ஞாயிறு, 17 நவம்பர், 2019

தமிழகம் சங்ககாலம் முதல் இன்று வரை கல்வி யில் சிறந்தது

aathi1956

<aathi1956@gmail.com>
23 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 3:11
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>

பழந்தமிழகத்தில் கல்வி
அரசன் முதல் ஆண்டி வரை பழந்தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தரப்பிலும் கழகக்காலப் புலவர்கள் இருந்துள்ளனர். அதன் காரணமாக பழந்தமிழ்ச் சமூகத்தில், பரந்துபட்ட அளவில், அனைத்துத் தரப்பு மக்களும் கல்வியறிவு கொண்டிருந்தனர் என்பது உறுதியாகிறது. ஒதுக்குப்புற கிராமப்பகுதியில் வாழும் ‘கள்’ விற்பவர்கள் கூடத் தனது பானையில் தனது பெயரை எழுதி வைக்கும் அளவு தமிழகம் பரந்த அளவிலான கல்வி அறிவைக் கழகக் காலத்தில் கொண்டிருந்தது என தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் கூறுகிறார். மேலும் இந்தியாவில் கிடைத்த 1,00,000 கல்வெட்டுகளில் தமிழகத்தில் 60,000 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன அதில் 95% கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்கள். ஆகவே பண்டைய தமிழகம் பரந்த அளவில் கல்வி அறிவு பெற்றிருந்தது என்பதை இந்த கல்வெட்டுக்கள் எண்ணிக்கையும் உறுதி செய்கிறது.
பண்டைய வட இந்தியாவில் அரசால் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் மட்டுமே எழுத்துப் பொறிப்புகளைக் காண முடிகிறது. ஆனால் தமிழகத்தில் சாதாரண மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகளில், ஈமச்சின்னங்களில், மதிப்புமிக்க, மதிப்பற்ற தொல்பொருட்களில், நாணயங்களில், மோதிரங்களில் என எண்ணற்ற சாதனங்களில் எழுத்துப் பொறிப்புக்களைக் காண முடிகிறது. அது போன்றே மிகமிகச் சாதாரண மக்கள்கூட எழுதப்படிக்க மட்டுமல்ல, கழகக்கால செவ்வியல் இலக்கியங்களைப் படைக்கும் அளவு கல்வியறிவு கொண்டிருந்தனர். ஆனால் இதற்கான கல்வி முறை எப்படி இருந்தது? அதுவும் உயர்தரமான சங்க இலக்கியங்களைப் படைக்குமளவான கல்வியறிவை, புலமையை சாதாரண மக்கள் எப்படி பெற்றார்கள்? வட இந்தியாவில் இருந்தது போன்ற குருகுலக் கல்விமுறை பழந்தமிழகத்தில் இருக்கவில்லை.
ஆனால் பழந்தமிழ்க் கல்விமுறை சிறந்ததாகவும், வேறு பட்டதாகவும் அனைத்து மக்களும் படிக்கத்தக்க வகையிலும் இருந்துள்ளது. “அன்றைய கல்வி, கற்பவனைச் சான்றோன் ஆக்கியது; அவனை உலக வாழ்வுக்குத் தகுதிப்படுத்தியது; கற்றோர் அவையிலும், ஊர்ப்பொது மன்றங்களிலும் முந்தியிருக்கச் செய்தது; அது வாழும் உலகை அதன் இன்பங்களை உறுதிப்படுத்துவதாக இருந்தது; மனித ஆற்றலில் விளங்கும் தன்னிறைவைக் கொண்டு வந்தது; அதில் குழந்தைகளின் மீதான அன்பும், இல்லறத்தின் மீதான பற்றும் இருந்தது; காதல்செய்ய, மணம்புரிய, இல்வாழ, பொதுநலம் பேணி பிறர்க்கென வாழ இக்கல்வி கற்போரைத் தகுதிப் படுத்தியது” என்கிறார் தனிநாயகம் அடிகளார்.
கல்வி கற்றத் தமிழ்ப் புலவன் புகழ்பெற்ற அரசனுக்குச் சமம் என சோழ வேந்தன் ஒருவனிடம் நேருக்கு நேர் கூறுகிறார் கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவூர்கிழார், சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி கற்றவர்கள் பேரளவு மதிக்கப்பட்டனர் என்பதற்கு இது போன்ற பல சான்றுகளைக் காணலாம். சங்ககாலச் சமூகத்தில் கல்வியும் கற்றவனும் மதிக்கப்பட்டதால் அனைவரும் கல்வி கற்றவர்களாக இருந்தனர். சமண, பொளத்த மடங்கள் கி.பி.க்குப்பின் பெரு நகரங்களில்மட்டும் சிறிய அளவில் கல்வி கற்பித்தன. அவைகளின் கல்வியில் மதச்சார்பு இருந்தது.
ஆனால் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தின் சிற்றூர்களில் வாழும் சாதாரண மக்கள் கூட எழுதப் படிக்கவும், கழக இலக்கியம் போன்ற உயர்தரமான, மதச் சார்பற்ற இலக்கியங்களைப் படைக்கும் அளவும் கல்வியில் சிறந்திருந்தனர். பழந்தமிழகம் தனக்கே உரித்தான தனித்துவமான கல்வி முறையை மிகப் பழங்காலத்திலேயே நடைமுறைப்படுத்தி இருந்ததன் காரணமாக பழந்தமிழக மக்கள் கல்வியில் சிறந்து விளங்கினர். உலக அளவில் அன்றைய தமிழக மக்கள்தான் அதிக அளவில் கல்வி கற்றவர்களாக இருந்தனர் என்பதை இன்றைய அகழாய்வுச்சான்றுகள் உறுதி செய்கின்றன. இவ்விடயம் இன்றைய தமிழர்கள் பெருமைப்படவும், பின்பற்றவும் வேண்டிய ஒன்றாகும்.
பார்வை: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 105-109.
Balan Natchimuthu

எழுத்தறிவு கல்வெட்டு இலக்கியம் பழந்தமிழர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக