திங்கள், 15 மே, 2017

நிலமளந்த இராசராசன் சர்வே முறை

நிலமளந்த இராசராசன்

முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் 
செவ்வாய், 16 நவம்பர் 2010 19:43 
thanks to http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11461:2010-11-16-14-16-22&catid=25:tamilnadu&Itemid=137

தமிழக வரலாற்றில் சோழராட்சிக் காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது. இதற்கு அடிப்படைக் காரணமாய்த் திகழ்ந்தவன் மாமன்னன் இராசராச சோழனாவான். அப்பெருமகனின் மகத்தான சாதனைகளில் குறிப்பிடத்தக்கவை நிலமளந்து நாட்டுப் பகுப்பு செய்தமையும், ஊர்ச் சபைகளும் மக்களும் பயன் பெற திருக்கோயில்களில் பொதுவுடைமை வங்கிகளைச் செயல்படுத்தியமையும் ஆகும்.  இராசராசனின் ஆட்சிக் காலத்திற்கு முன்பு சோழநாடு, நாடு அல்லது கூற்றம் என்ற பிரிவுகளைக் கொண்டு திகழ்ந்தது. 
சோழ மண்டலம்
      தொன்மைக் காலத்திலிருந்தே சோழ நாடு என்றழைக்கப்பட்ட பெயர் முதன்முதலில் இராசராசன் காலத்தில்தான் ‘சோழமண்டலம்’ என்றழைக்கப் பட்டது. இதனை இம் மன்னனது 23ஆம் ஆட்சி யாண்டின் 35ஆம் நாளில் வரையப்பட்ட கல்வெட்டொன்று எடுத்தியம்புகிறது.  எனவே ‘சோழ மண்டலம்’ என்ற சொல்லாட்சி கி.பி. 1009 இலிருந்து தான் காணப் படுகிறது. இக்கல்வெட்டு தென் ஆர்க்காடு மாவட்டம், விழுப்புரம் வட்டம், திருவாமாத்தூர் அபிராமேசுர சுவாமி திருக்கோயிலில் உள்ளது.  இச்சாசனத்தில் ‘சோழ மண்டலத்து அருமொழித் தேவ வளநாட்டு மங்கள நாட்டுப் புதுக்குடி’ எனும் ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது.  
      சோழ நாடு பல உட்பிரிவுகள் கொண்ட நாடுகள் அல்லது கூற்றங்களாகப் பிரிக்கப்பட்டிருந்ததை இப்பெரு மன்னன் மாற்றி அமைத்து, சோழ நாட்டை மிகப் பரவலாக விரிவடையச் செய்து அதற்குச் சோழ மண்டலம் எனும் பெயரைச் சூட்டி, பின்பு இம் மண்டலத்தைப் பல வளநாடுகளாகப் பிரித்து, ஒவ்வொரு வளநாட்டையும் நாடு அல்லது கூற்றங் களாகவும், அவற்றை ஊர்ச் சபைகளாகவும் பிரிக்கச் செய்தனன். 
      இம்மன்னனது மற்றுமொரு சாதனை, இவன் தன் ஆட்சியின் 16ஆம் ஆண்டாகிய கி.பி.1001 இல் சோழ மண்டலம் முழுவதையும் அளக்குமாறு செய்தான். 
      மேலும், இம்மன்னனது காலத்தில் சோழநாடு, சோழ மண்டலம் ஆனது போல், தொண்டை நாடு - செயங்கொண்ட சோழ மண்டலமென்றும், பாண்டி நாடு - இராச ராச மண்டலமென்றும், நுளம்பபாடி - நிகரிலி சோழ பாடியாகவும், ஈழம் - மும்முடிச் சோழ மண்டலமாகவும் பெயர் மாற்றம் பெற்றன. இவனது மைந்தன் இராசேந்திரன் காலத்தில் கங்கபாடி - முடி கொண்ட சோழ மண்டலமென்றும், தடிகை பாடி - விக்கிரம சோழ மண்டலமென்றும், நுளம்பபாடி நிகரிலி சோழ மண்டலமென்றும் பெயர் மாற்றங்கள் பெற்றமை யோடு இம்மன்னர்களின் அதிகாரிகளான ‘மண்டல முதலிகளால்’ அரசு நிருவாகம் மேற்கொள்ளப்பட்டது. 
சோழ மண்டல எல்லை
“கடல்கிழக்கு தெற்குக் கரைபுரள  வெள்ளாறு 
குடதிசையில் கோட்டைக் கரையாம் வடதிசையில் 
ஏணாட்டு வெள்ளாறு இருபத்து நாற்காதம் 
சோணாட்டுக்கு எல்லையெனச் சொல்”
       என்று சோழ மண்டலச் சதகம் குறிப்பிடுகிறது. 
      இப்பாடல் மற்றும் சோழப் பெருமன்னர்களின் கல்வெட்டுக் குறிப்புகள் ஆகியவற்றைத் தொகுத்து நோக்கும்போது சோழ மண்டலத்து எல்லையாகக் கிழக்கே வங்கக் கடலும், மேற்கு எல்லையாகக் கொல்லி மலையிலிருந்து புறப் பட்டுத் தெற்கு நோக்கிப் பாய்ந்து காவிரியில் கலக்கும் கரைப் போத்தனாறும், (இது திருச்சி நாமக்கல் பெருவழியில் முசிறிக்கு மேற்கே 12 கல் தொலைவில் உள்ளது) காவிரிக்குத் தென்கரையில் குளித்தலைக்கு மேற்கே திருக்காம் புலியூரை ஒட்டிய கோட்டைக் கரையும், வட எல்லையாகத் தென் ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள ஏணாட்டு வெள்ளாறும், தென் எல்லையாகப் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்குத் தெற் காகச் செல்லும் வெள்ளாறும் ஆகும். 
      பழைய சோழ நாடு விரிவடைந்து சோழ மண்டலமாக அழைக்கப்பட்டபோது இதனுடன் வடதிசையில் இணைந்த ஒரு பகுதி ‘நடுவில் நாடு’ என அழைக்கப் பட்டது. இப்பகுதி கொள்ளிடத்தின் வட கரைக்கும் பெண்ணையாற்றின் தென் கரைக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இது இராசேந்திர சோழ வளநாடு. கங்கை கொண்ட சோழ வளநாடு, இராசராச வளநாடு என்ற மூன்று வளநாட்டுப் பகுதி களைத் தன்னுள் கொண்டு திகழ்ந்தது. திருவண்ணாமலை, செஞ்சி, திண்டிவனம் என அழைக்கப்படும் வட்டங்கள் அக்காலத்தில் முறையே வாண கோப்பாடி, சிங்கபுர நாடு, ஓய்மா நாடு என்ற பெயர்களில் சோழ மண்டலத்தின் வட பகுதிகளாகத் திகழ்ந்தன. சோழ மண்டலத்து நடுவில் நாடு கி.பி.13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி யிலிருந்து ‘நடுவில் மண்டலம்’ என்ற பெயர் மாற்றம் பெற்றுச் சோழ மண்டலத்திலிருந்து பிரிந்து தனி மண்டல மாயிற்று. 
      இராசராசன் (கி.பி. 985-1014) காலத்திலிருந்துதான் சோழ மண் டலம் வளநாடுகளாகப் பிரிக்கப் பட்டு, அவை நாடு அல்லது கூற்றங் களாகவும் பிரிக்கப்பட்டதைக் கண் டோம். ஒவ்வொரு நாட்டுப் பகுதி யிலும் (கூற்றத்திலும்) பல ஊர்ச் சபைகள் அடங்கியிருந்தன.  வள நாடு என்ற அமைப்பு மாவட்டத் திற்கும் நாடு அல்லது கூற்ற மென்பது வட்டம் அல்லது தாலுக்கா என்ற தற்போதைய நாட்டுப் பிரிவு களுக்கும் ஒப்பானவை யாகும்.  சோழ மன்னர்கள் தாங்கள் பெற்ற சிறப்பு விருதுப் பெயர்களையே வளநாடுகளுக்குப் பெயர்களாக இட்டனர். 
      எடுத்துக் காட்டாக இராச ராசனின் விருதுப் பெயர்களாக கேரளாந்தகன், பாண்டிய குலாசனி, சத்திரியசிகாமணி, அருண்மொழித் தேவன் முதலான பெயர்கள் வள நாடுகளுக்குச் சூட்டப் பெற்றுள்ளன.  இதே போன்று சோழ அரசியர்களான தரணிமுழுதுடையாள், உலமுழுது டையாள், உலகுடை முக்கோக் கிழானடி, முதலான பல பெயர்களும் வளநாடுகளுக்குச் சூட்டப் பெற் றுள்ளன.  ஒரு மன்னன் காலத் திலிருந்த வளநாட்டுப் பெயர் மற்றொரு மன்னனால் மாற்றப் பட்டது. எடுத்துக்காட்டாக சத்திரிய சிகாமணி வளநாடு என்ற முதல் இராசராசன் காலத்து வளநாடு முதற் குலோத்துங்கன் காலத்தில் குலோத் துங்க சோழ வளநாடு எனப் பெயர் மாற்றம் பெற்றது. அனைத்துச் சோழ மன்னர்களின் கல்வெட்டு களையும் தொகுத்து நோக்கும் போது 48இற்கும் மேற்பட்ட வளநாட்டுப் பெயர்கள் நமக்குக் கிடைக்கின்றன. 
திருக்கோபுரத்தில் உலகளந்த கோல்
      நாகை மாவட்டம் திருவாவ டுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான திருவாலங்காடு வடவாரன்யேஸ் வரர் திருக்கோயிலின் இரண்டாம் கோபுர வாயில் உட்புற அதிஷ் டானத்தில் முதலாம் இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டொன்று காணப் பெறுகின்றது. அதில், “ஸ்வஸ்திஸ்ரீ திருவுலகளந்த கோலுக்கு தஞ்சாவூர் உடையார் ராஜ ராஜீஸ்வரமுடையார் கோயில் கல்வெட்டுப் படி ஒப்பிட்டு வந்த கோல்படி” என்ற சொற்றொடர் ஒரே நீண்ட வரியில் எழுதப் பெற்றி ருப்பதோடு, அவ்வரிக்கு நேர் எதிராகச் சற்றுத் தள்ளி ஒரு நட்சத்திரக் குறியீடும் காணப் பெறுகின்றது. 
      1926 ஆம் ஆண்டில் இந்தியக் கல்வெட்டுத் துறையினர் இக்கல்வெட்டைப் (எண் 97/1926) பதிவு செய்திருந்த போதும் இது வரை அதன் வாசகமோ அல்லது கோலின் அளவோ வெளியிடப் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.  இக்கல்வெட்டைப் படி எடுத்து, அதில் குறிக்கப் பெற்றுள்ள அளவீடு தஞ்சைப் பெரிய கோவி லான இராஜராஜேச்சரத்தில் கல் வெட்டாகக் காணப் பெறுகின்றதா என ஆராய முனைந்த போது அக்கோயிலின் இரண்டாம் கோபுர மான இராஜராஜன் திருவாயிலின் உட்புற அதிஷ்டானப் பகுதியில் மூன்று குறியீடுகளுடன் அளவுகோல் குறிக்கப் பெற்றிருப்பது கண்டறியப் பட்டது. 
      மாமன்னன் முதலாம் இராசராச சோழனின் சாதனைகளுள் தலையாயதாகப் போற்றப் பெறுவது சோழ மண்டலம் முழுவதையும் அளந்தமையாகும். 
      தன் ஆட்சிக்குட்பட்ட நிலப் பரப்பை உள்ளவாறு அளந்து பதிவு செய்தாலன்றி, நில நிர்வாக அமைப்புச் செம்மையாகச் செயல்பட முடியாது என்பதை உணர்ந்த அப்பேரரசன் தன் ஆட்சியின் 16 ஆம் ஆண்டாகிய கி.பி.1001 இல் சோழ மண்டலம் முழுவதையும் அளக்கு மாறு ஆணையிட்டான். அப்பணி குரவன், உலகளந்தான், இராஜராஜ மாராயன் தலைமையில் தொடங்கப் பெற்று இரண்டாண்டுகளில் நிறை வேறியது.  அப்பணிக்குப் பயன் படுத்தப் பெற்ற நில அளவைக் கோல் பதினாறு சாண் நீளமுடையது எனப் பிற்காலச் சோழர் வரலாறு எழுதிய வை.சதாசிவ பண்டாரத்தார் தம் நூலில் (பக். 129) குறிப்பிட்டுள்ளார். அதற்கான சான்றுகள் ஏதும் அவரால் குறிப்பிடப் பெறவில்லை. 
      இராசராசசோழனுக்குப் பின்பு முதலாம் குலோத்துங்கச் சோழன் மீண்டும் ஒரு முறை சோழநாடு முழுவதையும் அளந்து நில அளவை முறையை ஒழுங்குப் படுத்தினான்.  அப்பணி கி.பி.1086 ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்று இரண்டாண்டுகளில் முடிவெய்தியது என்பதைக் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன.  அவற்றில், “நம் உடையார் சுங்கந்தவிர்ந்தருளின குலோத்துங்க சோழ தேவர்க்கு 16ஆவது திருவுலகளந்த கணக்குப் படி நீக்கல் நீங்கி” - என்றும் “சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழ தேவர்க்குப் பதினாறாவது அளக்கக் குறைந்த நிலம்” என்றும் அந் நிகழ்வுகள் குறிக்கப் பெற்றுள்ளன. 
      திருவாலங்காட்டுக் கல் வெட்டின்படி உலகளந்த கோலின் அளவு 128.5 அங்குலம் உள்ளது என்பதும், தஞ்சையில் காணப் பெறும் குறியீடுகளின் முதல் இரண்டு குறியீடுகளுக்கிடையே உள்ள தூரம் 128.5 அங்குல மாகவும், இரண்டாம் குறியீட் டிற்கும் மூன்றாம் குறியீட் டிற்கும் இடையே உள்ள அளவு 29 அங்குலமாக இருப்பதும் அறியப் பட்டது. 
      இவ்வேந்தன் ஆணையின் படி அப்பணியை நிறைவேற்றி யவர்கள் திருவேகம்பமுடை யானான உலகளந்த சோழப் பல்லவராயன், குளத்தூருடையான் உலகளந்தானான திருவரங்க தேவன் என்போராவர் என்றும், அப்பெரு வேந்தனது கல் வெட்டுகள் வழி அறிய முடிகிறது.  இச்சான்றுகளால் சோழப் பெரு வேந்தர்களின் ஆட்சிக் காலத்தில் இருமுறை சோழ மண்டலம் துல்லியமாக அளக்கப் பெற்றது என்பதறிய முடிகிறது. 
தஞ்சைக் கல்வெட்டுக்களில் கீழ்க்கணக்கு 
      தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் மா மன்னன் இராசராசன் அளந்த பல ஊர்களின் பட்டியல் காணப் பெறுகின்றது.  அக்கல்வெட்டுக்கள் வரிசையில் ஒரு கல்வெட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாலையூர் என்ற ஊரின் மொத்த பரப்பளவைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. 
      “தெக்கடுவாயான அரு மொழி தேவவளநாட்டு இங் கணாட்டு பாலையூர் பள்ளியுங் கணி முற் றூட்டும் உட்பட அளந்த படி நிலம் நூற்றுமுப்பது நான்கேய் எட்டுமா வின் கீழ் முக்காலே மும்மா வரையரைக் காணி முந்திரிகைக் கீழ்நான்குமா” என்பது கல்வெட்டு வாசகமாகும். 
      இது 130 வேலியும் சொச்ச முமாகும். ஒரு வேலிக்குக் கீழ் அளவாக - ‘மா’வும், பிற சிறு அளவுகளும் குறிப்பிடப் பெற் றுள்ளன. சிறு அளவுகளை அக் காலத்தில் ‘கீழ்க்கணக்கு’ எனக் குறிப்பிட்டனர். அந்த அளவுகளின் பட்டியலை இனிக் காண்போம். 
கீழ்க்கணக்கு 
1 மா        - 1/20 வேலி 
அரைமா     - 1/40 
முக்காணி   - 3/80 
காணி -- 1/80 
அரைக்காணி - 1/160 
முந்திரி     - 1/320 
கீழ் முக்கால் - 3/1280 
கீழ் அரை    - 1/640 
கீழ் கால்    - 1/1250 
கீழ் நாலுமா - 1/1600 
கீழ் மூன்று வீசம்   -3/5120 
கீழ் மும்மா        -3/6400 
கீழ் அரைக்கால்    - 1/2560 
கீழ் இருமா        - 1/3200 
கீழ் வீசம்          - 1/5120 
கீழ் ஒருமா        - 1/6400 
கீழ் முக்காணி      - 3/25600 
கீழ் அரைமா       - 1/12800 
கீழ்க்காணி         - 1/25600 
கீழ் அரைக்காணி   - 1/51200 
கீழ் முந்திரி        - 1/1,02,400 
      ஒரு வேலி நிலத்தில் கீழ் முந்திரி என்னும் சிறு அளவான ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து நானூறு என்ற அளவில் கூட நிலத்தை அளந்து பதிவு செய்துள்ளனர் என்பதை இராசஇராச சோழனின் தஞ்சைக் கோயிலிலுள்ள பல கல்வெட்டுகள் எடுத்தியம்புகின்றன.  
      சோழ மண்டலம் முழு வதையும் அளந்த அப்பெருமகன் முறையான பதிவேடுகளில் அவற்றைப் பதிவு செய்ததோடு அதற்கென தனித் துறையையும் கொண்டு நாட்டு மக்களுக்கு நல்லதொரு குடியாட்சியும் நல்கினான்.  அப்பெருமகனின்  சாதனைகள் முழுவதும் தஞ்சைப் பெரிய கோயிலில் கல்லெழுத்துச் சாசனங்களாகக் காட்சி நல்குகின்றன.
(தமிழர் கண்ணோட்டம் செப்டம்பர் 2010 இதழில் வெளியானது)
சோழன் சோழர் நிலம் அளவை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக