செவ்வாய், 19 ஜூன், 2018

பாவாணர் மீது விமர்சனம் பிற தமிழறிஞர் மீது குற்றச்சாட்டு வைத்தார் தமிழ்மொழி வெறியர்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 10
பெறுநர்: எனக்கு
தமிழ்ப் பகைவரும் தமிழ் வெறியரும்
பதிவு செய்த நாள்: மார் 18,2015 11:03
நவீன மொழியியலுக்கு ஒரு நூற்றாண்டுக் கால வரலாறுதான் உண்டு. 1916இல் வெளிவந்த, ஃபேடினன் டி சசூரின் பொதுமொழியியல் பாடநெறி (A Course in General Linguistics) என்பதுதான் இத்துறை சார்ந்த முதல் நூல். அவ்வகையில் சசூர்தான் நவீன மொழியியலின் முன்னோடி. இவர் 19ஆம் நூற்றாண்டு முழுவதிலும் ஐரோப்பாவில் வளர்ச்சியடைந்த ஒப்பியல், வரலாற்று மொழியியல் (Comparitive and Historical Linguistics) புலமை வழிவந்தவர். ஒப்பியல், வரலாற்று மொழியியல் ஆய்வுகள்தாம் நவீன மொழியியலுக்கு வித்திட்டன. 20ஆம் நூற்றாண்டு முழுவதிலும் நவீன மொழியியல் சிந்தனைகள் பெருவளர்ச்சி பெற்றன. பல்வேறு மொழியியல் கோட்பாடுகளும் சிந்தனைப் பள்ளிகளும் கிளைகளும் வளர்ந்தன. கடந்த ஒரு நூற்றாண்டுக் கால மொழியியல் வளர்ச்சியில் ஏராளமான சிந்தனையாளர்கள் பெரிதும் பங்களித்துள்ளனர். இவர்களுள் சசூர், எட்வர்ட் சபீர், லியோனால்ட் ப்ளூம்ஃபீல்ட், நோம் சொம்ஸ்கி, றோமன் ஜகோப்சன், மைகல் ஹலிடே போன்றவர்களின் பங்கு அளப்பரியது.
மொழி மனித வாழ்வின், முன்னேற்றத்தின் மிகப் பிரதான கருவியாகும். வாழ்வின் சகல துறைகளிலும் அது ஊடுருவி இருப்பதோடு, எல்லாத் துறைகளையும் இணைக்கும் ஊடுபாவாகவும் செயல்படுகிறது. இதனால் மொழி ஆய்விலும் மொழிக் கல்வியிலும் மொழியியல் பிரிக்க முடியாதவாறு பிணைந்துள்ளது. உலகெங்கிலும் நவீன கல்வித் துறையில் மொழியியல் முக்கிய இடம்பெற்றுள்ளது. உலகின் வளர்ச்சியடைந்த பல்கலைக்கழகங்களில் எல்லாம் மொழியியலும் பிரதான இடம்பெற்றுள்ளதைக் காணலாம்.
மொழியியல் என்பது மொழி பற்றிய அறிவியல் என வரையறுக்கப்படுகிறது. அவ்வகையில் அறிவியலுக்குப் புறம்பான மொழி பற்றிய எல்லாப் புனைவுகளையும் ஐதீகங்களையும் அது உடைக்கிறது. நம் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாலான, மொழி பற்றிய அறிவியல் பார்வையை, அறிவியல் மனப்பாங்கை அது வலியுறுத்துகிறது.
1950களில்தான் தமிழில் மொழியியல் அறிமுகமானது. அக்காலத்தில் அமெரிக்க அமைப்பு மொழியியல் அல்லது விளக்க மொழியியல் (Structural / Descriptive Linguistics) என அழைக்கப்படும் கோட்பாடு முக்கிய மொழியியல் கோட்பாடாக ஆதிக்கம் பெற்றிருந்தது. அதில் பயிற்சிபெற்ற சிலர்தான் தமிழ்நாட்டில் அதை அறிமுகப்படுத்தினர். இவர்களுள் முதன்மையானவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம். தமிழ்நாட்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்தான் முதல் மொழியியல் துறை உருவாக்கப்பட்டது. தெ.பொ.மீயிடம் பயின்று பின்னர் அமெரிக்காவில் பயிற்சிபெற்ற தமிழ் மொழியியலாளர்கள் பலர் உருவாயினர். மு. சண்முகம்பிள்ளை, வி.ஐ.சுப்பிரமணியம், ச.அகத்தியலிங்கம், செ. வை. சண்முகம், கே. குமாரசாமி ராஜா, இ. அண்ணாமலை முதலியோர் முதல் தலைமுறையைச் சேர்ந்த தமிழ் மொழியியலாளர்கள் எனலாம். இலங்கையில் க. கணபதிப்பிள்ளை இவ்வகையில் முன்னோடியாவார். அவரைத் தொடர்ந்து சு. சுசீந்திரராஜா, திருக்கந்தையா, தனஞ்செய ராஜசிங்கம், அ. சண்முகதாஸ் முதலியோர் உருவானார்கள்.
தமிழ்நாட்டில் 1970, 80களில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திலும் மொழியியல் துறைகள் உருவாக்கப்பட்டன. இலங்கையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1970களின் தொடக்கத்தில் மொழியியல் துறை ஒன்று இயங்கியது. பின்னர் அது களனி பல்கலைக்கழகத்துக்கு மாற்றப்பட்டது. 1980களில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஒரு மொழியியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. பல ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கடந்த பல தசாப்தங்களாகத் தமிழ் மொழியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வகையில் இதுவரை தமிழ் மொழியியல் தொடர்பான நூற்றுக்கணக்கான முதுமாணி, கலாநிதிப்பட்ட ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சில முக்கியமான நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் மொழியியல் தொடர்பாக இதுவரை நிகழ்ந்துள்ள உயர் ஆய்வுகளில் மிகப் பெரும்பாலானவை ஆங்கில மொழியிலேயே நிகழ்ந்துள்ளது முக்கியக் கவனத்துக்குரியது. இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் மொழியியல் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படுவது இதற்குக் காரணமாகும். இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மட்டும்தான் மொழியியல் தமிழில் கற்பிக்கப்படுகிறது. எனினும் கலாநிதிப்பட்ட உயர் ஆய்வுகள் இதுவரை இங்கு தமிழில் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது.
தமிழைப் பொறுத்தவரை மொழியியல், பரவலாக அறியப்பட்ட, மொழிக் கல்விக்கு அத்தியாவசியமானது என உணரப்பட்ட அறிவுத்துறையல்ல. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்த் துறைகள் அதை உள்வாங்கவே இல்லை எனலாம். பதிலாக, மொழியியலைப் பகைமை உணர்வுடனேயே அவை நோக்கிவந்துள்ளன. இன்றுவரை அதில் பெரிய மாற்றம் இல்லை. இதற்குக் காரணம் என்ன?
தமிழ்நாட்டில் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து மேலோங்கிவந்த மொழிவழித் தேசியவாதமும் அதன் விளைவான தமிழ் உணர்ச்சியும் மொழிப் பழமைவாதமும் இதற்கு அடிப்படை எனக் கூறலாம்.
வேறு எந்த மொழிபேசுவோரை விடவும் தமிழர் மத்தியில் மொழி உணர்வு ஆழமாக வேரோடி உள்ளதை நாம் அறிவோம். இடைக்காலத்தில் தமிழ் உணர்ச்சி காணப்பட்டாலும் 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் அது உச்சத்தை எட்டியது. மொழித் தேசியவாதத்தின் வளர்ச்சி அதன் அடிப்படையாக அமைந்தது.
தமிழர்களின் அடையாளமாகத் தமிழ் உருவான பின்னர், தமிழ் தெய்வமாகவும் தாயாகவும் கட்டமைக்கப்பட்டது. தமிழின் தொன்மை, பெருமை, தூய்மை என்பன வலியுறுத்தப்பட்டன. தமிழே உலகின் முதல்மொழி என்றும் உலக மொழிகளுக்கெல்லாம் அதுவே தாய்மொழி என்றும் பேசப்பட்டது.
உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு எனக் கோசம் எழுப்பப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது பல இளைஞர்கள் தீக்குளித்துத் தமிழுக்காகத் தம் உயிரைத் தியாகம் செய்தனர்.
வேறு எந்த மொழியிலும் காண முடியாத அளவு தமிழ் அடைமொழிகளால் பூசிக்கப்பட்டது. பழந்தமிழ், தென்தமிழ், தீந்தமிழ், வண்தமிழ், ஒண்தமிழ், கன்னித் தமிழ், இன்தமிழ், இன்பத் தமிழ், அமிழ்தினும் இனியதமிழ் என ஏராளமான அடைமொழிகளால் தமிழ்மொழி ஆராதிக்கப்பட்டது.
திராவிட இயக்கம் தமிழ் உணர்ச்சிக்கு ஊட்ட மளித்தது. தனித்தமிழ் இயக்கம் மேலோங்கியது. பொதுநிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்குவது தவிர்க்க முடியாத சமூகச் சடங்கானது. பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அரச மற்றும் பொதுவைபவங்களில் பாடப்படுவதை 1971இல் திமுக அரசு கட்டாயமாக்கியது.
இத்தகைய மொழிவழிபாட்டுச் சூழலில் மொழி பற்றிய அறிவியலான மொழியியல் வேண்டப்படாமை ஆச்சரியமான ஒன்றல்ல. தமிழ்ப் பற்றாளர்கள் மொழியியலாளர்களையும் தமிழ் மொழி பற்றி அறிவியல்ரீதியில் சிந்திப்பவர்களையும் தமிழ்ப் பகைவர்களாகவே கருதினர். தமிழ் ஞாயிறு எனத் தமிழ் உணர்வாளர்களால் போற்றப்படும் தேவநேயப் பாவாணரை இவர்களின் சிறந்த பிரதிநிதியாகக் கொள்ளலாம்.
பாவாணர் 1968இல் 'வண்ணனை மொழியியலின் வழு' (The Fallacies of Descriptive Linguistics) என்னும் தலைப்பில் நூல் எழுதி வெளியிட்டார். இந்நூல் தமிழ்ப் பற்றாளர்களின் திரண்ட கருத்தின் முழுவடிவம் எனலாம். தமிழ்மொழி பற்றிய தமிழ்ப் பற்றாளர்களின் அறிவியல்ரீதியற்ற ஐதீகங்களை விமர்சனத்துக்குள்ளாக்கும் மொழியியல் கோட்பாடுகளை முற்றாக நிராகரிக்கும் நூல் இது. பாவாணர் கூறும் முக்கியக் கருத்துகள் சிலவற்றை நாம் இங்கு நோக்கலாம்.
உலகின் முதல்மொழி எது என்பதையோ ஒரு குறிப்பிட்ட மொழியிலிருந்துதான் உலக மொழிகள் எல்லாம் தோன்றின என்பதையோ அறிவியல் அடிப்படையில் நிரூபிக்க முடியாது என்பதை மொழியியலாளர் ஒப்புக்கொள்வர். மொழி கள் எல்லாம் மொழி அமைப்பு அடிப்படையில் தம்முள் சமமானவை என்பதும் ஒரு மொழியின் கிளைமொழிகள் அனைத்தும் அமைப்பு அடிப்படையில் தம்முள் சமமானவை என்பதும் மொழியியலின் மூலக்கொள்கையாகும். பொதுமக்களின் பேச்சே மொழியின் அடிப்படை என்பதும் பேச்சின் அடிப்படையில் பிற்காலத்தில் தோன்றியதே எழுத்து மொழி என்பதும் மொழியியலில் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்தாகும். எல்லா மொழிகளும் இடையறாது மாற்றமடைகின்றன என்பதும் மொழிமாற்றம் இயல்பானது, மொழிவளர்ச்சிக்கு அடிப்படையானது என்பதும் நவீன மொழியியலின் பிறிதொரு அடிப்படைக் கருத்தாகும். தமிழ்ப் பற்றாளர் இவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. இவற்றை ஏற்றுக்கொண்டால் தமிழின் தொன்மை, பெருமை பற்றிய அவர்களின் புனைவுகளுக்கு இடமில்லாது போய்விடும். அவ்வகையில் பாவாணர் தன் நூலில் இக்கருத்துகளை நிராகரிப்பது ஆச்சரியமான தல்ல.
“முதன்முதல் தோன்றிய அறிவுடை மாந்தன் தமிழனே, பண்பாட்டில் மாந்தனூலும் அவன் தோற்றத்துடனேயே தொடங்குகின்றது” எனக் கூறும் பாவாணர் “தமிழே உலகின் முதல் தாய்மொழி” என்றும் அடித்துக் கூறுகிறார்; (பக். 9 - 26). இது பற்றிய அவரது பின்வரும் கருத்துகள் சுவையானவை:
“மேலையர் மூலமொழியையும் மொழி தோன்றிய வகையையும் அறியாமையால், அவர் வரலாற்று மொழிநூலென்று கொள்வது, இலக்கியத் துணைகொண்டு ஒரு மொழியின் அல்லது மொழிக்குடும்பத்தின் பல்வேறு நிலைகளைத் தொடர்ச்சியாகக் கால முறைப்படி கூறுவதேயன்றி வேறன்று. சென்ற நூற்றாண்டிறுதிவரை உலக முதன்மொழி எதுவென்று கண்டு பிடிக்கப்படாவிடினும், என்றேனும் ஒருநாள் அது கண்டுபிடிக்கப்படும் என்னும் நம்பிக்கையோ நப்பாசையோ மேனாடுகளில் இருந்து வந்தது. இந்நூற்றாண்டிலோ அது முற்றுங்கை விடப்பட்டுவிட்டது. அதன்விளைவே வண்ணனை மொழிநூல். இதைச் சிறப்பாக வளர்த்துவருபவர்அமெரிக்கரே. அவர் தமிழைச் செங்கொள்கைத் தமிழ்ப் புலவர் வாயிலாகக் கற்கும் வரை, இவ்வழுவியல் மொழி நூல் மேனாடுகளில் தொடரத்தான் செய்யும். ஆயினும் தமிழர் ஆரிய அடிமைத்தனத்தாற் பிறந்த தம் தாழ்வுணர்ச்சி நீங்கிப் பகுத்தறிவுக் கண் கொண்டு பார்ப்பாராயின், தமிழின் முதன்மையையும் பிற மொழி களின் வழிநிலைத் தன்மையையும் காணத் தவறார் என்பது திண்ணம் (பக். 90).”
இது பற்றி அவர் பிறிதோரிடத்தில் பின்வருமாறு கூறுகிறார்:
“தமிழ் முதற்றாய் மொழி என்பதற்கும் உலக முதல் உயர்தனிச் செம்மொழி என்பதற்கும் எல்லாவகைச் சான்றுகளும் உள்ளன. தமிழ்ப் பகைவரின் பொறாமைக்கண் அவற்றைக் காண முடியாது இருண்டுபோயிருக்கலாம்.
குமரிநாடே தமிழன் அல்லது அறிவுடை மாந்தன் பிறந்தகம், குறிஞ்சியும் முல்லையுமான பாலைநில மறவர் தமிழருள்ளும் முதியவராதலால், அவர் குடி தொன்றுதொட்டு முதுகுடி எனப் பெற்றுவருகின்றது.
“முதுகுடி மகட்பா டஞ்சிய மகட்பா லானும்”
என்பது தொல்காப்பியம் (பொ 79). ஆதலால்,
“கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி”
என்னும் ஐயனாரிதனார் கூற்றில் யாதொன்றும் இழுக்கில்லை என்க” (பக். 113)
இக்கருத்துப் பின்னணியில், மொழிகள் எல்லாம் தம்முள் சமமானவை என்பது அவருக்கு ஏற்புடைய கருத்தாக இருக்க முடியாது. மொழிகளையும் எல்லாக் கிளைமொழிகளையும் சமமானவையாகக் கருதுவதை அவர் வன்மையாக நிராகரிக்கிறார். இது பற்றி அவர் கூறுவது:
“எல்லா நடைமொழிகளும் (dialects) கொள்ளத்தக்கனவே என்பது எல்லாக் கீழ்மக்களின் தீய ஒழுக்கங்களையும் இழிந்த பழக்கவழக்கங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்பது போன்றதே. நரிக் குறவன் நடைமொழியையெல்லாம் ஆராய்வதினும் நகராண்மைக் குப்பையைக் கிளைப்பின் ஏதேனும் நற்பொருள் கிடைப்பது திண்ணம். முத்திற மொழிநூல்போல் வண்ணனை மொழிநூற்குப் போதிய ஆராய்ச்சிக்கிடம் இன்மையாலேயே, இத்தகைய இழிதகைய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இது வேலையில்லாத மஞ்சிகன் (அம் பட்டன்) வெண்கழுதையைப் பிடித்துச் சிரைத்தானாம் என்னும் பழமொழியையே நினைவுறுத்துகின்றது (பக்.100).”
இக்கருத்து அவரது சமூக மேட்டி மைத்தனத்தின் வெளிப்பாடே தவிர வேறல்ல.
சமூக மொழியியலாளர் மக்கள் மத்தியில் வழங்கும் மொழி வேறுபாடுகளை அறிவியல் நோக்கில் பல்வேறு வகைமொழிகளாகவும் கிளைமொழி களாகவும் இனங்கண்டு அவற்றின் அமைப்பு, பயன்பாடு பற்றி ஆராய்வர். தமிழ் மரபில் தோய்ந்த பாவாணர் உயர்ந்தோர் வழக்கையே ஒரே வழக்காகக் கொண்டு, மொழிவேறுபாடுகளை முக்கியப்படுத்தி ஆராய்வதைக் கேலிசெய்கிறார். இது பற்றிய அவரது கருத்து பின்வருமாறு:
“இனி, நடைமொழிகளையும் ஒரு வரைதுறையின்றி, வட்டார நடைமொழி (regional dialect), உள்ளூர் நடைமொழி (local dialect), வகுப்பு நடைமொழி (class dialect), குமுக நடைமொழி (communal dialect), குடும்ப நடைமொழி (family dialect), தனிப்பட்டவர் நடைமொழி (personal dialect) எனப் பலவாறு வகுத்துள்ளனர் மேலையர். தமிழர்போல் சிறந்த இலக்கண நடைமொழியை அளவைப்படுத்திப் பேச்சுவழக்கையும் பலுக்கல் (உச்சரிப்பு) முறையையுங் கட்டுப்படுத்தாது, சண்டிக் குதிரையும் பட்டிமாடும்போல் போன போன போக்கெல்லாம் திரியவிட்டுக் கீழோர் வழக்கையும் மேலோர் வழக்கொப்பக்கொண்டு, அவற்றை எழுத்து வடிவில் எழுதிக்காட்டவும் வழியின்றி இடர்படுவது எத்துணைப் பண்பாடற்ற செயலாம்! (பக். 100)”
பொதுமக்கள் பேசுவதே அடிப்படையில் மொழி என்ற மொழியியல் கருத்தையும் தமிழ் மரபுவழி நின்று அவர் நிராகரிக்கிறார். இது பற்றி அவர் கூறும் நீண்ட விளக்கம் பின்வருமாறு:
“வரலாற்றுக்கெட்டாத பண்டைக் காலத்திலேயே உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் என எழுத்தொலிகளை முதன்முதல் மூவகையாகப் பகுத்து, அதற்கேற்ப மூவகை வடிவமைத்து, ஓரொலிக்கு ஒரே வரியும் ஒரு வரிக்கு ஒரே ஒலியுமாக நெடுங்கணக்கு வகுத்து, பேசுகிறபடியே எழுதியும் எழுது கிறபடியே பேசியும், பொருளைப் பகுத்தறிவுள்ளதும் இல்லாததும் என இரு திணையாக வகுத்து அதற்கேற்பச் சொல்வடிவங்களையமைத்தும், செய்யுளிலேயே பேசுந்திறனை வளர்த்துக் கருத்துக்களையெல்லாம் மெய்ப்பாடு தோன்ற வெளிப்படுத்தற்கேற்ற பல்வகைப் பிரிவுகொண்ட நால்வகைப் பாக்களைப் படைத்து, எல்லா இலக்கியத்தையும் செய்யுளிலேயே இயற்றியும், எழுத்து சொல் யாப்பணியொடு இன்றும் பிறமொழிகட்கில்லாத பொருளிலக் கணத்தை வகுத்தும், சொல்லும் சொற்றொடரும் என்றும் இலக்கணவடிவு சிதையாதிருத்தற் பொருட்டுச் செந்தமிழ் என்னும் வரம்பிட்டும், மொழித்துறையில் ஒப்புயர்வற்ற நாகரிகமடைந்தவர் தமிழரே. அவர் இட்ட செம்மை என்ற வரம்பே, பல்லாயிரம் ஆண்டின் பின்பும் பிறமொழிகள்போல் உருத்தெரியாவாறு உலகவழக்கழிந்தொழிந்து மறையாதும், தமிழைக் காக்கும் வல்லரணாயிருந்து வருகின்றது. இவ்வரணைச் சில வையாபுரிகள் வண்ணனை மொழிநூலின் பெயரால் தகர்க்கப் பார்க்கின்றனர். “அடுக்கிற அருமை உடைக்கிற நாய்க்குத் தெரியுமா?”
வழக்கெனப் படுப துயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர்கட் டாக லான (1592)
என்று தொல்காப்பியங் கூறுவதால், புலவரும் உயர்ந்தோரும் பேசும் வழக்கே தமிழுக்கு உலக வழக்காம். (பக் 99)”
எல்லா மொழிகளும் காலந்தோறும் மாற்றமடைகின்றன என்னும் மொழியியல் கருத்தையும் பாவாணர் நிராகரிக்கிறார். “தமிழ் பல்லாயிரம் ஆண்டாக மாறாதிருக்கிறது” எனக் கூறி அதை அவர் இலகுவாக நிராகரிக்கிறார். இது சங்க இலக்கியத்தை இன்று படிக்க முயலும் தமிழர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எவற்றையும் மனங் கொண்ட ஒருவரின் கருத்தல்ல என்பது வெளிப்படை. கடந்த சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழின் ஒலியமைப்பு, சொற்தொகுதி, இலக்கண அமைப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள எந்த மாற்றத்தையும் காணமறுக்கும் தமிழ்ப் பழமை வாதிகளின் நிலைப்பாடே இது.
அறிவியல், தொழில் நுட்பத் துறைகளில் மேலைத் தேயத்தவர்களிடம் நாம் பெற்றுக் கொள்வதற்கு எதுவும் இருக்கலாம் எனினும், மொழித் துறையில் நாம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு எதுவும் இல்லை என்பது பாவாணரின் உறுதியான கருத்தாகும். “உடை வகையிலும் ஊர்தி வகையிலும் தமிழர் மேலையரைப் பின்பற்றுவது போன்று, மொழித் துறையில் மேலையரே தமிழரைப் பன்பற்றுதல் வேண்டும்” என்பது அவர் கருத்து (பக். 100). “வெள்ளைக்காரர் சொல்வதெல்லாம் விழுமிய அறிவியல் என்னும் குருட்டுத்தனமான கருத்து இந்தியாவில் இன்னும் கற்றாரிடத்தும் இருந்துவருகின்றது. வெள்ளை என்னும் சொல் வெண்ணிறக் கருத்தடிப்படையில் தூய்மையை மட்டுமன்றி வெறுமையையும் குறிக்கும்” என்னும் கருத்துடனேயே தன் நூலுக்கான முன்னுரையை அவர் தொடங்குகிறார் (பக். 3).
இவ்வகையில் நவீன மொழியியல் கருத்துகளின் அடிப்படையில் தமிழ்மொழியை நோக்குவோர்களையும் தன் கருத்துகளுக்கு முரணான கருத்துகளைக் கூறு வோரையும் அவர் தமிழ்ப் பகைவர் என வகைப்படுத்துகிறார். அவரது பட்டியல் மிக நீண்டது. அவரது பட்டியலில் இடம்பெறும் தற்காலத் தமிழறிஞர் சிலரைக் குறிப்பிடுவது பொருத்தமானது. வையாபுரிப்பிள்ளை, தெ. பொ. மீனாட்சிசுந்தரம், தனிநாயக அடிகள் ஆகியோர் இவ்வகையில் முக்கியமானவர்கள். இவர்கள் தற்காலத் தமிழ்மொழி வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியவர்கள் என்பதைத் தமிழ்ப் பழமைவாதிகளைத் தவிர வேறுயாரும் மறுக்கமாட்டார்கள். இவர்களைப் பற்றிப் பாவாணர் கூறுவதை நாம் இங்கே நோக்கலாம்:
“வையாபுரிப்பிள்ளையார்:
இவர் இந்நூற்றாண்டின் முற்பகுதியிற் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலிப் பதிப்பாசிரியராக இருந்து, அதை இந்தியப் பொது அகரமுதலி என்னும் அளவு கெடுத்தும், பின்னர் அப்பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகிப் பல்வேறு ஆராய்ச்சி நூல்கள் எழுதித் தம்மால் இயன்ற அளவு தமிழைக் காட்டிக்கொடுத்தும், தம் பெயர் என்றும் நிலவுமாறு செய்தவராவார் (பக். 81).”
தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்:
இவரைப் பற்றிப் பாவாணர் பல பக்கங்கள் எழுதியிருக்கிறார். இவர் தமிழைச் செவ்வையாக அறியாதவர் என்பதும். தமிழ்ப் பற்றில்லாதவர் என்பதும் பாவாணரின் கருத்துகளின் சாரம் எனலாம். தெ.பொ.மீ. தமிழ்ப் பற்றில்லாதவர் என்பதற்கு அவர் கூறும் காரணங்களுள் சில பின்வருமாறு:
1) தமிழா நினைத்துப்பார் என்ற நூலில் தமிழரின் முன்னோரை வெளி நாட்டிலிருந்து வந்தவராகக் கூறியிருத்தல், 2) அமெரிக்க வண்ணனை மொயியலாசிரியர் திரு. கிளீசனாரிடம் தமிழர்க்கு நால் நிறங்களே தெரியும் என்று கூறியமை, 3) தொல்காப்பியம் தோன்றிய காலம் கிறித்தவ ஊழியின் முந்து நூற்றாண்டுகள் (Early Centuries of the Christian Era) என்று கூறியமை,
4) தமிழில் பிறமொழிச் சொற்கள் என்னும் கட்டுரையில் தமிழை ஒரு கலவை மொழியாகக் காட்டியிருத்தல். இக்கட்டுரையைப் படிக்கும் நடுநிலையாளர் எவரும் தெ. பொ. மீ. ஒரு தமிழ்ப் பகைவர் என்ற முடிவுக்கே வர முடியும் (பக். 56-58).
தனிநாயகம் அடிகள்:
“உண்மையான தமிழ்ப் பற்றின்றி உலகப் புகழ்பெற வேண்டுமென்பதையே குறிக்கோளாகக் கொண்ட அப்பர் (Father) தனிநாயகம், தமிழறியாதவரும் வடமொழியார்வலருமான திரு. பில்லியோசா (J. Filliozat) என்னும் பிரஞ்சுப் பேராசிரியரைத் தேடிப்பிடித்து, அவரைத் தலைவராகக் கொண்ட 'உலகத் தமிழ்ப் பேரவை' என்னும் அமைப்பகத்தை 1965இல் நிறுவினார்” எனக் கூறும் பாவாணர், 'தனிநாயகம் தமிழ்ப் பற்றற்றவர்' என்பதற்குப் பல சான்றுகள் தருகின்றார். அவற்றுள் சில பின்வருமாறு:
(1) சென்னைப் ப. க. க. த. அகரமுதலியின் குற்றங் குறைகளை நான் நேரில் எடுத்துக் கூறியும் பொருட்படுத்தவில்லை, அவற்றைத் திருத்த எம்முயற்சியும் செய்யவில்லை.
(2) முதலுலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கிற்கு என்னை அழைக்கவேயில்லை
(3) இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக் கருத் தரங்கிலும், பலர் வேண்டுகோட்கிணங்கி என் பெயரைச் சேர்த்தும், எனக்குரிய இடந்தரவில்லை.
(4) தமிழ்ப் பற்றற்ற பிராமணத் தமிழ்ப் புலவரையும் பண்டாரகரையும் ஈருலகத் தமிழ் மாநாட்டிலும் சேர்த்துக்கொண்டார்
(5) எனக்குத் தெரிந்தவரை என்றேனும் இந்தியை எதிர்க்கவுமில்லை, மறைமலையடிகளைப் பாராட்டவு மில்லை (108-109).
தனிநாயகம் அடிகளின் முயற்சியினால் நடைபெற்ற முதல் இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளும் தமிழின் தொன்மையையும் பெருமையையும் மறைக்கும் வகையில் நடைபெற்றவை என்று குற்றம்சாட்டுகின்றார் பாவாணர் (பக்.109-119). இதற்குக் காரணம் (தமிழ்ப் பற்றாளர்களான) மறைமலையடிகள் கூட்டத்தினரால் அன்றி (தமிழ்ப் பகைவர்களான) வையாபுரிக் கூட்டத்தினரால் இம்மாநாடுகள் நடத்தப்பட்டமையாகும் (பக். 119).
இதுவரை நாம் நோக்கிய, மொழியியல் கருத்துகளை நிராகரித்துத் தமிழின் தொன்மை, மேன்மை என்பவற்றை வலியுறுத்தும், பாவாணரின் கருத்துகள் சிறுபான்மையினரான நவீனச் சிந்தனையாளர்களுக்கு அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் மொழித் தேசியவாதம் ஆழ வேரோடியுள்ள தமிழக சமூக அரசியல் சூழலில் இதுவே ஆதிக்கம் செலுத்தும் கருத்துநிலையாகும். தமிழகத்தில் மட்டுமன்றித் தமிழ்கூறும் நல்லுலகெங்கும் இக்கருத்துநிலையே ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் தீவிரச் செயற்பாட்டாளர்களைத் தமிழ்ப் பற்றாளர் என்பதைவிடத் தமிழ் வெறியர் என்பதே மிகப் பொருத்தமானது.
இக்கருத்துநிலை காரணமாகத் தமிழ் மொழி, இலக்கணம், இலக்கியம் என்பவற்றைப் பொறுத்தவரை பெரும்பாலான தமிழ் அறிஞர்களும் தமிழாசிரியர்களும் மிகவும் பழமைவாதிகளாக இருக்கிறார்கள். தற்காலத் தமிழ் இலக்கணம் என்னும் ஒன்றையே அவர்களால் சிந்திக்க முடிவதில்லை. தொல்காப்பியம், நன்னூலைத் தண்டி என்ன தமிழ் இலக்கணம் எனக் கேட்பவர்கள் அவர்கள். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இன்னும் அவற்றையே கற்பிக்கிறார்கள். மொழி மாற்றத்தை அவர்களால் சீரணிக்க முடிவதில்லை. தமிழ் மொழியில் ஏற்படும் புதிய மாற்றங்கள் எல்லாம் தமிழ்மொழியின் அழிவுக்கே இட்டுச்செல்லும் என்ற கருத்தில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். மொழி அடிப்படைவாதிகளான இவர்களே கல்வி நிறுவனங்களிலும் அரசு மட்டத்திலும் அதிகாரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். நவீனச் சிந்தனை தமிழ்க் கல்வியில் உள்நுழைய இவர்கள் விடுவதில்லை. தமிழ் ஞாயிறு, முத்தமிழ்க் காவலர் போன்ற பட்டங்களும் இவர்களை வந்தடைகின்றன.
இதனால் நவீன மொழியியல் கல்வி தமிழில் ஆழமாக வேரூன்ற முடியவில்லை. மிகச் சில பல்கலைக்கழகங்களின் மொழியியல் துறைகளுக்குள்ளேயே அது முடங்கிக்கிடக்க நேர்ந்தது. தமிழ்மொழி பற்றிய ஆழமான மொழியியல் ஆய்வுகளெல்லாம் ஆங்கிலத்திலேயே நிகழ்ந்தன. மொழியியலாளர்களின் புலமைத்துவச் செயற்பாடாக மாநாடுகள், கருத்தரங்குகளின் விவாதப் பொருளாகவும், உயர் ஆய்வுச் சஞ்சிகைகளுக்குரிய பங்களிப்புகளாகவும் அவை குறுகிப்போயின. அதனால், நவீன அறிவியலான மொழியியல் தமிழ்க் கல்வியில் அதிக தாக்கத்தைச் செலுத்த முடியவில்லை. அது தொடர்ந்தும் மரபுவழியிலேயே சென்றது.
உலக அளவில் அங்கீகாரம் பெற்ற முக்கியமான தமிழ் மொழியியலறிஞர்கள் பலர் தமிழ்நாட்டில் இருந்தனர், இன்னும் இருக்கின்றனர். ஆனால் இவர்கள் யாரும் தமிழ்ப் பகைவர் என்ற பழியைச் சுமக்க விரும்பவில்லை. தமிழ்ச் சமூகத்தில் தங்கள் படிமம் சிதைவுறாதிருப்பதற்காக இவர்கள் சற்று அடக்கியே வாசித்தனர். இவர்கள் யாரும் தங்கள் புலமைசார் எழுத்துக்களில் தவிர தமிழ்நாட்டில் தமிழ்ப் பழமைவாதத்தை எதிர்த்துப் பொதுமேடைகளில் கலகக் குரல் எழுப்பவில்லை. இவர்களுள் சிலர் பழமைவாதிகளுடன் சமரசம் செய்துகொண்டு அவர்களின் குரலில் பேசவும் செய்தனர். சிலர் தம் பாடுண்டு தம் ஆராய்ச்சி உண்டு என்று ஒதுங்கிப் போனார்கள்.
இதனால் நவீன மொழியியல் நமது மொழிச் சிந்தனையிலோ தமிழ் கற்றல், கற்பித்தலிலோ எவ்விதச் செல்வாக்கும் செலுத்தவில்லை. பள்ளிகளில் இலக்கணக் கல்வி என்பது நன்னூல் கருத்துகளைச் சொல்லிக்கொடுப்பதாகவே இருக்கிறது. கற்பித்தல் இலக்கணம் (Pedagogic Grammar) என்னும் கருத்தாக்கமே நமக்கு அறிமுகமாகவில்லை. மொழித் தூய்மையை, இலக்கணத் தூய்மையைப் பேணுவதே தமிழ் கற்பித்தலின் நோக்கமாயிற்று. பள்ளி, கல்லூரிப் பாடநூல்கள் இதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. மாணவர்களின் மொழித் தேவை என்ன? தமிழ்மொழியில் தேர்ச்சியைப் படிப்படியாக அவர்களிடம் எவ்வாறு ஏற்படுத்துவது? எந்த வகுப்பில் எதைக் கற்பிப்பது, ஏன், எப்படிக் கற்பிப்பது என்பது பற்றி நாம் அதிகம் சிந்திப்பதில்லை. நன்னூலில் உள்ள இலக்கணக் கலைச்சொற்களை எல்லாம் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்துவிட விரும்புகிறோம். மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிய நமது மதிப்பீடுகளையெல்லாம் அவர்களின் தலையில் சுமத்திவிட நினைக்கிறோம். அவர்களுடைய மொழித்திறன் வளர்ச்சிக்கு இவையெல்லாம் அவசியமா என்று நாம் சிந்திப்பதில்லை. இதனால், பள்ளி, கல்லூரித் தமிழ் வேறாகவும் ஊடகங்களிலும் படைப்பிலக்கியங்களிலும் பயன்படும் தமிழ் வேறாகவும் பிளவுண்டு கிடக்கிறது. இது ஆரோக்கியமான சூழல் அல்ல.
நமது மொழிச் சிந்தனையிலும் தமிழ்க் கல்வியிலும் புதிய, புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட வேண்டுமானால் தமிழ்க் கல்வித் துறையில் மொழியியல் முக்கியத்துவம் பெற வேண்டும். மேலைநாடுகளில் மொழிக் கல்வியில் மொழியியல் பிரிக்க முடியாதவாறு இணைந்துள்ளது. அதனால் அத்துறைகளில் அவர்கள் அதிக முன்னேற்றம் கண்டிருக்கின்றனர். மொழியியல் தமிழுக்கு அறிமுகமாகி அரைநூற்றாண்டு கழிந்த பின்னரும் நாம் அதை ஓரங்கட்டியே வைத்திருக்கிறோம். இந்நிலை மாற வேண்டும். தமிழைத் தாய்மொழியாக, இரண்டாம் மொழியாகக் கற்பித்தல், மாணவர்களின் மொழித் திறன் வளர்ச்சி, மொழி, இலக்கிய ஆய்வு போன்றவற்றில் முன்னேற்றம் காண இது அவசியம்.
எம்.ஏ. நுஃமான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக