வெள்ளி, 16 மார்ச், 2018

1985 தமிழகம் தங்கியிருந்த புலிகள்

aathi1956 aathi1956@gmail.com

28/11/17
பெறுநர்: எனக்கு
1985 ...
புதுவையில் பணியாற்றிய காலம். அங்கு தங்கியிருந்த புலிகளைக் காணச் சென்றேன். நெய்வேலியில் நிதி திரட்டலாம் என்ற வேண்டுகோளை முன்வைத்தேன். என் புதுவை முகவரியைப் பெற்று கொண்டு அனுப்பி வைத்தார் அங்கிருந்த முகாமின் பொறுப்பாளர்.

அடுத்த ஒரு வாரத்தில் , தங்கியிருந்த வீடு, பணியாற்றிய தொழிற்சாலை அருகாமையில் என்னைப் பற்றி யாரோ சிலர் விசாரித்ததாக தகவல்கள் வந்தன. 
ஊரில் பெண் பார்க்கத் தொடங்கியிருந்ததால் அது தொடர்பான விசாரணையாக இருக்குமென நினைத்தேன். புலிகளின் பணி என்பதை பின்னர் ஊகிக்க முடிந்தது .

மீண்டும் சந்தித்தேன். பயணத்தை முடிவு செய்தோம்.
 நெய்வேலி வந்து என் கிராமத்திற்கு தங்கச் சென்றபோது இரவு மணி 8. அம்மா இறந்து ஒரு வருடமாகியிருந்த்து.சத்தம் கேட்டு வந்த உறவினர் "ஐயாவுக்கு அம்மை போட்டிருப்பதாக " கூறினார்.

அதுவரையிலும் ஈழ நடப்புகளைப் பற்றி பேசியபடி வந்த புலிகள் அமைதியானார்கள். அவசரமாக ஷீக்களைக் கழற்றினார்கள். உண்பதும் உறங்குவதும் கேள்விக்குறியான
தால் ஆட்டோகேட் பகுதியில் தங்க முடிவெடுத்தோம்.

இல்லம் வந்தோர்க்கு எதுவும் கொடுக்காமல் அழைத்துச் செல்ல மனமின்றித் தயங்கினேன். என் மனதைப் புரிந்த ஒரு மூத்த புலி " எதுவும் சங்கடம் வேண்டாம். கொட்டிக் கிடக்கும் தேங்காய்களை எடுங்க. உடைத்துச் சாப்பிடலாம் " என்றார். அப்படியே செய்தோம்.

ஆட்டோகேட்டில் ஒரு பிரம்மச்சாரி நண்பரின் வீட்டில் தங்கினோம். இரண்டு தலையணைகள் மட்டுமிருந்தன. நாங்கள் ஐந்து பேர். புலிகள் தலையணையை ஏற்கவில்லை.

"ஒரு இரவில் , நின்றபடியே, அமர்ந்தபடி ஒரு மணி நேர உறக்கம் வாய்க்கப் பெற்றவர்கள் நாங்கள்.
தலைக்கு வைக்க கைகள் போதும்..."
மறுநாள் முழுக்க வீதி வீதியாக நடந்து நிதி திரட்டினோம். வீடியோ காட்சிகளை ஒளிபரப்பினோம்.

ஆட்டோகேட்டில் பேருந்து ஏறும் முன்பாக தோழர் ஒருவரிடம் ( கறுத்த உதடுகளால் வந்த ஐயம்) "புகைபிடிக்கும் பழக்கம் இருக்குமானால் சிகரெட் வாங்கி வரவா " என்றேன் .
"விடுதலைப் போராட்டத்திற்காக நிதி திரட்டி முடித்து வருகிறோம். இப்போது நான் புகைத்தால் பொதுமக்கள் என்ன நினைப்பார்கள்... உங்கள் கைக்காசாக இருந்தாலும் மற்றவர் பார்வையில் தவறாகுமல்லவா.."
மந்தாரக்குப்பத்திலிருந்து கடலூர் செல்வதாகத்தான் பயணத் திட்டமிருந்தது. 
ஆனால் இடையில் ஓரிடத்தில் பேருந்திலிருந்து இறங்கச் சொன்னார்கள்.

அது ஒரு மருத்துவ மனை. உள்ளே சென்றோம். தனியாக ஒரு பகுதியில் காயமடைந்த பல புலிகள் , சிகிச்சையிலிருந்தனர்.
வாழ்வின் ரணமான நிமிடங்கள் . கை சிதைந்து, கால் முறிந்து, முகம் கருகி, வயிறு கிழிந்து ... பாதிப்பில்லாத புலிகள் இல்லை.
குழுவிலிருந்த நால்வரில் மூத்தவராக இருந்தவர், ஒவ்வொருவருடன் உரையாடியபடி வந்தார். 
மற்றவர்கள் மருந்து தேவைகளைக் குறித்தல், கடிதப் பரிமாறல் என தனித்தனியே பரபரப்பாக பணியாற்றினார்கள் .
ஒரு புலியுடன் மட்டும் அதிகம் பேசாமல், குறைந்த நொடிகளைச் செலவழித்து பேச்சை முடித்துப் புறப்பட்டார் மூத்தவர்.

பேருந்தில்தான் கேட்டேன்.
"ஒருவரை மட்டும் நீங்கள் திட்டமிட்டு தவிர்த்தது போலத் தோன்றியது. அவருடன் ஏதாவது கருத்து வேறுபாடா அல்லது வருத்தமா... "
"அவன் என் தம்பி.... "
" சகோ... "
எனக்கு வார்த்தைகள் வரவில்லை. கண்ணீர் முட்டியது.
"நிதானம்.. இது பேருந்து... இயக்க விதிகளின்படி பாச உணர்வு, உறவுக்கு முக்கியத்துவம் தருவது தவறான நடைமுறை. அடிபட்ட தம்பிகள் அனைவரும் எனக்கு தம்பிகள்தான்.. தம்பிக்காக நான் கூடுதல் கவனம் செலுத்தினால் மற்றவர்கள் மனதில் குடும்ப உணர்வை, நினைவைக் கொண்டு வரலாம்... புலிகளின் இலக்கு ஒன்றுதான்... ஈழம்.. ஈழம்...மட்டுமே.."

இந்த 55 ஆண்டு கால வாழ்வில் நான் வாழ்ந்ததாக உணர்ந்தது, உயிர்ப்புடன் இருந்தது ... அந்த 48 மணி நேரங்கள்தான்..
சுயநலம் பாராமல், பொதுநலம், இனநலம் என்று என் பார்வையை விரித்துக் கொள்வதற்கான பயிற்சியை கொடுத்தவர்கள் அந்த புலி அண்ணைகள்தான்...
மண் விடுதலைக்காக போராடியவர்கள், புதைந்தவர்கள் உலக வரலாறு நெடுகிலும் வருகிறார்கள்.
நேர்மை, தியாகம், வீரம் கலந்த புது மரபை , புலிகள் மட்டுமே விட்டுச் சென்றுள்ளனர்.
பாடம் படிப்போம்.

இருபதுகளில் இருக்கும் இளந்தலைமுறையே..
இந்தக் கனவுகளை 35 ஆண்டுகளாகச் சுமக்கிறோம்.
எங்களை விடுதலை பெற்ற மண்ணில் புதைப்பதற்காகவாவது
இனத்தின் விடியலை முன்னெடுத்துச் செல்ல வாருங்கள்..

( குழுவிலிருந்த மூத்தவர் பால வேலாயுதம். சிவில் சர்வேயர் பணியை உதறிவிட்டு இயக்கத்தில் இணைந்தவர். காசநோய் காரணமாக படையணியிலிருந்து, பிரச்சாரப் பணிகளுக்கு மாற்றப்பட்டவர் . பிரபாகரனை தம்பி என்றழைக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்)
# maaveerar_naal
கரிக்கட்டியின் கடைசி பக்கம் with மாணிக்கம் மணி வன்னியன்
நேற்று, 01:49 PM ·


பங்கு ஈழம் தமிழகம் ஒற்றுமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக