|
19/5/16
| |||
தந்தை செல்வாவின் வாழ்க்கை வரலாறு (கட்டுரை)
அக்காலகட்டத்தில் பாடசாலைகள் குறைவு. இருந்த சில நல்ல பாடசாலைகளும் அரச குடும்பத்தினரையும் பெரிய பணக்காரக் குழந்தைகளையுமே அனுமதித்தன. எனவே, வேலுப்பிள்ளை தம்பதியினர் தமது மழலைச் செல்வங்களை கல்வி கற்பதற்காக மலேசியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினார்கள். அப்பொழுது எமது கதாநாயகன் செல்வநாயகத்திற்கு வயது நான்கு.
தனது இரண்டு சகோதரர்களுடனும் ஒரு சகோதரியுடனும் மலேசியாவிலிருந்து கொழும்புக்கு கப்பலில் வந்திறங்கினான் பாலகன் செல்வநாயகம். அப்போது கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கு புகையிரத சேவை ஆரம்பிக்கப்படாமையினால் மீண்டும் கப்பலிலேயே காங்கேசன்துறைக்கு வந்து தமது சொந்த ஊரான தெல் லிப்பழைக்கு வந்தார். அங்கு அமெரிக்க மிஷன் பாடசாலையில் 5 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். இந்த அமெரிக்க மிஷன் பாடசாலை தான் பின்பு யூனியன் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட் டது கவனத்திற்குரியதாகும். சிறு வயதிலே செல்வநாயகம் பெண் வேடம் பூண்டு நாடகங்களில் நடித்தாராம்.
ஐந்தாம் வகுப்பிற்குப் பின்னர் செல்வநாயகம் யாழ்ப்பாணம் சென்று சென்.ஜோன்ஸ் கல்லூரியில் சேர்ந்து சீனியர் கேம்பிரிட்ஜ் பரீட்சைக்குப் படிக்கத் தொடங்கினார். பின்னர் மாமனார் எஸ்.கே. பொன்னுசாமியின் உதவியுடன் கொழும்பு சென். தோமஸ் கல்லூரியில் சேர்ந்து தமது கல்வியைத் தொடர்ந்தார்.
சென். தோமஸ் கல்லூரியில் ஏறத்தாழ ஒன்றரை வருட காலம் கல்வி கற்று இன்டர்சயன்ஸ் பரீட்சையில் தேறிய செல்வநாயகம் தனது தம்பிமாரைப் படிப்பிப்பதற்காக 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.
ஆசிரியராக இருந்துகொண்டே இலண்டன் பல்கலைக்கழக பி.எஸ்.ஸி. விஞ்ஞானப் பட்டப் பரீட்சைக்கு வெளிவாரி மாண வனாகத் தோற்றி அடுத்த ஆண்டே அதாவது, 1918இல் சித்தி எய்தினார்.
இத்தருணத்தில் மலேசியாவிலிருந்த அவரது தந்தையார் சுகவீனமுற்றிருந்தமையால் அவரைப் பார்க்க மலேசியா சென்று சுமார் ஒரு மாதம் வரை தங்கியிருந்து மீண்டும் திரும்பினார். ஆனால், என்ன பரிதாபம்! செல்வநாயகம் இலங்கை திரும்பி வந்த ஓரிரு வாரங்களிலேயே அன்னாரது தந்தையார் மலேசியாவில் காலமானார்.
அதனால் குடும்பப் பொறுப்பு அனைத்தும் இளைஞரான செல்வநாயகத்தின் மேல் சுமத்தப்பட்டது. தமது பிற்காலத்தில் இலங்கைத் தமிழினத்தின் பொறுப்பெல்லாவற்றையும் சிரமேற் கொண்ட தமிழ்த் தந்தைக்கு தந்தையில்லாத குடும்பத்தின் பொறுப்பைச் சுமப்பதா பெரிய காயம்! இரண்டு தம்பிமாரையும், அருமைத் தங்கையையும் அரவணைத்துக் கொண்டு கொழும்பு சென்ற்.தோமஸ் கல்லூரியில் தமது ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார்.
எனினும், அன்னாருக்கு சோதனை தொடர்ந்தது. யாழ்ப்பாணத்தில் அவரது இளைய சகோதரருக்கு கடும் சுகவீனம்.
அவரைப் பார்ப்பதற்கு தெல்லிப்பழை செல்ல லீவு கேட்டார், லீவு மறுக்கப்பட்டது. ஆசிரியர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு தெல்லிப்பழைக்குச் சென்றார்.
தம்பியை நன்கு பராமரித்தும் என் செய்வது? பலனில்லாமல் போய்விட்டது. அருமைத்தம்பி இராஜசுந்தரம் தமது பதினைந் தாவது வயதில் காலமானார்.
தம்பியின் இறுதிச் சடங்கு முடிந்து மீண்டும் கொழும்பு வந்த செல்வநாயகம், வெஸ்லி கல்லூரியில் ஆசிரியரானார். எஸ்.ஜே.வி. ஆசிரியனாக இருந்த காலத்தில் ~நல்லாசிரியன்| என்ற பெயரை பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடம் பெற்றார். பிற்காலத்தில் நல்ல, நேர்மையான சட்டத்தரணி என்று பெயரும் புகழும் பெற்றாரோ, அரசியலில் நுழைந்த பின்னர் எவ்வாறு உலக மக்கள் அனைவராலும் தமிழ் பேசும் மக்களின் தன்னிகரில்லாத் தலைவன் என்றும், நேர்மையான அரசியல்வாதி என்றும் பெயரும் புகழும் பெற்றாரோ அதே போல அவர் நல்லாசிரியன் என்று பெயரும் புகழும் பெற்றதில் எவ்வித ஆச்சரியமும் இருக்க முடியாது என்பது திண்ணம்.
அந்தக் காலத்தில் செல்வா ஆசிரியராக உலா வந்தபோது அன்னாரது நடை, உடை, பாவனையைப் பின்பற்றிய மாணவர்கள் பலர். அதிகம் ஏன்? அவரது நடு உச்சி தலைவாரும் பழக்கத்தைக் கூட வெஸ்லிக் கல்லூரி மாணவர்கள் கொண்டிருந்தார்கள் என்றால் பாருங்களேன்.
1918ஆம் ஆண்டு விஞ்ஞானப் பட்டதாரியான செல்வநாயகம் ஆசிரியராக இருந்த போதே சட்டக்கல்லூரியில் சேர்ந்து 1924ஆம் ஆண்டு சித்தியெய்தி சிவில் சட்டத்துறையைத் தேர்ந்தெடுத்து சட்ட வல்லுநரானார். அத்தொழிலில் தனது முழுக் கவ னத்தையும் செலுத்தினார். அப்போதெல்லாம் தமது வாழ்நாள் இலட்சியம் சுப்பிரிம் கோர்ட்டுக்கு நீதியரசராவதே என்று கூறுவது உண்டு.
எஸ்.ஜே.வி. புகழ்பெற்ற சட்டத்தரணியாக இருந்த காலத்தில் அன்னாரது ஜூனியராக இருந்து பிற்காலத்தில் பிரபல சட்டத் தரணிகளாகிய சிலரை இங்கு பார்ப்பது சாலச் சிறந்ததாகும்.
பிரதம நீதியரசர் பதவி வகித்த நெவில் சமரகோன், எஸ். சர்வானந்தா, இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தந்தை எட்மண்ட் விக்ரமசிங்க, வி. நவரட்ணராஜா, சி.இரங்கநாதன் என்போர்.
இவ்வாறு புகழ்பூத்த சட்டத்தரணியாக இருந்த செல்வா அரசியலில் நுழைந்தது அவரது போதாத காலமாக இருக்கலாம். ஆனால், அந்த நிகழ்ச்சி ஈழத்து தமிழினத்தின் தவப்பேறாகும்!
1
944ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் திகதி கொழும்பு சைவமங்கையர் கழக மண்டபத்தில் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் செல்வா கலந்து கொண்டார். தொடர்ந்து சோல்பரி கமிஷன் முன் ஜி.ஜி. சாட்சியமளித்த போது செல்வா அவர்கள் அருகிலிருந்து தம்மாலியன்ற பங்களிப்பை வழங்கினார்.
1947இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எஸ்.ஜே.வி.யின் பங்களிப்பு அளப்பரியது. தமிழ்க் காங்கிரஸ் யாழ். குடாநாட்டில் ஏழு வேட்பாளர்களும் கிழக்கு மாகாணத்தில் இரண்டு வேட்பாளர்களுமாக மொத்தம் ஒன்பது வேட்பாளர்களை நிறுத் தியது. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜி.ஜி.க்கு அடுத்தபடியாக எஸ்.ஜே.வி தான் பிரதம பேச்சாளர். தமக்கே உரித்தான மெல் லிய உடல்வாகுடன் மென்மையாக ஆறுதலாக ஆனால், உறுதியாக நிறுத்தி, நிறுத்தி அவர் பேசிய உரைகள் அனைவரையும் பெரிதும் கவர்ந்தன.
அந்தத் தேர்தலில் எஸ்.ஜே.வி. காங்கேசன்துறையில் போட்டி போட்டு வெற்றி பெற்றார். யாழ். குடாநாட்டில் ஆறு தொகு திகளில் தமிழ் காங்கிரஸ் பெரு வெற்றியீட்டியது. எஸ்.ஜே.வி.யின் ஜூனியராகக் கடமையாற்றிய கோப்பாய்க் கோமான் கு. வன்னியசிங்கம் கோப்பாய்த் தொகுதியில் பெரு வெற்றியீட்டினார்.
1948ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இலங்கைத் தமிழருக்கு ஒரு கரிநாள். அன்றுதான் இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அந்தச் சட்டத்தை எதிர்த்து தமிழ்க் காங்கிரஸ், இலங்கை, இந்தியக் காங்கிரஸ், லங்கா சமசமாஜக் கட்சி, பொல்சுவிக் வெனிஸ்ட்ரீட்சி சில சுயேச்;சை உறுப்பினர்களும் வாக்களித்தனர். எனினும், சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து யூ.என்.பி. டி.எஸ்.சேன நாயக்கா அரசு தமிழரைப் பலவீனப்படுத்தும் முயற்சியிலீடுபட்டது. அதன் முதற்படியாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மந்திரிப் பதவிகள் வழங்கப்பட்டன.
ஜி.ஜி.க்கு கைத்தொழில் அபிவிருத்தி, கடற்றொழில் அமைச்சு வழங்கப்பட்டது. ஜி.ஜி.யுடன் கே. கனகரத்தினம் (உதவி மந்திரிப் பதவி), சி.இராமலிங்கம், வி.குமாரசாமி போன்றோர் அரசுடன் இணைந்தனர். செல்வநாயகம், வன்னியசிங்கம், சிவபாலன் ஆகியோர் அரசுடன் இணைய மறுத்துவிட்டனர்.
1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜி.ஜி. அமைச்சராகி அரசுடன் இணைந்தார். அன்றிலிருந்து தமிழ்க் காங்கிரஸ் ஜி.ஜி. குழு, செல்வநாயகம் குழு என இரண்டாகப் பிரிந்து வௌ;வேறாகக் கூட்டங்களும் நடத்தத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் செனட்டராக இருந்த இ.எம்.வி. நாகநாதன், செல்வநாயகம் குழுவில் இணைந்து கொண்டார்.
தொடர்ந்து தமிழரசுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதும் தன்னிகரில்லாத் தலைவராக தந்தை எஸ்.ஜே.வி. விளங்கியதும், பின்னர் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் அன்னார் வெற்றி பெற்றதும் அனைவரும் அறிந்ததே.
தொடர்ந்து தமிழரசுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதும் தன்னிகரில்லாத் தலைவராக தந்தை எஸ்.ஜே.வி. விளங்கியதும், பின்னர் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் அன்னார் வெற்றி பெற்றதும் அனைவரும் அறிந்ததே.
பெரியவர் செல்வநாயகம் தமிழர் விடுதலைக்காக, தமிழ் மக்கள் அமைதியாக தமது தாயகத்தில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இறுதி வரை ஒரு சத்தியாக்கிரகியாக, ஊழலற்ற வாழ்க்கையைக் கடைப்பிடித்தார். அமரர் செல்வநாயகத்தின் தீர்க்கதரிசனமான பண்டா-செல்வா ஒப்பந்தத்தையோ அல்லது பண்டா-டட்லி ஒப்பந்தத்தையோ மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் நிறைவேற்றி இருந்தால் எத்தனை பொருள் இழப்புகள், உயிர்ச் சேதங்கள், அனர்த்தங்களை இந்த அழகிய, சிறிய நாடு தவிர்த்திருக்கும்.
அன்னார் தாம் காலமாகும் முன் தமது 79ஆவது வயதில் ‘கடவுள்தான் இனி தமிழ் பேசும் மக்களைக் காப்பாற்ற வேண் டும்”என்றார்.
தந்தையின் கூற்று எத்தனை தீர்க்கதரிசனமான கூற்று ! அக்கூற்று நிதர்சனமான கூற்றாக இன்று மாறியிருப்பது தமிழ் பேசும் மக்களின் துரதிர்ஷ்டமே!
இத்தீவு சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரித் திங்கள் 4 ஆம் நாளில் வீரகேசரிப் பத்திரிகை “இலங்கையின் முதலாவது சுதந்திர தின மலர்’ எனும் தலைப்பிட்டு ஒரு சிறப்பு மலரினை வெளியிட்டிருந்தமை நினைவுகூரப்படுதல் வேண்டும். மேற்படி சிறப்பு மலரில் காங்கேசன்துறை தொகுதியின் பாராளுமன்றப் பிரதிநிதியாக இருந்த தந்தை செல்வா ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டிருந்தார்.
சம்பந்தப்பட்ட மேற்படி கட்டுரையில் சிங்கள மக்கள் இன்று அவர்களுடைய சுதந்திர நாளைக் கொண்டாடுகின்றார்கள். அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே! அவர்களுக்குப் பாராட்டைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில் தமிழ் மக்கள் தாமும் சுதந்திரம் அடைவதற்குப் பாடுபடுவதற்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளுதல் வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார் தந்தை செல்வா!
எத்தகையதொரு சுதந்திரத்தை தமிழ் மக்களுக்காக தந்தை செல்வா வாஞ்சித்திருந்தார் என்பதை அவரது கட்டுரையே நன்கு புலப்படுத்துகின்றது. சுதந்திரம் பெறுவதற்கு தமிழ் மக்கள் வதியும் பாகம் சிறியது. பொருளாதார வளம் போதுமானதா? எனும் வினாவிற்கு விடையாக தந்தை செல்வா குறிப்பிடுகின்றார் சுதந்திரமான தமிழர்களது யாழ்ப்பாண இராச்சியம் சிங்கள அரசுகளுடன் போர் செய்யும் அளவிற்கு அதன் பொருள் வளம் வலுவுடையதாகவே இருந்திருந்தது என்பதுடன் தாம் அக்கட்டுரையை எழுதுகின்ற அந்த நாளிலும் கூட ஒரு ரூபா நாணயத்திற்குத் தென்னிலங்கையில் கொள்வனவு செய்யக் கூடிய பொருட்களிலும் பார்க்க அதிகளவு பொருட்களைத் தமிழ் பகுதிகளில் வாங்க முடியுமாக உள்ளதென்றும் வாதிட்டிருந்தார் தந்தை செல்வா. இதில் ஐயுறவு கொள்பவர்கள் ஆவணக்காப்பாளர் குரும்பசிட்டி கனகரத்தினத்திடம் சென்று சம்பந்தப்பட்ட கட்டுரையைப் பார்த்து உறுதி செய்துகொள்ளலாம்.
இலங்கைப் பாராளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொருட்டாக 1947 இல் நிகழ்ந்த முதலாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. இலங்கை, இந்தியக் காங்கிரஸும் ஏழு உறுப்பினர்களைத் தெரிவு செய்திருந்தது. இந்திய வம்சாவளி மக்களைப் பாதிக்கும் எந்தவொரு மசோதாவையும் இலங்கை, இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமையின் சம்மதம் பெறாது ஆதரித்து வாக்களிப்பதில்லை எனும் ஒரு வாக்குறுதியை அக்கட்சியின் தலைமைக்கு எழுத்தில் தந்திருந்தது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைமை.
மேலும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையும், அடிப்படைக் கொள்கையும் சமபல பிரதிநிதித்துவமே ஆகும். அதன் அர்த்தம் பாராளுமன்றத்தில் சிங்களப் பிரதிநிதிகள் ஐம்பது பேர் இருந்தால் தமிழர்களுக்கும் ஐம்பது பிரதிநிதிகள் இருத்தல் வேண்டும் என்பதல்ல, மாறாக சிறுபான்மை மக்கள் அனைவரையும் உள்ளடக்குவதாக ஐம்பது உறுப்பினர்கள் இருத்தல் வேண்டுமென்பதே “சரிசம’ பிரதிநிதித்துவத்தின் மெய்யான அர்த்தமாகும்.
இந்நிலையில் இலங்கை வாழ் தமிழ்க் பேசும் மக்களில் சரிபாதித் தொகையினரின் வாக்குரிமையைப் பறித்த 1948 ஆம் ஆண்டின் பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு உடன்பாடாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி எங்ஙனம் நடந்துகொண்டிருக்கலாம்? இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் பிரஜாவுரிமையைப் பறித்த சட்டம் 1948 ஆம் ஆண்டிற்கு அமுலுக்கு வந்த 18 ஆம் இலக்கச் சட்டமாகும், இச் சட்டம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டபோது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாகவே இருந்திருந்த போதும் மொத்தமாக ஏழு உறுப்பினர்களைக் கொண்டிருந்த அக்கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலமும், துணைத் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் மட்டுமே அதனை எதிர்த்துப் பேசி எதிர்த்தே வாக்களித்தும் இருக்க கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களாகிய ஏனையோர் ஐவருமே அச்சமயம் சபையில் பிரசன்னமாக இருப்பதையே தவிர்த்திருந்தனர்.
இலங்கை, இந்திய காங்கிரஸ் கட்சிக்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சித் தலைமை எழுத்தில் கொடுத்திருந்த வாக்குறுதிக்கும், அதனது சமபல குறிக்கோள் கோரிக்கைக்கும் விரோதமாக அது இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் சரிபாதித் தொகையினரின் வாக்குரிமையைப் பறித்த 1948 ஆம் ஆண்டின் பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி உடன்பாடாகவே கட்சித் தலைமையின் பணிப்பின்படி அதன் பெரும்பான்மை உறுப்பினர்கள் மேற்படி மசோதா விவாதத்தின்போதும், வாக்கெடுப்பின் போதும் சபையில் பிரசன்னம் தராது இருக்கச் செய்திருந்தமையை உணர்ந்தவராகவே மேற்படி மசோதா மீது தாம் பேசும்போது இன்று இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு அடி விழுகின்றது, நாளை இலங்கைத் தமிழர்களுக்கு விழவிருப்பது உதையே, உத்தியோக மொழிச் சட்டம் கொண்டு வரப்படும் போதே இது உணரப்படும்’ என்று தந்தை செல்வாவைப் பேச வைத்திருந்தது.
1948 ஆம் ஆண்டு பெப்ரவரித் திங்கள் 4 ஆம் நாளில் இலங்கையின் முதலாவது சுதந்திர தினம் சுதந்திரச் சதுக்கத்தில் கொண்டாடப்பட்டபோது வைபவ முறைப்படி பிரித்தானிய யூனியன் ஜாக் கொடி சமகாலத்தில் இறக்கப்பட்டும் அதற்குப் பதிலாக சுதந்திரம் பெறும் நாட்டின் புதிய சுதந்திரக் கொடி வைபவமுறையாக ஏற்றி வைக்கப்படுதலும் வேண்டுமாயின் அப்பொழுது இலங்கையிடமே சுதந்திரக்கொடியாக அறிவிப்பதற்கு அவ்வாறான ஒரு கொடி தானும் இருந்திருக்கவில்லை.
ஆகவே சுதந்திர தினத்துக்கு முன்பாக வந்த வெள்ளிக்கிழமை சனப்பிரதிநிதிகள் சபை ஒத்திவைக்கப்படுதற்கான நேரம் அண்மித்தபோது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க இலங்கையின் கடைசி கண்டி மன்னன் இரண்டாம் விக்கிரமராஜசிங்கனால் உபயோகிக்கப்பட்ட சிங்கக் கொடியையே இலங்கையின் சுதந்திரக் கொடியாக சபை தீர்மானிப்பதாக அறிவிக்கும் ஒரு பிரேரணையைக் கொண்டுவந்து அதன் மீது உரைநிகழ்த்த ஆரம்பித்திருந்தார்.
பிற்பகல் 4 மணியே அப்பொழுது வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் சனப்பிரதிநிதிகள் சபை ஒத்திவைக்கப்படவேண்டிய நேரமாக இருந்தமையால், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தமது கண்களால் சாடைகாட்ட வட்டுக்கோட்டைப் பிரதிநிதி எஸ்.கனகரத்தினம் ஒத்திவைப்புப் அப்பிரேரணையை முன்மொழிய பிரேரணையை வழிமொழிந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் அப்பிரேரணை மீதான வாக்கெடுப்பினை வற்புறுத்தினார். பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கா பெரிதும் முயன்று தமது பிரேரணையை நிறைவேற்ற எத்தனித்தபோதும் சபாநாயகர் சேர்.மொலமுரேயால் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதன் மூலம் பிரதமரின் எத்தனம் முறியடிக்கப்பட்டது. ஆகவேதான் இத்தீவின் முதல் சுதந்திர தினத்திற்குப் பின்பே இத் தீவுக்கான ஒரு தேசியக் கொடியைப் பரிந்துரைப்பதற்காக பிரதமர் சேனநாயக்கா ஒரு பாராளுமன்றத் தெரிவுக் குழுவினை நியமிப்பதற்கு நிற்பந்திக்கப்பட்டிருந்தார். சம்பந்தப்பட்ட தெரிவுக்குழுவின் பரிந்துரை குறித்து பின்னர் ஆராய்வோம்.
பிரஜாவுரிமைச் சட்டம் நிறைவேறுவதற்கு உடன்பாடாகவே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மொத்தமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுள் பெரும்பான்மையினராகிய ஐவர் மேற்படி,மசோதா சனப் பிரதிநிதிகள் சபையில் விவாதிக்கப்பட்ட போதும் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போதும் சபையில் பிரசன்னம் தராது தவிர்த்துக் கொண்டிருக்கையில், கட்சியின் ஒரு சிறுபான்மையினராக ஜீ.ஜீ.பொன்னம்பலமும் சா.ஜே.வே.செல்வநாயகம் ஆகிய இருவர் மட்டுமே மசோதாவை எதிர்த்து வாதிட்டும் எதிர்த்து வாக்களித்தும் இருந்ததனால் கட்சியில் பிளவு ஏற்பட்டது.
அந்நிலையில் பதவியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர் வினை ஆதரவு நல்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டபோது கட்சியின் கொள்கையை முன்வைத்து அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி காணப்படும் உடன்பாட்டின் ஆதாரத்திலேயே அவ்வாறு எதிர்வினை ஆதரவு தரப்படுவதை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட ஆலோசனையை ஆட்சேபித்திருந்தார் தந்தை செல்வா அவ்வாறான நிலைப்பாட்டைத் தந்தை செல்வா. கட்சிக்குள் வலியுறுத்தியிருந்தபோதும் அதே பிரேரணை யாழ். முற்றவெளிப் பகிரங்கப்பொதுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டபோதோ ஒரு ஜனநாயகவாதியாக கட்சிக்குள் தம்மால் ஆட்சேபிக்கப்பட்டிருந்தும், பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டிருந்த ஆலோசனையைத் தாமே முன்மொழிந்தும் ஆதரித்தும் இருந்தார்.
எது எவ்வாறாயிருப்பினும் எந்தவொரு ஜனநாயக அமைப்பிலும் அதன் செயலாளர் பதவியே பொறுப்பு மிகுந்ததும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியுமாகும். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தவரோ கட்சியின் மேலவை உறுப்பினரான (செனட்டர்) டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதனே.யாழ்.முற்றவெ ளிப் பகிரங்கப் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்திற்கான எதிர்வினை ஆதரவுக்கு அவர் உடன்பாடானவராக இருந்திருக்கவில்லை.
ஆதலால் மேடைக்கு அருகே டாக்டர் நாகநாதன் இருந்திருந்தபோதிலும் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்கு அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. எனவே அரசுக்கு எதிர்வினை ஆதரவு முற்றவெளிப் பொதுக்கூட்டத்தில் ஏகமனதான தீர்மானம் மூலம் முடிவு செய்யப்பட்டிருந்ததாகக் கூறமுடியாது. காரணம் கட்சியின் அதிமுக்கிய பதவியாகிய செயலாளரின் மனமொத்த சம்மதத்தை அத்தீர்மானம் பெற்றிருந்திராமையால்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இவ்வாறாக ஏற்பட்டிருந்த கருத்து முரண்பாடு காரணமாக தந்தை செல்வா தலைமையில் சனப்பிரதிநிதிகள் சபையில் அவரது சகாவாக இருந்த கோப்பாய் கோமான் கு.வன்னியசிங்கம், மூதவை உறுப்பினர் இரும்பு மனிதர் டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன், சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வி.குமாரசுவாமியின் மாமனார் டாக்டர் பரமநாயகம் மற்றும் பல கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியை நிறுவினார்.
மேற்கு இலங்கையில் சிலாபம், நீர்கொழும்பு, கொச்சிக்கடை போன்ற மேற்குக் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் எங்ஙனம் படிப்படியாகத் தமது மொழி, கலை, கலாசாரத்தை மறந்து இனமழிந்து காலப்போக்கில் நிலை பிறழ்ந்து முதலில் தமிழ் பேசும் சிங்களவர்களாகவும் பின்னர் சிங்களம் பேசும் சிங்களவர்களாகவும் மாற நேர்ந்ததோ அதே துர்ப்பாக்கிய நிலை வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு நேரிடாது காப்பதற்கு அவர்கள் தம்மைத் தாமே ஆள்பவர்களாக இருத்தல் வேண்டும். அதற்கு அவர்களுக்கு ஒரு தமிழரசு தேவை என்பதே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கை. தந்தை செல்வா தாம் அடையவிரும்பிய தமிழரசை கூடடாட்சிக்கு உட்பட்ட சமஷ்டி அரசாகப் பெறுவதற்கு ஆயத்தமாக இருந்தார். காரணம் அன்று நடைமுறையில் இருந்த சோல்பரி ஒற்றையாட்சியின் கீழ் தனிநாட்டுக்காகப் போரிடுவது தேசத்துரோகக் குற்றங்சாட்டப்பட்டு, தமிழரசுக் கட்சி முளையிலேயே கிள்ளி எறியப்படாது காக்கும் பொருட்டாகவே.
ஆகவே, பதிவு செய்யப்பட்ட கட்சியின் பெயர் இலங்கைத் தமிழரசுக் கட்சியாக இருந்தபொழுதிலும் காரணப் பெயராக சமஷ்டிக் கட்சி எனும் பெயரும் அதனுடன் ஒட்டிக்கொண்டது. விடயம் புரிந்தவர்களாக இதனையே மாற்றுக் கட்சியினர் தமிழருக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியென்றும், சிங்களவர்களுக்கோ சமஷ்டிக் கட்சியென்றும் மாறுபட உரைத்து வருவதாகவும் பழிசுமத்தத் தலைப்பட்டனர்.
சதா தமது காற்சட்டைப்பொக்கற்றிற்குள் பதவி துறப்புக் கடிதத்தை வைத்துக்கொண்டே அரசுக்கு எதிர்வினை ஆதரவு நல்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் கைத்தொழில், மீன்பிடித்துறை அமைச்சராக நியமனம் பெற்றார். அவரது சகா கனகரத்தினத்துக்கும் ஓர் அரை மந்திரி பதவி தரப்பட்டது.
இத் தீவுக்கான ஒரு தேசியக் கொடியைத் தெரிவு செய்வதற்காக பிரதமர் நியமித்திருந்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய மூவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம், மேலவை உறுப்பினர் எஸ்.நடேசன் மற்றும் ரி.பி.ஜாயா ஆகியோராவர். பெரும்பான்மை சிங்களவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் வாளேந்திய சிங்கக் கொடியில் சிறிதளவு மாற்றத்தையேனும் செய்வதற்கு இணங்காமையால் பத்துத் தடவைக்கு மேல் தெரிவுக் குழு கூடியபோதும் தீர்க்கமான முடிவு எதனையும் பரிந்துரைக்க இயலவில்லை.
பொது மக்கள் கருத்துக் கோரப்பட்டபோது பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்கள் நான்கையும் சேர்ந்தவர்களால் வணக்கத்துக்குரிய ஒருதலமாகப் போற்றப்படும் ஆதாமின் சிகரமாக அழைக்கப்படும் சிவனொளிபாத மலையையே சின்னமாக தேசியக்கொடி கொண்டிருத்தல் வேண்டும் என்று முன்னர் யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தலைவராக விளங்கிய காந்தியவாதி ஹன்டி பேரின்பநாயகம் வலியுறுத்தியிருந்தார். சமூக சமத்துவத்தைப் பிரதிபலிப்பதாக வேறு சிலரால் மூவர்ணக் கொடியும் பரிந்துரைக்கப்பட்டது. மேலவை உறுப்பினர் நடேசனும் ஓர் ஒத்த கருத்தையே விளம்பியிருந்தார்.
ஆயினும் திரைக்குப் பின் சம்பவித்திருந்த சூழ்ச்சியால் திடீரென்று வாளேந்திய சிங்கக் கொடிக்குப் புறத்தே தமிழ், இஸ்லாமிய மக்களைப் பிரதிபலிப்பதாக இரு வரைகோடுகளைத் தேசியக் கொடியில் இணைப்பதற்கு ஜீ.ஜீ.பொன்னம்பலமும் ரி.பி.ஜாயாவும் இணக்கம் தெரிவிக்க அதுவே தீவின் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
இடையில் காலிமுகத்திடலில் நிகழ்ந்த விபத்தினால் குதிரை மீதிருந்து விழுந்த டி.எஸ்.சேனநாயக்கா சடுதியில் மரணமானபோது சம்பவித்த பிரதமர் பதவிக்கான போட்டாபோட்டியில் முறையாக அப்பதவிக்கு வந்திருக்க வேண்டியவராகிய சபை முதல்வர் சேர். ஜோன்கொத்தலாவலையின் கீழ் பதவியேற்பதற்குத் தாம் தயாரில்லையென்றும் டட்லி சேனநாயக்காவே பிரதமராக நியமிக்கப்படுதல் வேண்டும் என்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, சேர். ஒலிவர் குணத்திலக்கா போன்றோருடன் ஜீ.ஜீ.பொன்னம்பலமும் கூட்டுச் சேர்ந்திருந்தார்.முன்னவர்கள் இருவரையும் மன்னிப்பதற்கு ஆயத்தமாகவிருந்த சேர் . ஜோன் கொத்தலாவலையினால் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தையோ அதன் நிமித்தம் ஒருபோதும் மன்னித்திருக்கவில்லை.
புதிதாக பிரதமராக வந்திருந்த டட்லி சேனநாயக்கா தமது நியமனத்திற்கு வாக்காளர்களின் ஆதரவைப் பெறும்பொருட்டாக பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு உத்தரவிட்டார். 1952 ஆம் ஆண்டு நிகழ்ந்த பொதுத் தேர்தலில் தந்தை செல்வா தமது காங்கேசன்துறை ஆசனத்தையே சு.நடேசபிள்ளையிடம் தோற்க நேரிட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சி நிறுத்தியிருந்த வேட்பாளர்களில் என்.ஆர்.இராஜவரோதயம்
திருகோணமலையிலும் கு.வன்னியசிங்கம் கோப்பாயிலுமாக இருவர் மட்டுமே வெற்றிபெற்றிருக்க ஏனையோர் யாவரும் படுதோல்வியடைந்தனர்.
இத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை எதிர்த்துப் போட்டியிடும் பொருட்டு மூதவை உறுப்பினர் (செனட்டர்) டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன் தமது செனட்டர் பதவியைத் துறந்திருந்தார். தமது மூதவைச் சகாவான நாகநாதனை ஆதரித்து பொதுக் கூட்டங்களில் உரை நிகழ்த்தியிருந்த செனட்டர் நடேசன் தேசியக் கொடியின் தெரிவில் நிகழ்த்தப்பட்டிருந்த காட்டிக்கொடுப்புக்களை விரிவாகவே விவரித்திருந்தார். பிரஜாவுரிமைச் சட்டம் நிறைவேற்றப்படுவதில் இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை இலங்கை, இந்திய காங்கிரஸ் தலைவர்கள் சௌமியமூர்த்தி தொண்டமானும் ஜனாப் அஸீஸ் இருவரும் தமிழரசுக் கட்சியின் மேடைகளில் அம்பலப்படுத்தத் தவறவில்லை.
இதனால் தேர்தல் கூட்டங்களில் வன்செயல்களும் நிகழ்ந்தன. தமிழரசுக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் செனட்டர் நடேசன் உரை நிகழ்த்திய சமயம் கூட்டத்தில் கூடியிருந்தோர் மத்தியில் பாம்புகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவை பாம்புகள் அல்ல வெறும் நீர்கோட்டைகளேயெனச் சமாளித்து தமது உரையை நடேசன் தொடர்ந்திருந்தார். அதுபோன்றே சாவகச்சேரியில் தமிழரசு வேட்பாளர் அருணாசலம் ஆசிரியரை ஆதரித்து நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் நடேசன் பேசிக்கொண்டிருக்கும்போது மேடையே பொறியாகிக் குலைந்து போயிற்று யாதும் சம்பவியாதது போன்று நடேசனோ ஒலிவாங்கியைக் கையில் ஏந்தியவராக மேசை மீது ஏறிநின்று தமது உரையை நிறைவுசெய்திருந்தார். இருப்பினும் தேர்தல் பெறுபேறுகளோ தமிழரசுக் கட்சிக்குப் பெரும்பாலான தொகுதிகளில் தோல்வியையே தந்திருந்தன.
தேர்தலில் பெருவெற்றி பெற்றிருந்த டட்லி சேனாநாயக்காவின் அரசின் நிதியமைச்சர் 1953 ஆம் ஆண்டில் கொண்டுவந்திருந்த பங்கீட்டரிசி நிகழ்த்தப்பட்ட வெட்டை ஆட்சேபித்து இடதுசாரிக் கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த ஹர்த்தாலின்போது பொலிஸார் நிகழ்த்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பிரபலஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார். அதனையடுத்து பிரதமர் டட்லி சேனநாயக்கா பதவி துறந்தார்.
1953 இல் நாம் நடத்திய ஹர்த்தால் வடக்கிலும் கிழக்கிலும் பெருவெற்றி பெற்றமைக்காக இடதுசாரிக் கட்சிகள் சிறப்பாக தோழர் வெஸ்லி குணவர்த்தனா இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு பகிரங்கமாகவே நன்றி தெரிவித்திருந்தார். இதற்கு முன்பாக தமிழரசுக் கட்சி தனியாகவோ கூட்டாகவோ இணைந்தோ எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தியிராமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
டட்லி சேனநாயக்காவைத் தொடர்ந்து சேர் யோன் கொத்தலாவலை பிரதமரான முதலில் அவரது அமைச்சரவையில் ஜீ.ஜீ.பொன்னம்பலமும் ஒருவராக இடம்பெற்றிருந்தார்.ஆயினும் அமைச்சர் அவை பதவிப் பிரமானம் எடுத்துக்கொண்ட இருபத்திநான்கு மணி நேரத்துக்குள்ளாகவே பிரதமர் யோன் கொத்தலாவலை ஜீ.ஜீ.பொன்னம்பலத்திடம் அவரது ராஜினாமாவைக் கோரியிருந்தார்.பாவம் ஜீ.ஜீ. பொன்னம்பலம் தமது பதவி விலகுதல் கடிதத்தைத் தமது பொக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டே எதிர்வினை ஆதரவை அரசுக்கு நல்குவதற்கு முன்வந்திருந்த அவரிடம் அச்சமயம் அந்த பதவிவிலகுதல் கடிதம் எங்கோ கைதவறியிருத்தல் வேண்டும்.பிரதமரிடம் தாம் கோரிப்பெற்றிருந்த 48 மணி நேர அவகாசத்தின் பின்பே ஜீ.ஜீ.பொன்னம்பத்தால் பதவி விலகுவதற்கு இயலுமாக இருந்திருந்தது.
எது எவ்வாறு இருப்பினும் அவரது கட்சியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் வே.குமாரசுவாமியே தொடர்ந்தும் பதவியில் நீடித்ததுடன் வெகுதுடுக்காக ஜீ.ஜீ.பொன்னம்பலம் தமது வாலைத்துண்டித்துக்கொண்டார் என்பதற்காக நாமும் ஏன் அவ்வாறு செய்யவேண்டுமென எதிர்க்கேள்வி கேட்டதுடன் நில்லாது சாவகச்சேரி தொகுதிக்குள்தானே ஐக்கிய தேசியக்கட்சியின் 28 கிளைகளை ஆரம்பித்திருந்தார். பத்திரிகைச் செய்திகளின்படி யாவும் வெறும் கடிதத்தலைப்பு அமைப்புகளாம்.
சேர் யோன் கொத்தலாவலை தம்மால் பதவி விலக்கப்பட்டவரும் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவருமாகிய ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் யாழ்ப்பாணத்துக்கு 1954 ஆம் ஆண்டளவில் ஓர் உத்தியோகபூர்வமான வருகையை மேற்கொண்டிருந்தார்.ஆச்சரியம் ஆயினும் உண்மை! அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியை விரோதித்து தேர்தலிலும் அதனை எதிர்த்துப் போட்டியிட்டிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சி மட்டுமே பிரதமர் சேர் யோன் கொத்தலாவலையின் யாழ்ப்பாண வருகைகையப் பகிஸ்கரித்து கறுப்புக்கொடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தபோது அமரர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தைத் தலைவராகக்கொண்ட தமிழ்க் காங்கிரஸ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களுமோவெனில் அவரது வருகைக்கு அமோக ஆதரவினை நல்கியிருந்தனர் என்பதே!
அவர்களுக்கு யாழ்.மாநகர முதல்வர் சாம் ஏ.சபாபதி அவர்களை ஒரு ஜனநாயகவதியாக வர்ணிக்கலாம்.யாழ்.நகர மண்டபமுன்றிலில் நாம் பிரதமருக்கு அளித்த பொது வரவேற்பின் போது தாம் வரவேற்புரையை வைபவமுறையாகப் படித்துக் கொண்டிருந்த போது தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியின் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் தலைமயில் பிரதமர் சேர் யோன் கொத்தலாவலையின் யாழ்ப்பாண வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக்கொடி காண்பித்த தமிழரசுக்கட்சி இளைஞர்களை பொலிஸார் குண்டாந்தடிகளால் தாக்குவதை அவதானித்த சாம் சபாபதி தாக்குதலை நிறுத்தும்படி பொலிஸாரைப் பணித்திருந்தார்.தமது கட்டளையையும் பொருட்படுத்தாது பொலிஸார் தாக்குதலை தொடர்ந்தும் நடத்தியபோதே தாக்குதலைப் பொலிஸார் உடன் நிறுத்தாவிடில் வரவேற்புரையைப் படிப்பதை இடைநிறுத்தி வைபவத்தையே ரத்துச் செய்வதாக கடும் தொனியில் கட்டளை பிறப்பித்தார் சாம் சபாபதி. அமைதி திரும்பித்து.
அதன் அர்த்தம் நாட்டின் பிரதமரை வரவேற்பதற்குத் தமக்கு இருக்கும் உரிமையை ஒத்த அதே அளவு உரிமை வரவேற்பை எதிர்ப்பவர்களுக்கும் உண்டு என்பதே!.
இதற்கு விரோதமாக அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தம்பியப்பா சேர்யோன் கொத்தலாவலைக்கு இங்கிலாந்தின் மன்னனும் இந்தியாவின் சக்கரவர்த்தி எனும் பாணியில் “ஊர்காவற்றுறையின் மன்னனும் நெடுந்தீவின் சக்கரவர்த்தியாகவும் காகித அட்டையினால் ஒரு முடிசூட்டு விழாவினையே நடத்தியிருந்தார்.இதனால் மனம் குளிர்ந்துபோன சேர் யோன் கொத்தலாவலைக்கு தமிழ் காங்கிரஸ் பிரமுகர் சி.அருளம்பலத்தைத் தலைவராகக் கொண்ட கொக்குவில் கிராம சபை அளித்த வரவேற்பு வைபவம் ஒன்றிற்குத் தலைமைதாங்கிய காந்தியவாதி ஹன்டி பேரின்பநாயகம் சிங்களம்,தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தீவின் சம அந்தஸ்துள்ள உத்தியோக மொழிகளாக்கச் சட்டம் இயற்றுமாறு கோரியபோது அவ்வாறே செய்வதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார் சேர் யோன் கொத்தலாவலை.
இவ்வரவேற்புக்கூட்டத்துக்கு சேர் யோன் கொத்தலாவலையை ஊர்வலமாக அழைத்துச் செல்வதற்கு ஆரம்பித்த குளப்பிட்டிச் சந்தியில் ஒரு பெரிய கறுப்புக் கொடி திடீரென்று பிரதமர் முன்பாக தோற்றும்படி வியூகம் அமைக்கப்பட்டிருந்தது. தமிழரசு வாலிபர்களால் பிரச்சினையை ஊதிப்பெருக்க வைப்பதன் பொருட்டு பிரதமர் கொக்குவிலில் வைத்து அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் படி இடதுசாரிக்கட்சிகளும் தீவிர பிரசாரம் செய்தன.கண்டி நகர மண்டபத்திலும் கொழும்பு நகர மண்டபத்திலும் மாறி மாறி இவ்விரு கட்சிகளும் நடத்திய கூட்டங்கள் வன்செயல் மூலம் தடுக்கப்பட்டன.கொழும்பு நகர மண்டபத்தை அடுத்துள்ள தமிழ்க் கடைகள் அப்போதுதான் முதல் முதலாகத் தாக்குதலுக்குள்ளாகின.தோழர் கொல்வின் ஆர்.டி.சில்வா மீது வீசப்பட்டக்கை குண்டினைத் தடுக்க முயன்ற ஒருவரின் கையில் அதுவெடித்தும் தெரிந்ததே!
நிலைமை தலைகீழாக மாறுவதைத் தடுக்கும் எத்தனமாக அரசு ஐக்கிய தேசியக்கட்சியின் மாநாட்டை 1956 பெப்ரவரி 20 ஆம் திகதி களனியில் கூடி சிங்களம் மட்டுமே உத்தியோக மொழியாக்கப்படும் என அறிவித்து அதன்மீது வாக்காளர்களின் ஆணையைப் பெறுவதற்காக பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு முடிவு செய்தது.
1956 பெப்ரவரி 20 ஆம் நாளை இதன் நிமித்தம் இலங்கைத் தமிழரசுக் கட்சி கரிநாளாக அறிவித்தும் அந்நாளில் பாடசாலைகளைப் பகிஷ்கரித்து தொழில் நிறுத்தம் செய்து உண்ணாவிரதம் இருக்குமாறு மக்களைப் பணித்திருந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அதனது வரலாற்றில் நிகழ்த்தியிருந்த முதல் போராட்டமாக இது பெரு வெற்றியடைந்தது. 1948 ஆம் ஆண்டின் பிரஜாவுரிமைச் சட்டவிவாதத்தில் உரையாற்றும் போது “இன்று இந்திய வம்சாவளியினருக்கு அடி விழுகிறது, நாளையோ இலங்கைத் தமிழர்களுக்கு விழவிருப்பது உதையே’ உத்தியோகமொழிச் சட்டம் கொண்டுவரப்படும் போதே இது உணரப்படும் என அன்று தந்தை செல்வா உரைத்திருந்த தீர்க்கதரிசனம் நிறைவேறிவருவதை மக்கள் உணர்ந்தனர்.
ஒப்சேபர் பத்திரிகையில் கொலற் வெளியிட்டிருந்த ஒரு கேலிச் சித்திரம் தந்தை செல்வாவையும் அவரது ஆதரவாளர்களையும் குறிப்பதாக “செவிட்டுத் தலைவனும் குருட்டு ஆதாரவாளர்களும்’ இதன் மேல் அது காலத்துக்குப் பொருத்தமாகவே அமையும். தாம் ஏற்கவிரும்பாதனவற்றை தந்தை செல்வா ஒரு போதுமே காதில் வாங்கிக் கொள்ளமாட்டார். அது போன்றே தமிழ் மக்களும் எது நேரிடினும் தந்தை செல்வாவின் தலைமையை ஒருபோதுமே நிராகரிக்க மாட்டார்கள்.
இடதுசாரிக் கட்சிகள் இரண்டுமே இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து கிடைக்கப் போராடி வருவதால் ஏன் தமிழர்கள் யாவரும் அவற்றை ஆதரிக்கக் கூடாது? என வினவியபோது “நொந்தும் பிள்ளையை அவளே பெறல் வேண்டும் ஏனையோர் வேண்டுமாயின் செவிலித்தாயாக மட்டுமே உதவ முடியும்’ என அன்று கு.வன்னியசிங்கம் உரைத்ததை இன்று வரலாறு மெய்ப்பித்து விட்டது சம்பந்தப்பட்ட மேற்படி இரு கட்சிகளின் நடத்தையினாலும்.
சிங்களம் மட்டுமே உத்தியோக மொழியெனச் சட்டம் கொண்டு வருவதற்கு முற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசினைத் தோற்கடிப்பதற்கு தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படல் வேண்டுமென்று வலியுறுத்தி நின்ற லங்கா சமசமாஜக் கட்சியும், இலங்கைப் பொதுவுடமைக் கட்சியும் மொழிப் பிரச்சினை மீது அதே கருத்தைக் கொண்டிருந்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியையும் இலங்கைத் தமிழரசுக் கட்சியையும் வகுப்புவாதக் கட்சிகள் எனக் கண்டனம் செய்து ஒதுக்கிவிட்டு அந்த இரு கட்சிகளுக்கும் எதிராகத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டிருந்ததுடன் சம்பந்தப்பட்ட மேற்படி இரு கட்சிகளினதும் வேட்பாளர்களைத் தோற்கடித்தே பருத்தித்துறைத் தொகுதியை இலங்கை பொதுவுடமைக் கட்சி அத்தேர்தலில் வெற்றியும் பெற்றிருந்தது. அவ்வாறு தெரிவு செய்யப்பட்டிருந்தவர் தோழர் பொன் கந்தையாவே.
அதற்கு முற்றிலும் மாறாக தென்னிலங்கையிலோ இவ்விரு கட்சிகளும் அதே தேர்தலில் “இருபத்திநான்கு மணிநேரத்தில் சிங்களம் மட்டும் உத்தியோகமொழிச் சட்டத்தைக் கொண்டுவருவோம்’ எனக் கொக்கரித்து நின்ற கே.எம்.சீ.இராசரத்தினர, ஜெயசூர்ய, ஆர்.ஜீ.சேனாநாயக்க, டாக்டர் தகநாயக்க, தோழர் பிலிப் குணவர்தன ஆகியோரை உள்ளடக்குவதாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக் கவின் தலைமையைக் கொண்டதான சிங்களப் பேரினவாத மக்கள் ஐக்கிய தேர்தல் முன்னணியுடன் அதேதேர்தலில் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு எவ்வாறு முடியுமாக இருந்தது? காலப்போக்கில் ஒரே சிங்களப் பேரினவாதக் குட்டையில் ஊறவிருந்த அதே மட்டைகளாக அவையும் இருந்திருந்ததனால் அல்லவா?
1956 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பத்துத் தேர்தல் தொகுதிகளைக் கைப்பற்றியதன் போது தமிழ் மக்களின் அரசியல் தலைமை தந்தை செல்வாவின் கைகளுக்கு மாறியிருந்தது. அதன்பின் அவரது ஜீவிய காலம் வரை அந்தச் செவிட்டுத் தலைவரின் குருட்டுச் சிஷ்யர்களாகவே தமிழ் மக்கள் மாறியிருந்தனர்.
புதிதாகப் பதவிக்கு வந்திருந்த மக்கள் ஐக்கிய முன்னணி 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி சிங்களம் மட்டுமே உத்தியோகமொழி மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனைச் சட்டமாக்குவதற்கு முயன்றது. பங்கீட்டரிசியைக் குறைத்ததை ஆட்சேபித்து நாடு முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டித்து பிரதமர் டட்லி சேனாநாயக்காவை பதிவி துறக்க வைத்திருந்த இடதுசாரிக் கட்சிகள் இரண்டும் பாராளுமன்றத்தை மட்டுமே ஒரு மேடையாக உபயோகித்து அதனை உக்கிரமாக ஆட்சேபித்திருந்தனவேயன்றி, பாராளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் எதிலும் குதியாது வாளாவிருக்கவே செய்தன.
மாறாக தந்தை செல்வா தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோவெனில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜூன் மாதம் 5 ஆம் நாளைக் கரிநாளாக அறிவித்து அந்நாளை பாடசாலைப் பகிஷ்கரிப்பு, கடையடைப்பு, தொழில் நிமித்தம் மற்றும் கரிநாளாக அனுஷ்டித்திருந்ததோடு நில்லாது கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் பாராளுமன்றத்தின் முன்பாகவே தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரகம் செய்வதாகவும் அறிவித்திருந்தது.
ஆயினும் பலத்த பொலிஸ் காவலுடன் கூடியதாக பாராளுமன்றக் கட்டிடமே முட்கம்பி வேலிகளால் சூழ்ந்து கொள்ளப்பட்டிருந்த போது அவற்றை மீறுவது சாத்வீக மீறுதலாக அமையும் என்பதனால் சாத்வீக இயக்கமான தமிழரசுக் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் தந்தை செல்வா தலைமையில் காலிமுகத்திடலில் தானே தமது சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தனர். பொலிஸார் பார்த்திருக்க சிங்களக் காடையர்களின் பலத்த தாக்குதலுக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டனர்.
தலைவர் வன்னியசிங்கத்தின் சட்டை கிழிக்கப்பட்டது. அமிர்தலிங்கத்தின் தலையில் காயம் உண்டுபண்ணப்பட்டது. சாவகச்சேரி நவரத்தினமும் பொத்துவில் பா.உ.முஸ்தபாவும் காயமடைந்தனர். தொண்டர்கள் தாக்கப்பட்டனர். கால் வழங்காத வசாவிலான் சட்டத்தரணி ராசநாயகம் பெரியா கால்வாயில் தூக்கிப் போடப்பட்டார். தந்தை செல்வா பார்த்துக்கொண்டு வாழாதிருக்க அவரது புதல்வர்கள் இருவர் நையப்புடைக்கப்பட்டனர். சத்தியாக்கிரகத்தில் நேரடியான பங்காளியாக இராது தொண்டர்களுக்கு மருத்துவ முதலுதவிப் பணியாற்றிக்கொண்டிருந்த இரும்பு மனிதர் டாக்டர் ஈ.எம்.வி. நாகநாதன் உடுத்திருந்த அவரது வேட்டி களையப்பட காலிமுக விடுதியில் அவர் ஒதுங்கிக்கொள்ள நேரிட்டது.
அச்சமயம் பெய்துகொண்டிருந்த பலத்த மழையின் மத்தியில் நிரபராதிகளாக சாத்வீக சத்தியாக்கிரகிகள் தமது சிங்களக் குண்டர்களால் பந்தாடப்படுவதை பாராளுமன்றக் கட்டிடத்தில் இருந்தவாறே சாளரத்தினூடாக நாட்டின் பிரதமர் பண்டாரநாயக்க பார்த்துக்கொண்டிருந்தார். இத்தனை அடாவடித்தனம் நிகழ்ந்த போதும் சிங்களக் குண்டர்கள் தந்தை செல்வா மீது கை வைக்க துணிந்திராதமை ஆச்சரியமே.
தலைநகர் கொழும்பிலும் காடையர்கள் தமிழர்களைக் கண்ட கண்ட இடங்கள் தோறும் தாக்கியிருந்தனர். கல்லோயா குடியேற்றப்பகுதிகளிலும் இனக் கலவரம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. காலி முகத்திடலில் நிகழ்ந்த தாக்குதல்களில் தாம் அடைந்த காயங்களுக்கு கட்டுப்போட்ட நிலையில் உத்தியோக மொழி மசோதா மீதான விவாதத்தில் பங்குபற்றுவதற்காக சனப் பிரதிநிதிகள் சபைக்கு வந்திருந்த தமிழரசுக் கட்சிப் பாராளுமன்றப் பிரதிநிதிகளைப் பார்த்து போரில் அடைந்திருந்த விழுப்புண்கள் எனக் கேலி செய்து வர்ணித்திருந்தார் பிரதமர் பண்டார நாயக்க. தமிழ் உறுப்பினர்களினதும் இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களினதும் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் 2/3 பங்கு பெரும்பான்மை பெறாதே நிறைவேறியிருந்தது சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழி மசோதா.
இவ்விவாதத்தில் உரை நிகழ்த்தும் போதே “இரு மொழிகள் ஒரே நாடு ஒரு மொழி இரு நாடுகள்’ என்று ஆணித்தரமாக வாதிட்டிருந்தார் தோழர் கொல்வின் ஆர்.டி.சில்வா. ஆயினும் பின்னர் 1972 அரசமைப்புத் திட்டத்தைத் தயாரித்திருந்த போது சாதாரண பெரும்பான்மையால் மாற்றப்பட்டிருக்கக்கூடிய சிங்களம் மட்டும் உத்தியோக மொழிச் சட்டத்தை 2/3 பெரும்பான்மை வாக்குகளால் தானும் மாற்ற முடியாதவாறு அதனை அரசியலமைப்பின் ஓர் உறுப்புரையாகவே வரைந்திருந்தவரும் அதே கொல்வின் ஆர்.டி.சில்வாவே.
பாராளுமன்றம் நிறைவேற்றியிருந்த சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து போராடுவதற்கு வியூகம் வகுக்கும் பொருட்டு தமிழரசுக் கட்சி திருகோணமலையில் 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அதன் சிறப்பு மாநாட்டைக் கூட்டியது. சம்பந்தப்பட்ட திருமலை மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு தமிழரசுத் தலைவர்கள்ல பிரதிநிதிகள், தொண்டர்கள் யாவரும் தமிழர் வதியும் அனைத்து நகரத்திலும் இருந்து நடை பவனியாகவே திருமலைக்கு வந்திருந்தனர். அதற்காக வியூகம் வகுத்துத் தந்திருந்தவர் பின்னர் காவலூர் பிரதிநிதியாக வந்திருந்த சட்டத்தரணி வி.நவரத்தினமே!
தந்தை செல்வா ஒருபோதுமே ஜீவியகால தலைமையை விரும்பியவர் அல்லர். ஆயினும் 1952 பொதுத் தேர்தலிலும் தேர்தல் வழக்கிலும் அவர் அடைந்த தோல்வி காரணமாக ஏனைய தலைவர்கள் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீங்க அவரை அனுமதித்திருக்கவில்லை. அவரோ கு.வன்னியசிங்கத்திடம் விரைவில் அப்பதவியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதற்கே விரும்பியிருந்தார்.
ஆகவே கிடைத்த வாய்ப்பினை இப்போது பயன்படுத்திக் கொண்டு திருமலை சிறப்பு மாநாட்டில் வைத்தே கு.வன்னிய சிங்கத்தை கட்சியின் உத்தியோகபூர்வ தலைவராக்கியிருந்தார் தந்தை செல்வா. ஆயினும் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக நீடிக்க வேண்டி நேரிட்டது. திருமலை சிறப்பு மாநாடு ஒருவருட காலக்கெடு விதித்து அதனது நான்கு கோரிக்கைகளாகிய:
1. தமிழ் மக்களுக்கு சமஷ்டிக் கூட்டாட்சிக்குட்பட்ட ஒரு தமிழரசு.
2. உத்தியோக மொழியாக சிங்கள மொழியுடன் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து.
3. வடக்குக், கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை இல்லாதொழித்தல்.
4. இத் தீவை வதிவிடமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினர் சகலருக்கும் பிரஜாவுரிமை.
ஆகியவற்றை வழங்கத் தவறின் கட்சி சாத்வீக சட்டமறுப்பு இயக்கத்தில் குதிக்கும் என்பதே அத்தீர்மானமாகும்.
ஆரம்பத்தில் அத்தீர்மானத்தைக் கண்டுகொள்ளாது வாழாவிருந்த அரசு கட்சியின் புதிய தலைவர் தமது சட்டத் தொழிலைத் துறந்து, எதிர்வரவிருந்த சாத்வீக சட்ட மறுப்புப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட விருந்த தொண்டர்களைத் தெரிவு செய்து பயிற்சி அளிக்கத் தலைப்பட்டதும், காலக்கெடு நெருங்க நெருங்க தீவில் ஏற்பட்டு இருந்த கொந்தளிப்பான பரபரப்பு நிலையை அவதானித்து தந்தை செல்வாவை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுத்தது.
பேச்சுவார்த்தைக்காகத் தலைநகர் கொழும்புக்குப் புறப்பட்ட வன்னியசிங்கத்தை யாழ்.புகையிரத நிலையத்தில் சூழ்ந்துகொண்ட பத்திரிகை நிருபர்கள் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நான்கும் வலியுறுத்தப்படுமா? அல்லது விட்டுக்கொடுப்புக்கு இடமுண்டா என வினவப்பட்டதற்கு முதல் மூன்று கோரிக்கைகளுக்கும் இணங்கினால் நான்காவது கோரிக்கையில் தளர்ச்சி காண்பிக்கப்படும் என்பதே வன்னியசிங்கம் அளித்த வதிலாகவிருந்தது.
தமிழரசுக் கட்சி கடைப்பிடித்துவந்த ஒரு கட்டுப்பாடு பத்திரிகைப் பேட்டிகள் வெளியிடப்படும் போது மறுப்பு வெளியிடாது இருப்பது விளக்கம் தெரிவிப்பதுமாகும். இதன் நிமித்தமே “டாக்டர் நாகநாதன் அங்கிள் ஒலிவரை முத்தமிடுகிறார்’ என பத்திரிகையில் வெளிவந்த கூற்றுக்கு ஒரு பொதுக்கூட்டத்துக்குத் தலைமை வகித்துக் கொண்டிருந்த தந்தை செல்வாவிடம் விளக்கம் கேட்கப்பட்டதற்கு அந்தக் கேள்விக்கு நாகநாதனே பதிலளிப்பார் என்று தெரிவித்திருந்தார். உடன் ஒலிவாங்கியை அணுகிய டாக்டர் நாகநாதனோ செய்தியை மறுக்காது கொஞ்சுவான் கெஞ்சமாட்டான். நாகநாதன் எனப் பதில் உரைத்திருந்தார். அவையினர் வரவேற்றிருந்தனர் அவரது கூற்றை. இங்கும் தந்தை செல்வாவிடம் வன்னியசிங்கத்தின் கருத்துக் குறித்து மறுநாள் கேட்கப்பட்டபோது அது வன்னியசிங்கத்தின் சொந்தக் கருத்தாக இருக்கலாம். ஆயின் கட்சிக்கோ,நான்கு கோரிக்கைகளும் முக்கியமானதே! எனப் பதிலளித்திருந்தார். வன்னியசிங்கத்துக்கு தாம் கூறியதை மறுத்துரைக்க வேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்கப்பட்டது இவ்வாறே.
அரசுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடைப்பட்ட முதற் சந்திப்பின்போதே சமஷ்டி ஆட்சியை வலியுறுத்தும் உங்களிடம் இத்தீர்வுக்கான சமஷ்டி அரசமைப்புத் திட்டம் ஏதும் உண்டாயின் தமது சொந்த ஆய்வுக்கு அதன் பிரதியொன்றினை உதவ முடியுமா என வினாவியிருந்தார் பிரதமர் பண்டாரநாயக்கா. 1926 இல் இங்கிலாந்தில் கல்வியை முடித்துக்கொண்டு இத்தீவுக்குத் திரும்பியிருந்த பண்டாரநாயக்கா இலங்கைக்குப் பொருத்தமானது சமஷ்டி முறை அரசாங்கமே எனத் தெரிவித்திருந்ததும் டி.எஸ்.சேனாநாயக்கா ஆட்சியின் உள்ளூராட்சி அமைச்சராக இருந்தபோது மாகாண ஆட்சிக்கான சட்டமூலத்தை அவர் தயாரித்திருந்தமையும் நினைவுகூரப்படுகையில் அது ஆச்சரியம் தரமாட்டாது. ஆயினும் தமிழரசுக் கட்சியிடமோ அப்போது அத்தகைய சட்ட வரைவு எதுவும் கைவசம் இருந்திருக்கவில்லை. ஆயினும் ஏனையோரை முந்திக்கொண்டு இரும்பு மனிதர் டாக்டர் நாகநாதனோ அடுத்த சந்திப்பின்போது பிரதமருக்கு அதன் ஒரு பிரதி தரப்படும் என உறுதி கூறிவிட்டார்.
ஒரு சட்ட அறிஞராகத்தானும் இல்லாதிருந்த மருத்துவர் நாகநாதன் இத்தீவுக்கான ஒரு சமஷ்டி அரசியலமைப்பினை ஒரே இரவிற்குள் வரைத்தபோது கட்சியின் சட்ட அறிஞர்களால் பரிசீலித்து அங்கீகரிக்கப்பட்டு பிரதமர் பண்டாரநாயக்காவிடம் அதன் பிரதியே அடுத்த சந்திப்பின்போது கையளிக்கப்பட்டிருந்தது. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின் திருமலைத் தீர்மானம் விதித்திருந்த காலக்கெடு முடியும் தறுவாயில் சாத்வீக சட்டமறுப்புப் போராட்டங்களுக்கான வியூகங்களை வகுப்பதற்கு தமிழரசுக் கட்சி மாநாடு மட்டக்களப்பில் கூடவிருந்த இறுதிக் கட்டத்திலேயே பிரதேசசபைகளை நிறுவுவதற்கான பண்டாசெல்வா உடன்படிக்கை 1957 ஜூலை 26 ஆம் திகதி நள்ளிரவில் பிரதமரது ஹொஸ்மிட்பிளேஸ் இல்லத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.
அச்சமயம் அதே றொஸ்மிட் பிளேஸில் வசிப்பவரான இத்தீவின் சொலிசிற்றர் ஜெனரல் மு.திருச்செல்வமோ பேச்சுவார்த்தைகளின் பெறுபேற்றை உடனறியும் பொருட்டு அதில் கலந்துகொண்ட தமிழரசுத் தலைவர்களது வரவுக்காக அல்பிரட் வீட்டுத் தோட்டத்தில் தந்தை செல்வா இல்லத்தில் காத்திருந்தார். ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும் தந்தையின் வீட்டுக்குத் திரும்பியிருந்த தமிழரசுத் தலைவர்களை மு.திருச்செல்வமே கதவு திறந்து அனுமதித்திருந்தார்.
இந்தக் காட்சி மறுநாள் வெளிவந்த டெய்லிநியூஸ் பத்திரிகையின் முன்பக்கச் செய்தியாக ஒளிப்படத்துடன் வெளியிடப்பட்டிருந்ததுடன், பிரதேச சபைகளுக்கான வரவினைத் தயாரிப்பதற்குப் பொறுப்புடையவரான இத்தீவின் சொலிசிற்றர் ஜெனரல் மு.திருச்செல்வத்திற்கு அந்த அர்த்த சாமத்தில் தந்தை செல்வா வீட்டில் என்ன வேலை? எனும் தலைப்பில் கடுமையாக ஓர் ஆசிரியர் தலையங்கமும் தீட்டியிருந்தது.
தமது வளர்ப்புத் தந்தை செல்வநாயகம் என்பதால் தாம் அங்கு காணப்பட்டது ஆச்சரியம் அல்ல என்று திருச்செல்வம் பதிலளித்துத் தப்பித்துக் கொண்டபோதும் இடையில் சிறிது காலம் அதன் நிமித்தம் அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதே!
சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் பிராந்திய சபைகளில் (வட,கிழக்கில்) தமிழ்மொழியை நிர்வாக மொழியாக அங்கீகரித்திருந்ததை அப்போது அம்பாறையில் இருந்த டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா.” (இப்பொழுது பண்டா நாம் கொடுத்திருக்கக் கூடியதிலும் பார்க்க அதிகமாகவே கொடுத்துவிட்டார்) என்று கண்டித்திருந்தார்.”பண்டா செல்வா’ ஒப்பந்தத்தை ஆட்சேபித்து ஆதரவாளர்கள் சூழ்ந்து வர கண்டிக்கு பாதயாத்திரை புறப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்தனவை இம்புல்கொடையில் வைத்து எஸ்.டி.பண்டாரநாயக்க புறமுதுகிடச் செய்திருந்தும் றொஸ்மிட் பிளேஸ் பிரதமர் இல்லத்தில் பௌத்த குருமார் நிகழ்த்தியிருந்த ஆர்ப்பாட்டத்தைக் கண்டு அஞ்சிய பிரதமரினால் “பண்டா செல்வா’ உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டதும் தெரிந்ததே.
பலன் தீவு அடங்கலும் நிகழ்ந்த இனக்கலவரமே 1958. ஒப்சேவர் பத்திரிகை ஆசிரியர் தாசிவித்தாட்சி எழுதி வெளியிட்ட “நெருக்கடி நிலை 1958’ நூலில் விபரங்கள் காணலாம். தமிழ் மக்கள் கப்பல்கள் மூலம் தமிழர் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். 1959 செப்டெம்பர் திங்கள் 26 இல் பௌத்த பிக்கு சோமராமாவினால் பண்டாரநாயக்க துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சபை முதல்வர் சி.பீ.டி.சில்வா சிகிக்சை நிமித்தம் லண்டன் மாநகரில் இருந்தமையால் டாக்டர் டபிள்யூ தகநாயக்க பிரதமராக வந்திருந்தார். ஆயினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட உட்பூசல்கள் காரணமாக முஸ்லிம் உறுப்பினர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டிருந்த தமது அமைச்சர் அவையுடன் அவர் பதவி துறக்க நேரிட்டது. முதல் தடவையாக தீவு முழுவதும் ஒரே நாளில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உத்தரவிட்டிருந்த பெருமை டாக்டர் தகநாயக்காவிற்கே சேரும்.
1960 மார்ச் திங்களில் நிகழ்ந்த அத் தேர்தலில் ஒரு தொங்கு பாராளுமன்றமே தெரிவாகியது. பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றிராத ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் டட்லி சேனாநாயக்கா தமிழரசுக் கட்சியின் ஆதரவு தமக்கு உண்டென்று தவறாகக் கூறி மகாதேசாதிபதி ஒலிவர் குணதிலக்கவினால் பிரதமராக நியமனம் பெற்றிருந்தார். இருப்பினும் கூட நியமன உறுப்பினர் தெரிவின் மூலமும் அவரால் பெரும்பான்மையை எட்ட முடியவில்லை.
தமிழரசுக் கட்சியும், இரு இடதுசாரிக் கட்சிகளும் தாம் சி.பி.டி.சில்வா பிரதமராக வருவதை ஆதரிப்பதாகக் கடிதம் தந்தும் ஒலிவர் குணதிலக்க அதனை நிராகரித்திருந்தார். இடையில் சி.பி.டி.சில்வா நாடு திரும்பி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தலைவராக வந்திருந்தமை தெரிந்ததே. சிம்மாசனஉரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீதான வாக்கெடுப்பில் அரசுக்கெதிராக இருஇடதுசாரிக் கட்சிகளுடனும் சேர்ந்து வாக்களித்து தந்தை செல்வா டட்லி சேனாநாயக்க அரசைத் தோற்கடித்து இருந்தார்.
எனவே, ஒரே ஆண்டில் 1960 ஜூலைத் திங்களில் இரண்டாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற நேர்ந்தது. முதலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்பதற்கு மறுத்திருந்த ஸ்ரீமாவோ அம்மையார் பண்டாரநாயக்கவின் பெயர் வரலாற்றில் நிலைப்பதற்கு அவர் அத்தலைமைப் பதவியை ஏற்பது தவிர்க்க முடியாததொன்று என்று அவரது குடும்ப நண்பர் டாக்டர் நாகநாதனின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டவராக ஜூலைத் திங்களில் நிகழவிருந்த தேர்தலில் நேரடியாகப் போட்டியிட்டிராத போதும் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை வரித்துக் கொண்டிருந்தார். இரு இடதுசாரிக் கட்சிகளுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையே ஆதரித்தமையால் தனியொரு கட்சியாக ஆட்சி அமைக்கும் பாராளுமன்றப் பெரும்பான்மைப் பலம் அக்கட்சிக்குக் கிடைப்பதாகவிருந்தது. மேல் சபை உறுப்பினர் நியமனம் பெற்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் பிரதமராக வந்திருந்தார்.
அத்தேர்தலில் காங்கேசன்துறையில் தந்தை செல்வாவின் வெற்றி அறிவிக்கப்பட்ட போது தென் இலங்கையில் சுதந்திரக் கட்சி ஆதரவாளர் பட்டாசு வெடிகளை வெடித்துக் கொண்டாடியிருந்ததுடன், தேர்தலின் பின் முதற் தடவையாக பாராளுமன்றம் கூடியபோதும் தந்தை செல்வநாயகத்துக்கு “ஜெயவேவா’ எனக் கூறி பெரும் சனசமுத்திரமாக ஆர்ப்பரித்திருந்தனர் பாராளுமன்றத்தின் முன்பாக.
யாவும் ஆறு கடக்கும் வரைதான் அண்ணன் தம்பி உறவு என நிரூபிப்பதாக சிங்களம் மட்டும் உத்தியோக மொழிச் சட்டத்தை வடக்குக் கிழக்கு நீதிமன்றங்களுக்கும் விஸ்தரிப்பதற்கு அம்மையார் நடவடிக்கை எடுத்த போதே 1961 பெப்ரவரித் திங்களில் தந்தை செல்வா யாழ்.கச்சேரி முன்பாகத் தமது சாத்வீக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தார். யாழ். செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட சாத்வீக மறியல் போராட்டம் படிப்படியாக ஏனைய பட்டினங்களது பணிமனைகள் முன்பாகவும் விஸ்தரிக்கப்பட்ட வடக்குக் கிழக்கில் அரசு நிர்வாகமே முற்றாக ஸ்தம்பித நிலையை அடைந்தது.
வேறு வழியில்லாது நெருக்கடி கால நிலையை அறிவித்து வடகிழக்கிற்கு மறியல் போராட்டத்தை அடக்குவதற்கு ஸ்ரீமாவோ அம்மையார் இராணுவப் படைகளை அனுப்பியிருந்தார். தமிழரசுத் தலைவர்கள் யாவரும் நாகநாதன் நீங்கலாக கைது செய்யப்பட்டு பனாகொடையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டதாக விருந்தும் உபயோகத்திற்கு வந்திராத இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். பாராளுமன்றத்தில் வெளிப்பட்டு சத்தியாக்கிரகிகளுக்கு நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை பறைசாற்றும் பொருட்டாக டாக்டர் நாகநாதன் ஒரு கிறிஸ்தவ மத குருவாகவும், சிவசிதம்பரம் தொழிலாளி போன்றும் உருமறைப்புச் செய்து கொண்டவர்களாக புகையிரதம் மூலம் தலைநகர் கொழும்பு சென்றடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட எத்தனம் கைகூடவில்லை. புகையிரத சேவை தடைப்பட்டு இருந்தமையால் டாக்டர் நாகநாதனை அவரது சொந்த மருமகனாகிய சி.ஐ.டி. உத்தியோகத்தர் நதானியேவே பின்னர் கைது செய்து பனாகொடையில் சேர்த்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் மு.சிவசிதம்பரம் தந்த தகவல்களால் தோழர் எட்மன் சமரக்கொடியுடன் இருவரும் வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் நிகழ்த்தி வந்த அட்டூழியங்களைப் பாராளுமன்றத்தில் வைத்து அம்பலப்படுத்தியிருந்தனர்.
மறைந்த தமது கணவர் பண்டாரநாயக்கா கைச்சாத்திட்டிருந்த “பண்டா செல்வா’ உடன்படிக்கையை பதவியில் தாம் அமர்த்தப்பட்டால் தாம் நடைமுறைப்படுத்துவார் என வாக்குறுதி தந்த தந்தை செல்வா ஆதரவு பெற்று தென்னிலங்கைத் தமிழர்களது ஆதரவும் பெற்று பதவி பெற்றிருந்த ஸ்ரீமாவோ அம்மையார் ஆட்சியைப் பின்னர் பதவி கவிழ்க்கும் வாய்ப்பும் தந்தை செல்வாவிற்கு கிடையாது போகவில்லை. ஏரி வீட்டுப் பத்திரிகைகளைப் பொறுப்பேற்பதற்கான மசோதாவை அவரது ஆட்சி கொண்டு வந்த போது சுதந்திரக் கட்சியில் இருந்த சி.பி.டி.சில்வா தலைமையில் பெரும்பிளவு ஏற்பட்ட போது எதிர்க்கட்சியுடன் இணைந்து சம்பந்தப்பட்ட வாக்கெடுப்பில் அம்மையார் ஆட்சியை தந்தை செல்வா தோற்கடித்திருந்தார்.
1965 மார்ச் திங்களில் நிகழ்ந்த பொதுத்தேர்தலும் தொங்கு பாராளுமன்றத்தையே தெரிவு செய்திருந்தது. தந்தை செல்வாவுக்கும் டட்லி சேனாநாயக்காவுக்கும் இடையே மறுபடியும் றோஸ்மிட் பிளேஸிலுள்ள மற்றொரு இல்லத்தில் மு.திருச்செல்வம் இல்லத்தில் “மாவட்ட சபைகளை நிறுவுவதாகச் செய்து கொள்ளப்பட்டிருந்த’ டட்லிசெல்வா’ உடன்படிக்கையின் பெறுபேறாகவே டட்லிசேனாநாயக்கவினால் அவரது தேசிய அரசினை நிறுவ முடிந்தது. “பண்டாசெல்வா’ உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டிருந்தவராகிய தோழர் பிலிப் குணவர்தனாவும் அந்த அமைச்சரவையில் ஓர் உறுப்பினராக இணைந்து கொண்டிருந்தார். மக்கள் ஐக்கிய முன்னணி இரு ஒப்பந்தங்களையும் ஏற்றிருந்தது.
டட்லியின் தேசிய அரசில் தமிழரசுக் கட்சியும் மூன்று அமைச்சர் பதவிகளையேனும் ஏற்கும்படி வற்புறுத்தப்பட்ட போதும் கட்சியின் கொள்கைப்படி அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மாவட்ட சபைகளுக்கான ஒப்பந்தம் சிங்களக் குடியேற்றங்களைத் தவிர்ப்பதில் பிராந்திய சபைகளுக்கான “பண்டாசெல்வா’ உடன்படிக்கையிலும் வாய்ப்பானதாகக் கருதப்பட்டது. மாவட்ட சபைகளுக்கான சட்டவலுவைத் தயாரிப்பதற்குப் பொறுப்புடையதான உள்ளூராட்சி அமைச்சர் பதவியையேனும் ஏற்கும்படி வலியுறுத்தப்பட்டபோது, தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைத் தவிர்த்து வெளியார் ஒருவரான அமரர் மு.திருச்செல்வம் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு அப்பதவியை ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. ஆயினும் பதவியை ஏற்பதற்குச் சென்ற சமயம் திருச்செல்வம் தமது மோட்டார் வண்டியில் தமிழரசுக் கட்சியின் மூவர்ணக் கொடியைப் பறக்க வைத்தே சென்றிருந்தார்.
“டட்லிசெல்வா’ ஒப்பந்தப்படி தமிழ்மொழி உபயோகத்துக்கான மசோதா கடும் எதிர்ப்பின் மத்தியிலும் நிறைவேற்றப்பட்டிருந்த பொழுதிலும் கூட மாவட்ட சபைகளுக்கான மசோதாவோ கொண்டுவரப்பட்டிருக்கவில்லை. அதன் நிமித்தம் டட்லி சேனாநாயக்கா அரசுக்கு விரோதமாக நடந்து கொள்வது எதிர்ப்பாளர்களையே வலுப்படுத்தும் என்பதால் தந்தை செல்வா தேசிய அரசில் இருந்து வெளியேறாது தவிர்த்திருந்தமை புரிந்து கொள்ளக் கூடியதே.
பிரதமர் உத்தியோகபூர்வமாக திருகோணமலைக்கு வருகை தந்தபோது திருக்கோணேஸ்வரர் கோவில் சூழலைப் புனிதபூமியாகப் பிரகடனம் செய்யுமாறு கோரி ஒரு மனு பிரதமர் டட்லி சேனாநாயக்காவிடம் தரப்பட்டது. நடவடிக்கை எடுக்கும்படி அதன் மீது குறிப்பு எழுதி தம் அருகில் நின்றிருந்த அமைச்சர் திருச்செல்வத்திடம் மனுவினைக் கையளித்திருந்தார் பிரதமர்.
சம்பந்தப்பட்ட மனு மீது வெறுமனே ஓர் அறிக்கை தரும்படி அமைச்சர் திருச்செல்வம் கே.சி.நித்தியானந்தா தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை அறிவித்திருந்தார். திருகோணமலையிலுள்ள பௌத்த துறவி அதனைக் கடுமையாக ஆட்சேபித்த போதே, அமைச்சர் திருச்செல்வத்தைத் தானும் கலந்து கொள்ளாது அந்த கசற் அறிவித்தலை பிரதமர் சேனாநாயக்கா இரத்துச் செய்திருந்தார். கட்சியின் பணிப்பின் பேரில் அதன் நிமித்தம் அமைச்சர் திருச்செல்வம் தமது அமைச்சர் பதவியைத் துறக்க நேரிட்டது. ஆயினும் தமது பதவி துறப்பு வரையில் பிரதமரின் எழுத்துமூலமான பணிப்பின்படியே தாம் நடந்து கொண்டிருந்ததாகத் தெரிவிப்பதற்கு அமைச்சரினால் இயலவில்லை. காரணம் அச்சமயம் சம்பந்தப்பட்ட கோவை கே.நித்தியானந்தாவிடம் திருகோணமலையில் இருந்திருந்தமையால் கட்டுரையாளரிடம் மேற்படி தகவலைத் தெரிவித்திருந்தவர் கே.சி.நித்தியானந்தா அவர்கள் தாம்.
தமது பதவிக் காலம் முழுமை பெற டட்லி சேனாநாயக்கா தேர்தலை அறிவித்தார். 1970 ஆம் ஆண்டு நிகழ்ந்த பாராளுமன்றத் தேர்தலில் லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை பொதுவுடமைக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் தலைமையில் அமைத்திருந்த தேர்தல் கூட்டணியானது ஒரு தேசிய நிர்ணய சபையாக அமர்ந்து சோல்பரி ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் குடியரசு அரசியலமைப்பாக மாற்றுவதற்கு வாக்காளர்களிடம் ஓர் ஆணையைக் கோரியிருந்தது. அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஓர் அம்சமாக அதனையும் உள்ளடக்குவதாக தென் இலங்கையில் அந்த முக்கூட்டு முன்னணியே பெரும்பான்மையான தொகுதிகளை வென்றிருந்தது. ஆகவே தாம் கோரிய ஆணை தரப்பட்டுவிட்டதாகவே அவை எடுத்துக் கொண்டிருந்தன.
ஆயினும் தந்தை செல்வாவோ அதனை அவ்வாறாக எடுத்துக் கொண்டிருக்கவில்லை. காரணம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதுவும் ஓர் அம்சமாக உள்ளடக்கப்பட்டிருந்ததே தவிர ஓர் சர்வஜன வாக்கெடுப்பாக அக்கோரிக்கை மீதாக மட்டும் வாக்கெடுப்பு இடம்பெற்றிராமையால் மேலும் வடக்கிலும் கிழக்கிலும் முக்கூட்டணி எந்தவொரு தமிழ்த் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிராமையாலும், பாராளுமன்றக் கட்டிடத்தில் அக்கூட்டத்தை நடத்தினால் அது பாராளுமன்றத்தின் ஓர் கூட்டமாக இருந்துவிடும் என்பதைத் தவிர்ப்பதற்காக முக்கூட்டணியின் தலைவி ஸ்ரீமாவோ அம்மையார் பாராளுமன்றத்துக்கு வெளியே கொழும்பு றோயல் கல்லூரியின் நாடக அரங்கமான நவரங்ககல மண்டபத்தில் கூட்டப்படும் ஒரு கூட்டத்துக்கு வரும்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கடிதங்களை அனுப்பியிருந்தார்.
இவ்வாறாக பாராளுமன்றத்தை அதன் பக்கவாட்டால் கடந்து சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நவரங்ககல மண்டபத்தில் ஒன்று கூடிய அவர்களது அமர்வினையே ஒரு தேசிய நிர்ணய சபையாக அறிவித்து “பிரித்தானிய முடியுடன் சட்ட அரசியல் வரலாற்று ரீதியாக இத்தீவுக்கு இருந்து வரும் அனைத்து உறவுகளையும் கத்தரித்துக் கொள்வதாக அதனது ஒரு தலைப்பட்சமான தீர்மானத்தை’ ஏகமனதாக நிறைவேற்றியிருந்தது. சம்பந்தப்பட்ட ஒரு தலைப்பட்சமான தீர்மானத்தை கண்டுகொள்ளாது பிரித்தானிய அரசு அசமந்தமாக இருக்க இத்தீவின் இறைமை அத்தீர்மானத்தினால் சட்ட, அரசியல், வரலாற்று ரீதியாக மீள்விக்கப்பட்டு விட்டதாக எடுத்துக் கொண்டே சம்பந்தப்பட்ட தேசிய நிர்ணய சபையானது அதனது ஏனைய கூட்டங்களைத் தொடர்ந்து பாராளுமன்றக் கட்டிடத்தில் தானே கூடி 1972 ஆம்ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை சோசலிஸ குடியரசிற்கான யாப்பின் ஒவ்வொரு உறுப்புரையையும் வரைந்து நிறைவேற்றியிருந்தது.
இதில் கவனிக்கப்பட்டிருக்க வேண்டிய விடயம் இறைமையானது அது எந்த மூலத்தில் இருந்து பறிக்கப்பட்டிருந்ததோ அந்த மூலத்தையே மீள்விக்கப்படும் போதும் அது வந்தடையும் என்பதே.
கோட்டை இராசதானியின் இறைமை போர்த்துக்கேய மன்னனுக்கு அந்த இராசதானியின் மன்னன் தர்மபாலவினால் தானமாகவே தரப்பட்டிருந்தது. யாழ்ப்பாண இராசதானியின் இறைமையோ போரிலே சங்கிலி மன்னன் தோற்கடிக்கப்பட்டதால் போர்த்துக்கேயரைச் சென்றடைந்தது. ஒல்லாந்தர் போர்த்துக்கேயரைத் தோற்கடிக்க மேற்படி கோட்டை, யாழ்ப்பாண இராசதானிகளது இறைமையும் ஒல்லாந்தர் வழியாக பின்னர் பிரித்தானிய முடியைச் சென்றடைந்தது.
போர்த்துக்கேய ஒல்லாந்த நாடுகளால் கைப்பற்றப்பட்டிராத கண்டி இராசதானியின் பிரதானிகள் தமது மன்னன் இரண்டாவது விக்கிரமராஜசிங்கனைக் காட்டிக் கொடுத்தபோதே கண்டி இராசதானியின் இறைமை பிரித்தானிய முடியினைச் சென்றடைந்தது. ஆகவே, வெவ்வேறு வழிகளால் இடிக்கப்பட்டிருந்த கோட்டை, கோட்டை கண்டி, யாழ்ப்பாண இராச்சியங்களது இறைமையும் சம்பந்தப்பட்ட மேற்படி ஒருதலைப்பட்சமான தீர்மானத்தின் மூலமாக தனித்தனியாக சம்பந்தப்பட்ட மூன்று இராச்சியங்களையுமே சென்றடைந்திருந்தது.
தந்தை செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்திருந்த எந்தவொரு பிரேரணையும் விவாதித்து வாக்கெடுப்புக்கு விடப்படாதிருந்தமையால் தந்தை செல்வா தமது சகாக்கள் 12 பேருடனும் கூட்டாக தேசிய நிர்ணய சபையில் இருந்து வெளிநடப்புச் செய்திருந்தார். 1972 ஆம் வருட சோஷலிஸ யாப்பையோ அல்லது அதன் உறுப்புரைகளில் எதனையோ ஏற்றுக் கொள்ளாதவராக தந்தை செல்வா நிராகரித்திருந்தார்.
இவ்வாறாக தந்தை செல்வா தமது அரசியல் வாழ்க்கை வரலாற்றின் மூலம் ஈழத்தமிழர் இறைமையை மீள்வித்துத் தந்திருந்ததுடன் அதனைத் தக்க வைத்தும் காத்துத் தந்திருந்தார். மாகாண சபைகளை ராஜீவ்ஜயவர்த்ன ஒப்பந்தப்படி நடைமுறைப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையிலும் சபையில் தமிழ் பிரதிநிதிகள் வாக்களித்திருக்கவில்லை. பாராளுமன்றத்தில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தமைக்கு ஜே.ஆர்.ஜெயவர்தனாவுக்கே நன்றி.
தந்தை செல்வா மீள்வித்துத் தந்த ஈழத் தமிழர் இறைமையைக் காவு கொடுக்காது தொடர்ந்தும் காப்பது தமிழர் கூட்டமைப்பின் பொறுப்பாகும். தமிழ்த் தலைவர்கள் நால்வருக்கு எதிராகத் தேசத் துரோகக் குற்றம் சுமத்தி யூரர்கள் இல்லாத நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் அமரர் மு.திருச்செல்வம் நிகழ்த்திய சட்டவாதத்துக்கு சோஷலிஸ குடியரசு யாப்பு தமிழர்களைக் கட்டுப்படுத்தாது என்பதற்கு சட்டமா அதிபர் உரைத்த ஒரே பதில் அரசியல் புரட்சியால் அல்லது இராணுவப் புரட்சியால் பதவிக்கு வரும் ஆட்சியால் பிரகடனம் செய்யப்படும் யாப்பு அதனை அது நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கும் வரை செல்லுபடியாகும் என்பதே.
நீதியரசர்களோ தாம் பதவியேற்கும் போது உறுதியுரை எடுத்துக் கொண்ட யாப்பினைக் குறித்து தீர்ப்பளிப்பதற்கு உள்ள தமது இயலாமையை உரைத்து தமது தீர்ப்பில் தானே அமரர் திருச்செல்வத்தின் சட்டவாதத்தை வார்த்தைக்கு வார்த்தை முழுமையாகவே உள்ளடக்கியிருந்தனர். அதனையே அமரர் திருச்செல்வம் தமிழில் “ஈழத் தமிழர் இறைமை’ எனும் தலைப்பில் நூலாக விட்டுச் சென்றுள்ளார். மேற்படி நூலைப் படிக்கும் படி வாசகர்கள் வேண்டப்படுகின்றனர்.
4,440 total views, 2 views today