வெள்ளி, 18 மே, 2018

புறநானூறு சிவன் பலராமன் முருகன் திருமால் ஒரே பாடலில் யவனர் மது இறக்குமதி

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 27
பெறுநர்: எனக்கு

Monday, March 21, 2016
புறநானூறு - 56. கடவுளரும் காவலனும்!
புறநானூறு - 56. கடவுளரும் காவலனும்!
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்; (மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்).
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண்.
துறை : பூவை நிலை.

ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்,
கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்
மணிமயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என
ஞாலம் காக்கும் கால முன்பின்
தோலா நல்இசை நால்வர் உள்ளும்
கூற்றுஒத் தீயே மாற்றருஞ் சீற்றம்;
வலிஒத் தீயே வாலி யோனைப்;
புகழ்ஒத் தீயே இகழுநர் அடுநனை;
முருகுஒத் தீயே முன்னியது முடித்தலின்;
ஆங்குஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்
அரியவும் உளவோ நினக்கே? அதனால்
இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா
யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனை கலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி, ஓங்குவாள் மாற!
அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇயர் உலகமோடு உடனே.


பொருளுரை:
காளைக்கொடியை வெற்றியின் அடையாளமாக உயர்த்திப் பிடித்து,
நெருப்புப் போல் ஒளிவிடும் சடையோடும், ஒப்பற்ற கணிச்சி என்னும் ஆயுதத்தோடும்,
நீலநிறக் கழுத்தோடும் காட்சி அளிப்பவன் சிவபெருமான். 

கடலில் வளரும் முறுக்கிய சங்கு போன்ற வெண்ணிற மேனியும்,
கொல்லுதலை விரும்பும் கலப்பையும், பனைக்கொடியும் உடையவன் பலராமன்.

கழுவப்பட்ட அழகிய நீலமணி போன்ற உடலும், வானளாவ உயர்ந்த கருடக் கொடியும் கொண்டு வெற்றியை விரும்புபவன் திருமால்.

நீலமணி போன்ற நிறத்தையுடைய மயிற்கொடியும், உறுதியான வெற்றியும், மயிலை ஊர்தியாகவும் (வாகனமாகவும்) கொண்ட ஓளிபொருந்தியவன் முருகன்.

இந்நான்கு கடவுளரும் உலகம் காக்கும் வலிமையும் அழியாத புகழும் உடையவர்கள்.
இந்த நால்வருள்ளும், உன்னுடைய நீங்காத சினத்தால் நீ அழிக்கும் கடவுளாகிய சிவனுக்கு ஒப்பானவன்;

வலிமையில் பலராமனுக்கு ஒப்பானவன்;
 புகழில் பகைவரைக் கொல்லும் திருமாலுக்கு ஒப்பானவன்;
நினைப்பதை முடிப்பதில் முருகனுக்கு ஒப்பானவன்.

இவ்வாறு ஆங்காங்கு அந்த அந்தக் கடவுளை ஒத்தவனாக இருப்பதால், உன்னால் செய்ய முடியாத செயலும் உண்டோ?

அதனால், இரப்போர்க்கு அரிய அணிகலன்களை வழங்கி, யவனர் நல்ல கலங்களில் கொண்டுவந்த, குளிர்ந்த மணமுள்ள மதுவைப் பொன்னால் செய்யப்பட்ட அழகிய கிண்ணங்களில் ஏந்தி வந்து,
ஓளிபொருந்திய வளையல் அணிந்த மக்ளிர் உனக்கு நாள்தோறும் கொடுக்க, அதைக் குடித்து, மகிழ்ச்சியோடு சிறப்பாக இனிது வாழ்வாயாக.

ஓங்கிய வாளையுடைய பாண்டியன் நன்மாறனே! அழகிய ஆகாயத்தில் நிறைந்த இருளை அகற்றும் கதிரவனைப் போலவும்
மேற்குத் திசையில் தோன்றும் குளிர்ந்த கதிர்களையுடைய திங்களைப் போலவும்
இவ்வுலகத்தோடு நின்று நிலைபெற்று நீ வாழ்வாயாக.

இலக்கியம் கடவுளர் குறிப்பு ரோமானியர் வணிகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக