செவ்வாய், 29 மே, 2018

பாவாணர் திராவிடம் வேர்ச்சொல் தமிழம் இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 8
பெறுநர்: எனக்கு
[07/02, 08:21] kathir nilavanFb: "செந்தமிழ் ஞாயிறு" பாவாணர் பிறந்த நாள் 7.2.1902

"திராவிடர்" என்ற பெயர் "தமிழர்" என்ற பெயருக்கு தகுதியானதா?

"எந்த நாட்டிலும் ஒரு மொழியின் பெயராலேயே ஓர் இனத்தின் பெயர் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டு; ஆங்கிலம் -ஆங்கிலேயர், செருமன் -செருமானியர், சீனம் -சீனர், சப்பான் -சப்பானியர். ஒரே மொழி பேசுபவர் பல்வேறு நாட்டிலும், பல்வேறு மொழி பேசுபவர் ஒரே நாட்டிலும் வாழின் அவர் அவ்வந் நாட்டுப் பெயரால் அழைக்கப் பெறலாம்.

ஆனால், மொழியைப் பொறுத்த வரையில் அவருள் ஒவ்வொரு வகுப்பாரும் ஒவ்வொரு தனி மொழியாற் பெயர் பெறுபவரே யன்றி ஒருமொழி தொகுதியாற் பெயர் பெறுபவரல்லர், தமிழ் என்பது ஒரு மொழி. திராவிடம் என்பது ஒரு மொழித்தொகுதி. அது பதின்மூன்று மொழிகளை உட்கொண்டது. திராவிட நாடு என்பது பல நிலப்பகுதிகளாகத் தமிழ்நாட்டிலிருந்து பெலுச்சித்தானம் வரை தொடர்பின்றிப் பரவியுள்ளது. அந்நிலப் பகுதிகளெல்லாம் சேர்ந்து ஒரு நாடாக ஆகப்போவது மில்லை.

வட இந்தியத் திராவிட நாடுகள்தான் தொடர்பற்றவை. தென்னியந்தியத் திராவிட நாடுகள் தொடர்புற்று ஒரு பெருநிலப் பகுதியாயுள்ளன. ஆதலால் அப்பகுதியைத் திராவிட நாடாக்கலாம் என்னின்; தென்னிந்தியத் திராவிட நாடுகள் இன்னும் ஒன்று சேரவில்லை; இனிமேல் சேரப்போவதாக ஒரு குறியும் இல்லை.

இதுபோது பிற தென்னிந்தியத் திராவிட நாடுகள் சேராவிடினும் எதிர்காலத்தில் அவை சேருமாறு தமிழ்நாட்டில் இன்று அடிகோலுவோர் என்னின்; அதுவும் பொருந்தாது. ஏனெனில், அங்ஙனம் அடிகோலுவதற்கும் ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய ஏனை முப்பெருந் திராவிட நாடுகளில் உள்ள மக்கள் நூற்றுக்கு ஐந்து வீதமாவது திராவிட நாட்டியக்கத்தில் சேர்ந்து உறுப்பினர்களாகத் தம்பெயரைப் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

அல்லது அவ்வியக்கப் பரப்புரைக்காவது அங்குள்ள மக்கள் இடந்தரல் வேண்டும். இவ்விரண்டு மில்லை. ஆகையால் திராவிட நாட்டுத் துவக்கத்திற்கும் வழியில்லை. யாரோ ஒருவர் எங்கோ ஓரிடத்திலிருந்து இவ்வியக்கத்தைப் பாராட்டி எழுதின், அது வலியுறாது.

இனி பல திராவி இனத்தார் தமிழ்நாட்டிலிருத்தலின், தமிழ் நாட்டையே திராவிட நாடாகத் துவக்கலாமெனின், அது தமிழுக்கும் உலை வைப்பதாகும். ஏற்கனவே தமிழ்நாட்டில் தமிழுணர்ச்சியும் தமிழனுணர்ச்சியும் குன்றியுள்ளன.

நீதிக்கட்சி யாட்சியிலாவது காங்கிரசு ஆட்சியிலாவது பார்ப்பனத் தமிழனும் எத்துறையிலும் தலைமைப் பதவிக்கு வந்ததில்லை. தமிழ்நாடு தமிழ் நாடாயிருக்கும் போதே இந்நிலைமை யெனின், திராவிட நாடாகிவிடின், தெலுங்கரும், கன்னடரும், மலையாளியரும் வரம்பின்றித் தமிழ்நாடு புகுந்து தமிழரெல்லாம் வாழ்வுக்கே இடமின்றித் தவிக்கவேண்டியது தான்!

தமிழ் நாட்டிலுள்ள பல திராவிட இனத்தாரையும் தமிழர் என்னும் சொல் தழுவாமையால் அவரையெல்லாம் திராவிடரென்றே அழைத்தல் தகுதி எனின், எந்நாட்டிலும் பல இனத்தார் இருக்கத்தான் செய்கின்றனர். ஆயின், பெரும்பான்மை பற்றியுமே பழங்குடி மக்கள் பற்றியுமே ஒரு நாடு பெயர் பெறும். இங்கிலாந்தில் ஏனை நாட்டு மக்கள் இல்லாமலில்லை. ஆயின், அதுபற்றி அது ஆங்கில நாடு என்னும் பெயரை இழந்துவிடாது. ஆதலால், தமிழ்நாடு பல திராவிட இனத்தார் வாழ்வதாயினும் தமிழ் நாடே.

ஒரு நாட்டில் பிறநாட்டு மக்களுமிருப்பின், வெளிநாட்டார் உள் நாட்டாரை எல்லாவகையிலும் பின்பற்ற வேண்டுமேயன்றி, உள் நாட்டார் வெளிநாட்டரைப் பின்பற்ற வேண்டியதில்லை. வெளிநாட்டார் நாகரிகத்திற் சிறந்தவராயிருப்பின், உள் நாட்டார் அவரைப் பின்பற்றலாம். தமிழரல்லாத மற்ற திராவிடர் அத்தகையவரல்லர். மேலும், வெளிநாட்டார் நாகரிகத்திற் சிறந்தவராயிருந்த விடத்தும் உள் நாட்டாரின் இனப்பெயர் மாறிவிடாது. ஆதலால், எவ்வகையிலும் தமிழ் நாட்டிலுள்ள பிற திராவிடர் தம்மைத் தமிழர் என்று கொள்ளுதல் வேண்டுமே யன்றி, தமிழரைத் திராவிடன் என்று அழைத்தல் கூடாது.

தமிழர் ஒரு சிற்றினத்தாராதலானும், பிற திராவிடரோடு சேரினல்லது அவர்க்குப் பாதுகாப்பில்லாமையாலும், திராவிடர் என்று தம்மை அழைத்துக் கொள்வதே அவர்க்கு நலமெனின், இது பேதையர்க்குக் கூறும் ஏமாற்றுரையேயன்றி வேறன்று.

பிற திராவிடர் தமிழரோடு சேர்வதில்லை யென்று முன்னரே கண்டோம். மேலும் இக்காலத்தில் ஒரு நாட்டிற்குப் பாதுகாப்பாயிருப்பது உலக அரசுகளிடை வளர்ந்து வரும் அமைதி விருப்ப அறவுணர்ச்சியே யன்றி, அந்நாட்டின் பருமை அல்லது வன்மை யன்று. ஆதலால், தமிழரை அவர் பாதுகாப்பிற்காகத் திராவிட நாடு சேர அல்லது திராவிடரென்று கூறச்சொல்வதெல்லாம், கொக்கு மீன்களின் பாதுகாப்பிற்காகத் கூறியது போன்றதே.

தமிழர் என்னும் பெயர் பார்ப்பனரையும் தழுவுவதலால், இனவுணர்ச்சி யூட்டுவதற்குத் திராவிடர் என்னும் பெயரே ஏற்றதென்னின், வட சொல்லின்றிப் பிற திராவிட மொழிகட்கு நிலையும் உயர்வுமின்மையானும், எழுத்து முதல் அணிவரை இலக்கணமெல்லாம் வடமொழியைப் பின்பற்றி யிருத்தலானும், இலக்கண இலக்கிய ஆசிரியருட் பெரும்பாலார் பிராமணாயிருந்திருத்த லானும், பிற திராவிடர் தம்மை ஆரிய வழியினராகக் கூறிக் கொள்ளுதலானும், தமிழையும் தமிழரையும் புறக்கணித்து வருதலானும், திராவிடர் என்னும் பெயர் தமிழர் என்னும் பெயரினும் தகுதியற்றதாகும்.

தமிழ் வடமொழித் துணை வேண்டாத தனிமொழி எனக் கொள்ளுதலும், வடசொற் கலப்பின்றித் தமிழைத் தூய்மையாக வழங்குவதலும், இந்திய நாகரீகம் தமிழ் நாகரீகம் என்று தெளிதலும், பிறப்பால் சிறப்பில்லை என்பதைக் கடைப் பிடித்தலும், கல்வியையும் அலுவற் பேற்றையும் எல்லார்க்கும் பொதுவாக்குதலும், இன்னோரன்ன பிறவும், தமிழர்க்கிலக்கணமாம். இவ்விலக்கணங்களைக் கொண்டவரெல்லாம் தமிழரென்றே துணிந்து, தமிழுக்கும் தமிழருக்கும் கேடாக அரசியற் கட்சியார் கூறும் வீண்வம்பு வெற்றுரை களையெல்லாம் செவிக்கொள்ளாது விடுத்து தமிழர் கடைத்தேறுவாராக!

-பாவாணர்.

('முத்தமிழ்க் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் நடாத்திய "தமிழர் நாடு" ஏட்டில் பாவாணர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும். 15.5.1951)

tamilthesiyan.wordpress.com
[07/02, 13:34] kathir nilavanFb: திராவிடம், திராவிடன், திராவிட நாடு சொற்களை அறவே ஒழிக்க வேண்டும்!
- தேவ நேயப் பாவாணர் (1959)

தமிழ் என்னும் சொல் தெலுங்கம், குடகம், துளுவம் என்பன போல் சிறுபான்மை 'அம்' ஈறு பெற்றுத் தமிழம் எனவும் வழங்கும்.

கடல் கோளுக்குத் தப்பிய குமரிக் கண்டத் தமிழருள் ஒரு சாரர் வடக்கே செல்லச் செல்ல, தட்ப வெப்ப நிலை மாறுபாட்டாலும் பலுக்கல் (உச்சரிப்பு) தவற்றாலும், மொழிக் காப்பின்மையாலும், அவர் மொழி மெல்ல மெல்லத் திராவிடமாகத் திரிந்தது. திராவிடராக உடன் திரிந்தனர். தமிழ் சிறிது சிறிதாகப் பெயர்ந்து திராவிடமாய்த் திரிந்ததினாலேயே, வட நாடுகளை வேற்று மொழி நாடென்னாது "மொழி பெயர் தேயம்" என்றனர் முன்னோர்.

"மொழி பெயர் தேசத்தாயிராயினும்" என்பது குறுந்தொகை (11).  தமிழ் திராவிட மொழிகளாகத் திரிந்த முறைக்கிணங்க தமிழம் என்னும் பெயரும் திரமிளம்- த்ரமிடம்- த்ரவிடம் எனத் திரிந்தது.

ஒப்பு நோக்க : தோணி - த்ரோணி (வட சொல்) , பவழம்- ப்ரவாளம் (வ), பித்தளை- இத்தடி (தெலுங்கு), குமி-குலி (தமிழ்)

தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தமையாலும், திரவிடம் எனச் சொல்லப்படும் மொழிகளுக்குள் தமிழ் ஒன்றிலேயே பண்டைக் காலத்தில் இலக்கிய மிகுந்தமையாலும், முத்தமிழ் வேந்தரான சேர, சோழ, பாண்டியர் தொன்று தொட்டுத் தமிழகத்தைப் புகழ் பெற ஆண்டு வந்தமையாலும், முதலாவது; திராவிடம் என்னும் பெயர் தமிழையே சுட்டித் திராவிட மொழிக் குடும்பம் முழுவதையுங் குறித்தது. வேத காலத்துப் பிராகிருத மொழிகளுள் ஒன்று த்ராவிடீ எனப்பட்டதையும், ஐந்நூறாண்டுகட்கு முன்பிருந்த பிள்ளை லோகார்சீயர் தமிழிலக்கணத்தைத் "த்ராவிட சாஸ்த்ரம்" எனக் குறித்திருப்பதையும் காண்க.

திரவிட மொழிகள் பெலுச்சித்தானமும், வங்காளமும் வரை பரவியும் சிதறியும் கிடப்பதாலும் , தமிழும் திரவிடமும் ஒன்று சேர முடியாதவாறு வேறுபட்டு விட்டமையாலும், ஆந்திர, கன்னட, கேரள நாடுகள் தனி மாகாணங்களாகப் பிரிந்து போனமையாலும், திரவிடர் தமிழரொடுகூட விரும்பாமையாலும், ஆரியச் சார்பைக் குறிக்கும் திராவிடம், திராவிடன், திராவிட நாடு என்னும் சொற்களை அறவேயொழித்து, தூய்மையுணர்த்தும் தமிழ், தமிழன், தமிழ் நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும்.

எந்நாட்டிலும் மக்கள் பற்றிய இரட்டைப் பகுப்பில், உள் நாட்டு மக்களை முதற் குறிப்பதே மரபும் முறைமையுமாதலால், இனித் தமிழ் நாட்டு மக்களையும் தமிழர், தமிழரல்லாதார் என்றே பிரித்தல் வேண்டும். ஆயினும், தமிழைப் போற்றுவாரெல்லாம் தமிழரென்றே கொள்ளப்பெறுதல் வேண்டும்.

உலகின் முதன்முதல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடைந்து, அவற்றைப் பிற நாடுகளிற் பரப்பினவன் தமிழனே.
ஆதலால், அவன் எட்டுணையும் ஏனையோர்க்குத் தாழ்ந்தவனல்லன். தமிழ் வல்லோசையற்ற மொழியென மூக்கறையன் முறையிற் பழிக்கும் திரவிடர் கூற்றையும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவினை பற்றித் தமிழனை இழித்துக் கூறும் ஆரிய ஏமாற்றையும் பொருட்படுத்தாது, 'நான் தமிழன்' என ஏக்கழுத்துடன் ஏறு போற் பீடு நடை நடக்க,

தாழ்வுணர்ச்சி நீங்குத் தகைமைக் கட்டங்கிற்றே
வாழ்வுயர்ச்சி காணும் வழி
தமிழ் வாழ்க!

-தேவ நேயப் பாவாணர்.

குறிப்பு: மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் மலரில் (1959) " தமிழ் வேறு, திராவிடன் வேறு" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையாகும்.
ஏற்கெனவே, கி.ஆ.பெ.விசுவநாதம் நடத்திய " தமிழர் நாடு" (1951) இதழிலும் இதே தலைப்பில் பாவாணர் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

( இக்கட்டுரை பழ.நெடுமாறன் நடத்தும் "தென் ஆசியச் செய்தி" ஏட்டில் (மார்ச் 16-31, 2016)  வெளி வந்தது.)

Tamilthesiyan.wordpress.com

1 கருத்து:

  1. திராவிடம் என்கிற ஒரு சொல்தான்
    ஆரியத்தின் அனைத்து விதமான
    கேடுகளில் இருந்து , தமிழையும்,
    தமிழினத்தையும் காப்பற்றும்
    வலிமைமிக்க சொல்லாகவும், ஆரியத்தை
    அண்டவிடாத அரணாகவும் இருக்கிறது..
    திராவிடத்தை இழிவுபடுத்துபவர் யாராக
    இருந்தாலும், அவர்கள் ஆரியத்தின்
    அடிவருடிகளா ஆவர்.

    பதிலளிநீக்கு