`மலேசியாவில் ஜல்லிக்கட்டு'... கடல் தாண்டும் வீரவிளையாட்டு!
மெரினாவில், ‘தைப்புரட்சி’ அரங்கேறி முடித்து ஓர் ஆண்டு நெருங்கியிருக்கிறது. வாடிவாசலில் இருந்து திமிறி எழுந்த காளைகளின் கால்தடங்களால்,அதிகாரத்தனங்கள் முழுவதும் அழிக்கப்பட்ட வரலாறு அது. தமிழகத்தின் ஜல்லிக்கட்டு காளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நின்ற நிலை மாறி இன்று கடல்தாண்டி மலேசியாவிலும் வேர்விட்டிருக்கிறது நம் ஜல்லிக்கட்டு!
பிறக்க இருக்கும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி மலேசிய நாட்டில், இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவிருக்கிறது. மலேசியாவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனம் இதற்கான முழு ஏற்பாட்டையும் செய்துவருகிறது. ‘மலேசியாவில் ஜல்லிக்கட்டு’க்கான தொடக்க நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், முனைவர் கு.ஞானசம்பந்தன், ஜல்லிக்கட்டு பேரவையைச் சேர்ந்த பி.ராஜசேகர், நடிகர் பரணி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். மலேசியாவில் வளர்க்கப்பட்ட 20 காளைகளை தமிழகத்தைச் சேர்ந்த 25 மாடுபிடி வீரர்கள் அடக்கவிருக்கிறார்கள். கோலாலம்பூரில் உள்ள 'செலாங்கொர் டர்ஃப் கிளப்' வளாகத்தில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவிருக்கிறது.
ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவன இந்திய நிகழ்ச்சிகளின் நிர்வாகக் குழுமத் தலைவர் டாக்டர் என்.சி.ராஜாமணி பேசுகையில், “நம் தமிழகத்தின் பெருமை இப்போது கடல்தாண்டி கிளை பரப்ப இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு மலேசிய அரசிடம் தொடர்ந்து முயற்சி செய்து முறையான அனுமதி பெற்றோம். மலேசிய அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்திருக்கிறோம். விலங்குகள் நலவாரியம் உட்பட எந்த அமைப்பும் மலேசிய ஜல்லிக்கட்டுக்குத் தடையாக நிற்கவில்லை. ஜல்லிக்கட்டுக்காக தமிழக இளைஞர்கள் மெரினாவில் போராடியபோது அதற்கு ஆதரவாக மலேசியாவின் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் தமிழர்கள் ஒன்று கூடினார்கள். எனக்கு ஆச்சரியம். அவர்களிடம் பேசியபோது நெகிழ்ந்துபோனேன். தமிழ் பண்பாட்டை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால், ஜல்லிக்கட்டு பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அன்றிலிருந்துதான் மலேசிய மக்களுக்காக அங்கேயே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. அதற்கு விடை இப்போது கிடைத்திருக்கிறது. ஜல்லிக்கட்டு மாடுகளை இங்கிருந்து கொண்டு போக விரும்பவில்லை. அதற்கான சாத்தியமும் குறைவு. அதனால், மதுரையில் இருந்து அழைத்துச் சென்ற மாடுபிடி வீரர்களை மலேசியாவின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைத்தோம். திமிலுடன் கூடிய பல காளைகளை தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்.
இந்த வருட ஜல்லிக்கட்டு ஒரு முன்னோட்டம்தான். இதைப் பார்க்கும் மலேசிய இளைஞர்கள் தாங்களும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க விரும்பினால், அவர்களுக்கு மதுரையில் வைத்து பயிற்சி அளிக்கப்படும். அடுத்த வருடம் (2019) மலேசியாவில் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டில், தமிழக வீரர்களுடன் அவர்களும் களம் இறக்கப்படுவார்கள். 2020 இல் மலேசிய வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இந்த வருடம் 5,000 பார்வையாளர்களை எதிர்பார்க்கிறோம். உலகளவில் இருந்து வரும் ஜல்லிக்கட்டு ரசிகர்களையும் வரவேற்கிறோம். ‘செல்ஃபி வித் காளை’ என்று ஒரு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். தமிழகத்தில், காளை வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளுடன் ஒரு செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும். இதற்கான விவரங்களை விரைவில் வெளியிட இருக்கிறோம்” என்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “இந்த வருடப் பொங்கல் பண்டிகையின்போது நள்ளிரவில் எனக்கு ஓர் அழைப்பு வந்தது. ‘மெரினாவில் ஆயிரம் இளைஞர்கள் கூடியிருக்கிறார்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் சொல்ல வேண்டும்’ என்று. நான் கிளம்பிச் செல்வதற்குள் அங்கு 4 ஆயிரம் பேர் கூடியிருந்தார்கள். பின்னர், எதிர்பாராத அளவுக்கு மாறி இளைஞர் எழுச்சியாக அமைந்தது அந்த நிகழ்வு. முழு அமைச்சரவையும் அப்போது பெரும் பரபரப்பாக இருந்தோம். ஆனால், இறுதியில் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஜல்லிக்கட்டு நடந்தது. தமிழர் நலன் காப்பாற்றப்பட்டது. ஜல்லிக்கட்டு பற்றி தெரியாதவர்கள்கூட தெருவில் இறங்கிப் போராடினார்கள்.
தமிழர்களின் பாரம்பரிய வேர்கள் மீண்டும் தூண்டிவிடப்பட்ட நிகழ்வுதான் ஜல்லிக்கட்டுப் போராட்டம். இந்த ஜல்லிக்கட்டு இப்போது முதன்முறையாக கடல் கடக்க இருக்கிறது. சோழ காலத்தில், போருக்காக வெளிநாடுகளுக்குப் படையெடுத்த தமிழக வீரர்களின் குடிகள் இன்னும் அங்கு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். 155 நாடுகளில், தமிழர்கள் கிளை பரப்பி இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த மலேசிய ஜல்லிக்கட்டு பெருமை சேர்த்திருக்கிறது” என்றார். “முறையாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து உதவிகளையும் நாங்கள் முன்நின்று செய்வோம்” என உறுதியளித்தார் ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் பி.ராஜசேகர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக