புதன், 22 மார்ச், 2017

அரக்கர் நிறம் நீலம் செம்பட்டை கலந்த குவளை மலர் நிறம் பழைய இராமாயணம் இராவணன் புகழ் படைபலம் போர்

athi tamil aathi1956@gmail.com

3/6/16
பெறுநர்: எனக்கு
அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 3
"அரக்கர் என்பவர் கருமைகூடிய சிவந்த நிறத்துத் தனி இனத்தார் (tribe);
நாவலந்தீவில் இருந்த பல இனத்தவர் போல இவரும் ஒருவர்" என்ற செய்தியோடு,
இன்னுஞ் சில பழம் பாடல்களை அடுத்துப் பார்க்கலாம்.
பழைய இராமாயணம் ஒன்று தமிழில் இருந்திருக்க வேண்டும் என்பது "ஆசிரிய
மாலை" என்னும் தொகுப்பு நூலின் வழி தெரிகிறது. ஆசிரியப் பாக்களினால் ஆன
நூல்களிலிருந்து சில பாடல்கள் தொகுக்கப்பட்ட செய்யுள்களைக் கொண்ட நூல்
ஆசிரியமாலையாகும். எத்தனையோ தமிழ் இலக்கியங்களை நம்முடைய கவனமின்மை
காரணமாயும், பல்வேறு மூடத் தனங்களாலும், இழந்தது போல், இந்த ஆசிரிய
மாலையும் நமக்கு முழுமையாகக் கிடைக்காதபடி ஆயிருக்கிறது. நல்ல வேளையாக,
ஆசிரிய மாலையில் இருந்து ஒரு சில பாட்டுக்களையாவது புறத்திரட்டு என்னும்
தொகைநூலில் சேர்த்திருக்கிறார்கள். இது தவிர, தொல்காப்பியத்திற்கான
நச்சினார்க்கினியர் உரையிலும் ஓரிரு பழைய இராமாயணப் பாட்டுக்கள்
கிடைக்கின்றன. புறத்திரட்டு என்பது திரு. வையாபுரிப் பிள்ளையின்
எடுவிப்பில் (editing), சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக
வெளியிடப்பட்டிருக்கிறது. (அண்மையில் கூட இதன் மறுஅச்சு வெளி
வந்திருக்கிறது.). இதே போல "மறைந்து போன தமிழ்நூல்கள்" என்ற தலைப்பில்
மயிலை. சீனி. வேங்கடசாமியாரால் வெளிவந்த பொத்தகத்திலும் இந்தப் பழைய
இராமாயணப் பாடல்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.
[இந்தப் பாடல்களை இணையத்தில் எங்களைப் போன்ற பலருக்கும் அறிமுகம் செய்து
விளக்கியவர் நண்பர் அட்லாண்டா பெரியண்ணன் சந்திர சேகரன் ஆவார். Remnants
of Tamil Works lost over the years - I, pazaya rAmAyaNam (in Tamil
Script, TSCII format) என்று தேடினால் அவர் வலையில் இட்டது கிடைக்கும்.
(அவரைப் போன்றவர்கள் இன்று தமிழ் இணையத்தில் இல்லாதது ஓர் இழப்பே!)
இந்தப் பாடல்கள் வால்மீகி இராமாயணத்தில் இல்லாத நிகழ்ச்சிகளைக்
குறிப்பிடுவது பற்றி பெர்க்லி பல்கலைத் தமிழ்-வடமொழிப் பேராசிரியர்
ஜார்ஜ் ஹார்ட்டு (George Hart) "The Poems of Ancient Tamil: their
milieu and their Sanskrit counterparts", (1975) என்னும் நூலில்
சொல்லுவதாக பெ.சந்திரசேகரன் சொல்லுவார்.]
பழைய இராமாயணம் என்று மேலே சொன்னாலும், கிடைத்தது என்னவோ, ஐந்து பாடல்கள்
தாம். இந்தப் பழைய இராமாயணம் என்பது கம்பராமாயணத்திற்கும் முந்தியதாய்
இருந்திருக்க வேண்டும்; ஆனால் எந்தக் காலம் என்று உறுதியாக சொல்ல
முடியவில்லை. அதன் நடையையும் (தேவாரம், நாலாயிரப் பனுவல்களுக்கும்
முந்திய காலங்களில் தான் அகவல் நடை பெரிதும் விரும்பப் பெற்றது.
பிற்காலங்களில் விருத்தப் பாக்கள் கூடிவிட்டன), சொல்லாட்சிகளையும்
பார்த்தால், பெரும்பாலும் சங்க காலத்தின் கடைசியில் உருவாகி இருக்க
வாய்ப்புண்டு என்றே ஊகிக்கிறோம். ஆசிரிய மாலையில் வரும் பழைய இராமாயணப்
பாக்கள் எல்லாமே போர்க்களம் பற்றியதாய் இருக்கின்றன. மற்ற பாட்டுக்கள்
எல்லாம் சுவடி அழிந்ததில் தொலைந்தன போலும்.
முதற்பாட்டு:
மாமுது தாதை ஏவலின் ஊர்துறந்து
கான்உறை வாழ்க்கையில் கலந்த இராமன்
மாஅ இரலை வேட்டம் போகித்
தலைமகள் பிரிந்த தனிமையன் தனாது
சுற்றமும் சேணிடை அதுவே முற்றியது
நஞ்சுகறைப் படுத்த புன்மிடற்(று) இறைவன்
உலகுபொதி உருவமொடு தொகைஇத் தலைநாள்
வெண்கோட்டுக் குன்றம் எடுத்த மீளி
வன்தோள் ஆண்தகை ஊரே அன்றே
சொல்முறை மறந்தனம் வாழி
வில்லும் உண்(டு)அவற்(கு) அந்நாள் ஆங்கே
மாதர்க் கெண்டை வரிப்புறத் தோற்றமும்
நீலக் குவளை நிறனும் பாழ்பட
இலங்கை அகழி மூன்றும் அரக்கியர்
கருங்கான் நெடுமழைக் கண்ணும் விளிம்(பு)அழிந்து
பெருநீர் உகுத்தன மாதோ வதுவக்
குரங்குதொழில் ஆண்ட இராமன்
அலங்குதட(று) ஒள்வாள் அகன்ற ஞான்றே.
இராமனின் தனிமை இலங்கையின் அழிவில் முடிந்ததை இந்தப் பா சொல்லுகிறது.
இனிக் கீழே ஒவ்வொரு பாவுக்கும், நானறிந்த வகையில் உரை சொல்லி என்
புரிதலையும் கொடுத்துள்ளேன். இந்த உரைகளுக்கும், புரிதலுக்கும் நானே
பொறுப்பு. ஒருவேளை கம்பனை இன்னும் ஆழ்ந்து படித்தால், சிற்சில இடங்களில்
மாறுபட இயலும். நண்பர்கள் முயன்று உரிய பொருளைப் பலருக்கும் உணர்த்தினால்
நல்லது.
--------------------------
அகவையில் மூத்த தந்தையின் ஏவலால், ஊரைத் துறந்து, காட்டுவாழ்க்கையில்
கலந்துபோன இராமன், பெரிய கலைமான் வேட்டையில் ஈடுபட்டுத் தன் தலைவியைப்
பிரிந்த தனிமையாகி, தன்னுடைய சுற்றத்தையும் விட்டுத் விலகுமாறு
முடிந்ததால், நஞ்சுகறைப் பட்ட கழுத்துடைய இறைவன், உலகாளும் அம்மையொடு
சேர்ந்திருந்த தலைநாளில், பனிமலை இமயத்தை அசைத்தெடுத்த பெரும் வன்தோள்
ஆண்தகையின் (அதாவது இராவணனின்) ஊர் முற்றுகையுற்றது.
கொலைக்குரங்குகளின் தொழிலை ஆண்ட இராமனின் ஒளி மின்னும் வாள் அதன் உறையை
விட்டு அகன்ற பொழுது, நீண்டமழையில் கருங்காடு எல்லையில்லாமல் நீர்
உகுப்பது போல, அரக்கிப் பெண்களின் சிவந்தவரிப் புறத் தோற்றமும், குவளை
மலர் போன்ற நிறமும் பாழ்பட, இலங்கையின் மூன்று அகழிகளும், பாழ்பட்டன.
சொல்முறை மறந்தோமோ! வாழி ! அவன் வில்லும் அந்த நாளில் அங்கு தான்
இருந்தது.
------------------------
மேலே சொன்ன விவரிப்புச் செய்தியில் முகன்மையானது, இராவணனின் கோட்டை
மூன்று பக்கம் அகழி கொண்டது என்று சொல்லுவதாகும். இதன் மூலம், கோட்டையின்
இன்னொரு பக்கம் கடலாக இருந்திருக்கக் கூடும் என்று உணருகிறோம். இந்த
விவரிப்பு கம்பனின் இராம காதைக்கு முற்றிலும் மாறுபட்டது. (இராமாயணத்தில்
பல்வேறு வேற்றங்கள் -versions - உண்டு என்பது தமிழிலும் இதன்வழி
உண்மையாகிறது. ஆசிரிய மாலையில் வரும் பழைய இராமாயணத்திற்கும்,
கம்பராமாயணத்திற்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன.) கம்பனில்
இராவணனின் கோட்டைக்கு நாலு பக்கம் அகழியும் வாயில்களும் சொல்லப் படும்.
மேலே "வன்தோள் ஆண்டகை" என்று இராவணன் சிறப்பாகவே சொல்லப் படுகிறான்.
அரக்கிப் பெண்களின் நிறம் குவளை மலர் போன்று சொல்லப் படுகிறது.
செங்கீற்றுப் பாய்ந்த கருநிறம் குவளை நிறமாகும். ("அவன் பெருமானர் மகன்
(son of a brahmin); அவனைப் போய் இவர்கள் ஆதரிக்கிறார்களே?" என்ற
இந்துத்துவக்காரர்களின் சதுரப் பேச்சு - smart talk - இங்கு எடுபட
முடியாது. அரக்கர் தனி இனம் என்று தான், அரக்கியரின் நிறம் குறிப்பது
வழியாக, இங்கு அறிகிறோம்.)
இனி இரண்டாம் பாட்டிற்கு வருவோம்.
இருசுடர் இயங்காப் பெருமூ(து) இலங்கை
நெடுந்தோள் இராமன் கடந்த ஞான்றை
எண்(கு) இடை மிடைந்த பைங்கண் சேனையிற்
பச்சை போர்த்த பலபுறத் தண்ணடை
எச்சார் மருங்கினும் எயிற்புறத்(து) இறுத்தலின்
கடல்சூழ் அரணம் போன்றது
உடல்சின வேந்தன் முற்றிய ஊரே.
-----------------------------------
கதிரும் நிலவும் உலவாத, பெரும் முது இலங்கையை பெருந்தோள் இராமன் வெற்றி
கொண்ட போது, கரடிகள் இடைநிறைந்த, சினத்தால் பசித்த சேனை, மதிற்புறத்து
எந்தப் பக்கம் நெருங்கினாலும், பச்சை போர்த்திய பல்வகை மருத நிலப்புறம்
இருந்ததால், உடல் சினந்த வேந்தன் முற்றுகையிட்ட ஊர் கடல் சூழ்ந்த அரணம்
போன்று ஆனது.
-----------------------------------
பாடலின் வழி நாம் கூர்ந்து கவனிக்கும் செய்திகளுக்கு வருவோம்.
முற்றுகையின் போது இராமனின் உடல் சினந்து காணப்படுகிறது. அவன் இயல்பான
ஒரு மாந்தனாகவே, கம்பனில் சொல்லுவது போல் கடவுள் அல்ல, இந்தச்
சொல்லாட்சியில் அறியப் படுகிறான். போர் வெற்றி கொண்ட நாள் அமையுவா நாளாக
(கதிரும் நிலவும் உலவாத அமாவாசை நாளாக) அறியப் பெறுகிறது.
(கம்பராமாயணத்தில் இந்தச் செய்தியை நான் இன்னும் ஒத்துப் பார்க்கவில்லை)
கோட்டையின் மூன்று பக்கத்திலும் சுற்றி இருந்தது மருத நிலப்புறம். கம்பன்
சொல்லுவது போல மலையும் காடும் சூழ்ந்த அணுக்கம் நான்கு திசையிலுமாய்
விவரிக்கப் படவில்லை. திரிகூடமலை இங்கு உணர்த்தப் படவில்லை. (கம்பன்
விவரிக்கும் யுத்த காண்டத்தில் மரா மரங்களும், கடம்ப மரங்களும் கணக்கற்று
குரக்கினத்தால் பிடுங்கப் படுகின்றன; கல்லும், பாறைகளும் பெயர்க்கப்
படுகின்றன.) கம்பன் விவரிக்கும் இடமும், இந்த இடமும் வேறுபடுகின்றன. மருத
நிலப்புறம் என்பது "பலபுறத் தண்ணடை" என்ற சொல்லாட்சியால் இங்கு உணர்த்தப்
படுகிறது. இந்தக் குறிப்பு கம்பனுக்கு முற்றிலும் வேறுபடுகிறது. கம்பன்
சொல்லும் இடம் வேறு எதோ விவரிப்பைக் குறிக்கிறது. கம்பன் கூறும் இடம்
இன்றைய இலங்கையாக இருக்க வாய்ப்பு இல்லை என்றே கம்பனை ஆழ்ந்து படிப்போர்
உணர முடியும். (இன்றைய இலங்கையின் புவியியல் தெரிந்தவர்கள் அதை ஆய்வு
செய்யவேண்டும். இலங்கையின் புவியியல் குறிப்புபற்றி நான் தெரிந்தவற்றைப்
பின்னால் சொல்லுகிறேன்.)
மூன்றாவது பாட்டு இராவணனின் வள்ளன்மையையும், மள்ளரின் வீரத்தினால்
நொச்சித் தடந்தகையை (strategy) அவன் வகுத்ததையும் பாடுகிறது.
மேலது வானத்து மூவா நகரும்,
கீழது நாகர் நாடும் புடையன
திசைகாப் பாளர் தேயக் குறும்பும்
கொள்ளை சாற்றிக் கவர்ந்துமுன் தந்த
பல்வேறு விழுநிதி எல்லாம் அவ்வழிக்
கண்நுதல் வானவன் காதலின் இருந்த
குன்(று)ஏந்து தடக்கை அனைத்தும் தொழிலுறத்
தோலாத் துப்பின் தாள்நிழல் வாழ்க்கை
வலம்படு மள்ளர்க்கு வீசி வகுத்த இலங்கையில்
வாடா நொச்சி வகுத்தனன்
மாலை வெண்குடை அரக்கர் கோவே.
---------------------------------
மேலே வானத்தில் அழியா நிற்கும் அமராவதி நகரிலும், கீழே நாகருடைய
நாட்டிலும் பெருகிக் கிடப்பவற்றையும், எட்டுத் திசை காப்பாளர்களின் தேசக்
கோட்டையையும், சூறையாடுவதாய்ச் சூளுரைத்து, அவற்றைக் கவர்ந்து, முன்பு
பெற்ற பல்வேறு விழுநிதியெல்லாம், அந்த வழியில், நெற்றிக்கண் முதல்வனின்
மேல் உள்ள பற்றிமையால் (பக்தியால்) கயிலைக் குன்றை ஏந்திய தடக்கைகள்
இப்பொழுது தொழிற்படும்படி, தோலா வலிமையோடு, தன் நிழலுக்குக் கீழே வாழ்ந்த
வல்லமை பொருந்திய மள்ளருக்கு அள்ளிக் கொடுத்து ஏற்படுத்திய இலங்கையின்
மருதப் புறத்து மதிலைக் காக்கும் படி நொச்சி ஏற்பாட்டை வகுத்தான்,
மாலையொடு வெண்கொற்றக் குடையிந் கீழ் வீற்றிருக்கும் அரக்கர் அரசன்.
---------------------------------
மேலே வானம், கீழே பாதலம் (இதற்குப் புவியின் அடியில் என்ற பொருளை மட்டும்
கொள்ள வேண்டியதில்லை. இவர் இருக்கும் புவிமட்டத்திற்குக் கீழே உள்ள இடம்
கூடப் பாதலம் தான். பாதலம் என்பது கிட்டத்தட்ட இன்றையப் பொருண்மையான
பள்ளத்தாக்கையே குறிக்கிறது. காட்டாக மலை மேட்டிலிருந்து பார்த்தால் கீழே
உள்ள இடத்தைப் பாதலம் என்று தான் பேச்சுவழக்கில் சொல்லுவார்கள்.),
சுற்றிலும் எட்டுத் திசையிலும் இருக்கும் நாடுகளில் இராவணனின் அதிகாரம்
நிலவியதாக இங்கு புலவர் சொல்லுகிறார்.
இந்தப் பத்துத் தலையிலும் (தலை என்பதற்குத் தமிழில் திசை என்றும் பொருள்
உண்டு.) இவன் ஆட்சி எடுபட வேண்டுமானால், இராவணன் பத்துத் தலையான் என்று
சொல்லுவது இயல்பே. பின்னால் பத்துத் தலையான் என்று உடல் அமைவோடு
குழம்பினரோ, என்னவோ?
இவன் பத்துத் தலையிலும் சூறையாடியது கூட வியப்பில்லை. "ஆ, அரக்கன்,
அதனால் சூறையாடினான்" என்று அச்சடித்துப் பார்க்கும் வேலையெல்லாம்
தேவையில்லை. சூறையாடும் செயலை நாவலந்தீவில் பல அரசரும், தலைவர்களும்
வெவ்வேறு கால நிலைகளில் செய்திருக்கிறார்கள். வேண்டுமானால் புறநானூற்றுப்
பாட்டுக்கள் சிலவற்றைப் படித்துப் பார்க்கலாம். ("ஆகா, தமிழனைச்
சொல்லிவிட்டான்" என்று தேவைக்கு மீறி உணர்ச்சி வயப் படாமல், இயல்பான
முறையில் மேலே உள்ள பாவின் வரிகளைப் புரிந்து கொள்ளுவது நல்லது. எந்தக்
காலத்திலும் தடியெடுத்தவன் எல்லாம் தண்டற்காரன் தான். இந்தத் தடியெடுப்பை
இராவணனும் செய்வான், இராமனும் கூடச் செய்வான்; செய்திருக்கிறான்.)
இராவணன் கயிலையை அசைத்ததும், அவன் சிவநெறியாளன் என்பதும் இந்தப் பாடலில்
பெரிதும் பேசப் படுகிறது. தமிழரின் இலக்கியத்தில் இராவணன் ஒரு சிவ
வழிபாட்டாளன் என்பது மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அந்த எண்ணம் நெடுநாட்கள் தமிழரிடையே இருந்திருக்கலாம். (கலித்தொகை 38
இலும், இராவணன் இமயமலைக்கு அடியில் சிவனின் அழுத்தலால் சிக்கிய கதை
சொல்லப் படும்.
இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல - கலி 38:1-5
---------------------------
அந்தணன் என்ற சொல்லைப் பார்த்துப் "பெருமானராய்ச் சிவனைச் சொல்லிவிட்டார்
இந்தப் புலவர்" என்று படையெடுத்துக் கொண்டு யாரும் வரவேண்டாம். அந்தன்>
அந்தனன்> அந்தணன் என்ற சொல் சங்க இலக்கியத்தின் பல இடங்களில்
பார்ப்பனரைக் குறிக்கவில்லை. அப்படிக் குறிப்பதாகப் பலரும் பரப்புரை
செய்கிறார்கள்; அது தவறு. பெருமானர், பார்ப்பனர், அந்தணர் என்ற சொற்களின்
பொருண்மைகள் பல்வேறு நிகழ்ப்புக்களுடன் (agenda) விதம் விதமாக நம்
முன்னால் திரிக்கப் படுகின்றன. பொதுவாக, அத்தன் = தலைவன், ஐயன், பெரியவன்
என்ற பொருளையே அந்தணன் என்ற சொல் குறிக்கிறது. தமிழறிஞர் இளங்குமரன்
"அந்தணன்" என்ற சொற்பிறப்பை அழகாக எடுத்துரைப்பார். என்னுடைய முந்தையக்
கட்டுரைகளில் அவரை எடுத்துரைத்து வழி மொழிந்திருக்கிறேன்.)
-------------------------------
கலித்தொகைப் பாடலை விடுத்து, ஆசிரிய மாலையில் வரும் மூன்றாவது பழைய
இராமாயணப் பாடலுக்கு மீண்டும், வருவோம்.
தன்னால் வாழும் படையினருக்கும், மக்களுக்கும் பல நிதியங்களை இராவணன்
அள்ளிக் கொடுத்திருக்கிறான்; அவர்களோடு பெரிதும் ஒன்றியிருக்கிறான்.
அவர்களால் தான் அவன் தலைநகரே கட்டப் பட்டிருக்கிறது. (அவனுக்காக
உயிர்கொடுக்கவும் தயங்காதவர்களாய் அவர்கள் இருந்திருக்க வேண்டும். அவன்
கொடுங்கோலனாய் இருந்திருந்தால் இது முடியாது.)
மள்ளர் என்பது மேலே வீரரைக் குறிக்கும் கடைந்தெடுத்த தமிழ்ச்சொல். அது
மட்டுமல்லாது, கோட்டை மதிலைக் காக்க இராவணன் நொச்சித் தடந்தகையை
(strategy) வகுத்தான் என்று சொல்லும் போது தொல்காப்பிய வழித் தமிழ்ப்
போர்முறை இங்கு குறிக்கப் படுகிறது. கம்பரும் கூட யுத்த காண்டத்தின்
அணிவகுப்புப் படலத்தில், இராவணன் முன்னே நிகும்பன் தம் பகைவரை இகழ்ந்து
கூறுவதாக ஒரு பாடலை வைப்பார்:
எழுபது வெள்ளத் துற்ற குரக்கினம் எயிலை முற்றும்
தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்
அழவநீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே
உழிஞையைத் துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர்
என்று வரும். "குரக்கினம் எழுபது வெள்ளம் சேனை வைத்து இருந்தால் என்ன?
உன்னிடம் ஆயிரம் வெள்ளம் சேனை இருக்கிறது. அவருடைய உழிஞைத் தடந்தகையை
(strategy) முறியடிக்க நொச்சித் தடந்தகையை (strategy) தன் உச்சியில் உன்
ஊர் கொண்டுள்ளது" என்று சொல்லும் இந்தக் கம்பர் பாடல் ஆசிரிய மாலையின்
தாக்கம் கொண்டதாகவே இருக்கிறது. இந்தப் போர் தமிழ்முறைப்படியே தான் இரு
புலவராலும் புரிந்து கொள்ளப் படுகிறது. [மிண்டும் சொல்லுகிறேன்.
"போர்முறை" தமிழ்முறைப் படியே சொல்லப் படுகிறது. "இராவணன் தமிழனா, தமிழன்
இல்லையா?" என்று தொங்கியவண்ணம் தாவ நினைக்கின்றவர்கள், மேலே
கொடுத்திருக்கும் பட்டகைகளை - facts - குழப்பிக் கொள்ளக் கூடாது.]
அடுத்து நான்காம் பாட்டிற்குப் போவோம்.
இருபால் சேனையும் நனிமருண்டு நோக்க
முடுகியல் பெருவிசை உரவுக்கடும் கொட்பின்
எண்திசை மருங்கினும் எண்ணிறைந்து தோன்றினும்
ஒருதனி அனுமன் கைஅகன்று பரப்பிய
வன்மரம் துணிபட வேறுபல நோன்படை
வழங்கி அகம்பன்தோள் படையாக ஓச்சி
ஆங்க,
அனுமன் அங்கையின் அழுத்தலில் தனாது
வன்தலை உடல்புக்குக் குளிப்ப முகம்கரிந்(து)
உயிர்போகு செந்நெறி பெறாமையின்
பொருகளத்து நின்றன நெடும்சேண் பொழுதே.
-----------------------------
பெரும்விசையோடு, முடுகி எறிந்த வலிந்த கடுஞ் சுழற்சியில், எட்டுத் திசை
மருங்கிலும் எண்ணமுடியாத படி தோன்றினாலும், தனி ஒருவனான அனுமன் தன் கையை
அகற்றி வீசிய வலியமரம் உடைந்து போக, பல்வேறு நோன்புகளால் பெற்ற படைகளை
வீசியும் அழியாததால், பெருமான் (பிரமன்) கொடுத்த வேற்படையை வீசிப்
போதியதாக்க, அனுமன் உள்ளங்கையின் அழுத்தலால் தன்னுடைய வலிந்த தலையோடு
உடல் புகுந்து தைக்க, முகம் கரிந்து, உயிர் போகும் விதி பெறாமையால்,
இருபக்கத்துச் சேனையும் மிகுந்து மருண்டு நோக்கிய படி, நெடிதுயர்ந்த
பொழுதுக்கும், போர்க்களத்து நின்றன.
-----------------------------
இங்கே இராவணன் முன்னால் பிரமனிடம் பெற்ற படையை வீசி இலக்குவனை அயரச்
செய்தது கூறப் படுகிறது. (பெருமான் என்ற வடபுலத்துத் தெய்வக் குறிப்பு
இங்கே பதிவு செய்யப் படுகிறது.) இந்தப் படையை வீசும் போது, குறுக்கே
அனுமன் தடுத்திருக்கிறான் என்றும் தெரிகிறது. (அந்தச் செய்தி கம்பனில்
கிடையாது.) ஆனால் யார் மேல் எறிந்தான் என்று இந்தப் பாடலை மட்டும்
வைத்துச் சொல்ல முடியவில்லை. நல்ல வேளையாக, கம்பனின் இராம காதை உதவிக்கு
வருகிறது. இராவணன் எறிந்த அகம்பன் (=நான்முகன்) வேல் இலக்குவனை மயங்க
வைத்ததாக இரு பாட்டுக்கள் கம்பனில் (யுத்த காண்டம், முதற் போர்புரி
படலத்தில்) இருக்கின்றன.
வில்லினால் இவன் வெலப்படான் எனச் சினம் வீங்க
கொல்லும் நாள் இன்று இது எனச் சிந்தையில் கொண்டான்
பல்லினால் இதழ் அதுக்கினன் பருவலிக் கரத்தால்
எல்லின் நான்முகன் கொடுத்த ஓர் வேல் எடுத்து எறிந்தான்
எறிந்த கால வேல் எய்த அம்பு யாவையும் எரித்துப்
பொறிந்து போய் உக, தீ உக, விசையினின் பொங்கி
செறிந்த தாரவன் மார்பிடை சென்றது சிந்தை
அறிந்த மைந்தனும் அமர்நெடுங் களத்திடை அயர்ந்தான்.
இந்த இருபாட்டுக்களின் உதவியோடு மேலே ஆசிரிய மாலையின் பாட்டைப்
பார்த்தால் பொருள் சட்டென்று விளங்குகிறது. "வன்தலை உடல்புக்குக் குளிப்ப
முகம் கரிந்(து)" என்ற இலக்குவனின் நிலை கம்பனில் சொல்லப் படவில்லை.
அங்கு இலக்குவன் ஆதிசேடனின் அவதாரம் என்பதால் இலக்குவன் பட்ட வலியும்,
முகம் கரிதலும் சொல்லப் படாமல் "அவன் அயர்ந்தான்" என்று மேலோட்டமாய்ப்
பூசியது போல் சொல்லப் படும். இரண்டு சேனையும் இந்தச் சண்டையைக் கவனித்து
மருண்டு போய் நிற்கின்றன.
இனி ஐந்தாம் பாட்டிற்கு வருவோம்.
கடலும் மலையும் நேர்படக் கிடந்த
மண்ண வளாக நுண்வெயில் தகளினும்
நொய்தால் அம்ம தானே இஃ(து)எவன்
குறித்தன நெடியான் கொல்லோ மொய்தவ
வாங்குசிலை இராமன் தம்பி ஆங்(கு)அவன்
அடிபொறை ஆற்றின் அல்லது
முடிபொறை ஆற்றலன் படிபொறை குறித்தே.
இடுகையை வேகமாய் முடிக்க வேண்டிய நிலையில் இந்தப் பாடலின் உரையை கம்பனோடு
ஒப்பிட்டு "எந்த நிகழ்வை இது குறிக்கிறது?" என்று ஆய்ந்து எழுத முடியாது
இருப்பதால், பாட்டை மட்டுமே தருகிறேன். இலக்குவன் பெயரை நேரே குறித்த
தமிழ்ப் பழம்பாடல் இது ஒன்றாகத் தான் இருக்கும்.
"அரக்கர் என்பவர் வெறுக்கப் படத்தக்கவர்" என்ற சுமையேற்றிய பார்வை
இந்தியத் துணைக் கண்டத்தில் பெரிதும் பரப்பப் பட்டிருக்கிறது. மேலே உள்ள
5 பாக்களைப் படித்தால், அந்தப் பார்வை ஒருபக்கப் பார்வை என்பதைக்
குறிப்பால் அறியமுடியும். ஒருபக்கம் குரக்கினமும், இராமனும், அவனைச்
சார்ந்தவர்களும்; இன்னொரு பக்கம் அரக்கர் என்ற அளவிலேயே நொதுமலாய்ச்
(neutral) செய்திகள் சொல்லப் படுகின்றன.
இனி அடுத்த இடுகையில் அரக்கர் பற்றிக் கொஞ்சமும், சேது பற்றி நிறையவும்
பேசுவோம். (அகம் 70 பற்றிய செய்தி அங்குதான் வருகிறது)
அன்புடன்,
இராம.கி.
Add comment
Create a Link
9 c

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக