வியாழன், 4 மே, 2017

தாளமுத்து நாடார் இந்தியெதிர்ப்பு இந்தி ஹிந்தி 1939

aathi tamil aathi1956@gmail.com

12/3/15
பெறுநர்: எனக்கு
Kathir Nilavan
முதல் இந்தி எதிர்ப்பு போரில் உயிர் நீத்த "இரண்டாம்
மொழிப்போர் ஈகி" தாளமுத்து நினைவு நாள்
12.3.1939
இராசாசி ஆட்சியில் பள்ளிகளில் கொண்டு வரப்பட்ட
கட்டாய இந்தியை எதிர்த்து தமிழகம் போர்க்கோலம்
பூண்டது. அப்போது தமிழ்மொழி காக்கும் போரில்
இருவர் உயிர்நீத்தனர். முதலாமவர் நடராசன். அதில்
இரண்டாமவர் தாளமுத்து ஆவார். இவரின் சொந்த ஊர்
குடந்தை. சென்னை இந்து தியாலாஜி உயர்நிலைப்பள்ளி
முன் 13.9.1938இல் நடைபெற்ற
இந்தி எதிர்ப்பு மறியலில் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஜார்ஜ் டவுன் நீதிபதி மாதவராவ்
முன்னிலையில் நேர்நிறுத்தப்பட்ட
போது எத்தனை நாட்கள் சிறை என்றாலும்
எமக்கு கவலை இல்லை.
சிறைச்சாலையை மகிழ்வோடு ஏற்பதாக
தாளமுத்து நெஞ்சு நிமிர்த்தி கூறினார்.
ஐந்து மாதகாலமாக
சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த தாளமுத்து கடும்
நோய்வாய்ப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.
இவரைப் போலவே, கைது செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட
சமூகத்தைச் சேர்ந்த நடராசன் என்பவரும்
நோய்வாய்ப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டிருந்தார். நோய் முற்றிய நிலையில்
15.1.1939இல் நடராசன் உயிர் பிரிந்தது. அவரின்
மரணம் இந்தி எதிர்ப்புப் போரை தீவிரப்படுத்திய
நிலையில், 12.3.1939இல் தாளமுத்துவும் உயிர்
நீத்தார். நேற்று... நடராசன், இன்று... தாளமுத்துவா?
தமிழர்கள் கண்ணீர் செறிந்தனர்.
அன்று மாலை வேளையில் தாளமுத்துவின் உடல்
வாழ்க்கையின் இறுதிப் பயணத்தை தொடங்கியது.
தாளமுத்துவின் வயதான பெற்றோரும், அவருடைய இளம்
மனைவியும் அழுத புரண்ட காட்சி கண்டு ஊர்வலத்துடன்
சென்ற தமிழர் அத்தனைப் பேர் கண்களிலும் நீர்
முத்துமுத்தாய்த் தெறித்தது. பத்தாயிரம்
தமிழரோடு புறப்பட்ட ஊர்வலம் இந்து தியலாஜிகல்
பள்ளியை வந்தடைந்த போது, அனைவரும் பேராவேசம்
கொண்டு தமிழ்வாழ்க, இந்தி வீழ்க என்று முழங்கினர்.
தலைவர்கள் ஊர்வலத்தை நகர்த்துமாறு கேட்டுக் கொண்ட
போதும் நீண்ட நேரம் வரை அந்த
இடத்தை விட்டு அகலாது வீரமுழக்கமிட்டனர்.
ஊர்வலம் ஒருவழியாய் சென்னை மூலக்கொத்தளம்
சுடுகாட்டை வந்தடைந்தது. நடராசனைப்
புதைத்து ஈரம் கூட காயாத அதே மூலக்கொத்தளத்தில்
தான் தாளமுத்துவின் உடலும் புதைக்கப்பபட்டது.
அதற்கு முன்னர் சி.பாசுதேவ் தலைமையில் இரங்கற்
கூட்டம் நடைபெற்றது. தளபதி அண்ணாவோ அனைவரின்
நெஞ்சைப் பிழியும் வகையில் உரை நிகழ்த்தினார்.
அது வருமாறு:
"முன்பு தோழர் நடராசன் அடக்கமான காலத்தில் மீண்டும்
இத்தகைய நிகழ்ச்சி தமிழர்கட்கு ஏற்படாதென
நினைத்தேன். ஆனால் நாடார் திலகம்
தாளமுத்து இறந்தது காண மனம் கலங்குகிறது.
வழி நெடுக ஆயிரமாயிரம் தமிழர்கள் கண்ணீர்
விட்டு அழுதனர். என்னைப் பொறுத்தவரை தோழர்கள்
நடராசன், தாளமுத்து மரணத்தை என்னுடைய அண்ணன்,
தம்பி மரணம் என்றே கருதுகிறேன்.
நடராசன் மணமாகதவர். ஆனால் தாளமுத்து மணமானவர்.
குடும்பத்தை ஒழுங்காக நடத்த இருந்த சமயத்தில்
தாளமுத்து இறந்து விட்டார்.
நடராசனை தாளமுத்தை நாம் இழந்தோம். கண்ணீர் விட்டோம்.
கலங்கினோம். நெஞ்சு துடித்தோம்.
நிலை தடுமாறினோம். எதைச் செய்வது,
எங்கு போவது என்பதறியாது ஏங்கித்தவித்தோம்.
ஆனால் இதே சமயத்தில் ஆச்சாரியார், மார்தட்டி,
கருப்புக் கண்ணாடியைத் துடைத்த வண்ணம் கலகலவெனப்
பேசுவார். ஏன் பேச மாட்டார்? தமிழன் ஆச்சாரியார்
காலின் கீழ் இருக்கிறான். அவர் நினைத்தால் பல
தாளமுத்துகளும் நடராசன்களும் மயானம் வர
முடியும். ஏன், ஆச்சாரியார் நினைத்தால் நீங்களும்
நானும் இங்கு வர வேண்டியது தான். இது மிகவும்
வெட்ககரமான நிலை.
இவர்கள் மாண்டார்கள். நாம் கண்ணீர் விட்டோம்.
இனி இந்தி படிக்கும் மாணவர்கள் இவ்விருவர் உடலைத்
தாண்டிக் கொண்டுதான் படிக்கச் செல்ல வேண்டும்.
இரண்டு மணிகளை இழந்தோம். தமிழர்
ஆட்சி ஏற்படும்போது இவ்விரு வீரர்களின்
தியாகத்தை அடிப்படையாகக்
கொண்டே அது எழுப்பப்படும். விடுதலை பெற்ற
தமிழகத்தில் தலைவர் பெரியாரை நடுவில்
வைத்து இறந்த இருமணிகளையும் பக்கத்தில்
வைத்து உருவச்சிலை எழுப்ப வேண்டும்."
அண்ணா கூறியபடி விடுதலைப் பெற்ற தமிழகம்
கிடைத்ததா? கிடைக்கவில்லையே! திராவிட பொய்மான்
வேட்டைக்கு அல்லவா அண்ணா சென்றார். அதிலும்
தோல்வி தானே கண்டார்.
யாரை நடுவில் வைக்க வேண்டும் என்று கூறினாரோ அவர்
கூறிய அந்த பெரியாரும் கூட மத்திய
அரசு வேலைக்கு இந்தியை படிக்கும்படி தானே வேண்டினார்.
தமிழ்மொழி காத்திட தாளமுத்து நடராசன்கள் செய்த
ஈகங்கள் இன்று வீண் போய்விட்டது. திராவிட
இயக்கங்களால் தமிழ்நாட்டில் தமிழ் மொழியை வாழ
வைக்க முடிந்ததா?
தமிழைக் கொல்ல வரும் இந்தி வாளைத் தடுக்க ஆங்கிலக்
கேடயம் கொண்டு தடுப்பதாக கூறினார்கள்.
நடந்தது என்ன? தமிழ் வாளால் பட்ட காயங்களை விட
கேடயத்தால் பட்ட காயங்களே தானே அதிகம். தமிழ்தான்
அந்நியமொழியை வீழ்த்தும் வாளுமாகும், கேடயமாகும்
என்பதை தமிழர்க்கு இனியாவது உரக்கச் சொல்ல
முன்வருவார்களா? —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக