புதன், 22 மார்ச், 2017

இராமாயணம் சங்ககாலம் கு முந்தையது கயவாகு இடைச்செருகல் கி.மு.200 கள்

aathi tamil aathi1956@gmail.com

2/6/16
பெறுநர்: எனக்கு
அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 1
அண்மையில் "இராவணனை அரக்கன் என்று சொல்லும் புறநானூறு" என்ற இடுகையில்
திரு.குமரன் சங்க இலக்கியத்தில் வரும் இராம காதைச் செய்தியைச் (புறம்
378) சொல்லியிருந்தார். அரக்கன் என்ற சொல்லாட்சி அந்தப் பதிவிலும், அதன்
பின்னூடங்களிலும் பெரிதும் பேசப்பட்டது. "அப்படி ஒரு கவனிப்பு அந்தச்
சொல்லுக்கு ஏன் வந்தது?" என்று முதலில் எனக்குப் புரிபடவில்லை. "வௌவியவன்
தமிழன் அல்லன், அரக்கனே! தமிழரையும், அரக்கரையும், (அதே போல தமிழரையும்,
குரங்குகளையும்) ஒன்றாய் எண்ணிக் குழம்பலாகாது" என்ற கருத்தும் அந்த
இடுகையில் உணர்த்தப் பெற்றது. இந்த உணர்விப்பினுள், "அரக்கருக்கும்
தமிழருக்கும் தொடர்பு இருப்பதாய்ச் சான்றுகள் உண்டா?" என்ற கேள்வியும்
கூடத் தொக்கி நிற்கிறது. (பொதுவாய் இராட்சசன், இராக்கதன் என்ற
சுமையேற்றிக் கிடக்கும் வட சொற்திரிவுகளைக் காட்டிலும் அரக்கன் என்ற எளிய
தமிழ்ச் சொல்லின் பொருண்மையை நேரடியாய்ப் பார்ப்பது நம்மைச் சரியான
புரிதற் பாதையில் கொண்டு செல்லும். எங்கும் வடமொழிக் கண்ணாடியை வைத்துக்
கொண்டே, வழி தேடுவது நம்மில் பலருக்கும் வாடிக்கையாகி விட்டது. இதில்
திராவிடச் சிந்தனையாரும் விதிவிலக்கல்ல போலும். வேதநெறி, மனுநீதிகளின்
இடைவிடாத் தாக்கத்தால், ஒருசார்க் கோடலாய்த் தமிழர், தம் சிந்தனை இழப்பது
வருத்தமாய் இருக்கிறது.)
"அரக்கர் என்பவர் யார்?" என்ற கேள்விக்கு நாம் போகுமுன்னால், குறிப்பிட்ட
புறம் 378 பாடலின் காலத்தைப் புரிந்து கொள்ளுவது நலம் பயக்கும். இந்தப்
பாடல் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை முன்னிறுத்தி, ஊன்பொதி
பசுங்குடையார் பாடியது (பாடாண் திணை, இயன்மொழித் துறை).
[ஊன்பொதி பசுங்குடையார் என்பது புலவரின் இயற்பெயரல்ல; காரணப் பெயர்.
தென்பாண்டி நாட்டில் இன்றும் கூடப் பெரும் விழாக்களில் (காட்டாக
கோயில்களில் ஆடி மாதம் நடைபெறும் படையல்களில்) பெரும் பானைகளையோ, மாழைக்
(metallic) கலசங்களையோ, தேடிக் கொண்டு இருக்காமல், பச்சைப் பனையோலையில்
பின்னிய கூடைகளையே, விழாச்சோறு முகந்து கொள்ளவும், ஊன் போன்றவற்றைப்
பொதிந்து கொள்ளவும், பயனுறுத்துவார்கள். பசுங்குடை என்ற சொல்லாட்சி
பசுங்கூடையை உணர்த்தும் திரிவாகும். பூக்குடல் என்பது பூக்கூடையை
உணர்த்துமல்லவா? அதைப் போல குடை என்ற சொல் இங்கு கூடையை உணர்த்தியது.
ஊன்பொதி பசுங்குடை என்ற அழகான சொல்லாட்சியைத் தன்னுடைய வேறொரு பாவில்
இந்தப் புலவர் பயன்படுத்தியிருக்க வேண்டும்; ஆனால் அந்தச் சொல்லாட்சி
உடைய பாடல் நமக்குக் கிடைக்கவில்லை. தொகுப்பாளரின் உரையை வைத்தே புலவரின்
பெயர்க்காரணத்தை நாம் அறிந்து கொள்ளுகிறோம்.] இதே அரசனை இதே புலவர் புறம்
10 (பாடாண் திணை, இயன்மொழி, பூவைநிலைத் துறை), புறம் 203 (பாடாண் திணை,
பரிசில் துறை), புறம் 370 (வாகைத் திணை, மறக்கள வழித் துறை) ஆகிய
பாடல்களிலும் பாடியிருக்கிறார். இது தவிர இடையன் சேந்தன் கொற்றனார் பாடிய
அகம் 375 இலும் இளம்பெருஞ்சென்னி என்ற குறிப்பு இருக்கிறது.
இளஞ் சேட்சென்னியும், இளம் பெருஞ்சென்னியும் ஒரே ஆளாகத்தான் இருந்திருக்க
வேண்டும் என்பது தமிழிய மொழிகளின் சொல்வளத்தைக் கவனித்துப் பார்த்தால்
புரிபடும். சேடு, சேட்டு என்பவை உயர்வு, பெரியநிலை, தொலைவு போன்றவற்றைப்
பழந்தமிழிற் குறிக்கும். சேண்மை என்ற சொல்லும் கூட இன்றைக்குத் தொலைவைக்
குறிப்பது தான். மலையாளத்தில் பெரியவனைக் குறிக்கச் சேட்டன் என்றும்,
பெரியவளை சேட்டத்தி என்றும் சொல்லுகிறார்கள் அல்லவா? சேள் என்பது தான்
இதன் வேர். மூவேந்தர்களில் பெருஞ்சேரல், நெடுஞ்சேரலாதன், பெருவழுதி,
நெடுஞ்செழியன், பெருங்கிள்ளி, பெருவளத்தான், மாவளத்தான், பெருஞ்சோழன்
என்று சொல்லப்படும் பெயர்கள் பெருஞ்சென்னி - சேட்சென்னி என்ற பெயரையும்
இயலுமை ஆக்குகின்றன. இளஞ்சேட்சென்னி என்பவன் இன்னொரு சேட்சென்னியின்
இளவலாய் இருந்திருக்கலாம்.
இந்தச் சோழன் இளஞ்சேட்சென்னியை, செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி
என்றும், பாமுளூர் எறிந்த இளஞ்சேட்சென்னி என்றும், புறநானூற்றுத்
தொகுப்பாளர் குறிப்பிடுவார். பாழி என்ற பெயரில், தமிழ்கூறும் நல்லுலகில்,
சங்க காலத்தில், பல ஊர்கள் இருந்திருக்கின்றன. பொதுவாய்ப் பாழி என்பது
இயற்கைக் குகையைக் குறிக்கும். (ஆசீவகத் துறவிகளின் வாழ்விடங்கள் பாழி
என்றே நம் இலக்கியங்களில் குறிக்கப் பட்டிருக்கின்றன. பள்ளி என்பது
பொதுவாய்ச் செயினர், போதியர் ஆகியோரின் இருப்பிடங்களைக் குறிக்கும்.)
செருப்பாழி என்பதில் வரும் செரு என்பது திரு என்ற பொருள் கொண்ட ஒரு
முன்னொட்டு. (சேரே திரட்சி என்பது தொல்காப்பிய உரியியல்; செருப்பாழி
என்பது பெரிய, திரண்ட குகை என்ற பொருள் கொள்ளும்.) செரு என்ற முன்னொட்டு
திரு என்ற பொருளைக் குறித்ததற்குச் சான்றாக, திருத்தணிகையையைச் செருத்தணி
என்று சொல்லும் வழக்கம் அகரமுதலிகளில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.
வடுகரைப் பெருஞ்சென்னி வெற்றி கொண்ட செய்தி புறம் 378 இலும், அகம் 375
இலும் வருவதால், வேங்கடத்தை ஒட்டி இந்தச் செருப்பாழி இருந்திருக்கலாம்.
(சரியான இடத்தைக் குறிக்க முடியவில்லை.)
சென்னி என்பது ஓர் இனக்குழுப் பெயர். (சென்னியர் என்ற சொல்லும் செம்பியர்
என்ற சொல்லும் ஒரே வேரில் உருவானவை தாம்.) சோழர்கள் தொடக்க காலத்தில்
பல்வேறு பகுதிகளில் (அழுந்தூர், ஆமூர், கழார், குடந்தை, பருவூர்,
பெருந்துறை, போர், வல்லம் ஆகிய ஊர்கள்) தனித் தனி இனக்குழுக்களாய் கி.மு.
500/400க்கு முன்னால் இருந்திருக்கிறார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்
ஒவ்வோர் இனக்குழுவும் இன்னொன்றை வென்றி கொண்டு, இணைந்து, பின்னர் பெரும்
இனக்குழுக்களாகி, சென்னி, கிள்ளி என்று இரு பெரிய இனக்குழுக்கள் மட்டுமே
கடைசியில் அமைந்து, முடிவில் பெருஞ்சோழராய் உருவாகி இருக்கிறார்கள்.
கி.மு. 500/400க்கு அண்மையில் அழுந்தூரில் தொடங்கிய சென்னி வகைச் சோழர்
கொஞ்சம் கொஞ்சமாய் பெருஞ்சோழராகி, நெய்தலங்கானலுக்கு வந்து
(நெய்தலங்கானல் என்பது காவிரிப்பூம் பட்டினத்திற்கு மிக அருகில் உள்ள
ஊர்), முடிவில் காவிரிப் பூம்பட்டினத்தைத் தலைநகராய்க் கொண்டு ஆண்டதும்,
கிள்ளி வகைச் சோழர்கள் இதே போலச் வேறு சிறிய ஊர்களில் தொடங்கி, முடிவில்
உறையூரைத் தலைநகராக்கி ஆண்டதுமாய் இருக்கும் தொடக்க காலச் சோழர் வரலாற்றை
சங்க இலக்கியங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம். அதே பொழுது சேரர், சோழர்,
பாண்டியர் என்ற பேரினக்குழுவின் தலைவர்களாய் வேந்தர்கள் கி.மு.7 ஆம்
நூற்றாண்டு அளவில் இருந்ததைத் தொல்காப்பியம் மிகத் தெளிவாகப் பதிவு
செய்திருக்கிறது.ஆகச் சங்க இலக்கியம், தொல்காப்பியம் என்ற இரண்டு
தரவுகளையும் பார்க்கும் போது, கி.மு.700ல் இருந்து கி.மு.500 வரை ஒரு 200
ஆண்டு காலத் வரலாறு இன்னமும் தெளிவு படாமல் இருக்கிறது.
சேரர், சோழர், பாண்டியர் என்ற பேரினக் குழுக்களின் தோற்றம், வரலாறு,
மரபுகள், தொன்மங்கள் பற்றி இந்த இடுகையில் நான் விவரிக்கவில்லை. அதற்கு
இன்னொரு இடுகைதான் செய்ய வேண்டும்.
சங்க கால வரலாறு என்பது சரியாக எழுதப் படாமல், கால முரண்பாடுகளோடேயே தான்
இன்றும் இருக்கிறது. குறிப்பாக செங்குட்டுவன், கயவாகு என்ற தவறான சமகாலப்
பொருத்தலால், கி.பி.171-193 என்று செக்கில் சிக்கிக் கொண்டு, முன்னேற
முடியாமல், தமிழக வரலாறு சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அண்மைக்
காலத்தில் கிடைக்கும் தமிழிக் கல்வெட்டுக்களையும், அகழாய்வுச்
செய்திகளையும், சங்க கால அரசர்களின் நாணயங்களையும், சங்க இலக்கியங்களோடு
பொருத்திப் பார்க்கும் போது, "செங்குட்டுவன் - முதலாம் கயவாகு ஆகியோர் சம
காலத்தவர்" என்ற முன்னீட்டை முற்றிலும் ஒதுக்கினால் தான் தமிழர் வரலாறு
சரியாகும் போல் தெரிகிறது. சிலப்பதிகாரத்தின் பதிகத்திற்குப் பின்னாலும்,
புகார்க் காண்டத்திற்கு முன்னாலும் வரும் உரைபெறு கட்டுரைக்கும்,
சிலம்பின் கடைசியில் வரும் வரந்தரு காதைக்கும் இடையே தெரியும் பெருத்த
உள் முரண்பாடுகள் நம்மைப் பெரிதும் ஓர்ந்து பார்க்க வைக்கின்றன.
பெரும்பாலும் வரந்தரு காதை என்பது காப்பியத்தோடு ஒன்றுபடாமல், பின்னோர்
செய்து ஒட்டியதோ என்று எண்ண வைக்கிறது. அதே போல உரைபெறு கட்டுரையும்
ஆசிரியர் இளங்கோவடிகளால் சேர்க்கப் படாமல், பின்னவர்களால் இணைக்கப்
பட்டிருக்கக் கூடும். [சிலம்பு பற்றி இங்கு பேசினால் அது வேறு
புலனத்திற்குக் கொண்டு போகும் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்.]
இந்த முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் எழுந்த அண்மைக்கால இரு வரலாற்று
முயற்சிகள் ஆவணப்படுத்தப் பட்டு இருக்கின்றன. [அவற்றில் முதல் ஆவணம்
பேரா. பே.க. வேலாயுதம் (பெரியார் ஈவெ.ரா. கல்லூரி, திருச்சி) ப.சீனிவாசன்
(திருச்சி நாணயவியல் கழகம்) ஆகியோர் இணைந்து திருச்சி நாணயவியல்
கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் 23/2/1997 வெளியிடப்பட்ட "சங்க
கால மன்னர் வரிசை" என்னும் சிறு கையேடு ஆகும். இரண்டாவது, "சங்க கால
மன்னர்களின் காலநிலை - தொகுதி 1" மற்றும் "சங்க கால மன்னர்களின் காலநிலை
- தொகுதி 2" என்ற இரு பொத்தகங்களாய், டாக்டர் பத்மஜா ரமேஷ், வி.பி.
புருஷோத்தமன் ஆகியோரால் எழுதப்பட்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
சிஐ.டி. வளாகம், தரமணி, சென்னை மூலம் 2000 த்தாம் ஆண்டில் வெளியிடப்
பட்டது.]
மேலே சொன்ன ஆய்வாளர்களில், திருவளர். பத்மஜா ரமேஷ், திரு. புருஷோத்தமன்
ஆகியோர் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியும், உருவப்பல் தேர்
இளஞ்சேட்சென்னியும் ஒருவரே என்ற கருத்துக் கொள்கிறார்கள். உருவப்பல் தேர்
இளஞ்சேட்சென்னியை முதற் கரிகாலனின் மகனாகவும், இரண்டாம் கரிகாலனின்
தந்தையாகவும் பொருநராற்றுப் படை ஆதாரத்தின் மூலம் இவர்கள் அடையாளப்
படுத்துவார்கள். அவர்கள் கூற்றின் படி, உருவப்பல் தேர் இளஞ்சேட்
சென்னியின் காலத்தில், கிள்ளி வகைச் சோழர்களின் ஆட்சி ஓர்
அண்ணுமுடிவிற்குக் (near end) கொண்டு வரப்படுகிறது. இளஞ்சேட்சென்னியின்
பேரன், இரண்டாம் கரிகாலனின் மகன் ஆன நலங்கிள்ளி - இளஞ்சேட்சென்னி என்ற
இரட்டைப் பெயரெடுத்து, கிள்ளிவகை அரசரின் கடைசி அரசனான நெடுங்கிள்ளியைத்
தொலைத்தெறிவதோடு, கிள்ளிகளின் குல ஆட்சி உறையூரில் முற்றிலும் முடிந்து
போகிறது. தலைநகரும் அதற்கு அப்புறம் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து
உறையூருக்கே மாறுகிறது.
முன்னே சொன்ன இரண்டு ஆவணங்களையும் படித்தால் ஒன்றிற்கொன்று முரணாகச் சில
காலநிலைகளும், உடன்பாட்டில் சில காலநிலைகளும் இருப்பதை அறிந்து கொள்ள
முடியும். இந்த ஆவணங்களை ஆழ்ந்து படித்து அதில் இருக்கின்ற ஒன்றாமைகளை
(inconsistencies) உணர்ந்ததால், மூல இலக்கியங்களையும், கல்வெட்டு
விவரங்களையும், மீண்டும் படித்து, சங்க கால நிலையை நான் தற்போது ஆய்ந்து
கொண்டு இருக்கிறேன். சங்க இலக்கியப் பாடல் எழுதியோரையும்,
பாடப்பட்டவரையும் பொருத்தி இந்தக் காலத்தியப் பிணைய அலசல் (network
analysis) முறை மூலம் என் ஆய்வு நடத்தப் படுகிறது. ஆய்வு முடியச் சற்று
காலம் ஆகலாம்.
இப்போதைக்கு நான் முந்தைய ஆய்வாளர்களின் முடிவுகளையே இங்கு கொடுக்கிறேன்.
ஊன்பொதி பசுங்குடையாரின் பாடற்காலத்தை, மேலே சொன்ன முதல் ஆவணத்தின் மூலம்
கிட்டத் தட்ட கி.மு.325 - 250 என்றும், இரண்டாம் ஆவணத்தின் மூலம்
கி.மு.250-225 என்றும் முடிவு செய்யலாம். ஆக இராமகாதை பற்றிய செய்திகள்
கி.மு.250 அளவிலேயே தமிழில் பதிவு செய்யப் பட்டதாகச் சொல்ல வேண்டும்.
சங்க இலக்கியத்து இராம காதைச் செய்திகளுக்கு புறம் 378 தவிர, அகம் 70,
கலி - 38 என இன்னும் இரு சான்றுகளும் உண்டு. சங்கம் மருவிய காலத்தில்
எழுந்த பழமொழி நானூற்றிலும் ஒரு குறிப்பு உள்ளது. "இராமகாதை வரலாற்றுச்
செய்தியா, அன்றி தொன்மச் செய்தியா?" என்பது அவ்வளவு முகன்மையானது அல்ல.
இங்கே காதுற்ற செய்தி காதையாயிற்று. அவ்வளவு தான். அதைத்
தமிழிலக்கியத்தில் பயன்படுத்தத் தடை இருக்க முடியுமோ? அதே பொழுது,
அப்படிப் பயனுறுத்தியதாலே "அது வரலாறா, தொன்மமா?" என்ற கேள்விக்கு
மறுமொழித்ததாய்க் கொள்ளவும் கூடாது.
இனிப் பாடலுக்குள் போவோம்.
அன்புடன்,
இராம.கி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக