திங்கள், 28 மே, 2018

டி.கே.ரங்கராஜன் கருணாநிதி மோதல் பார்ப்பனர் வெறுப்பு கவிதை

aathi1956 aathi1956@gmail.com

பிப். 7
பெறுநர்: எனக்கு

IdlyVadai at 8/24/2008 09:30:00 PM அரிவாளை சீண்டிவிட்ட 'அவாள்'
போன வாரம் கலைஞர் நாய்கள் கூடச் சிரிக்குமய்யா!' என்ற தலைப்பில் 'அவாள்' கவிதை(?) ஒன்றை முரசொலியில் எழுதியிருந்தார் முதலமைச்சர். இவராக இருக்குமோ ? அவராக இருக்குமோ ? என்றெல்லாம் பலர் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில்...கவிதை யாரை பற்றியது என்பது முக்கியாமில்லை; சில கேள்விகள் தமிழக முதலமைச்சருக்கு :
1. முதிர்ந்த அரசியல் தலைவர் இப்படியெல்லாம் தரம்தாழ்ந்து கவிதை எழுதலாமா? சிறுபிள்ளைத்தனமாக இல்லையா ?
2. பிராமண சமூகத்தவரை மட்டுமே ஏன் எப்போது எழிவு படுத்துகிறீர்கள் ? அடுத்த முறை உங்க கனவில் அண்ணா, பெரியார் வரும் போது நல்ல அறிவுரைகளை கேட்டு தெரிந்துக்கொள்வீர்களா ?
3. மைனாரிட்டி அரசாக இருந்தாலும் நீங்கள் தமிழ் நாட்டுக்கு முதலமைச்சர் என்பது தெரியுமா ? சாதிகளை பற்றி பேசும் நீங்கள் அந்த பதவிக்கு தகுந்தவரா ?
4. 'ஐந்து முறை பதவிப் பிரமாணம் எடுத்திருக்கும் உங்களுக்கு 'எந்த விருப்பும் வெற்ப்பும் இன்றி..' என்று பிரமாணத்தில் வரும் வரியின் பொருள் தெரியுமா? அதைக்கூட விடுங்கள். இப்படி 'அவாள்' என்று பேசுவதுதான் பகுத்தறிவா?
5. தேர்தலில் இதை பகிரங்கமாகச் சொல்லி, அவாள் ஓட்டு வேண்டாம் என்னும் தைரியமும் நேர்மையும் கொஞ்சமாவது உண்டா?
கீழே உள்ள கவிதை(?) விகடன் தளத்தில் பாலு என்பவர் கமெண்டாக எழுதியிருந்தார்.
காரியம் ஆகிற வரை தாமரையை சூட்டி கொண்டதென்ன?
முரசொலி மாறன் மருத்துவ செலவிற்கு வாஜ்பாயின் பாதமதனை பற்றியது தானென்ன?
கிடைச்சது "வாய்ப்பு" என்றதும் "இத்தாலிகாராள்" காட்டிய கொள்கையும் கோட்பாடும் படுகுழிக்குள் பதுங்கி கொள்ளும். தோண்டி பார்த்தேன் ஜனநாயகம் புதைந்த குழியொன்றை!
அடடா - லஞ்ச பன்னிகளும், ஊழல் நரி கூட்டமும் கூட்டனியாய் கொள்ளையடித்தது போல் நறநறவென்று என்னை குதறியதைக் கண்ட பின்பே தெரிந்து கொண்டேன்; (கதர்)"குல்லாவாள்" நமக்கு கொடுப்பர் "அல்வா" என்ற உண்மை! நெறியில்லா ஆட்சி கண்டு பேய்களும் நடுங்குதய்யா!
ஜூவி, ரிப்போட்டர் கட்டுரை கீழே...
ஜூவி கட்டுரை
நேருக்கு நேராக நெருப்பு கக்குகிற அதே வேகத்தில், பூடகமாகக் கவிதை எழுதி காரசாரம் பண்ணுவதும் கைவந்த கலைதான் முதல்வர் கருணாநிதிக்கு! அவருடைய கவிதைக் குத்து காரணமாகவே அரங்கேறிய பல அரசியல் திருப்பங்கள் உண்டு. அதில் லேட்டஸ்ட் - கடந்த .ஆகஸ்ட் 20-ம் தேதியிட்ட 'முரசொலி'யில் 'நாய்கள் கூடச் சிரிக்குமய்யா!' என்ற தலைப்பில் பின்னியெடுத்த ஒரு கொட்டை எழுத்துக் கவிதை!
'காரியமாகும் வரையில் நம் கரத்தைக் குலுக்குவதென்ன...
காலைப் பிடிப்பதுதான் என்ன?
அடிச்சது 'சான்ஸ்' என்றதும் 'ஆத்துக்காராள்' காட்டிய
அன்பும் நன்றியும்கூட
ஆலாய்ப் பறந்து விடும்;
அசைத்துப் பார்த்தேன்
அடிமரம் ஒட்டிய கிளையன்றை!
அடடா - கொடிய பூச்சிகளும் கொட்டும் தேள் கூட்டமும்
படிப்படியாய் அளந்து போட்டது போல்
பாவி மனிதன் தலையிலிருந்து
படபடவென உதிர்ந்தென்னைத் தாக்கியதைக் கண்ட பின்பே
உணர்ந்து கொண்டேன்;
'அவாள்' நமக்கு எப்போதும் 'சவால்'தான் என்ற உண்மை!
நன்றியில்லா உள்ளம் கண்டு நாய்கள்கூட சிரிக்குமய்யா!'
- என்கின்றன அக்கவிதையின் சில வரிகள்! இடம் - பொருள் - ஏவல் புரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பினர், ''சந்தேகமேயில்லை... இது எங்கள் இயக்கத்தின் மத்தியக் குழு உறுப்பினரும், எம்.பி-யுமான
டி.கே.ரங்கராஜனை நோக்கி நடந் திருக்கும் தாக்குதல்தான். அவர்தான் இங்குள்ள
முக்கியமான பிராமண சமூகத்தவர். 'படிப்படியாக அளந்து போட்டது போல்' என்று கருணாநிதி 'பொடி' வைப்பதும் 'படியளந்த பெருமாள்' என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கராஜ கடவுளை மனதில் வைத்துத்தான்!
என்று குமுறத் தொடங்கியிருக்கிறது.
டி.கே.ரங்கராஜன் மீதான இந்த 'சாதிய' தாக்குதலை சகிக்க முடியாமல், 'கூட்டணி இனியும் கூடாது, தி.மு.க-வுடன்' என்று பொருமவும் தொடங்கியிருக்கிறார்கள் மார்க்சிஸ்ட் தோழர்கள்.
இன்னொரு பக்கம் ஆற்காட்டாரும் பொதுவாக கம்யூனிஸ்ட்களைக் குறிவைத்து சரம் தொடுக்க... அவரைக் கண்டித்து கருணாநிதி அறிக்கை விட்டா லும், 'தொட்டிலை ஆட்டச் சொல்லி விட்டு, பேருக்கு பிள்ளையைக் கிள்ளுகிற நாடகம் இது' என்றும் டென்ஷனாகி யிருக்கிறார்கள்.
''அண்மையில் மீடியாவில் பேசும்போது தி.மு.க. பற்றி ரங்கராஜன் தெரிவித்த அனல் வீச்சு கருத்துகள்தான் கருணாநிதியின் கவிதைக் கோபத்துக்குக் காரணம்'' என்று சிலர் அர்த்தம் கொடுக்க... இன்னும் சிலரோ, ''தடியடி, துப்பாக்கிச் சூடு வரை போன ரெட்டணை கிராம போராட்டத்தைத் தூண்டிவிட்டதே ரங்கராஜன்தான் என்று நினைக்கிறார் கருணாநிதி! அதைத்தான் இப்படியெல்லாம் இலக்கிய தாக்குதலாக அரங்கேற்றுகிறார்'' என்றும் சொல்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை யில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்தவர் களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலி தரப்படவில்லை என பிரச்னை கிளம்ப, அது துப்பாக்கிச் சூடு வரை போனது. சம்பவங்கள் நடந்ததும் அந்தப் பகுதிக்கு முதலில் விசிட் அடித்ததென்னவோ ரங்கராஜன்தான்! தொழிலாளர்களின் சோகத்தை பகிர்ந்துகொண்ட அவர், அதை தேசிய அளவில் விவாதமாக்க முடிவெடுத்து, செயல்படத் தொடங்கினார். இதற்குள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவும் ஸ்பாட்டுக்குப் போக, பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரம் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் ஸ்டாலினுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்த, அவரும் கம்யூனிஸ்ட்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். 'சில அரசியல் தரகர்கள் நல்ல திட்டங்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். கலைஞர் ஆட்சிக்கு அவப்பெயர் உண்டு பண்ணுகிறார்கள்' என்றார் ஸ்டாலின். இதுபற்றியெல்லாம் தி.மு.க-வினர் சொல்லும்போது,
''எப்போதுமே கூட்டணித் தோழர்களை கவனத்துடன் கையாள் பவர் எங்கள் தலைவர். ரங்கராஜன் மீதான தனது வருத்தங்களை கவிதையாக்குவதற்கு முன்பு தலைவரே ரங்கராஜனிடம் போன் பேசினார். 'தோழமை உணர்வுடன் நாம் தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கும்போது, தேவையில்லாமல் பத்திரிகைகள் மூலமாக களத்தை சூடாக்குவது தர்மமா? நந்திகிராம் விவகாரத்தில் தி.மு.க. தனிப்பட்ட கருத்து எதுவும் சொல்லவில்லை. காரணம், பிரச்னைக் குள்ளான மார்க்சிஸ்ட் அரசு மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கிறது. அந்த அரசை உரசிப் பார்த்து அறிக்கை விடுவது, கூட்டணி தர்மமாகாது என்று நினைத்தது தி.மு.க.! ஆனால், ரெட்டணை விவகாரத்தைப் பெரிதாக்கி தி.மு.க-வுக்கு அவப்பெயர் உண்டாக்குவது என்ன நியாயம்? நானும் உங்களைப் போல எல்லாவற்றையும் பத்திரிகையிலேயே அறிவித்துத் தர்மசங்கடத்தை ஏற்படுத்த முடியாதா?' என்றெல்லாம் ரங்கராஜனிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ரங்கராஜன் எடுத்தெறிந்தாற்போல் பதில் சொன்னதுதான் தலைவரின் கோபத்தைக் கிளறிவிட்டது'' என்கிறார்கள்.
போன் உரையாடலின்போது, 'நீங்கள் சர்வபலத்தோடு அரசாங்கம் நடத்துகிறீர்கள். ஆனால், எங்கள் தரப்பை நாங்கள் எங்கு போய் சொல்வது? பத்திரிகைகளில்தானே சொல்ல வேண்டியிருக்கிறது! எங்கள் கொள்கைகளைச் சொன்னால் அதில் தி.மு.க-வுக்கு ஏன் கோபம் வர வேண்டும்?' என்றுதான் ரங்கராஜன் கூறியதாகச் சொல்லப்படுகிறது. உரையாடலின் முடிவில், 'உங்கள் நிலைப்பாடுதான் என்ன? கூட்டணி குறித்து முடிவுதான் என்ன?' என்று கருணாநிதி கேட்டதாகவும், 'அதையும் நீங்கள் பத்திரிகைகளிலேயே பார்த்துக் கொள்ளலாம்?' என்று சொல்லி ரங்கராஜன் அந்த உரையாடலை முடித்ததாகவும்கூட சிலர் சொல்கிறார்கள்.
'காங்கிரஸ§டன் இருந்தால் தி.மு.க-வுடன் கூட்டு இல்லை' என்றுஇரண்டு கம்யூனிஸ்ட்களும் கூறிவரும் நிலையில்... அடுத் தது என்ன? இதை டி.கே.ரங்கராஜனிடமே கேட்டோம்.
''கலைஞர் எழுதியிருக்கும் கவிதை என்னைப் பற்றியதுதான் என்பது பலருடைய யூகம். அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இந்த நிமிடம் வரையில் கலைஞருடன் நிஜமான நட்போடுதான் பழக ஆசைப்படுகிறேன். ரெட் டணைக்கு நான் சென்றது, நான் சார்ந்திருக்கும் இயக்கம் கொடுத்த பணி. இயக்கத்தின் கொள்கைகளைச் சொல்வதுதானே அதைச் சார்ந்த ஒரு தொண்டனுக்கு அழகு!'' என்றார் பிடிகொடுக்காமல்!''நீங்கள் முன்பொருமுறை கருணாநிதியை 'ஆயிரத்தில் ஒருவன்' என்று பாராட்டிப் பேசினீர்களாமே... அதைத்தான் கவிதையில் நினைவூட்டி, காரியம் முடிந்ததும் இப்போது தடம் மாறுவதாகக் கோபப் பட்டிருக்கிறாரா?'' என்றோம்.
''நான் கலைஞரை பல சமயங்களில் பலவாறாகப் புகழ்ந்தும் பாராட்டியும் பேசியிருக்கிறேன். இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமென்றால், எங்கள் மாநில செயலாளர் வரதராஜனைத் தொடர்பு கொள்ளுங்கள்'' என்றார் அவர்.
வரதராஜனை நாம் சந்தித்தோம்.
''இடதுசாரிகளை கடிந்து கொள்கிறோம் என்ற பெயரில் பொது மேடையில் ஆற்காட்டார் பேசியிருக்கும் விஷயங்கள் அபத்தம். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் நாங்கள் சீனாவுக்கு பரிந்து பேசுகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். சர்வதேச அணுசக்தி கழகத்தில் சீனா எடுத்திருக்கும் நிலைப்பாடு என்ன தெரியுமா? இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்துக்கு ஆதரவான நிலைதான். ஆனால், நாங்கள் அதே ஒப்பந்தம் கூடாது என்கிறோம். அணுசக்தி ஒப்பந்தத்தை ஒரு மாநிலத்தின் மின்துறை அமைச்சரே சரியாகப் புரிந்து கொள்ளாமல் பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இதையெல்லாம்விட மதவாத கட்சியான
பி.ஜே.பி.க்கு நாங்கள் ஆதரவாக செயல்பட்டோம் என்று ஆற்காட்டார் கூறியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது'' என்ற வரதராஜனிடம்...
''தமிழகத்தில் தி.மு.க-வுடன் கூட்டணி தொடர வாய்ப்பு உள்ளதா?'' என்றோம்.
''காங்கிரஸ§டனோ, பி.ஜே.பி-யுடனோ கூட்டணி வைத்திருக்கும் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்சிகள் அணி வகுப்பில் காங்கிரஸில் தி.மு.க. நீடிக்கும்வரை எங்களோடு அது சேர முடியாது. சேதுகால்வாய் திட்டத்தை ஆதரிக்கும் கட்சிகள், மீனவர் பிரச்னைக்காக போராடும் கட்சிகள் என எங்கள் கொள்கைகளுக்கு உடன்படும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்''
''சரி, 'முரசொலி' கவிதை உங்கள் கட்சியின் ரங்கராஜன் பற்றியதா?''
''அரசியல் ஞானம் உள்ளவர்களுக்கு அது ரங்கராஜனைப் பற்றியது என்றுதான் தோன்றுகிறது. எங்கள் தோழர்கள் எல்லோ ருமே அப்படித்தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. தன்னுடன் தோழமையாக இருக்கும் கட்சிகள் பற்றி எடுத்தேன்... கவிழ்த்தேன் என்று பேசுவதும், விமரிசிப்பதும் புதிதல்ல. பத்து தினங்களுக்கு முன்பு நூல் வெளியீட்டு விழா ஒன்றில் ரங்கராஜனும் கலைஞரோடு கலந்து கொண்ட போது தேசபக்தி மிகுந்த கட்சியாக மார்க்சிஸ்ட் அவருக்கு தெரிந்திருக்கிறது. ரங்கராஜனுக்கு கொடுக் கப்பட்ட எம்.பி. பதவியைத்தான் 'பிச்சை' என்று வர்ணிக்கிறது அந்த கவிதை. மத்திய அரசுக்கு நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தோம். அதனால்தான் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்தது. அதில் தி.மு.க-வும் இடம்பெற்றது. அந்தக் கட்சியினர் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதை நாங்கள் போட்ட பிச்சை என்று ஒருபோதும் சொன்னது கிடை யாது. சொல்லவும் மாட்டோம்.அப்படியெல்லாம் கீழ்த்தரமாக பேச நாங்கள் தயாரில்லை. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைத்தபோது நாங்கள் ஆதரவு கொடுத்தோமே... அதையும்கூட பிச்சை போட்டதாக நாங்கள் சொல்ல மாட்டோம்!
ரங்கராஜனை 'அவாள்' என்ற வார்த்தையால் சாதிரீதியாக கேலி செய்யும் குணம் கலைஞருக்கு இருக்கலாமா? முதிர்ந்த அரசியல் தலைவர் இப்படியெல்லாம் தரம்தாழ்ந்து கவிதை எழுதலாமா? மாநிலமெங்கும் இருந்து எங்கள் தொண்டர்கள் இந்தக் கவிதையைச் சுட்டிக் காட்டி உணர்ச்சி மேலிட விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியலில் இதுபோன்ற நிகழ்வுகள் யாரையும் அழிவுப் பாதைக்குத்தான் இட்டுச் செல்லும்!'' என்று சொல்லி முடித்தபோது, வரதராஜன் முகத்தில் அளவில்லாத இறுக்கம் படர்ந்திருந்தது!
குமுதம் ரிப்போட்டர்
கலைஞர் முரசொலியில் எழுதிய ஒரு கவிதை ஏற்கெனவே ஆடிக்கொண்டிருக்கும் இடதுசாரிகள், தி.மு.க உறவுக்கு இன்னொரு அதிர்வேட்டு வைத்திருக்கிறது. போதாக்குறைக்கு இந்தக் கவிதைக்குப் பின் இடதுசாரிகளைக் குறிவைத்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசிய பேச்சும் சிவப்பு சட்டைக்காரர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 19-ம்தேதி காலையில் முரசொலி நாளிதழைப் பார்த்தவர்களுக்கு பெரும்அதிர்ச்சி. அதில் கலைஞர் எழுதிய `நாய்கள் கூடச் சிரிக்குமய்யா!' என்ற கவிதையில், `காரியமாகும் வரையில் நம் கரத்தைக் குலுக்குவதென்ன? அம்மவோ; காலைப் பிடிப்பதுதான் என்ன? என்ன? என்ன? உச்சிமுதல் உள்ளங்கால் வரை கடும் விஷம் மொண்டு கலகலப்பு சிரிப்பு காட்டி வருகின்ற கயவர்களின் நன்றியில்லா உள்ளம்...? என்றெல்லாம் கடுமையான வார்த்தைகளில் கலைஞர் யாரையோ வாங்குவாங்கென்று வாங்கியிருந்தார். `யாரைப் பற்றி கலைஞர் இப்படி எழுதியிருக்கிறார்? ஒருவேளை அவராக இருக்குமோ? இவராக இருக்குமோ?' என்றெல்லாம் பலர் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தநிலையில், `அவர் யார்?' என்ற புதிர் சில மணிநேரங்களில் அவிழ்ந்து விட்டது. கலைஞர் அவரது கவிதையில் கனல் கக்கியிருந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான டி.கே.ரங்கராஜனுக்கு எதிராகத்தான்.
கலைஞர் எதற்காக இந்த அளவுக்குக் கவிதையில் கொந்தளித்தார்...? அண்மைக்காலமாக சில மேடைகளில் தி.மு.க.வை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தாராம் டி.கே.ஆர்.
`கலைஞரின் சட்டமன்ற உரைகள்' நூல் வெளியீட்டு விழாவில் மேடையைவிட்டு இறங்கிவரும்போது ஏதோ கிண்டலடித்தாராம்.
இரட்டணையில் விவசாயக் கூலிப் பிரச்னையில் அரசு மீது இவர் வைத்த கடும் விமர்சனம், ஒரு வார இதழில் வெளியான இவருடைய பேட்டி... இவற்றையெல்லாம் விட முக்கியமாக, மாற்றுக் கூட்டணியை உருவாக்குவதில் இவர் நடத்துவதாகக் கூறப்படும் பேச்சுவார்த்தை எல்லாமும் இணைந்துதான் இந்தக் கவிதை அர்ச்சனைக்கு வழி வகுத்துவிட்டது என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி நாம் டி.கே.ரங்கராஜனைத் தொடர்பு கொண்டு அவரிடம் பேச முயன்றோம். அவரோ, "நான் இதைப் பற்றி எதுவும் பேச முடியாது. எங்கள் மாநிலச் செயலாளரிடம் பேசுங்கள்'' என்று சொல்லிவிட, நாம் சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜனை பி.ஆர் நினைவகத்தில் சந்தித்துப் பேசினோம்.
கலைஞர் அவரது கவிதையில், `கொடிய பூச்சி, கொட்டும் தேள்கூட்டம்' என்றும், `அவாள் நமக்கு எப்போதும் சவால்தான்' என்றெல்லாம் ஆவேசமாக எழுதிய வரிகள், உங்கள் கட்சி எம்.பி.யான டி.கே.ரங்கராஜனைக் குறிவைத்துத்தான்' என அரசியல் வட்டாராங்களில் பலத்த பேச்சு அடிபடுகிறதே? என்ற கேள்வியுடன் ஆரம்பித்தோம்.
"கட்சிகளுக்குள் கருத்து பேதம், முரண்பாடு வருவது இயல்புதான். அதை ஜனநாயகவழியில் தீர்த்துக் கொள்ளும் அணுகுமுறை தற்போது தி.மு.க.வில் இல்லை என்றே சொல்ல வேண்டும். தோழர் ரங்கராஜன் மாநிலங்களவை உறுப்பினர் ஆனதைப் பற்றி கலைஞரின் கவிதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறது. 96 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றிருக்கக்கூடிய தி.மு.க ஆட்சியமைத்ததற்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். மத்தியில்கூட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மார்க்சிஸ்ட், இடதுசாரிகள் ஆதரவோடுதான் நான்கு ஆண்டு ஆட்சி நடத்தியது. இவற்றில் அமைச்சர் பதவியை தி.மு.க பெற்றிருக்கிறது. அதை `மார்க்சிஸ்ட்டுகள், இடதுசாரிகள் போட்ட பிச்சை' என்று நாங்கள் சொல்லவில்லை. கட்சிகளின் வலுவுக்குத் தக்கவாறு பதவிகளைப் பகிர்ந்து கொள்கிறோம். அத்தகைய முயற்சிகளில் ஒன்றுதான் தோழர் டி.கே.ரங்கராஜனின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும்.
சமீபத்தில் இடதுசாரிகளுக்கும், தி.மு.க.வுக்கும் ஏற்பட்ட அரசியல் முரண்பாட்டை நேரடியாகச் சந்திப்பதற்குப் பதிலாக மறைமுகமாக அவதூறு செய்யும் அந்தக் கவிதை, அரசியல் ரீதியாக சரியானதல்ல. அதேபோல 20-ம்தேதி மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசிய பேச்சும் அத்தகைய தொனியில்தான் இருக்கிறது.
ஆற்காடு வீராசாமி அவரது பேச்சில், `பா.ஜ.க.வோடு கூட்டுச் சேர்ந்தது பெரும் குற்றம். இடதுசாரிகள் காணாமல் போய்விடுவார்கள்' என்றெல்லாம் பேசியிருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் (இடதுசாரிகள்) கொடுத்த ஆதரவின் விளைவாக காங்கிரஸ் அரசு `குறைந்தபட்ச செயல்திட்டத்தை நிறைவேற்றுவோம்' என்றார்கள். இன்று இதை நிறைவேற்ற முடியாமல் தடுமாறி நிற்கிறார்கள். குறைந்தபட்ச செயல் திட்டத்தில் அணுசக்தி ஒப்பந்தம் இல்லை.
எனவே எங்கள் மீது தி.மு.க. சொல்லும் குற்றச்சாட்டு மிகவும் அபத்தமானது. நாங்கள் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிரான முழக்கத்தை முன்வைத்திருக்கிறோம். இதில் இடதுசாரிகள், மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று திரண்டுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் மாயாவதி, தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபுநாயுடு, கர்நாடகாவின் தேவகவுடா கட்சி உள்பட பத்து கட்சிகளை இணைத்திருக்கிறோம். பல்வேறு கட்சிகளை மூன்றாவது அணிக்குக் கொண்டு வரும் எங்கள் முயற்சி வெற்றி பெறும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் அணி மகத்தான வெற்றி பெறும். நாங்கள் காணாமல் போய் விடுவோம் என்று ஆற்காடு வீராசாமி கூறுவது பகல் கனவு.''
மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு, மத்திய அரசிடம் பேசிய கலைஞர், `இடதுசாரிகளிடமிருந்து நாம் நீண்ட தூரம் விலகிப் போய்விடக்கூடாது' என நிலைமையை உணர்ந்து பேசினார். ஆனால், மாநிலத்தில் இடதுசாரிகள் கூட்டணியை உடைக்கும் வண்ணம் தி.மு.க தலைமை செயல்படும் அளவுக்கு இப்போது என்ன நடந்துவிட்டது?
``தி.மு.க.வைப் பொறுத்தவரை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இன்றைய அரசியல் நிலையில் அவர்கள் மிகவும் குழம்பிப் போயிருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு `அணுசக்தி ஒப்பந்தம் ஆபத்தான நிலையில் இருக்கிறது' என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கலைஞர் கடிதமே எழுதியிருக்கிறார். அந்தக் கடிதம் எங்கள் கைகளிலும் இருக்கிறது. இன்று ஏதோ ஒரு நிலையில் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்ததை நாங்கள் எதிர்க்கிறோம். எங்களோடு அவர்களுக்கு உறவில்லை என்று சொன்னதற்குப் பிறகு பதறிப்போய், `மத்தியில் எடுக்கும் முடிவுக்கு தமிழக காங்கிரஸார் எப்படி பொறுப்பாக முடியும்?' என்று அவர் சம்பந்தம் இல்லாமல் விளக்கமளித்திருக்கிறார்.
அமெரிக்க ஒப்பந்தத்திற்கு தமிழக காங்கிரஸின் ஓட்டும் துணைபோகிறது. ஆகவே, தமிழ்நாடு நிலை தனி, வட மாநில நிலை தனி என்று பேசி கலைஞர் தன்னுடைய நிலையைத் தானே தாழ்த்திக் கொள்கிறார். இதை அவரிடமும் நாங்கள் சொன்னோம். `இத்தகைய நிலையில் இருந்து விடுபடுங்கள். மூன்றாவது அணிக்கு வாருங்கள்' என்றோம். இப்போது சி.பி.ஐ, சி.பி.எம், ஃபார்வர்டு பிளாக் தமிழ்நாட்டில் புயலெனெப் பிரசாரத்தை நடத்தி வருகிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கவிதையின் மூலமும், ஆற்காடு வீராசாமி மூலமும் பதிலளிப்பது அந்தக் கட்சிக்குப் பலன் தராது. தி.மு.கவில் உள்ள உறுப்பினர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.
இந்த அனுபவம் கடந்த காலத்திலும் எங்களுக்கு உண்டு. கலைஞர் அரசியல் அனுபவம் பெற்றவர். நெளிவு சுழிவாக அரசியல் பணியாற்றுவதில் தெளிவு பெற்றவர் என்ற பார்வை எங்களுக்கு உண்டு. ஆனால், சில சமயங்களில் அரசியலில் கோபதாபங்களுக்கும் அவர் ஆட்படுகிறார் என்பதுதான் உண்மை. `தோழர் சங்கரய்யா செயலாளராக இருக்கும் வரை மார்க்சிஸ்ட்டோடு உறவு வைக்க மாட்டேன்' என்றார் கலைஞர். இதன்பிறகு மார்க்சிஸ்ட்டோடு விழுந்து விழுந்து உறவு வைத்தார். அவருக்கு எவ்வாறான கோபம் வரும் என்று நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஒரு ஜாதியரீதியான உணர்வோடு செயல்படும் போக்கும் கலைஞரிடம் இருக்கிறது. `அவாள்', `இவாள்' என்ற கோஷத்தோடு அரசியலை அணுகுவது, `அவாளில்' அரசியலில் உயர்ந்து இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட்டுகள், சோசலிஸ்ட்டுகள், ஜனநாயகவாதிகள் என்று பிரித்துப் பார்ப்பதும் ஆபத்தான போக்கு. இந்தப் போக்கைத்தான் தி.மு.க. அவ்வப்போது எடுக்கிறது. தொகுதி உடன்பாடு என்பது ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள பலத்தைக் கணக்கிட்டு, ஒரு கட்சியின் வாக்கை இன்னொரு கட்சிக்கு கொடுப்பது, பெரிய கட்சியின் வாக்குகளை சிறிய கட்சிகளுக்குக் கொடுப்பது என்பதுதான். அதுதான் தொகுதி உடன்பாட்டின் தாத்பரியம். அதைவிடுத்து `நான் போட்டேன் பிச்சை' என்று சொல்வது அரசியலில் அநாகரிகமானது.''
தி.மு.க. தலைமையின் இந்த அணுகுமுறை கூட்டணி முறிவுக்கு அச்சாரம் போட்டுவிட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?
``பொதுவாக கூட்டணிகள் ஏற்படுவதும், பிரிந்து செல்வதும் ஜனநாயகத்திற்குத் தேவையானதுதான். கொள்கை முரண்பாடு வரும்போது பிரிந்து செல்கிறோம். பிரியும்போதும் ஜனநாயகத்தன்மையோடு பிரிய வேண்டும். கருத்துக்களை கருத்துக்களாகப் பரிமாறிக் கொள்ள வேண்டும். அதற்கு மாறாக அவதூறுகளைச் சொல்வது என்பது தி.மு.க.வின் பாணியாக இருக்கிறது. இது சரியானது அல்ல. ஜனநாயகத்தில் இது செல்லு படியாகாது. இந்தக் கூட்டணி தொடர்வது சாத்தியமில்லை. காங்கிரஸ், பி.ஜே.பி.யோடு சேரும் கட்சிகளோடும் எங்களுக்கு உறவில்லை. கூட்டணி அல்லது தொகுதி உடன்பாட்டில் இருந்து விலகுவது என்பது இயற்கையான ஒன்று. அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து நாங்கள் எங்கள் முடிவை அறிவிப்போம்.''
``கலைஞருக்குக் கைவந்த கலை''
கலைஞரின் `நாய்கள் கூட சிரிக்குமய்யா' கவிதை குறித்து சில அரசியல் கட்சித் தலைவர்களிடம் கருத்துக் கேட்டோம்.
ம.தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்: `` `அவாள்' கவிதையில் கலைஞர் குறிவைத்திருப்பது, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜனை. தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் தகுதியினால் கலைஞர், முதல்வர் ஆகவில்லை. பொறுப்புக்கு வந்தபின்பு, இப்படி அநாகரிகமாக விமர்சனம் செய்து தன்னுடைய முதல்வர் பதவியைச் சிறுமைப்படுத்தியிருக்கிறார். வலது கை கொடுப்பது, இடது கைக்குத் தெரியக்கூடாது என்பதுதான் தமிழர்களின் நாகரிகமும் பண்பாடும். தன்னுடைய விமர்சனக் கவிதை மூலம் தமிழ்நாட்டின் நாகரிகம் மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தை நடத்தியிருக்கிறார் கலைஞர்.
ஒரு தேசிய கட்சியின் பொறுப்பில் உள்ளவரை (டி.கே.ரங்கராஜனை) காயப்படுத்தியிருக்கும் கலைஞர், காங்கிரஸ் கட்சியில் உள்ள யாரையாவது இப்படி சீண்டுவாரா? ஒருவருடைய தயவு வேண்டும்போது அவர்களைத் தூக்கிவைத்துக் கொண்டாடுவதும், தயவு தேவையில்லை என்றதும் அவர்களைத் தூக்கியெறிந்து சீண்டுவதும் கலைஞருக்குக் கைவந்த கலை. கலைஞரின் இந்த இரட்டை வேடத்தை கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் புரிந்து கொள்ளாவிடினும், நாட்டு மக்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்'' என்று சற்று வேகமாகவே தன் கருத்தைப் பதிவு செய்தார், நாஞ்சில் சம்பத்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத் தலைவர் முருகன்: ``கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரையில், `எதற்காகவும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்' என்பதில் காரத் முதல் கடைசித் தொண்டன் வரை யாரும் விதிவிலக்கல்ல. சபாநாயகர் சாட்டர்ஜி முதல் அச்சுதானந்தன் வரையிலும் யாரையும் கண்டிக்க அக்கட்சியினர் தயங்கியது கிடையாது. கூட்டணியில் இருந்தபோது வழங்கிய பதவிக்காக கட்சியை மீறி தனக்கு ஆதரவு காட்ட வேண்டும் என்று டி.கே.ரங்கராஜனிடம் கலைஞர் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? தனிமனிதனுக்குச் செய்த உதவி கூட கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்று நினைத்து, அது நடக்காததால் கவிதை வடிவில் கோபத்தை வெளிக்காட்டியிருக்கிறார். கலைஞரின் இந்தப் போக்கை, குழந்தைத்தனமானது என்று விமர்சிப்பதே மிகச்சரியாக இருக்கும்'' என்று முடித்துக் கொண்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக