புதன், 20 ஜூன், 2018

இந்தியெதிர்ப்பு தீக்குளிப்பு சத்தியமங்கலம் முத்து

aathi1956 aathi1956@gmail.com

பிப். 18
பெறுநர்: எனக்கு
தீயிட்டு தன்னுயிர் ஈந்த "மொழிப்போர் ஈகி" சத்தியமங்கலம் முத்து நினைவு நாள்
18.2.1965

"செந்தமிழுக்கு ஒரு தீங்கு எனில், இந்தத் தேகம் இருந்தொரு இலாபம் உண்டோ?"
- என்பார் புரட்சிக்கவிஞர் பாரதி தாசன். 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் இப்பாடல் வரிகளுக்கு உண்மையிலேயே உயிரூட்டும் வகையில் பலர் தங்கள் உடலை செந்தணலில் எரித்துக் கொண்டனர். அவர்களில் ஒருவர்தான் சத்திய மங்கலம் முத்து. தமிழ்த்தாய் வாழ்வதற்காக தன்னுயிரை தீக்கு தின்னக் கொடுத்து மொழிப்போர் ஈகியர் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றான்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், கொமாரபாளையம் சிற்றூரில் ஏழ்மை நிலையில் இருந்த பெருமாள்-பார்வதி இணையருக்கு இரண்டாவது மகனாக 31.7.1942இல் முத்து பிறந்தான். கொமாரபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த முத்து, பகல் பொழுதுகளில் கோவிந்தன் அவர்களுக்குச் சொந்தமான துணிக் கடையில் வேலை செய்தான். மாலை வேளைகளில் வட்டாட்சியர் அலுவலகம் எதிர்ப்புறம் இருந்த சரக்குந்து பட்டறையில் (லாரி ஒர்க் ஷாப்) பணியாற்றி வந்தான். பெரும்பாலான இரவுப் பொழுதுகளில் அவன் பட்டறையிலேயே தங்கி விடுவது வழக்கம்.

முத்து எந்த அரசியல் இயக்கங்களிலும் உறுப்பினராக இருந்ததில்லை. ஆனால் அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன், போன்றோரின் புத்தகங்களைப் படித்தும், அவர்களின் சொற்பொழிவுகளை கேட்டும் தமிழ்மொழி மீது தாளாத பற்று கொண்டான். தமிழ் மொழிக்காக நடைபெறும் பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்றவற்றில் கலந்து கொண்டு "தமிழ்வாழ்க! இந்தி ஒழிக!" என்று முழக்கமிடுவான்.

முத்து தீக்குளிப்பதற்கு மூன்று நாட்கள் முன்பாக தனது அண்ணனிடம், தமிழுக்காக தீக்குளித்து மடிந்த அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், துப்பாக்கிச் சூட்டில் மடிந்த அண்ணாமலை பல்கலைக் கழக மாணவன் இராசேந்திரன் ஆகியோரின் ஈகத்தை வியந்து கூறியதோடு, "தமிழ் மொழிக்காக போராடுபவர்கள் சிறையில் அடைக்கப் படுகிறார்களே! செத்து மடிகின்றனரே! நாமெல்லாம் இருந்து என்ன பண்ணப் போறோம்?" என்று வருத்தத்தோடு கூறியிருக்கிறான்.

அன்று இரவு தனது பாட்டி வீட்டில் உணவு சாப்பிட்டு விட்டு, அடுத்த நாள் தான் வரமாட்டேன் என்றும், அண்ணன் குழந்தைகளை  நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறி விட்டுச் சென்றுள்ளான்.

மறுநாள் பகல் பொழுதில் வழக்கம் போல் துணிக்கடையில் பணியாற்றி விட்டு மாலை தான் பணிபுரியும் பட்டறைக்குச் சென்றான். மாலை ஏறத்தாழ 7.30 மணியளவில் பட்டறைக்கு வெளியே வந்து "இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! தமிழினம் வாழ்க!" என்று முழக்கமிட்டவாறு கன்னெய் (பெட்ரோல்) ஊற்றி தனக்குத் தானே நெருப்பூட்டிக் கொண்டான். அப்போது முத்துவின் வயது 23 தான்.

உயிருக்கு போராடி வந்த முத்துவை அங்குள்ளவர்கள் காப்பாற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உடல் முழுவதும் தீக்காயமுற்று குற்றுயிரும் குலையிருமாய் கிடந்த முத்துவிடம் வட்டாட்சியர், காவல் துறை அதிகாரிகள் மணிக்கொருமுறை துருவித் துருவி விசாரித்தனர். முத்துவோ ஒவ்வொரு முறையும், "தமிழ் மாணவர்கள் தாக்கப் படாதிருக்க வேண்டும், தமிழ் வாழ வேண்டும், தமிழினம் வாழ வேண்டும் என்பதற்காகவே நான் தீக்குளித்தேன்" என்றே திரும்பத் திரும்ப கூறினான்.

மறு நாள் 18.2.1965 அன்று காலையில் முத்துவின் அண்ணன் மாரியப்பன் தனது இரண்டு மாத பெண் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து வந்து முத்துவிடம் காண்பித்து விட்டு, பெயர் சூட்டும்படி கோரியிருக்கிறார். எனக்கு ஒன்றும் ஆகாது அண்ணா! கவலைப் படாதீர்கள்! என்று கூறி, அவரிடமிருந்து குழந்தையை வாங்கி 'தமிழ்ச் செல்வி' என்று பெயர் சூட்டினான். அப்போது சில மணித்துளிகளிலேயே அவன் உயிர் பிரிந்தது.

முத்துவின் உடலை கொமார பாளையத்தில் உள்ள அவனது இல்லத்திற்கு தமிழின உணர்வாளர்கள் கொண்டு சென்ற போது வழி நெடுகிலும் மக்கள் கூடி நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் என்று அங்கு வாழும் தமிழுணர்வாளர் ச.ர.பெருமாள் என்பவர் கூறுகிறார். நேரு இறந்த போது கூட ஒரு கடையடைப்போடு முடித்துக் கொண்ட சத்தி நகரம் முத்துவின் மறைவின் போது மூன்று நாட்கள் கடையடைப்பு செய்து தன்னுடைய உணர்வுகளையும் இரங்கலையும் வெளிப்படுத்திக் கொண்டது.

முத்துவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளன்று கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அச்சப்பட்ட தமிழக அரசு இந்திய இராணுவப்படையை வரவழைத்து சக்தி நகரெங்கும் குவித்தது. அமைதியான முறையில்  உடல் எடுத்துச் செல்லப்பட்டு கொமார பாளையத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு தான் பீதியில் இருந்த இராணுவம் பெரு மூச்சு விட்டது.

முத்துவின் ஈகத்தை நினைவு கூறும் வகையில், தமிழர் பண்பாட்டு கழகம், புரட்சிர இளைஞர் முன்னணி ஆகிய இரு அமைப்புகள் இணைந்து 29.2.2005இல் கொமார பாளையத்தில் ஒரு கல்வெட்டையும், புதைக்கப்பட்ட இடத்தில் கல்வெட்டுடன் கூடிய நினைவு மேடையையும் அமைத்துள்ளது.

தமிழுக்காக தீக்குளித்து மாய்ந்திட்ட சத்திய மங்கலம் முத்துவும், இவருக்கு முன்னர் நஞ்சுண்டு மாய்ந்திட்ட கீரனூர் முத்துவும் தமிழினத்தின் மாபெரும் சொத்து என்பதை இன்றைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைப்போம்!

tamilthesiyan.wordpress.com

இந்தி ஹிந்தி மொழிப்போர் 1965

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக