வெள்ளி, 16 மார்ச், 2018

மெய்ம்மை நூல் அணிந்துரை ஆரியர் பொய் ஆசீவகம் குமரிக்கண்டம் வேர்ச்சொல் திருவள்ளுவர் காலம்

aathi1956 aathi1956@gmail.com

23/11/17
பெறுநர்: எனக்கு
Gunaseelan Samuel
அகன் அவர்கள் எழுதிய “மெய்ம்மை” எனும் நூலுக்கு வழங்கிய அணிந்துரை:
என் நூல்களுக்கு யாரிடமிருந்தும் அணிந்துரை பெற்றதில்லை; ஓரிரண்டு தவிர. புலவர் மகிபை பாவிசைக்கோவிடம் நானே அணிந்துரையைக் கேட்டுப்பெற்ற ‘தொல்காப்பியத்தின் காலம்’ எனும் நூல் ஒரு விதிவிலக்கு. அதோடு, நான் பிறரின் நூல்களுக்கு அணிந்துரை வழங்கியதுமில்லை; ஓரிருவர் நூல்களைத் தவிர.
பொறிஞர் அகன் அவர்களின் ‘மெய்ம்மை’ எனும் இந் நூலுக்கு அணிந்துரை வழங்குமாறு ஆம்பூர் க. ஏ. மணவாளன் ஐயா சொன்னார். அகன் அவர்களின் எண்ணவோட்டமும் என்னுடைய எண்ண வோட்டமும் ஏறத்தாழ ஓரே அலைவரிசையில் இருப்பதால், நான் உடனே ஒப்பினேன்.
வடமேற்கிலிருக்கும் கைபர், போலன் கணவாய்களின் வழியாக ஆரியப்படையெடுப்புகள் வந்தனவென ஐரோப்பியர்கள் கட்டிவிட்ட கதையை நான் தொடர்ந்து மறுத்துவந்துள்ள
ேன். ‘ஆரியர்’ என்போர் வடுகரேயென வழக்குரைத்து வந்துள்ளேன். கீழைகங்கைக்கரையில் ஆண்டுவந்த தமிழர்களை வீழ்த்திய வடுக அநாகரிகர்கள், அத் தமிழர்களிடையே வழங்கிவந்த ஆட்சியியல் சொற்களை அப்படியே எடுத்தாளத் தொடங்கினர் என்றும் சொல்லிவருகிறேன்.
‘அஃது எப்படி?’ என்னும் வினா எழுவது இயல்புதானே?
அதற்கோர் ஒப்பியல் பாடம் அடியில்:
செருமானிய அநாகரிகரின் தலைவனாயிருந்த ‘அலாரீக்’ என்பான் அரண் சூழ்ந்த பண்டை உரோமாபுரியை மூன்று முறை முற்றினான்; மூன்றாவது முறைதான் அந்த நகரை அவன் முழுமையாகக் கைப்பற்றினான். ஆயினும், உரோமப் பண்பாட்டின்மீது அவனுக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது. அதனால், உரோம ஆண்டைகளுக்கிருந
்த பெயர் வழக்கைப் போன்று தன்னை ‘அலாரீக்கசு’ (Alaricus) என்று அழைக்குமாறு தன் குடியினரை வலியுறுத்தினான்; உரோமைக் கைப்பற்றிய பின், உரோம ஆட்சியியல் அமைப்புகளையும் அதிகாரக் கூறுகளையும் தம் பழங்குடி மரபுகளுடன் அப்படியே இணைத்துக்கொண்டான்.
அதேபோல், கீழைக்கங்கைக்கரையில் ‘கங்கரிடைநாடு’ (மகதம்) எனும் நாட்டை ஆண்டுவந்த தமிழ் நன்ன(நந்த)ரிடம் வழக்கிலிருந்த ‘அரையர்’ எனும் சொல்லாட்சியை வடுகர்கள் அப்படியே தமதாக்கிக் கொண்டனர். நந்தர்களை வீழ்த்திப்பின் வடுகர்கள் உருவாக்கிய பாகத மொழியில் ‘அரையர்’ எனும் தமிழ்ச்சொல், ‘அரிய’ என்றானது. அன்றிலிருந்து மூன்று நூற்றாண்டுகளுக்குப்பின் தோற்றுவிக்கப்பட்ட சமற்கிருதம் எனும் செயற்கை மொழியின் இலக்கணப்படி, அதுவே ‘ஆரிய’ என்று முதலெழுத்து நீட்டி ஒலிக்கப்பட்டது.
இந்தக் கருத்தை நான் மீண்டும் மீண்டும் சொல்லிவந்தபோதும், என்னொடு நெருக்கமாயிருந்தவர்களும்கூட அதைப் புரிந்துகொள்ளாது ‘கைபர், போலன் கணவாய்களின் வழியாக வந்த ஆரியர்கள்’ என்று பழைய கதையையே ஒப்புவித்தனர். ஆனால், அகன் ஒருவர் மட்டும்தாம் நான் சொன்னதை முழுமையாக விளங்கிக்கொண்டு அதற்கோர் ஒப்புதல் கொடுத்தவர்.
‘மெய்ம்மை’ எனும் இந் நூலில் அவர் திரும்பத் திரும்ப கூறும் கருத்து ‘எழுமை’யைப் பற்றிய கருத்து.
கரும்பிறப்பு, கருநீலப்பிறப்பு, பசும்பிறப்பு, செம்பிறப்பு, பொன் பிறப்பு, வெண்பிறப்பு ஆகிய அறுவகை பிறப்புகளையும் கடந்து கழிவெண்பிறப்பு என்னும் ‘நீர்வண்ணத்தை’ அடைவதென்பதே பிறப்புகளுக்கு வண்ணங்களை ஊட்டிய ஆசீவகரின் நிலைப்பாடு. அதுவே ‘எழுபிறப்பு’ எனப்பட்டது.
எழுமையைப்பற்றி அகன் ஐயா காட்டும் விளக்கங்கள், அந்த எழுபிறப்புக் கோட்பாடு ஆசீவக மெய்யியல் தோன்றுவதற்கு முன்பே இருந்திருக்க வேண்டுமெனக் கருதத் தூண்டுகிறது.
உயிர்களை ஆறு வகையாக உருவகப்படுத்தும் தொல்காப்பியம் (நூற்பா 1526) ஊறு, நா, மூக்கு, கண், செவி, மனம் எனும் புலனுணர்வுகளை அவ்வவ் உயிர்களுடன் உறவுப்படுத்துகிறது. மனத்திலிருந்து பிறக்கும் அறிவை அகத்தியத் தருக்க நூற்பா என்னும் நூல் ‘உள்ளம்’ எனச் சொல்லி ஏழாவதாக வைக்கிறது (“அறிவுப் பண்பிற் றான்மா வென்க” 19:1). அதை ‘உயிர்’ என்றும் அது குறிப்பிடுகிறது (“உயிர்தா னுடறொறும் வெவ்வே றாகும்” 19:3). அதுவே ‘ஆன்மா’ என்றும் கூறப்படுகிறது. ‘மனம்’ என்பது ஐம்புலன்களின் வழியாகக் கிடைக்கின்ற காட்சியளவை (Perceptual Knowledge); ‘உள்ளம்’ என்பது மனத்தின் வழியாகப் பிறக்கின்ற கருத்தளவை (Conceptual Knowledge). ‘மனம்’ வேறு, ‘உள்ளம்’ வேறென மீமிக நுட்பமாக வேறுபடுத்திக் காட்டுகிறது, தமிழரின் மெய்யியல்.
ஆகவே, ஐம்புலன்கள்+மனம்+உள்ளம் என்பதில் எழுமையைக் காணலாம்.
முளை, துளிர், தளிர், கொழுந்து, இலை, பழுப்பு, சருகு என நிலத்திணை(செடி)யின் திரிவாக்கத்தில் காணப்படும் எழுமை;
கவை, கொம்பு, கிளை, சினை, போத்து, குச்சி, இனுக்கு என மரத்தில் எழுமை;
புல், தாள், மடல், தோகை, ஓலை, தழை, இலை என இலையில் எழுமை;
நாற்று, கணு, குருந்து, மடலி, பிள்ளை, குட்டி, பைங்கூழ் எனப் பயிரில் எழுமை;
செய், தோப்பு, தோட்டம், காடு, சோலை, கானல், அடவி என மர அடர்த்தியில் எழுமை;
புனம், புலவு, கொல்லை, வானவாரி, புன்செய், நன்செய், மிசை என உழுவுநிலத்தில் எழுமை;
அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் எனப் பூவில் எழுமை;
பூப்பிஞ்சு, பிஞ்சு, கருங்காய், பழக்காய், காய்ப்பழம், பழம், கனி எனக் காயில் எழுமை;
தவசம், பயறு, கடலை, விதை, முத்து, கொட்டை, நெற்று எனப் உணவுக்கூலத்தில் எழுமை;
பொட்டு, உமி, தொலி, தோல், கோது, தோடு, ஓடு என உணவுக்கூலத்தின் மேல்தோல்களில் எழுமை;
சாறு, சோறு, சுளை, சதை, முத்து, அரிசி, பருப்பு என விளைப்பொருள்களில் எழுமை;
வளி, சூறாவளி, புயல், கொண்டல், கோடை, தென்றல், வாடை எனக் காற்றில் எழுமை;
குட்டை, குளம், பொய்கை, ஊருண்ணி, ஏரி, கண்வாய், தடாகம் என நீர்நிலைகளில் எழுமை;
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ எனும் உயிர்நெடில்களை வைத்துக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என முறையே அமைந்த இசையின் (சுரங்களின்) எழுமை;
வில்யாழ், பேரியாழ், சுறவியாழ், சகோடயாழ், முண்டகயாழ், செங்கோட்டியாழ், சீறியாழ் என யாழில் எழுமை;
பாலன், மீளி, மறவோன், திறலோன், காளை, விடலை, முதுமகன் என ஆடவரின் பருவங்களில் எழுமை;
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனப் பெண்ணின் பருவங்களில் எழுமை
என்றெல்லாம் எழுமை என்னும் கோட்பாடு தமிழரின் வாழ்வியலில் பற்றிப் பரவிக் கிடப்பதை இந் நூலில் நீக்கமறக் காண முடிகிறது.
‘எழுபிறப்பு’ எனும் கருத்து திருக்குறளில் (62, 107, 398, 538, 835) வருவதை அகன் ஐயா சுட்டிக்காட்டுக
ிறார். திருக்குறள் சொல்லும் எழுமையும் எழுபிறப்பும் ஆசீவகத்தின் வண்ணக் கோட்பாட்டை நினைவுறுத்துவதாக எண்ணத் தூண்டுகிற நிலையில், அத் திருக்குறளின் காலத்தைப்பற்றி ஆசிரியர் ஆராய்கிறார்.
ஐம்பூதக் கோட்பாடான பூதவியம், நாள்மீன் கோள்மீன் ஆகியவற்றின் இயங்குமுறையைப்பற்றி விளக்கும் உலகாய்தம், காரண-காரியவியம், ஓகம், எண்ணியம் (சாங்கியம்) என்னும் ஐந்து உறுப்புகளைக் கொண்ட ‘ஐந்திரக் கோட்பாடு’ கோலோச்சிய கி. மு. 10,000 ஆண்டுகளுக்குமுன் பஃறுளி மதுரைத் தமிழ்ச் சங்கம் விளங்கிய காலத்தில் திருக்குறள் இயற்றப்பட்டதாக நூலாசிரியர் கூறுகிறார். சிந்துவெளி நாகரிகத்தின் அகழ்வுகளில் தமிழ்க் குறட்பாக்களைக்கொண்ட முத்திரைகள் கிடைத்துள்ளதெனத் திருத்தந்தை ஈராசு பாதிரியார் சொல்லியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இவற்றிற்கு மிகத் தெளிவான சான்றுகள் காட்டப்பட வேண்டும்.
பிரான்சா வேலென்டீன் (François Valentijn 1666-1727) எனும் டச்சுக் கிறித்துவச் சமயவூழியர் தாமெழுதிய Oud en Nieuw Oost-Indien எனும் நூலில் லூசியோ ஆன்னியோ செனெக்கா (Lucius Annaeus Seneca ~கி. மு. 4-கி. பி. 65) எனும் பண்டை உரோம மெய்யியலார் திருவள்ளுவரைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“Tiriwalluwir: One of their best prayer books, composed in clear and concise verses by Thiruwalluwer. Those who can read and understand him, can also understand the most difficult poets. This writer, according to the writings of Seneca, lived over 1500 years ago at Mailapore or San Thome” (François Valentijn’s Description of Ceylon, Translated and Edited by Sinnappahrasaratnam, The Hakluyt Society, London, 1978, p 61.)
வேலென்டீன் 16-17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர். திருவள்ளுவர் 1,500 ஆண்டுகளுக்குமுன் மயிலார்ப்பூரில் வாழ்ந்தார் என்று அவர் சொல்வது, செனெக்கா வாழ்ந்த கி. பி. முதல் நூற்றாண்டுக்கு நெருங்கிவருகிறது. ஆயினும், “செனெக்காவின் நூல்கள் திருவள்ளுவர் 1,500 ஆண்டுகளுக்குமுன் மயிலார்ப்பூரில் வாழ்ந்தார்” என்றும்கூடப் பொருள்கொள்ளும் வகையில் வேலென்டீனின் பதிவு உள்ளது. இதனால், காலமயக்கம் எழுகிறது. செனெக்கா என்னதான் சொல்கிறார் என்பதனைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுமாயின், இணையத்தில் கிடைக்கும் செனெக்காவின் நூல்களில் தேடி அவர் எந்த இடத்தில் திருவள்ளுவரைப்ப
ற்றிக் குறிப்பிடுகிறார் என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.
மேலும், திருக்குறளில் நிறைய இடைச்செருகல்கள் உண்டென ஆய்ந்தோர் சொல்கின்றனர். அது போன்ற இடைச்செருகல்களைக் குறிப்பறிந்த பின்னரே திருக்குறளின் காலத்தைக் கணிக்க வேண்டும். திருக்குறளில் பொதிந்துள்ள மெய்யியல் கருத்துகளை வைத்து, அந் நூல் கி. மு. 6 அல்லது 5ஆம் நூற்றாண்டினதாயிருக்குமெனக் கூறுவாருண்டு.
எப்படியாயினும், திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் கி. மு. 31 என்று தமிழறிஞர்கள் கூடி ஒருதலையாக முடிவுசெய்தது பெரும் பிழையென்பது அகன் அவர்களின் கருத்துமாகும்.
இந் நூல் முழுவதும் சொல்லாய்வுகள் பரந்து கிடக்கின்றன. தானே ஒளிர்வது ‘நாள்மீன்’ என்றும், தானே ஒளிராதது ‘கோள்மீன்’ என்றும் விண்மீன்களைப் பிரித்துக்காட்டுவது; ‘சிந்தை’ எனும் சொல்லின் வழிவந்த ‘சிந்தனை’ என்பது தமிழ்ச்சொல்லே என்பது; ‘நாளிகை’ என்பதே ‘நாழிகை’ என்றானதென்பது; ‘ஓரை மாதப்பெயர்’களை ‘நாள்மீன் மாதப்பெயர்’களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது; ‘விண்ஞாலம்’ என்பதே ‘விஞ்ஞானம்’ ஆனதென்பது; ‘மேகம்’ என்பது தமிழ்ச்சொல்லே என்பது; ‘புரம்’ என்பதும் ‘புரி’ என்பதும் வெவ்வேறு நகரமைப்புகளைக் குறிப்பனவென்பது முதலானவையெல்லாம் ஆசிரியரின் சொல்லாய்வுத் திறனைக் காட்டுவன.
இளவேனில் பருவத்தில் சித்திரையில் தொடங்குகின்ற ஆண்டு பிறப்பே இயற்கையின் இயங்கியலோடு இயைந்ததெனக் கூறும் நூலாசிரியர் அதனை ‘வருடப் பிறப்பு’ என்றும், உழவுத்தொழிலோடு தொடர்புடைய ஆண்டுப்பிறப்பை ‘மாதப்பிறப்பு’ என்றும் நயமுடன் வேறுபடுத்திக் காட்டுகிறார் (பக்கம் 49). இதனை மறுப்பது எளிதன்று.
ஆயினும், கடல்கொண்ட குமரிக்கண்டத்திலிருந்த ஏழ்தெங்க நாடுதான் இன்றைய சாவகம் (Java) என்பதும், சுமத்திரா தீவுதான் ஏழ்மதுரைநாடு என்பதும், ‘கழிபொருநை’யே ‘கலிபோர்னியா’ என்று கூறி அது குமரிநாட்டில் இருந்தது என்பதும், பாப்புவா கினியாத் தீவுதான் ஏழ்முன்பாலைநாடு என்பதும், சாலமோன் தீவுகள்தான் ஏழ்பின்பாலைநாடு என்பதும், மைக்கிரோனேசியப் பகுதித்தான் ஏழ்குணக்கரைநாடு என்பதும், ஈழத் தீவுகள்தான் ஏழ்குறும்பனைநாட
ு என்பதும் உலகப் புவியலைச் சிக்கலுக்குள்ளாக்கலாம். வெறும் வாயை மென்றுகொண்டிருக்கும் தமிழ்ப்பகைக்கு அஃது அவலாக ஆகிவிடக் கூடாது.
இருப்பினும், தமிழரின் வரலாற்று மெய்ம்மைகளை எளிமையான அழகுத் தனித்தமிழில் பாடநூலைப்போல் ஆக்கிப் பொறிஞர் அகன் வெள்ளோட்டம் விட்டுள்ளார். ‘மெய்ம்மை’ என்னும் இந்த அரிய படைப்பு, தமிழரில் இளையத் தலைமுறை தன்னையும் தன் இனத்தின் வரலாற்றையும் அறிந்துகொள்ள உதவும் என்பதில் எள்முனை அளவேனும் ஐயமில்லை. ஆசிரியரின் ஆக்கப்பணி போற்றுதற்குரியது.
குணா
வெண்களூர்
17.07.2017
21 நவம்பர், 11:34 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக