புதன், 20 ஜூன், 2018

ஆந்திரா போலீஸ் அடித்துக்கொன்று ஆற்றில் வீசிய 5 தமிழர்கள் 65 பேரைக் காணவில்லை இனப்படுகொலை

aathi1956 aathi1956@gmail.com

பிப். 20
பெறுநர்: எனக்கு

ஆந்திரா மாநிலத்தில் ஏரியில் இருந்து 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு
 February 18, 2018
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து 7 தமிழர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. செம்மரங்கள் வெட்டுவதற்காக சென்ற தமிழர்களை காவல்துறையினர் விரட்டிய போது அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அவர்களின் உடலை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் உயிரிழந்தவர்கள் செம்மரம் வெட்ட வந்தவர்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
----------

ஆந்திரா ஏரியில் மிதந்த ஐவரும் சேலம் தொழிலாளர்கள் : செம்மரம் வெட்ட சென்ற 165 பேரின் கதி என்ன?
பதிவு செய்த நாள்: பிப் 19,2018 23:13
2
சேலம்: ஆந்திர மாநிலம், கடப்பா ஏரியில் இறந்து கிடந்த ஐந்து பேரும், சேலம், கல்வராயன்மலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் என தெரிந்துள்ளது. மேலும், செம்மரம் வெட்டச் சென்ற, 165 பேரின் கதி குறித்து, தகவல்கள் தெரியவில்லை.ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா கிராமத்தில், ராமர் கோவில் அருகில், ஏரி உள்ளது. வனப் பகுதியை ஒட்டியுள்ள இந்த ஏரியில், நேற்று முன்தினம், ஐந்து உடல்கள் மிதந்தன. செம்மரம் வெட்டச் சென்ற இவர்கள், மர்மமான முறையில் இறந்துள்ளதும், சேலம் மாவட்டம், கல்வராயன்மலை, கீழ்நாடு ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிந்தது. ஐவரும், 42 முதல், 23 வயதுள்ள ஆண்கள்; இவர்களில், 23 வயது வாலிபருக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. ஜன., கடைசி வாரத்தில், நவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏஜன்ட் அருணாச்சலம், ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டுவதற்காக, கிலோவுக்கு, 500 முதல், 600 ரூபாய் கூலி வழங்குவதாகக் கூறி, 70 பேரை அழைத்துச் சென்று, ஆந்திரா இடைத்தரகரிடம் ஒப்படைத்துள்ளார். ஐந்து பேர் இறப்புக்கு பின், அருணாச்சலம் தலைமறைவாகியுள்ளார். அவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழக மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணை செயலர், பொன்னுசாமி கூறியதாவது:சேலம், கல்வராயன்மலையில், 98 கிராமங்கள் உள்ளன. விழுப்புரம், கல்வராயன்மலையில், 180 கிராமங்கள் உள்ளன. இங்கு, போதிய வேலை வாய்ப்பு இல்லாததால், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களை, புரோக்கர்கள், செம்மரம் கடத்த அழைத்துச் செல்கின்றனர்.கடந்த, 20 நாட்களுக்கு முன், கருமந்துறையில், 70 பேரும், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார் பகுதியில் இருந்து, 100 பேர் என, மொத்தம், 170 பேர் சென்றுள்ளனர். இதில், ஐந்து பேர் இறந்துள்ளனர்; மீதம், 165 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நேற்று நெல்லுாரில், செம்மரங்களுடன், 27 தமிழர்களை கைது செய்துள்ளதாக, ஆந்திரா போலீசார் அறிவித்துள்ளனர். மீதம் உள்ளவர்கள் எங்கே இருக்கின்றனர் என்பது தெரியாததால், அவர்களது குடும்பத்தினர் கதறி அழுது வருகின்றனர். மலைவாழ் மக்கள், இத்தொழிலில் ஈடுபடாத வகையில், வேலை வாய்ப்பு வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இறந்த, ஐந்து தொழிலாளர்களின் ரத்த சொந்தம் ஒருவர், உறவினர் ஒருவர் என, 10 பேரை, சேலம் மாவட்ட போலீசார் மற்றும் வருவாய் துறையினர், ஆந்திராவுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
விசாரணை நடத்த வலியுறுத்தல் : 'தமிழர்களின் மர்ம மரணம் குறித்து உடனடியாக, பணியில் உள்ள நீதிபதி மூலம், நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, தமிழகத்தைச் சேர்ந்த, மனித உரிமை அமைப்பினர், ஆந்திர மாநிலம், கடப்பா மருத்துவமனை முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒண்டிமிட்டா ஏரியில், ஐந்து சடலங்கள் மிதந்தது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏரியில், ஒரு ஆள் நிற்கும் அளவுக்கு மட்டுமே, தண்ணீரில் ஆழம் உள்ளது. இறந்து போன அனைவரும், கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு நீச்சல் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதனால், 5 அடி ஆழம் மட்டுமே உள்ள ஏரியில், அவர்கள் மூழ்கி இறக்க வாய்ப்பில்லை. உள்ளூர் கடத்தல்காரர்களுக்கும், மரணம் அடைந்தவர்களுக்கும் இடையே, தொழில் போட்டி காரணமாகவும், இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம்.செம்மரக்கட்டையை வெட்டி எடுத்து வருபவர்களிடம், வழிப்பறி செய்யும் உள்ளூர் கும்பலின் செயலாகவும் இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுகிறது. இதற்கு முன் திருப்பதியில், 20 பேர், 'என்கவுன்டர்' செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், போலீசார் அவர்களை என்கவுன்டர் செய்யாமல், அடித்து கொலை செய்து, ஏரியில் வீசினரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளதாக, மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
--------
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் »
இந்தியா
ஆந்திரா போலீசின் கொடூர என்கவுண்ட்டர்? 5 தமிழர்களை அடித்தே கொலை செய்து ஏரியில் வீசியதா?
Published:February 19 2018, 8:30 [IST] கடப்பா: ஆந்திராவில் 5 தமிழர்களை போலீசார் அடித்தே கொலை செய்து ஏரியில் வீசியிருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்படுகிறது.
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக கூறி 2015-ம் ஆண்டு 20 தமிழர்களை சுட்டு படுகொலை செய்தனர் அம்மாநில போலீசார். காக்கை குருவிகளைப் போல தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
30 தமிழர்கள் படுகொலை
இது ஆந்திரா அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது. இதுவரை 30 தமிழர்கள் ஆந்திரா போலீசால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர்.
ஏரியில் தமிழர்கள் சடலம்
இந்த நிலையில் ஆந்திராவின் கடப்பா ஏரியில் 5 தமிழர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. செம்மரம் வெட்ட சென்ற தமிழர்களை அம்மாநில போலீசார் அடித்தே கொலை செய்துவிட்டு தற்கொலை போல ஏரியில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆந்திரா போலீஸ் கொலை செய்தது?
மனித உரிமை சர்ச்சைகளில் சிக்காமல் இருக்கவே இப்படியான படுபாதக படுகொலையை ஆந்திரா போலீசார் நிகழ்த்தியுள்ளனர் எனவும் சந்தேகம் எழுப்பப்படுகிறது. இது தொடர்பாக உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.
அடையாளம் காணும் பணி
ஆந்திரா ஏரியில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்களது உடைமைகளில் இருந்து சில தொலைபேசி எண்கள், புகைப்பட்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
--------
ஆந்திரா சென்ற மேலும் 65 பேர் கதி என்ன?சோகத்தில் மூழ்கிய மலை கிராமங்கள்
2018-02-20@ 01:49:35
சேலம்: ஆந்திர வனப்பகுதியில் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட 5 தொழிலாளர்கள், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் வசித்த மலைகிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன. ஆந்திர மாநில புரோக்கர்கள் தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட மலை வாழ் மக்களை குறிவைத்து, செம்மரம் வெட்ட அழைத்து செல்கின்றனர். அவர்களை, அதிரடிப்படையினர் சுட்டுக் கொல்வதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்திற்கு உட்பட்ட ஒண்டிமிட்டா ஏரியில் 5 பேர் சடலமாக மிதந்தனர். அழுகிய நிலையில் இருந்த சடலங்களை, அம்மாநில போலீசார் மீட்டனர். 5 சடலங்களிலும் ரத்த காயங்கள் இருந்ததால் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கருமந்துறை மலைகிராமம் கிராங்காடு பகுதியை சேர்ந்த ஆண்டி மகன் சின்னபையன்(42), அண்ணாமலை மகன் முருகேசன்(42), சின்னையன் மகன் ஜெயராஜ்(25), அடியனூர் கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி மகன் முருகேசன்(45) கீழ்ஆவாரை பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் கருப்பண்ணன்(22) என்பது தெரியவந்தது.
இதை அவர்களது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் மிளகு பறிப்பதற்காக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, புரோக்கர்களால் ஆந்திராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட தகவல் அறிந்து, கருமந்துறை சுற்றுப்புற மலை கிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளது. சடலங்களை சொந்த ஊருக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் போலீசார், வருவாய்த்துறையினர், கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில், கீழ்நாடு விஏஓ ஆனந்த் மற்றும் உறவினர்கள் ஆந்திரா விரைந்துள்ளனர்.
65 பேர் கதி?: சேலம் மாவட்டத்தின் கருமந்துறை மலைகிராமத்தில் இருந்து, கடந்த 22 நாட்களுக்கு முன்பு, 70 ேபரை ஆந்திர புரோக்கர்கள் மிளகு பறிக்கும் வேலை என்றும், தினசரி கூலியாக சாப்பாட்டுடன் 500 கிடைக்கும் என்றும் கூறி ஆந்திராவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவர்களில் 5 பேர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதியுள்ள 65 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. இதில் சேலம் மட்டுமன்றி சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த மலைவாழ் கிராம மக்களும் உள்ளனர். இதனால், அங்கும் பதற்றம் தொற்றியுள்ளது.
சொற்ப கூலிக்காக பலியாகும் உயிர்கள்
சேலம்-விழுப்புரம் மாவட்ட எல்லையான கருமந்துறை, சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன்மலை கிராமங்களிலிருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடைத்தரகர் மூலமாக செம்மரம் வெட்டும் வேலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். விபரீதம் உணராமல் சொற்ப கூலிக்காக இவர்கள் மரத்தை வெட்டுகின்றனர். போலீசில் பிடிபட்டால் இவர்களை பலி கடாவாக்கி விட்டு, கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் புரோக்கர்கள் தப்பி விடுகின்றனர்.
தமிழர்கள் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டார்கள் என்பது பெரிதுபடுத்தப்பட்டு, நாதியற்ற நிலையில் உயிர்துறக்கும் அவலங்கள் அதிகரித்து வருகிறது. எனவே, இதுபோன்ற புரோக்கர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, தமிழக காவல்துறையினர் முன்வர வேண்டும் என்ற ேகாரிக்கை வலுத்துள்ளது.
----------
செம்மரக் கும்பலிடம் இருந்து தப்பி வந்தவர் என்ன சொல்கிறார்?
வருவாய்க்காக கூலி வேலை எனக் கூறிச்சென்ற மலைவாழ் மக்கள் ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட துயரம் சேலம் கல்வராயன் மலைக்கிராமங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மற்றும் விழுப்புர மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ளது கல்வராயன் மலை. சேலம் மாவட்ட எல்லையில் 98 கிராமங்களையும், விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 180 கிராமங்களையும் உள்ளடக்கியது இந்த கல்வராயன் மலை. இயற்கை வளங்கள் ஏராளமாக இருந்தும் பிழைக்க வழி இல்லை என்பதே இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களின் மனக்குமுறல்.
பிழைப்பு தேடி சென்றவர்களில் ஐந்து பேர்தான் ஒண்டிமெட்டு ஏரியில் அழுகிய சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். செம்மரம் கடத்த வந்தவர்கள் என்றே குறிப்பிடப்படும் இவர்கள் விவரம் அறிந்தே ஆந்திர வனப்பகுதிக்கு செல்கின்றனரா என்பது கேள்விக்குறியே.
மைசூருக்கு மிளகாய்த் தோட்டக் கூலி வேலைக்கு செல்கிறேன் என்று கூறிதான் வீட்டை விட்டு புறப்படுவதாக சொல்லி வைத்தார்போல் கூறுகின்றனர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர். மலைவாழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி செம்மரம் வெட்ட இப்பகுதி மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் மீண்டும் மீண்டும் பதிவாகும் வழக்குகளும், உயிரிழப்பும் இம்மக்களை மீளத்துயரில் ஆழ்த்துகின்றன என்பதே உண்மை.
கூலி வேலைக்கு அழைத்ததாகவும், அதனால் பலரும் சேர்ந்து குழுவாக வேலைக்குச் சென்றதாகவும், சென்ற இடத்தில் செம்மரம் வெட்ட கட்டாயப்படுத்தபட்டு, மறுத்ததால் உணவுக்கும் வழி இன்றி தப்பிப் பிழைத்து ஊர் வந்ததாகவும் பதிவு செய்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர். தங்களில் பலர் இவ்வாறு தப்பிக்க முயற்சி செய்ததாகவும் அவர் வேதனையோடு தெரிவித்தார்.
மலைவாழ் மக்களின் வறுமையின் தவிப்பை தங்களுக்கான வருமானத்துக்குரிய வழியாக இடைத்தரகர்கள் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுகிறது. இம்மக்களை உணர்ந்தவர்களோ, இவர்கள் வேலைக்காகவே அழைத்து செல்லப்பட்டனர் என்றும் எந்த முழுவிவரம் தெரியாமல் செல்லும் இம்மலைவாழ் மக்களை இடைத் தரகர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர் எனவும் கருத்துகளை முன்வைக்கின்றனர்.
சில இடைத்தரகர்கள் ஆசை வார்த்தை கூறி இவர்களை அழைத்துச்செல்லும் இடமாக உள்ளது அண்டை மாநிலமான ஆந்திரா. ஏற்கனவே பல உயிரிழப்புகள் நிகழ்ந்த ஆந்திர வனப்பகுதியில் மலைவாழ் மக்களின் தொடரும் அவலமாக உள்ளது இந்த ஐந்து பேரது உயிரிழப்பு. மற்றவர்களின் நிலையோ கேள்வி குறியாக உள்ளது.
இடைத்தரகர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மலைப்பகுதி மக்ளுக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக முன் வைக்கப்படுகிறது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவித்த போதிலும், நிரந்தரத்தீர்வு எப்போது என்பதே அனைத்து மக்களின் கேள்வியாய் உள்ளது.
அரசின் நிவாரணம் சற்றே ஆறுதல் அளித்த போதிலும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளைத் தடுக்க நிரந்தரத் தீர்வு எட்டப்படுமா என்பதே மலைவாழ் மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செம்மரம் இனவெறி தெலுங்கர் பத்திரிக்கை செய்தி கொலை vதெலுங்கர் ஆந்திரர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக