திங்கள், 19 மார்ச், 2018

ஆளுநர் அதிகாரங்கள் பொம்மை பதவி

aathi1956 aathi1956@gmail.com

18/12/17
பெறுநர்: எனக்கு



இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு மாநில ஆளுனர் யார்? அவரது கடமைகள் என்ன? அவரது உரிமைகள்,  அதிகாரம் எத்தகையது???

இந்தியக் குடியரசின் தலைவராக எப்படி குடியரசுத் தலைவர் இருக்கிறாரோ அதைப்போலவே ஒரு மாநிலத்தின் தலைவராக இருப்பவரே ஆளுனர்.  அதே சமயம் ஆளுனர் என்பவர் ஒரு பெயரளவு தலைவரே தவிர செயல்படுத்தும் அதிகாரம் படைத்தவர் அல்ல. செயல்படுத்தும் அதிகாரம் முதலமைச்சரிடம் மட்டுமே உண்டு.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் செயல்படுவது அனைத்தும் ஆளுனரின் பெயரில்தான் என்றாலும்கூட ஆளுனர் ஒரு ஆலோசனை கூறும், ஒப்புதல் அளிக்கும் பொறுப்பு மட்டுமே கொண்டவர். ஆளுனருக்கு எந்த பெரிய நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடமில்லை. அந்த அதிகாரம்  முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவைக்கே உண்டு.

1956 ம் ஆண்டு கொண்டுவந்த சட்டத் திருத்தத்தின்படி ஒருவரே இரண்டு மாநிலங்களுக்கு ஆளுனராக இருக்கமுடியும்.

மாநிலங்கள் தவிர யூனியன் பிரதேசங்களுக்கு நியமிக்கப்படும் துணை நிலை ஆளுனருக்கும், பிற மாநில ஆளுனருக்கு உண்டான அதே உரிமை, அதிகாரம், கடமைகள் மட்டுமே உண்டு. யூனியன் பிரதேசம் என்பதற்காக தனித்த சிறப்பு அதிகாரம் எல்லாம் ஆளுனருக்கு இல்லை.

ஒரு ஆளுனர் தான் செயல்படுத்த விரும்பும் அனைத்தையுமே முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை மூலமே செய்ய முடியும்.

குடியரசுத் தலைவர் போலவே மாநில ஆளுனருக்கும்  சில சிறப்பு சட்ட, நீதித்துறை அதிகாரங்கள் உண்டு. ஆனால், குடியரசுத் தலைவர்போல ராஜாங்க முடிவுகளை எடுக்கவோ, ராணுவத் துறையைக்கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது.

மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு யாரை முதல்வராக, யாரை அமைச்சர்களாக முடிவு செய்கிறார்களோ அவர்களை பதவிப்பிரமானம் செய்து வைத்து நியமிக்கும் அதிகாரம் ஆளுனருக்கு உண்டு. இதபோல அட்வகேட் ஜெனரல், மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கான உறுப்பினர் நியமனமும் ஆளுனரே செய்விக்கவேண்டும். ஆனால், அந்த உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் மட்டுமே உண்டு, ஆளுனரிடம் கிடையாது.

குடியரசுத்தலைவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது ஆளுனரின் கடமை. மாவட்ட நீதிபதிகளையும் ஆளுனர் நியமிப்பார்.

சட்டப்பேரவையைப் பொறுத்தவரை அதற்கு சம்மன் அனுப்பவோ, விளக்கம் கேட்கவோ தேவைப்பட்டால் சட்டசபையை முடக்கவோ கூட ஆளுனருக்கு அதிகாரம் உள்ள அதே நிலையில் முதலமைச்சரின், அமைச்சரவையின் வழிகாட்டுதலின்படியே அதனைச் செய்ய இயலும்.

சட்டப்பேரவைக் கூட்டத்தின் முதல் நாள் கூட்டத்தை ஆளுனரே, அரசின் கொள்கை, திட்டங்கள் குறித்து பேசித் தொடங்கி வைக்கவேண்டும்.

அரசின் ஆண்டு நிதி அறிக்கைகள் மற்றும் மானியங்களுக்கான பரிந்துரைகளை ஆளுனர் மேற்கொள்வார்.

மாநில நிதி ஆணையத்தை உருவாக்கும் அதிகாரம் உள்ள ஆளுனர்  அரசுக்கு திடீரென எதிர்பாராத தருணத்தில் நிதி தேவைப்பட்டால் முன்பணம் அளிக்கவும் அனுமதி அளிப்பார்.

சட்டப்பேரவையில் முன்வைக்கப்படும், நிறைவேற்றப்படும் அனைத்து தீர்மானங்களிலும் ஆளுனர் கையொப்பமிட்டால் மட்டுமே அதற்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் அவை நிதி மசோதாவாக இல்லாத பிற மசோதாக்கள் எனில் அவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருக்க ஆளுனருக்கு உரிமை உண்டு. அதேசமயம், அதே மசோதாவை சட்டப்பேரவை, இரண்டாம் முறையும் ஒப்புதலுக்காக ஆளுனருக்கு அனுப்பினால் அதற்கு ஆளுனர் கட்டாயம் ஒப்புதல் வழங்கியே ஆகவேண்டும்.

சட்டமன்றம் கூடாத நாட்களில் ஒரு ஆளுனரால் ஒரு அவசரச் சட்டத்தை உடனடியாகப் பிறப்பிக்க முடியும், அமல் படுத்தவும் முடியும். அதே சமயம் அந்தச் சட்டம் சட்டப்பேரவையில்  சமர்ப்பிக்கப்பட்டு சட்டப்பேரவையின் ஒப்புதல் பெற்றால்தான் நிரந்தரச் சட்டமாக இருக்கும். அல்லது ஆறு வாரத்திற்கு மட்டுமே செல்லத்தக்கதாக இருக்கும்.

ஆளுனருக்கு அந்த மாநிலக் குடிமக்களின் யார் மீதும் சட்டப்பூர்வமாக விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்க, ரத்து செய்யும் அதிகாரம் உண்டு. அது எத்தகைய குற்றமாக இருந்தாலும் ஒரு ஆளுனரால் இதனைச் செய்ய சட்டம் இடம் கொடுக்கிறது.

சட்டப்பேரவையில் ஆளும் கட்சிக்கு போதுமான பெரும்பான்மை இல்லாத நிலையில் ஒரு முதலமைச்சரை தானே தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்டவர் ஆளுனர்.

ஒரு மாநிலத்தில் மிக மிக மோசமான சூழல் உருவாகி வேறு வழியின்றி "குடியரசுத் தலைவர் ஆட்சியை" அமல் படுத்த குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பி ஒப்புதல் பெற்று குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவரமுடியும். இந்தச் சூழலில் மட்டுமே ஒரு ஆளுனர் முதலமைச்சர், அமைச்சரவையின் அதிகார வரம்பை மீறமுடியும்.

ஆக, மிக மிக அசாதாரண சூழ்நிலை தவிர  சாதாரண சூழல்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் அரசை வழி நடத்தும் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவைக்கே ஆளுனரைவிட அதிகாரமும், உரிமையும் உண்டு.

ஆளுனர் மீதான லஞ்சம், ஊழல் அல்லது வேறு விதமான கடினமான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவரை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் குடியரசத் தலைவருக்கு உண்டு என்றாலும் பிரதமரின் அறிவுரைப்படியே அதனை குடியரசுத் தலைவரே செய்ய இயலும்.

- தமிழாக்கம் : விஷ்வா விஸ்வநாத் 

அதிகாரம் பதவி சட்டம் ரப்பர் ஸ்டாம்ப் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக