ஞாயிறு, 17 நவம்பர், 2019

பழந்தமிழர் நீர்மேலாண்மை அறிவியல் இலக்கியம் 1 2 3

Balan Natchimuthu
சங்ககால நீர்ப்பாசனம் - 1
நமது தமிழகம் 2500 ஆண்டுகளாக ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைக் கட்டுமானங்களைக் கட்டிப் பயன்படுத்தி வருகிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் இக்கட்டுமானங்கள் குறித்துப் பல பெயர்கள் உண்டு. உரிச்சொல் நிகண்டு இவைகளுக்கு, இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம், கண்மாய் என 18 பெயர்களைக் குறிப்பிடுகிறது. இவை போக வேறு பல பெயர்களும் உண்டு. இவ்வாறு தமிழில் நீர்நிலைகளுக்குப் பல பெயர்கள் இருப்பது என்பதே, பழந்தமிழர்கள் நீர்நிலைகளை உருவாக்குவதில் புகழ் பெற்றவர்கள் என்பதை உறுதி செய்கிறது. அதனை அவர்கள் 2000 வருடங்களுக்கும் மேலாகப் பயன்படுத்தி, பராமரித்து, பாதுகாத்தும் வந்துள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககாலத்தில் இறந்தவர்களை முதுமக்கள் தாழிகளில் புதைத்து வந்தனர். அவைகளில் பல ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு அருகிலேயே கண்டுபிடிக்கப்ப
ட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் மட்டும் முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட இடங்களின் அருகில் உள்ள 50 சங்ககால ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஏரிகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.
தமிழீழத்தில் கி.மு. 300ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு பசவங்குளம் என்ற ஏரி குறித்துத் தெரிவிக்கிறது. தமிழகத்திலும், தமிழீழத்திலும் மிகப்பழங்காலம் முதல் ஏரிகள் இருந்தன என்பதற்கு இந்தத் தரவுகளே சான்றாதாரங்களாக உள்ளன. மழை நீரைச் சேகரிப்பதும், அதனைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதைப் பழந்தமிழர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். அதனால்தான் வள்ளுவன் வான்மழை என்ற அதிகாரத்தைக் கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக, வைத்தான். இளங்கோவடிகள் தனது காப்பியத்தை, கதிரவன், திங்களோடு வான்மழையையும் போற்றித் தொடங்கினார். சங்ககாலப் புலவர்கள் அன்றைய ஆட்சியாளர்களிடம் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளைக் கட்டச் சொன்னார்கள். நீர்ப்பாசனத்தில் ஏற்படும் வளர்ச்சிதான் ஒரு நாட்டின் எல்லா வெற்றிக்கும் மூலகாரணம் என்பதை எடுத்துரைத்தார்கள். ஆட்சியாளர்களும் அதனை ஏற்றுச் செயல்படுத்தினார்கள்.
கி.மு 2ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த குடபுலவியனார் என்கிற புலவர் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடம், “வேந்தனே நீ மறு உலகத்தில் பெருஞ்செல்வத்தோடும், பெரும்பேற்றோடும் இருக்க விரும்புகிறாயா? இந்த உலகம் முழுவதையும் வென்று அதன் பேரரசன் ஆக விரும்புகிறாயா? உலகம் உள்ளவரை உன் புகழ் நிலைத்து நிற்கவேண்டும் என்று விரும்புகிறாயா? அப்படியானால் நீ நாடு முழுவதும் நீர்நிலைகளைப் பெருக்குவாயாக! இதனைச் செய்பவர்கள்தான் மூவகை இன்பத்தையும் பெற்று புகழ் பெறுவர்” என்கிறார். வெள்ளைக்குடி நாகனார் என்கிற இன்னொரு சங்ககாலப்புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம், “போர்க்களத்தில் உனதுபடை எதிரியை வென்று ஆர்ப்பரித்துக் கொண்டாடுவதற்கு மூலகாரணம் யாதெனில் உன் நாட்டு உழவர்கள் நிலத்தில் ஆழ உழுது விளைவித்த நெற்குவியலே ஆகும்” என்கிறார். இவர் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு. இந்த இரண்டு பாடல்களும் அன்று உணவு உற்பத்தியே, வேளாண்மை வளர்ச்சியே நாட்டினுடைய எல்லா வெற்றிற்கும் மூலகாரணம் என்ற உண்மை நிலையையும், அதற்கு நீர்நிலைகளைப் பெருக்குவதே சிறந்த வழி என்பதையும் தெளிவுபடுத்துகிறது எனலாம்.
கி.மு. 2ஆம் நூற்றாணடு கடியலூர் உருத்திரங்கண்ணனார் தான் பாடிய பட்டினப்பாலையில் கல்லணை கட்டிய இரண்டாம் கரிகாலன் காட்டை அழித்து, குளம் கட்டி, விளைநிலங்களைப் பெருக்கினான் என்கிறார். ஏரிகள் அன்று மிகச்சிறந்த தொழில்நுட்பத்தோடு கட்டப்பட்டன. ஏரி போன்ற நீர்நிலைகளின் அழிவு என்பது மிகப்பெரும் துயரச் சம்பவமாகக் கருதப்பட்டது. கி.மு. 3ஆம் நூற்றாண்டுக் கபிலர், பாரியின் பறம்பு நாடு மூவேந்தர்களால் தாக்கப்பட்டு அவன் தோல்வியடைந்தபின், அந்நாட்டில் உள்ள ஒரு குளம் பராமரிப்பு இன்றி, கவனிப்பாரற்றுப் பாழ்படுவதைப் பற்றி மிகவும் வருந்திப் பாடிய பாடல்தான் புறம்: 118ஆம் பாடலாகும். சங்ககாலத் தமிழர்கள் நீர்நிலைகளை உருவாக்குவதில் மட்டுமின்றி அதனை நன்கு பாதுகாத்துப் பராமரிப்பதிலும் சிறந்து விளங்கினர். நக்கண்ணையார் என்ற சங்ககாலப் புலவர், தனது அகம்: 252 ஆம் பாடலில் கடுமையான மழை பொழிந்து கொண்டிருக்கும் நடு இரவினிலே கூட தூங்காமல், பெரிய குளம் ஒன்று உடைபடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அதன் காவலன் குறித்துப் பாடியுள்ளார். கடும்மழையில் நடு இரவிலும் தூங்காமல் குளத்தைப் பாதுகாப்பது அவசியமாகிறது. ஏரிகளின் கரைகள், கலிங்கு, மதகுகள் போன்றவற்றைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும், ஏரிநீரைப் பாசனத்துக்குப் பிரித்து வழங்குவதும் ஆன பணிகளைச் செய்ய முறையான அமைப்பு ஒன்று இருந்துள்ளது என்பதை இப் பாடல் உறுதிப்படுத்துகிறது.
பார்வை: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 165 – 169.
20 ஜூலை,


Balan Natchimuthu
சங்ககால நீர்ப்பாசனம்(கல்லணை) - 2
தமிழகத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளில் மிகப் பழமையானதும், மிகப் பெரிய தொழில்நுட்பச் சாதனை எனக்கருதப்படுவதும், 2100 வருடங்களுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்து வருவதுமான கல்லணையைக் கட்டியவன் இரண்டாம் கரிகாலன் ஆவான். கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புண்ணியகுமாரன் என்கிற இரேனாட்டு சோழனது மலேபாடு செப்பேடு கரிகாலன் காவிரிக்கு கரை அமைத்தான் என்பதைத் தெரிவிக்கிறது. இலங்கை நூல் ஒன்று இலங்கை மக்களைச் சோழன் ஒருவன் அணை கட்டச் சிறைப் பிடித்துச் சென்றான் என்றும், அதற்குப் பழிவாங்க கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட கயவாகு தமிழகத்திற்குப் படையெடுத்துச் சென்று தமிழர்களை சிறைப் பிடித்து வந்தான் என்றும் தெரிவிக்கிறது. இந்த இரண்டு செய்திகளும் கி.பி. 2ஆம், 7ஆம் நுற்றாண்டுக்கு முன்பு கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டாம் கரிகாலன் காவிரிக்கு கரை அமைத்தான் என்பதை உறுதிப் படுத்துகின்றன. இரண்டாம் கரிகாலன் கல்லால் ஆன கட்டுமானத்தைக் கட்டி, காவிரிக்குக் கரை அமைத்து நீரைத்திருப்பி விடச்செய்தான். அது அணைக்கட்டு அல்லது கற்சிறை ஆகும்.
காவிரி ஆறு, காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரியும் இடத்தில், இரண்டுக்கும் இடையே திருவரங்கத்தீவு இருக்கிறது. திருவரங்கத் தீவின் மேல் முனையில் அதாவது கொள்ளிடம் பிரியும் இடத்தில், கொள்ளிடத்தின் நிலமட்டம் காவிரியின் நிலமட்டத்தைவிட 6 அடி உயரமாக இருக்கிறது. ஆகவே வெள்ளம் அதிகம் வரும்பொழுது மட்டுமே கொள்ளிடத்தில் நீர் செல்லும். பிற காலங்களில் காவிரியில் மட்டுமே நீர் போகும். ஆனால் இத்தீவின் கீழ்முனையில் கொள்ளிடத்தின் நிலமட்டம் காவிரியின் நிலமட்டத்திற்குச் சமமாக உள்ளது. அதுபோக கொள்ளிடத்தின் நிலமட்டச் சரிவு அதிகமாக உள்ளது. இவைகளின் காரணமாக திருவரங்கத்தீவின் கீழ்முனையில், வெள்ளம் வராத சாதாரண காலங்களில் கூட அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு காவிரியில் வரும் நீரும் கூட கொள்ளிடத்திற்கே திருப்பி விடப்பட்டுவந்தது. இதனால் காவிரியின் கீழ் உள்ள அனைத்து விளைநிலங்களிலும் அடிக்கடி நீர் இல்லாது போய்ப் பாசனம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தடுக்கக் கருதிய கரிகாலன், காவிரியில் திருவரங்கத்தீவின் கீழ் முனையில் அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதியில் பெரும் பாறைகளால் ஆன கட்டுமானத்தைக் கட்டி காவிரியின் கரையை பலப்படுத்தி உடைப்பை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தினான். அதன்மூலம் திருவரங்கத்தீவின் மேல்முனையில் காவிரிக்குப் பிரியும் நீர் வீணாகாது, எல்லாக் காலங்களிலும் பாசனத்துக்குக் கிடைக்க வழிவகை செய்யப் பட்டது. இது அன்றைய நோக்கில் ஒரு பெருஞ்சாதனையாகு
ம். அதற்குப் பயன் படுத்திய தொழில் நுட்பமோ அதைவிட ஒரு மாபெருஞ் சாதனையாகும்.
கி.பி. 1777ஆம் ஆண்டு மெக்கன்சி ஆவணக்குறிப்புகளில் அணைக்கட்டி என கல்லணை குறிப்பிடப்பட்டுள்ளது. பேயர்டு சுமித் (BAIRD SMITH)என்ற ஆங்கில பொறியியல் வல்லுனர் 1853ஆம் ஆண்டில் எழுதிய “தென்னிந்தியாவின் பாசனம்” என்கிற நூலில் கல்லணையை ஒரு மிகச் சிறந்த பொறியியல் சாதனை எனக் குறிப்பிடுகிறார். கல்லணையின் தொழில்நுட்பத்தைக் காண்போம். ஆழங்கான முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் மிகப்பெரிய பாறைகள் போடப்பட்டது. பாறைகளுக்கு அடியில் உள்ள மணல், ஆற்று நீரில் அரித்துச் செல்லப்பட்டதால் பாறைகள் மெதுவாக மணலுக்குள் இறங்கின. அவைகளின் மேல் களிமண் பூசப்பட்டு, அப்பாறைகளின் மேல் மீண்டும் பெரிய பாறைகள் வைக்கப்பட்டன. அதனால் கீழுள்ள பாறைகள் மேலும் ஆழத்திற்குள் புதைந்தன. பின் மீண்டும் களிமண் பூசப்பட்டு, பாறைகள் வைக்கப்பட்டன. கீழுள்ள பாறைகள் மேலும் புதைந்தன. கீழுள்ள பாறைகள் புதையப்புதைய தொடர்ந்து பாறைகள் வைக்கப்பட்டன. இறுதியில் கீழுள்ள பாறைகள் கடினத் தளத்தை அடைந்தவுடன், பாறைகள் இறங்குவது நின்று போனது. இவ்வாறு ஒன்றன்மேல் ஒன்றாக வைக்கப்பட்ட பெரும்பாறைகளும், அவைகளுக்கிடையேயான களிமண் பூச்சுகளும் இணைந்தே கல்லணை என்கிற மகத்தான அணை உருவாகியது.
கல்லணையின் இந்தத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு சர். ஆர்தர் காட்டன் அவர்கள் 1874ஆம் ஆண்டு கோதாவரியின் குறுக்கே தௌலீ சுவரம் என்ற அணைக்கட்டைக் கட்டினார். அது கோதாவரிச் சமவெளியை வளப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றது. தனக்குக் கிடைத்த பாராட்டுக்குக் காரணமான பழந்தமிழ்ப் பொறியாளர்கள் குறித்து, “ஆழங்காண முடியாத மணற்பாங்கான ஆற்றுப்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற தொழில்நுட்பத்தை இவர்களிடமிருந்து (தமிழர்களிடமிரு
ந்து) தான் தெரிந்து கொண்டோம். எங்களால் செய்து முடிக்கப்பட்ட ஆற்றுப்பாசனத் திட்டங்கள் தான் உலகின் பொறியியல் பணிகளில் முதன்முதலான மிகப்பெரிய நிதிசம்பந்தமான வெற்றிப் பணிகளாகும். இவ்வெற்றிக்கான ஒரே காரணம் யாதெனில் நாங்கள் இம்மக்களிடம் கற்றுக்கொண்ட அடித்தளம் அமைப்பது குறித்த பாடங்களே ஆகும். இம்முறையைக் கொண்டு ஆற்றுப்பாலங்கள், அணைக் கட்டுக்கள் போன்ற பல பாசனப் பொறியியல் கட்டுமானங்களை எளிதாகக் கட்டி முடித்தோம். அதற்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.” என 1874இல் தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் பாசன வரலாற்றில் தனக்கென ஓர் அழியாத இடம் பிடித்த சர். ஆர்தர் காட்டன் அவர்கள் இக்கல்லணைக்கு அதனால்தான் மகத்தான அணை (GRAND ANAICUT) எனப் பெயர் வைத்தார். அதுவே நிலைத்து விட்டது.
பார்வை: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 169-171
21 ஜூலை, AM 6:12 · பொது


Balan Natchimuthu
சங்ககால நீர்ப்பாசனம் – 3
கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாவீரன் அலெக்சாந்தரின் ஆசிரியர் அரிஸ்டாட்டில் மற்றும் அதற்கு முன்பு இருந்த தேல்ஸ் ஆகிய கிரேக்க அறிஞர்கள் நீரியல் சுழற்சி பற்றிய தெளிவற்ற சிந்தனைப் போக்கைக் கொண்டிருந்தனர். ‘கடலின் அடித்தளத்தில் நீர் உற்பத்தியாகிறது. கடலில் உள்ள நீர் மண்ணால் உறிஞ்சப்பட்டு பின் அது மலைகளில் இருந்து ஆறாக வெளிப்படுகிறது’. என்கிறார் தேல்ஸ். ‘குளிர்ச்சியான காலநிலைகளில் காற்று உறைந்து மழையாகப் பெய்கிறது’. என்கிறார் அரிஸ்டாட்டில். ஆனால் அதே காலகட்டத்தைச் சேர்ந்த சங்ககால அறிஞர்கள் நீரியல் சுழற்சி குறித்துத் தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்தனர். இரண்டாம் கரிகாலனைப் பாடிய கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பட்டினப்பாலை, ஒருபுறம் கடல்நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழை பொழிகிறது, மறுபுறம் பெய்த மழை ஆறுகளில் ஓடி கடலில் கலக்கிறது என்கிறது. இப்பாடலில் புலவர் நீரியல் சுழற்சியை புகார்த் துறையின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு ஒப்பிடுகிறார். நீரியல் சுழற்சி பற்றி, கிரேக்கர்களிடம் இல்லாத தெளிந்த சிந்தனை பழந்தமிழர்களிடம் இருந்தது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது.
திண்டுக்கல்லிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ஆத்தூரில் கருங்குளம், பகடைக்குளம், புல்வெட்டிக்குளம் ஆகிய மூன்று குளங்கள் ஒரே இடத்திலேயே அமைந்துள்ளன. முதல்குளம் இரண்டாவது குளத்தைவிட உயர்ந்த நிலமட்டம் கொண்டதாக உள்ளது. இரண்டாவது குளம் மூன்றாவது குளத்தைவிட உயர்ந்த நிலமட்டம் கொண்டதாக உள்ளது. முதல் குளத்தைக் கொண்டு மிகவும் மேடான நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இரண்டாவது குளத்தைக் கொண்டு அதற்கு அடுத்த நிலையில் உள்ள நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மிகவும் தாழ்வான நிலங்கள் மூன்றாவது குளத்தின் மூலம் பாசனம் பெறுகின்றன. இதன் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக்குளங்கள் 2100 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை எனத் தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோல் சிறந்த தொழில்நுட்பங்கள் கொண்ட பல சங்ககால ஏரி, குளங்கள் இன்றும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
ஏரிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடராக அமைந்திருப்பதே தொடர் ஏரிகள் எனப்படும். இந்தத் தொடர் ஏரிகளில் பாசன நீரானது மீண்டும் மீண்டும் பலமுறை பயன் படுத்தப்பட்ட பின்னரே இறுதியாக வெளியேறுகிறது. தொடர் ஏரிகளில் கீழ்க்குளம் முதல் மேல்க்குளம் வரை நீர் நிரம்பிய பின்னரே அனைத்துப் பாசன நிலங்களிலும் பாசனம் தொடங்கும். அதனால், குளங்களைப் பராமரிப்பதிலும் பாதுகாப்பதிலும் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாகச் செயல்படுவர். வெள்ளம் அதிகமாகும் பொழுது அனைத்துக் குளங்களிலும் உள்ள பலகைகள் எடுக்கப்பட்டு வெள்ளம் சீக்கிரம் வெளியேற வழி ஏற்படுத்தப்படும். அதன்மூலம் குளங்கள் உடையாது பாதுகாக்கப்படும். தண்ணீர் மிகக் குறைவாக வரும் காலங்களில் பலகைகள் எடுக்கப்பட்டு பாதிக் கொள்ளளவை வைத்தே பாசனம் செய்யப்படும். இந்தமுறை ஒரு மிகச் சிறந்த தொழில்நுட்ப முறையாகும். இந்தத் தொடர் ஏரிகளில் நான்கைந்து ஏரி/குளங்கள் முதல் 318 வரையான ஏரி/குளங்கள் உள்ளன.
ஏரிகளில் நீர்க்கசிவைத் தடுப்பதற்காக களிமண்ணால் ஆன உட்சுவர் ஒன்றை அமைத்து, மண்கரைகள் அமைக்கப்படும் ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பழமையான ஏரிகளில், மண்ணோடு மண்ணை இருக்கும் சில பொருட்களைச் சேர்த்து ‘அரைமண்’ உருவாக்கி அதன் மூலம் ஏரிக்கரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரைமண் கரைகள் மூலம் உட்சுவர் இல்லாமலேயே நீர்க்கசிவு தடுக்கப்பட்டுள்ளது.. இத்தொழில் நுட்பத்தை சர். ஆர்தர் காட்டன் வியந்து பாராட்டியுள்ளார். ஏரிகளில் இருந்த மதகுகளுக்கு சுருங்கை, புதவு, மதகு, குமிழி, தூம்பு, புலிக்கண்மடை, மடை போன்ற பல பெயர்கள் இடப்பட்டி ருந்தன. தற்காலத் திருகு அடைப்பான் போன்று நீர் வெளியேறும் அளவை சிறுகச் சிறுக குறைக்கவோ அதிகரிக்கவோ கூடிய மதகுகளும் அன்றே இருந்தன. தமிழகத்தின் பல பகுதிகள் வடகிழக்குப் பருவக்காற்றால் வருடத்திற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே மழை பெறுகின்றன. இதனை நன்கு உணர்ந்து கொண்ட பழந்தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஏரி/குளங்களை உருவாக்கி, அந்த இரண்டுமாத மழைநீரையும் முழுமையாகச் சேகரித்து வருடம் முழுவதும் பயன்படுத்தினர்.
தமிழீழப் பகுதியில் இருந்த பாசன அமைப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்த நீரியல் வடிவமைப்பில் கட்டப்பட்டிருந்
தன என பார்க்கர்(PARKER), புரோகியர்(BROHIER), மென்டிஸ்(MENDIS) போன்ற வரலாற்று ஆய்வாளர்கள கருதுகின்றனர். திரு பார்க்கர்(PARKER), ஏரிகளுக்கு மதகு அமைப்பதை 2100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வடிவமைத்தவர்கள் எனவும் ஐரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டில்தான் மதகுகள் அமைக்கப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளார். தென்கிழக்கு ஆப்பிரிக்கா, பிலிப்பைன்சு ஆகிய நாடுகளிலுள்ள அடுக்குமுறை நெல் சாகுபடி அமைப்புகளையும் அவற்றுக்கேற்ற பாசன அமைப்புகளையும் உருவாக்கியதில் தமிழர்களின் தாக்கம் இருப்பதாக ஜெர்மன் வரலாற்றாய்வாளர் திரு. பிளமிங்(F.W. FLEMING) தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவை பண்டைய காலத்திலேயே தமிழர்களின் வேளாண்மையும், பாசன முறைகளும் வெளிநாடுகளிலும் பரவி இருந்ததற்குச் சான்றுகள் ஆகும். ஆகவே தமிழர்கள் பாசன அமைப்புகளை உருவாக்குவதிலும், அவைகளைப் பராமரித்து நிர்வகிப்பதிலும் உலகின் முன்னோடிகளாக இருந்துள்ளனர் எனலாம்.
பார்வை: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 171-178.
நேற்று, AM 5:43 · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக