ஞாயிறு, 17 நவம்பர், 2019

கொங்கு கரிகாலன் தொடர்பு இலக்கியம் ஒற்றுமை

aathi1956 aathi1956@gmail.com

திங்., 23 ஜூலை, 2018, பிற்பகல் 3:32
பெறுநர்: எனக்கு
உலக வரலாறு கண்ட சிறந்த மன்னர்களுள் சோழ மன்னன் கரிகால் சோழனும் ஒருவன். சிறந்த வீரன். நீதிமான். பல சிறந்த வியத்தகு சம்பவங்களைத் தன் வாழ்க்கையில் கொண்டவன்!
அவன் புகழை கொங்கு மண்டல சதகம் பாடல் 33 எடுத்துரைக்கிறது.
பாடல் வருமாறு:-
நீர்மை காவிரி நாட்டினை யாண்ட நிருபரினற்
பேருறு வான்கரி காலன் கரந்து பிழைத்ததன்றி
ஏருறு சிங்கா தனமேறக் கையாலெடுத்துமத
வாரணங் கண்டு கொடுபோன துங்கொங்கு மண்டலமே
கொங்கு மண்டல சதகம் – பாடல் 33
பாடலின் பொருள் : சோழ மண்டலத்தை ஆண்ட மன்னர்களுள் திறமை வாய்ந்த மன்னனான கரிகால் சோழன் தன் உயிர் பிழைத்தல் காரணமாக மாறு வேடமாக இருந்து பிழைத்ததும், இவனைச் சிங்கதானம் ஏற்ற யானை எடுத்துப் போனதும் கொங்கு மண்டலம் என்பதாகும்.
பாடல் குறிக்கும் வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று தான். அதற்கு ஆதாரமாக இந்தப் பாடல் விளங்குவதால் இது தனியிடத்தைப் பெறுகிறது.
இது குறிக்கும் வரலாறு இது தான்:
உறையூரில் அரசு புரிந்து வந்த உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்னும் சோழ மன்னன் அழுந்தூர் வேள்மகளை மணந்தான். கருப்பமுற்று அவளுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இன்னும் ஒரு முகூர்த்த காலத்தில் பிள்ளை பிறப்பானாயின் அவன் சக்கரவர்த்தி ஆவான் என்பதைச் சொல்லக் கேட்ட அரசி, தன்னைத் தலைகீழாகக் கட்டும் படி கூறி நல்ல ஹோரை வந்தவுடன் இறங்கி ஆண்மகனைப் பிரசவித்தாள்.
இளம் பருவத்திலேயே குழந்தையின் தந்தை இறந்தான். உள்நாட்டுக் குழப்பமும், வெளிநாட்டிலிருந்து வந்த சண்டையும் அவனை அரியணை ஏறச் செய்யவில்லை. பிழைப்பதே அரிதாக இருந்தது. மாறுவேடம் பூண்ட இளவரசன் கொங்கு நாட்டில் புகுந்து ஊர் ஊராய்த் திரிந்து வாழ்ந்தான்.
இதற்கிடையில் உறையூரில் சிங்காதனம் ஏறத் தக்க ஒருவனைத் தேடவேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டது. அக்கால வழக்கப்படி பட்டத்து யானையை விடுவதென்று தீர்மானித்து அதன்படியே யானையை கழுமலத்திலிருந்து கட்டவிழ்த்து அனுப்பி அதன் பின்னால் அனைவரும் சென்றனர்.
யானை கருவூர் சென்றது.அங்கிருந்த கரிகாலனைத் தன் பிடரி மீது தூக்கி வைத்துக் கொண்டு திரும்பியது.
கரிகாலன் அரசனாக்கப்பட்டான். ஆனால் இது பொறாத தாயத்தார் (உறவினர்) அவனைச் சிறைப்படுத்தினர். அது மட்டுமின்றி சிறைக்குத் தீயும் வைத்தனர். அந்த நெருப்பையும் மீறி அவன் சிறையிலிருந்து தப்பி வந்தான். தனது மாமன் இரும்பிடர்த்தலையாரின் துணையைப் பெற்று பகைவர்களை வென்று அரியணை ஏறினான்.
சிறையில் தீ எரிந்த போது அந்த நெருப்பால் கருகிய காலைப் பெற்றதால் கரிகாலன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான்.
கரிகாலனின் காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் கி.மு. 100 என்று நிச்சயிக்கின்றனர். அதாவது 2118 ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பாகச் செங்கோலோச்சியவன் கரிகாலன்!
இவனைப் பற்றி பழமொழி கூறுகையில்.
“கழுமலத்தில் யாத்த களிறுங் கருவூர்
விழுமியோன் மேற்சென் றதனால்” – பழமொழி
என்று கூறுகிறது.
பழமொழியின் இன்னொரு பாடல் இது:-
“சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானைப் பெற்று – கடைக்கால்
செயிரறு செங்கோல் செலீஇனான் இல்லை
உயிருடையா ரெய்தா வினை” (பழமொழி)
பொருனராற்றுப்படையில் வரும் குறிப்பு இது:-
“மூச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால்
இச்சகக் கரமே அளந்ததால் – செச்செய்
அரிகான் மேற்றேன் றொடுக்கு மாய்புன னீர்நாடன்
கரிகாலன் கானெருப் புற்று – (பொருனராற்றுப்படை)
திருஞான சம்பந்தர் பாடிய தேவாரத்தில் திருக்கச்சியேகம்பம் பதிகத்தில் வரும் ஒரு பாடலையும் கீழே பார்ப்போம்:
“விண்ணுளார் மறைகள் வேதம் விரித் தோதுவார்
கண்ணுளார் சழலின் வெல்வார் கரிகாலனை
நண்ணுவார் எழில்கொள் கச்சிநக ரேகம்பத்
தண்ணலா ராடுகின்ற வலங்காரமே”
எத்தனை அற்புதமான மன்னன் கரிகாலன்; அவனை ஆதரித்தது கொங்கு மண்டலமே என்கிறது கொங்கு மண்டல சதகம்.
தமிழருக்குப் புகழ் சேர்த்த மன்னன் கரிகாலனைக் கொண்டாடுவோமாக!
Posted 14th June by Sree Nikethan

சோழர் கொங்குநாடு பிரிவினை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக