தைச்
சொன்னார். ’ஒரு பிராமணன் ஒழுங்காக வாழ்ந்து முடித்தால் மறு ஜென்மத்தில்
அவன் பசுவாகப் பிறப்பான். கோமாதாவாகப் பிறப்பதுதன் மிக உன்னதமான உயர்ந்த
நிலைப் பிறவி’ என்றார் அவர்! பசுவின் மீதான அதீதமான புனித மதிப்பீட்டின்
காரணமாக அவர் அப்படிச் சொன்னார் என்றே நினைக்கிறேன். உண்மையில் அப்படி
ஒரு கொள்கை இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏனெனில், அப்படியானால் அந்தப்
பசுக்களை அம்மாவாக்கும் காளைகளாக ஜென்மம் எடுப்பது யார்? என்னும் கேள்வி
வருகிறது. காளைப் பிறவியும் உன்னதமானதுதானே?
கடலில் எத்தனையோ வகையான மீன்கள் இருக்க அவற்றில் டால்ஃபின்கள்
பிறவியிலேயே தனித்துவம் கொண்டவை என்று சிலர் நம்புகிறார்கள். என்ன
தனித்துவம் என்று கேட்டால் தலையைச் சுற்றுகிறது. டால்ஃபின்கள் வேற்று
கிரக வாசிகளாம்! பூமியில் வசிப்பதற்கேற்ப இந்த வடிவில்
வந்திருக்கிறார்களாம்! அப்படியானால் அவர்கள் மண்மேல் வாழும் ஒரு வாகான
வடிவம் எடுத்துக் கொண்டல்லவா வந்திருக்க வேண்டும்? ஏன் கடலில்
கிடக்கிறார்கள்? என்று கேட்கலாம். அதற்கும் ஏதாவது சப்பைக்கட்டு
இருக்கும். ’கடலில்தான் அவர்களின் நெட்வொர்க் சரியாக வேலை செய்ய
முடியும். பெர்முடா முக்கோணம் என்று பசஃபிக் பெருங்கடலில் ஒரு மர்மப்
பரப்பு இருக்கிறதே, அதுதான் அவர்களின் தலைமைச் செயலகம். அங்கிருந்துதான்
அவர்கள் தங்களின் தாய்க்கிரகத்துக்குச் செய்தி அனுப்புகிறார்கள்’
என்றெல்லாம் சொல்வார்கள். டால்ஃபின்கள் மிகவும் அன்பானவை. கடலில்
விழுந்துவிட்ட பலபேரை அவை ரெட் க்ராஸ் அல்லது என்னெஸ்ஸெஸ் வீரர்களைப்
போல் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கின்றன.
அவற்றுக்கென்று ‘ட்டூன்ன்ன்ன்’ என்று நம் காதில் ஒலிப்பது போன்ற
அலைவரிசையில் ஆன ஒலியில் உரையாடிக் கொள்ள பாஷை இருக்கிறது. அது வேற்று
கிரக வாசிகளின் மொழிதான் என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள்.
வழி தப்பிய கப்பல்களுக்கு டால்ஃபின்கள் வழிகாட்டும் என்றும் ஒரு
நம்பிக்கை உண்டு. இதைக் கேட்டால் எனக்கு டைட்டானிக் திரைப்படம் நியாபகம்
வரும். அதில் கதாநாயகன் ஜாக் தன் நண்பனுடன் கப்பலின் முன்பக்க நுணியில்
நின்று பார்க்கும் போது கீழே கடலில் ஒரு டஜன் டால்ஃபின்கள் தாவிக்கொண்டு
பாய்ந்து நீந்திச் செல்லும். அந்தக் கப்பலின் கதியைப் பார்த்தீர்களா?
டால்ஃபின்கள் வழி காட்டின போலும்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக