செவ்வாய், 30 ஏப்ரல், 2019

கன்னியாகுமரி மீட்பு தினமலர் பங்கு தமிழ் மறந்த விளவங்கோடு இனப்பற்று

https://www.dinamalar.com/kadal_thamarai/tvr10.asp?fbclid=IwAR0NJa-f-JreoD6B1n30sB-ucQ4upYFZXFqYTcDy1Y-D12OFUE8IAM7w61Q
தினமலர் முதல் பக்கம் » கடல் தாமரை





நாஞ்சில் நாடு தமிழகத்தடன் இணைந்தது

நாஞ்சில் நாட்டில் தமிழர்களும் இருக்கிறார்களா?’ என்று, தமிழக அரசியல்வாதிகள், அன்று கிண்டல் செய்து கொண்டிருந்தனர். தமிழக தமிழ் மக்களுக்கு, தம்முடைய சகோதரர்கள் வேறு ஒரு மொழியின் பிடியில் சிக்கித் தவிப்பது கூடத் தெரியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மொழியின் அடிப்படையில் அப்பகுதி மக்கள் செய்த தியாகங்கள் மிகவும் பெருமைப்படத் தக்கதாகும்.


அன்றைய பத்திரிகைகள்


அகில இந்தியப் பத்திரிகைகளும், தமிழகப் பத்திரிகைகளும், எங்கோ இருந்துகொண்டு, தென்திருவிதாங்கூர்த் தமிழர்களின் நியாயப் பூர்வமான உணர்வுகளையோ, கோரிக்கைகளையோ, பட்டம் சர்க்கார் மற்றும் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் இதில் நடந்துகொள்ளும் முறை களையோ முழுமையாக வெகுகாலம் உணராமல், ஏதேதோ உபதேசங் களைச் சொல்லி எழுதி வந்தன.


‘தினமலர்’ மட்டுமே தமிழர்களுக்குப் போர்வாளாக இருந்து வந்தது. அது மட்டும் போதாது என உணர்ந்த டி.வி.ஆர்., திருவிதாங்கூர் தமிழர் தலைவர்களைச் சென்னை சென்று, அங்கிருந்து வெளியாகும் பத்திரிகை அதிபர்களைச் சந்தித்து, நிலைமையை விளக்க வற்புறுத்தினார். பின்னர் சென்னையில் இருந்து பிரபல நாள், வார, மாத இதழ் பத்திரிகையாளர்களை வரவழைத்து பாதிக்கப்பட்ட தமிழ்ப்பகுதி முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய ஏற்பாடு செய்தார். இதன் பின்னரே மலையாளப் பத்திரிகைகள் தவிர, மற்ற அகில இந்திய, தமிழகப் பத்திரிகைகளின் எழுத்தில் மாற்றம் காணப்பட்டது.


இந்தப் போராட்டம் பற்றிய அடி முதல், வெற்றி விழா வரையான செய்திகளைத் தெரிந்துகொள்ளத் ‘தினமலர்’ நாளிதழைப் பார்த்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இது பற்றியே தனியான நூல் பெரிய அளவில் வரவேண்டும். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இப்போராட்ட நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் கூறுகிறோம்.

- ஆதாரங்கள்: ‘தினமலர்’

தென்குமரி எல்லை மாநாடு


இன்று தமிழ்நாட்டுடன் இணைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அன்று திருவிதாங்கூர் - கொச்சி ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதன் பொருளாதாரம், உணவு எல்லாம் இந்தத் தமிழ்ப் பகுதியையே நம்பி இருந்தது. ஆனாலும், அங்குத் தமிழர்கள் மாற்றாந் தாயின் குழந்தைகளைப் போலேவே நடத்தப்பட்டனர். நாடு சுதந்திரம் பெற்றதும், மொழி வழி மாகாண அமைப்பு வரும் என்ற கோஷம் எங்கும் ஒலித்தது. அதே சூழ்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்து மக்களும் தாங்கள் தாய்த் தமிழகத்துடன் இணைவதுதான் சரி எனக் குரல் எழுப்பினர். வரலாற்று ஆதாரங்களும், நடைமுறை உண்மைகளும், இந்த உணர்வுகளுக்கு மிகவும் சாதகமாகவும், நியாயமானதாகவுமே இருந்தது. தேசவிடுதலைப் போராட்டத்திற்கு மகாகவிகள் தாகூரும், பாரதியும் உத்வேகம் கொடுத்ததைப் போலவே, கன்னியாகுமரி மாவட்டத்து மக்களுக்கு, நாஞ்சில் நாட்டின் முதுபெரும் கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளை பெரும் சக்தியாய் விளங்கினார்.














வரலாற்று ஆதாரங்களை ஏராளமாகச் சேகரித்த கவிஞர், 1950ம் ஆண்டு ஜனவரி6ம் தேதி கன்னியாகுமரியில், தமிழ்நாட்டின் தென்குமரி எல்லை மாநாடு நடைபெற்றபோது, அதைத் தொடங்கி வைத்து ஆதாரப்பூர்வமாகப் பேசினார். கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்றில் இந்த முதல் மாநாடு மிகவும் முக்கியமானதாகும். இந்த மாநாட்டில் டி.வி.ஆர்., உட்பட, இனி நெடுகிலும் நீங்கள் காணப்போகிற கன்னியாகுமரி மாவட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஆதாரங்களைக் காட்டுகிறேன் பாருங்கள்

கவிமணி நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையின் சுருக்கம்...


"பபண்டைக் காலத்தில் தென் திருவிதாங்கூர் பல சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. ஆய் நாடு, நெங்கநாடு, படப்பநாடு, வள்ளுவ நாடு, குறுநாடு, நாஞ்சில் நாடு, புறந்தா நாடு என்பவை அவற்றுள் முக்கியமானவை. யாவும் செந்தமிழ் நாடுகளே என்பதைப் பல சந்தர்ப்பங்களிலும் தக்க ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன். ஆதலால், இப்பொழுது அதனைப் பற்றி விரிவாக ஒன்றும் கூறத் தேவையில்லை யென்று விட்டொழித்து, தமிழ் மக்கள் அனைவரும் இன்று ஒருங்கு கூடியிருக்கும் இத் தென்குமரியைப் பற்றிய சில விவரங்களை மட்டும் தெரிவிக்கத் துணிகிறேன். இது பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஊர் என்பதில் ஐயமில்லை.





பண்டைக் காலத்தில் தென் திருவிதாங்கூர் பல சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. ஆய் நாடு, நெங்கநாடு, படப்பநாடு, வள்ளுவ நாடு, குறுநாடு, நாஞ்சில் நாடு, புறந்தா நாடு என்பவை அவற்றுள் முக்கியமானவை. யாவும் செந்தமிழ் நாடுகளே என்பதைப் பல சந்தர்ப்பங்களிலும் தக்க ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன். ஆதலால், இப்பொழுது அதனைப் பற்றி விரிவாக ஒன்றும் கூறத் தேவையில்லை யென்று விட்டொழித்து, தமிழ் மக்கள் அனைவரும் இன்று ஒருங்கு கூடியிருக்கும் இத் தென்குமரியைப் பற்றிய சில விவரங்களை மட்டும் தெரிவிக்கத் துணிகிறேன். இது பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஊர் என்பதில் ஐயமில்லை. கல்லெழுத்துக்களில் இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் தேவி, அடியில் வருமாறு குறிப்பிடப்பட்டிருக் கிறாள்: ‘ராஜராஜப் பாண்டி நாட்டு உத்தமசோழ வளநாட்டுப் புறத்தாய நாட்டுக் குமரி கன்னியா பகவதியார்!’


புறத்தாய நாடு என்பதற்கு, முறத்தாய நாடு என்பது வேறொரு பெயர். வாரணவாசி நாடு என்ற பெயரும் இதற்கு உண்டு. பாண்டிய நாட்டு புறத்தாய நாடான தென் வாரணவாசி நன்னாட்டுக் குமரி கன்னியா பகவதியார் என வரும் கல்வெட்டுத் தொடரால் இவற்றை அறியலாம். வாரணவாசி நாடு என்பது இரண்டாவது குலோத்துங்க சோழனுடைய பாட்டன் பெயரால் ஏற்பட்டது. இக்குமரிக்குக் கங்கை கொண்ட சோழபுரம் என்ற வேறொரு பெயரும் இருக்கிறது. கங்கை கொண்ட சோழன் என்பது முதல் ராஜேந்திரனுக்கு ஒரு சிறப்புப் பெயர். அதன் காரணமாகவே இப்பெயர் இதற்கு ஏற்பட்டிருக்க வேண்டும். தேவி கோயிலும், சற்று வடபாலிருக்கும் குகநாதசுவரர் கோவிலும் இங்கு முக்கியமான கோயில்கள். இரண்டிடங்களிலும் ஏறக்குறைய நூறு கல்வெட்டுகளுக்கு மேல் காணப்படுகின்றன. அவற்றுள் இரண்டொன்றைத் தவிர மற்றவை யாவும் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளவையே.


குமரிக் கோயிலில் கொடி மரத்தின் பீடத்தைச் சுற்றிப் பொறிக்கப் பட்டிருப்பது விஜயநகர வேந்தருடைய கல்லெழுத்து. அது கிரந்த லிபியில் பொறிக்கப்பட்ட வடமொழி சாசனம். இன்னொன்று, அதற்கு அடுத்த மேல்பக்கம் உள்ள மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள் ளது. அது தெலுங்கு சாசனம். இந்த இரு கல்வெட்டுக்களைப் பற்றிய விபரம் எதுவும் இதுகாறும் வெளிவரவில்லை. முதல் ராஜ ராஜ சோழனுடையதுதான் இங்குள்ள கல்வெட்டுக்களில் மிகப் பழமையானது. ராஜேந்திர சோழன், ராஜாதி ராஜன் முதலியோருடைய கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. வீர ராஜேந்திரனுடைய நீண்ட சாசனம் ஒன்று மணி மண்டபத்தில் உள்ள கல் தூண்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
மேல் குறித்த பராந்தக பாண்டியனுடைய கல்வெட்டு, இந்த கன்னியாகுமரி ஆலயத்தைக் தவிர வேறு எந்த இடத்திலும் இருப்பதாக இதுவரையிலும் கண்டறியப்படவில்லை. இதன் காலம் ஏறக்குறைய எண்ணுபற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னராம். இதில் தேவியை, ‘தென்னவர் தம் குலதெய்வம்‘ என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தக்கது. பாண்டிய மன்னனுக்கு, ‘குமரிச் சேர்ப்பன்’ என்று பெயர். ‘பொதிய பொருப்பன், புனல் வையைத்துறைவன், குமரிச் சேர்ப்பன் கோப்பாண்டியனே’ என்பது, சேந்தன் திவாகர சூத்திரம். இந்திவாகரம் தமிழ் நிகண்டுகளுள் மிகப் பழமையானது. இதன் காலம் கி.பி., எட்டாவது நூற்றாண்டின் நடுப்பகுதி என்பது அறிஞர்களின் ஆராய்ச்சி முடிவு.


மேலே எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் கல்வெட்டுக்களாலும், தென் திருவிதாங்கோட்டில் வேறு பல பாகங்களில் காணப்படும் கல்வெட்டுக் களாலும், விளவங்கோட்டுத் தாலுகாவிலுள்ள முன்சிறை, பார்த்திப சேகரபுரம் செப்பேடுகளாலும், தென் திருவதாங்கூர் ஓர் செந்தமிழ் நாடே என்பதும் ஆயிரம் ஆண்டுகளாலும் முன் இருந்தே, ஏன் . சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே தமிழர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்பதும், பிறவும் தெள்ளத்தெளிய அறியக்கூடியவை யாம். உண்மை இவ்வாறு இருந்தும், ஒரு மேதாவி, ‘திருவிதாங் கோட்டிலுள்ள தமிழர்கள் இடைக்காலத்தில் தோட்ட வேலைக்காக வந்த கூலி ஆட்கள்’ என்று, பிதற்றி இருக்கிறார். உண்மையைச் சொல்கிறேன் கேளப்பா, கேளப்பா என்றால் கேட்பதுமில்லை. இந்நாடு முழுமையும் தம்முடையது என்பதற்கு மலையாள நண்பர் களும் சில ஆதாரங்களைக் காட்டுகின்றனர். அவர்கள் காட்டும் ஓர் ஆதாரம் - கேரளோற்பத்தி, கேரளா மகாத்தியம் என்னும் நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு பாட்டி கதை.


கோகர்ணத்திலிருந்து மழுவை பரசுராமர் எறிந்து, கன்னியாகுமரியில் வீழ்த்தி, நுபற்று அறுபது யோசனை தூரம் கடலை விலக்கி, பிராமணர் களுக்குத் தானம் செய்த கதை இது. திரேதாயுகத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கதை, கலியுகத்தில், அதுவும் அணுகுண்டு சகாப்தத்தில் சரித்திரப் பிரமாணமாக முன் நிறுத்தப்படுகிறது. இந்தப் பிரமாண நுபல்களைப் படித்துவிட்டு, ‘மலபார் அண்ட் அஞ்சங்கோ’ என்ற நுபல் எழுதிய திருலோகன் என்பார், ‘அவை பொருளற்ற புராணப் புளுகுகள்’ என்றார். இப்படியிருக்க இந்த நுபல்களின் புனிதத்தன்மையை எடுத்து விளம்பரப்படுத்தும் பெரியார் களின் நேர்மையை நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.


முடியாட்சி நீங்கி குடியாட்சி ஓங்கும் இக்காலத்தில், ஜாதி சமய வேறுபாடுகள் ஒழிந்து, மொழியால் ஒன்றுபட்டு மக்கள் வாழ்வதற்கு வகை ஏற்படுவது இன்றியமையாதது. அதற்காகவே தெலுங்கர்கள் ஆந்திர மாகா ணம் கேட்கின்றனர். கன்னடர் கள் பிரிந்து போக விரும்பு கின்றனர். கேரளர்களும் தனி மாகாணத்திற்கு அரும்பாடு படுகின்றனர். இவ்வேளையில் தென் திருவிதாங்கோட்டி லும், செங்கோட்டையிலும், தேவி குளத்திலும், பீர்மேட்டிலும் வாழும் தமிழர்கள், தங்கள் இடங்களையும் தாய்த் தமிழ் நாட்டோடு சேர்க்க வேண்டு மென்று கேட்பதில் குற்றம் என்ன இருக்கிறது?


எந்தெந்த மொழியாளர்கள், அண்டையிலுள்ள தம் தாய்மொழிப் பகுதியோடு சேர விரும்பினாலும், அவர்களைப் பிரித்தும், சேர்த்தும் ஒற்றுமையாய் வாழத் துணை செய்வதுதான் பொது நோக்கம் கொண்ட சிறந்த அரசியல் தலைவர் களின் கடமையாகும். இதற்காகச் சரித்திரமும், புராணமும், சாசனமும், இலக்கியமும் புரட்டிப் பார்க்க வேண்டிய தேவையேயில்லை. கண்முன்னே காணும் உண்மையை நிரூபிக்க ஆதாரம் தேட வேண்டிய அவசியம் உண்டோ? இமயமலை யில் சேர, சோழ பாண்டியர்களின் வில்லும், புலியும், கயலும் பொறிக்கப்பட்டிருப்பதாகத் தமிழ் நுவல்கள் சொன்னால் சிரிக்க மாட்டார்களா இந்தக் காலத்தில்?


திருவிதாங்கோட்டுத் தமிழர்கள் அண்டையில் இருக்கும் தாய்த் தமிழகத்தோடு இணைய விரும்புகின்றனர். தமிழ் நாட்டவரும் இவர்களைச் சேர்த்துக்கொள்ள ஆசைப்படுகின்றனர். இந்நிலையில் இவ்விருசாராரையும் இணைத்துவைப்பது ஒன்றே ஆளும் அதிகாரி களின் கடமை. கேரளியர் இதில் தலையிட்டுக் கலைக்க முயல்வது ஒரு சிறிதும் நியாயமாகாது. ‘தமிழர்கள் ஏன் பிரிந்து போக வேண்டும்? வேற்றுமை உணர்ச்சியின்றி இன்று போல் என்றும் இருந்தால் என்ன?’ என்று சிலர் கேட்கின்றனர். தமிழன் என்றும் மலையாளி என்றும் வேற்றுமை பாராத ஒரு பொது மன்னர் - ஒரு பொது அரசாங்கம் இருந்த காலம் வரை யாருக்கும் இந்தப்பிரிவினை உணர்ச்சி உண்டானதில்லை. ‘நாம் மலையாளிகள்; மலையாளப் பகுதிகள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி ஒரு மலையாள மாகாணம் அமைக்க வேண்டும்’ என, என்று மலையாளிகள் கருதி விட்டார்களோ அன்றே வேற்றுமை உணர்ச்சி வேரூன்றிவிட்டதல்லவா? அதற்கு மேல் சிறுபான்மை சமூகத்தாரான தமிழர்கள் ஆட்சியாளர்களின் தயவை எதிர்பார்த்து வாழ்வதைத் தவிர நியாயமான உரிமையைப் பெற்று வாழ முடியுமா?


இச்சந்தேகம் தமிழர்கள் உள்ளத்தில் எழுவது இயல்புதானே? இதற்குள் தமிழர் இகழப்பட்டுவிட்டனர்; புறக்கணிக்கப்பட்டு விட்ட னர். இதை நிரூபிக்க எத்தனையோ சான்றுகள் தர முடியும். இன்று திருவிதாங்கோடு முழுமையும், ‘ஒரேநாடு . . . ஒரேநாடு’ என்று சொல்வதெல்லாம், குப்பிகளில், தண்ணீரும், எண்ணெயும் நிறைத்து, கார்க்கினால் இறுக மூடி ஒன்றெனக் காட்டுவதற்கு ஒப்பேயன்றி வேறல்ல, உண்மை யாவரும் அறிந்ததே. செந்தமிழ்ச் செல்வர்களே . . . நீங்கள் தமிழ்நாட்டின் எல்லையை வாதித்து, வழக்காடி நிலைநாட்டி விட்டீர்கள். ‘மதராஸ் மனதே’ என்ற தெலுங்கர்களின் பேச்சு அடங்கிவிட்டது. இப்போழுது தென் எல்லைக்கு வந்திருக்கிறீர்கள். இங்கும், ‘நாஞ்சி நாடு ஞங்ஙளிடேது’ என்ற பேச்சையும் அடக்கி வெற்றிக் கொடியேற்றி வீரத் தமிழர் முரசை முழக்குவீர் என்பதில் யாதும் ஐயமில்லை. அதற்கு

தேவி குமரி திருவருள் புரிவாராக!
தென்னெல்லை காத்தருளும் தேவி குமரீநின்
பொன்னடியைக் கும்பிட்டு போற்றுகின்றேன் - மன்னுபுகழ்
செந்தமிழ் நாடொன்றாகித் தேவர் நா டொத்துலகில்
சந்ததமும் வாழவரம் தா.

-என்ற பிரார்த்தனையோடு இந்த மாநாட்டைத் திறந்து வைக்கிறேன். வாழ்க தமிழ் மொழி; வாழ்க தமிழ்நாடு; வாழ்க தமிழ் மக்கள் மகிழ்ந்து.
(கவிமணி, ஜன., 6, ’50ல், புத்தேரியிலிருந்து வெளியிட்ட சிறு பிரசுரத்தில் இருந்து.)

இயக்கத்தின் ஆரம்பம்


இந்த இயக்கத்தின் ஆரம்ப வரலாறுகளைப் பற்றி, ’54ம் ஆண்டு ஆகஸ் ட் 15ல், ‘தினமலர்‘ இதழில் தேசபக்தர் பி.எஸ் .மணி எழுதுகையில் குறிப்பிட்டுள்ளவற்றை முதலில் பார்க்கலாம்: இந்த எண்ணத்தை வளர்த்தவர்கள் காலஞ்சென்ற மனோன்மணி யம் சுந்தரனார், கே.என்.சிவராஜ பிள்ளை, செய்குத்தம்பிப் பாவலர், பி. சிதம்பரம் பிள்ளை ஆகியோரைத் தொடர்ந்து பின்னர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, டாக்டர் எம்.ஈ.நாயுடு, ப.ஜீவானந்தம் இவர்களைச் சேரும்.


ஸ் டேட் காங்கிரசின் நாகர்கோவிலின் அன்றைய தலைவர்களில் ஒருவராகிய சிவன்பிள்ளை, ராமவர்மபுரம் இல்லத்தில், 1954 நவம்பரில் நடைபெற்ற அங்கத்தினர்களின் கூட்டத்தில், ‘காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரையுள்ள நிலப்பரப்பு கேரள மாகாணமாக அமைய வேண்டும்’ என்ற ஸ் டேட் காங்கிரசின் தீர்மானத்தை அமலாக்க முயன்றார். இதில் எங்கள் மூன்று நான்கு பேருக்குப் பெரும் தயக்கம். இதை எதிர்த்து ஸ் டேட் காங்கிரஸ் டிவிஷன் கமிட்டி அங்கத்தினர் பதவி உட்பட அனைத்துப் பதவிகளையும் நாங்கள் ராஜினாமா செய்ய தேர்ந்தது. நாஞ்சில் தமிழர்களுக்கு, நாஞ்சில் தமிழர் காங்கிரஸ் என ஒரு ஸ் தாபனம் அமைக்க முயற்சித்தோம். ஆர்.கே.இராம், பி.மார்கண்டன் இருவரும் இதைக் கொஞ்சம் ஆலோசித்து மேற்கொள்ளக் கூறினர். பின்னர், காந்திராமனையும் சந்தித்தோம். அவர் அன்றைய தமிழர் தலைவர், வழக்கறிஞர் பி.சிதம்பரம் பிள்ளையைச் சந்தித்தார். சிதம்பரம் பிள்ளை வேறு ஒரு வழியில் இருந்தார். அவரது நிலை, திருவிதாங்கூர் முழுவதுமே தமிழர்களைச் சேர்ந்தது என்பதாகும். ஆகவே, ‘நாஞ்சில் தமிழர் காங்கிரஸ் ’ என்பது போதாது. அதை மாற்றி, ‘திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் ’ என்று, மாற்ற வேண்டும் என்றார். அதை ஏற்றுக்கொண்டோம்.


அக்காங்கிரஸ் சட்ட ஆலோசக ராக அவரே இருக்கச் சம்மதித்தார். தி.த.கா., அமைப்புக் கூட்டம், அக்.,16, ’54ல் நாஞ்சில் நாடு பேங்க் இருக்குமிடத்தில் கூடியது. ஆர்.வேலாயுதமும், பெருமாளும், நாக லிங்கமும் கன்வீனர்களாக நியமிக்கப்பட்டனர். எஸ் .வி.தாஸ் தனது ஒத்துழைப்பைத் தர முன் வந்தார். நந்தானியல் அக்கூட்டத்தில் புதிய ஸ் தாபனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நத்தானி யலுடன், காந்திராமன், வி.எஸ் .தாஸ் , ஆர்.கே.இராம், கே.நாகலிங்கம், இரா.வேலாயுதம், பெருமாள், ம. சங்கர லிங்கம் மற்றும் பலரையும் மறப்பதற்கில்லை.
சர்.சி.பி.ராமசாமி ஐயர், திருவிதாங்கூர் சமஸ் தான திவான் பதவியை 1948ல் இழந்தார். திருவிதாங்கூர் இந்தியாவுடன் இணைந்தது. அரசியலில் பெரும் மாற்றங்கள் வந்தன. நாகர்கோவில் ஆலன் மெமோரியல் ஹாலில் தமிழர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது.


நேசமணி தலைமை தாங்க, எம்.சிவதாணுப்பிள்ளை வரவேற்க, சிதம்பரம் பிள்ளை பிரசங்கிக்க தமிழர்களின் ஒரே ஸ் தாபனமான தி.த.நா.கா., பெரும் ஆரவாரத்துடன் உருவானது. இதன் பின்னர் நடைபெற்ற வரலாறுகள் அனைவரும் அறிந்ததே.


தலையங்கம்
ஏப்., 14, ’53 ‘தினமலர்’ தலையங்கம்


திரு - கொச்சி தமிழ்நாடு: கேரள ராஜ்யப் பிரிவினை சம்பந்தமான சர்ச்சைகளில் திரு - கொச்சி தமிழ்ப் பிரதேசங்களில் விவகாரங்கள் பிரதானப் பங்கு வகிப்பதாக இருக்கும். தென் திருவிதாங்கூரிலுள்ள தோவாளை, அகஸ் தீஸ் வரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய நாலு தாலுகாக்களும், சென்னைத் தமிழ்ப் பிரதேசத்தோடு சேரலாம் என்ற பேச்சு மெதுவாகக் கிளம்பியுள்ளது. ஆனால், ஒன்றைக் கவனிக்க வேண்டும் . . . இந்தத் தாலுகாக்கள் மட்டும் தமிழ் வழங்கும் பிரதேசமாக, திரு - கொச்சியில் இருப்பதாக நினைத்துவிடக்கூடாது. நெய்யாற்றங்கரை தாலுகாவும், தமிழர்களைப் பெருவாரியாகக் கொண்டது. அது முழுக்க முழுக்கத் தமிழ் நாட்டைச் சேர்ந்ததுதான். அதிலுள்ள 21 பஞ்சாயத்துக்களிலும் தமிழ்நாட்டுக் காங்கிரசினர் தங்கள் அபேட்சகர்களை நிறுத்தப் போகின்றனர். 18 முதல் 20 பஞ்சாயத்துக்களில் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் அபேட்சகர்கள் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலிருந்து நெய்யாற்றங்கரை தாலுகா தமிழ்ப் பிரதேசமா மலையாளப் பிரதேசமா என்பது புலனாகும்.


செங்கோட்டை தாலுகாவைக் குறித்து ஒருவித பிரஸ் தாபணையும் காணோம். ஒருக்கால் அது தமிழ்ப் பிரதேசம் தானே என்று விட்டிருப்பதாக இருக்கலாம். நெய்யாற்றங்கரை முழுவதும் செங் கோட்டை வரையுள்ள மலையடிவாரமெல்லாம் தமிழர்களே இருக் கின்றனர். அதனால், அந்தப் பிரதேசங்களும் தமிழ்நாட்டோடு சேர உரிமைப்பட்டவையாகும். தேவிகுளம், பீர்மேடு (பழைய டிவிஷன்) முழுவதிலும் தமிழர்களே வசிக்கின்றனர். எஸ் டேட் சொந்தக்காரர்கள் பெரும்பாலும் ஏ.வி.தாமஸ் போன்ற தமிழர்களே. ஒரு சில எஸ் டேட் காரர்கள் மாத்திரமே மலையாள சிரியன் கிறிஸ் தவர்கள். அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கும் இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் தமிழர் களே. இந்த வாதத்தை, ‘மலையாள மனோரமா’ நாளிதழ் ஒப்புக் கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்து அவை தமிழ் நாட்டோடு சேர வேண்டுமென்பது நிச்சயமாகிறது. கொச்சியிலுள்ள சித்தூர்ப் பிரதேசமும் தமிழர் வாழும் பிரதேசமாகும்.
திருவிதாங்கூர் தமிழ்நாட்டுக் காங்கிரசும், திருவிதாங்கூர் - கொச்சித் தமிழர்களும் இந்தச் சமயத்தில் தூங்காமல், உடனே ஒரு பெரிய மாநாடு கூட்டி, மக்களின் விருப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். தங்கள் பிரதேசங்கள் எவை என்பதை வெளியாருக்கு எடுத்துக்காட்டி, அதற்கான கிளர்ச்சிகளைச் செய்ய வேண்டும். சிறிது அசிரத்தைக் காட்டினாலும் அநியாயமாக நமது பிரதேசங்களில் சில பறிபோய்விடலாம்.


ஆந்திரர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கும், போலிக் கண்ணீருக்கும் மத்திய சர்க்கார் பணிந்து, சென்னையை ஆந்திராவின் தற்காலிகத் தலைநகராக்கத் தீர்மானித்திருந்தது. ராஜாஜி ஒருவர் முழு பலத்தோடு எதிர்த்ததின் பயனாகப் பகீரதன் கங்கையைக் கொண்டுவந்தது போன்று, சென்னையைத் தமிழர்களுக்குக் கொண்டு வந்தார். அவர் மட்டும் முதன் மந்திரியாக இருந்திராவிட்டால் நிலைமை என்னவாகி யிருக்குமோ? தமிழ்நாட்டுக் காங்கிரசினருக்கு இப்பொழுது ஏற்பட்டி ருக்கும் இந்தச் சோதனைக் காலத்தில் நன்றாகப் போராடி வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறோம்.


தலைவர்களின் வீரமுழக்கங்கள்
குப்புசாமி


படந்தாலுமூடுவில், குஞ்சன் நாடார் எம்.எல்.ஏ., தலைமையில் குப்புசாமி பேசிய நீண்ட பேச்சிலிருந்து சில வரிகள் . . .
தேவிகுளத்தில், அரசாங்கத்தின் உதவியுடன் வெள்ளை முதலாளி கள் தமிழனைச் சொக்கட்டான் ஆடுகின்றனர். நாங்கள் அகிம்சாபூர்வ மாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை அவர்கள் தவறாகக் கணக்கிட்டு விட்டனர். அங்குள்ள நிலைமையை நேரில் தெரிந்து கொள்ள வந்த தமிழ்த் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நான் உட்பட எத்தனையோ நண்பர்கள் சிறைச் சாலைகளுக்குக் கொண்டு போகப்பட்டுப் பயங்கரமான சித்ரவதைகளுக்கு ஆட்பட் டோம். போலீஸ் உத்தியோகஸ் தர் என்னிடம், ‘தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டுடன் சேரணுமோடா புலையாடி மகனே!’ என்று கேட்டார். தேவிகுளம் பகுதிப் போலீசார் என்னை எப்படியாவது தீர்த்துக் கட்டி விடுவது என்று கங்கணம் கட்டிவிட்டனர். ஆனாலும் தமிழ் மக்களின் பேராதரவுடன் தமிழகம் முழவதும் நான் சுற்றிப் பேசி வருகிறேன். தமிழக மக்கள் ஆதரவோடு எங்கள் இலட்சியம் நிச்சயம் வெற்றி பெறும் என உறுதி கூறுகிறேன். (ஆக., 8, ’54, ‘தினமலர்’ செய்தி)


சர்வாதிகாரி இராமசாமி பிள்ளை


பட்டம் சர்க்காரை எங்களுக்கு நன்றாகவே தெரியும். விளவங் கோட்டில் தேவசகாயம், செல்லையன் என்ற இருவர் கொல்லப் பட்டதை நாங்கள் இன்னமும் மறக்கவில்லை. இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்ற நிலையில் நாங்கள் அகிம்சாபூர்வமான போராட்டத்தில் இறங்கினோம். 19 பேரே கொண்ட பட்டத்தின் கட்சி இவ்வளவு துபரம் கொடுமையாக நடப்பதற்கு காங்கிரசும் உடந்தையாக இருப்பதே காரணம். ஆனாலும், நாங்கள் தமிழ்நாட்டில் உள்ள மூன்றரைக் கோடி தமிழ் மக்களின் ஆதரவை நம்பியே இந்த அறப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
போராட்டத்திற்குத் தலைமை வகிப்பவர்களுக்கு அன்றைக்கு சர்வாதிகாரி என்று பட்டம் வழங்கப்பட்டது. (ஆக., 5, ’54 ‘தினமலர்’ செய்தி)


ஜீவாவின் ஆவேசப் பேச்சு


போராட்டத்திற்குப் பேராதரவு திரட்டிக் கம்யூனிஸ் ட் தலைவர் ஜீவானந்தம் ஏராளமான கூட்டங்களில் மிக ஆவேசமாகப் பேசி வந்தார். அவரது பேச்சின் ஒரு பகுதி . . . இன்று, திரு - கொச்சியில் தமிழகத்தில் சரித்திரம் கண்டறியாத எழுச்சி அலை வீசுகிறது. விடுதலைப் போராட்டத்தில் மக்கள் ஊழிக்காலக் கடல் போல கொந்தளிக்கின்றனர். மூணாற்றில் இருந்து குமரி முனைவரை உணர்ச்சி வெள்ளம் கடல் மடை திறந்து பாய்கிறது. ‘வெற்றியின்றேல் வீரமரணம்’ என்ற வீர எக்காளம் பழம் பெரும் தேசபக்தர் எம்.ஈ.நாயுடுவின் திருவாயிலிருந்து, ஆரம்பப் பாடசாலை சின்னஞ்சிறு மாணவன் சிறுவாய்வரை முழங்கி, பூமியைக் கிடுகிடுக்கச் செய்கிறது. ‘ஐக்கிய தமிழகம் அடைந்தே தீருவோம்’ என்ற பேரிகை, ஜாதி, மத, கட்சி பேதங்களைத் தாண்டி ஒலியும், எதிரொலியுமாக முழுங்குகிறது. தமிழ் மக்களின் இதய கீதம் உச்சஸ் தாயியில் பரணி பாடுகிறது.


கமிஷன் முடிவை வெளியிடும் முன், விசாரணையில் இருக்கும் போதே, சர்தார் பணிக்கர், இருதயானந் குன்சுரு, கமிஷன் தலைவர் பசூல் அலி ஆகியோர், மொழிவாரி ராஜ்ய அமைப்புக்கு எதிரிடையாக, வெளிப்படையாகத் தங்கள் கருத்துக்களைக் கூறி உள்ளனர். மொழிவாரி ராஜ்ய எதிரிகளை அங்கத்தினர்களாகக் கொண்ட கமிஷனிடமிருந்து, மொழிவாரி ராஜ்ய அமைப்புக்குச் சாதகமான சிபாரிசைப் பொது மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? கமிஷனிடம் பொதுமக்கள் நம்பிக்கை குறைந்துவிட்டது. (ஆக., 7, ’54 ‘தினமலர்’ செய்தி)


குஞ்சன் நாடார்


பழவங்காடி மைதானத்தில் முதல் மந்திரி பட்டம் தாணுப்பிள்ளை பேசிய பேச்சு பற்றி, தலைவர் குஞ்சன் நாடார் கூறுகையில் . . . ஒரு முதலமைச்சர் மலையாளிகளைத் தமிழர்கள் மீது ஏவிவிடும் போக்கில் பழவங்காடியில் பேசியிருப்பது வருந்தத்தக்கது. இப்போது ஒன்றை நான் கூறியாக வேண்டியது உள்ளது . . . தென்திருவிதாங்கூரில் உள்ள மலையாளிகள் யாராவது ஒருவர் தமிழர்களால் துன்பப்படுத்தப் பட்டிருப்பாரா . . . அப்படி ஒரு சம்பவத்தைப் பட்டம் சுட்டிக் காட்ட முடியுமா . . . அவரது எண்ணத்திற்கு நேர்மாறாக இன்று தமிழர்களும், மலையாளிகளும் சகோதரர்களாகச் சுபிட்சமாக இருக்கின்றனர். தமிழர்களது கோரிக்கையில் நியாயம் உள்ளது என்று, இன்று மலையாளச் சகோதரர்களே கூறுவதைப் பட்டம் இதுவரை கேட்காதிருந்தால் இனியாவது கேட்டு, உள்ள நிலையைப் புரிந்துகொள்வார் என நம்புகிறேன். (ஆக., 8,’54 தினமலர் செய்தி)


பட்டத்தின் பாய்ச்சல்


அன்றைய திருவிதாங்கூர் முதன் மந்திரி பட்டம் தாணுப்பிள்ளை யின் பேச்சு எப்படி இருந்தது . . . இதே ஓர் உதாரணம்: தென்திருவிதாங்கூரிலுள்ள மக்கள் குழப்பம் விளைவித்து வரு கின்றனர். இவை எல்லாம் எதற்காக . . . இங்குள்ள தமிழ்ப் பிரதேசம் சென்னையுடன் சேர்வதற்கென்றால் அதை உயர்தர அதிகாரக் கமிஷனும், மத்திய அரசும் பரிசீலனை செய்து வருகிறது. அதற்கிடை யில் இந்த வித்தைகள் எல்லாம் எதற்கு . . . அவர்களது இறுதி முடிவு தெரியும் வரையிலும் ஏன் காத்திருக்கக்கூடாது . . . கோர்ட்டு களில் சென்று அக்கிரமங்கள் புரிந்து வருவது நமது பண்பாட்டிற்கு உகந்தது ஆகுமா . . . இந்த நிலைமை தொடருவதை அரசு அனுமதிக் காது. இதுவரையிலும் அக்கிரமம் காண்பித்தவர்களையே அரசாங்கம் கைது செய்து தண்டித்துவருகிறது. ஆனால், அதைத் துபண்டி விடுபவர்கள்(துபண்டியவர்கள் எனப் பட்டம் சொல்லாமல் சொன்னது, ‘தினமலர்’ பத்திரிகையைத்தான்!) வேறு இருந்து வருகின்ற னர் என்பது அரசாங்கத்திற்குத் தெரியும்.


இந்தச் சந்தர்ப்பத்தில் திருவனந்தபுரம் தமிழர்கள் நிலைமையைத் தெளிவுப்படுத்த வேண்டும். அவர்களில் ஒருவராவது இதுவரையிலும் அபிப்பிராயம் கூற முன் வரவில்லை. திருவனந்தபுரம் தமிழர்கள், தென் திருவிதாங்கூரிலுள்ள தங்கள் உறவினர்களும், நண்பர்களும் புரியும் அக்கிரமத்தை அறியவில்லையா . . . அவர்கள் கண்டும், கேட்டும், மவுனமாக இருப்பது ஏன் எனக் கேட்கிறேன் . . . திருவனந்த புரம் தமிழர்கள் அங்கிருந்து போக விரும்புகிறார்களா எனக் கேட் கிறேன். இங்குச் சமாதானமாகவும், தென் திருவிதாங்கூரில் அக்கிரம மாகவும் நடந்துகொள்வது சரியல்ல. தென் திருவிதாங்கூரிலுள்ள மலையாளிகள் பலரும் ஆபத்தான நிலையில் இருந்து வருவதாக எனக்குத் தெரிவித் திருக்கின்றனர். அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் அரசு பாதுகாப்பு அளிக்குமென நான் உறுதி கூறிக் கொள்கிறேன். தென் திருவிதாங்கூரில் இதுவரையிலும் போலீசாரின் நடவடிக்கை பாராட்டத் தக்கதாகும். இதே மாதிரி தொடர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.


தற்போது இந்தக் குழப்பங்கள் எல்லாம் அவசியமா என்பதைச் சிந்திக்க வேண்டுகிறேன். இது ஒரு அரசியல் போராட்டம் என்பதைப் பொதுமக்கள் உணர வேண்டும். அக்கிரமத்திற்கு, திரு - கொச்சி மக்கள் பின் துணை அளிப்பார்களா என்பதை நான் அறிய விரும்பு கிறேன். டிரான்ஸ் போர்ட் வேலைநிறுத்தத்தைப் பரிபூர்ணமாக தோல்வி அடையச் செய்ய வேண்டும். இனிமேல் வேலைநிறுத்தம் குறித்து சிந்திக்கக்கூட முடியாதபடி தோல்வி அடையச் செய்ய வேண்டுகிறேன். ராஜ்யத்தின் நன்மைக்காக நாம் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து சிந்தித்து, வேண்டியது செய்வோம். (ஆக.,9, ’54 ‘தினமலர்’ செய்தி)


நேசமணி


நீண்ட பிரசங்கம் செய்ய நான் விரும்பவில்லை. நாளைய தினத்தை ஒருவித கட்சி பேதமும் காட்டாது, திரு - தமிழக விடுதலை தின மாகக் கொண்டாட வேண்டும். ஆக.,15ம் தேதி கொண்டாடுவார்களே இந்தியா முழுவதும், அதுபோலக் கொண்டாட வேண்டும். அகிம்சா பூர்வமாகக் கொண்டாட வேண்டும். இங்குப் பெரிய அளவில் போலீஸ் வந்திருக்கிறதாம். அவர்களுக்கு நாம் வேலை கொடுக்க வேண்டாம். ஒவ்வொருவரும் தன்னாலியன்ற ஊழியத்தைச் செய்து, போராட்டத்தைப் பலப்படுத்த வேண்டும். நமது போராட்டத்தை இந்தியா முழுவதும் கவனித்துக் கொண்டிருக்கிறது. நமது பிரதமர் நேருவுக்குத் தக்க ரிப்போர்ட்டுகள் இங்குள்ள நிலை குறித்துப் போய்க்கொண்டே இருக்கிறது. தாயகப் பத்திரிகைகளும் நமக்கு ஆதரவு தந்திருக்கின்றன. இது நம் ஜீவமரணப் போராட்டம். ஒவ்வொருவரும் ஒரு வீரன் எனக் கச்சைக்கட்டிப் போராட்டத்தில் இறங்கவேண்டும்; கோழையாகக் கூடாது. உரிமைப் போராட்டம் நாட்டுக்கான போராட்டம் என்ற தன்னம்பிக்கையோடு இறங்க வேண்டும்.


பொருளுதவி மிகத் தேவை. வேண்டும் பொருட்களை அந்தந்த கிராமத்தாரே வசூலித்துக் கொள்ளவேண்டும். இன்றுள்ள அதிகாரிகள் பலரும் நீதிக்கேடான முறையில் நடக்கின்றனர். தண்டனைகள் கூட ஒவ்வொரு விதமாக இருக்கின்றன. அவர்களின் தொழிலையும், தரத்தையும் பார்த்துத் தண்டிக்கின்றனர். இந்தத் தமிழ் அதிகாரிகள், இன்றைய அரசாங்கத் தலைவர்கள், தங்களை என்றென்றும் காப்பாற்றுவர் என எண்ண வேண்டாம். நாட்டுக்காகப் பாடுபடும் வீரர்களைக் கண்ணியமாக அவர்கள் நடத்தவேண்டும். நாளை நாம் விடுதலை தினம் கொண்டாடவேண்டும். அது நமக்கும், நம் சந்ததியாருக்கும் சிறப்புத் தருவதாக இருக்க வேண்டும். (ஆக,.12, ’54 ‘தினமலர்’ செய்தி)


டி.வி.ஆரின் விவாதம்


நாஞ்சில் நாடு தாய்த் தமிழகத்துடன் இணைவது என்று முடிவு எடுத்து, அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நேரம். ‘இது சரியான முடிவுதானா?’ என்று படித்த தமிழர்கள் சிலரிடையே ஒரு எண்ணம் இருந்தது.


இதுபற்றி ஒரு விவாதமே நடத்தலாம் என்று பலரும் கருதவே, விவாதம் நடந்தது. அதில் கலந்துகொண்டு, ‘பிரிந்து போவதைத் தவிர இன்றைய சூழ்நிலையில் வேறு வழியில்லை’ என, டி.வி.ஆர்., விளக்கினார். அந்தப் பேச்சிலிருந்து சில பகுதிகள் . . .






இந்தியாவிலுள்ள ஒவ்வொரு ராஜ்யத்தையும் புனரமைப்பு செய்ய வேண்டிய அவசியம் சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்டது. இதற்காக மத்திய அரசு மூவர் கொண்ட ஒரு கமிஷனை நியமித்தது. அக்குழு ஒன்றரை வருடம் இந்தியாவைச் சுற்றிப் பார்த்து, மூவாயிரம் மகஜர்களும், ஒன்பது ஆயிரம் வாய்மொழி அறிக்கைகளையும் பெற்றுள்ளது. இவற்றின் அடிப்படையில் ஒரு அறிக்கையை மத்திய சர்க்காரிடம் சமர்ப்பித்துள்ளது. இந்தியா, பதினாறு ராஜ்யங்களாகவும், மத்திய ஆட்சிக்குப்பட்டு டில்லி, மணிப்பூர், அந்தமான் இருக்க வேண்டுமென கமிஷன் அறிக்கை கூறுகிறது. ஐதராபாத் விஷயத்தில் ஐந்து வருடம் கழித்து, அங்குள்ள சட்டசபை மெம்பர்களில் மூன்றில் இரண்டு பாகம் ஓட்டுக்கள் அளித்தால், 1961ல் விசால ஆந்திரா ஏற்படுமென்று கமிஷன் கூறியுள்ளது. மேலும், மொழி அடிப்படையில் இந்தியா பல ராஜ்யங்களாகப் பிரிந்தாலும், ஒற்றுமை எண்ணம் குறையாமலிருக்க சில வழிகளையும் கமிஷன் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், திருவிதாங்கூர் ஆட்சியில், பல வழிகளில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, மாற்றாந்தாய் மனப்பான்மை நிலவி வருவதைப் பல் வேறு உதாரணங்களுடன் விரிவாகக் கூறி சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டவர்கள் எவரும் தாய்த் தமிழகத் துடன் நாம் இணைவதை எதிர்க்க மாட்டார்கள், நியாயமான நமது கோரிக்கைகளைத் தாய்த் தமிழர்களும் ஏற்பார்கள் என்று கூறி, அதைப் பல்வேறு உதாரணங்களுடனும் கூட்டத்தினருக்கு எடுத்துரைத்தார். (நவ.,2,’55,‘தினமலர்’ செய்தி)


திருவிதாங்கூர்த் தமி ழர்கள் தாய்த் தமிழகத் துடன் இணைவதற்கான போராட்டம், நவம்பர் 1, 1956ல் வெற்றி பெற்றது. அன்று, கன்னியாகுமரி மாட்டம் முழுவதும், தேசியத் திருவிழாவாகக் கொண் டாடப்பட்டது. சரித்திரம் கண்டிராத முறையில் திருவிதாங்கூர் தமிழகத்தில் உள்ள வீடு களும், வீதிகளும், அர சாங்க அலுவகங்களும் மற்றும் பொது நிறுவனங் களும்கொடி, தோரணங் களால் அலங்கரிக்கப்பட் டிருந்தன. கன்னியாகுமரி முதல், களியக்காவிளை வரை பிரதான சாலை யில் நுபற்றுக்கணக்கான அலங்கார வளைவுகள் போடப்பட்டிருந்தன. (நவ.,3, ’56 ‘தினமலர்’ செய்தி)


வெற்றி விழாவில் டி.வி.ஆர்.,


நகரசபைத் திடலில் தமிழரசுக் கழகச் சார்பில் திரு - தமிழக இணைப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு, ‘தினமலர்’ நிர்வாக ஆசிரியர் டி.வி.ஆர்., தலைமை வகித்தார். கூட்டத்திற்குத் தி.த.கா., பிரமுகர்களான தாணுலிங்க நாடார், காந்திராமன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மகாதேவன் பிள்ளை மற்றும் பலர் வந்திருந்தனர். சங்கரலிங்கம் வரவேற்புரை கூறினார்.


டி.வி.ஆர். தமது தலைமை உரையில் . . .


இந்தப் பிரதேசம் சென்னையுடன் சேருவதற்கு முன்னரும், பின்ன ரும் அதனால் ஆபத்து உண்டெனக் கருதுகிறவர்கள், இங்கு இல்லாமல் இல்லை. உதாரணமாக இன்று இந்த வட்டாரத்தில் காணப்படுகிற பாடசாலைகள், ஆஸ் பத்திரிகள் மற்றுமுள்ள வசதிகள் போய்விடும் என அவர்கள் கூறுகின்றனர். அப்படிப் பயப்படுவதற்கு அவசியமே இல்லை. நவம்பர் முதல் நாம் நடத்தப்படும் விதம் பற்றி இங்கு வந்திருந்த முதன் மந்திரி காமராஜர் அவர்களை நான் சந்தித்தபோது கேட்டதற்கு அவர், இந்தப் பிரதேசம் புறக்கணிக்கப்படாது என்றும், இந்தப் பிரதேச நல உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் என்னிடம் உறுதி அளித்தார் என்று கூறி னார். தலைவர்கள் தொடர்ந்து கூறுகையில், மொழிவாரி ராஜ்யம் அமைந்தால் இந்திய ஐக்கியம் பாதிக்கப்படும் என்று கூறுவதில் அர்த்தமில்லை என்றும், ஆனால், சாதாரண மக்கள் எல்லாம் அரசியல் நிலைமையை அறிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பு ஏற்படுகிறதென்றும் கூறினர். (நவ., 11, ’56 ‘தினமலர்’ செய்தி)

நீதிமன்றத்தில் "தினமலர்'


கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற நேரம் . . . போராட்டத்தில், கட்சி, ஜாதி, மத வேறுபாடில்லாமல் குமரி மாவட்ட மக்கள் முழுமையாக ஈடுபட்டனர். போராட்டத்தின் உச்சகட்டமாக ஆக., 11, ’54ம் ஆண்டு, பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இத்துப்பாக்கிச் சூடு பற்றி ஒரு விசாரணையை அன்றைய திரு விதாங்கூர் உயர்நீதிமன்ற நீதிபதி கே.சங்கரன் நடத்தினார். நூறுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அரசுத் தரப்பில் நடை பெற்ற விசாரணை என்பதால், அரசுக்குச் சாதமாகவே தீர்ப்பு இருந்திருக்கும் என்பதில் இருகருத்துக்கு இடமில்லை.


இந்தப் போராட்டத்தில் பெரும் பங்கு எடுத்துக்கொண்டது ‘தினமலர்’ பத்திரிகையே’ எனப் பல இடங்களில் நீதிபதி சுட்டிக்கட்டி உள்ளார். தென்திருவிதாங்கூர் போராட்டக்காரர்களுக்குப் பிரசாரக் குரலாகவே செயல்பட்டது, ‘தினமலர்’ என்று பல இடங்களில் அழுத்தமாகக் கூறி உள்ளார். இந்த விசாரணையின்போது, ‘தினமலர்’ நிறுவனர் ஆசிரியர், டி.வி.இராமசுப்பையரும் விசாரிக்கப்பட்டார்.


இராமசுப்பையர் சாட்சியம்




துப்பாக்கிப் பிரயோகம் குறித்து விசாரணைக் கமிஷனர் சங்கரன் முன்னிலையில் இன்று, அக்., 29, ’54ல் நடைபெற்ற விசாரணையில், ‘தினமலர்’ நிர்வாக ஆசிரியர் டி.வி.ஆர்., சாட்சியாக விசாரணை செய்யப்பட்டார். மொத்தம் எட்டு சாட்சிகள் விசாரணை செய்யப் பட்டனர். ‘தினமலர்’ நிர்வாக ஆசிரியர் டி.வி.ஆர்., தமது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டதாவது . . .


நான், ‘தினமலர்’ பத்திராதிபர். இப்பத்திரிகை ஆரம்பமாகி மூன்று வருடங்களாகின்றன. எனது உடைமையில் நடந்து வரும் ஸ் டாண்டர்ட் அச்சாபீசில், ‘தினமலர்’ அச்சிடப்பட்டு வெளியாகிறது. இப்பத்திரிகை திருவனந்த புரத்திலிருந்து பிரசுரமாகிறது. நான் ஸ் திரமாக நாகர்கோவில் வடிவீஸ் வரத்தில் தங்குகிறேன். எனக்குக் கீழ் சக பத்திரிகை ஆசிரியர்களாக நாலைந்து பேர் உண்டு. ஸ் ரீமான்கள் உமைதாணுப் பிள்ளை, கிருஷ்ணப்பிள்ளை, நடராஜ் பிள்ளை, மைக்கேல் ஆகியோர் அவர்கள். நடராஜ் பிள்ளை தவிர மற்றவர்கள் நாஞ்சில் நாட்டுக்காரர்கள்.


சந்தாதாரர் லிஸ் ட் ஆபீசில் உள்ளது. நான் ‘தினமலர்’ பத்தி ரிகையை அச்சிட்டு, வெளி யிட்டு வருகிறேன். வருடச் சந்தா ரூ.24. ஒரு பிரதிக்கு ஓரணா. ‘தினமலர்’ இதழுக்கு எங்கும் விற்பனை உண்டு. கூடுதல் விற்பனை தென் திருவிதாங்கூரில் ஆகும். பத்திரி கைத் தொழிலில் எனக்கு ஆண்டு தோறும் நஷ்டம் ஏற்படுகிறது; இதுவரையிலும் எந்தவித லாபமும் கிடைக்கவில்லை. பிரஸ் சும் இதர சாதனங்களும் என் பேரில்தான் வாங்கியிருக்கிறேன். பத்திரிகைக்கான சகல செலவுகளும் என் சொந்த பணத்திலிருந்து செலவாக்கப்பட்டு வருகிறது. ‘தினமலர்’ பத்திரிகை நாகர்கோவிலில் மட்டும் தினமும் இரண்டாயிரம் பிரதிகள் விற்பனையாகிறது. தென் திருவிதாங்கூரில், தி.த.நா.கா., என்ற ஸ் தாபனம் இருப்பது எனக்குத் தெரியும். அந்த ஸ் தாபனத்தின் தலைமைக் காரியாலயம் நாகர்கோவிலில் இருக்கிறது. ‘தினமலர்’ பத்திரிகை வாசகர்கள் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் அனுதாபிகளா என்பது எனக்குத் தெரியாது.
‘தினமலர்’ பத்திரிகையில் தமிழ்நாட்டுக் காங்கிரசின் நடவடிக்கைகள் அன்றன்றைக்கே பிரசுரிக்கப்பட்டு வந்தது. ‘தினமலர்’ பத்திரிக்கைக்கு நாகர்கோவிலில் ஒரு நிருபர் உண்டு. அவர் நேற்று இந்தக் கோர்ட்டில் ஆஜரான இளங்கோ ஆவார். திரு - கொச்சியிலுள்ள இதர நகரங்களுக் கும் நிருபர்கள் உண்டு. அவர்களுக்கு மாதா மாதம் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நம்பத்தகுந்தவர்கள் என்பதுதான் என் நம்பிக்கை. நாகர்கோவில் நிருபர் இளங்கோ, தமிழ்நாட்டுக் காங்கிரஸ் அங்கத்தினரல்ல; அந்த ஸ் தாபன அதிகாரிகளோடு விரோதமானவருமல்ல. அவர் கம்யூனிஸ் ட்டாக இருந்தவர்; சிறை சென்றிருக்கிறார். எனது பத்திரிகைக்கு நிருபராக வந்து இரண்டரை வருடங்களாகின்றன.


பிறகு விசேஷ பிராசிக்கியூட்டர் மள்ளுர் கோவிந்தப் பிள்ளை ஜூலை 9ம் தேதி வெளியான ‘தினமலர்’ பத்திரிகை பிரதியை எடுத்து, ஐந்தாம் பக்கத்தின் முதலாவது பத்தியைக் காட்டி, ‘நேசமணி முதலானவர் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்கள்’ என்ற வாசகத்தைக் குறிப்பிட்டுச் சாட்சியிடம் சம்மதம் வாங்கப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு டி.வி.ஆர்., தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டார். ‘தினமலர்’ பத்திரிகையில் வெளிவந்த செய்திகள் பல, அட்வகேட் மள்ளுர் கோவிந்தப்பிள்ளையால் எடுத்துக்காட்டப்பட்டுப் பத்திரிகை இதழ்கள் ஆதாரங்களாகச் சேர்க்கப்பட்டன. அவை பத்திரிகைகளில் வெளிவந்தவைதாம் என, டி.வி.ஆர்., சாட்சி கூறினார். இனிமேல் இந்த மலையாள அரசாங்கத்தின் கீழ் ஒரு நிமிடமும் நாம் இருக்க முடியாது என டாக்டர் எம்.ஈ.நாயுடு நாகர்கோவில் பொதுக் கூட்டத்தில் பேசியதாக உள்ள செய்தியும் எடுத்துக் காட்டப்பட்டது.

டி.வி.ஆரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதிலும்:


நீங்கள் தி.த.நா.கா., உறுப்பினரா?
இல்லை.
நேசமணி, தாணுலிங்க நாடார் உங்கள் சந்தாதாரர்களா?
இருக்கலாம்; ஏஜென்டுகள் வழி பத்திரிகை விற்கப்படுவதால் எனக்குத் தெரியாது.
ஜூலை 9ம் தேதி, ‘தினமலர்’ இதழில், மூணாற்றுச் சம்பவங்கள் என்ற தலையங்கத்தில் அரசாங்கத்தை ஆட்சேபித்து எழுதி இருக்கிறீர்களா?
ஆட்சேபிக்கவில்லை; விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது.
தி.த.நா.கா., க்களை ஆட்சேபித்து எழுதியிருக்கிறீர்களா?
ஆட்சேபித்து எழுதியிருக்கிறேன். எந்த நடவடிக்கையை ஆட்சேபித்து என்பது தற்போது கூறுவதற்கில்லை.
‘ஐக்கிய கேரளமும் - ஐக்கிய தமிழகமும்’ என்ற தலைப்பில் தலையங் கம் எழுதியிருக்கிறீர்களா?
தொடர்ச்சியாகத் தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது.
‘உங்களுக்கு மலபார் பைத்தியம் பிடித்த பிறகுதான் எங்களுக்குத் தமிழ்நாட்டுப் பித்து பிடித்தது’ என்று அதில் எழுதியிருக்கிறீர்கள் அல்லவா?
ஆம்.
இதில், ‘உங்களுக்கு’ என்பது, மலையாளிகளையும், ‘எங்களுக்கு’ என்பது, தமிழர்களையும் தானே குறிப்பிடுகிறது.
ஆம்.
‘நீங்கள் ஐக்கிய கேரளம் என்ற பூதத்தைக் கிளப்பி விட்டீர்கள். அதற் குரிய பலி கொடுத்துத்தானே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அது உங்களை விடாது!’ என்று எழுதி இருக்கிறீர்கள். இதில், ‘நீங்கள்’ என்பது மலையாளிகளைத்தானே?
ஆம். ஐக்கிய கேரளம் அமைப்பதாக இருந்தால், ஐக்கிய தமிழகமும் அமையவேண்டும் என்பதே எனது அபிப்பிராயம் ஆகும்.
ஒரு தலையங்கத்தில், ‘தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அரசியல் துரோ கங்களை எடுத்துக்காட்டவே இவற்றைக் குறிப்பிட்டோம்’ என்று எழுதப் பட்டு இருக்கிறது அல்லவா?
ஆம்.
நீங்கள் தமிழ்நாட்டுக் காங்கிரசாரரிடம் ஏராளம் பணம் பெற்று அவர் களை அக்கிரமங்களுக்குத் துபண்டி விட்டீர்கள் அல்லவா?
இல்லை
‘தினமலர்’ பத்திரிகை தமிழ்நாட்டுக் காங்கிரசின் (மவுத் பீஸ் ) பிரசாரப் பத்திரிக்கை அல்லவா?
இல்லை.
போலீஸ் காரர்கள் உங்களது ஆபீசைச் சோதனையிட்டர்களா?
சோதனையிட்டார்கள்.
தமிழ்நாட்டுக் காங்கிரசில பிராமணர்கள் சேர்ந்திருக்கிறார்களா?
சேர்ந்திருக்கிறார்கள்.
எத்தனை பேர் சேர்ந்திருக்கிறார்கள்?
எத்தனை பேரென்று திட்டமாகக் கூற முடியாது. எஸ் .எஸ் .சர்மா, மூணாற்று எம்.எல்.ஏ., அவரைத் தெரியும்; அதில் அவரும் ஒருவர். அவர் ரிடையர்டு திவான் பேஷ்கார் டாக்டர் சுப்பிரமணி ஐயரின் மகன்.
உங்களுக்குச் சொந்தச் சொத்து உண்டா?
உண்டு.
தமிழ்நாட்டுக் காங்கிரஸ் ஆரம்பமாகி எவ்வளவு காலமிருக்கும்?
ஏழு, எட்டு வருடமிருக்கும்.
நேசமணி, தாணுலிங்க நாடார் முதலியோர் கேட்டுக் கொண்டபடிதான் இந்தப் பத்திரிக்கை ஆரம்பித்தீர்களா?
இல்லை.
விசாரணைக் கமிஷனர் கேள்விக்கு டி.வி.ஆர்., பதில் அளித்ததாவது
தமிழ்நாட்டுக் காங்கிரசின் சொந்தப் பத்திரிகை உண்டா?
ஒரு வாரப் பத்திரிகை இருந்தது; தற்போது அது வெளிவரவில்லை.
அதன் பெயர் என்ன?
திங்கள்.
அதன் ஆசிரியர்?
நேசமணி.
அதற்கு ஏராளம் சந்தாதாரர் உண்டா?
நஷ்டத்தினால்தான் அந்தப் பத்திரிகை நின்றதாகத் தெரிகிறது.
தி.த.நா.கா.,விற்குப் பிராஞ்ச் ஆபீஸ் உண்டா?
குழித்துறையில் மட்டும் உண்டு.
தமிழ்நாட்டுக் காங்கிரஸ் ஆபீசில் உறுப்பினர்கள் எத்தனை பேர்?
தெரியாது.
தமிழ்நாட்டுக் காங்கிரசிற்கு கூடுதல் செல்வாக்கு எங்கே?
விளவங்கோட்டுத் தாலுகாவில்.
நீங்கள் தாமசிக்கும் வடிவீஸ் வரம் கிராமத்தில் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏராளம் உண்டா?
இல்லை.
தென் திருவிதாங்கூர் தமிழ்நாட்டுக் காங்கிரசில் இல்லாதவர்களும் உண்டா?
உண்டு.
உங்கள் பத்திரிகைக்குத் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் செய்திகள் அவர்கள் தருவதா அல்லது உங்களது நிருபர்கள் தருவதா?
தி.த.நா.கா., ஸ் டேட்மெண்ட் முதலியவற்றை அவர்களே அனுப்பித் தருவார்கள். மற்ற செய்திகள் நிருபர்கள் விசாரித்து அனுப்புவதாகும்.
விளவங்கோட்டில் உள்ளவர்களுக்குத் தமிழ் தெரியாவிடில் ஏன் தமிழ் நாட்டில் சேர வேண்டும் என்கின்றனர்?
அவர்கள் தமிழர்கள். இந்தி பேசினாலும் தமிழர்கள் தமிழர்கள் தானே. தமிழ்நாட்டுடன் சேர வேண்டும் என்ற அவர்களது நோக்கத்தை தேர்தல்கள் மூலம் நிரூபித்திருக்கின்றனர்.
அக்கிரம நடவடிக்கைகள் கூடாது, சமாதான முறையில் நடைபெற வேண்டும் என்று எழுதியிருக்கிறீர்களா?
இந்தப் பிரச்னை குறித்து இங்கு காட்டப்பட்ட மூன்று தலையங்கங்கள் எழுதியிருந்தேன்.
கோர்ட் மறியல் குழப்பத்தை விளைவிப்பது அல்லவவா? உங்களுக்கு அதில் பொறுப்பு உண்டல்லவா?
தலைவர்கள் பி.ஏ., பி.எல்., படித்தவர்கள்தானே!
சென்ற ஆறுமாத காலத்தில் சர்க்குலேஷன் கூடியிருக்கிறதா?
சுமார் ஆயிரம் பிரதிகள் கூடியிருக்கும்.
(நவ., 20, ’54 ‘தினமலர்’ செய்தி)

ஆட்சியாளர்களை அலற வைத்த தலையங்கங்கள்

திருவிதாங்கூர் ஆட்சியாளர்களை, முக்கியமாக முதன் மந்திரி பட்டம் தாணுப்பிள்ளையைக் கோபப்படச் செய்த, ‘தினமலர்’ தலையங்கம், ‘ஐக்கிய கேரளமும் - ஐக்கிய தமிழகமும்’ ஆகும். இந்தத் தலையங்கங்கள் குறித்து நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. மூன்று தலையங்கங்களும் சாட்சியமாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த முக்கியத்துவம் வாய்ந்த மூன்று தலையங்கங்கள்:


ஐக்கிய கேரளமும் ஐக்கிய தமிழகமும் - 1

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னால் வரை திருவிதாங்கூரில் மலையாளிகளும், தமிழர்களும் அண்ணன், தம்பி முறையில் சகோதரர் களாக வாழ்ந்து வந்தார்கள். எந்தவித இன வேறுபாடுகளும் கிளம்பியதே இல்லை. தென்திருவிதாங்கூரிலுள்ள தமிழர்களில் சிலர் ஒரு காலத்தில், தங்கள் பள்ளிக்கூடங்களில் மலையாளம்தான் போதிக்கப்பட வேண் டும், அப்படியானால்தான் ராஜ்ஜிய நிர்வாகப் பதவிகளில் கூடுதல் பங்கு கிடைக்கும் என்றும் சொன்னார்கள். சுமார் முப்பது வருடங் களுக்கு முன்பு உயர்தரப் பாடசாலைகளில் ஒரு தமிழ்ப் பண்டிதர் இருந்தால், நான்கு மலையாளப் பண்டிதர்கள் இருப்பார்கள்.


விளவங்கோடு, நெய்யாற்றங்கரை மக்களில் இன்று கூட அநேகருக்கு மலையாளம்தான் தெரியும். அவர்களில் சிலர் மலையாள நடையுடை பாவனைகளையே அனுஷ்டித்தும் வந்தார்கள். பெண்கள்கூட தங்கள் தமிழ் மரபுச் சேலைகளைக் கைவிட்டு விட்டு, வெள்ளை ‘முண்டு’ அணிந்து பெருமை கொண்டாடினர்கள். இன்னும் ஒருபடி போனால் மாவேலிக்கரை, மூணாறு, தொடுபுழை, வைக்கம் முதலான இடங்களில் வசிக்கும் பெருவாரியான தமிழர்கள், நடையுடை பாவனைகளில் எந்தவித மாறுபாடும் காட்டாமல் மலையாளிகளாகவே காட்சியளித்து வந்தார்கள். ஆனால், கல்யாணம் போன்ற சடங்குகளில் மட்டும் தமிழ் மரபைக் கடைப்பிடித்து வந்தார்கள்.


இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது. இரும்பு உள்ளம் படைத்த நமது ஒப்பற்ற தலைவர் வல்லபாய் படேல், திருவிதாங்கூரையும், கொச்சியையும் ஒன்றாக இணைத்தார். இந்த இரு சுதேச ராஜ்ஜியங் களும் அப்படியே இருந்தால், பிற்காலத்தில் அவை மூலம் நாட்டிற்கு ஏதாவது கேடுகள் சம்பவிக்கலாம் என்பதும் இணைப்பிற்கு ஒரு காரணமாகும். அது மட்டுமல்ல, கிரமமாக சுதேச ராஜ்ஜியங்களை ஒழித்து விட வேண்டும் என்பதுதான் காங்கிரசின் நெடுநாளைய கனவு. அக்கனவுதான் வல்லபாயை அவ்வாறு செய்யத் துபண்டியது. இந்த இரண்டு இராஜ்ஜியங்களும் சேர்ந்த பிறகும் தமிழர் - மலையாளி உறவு பாதிக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.


இன்று திரு - கொச்சியில் இருக்கும் 90 லட்சம் ஜனத் தொகையில் தமிழர் 20 லட்சத்திற்கு மேல் இருக்கிறார்கள். இந்தக் கணக்கிற்கு, ‘சென்சஸ் ’ ஆதாரம் கிடையாது. ஏனெனில் மலையாளம் பேசும் தமிழர்களை எல்லாம் மலையாளிகளாகவே கணக்கிடப்பட்டிருக்கிறது. தோவாளை, அகஸ் தீஸ் வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய ஏழு தாலுகாக்களிலும் முழுக்க முழுக்கத் தமிழர்களே இருக்கிறார்கள்.

நெய்யாற்றங்கரையில் நூற்றுக்கு அறுபது தமிழர்கள். சித்தூரிலும் அப்படியே. இதுதவிர நெடுமங்காடு, பத்மனாப புரம் தொடங்கி மலையிலுள்ள தோட்டங்களில் வேலை செய்யும் முக்காலே மூணு வீசம் பேர் தமிழர்கள்.
திருவனந்தபுரத்தில் பாதிப்பேர் தமிழர்கள். மற்றும் கொல்லம், ஆலப்புழை, எர்ணாகுளம்,கொச்சி முதலான நகரங்களிலும், நிறையத் தமிழர்கள் குடியிருந்து வருகிறார்கள். சிறு சிறு ஊர்களிலும் தமிழர்கள் அங்கங்கே சிதறிக் கிடக்கிறார்கள். இவர்களை எல்லாம் சரியாகக் கணக்கு எடுத்துப் பார்ப்பதாக இருந்தால், இந்நாட்டில் நான்கில் ஒரு பங்கினர் தமிழர்கள் என்பது புலனாகும். 15 இலட்சம் தமிழர்கள் என்று சொல்வது நமக்கே நம்முடைய கணக்கு தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. தமிழர் கணக்கு இவ்வாறு இருக்கிறது என்பதை மனத்தில் கொள்வோம்.
மக்களாட்சி ஏற்பட்டதிலிருந்து ஒவ்வொரு சம்பவத்தையும் கவனிப் போம். முதலாவதாகப் பட்டம் தாணுப்பிள்ளை மந்திரி சபை அமைத்தார். அதில் ஒரு நாயர், ஈழவர் (சி.கேசவன்), ஒரு கிறிஸ் துவர் (டி.எம்.வர்கீஸ் ) ஆகிய மூவரும் மந்திரிசபையில் அங்கம் வகித்தார்கள். தமிழருக்குப் பிரதிநிதியாகப் பி.எஸ் . நடராஜபிள்ளையை எடுத்தார்கள். ஆனால், அவருக்கு அன்று ஒரு தினம் மட்டுமே மந்திரியாக இருக்க முடிந்தது. பின் வெவ்வேறு பதவிகளைக் கொடுத்தார்களே தவிர, மந்திரி பதவி கொடுக்கவில்லை.


இந்த இடத்தை நேயர்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும் . . . பட்டத்தின் சகாக்களுக்குப் பி.எஸ் .நடராஜபிள்ளையைப் பிடிக்கவில்லை என்றால், வேறு ஒரு தமிழனை எடுத்தால் என்ன? அப்படியும் எடுக்கவில்லை. காங்கிரஸ் பதவிக்கு வந்ததும் ஜாதி வாரியில்தான் மந்திரிகள் வந்தார்களே ஒழிய, காங்கிரசின் அடிப்படை இலட்சியங் களுக்கு ஒப்ப மந்திரிகளைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. ஒரு நாயரும், ஒரு கிறிஸ் துவரும் இருக்கக்கூடாதா . . . அல்லது இரு நாயரும், ஒரு கிறிஸ் துவரும் இருக்கக்கூடாதா . . . இல்லை, திரு - கொச்சி அரசியலில் அப்படிப்பட்ட ஒரு ஜாதி, மத பேதமற்ற ஆட்சியை ஸ் தாபிக்க முடியவில்லை. ஜாதி வாரியாகத்தான் எடுக்க முடிந்தது.


அப்படியானால், நான்கில் ஒரு பங்கு ஜனத்தொகை உள்ள தமிழனுக்கு இடம் ஏன் கொடுக்கவில்லை? மலையாளிகளை விட, பழைய காங்கிரசில் தமிழனே கணக்கரிய தியாகங்களைத் திருவிதாங் கூரில் புரிந்திருக்கிறான் என்பது வெள்ளிடைமலை. அப்படிப்பட்ட தமிழர்களை அலட்சியம் செய்வது, மக்களாட்சி ஏற்பட்ட முதல் கட்டத்தில் தமிழர்களுக்குக் கிடைத்த முதல் அடியாகும். அந்த முதல் அடி விவேகமுள்ள தமிழர்களை எவ்வளவு தூரத்திற்குப் புண்படுத்தி இருக்கும் என்பதை விளக்க வேண்டியது இல்லை. அதற்குப் பின் உள்ள அரசியல் சூழ்நிலைகளையும், சம்பவங்களையும் நாளைய தலையங்கத்தில் தொடர்ந்து ஆராய்வோமாக. (ஜூலை 23, ’54 ‘தினமலர்’ தலையங்கம்)


ஐக்கிய கேரளமும் - ஐக்கிய தமிழகமும் - 2


மக்களாட்சி ஏற்பட்ட முதல் கட்டத்திலேயே பட்டம் மந்திரி சபையினர் தமிழர்களுக்குத் தந்த, ‘முதல் அடியை’ நேற்று விளக்கி யிருந்தோம். அதன்பிறகு ஏற்பட்ட சம்பவங்களைப் பார்ப்போம். பட்டம் மந்திரி சபை குடை சாய்ந்ததும், டி.கே.நாராயணப்பிள்ளை அதிகாரத்திற்கு வந்தார். அவரது மந்திரி சபையிலும் தமிழனைக் கவனிக்கவில்லை. அடுத்தபடியாக, சி.கேசவன் தலைமையில் மந்திரி சபை அமைக்கப்பட்டது. அவரது பதவிக் காலத்திலும் பழைய சொக்கன் சொக்கனே. இந்த மூன்று மந்திரி சபைகளிலும் தமிழர்களது நியாயமான உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. சட்டசபைத் தலைமைப் பதவி என்ற இரண்டாம் வகுப்பு மார்க்கம் கூட தமிழருக்குக் கொடுக்கப்படவில்லை. அதற்கெல்லாம் கூடத் தமிழர்கள் தங்கள் பிறப்புரிமையை வற்புறுத்தாமல் வாய்பேசாப் பிராணி களாகவே இருந்தார்கள்.


இரண்டாவது பொதுத் தேர்தல் வந்தது. திருவிதாங்கூர் தமிழ் நாட்டுக் காங்கிரசிற்குப் பெருவாரியான ஸ் தானங்கள் கிடைத்தன. அப்பொழுதும் அவர்கள் கவனிக்கப்படவில்லை. இதற்கிடையில் காங்கிரசாருக்குள்ளே சண்டை வந்தது. காங்கிரஸ் மந்திரி சபையே திவாலாகி விடும் என்று பயப்படும்படியான நிலை ஏற்பட்டது. அதைத் தவிர்க்க, வேண்டாவெறுப்புடன் தமிழர்களின் பிரதிநிதியாக, ஏ.சிதம்பரநாத நாடாரை மந்திரி சபையில் சேர்த்துக் கொண்டார்கள்.
பஞ்சாயத்துத் தேர்தல் வந்தது. அத்தேர்தலில் காங்கிரசிற்குப் பெருவாரியான ஸ் தானம் கிடைத்தது. கம்யூனிஸ் டுகள் கை வெகுவாகத் தாழ்ந்தது. உடனே காங்கிரசில் உள்ள மலையாளிகளின் மனம் மாற ஆரம்பித்து விட்டது. சிதம்பரநாதன் அவசியம் இல்லாமலேயே காங்கிரசின் சொந்த பலத்தால், ‘அடியந்திரம்’ நடத்தி விடலாம் என்று மலையாளிகள் நம்பினர். எனவே, மற்றொரு தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் நடத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தைச் சிருஷ்டிக்க வேண்டும் என்பதற்காகக் காங்கிரசார் தங்களுக்குள்ளேயே ஒரு சண்டையைக் கிளப்பிக் கொண்டனர்.
றிதி.த.கா., தங்களுடன் நிபந்தனையின்றி இணைய வேண்டும்; இல்லையேல் வெளியேற வேண்டும்றீ என்று, கோஷமிட்டனர். தி.த.கா., விற்கு ஒரு தனி பி.சி.சி., அந்தஸ் து கேட்டார்கள். கடைசியில் ஒரு மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி அந்தஸ் தாவது கிடைக்குமா என்று கூடப் பார்த்தார்கள். ஒன்றும் பயனில்லை. தங்களை வெளியேற்ற திரைமறைவில் பல சூழ்ச்சிகள் நடந்து வந்தன என்பது அவர்களுக்குத் தெளிவாகிவிட்டது. உடனே அவர்கள் மானமாகப் பதவியை உதறித் தள்ளிவிட்டு வெளியே வந்தார்கள்; சட்டசபையும் கலைக்கப்பட்டது. அடுத்த தேர்தலும் நடந்தது.


ஆனால், ஒரு ஆச்சரியம். . . காங்கிரஸ் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்வி அடைந்தது. 117 பேர் கொண்ட சட்டசபையில் 45 பேர்தான் வந்தார்கள். தி.த.கா.,விற்குப் பெரும் வெற்றி கிடைத்தது. எட்டாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. மக்களின் ஆட்சியில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அரசியல் குரோதங்களை எடுத்துக்காட்டவே இங்ஙனம் பழைய சம்பவங்களை எடுத்துக் காட்டியிருக்கிறோம். இவை இத்தோடு நிற்கட்டும் . . .


மொழிவாரிப் பிரிவினைக் கிளர்ச்சி, தூங்கியவன் கதை போல சப்பென்று இருந்தபோது, பொட்டி ஸ் ரீராமுலுவின் மரணமும், அதைத் தொடர்ந்து ஆந்திர ராஜ்ஜியம் அமைந்ததும் இந்தியாவுக்கே புது உத்வேகத்தை ஊட்டியது. நேருஜியைக் கூடப் பலமாக உறுத்த ஆரம்பித்துவிட்டது. அந்த உத்வேகத்தை எப்படியாவது தணிக்க வேண்டும் என்பதற்காக, மூவர் கொண்ட ஒரு ராஜ்ஜிய புனர் அமைப்புக் கமிஷனை நேருஜி நிறுவினார். கேரள ராஜ்ஜியம் அமைக்க வேண்டுவதையும், அவர்கள் குறிப்பிடும் எல்லைகளையும் நினைக்கும் போது நமக்கு வருத்தம் ஏற்படுவதோடு சிரிப்பே அதிகம் ஏற்படுகிறது. கேரளத்தில் இருந்து ஒருவர் சொல்கிறார், ‘இது மேற்குக் கரை ராஜ்ஜியமாக இருக்க வேண்டும் . . .’


அதாவது, குமரி முனை முதல் பம்பாய் வரை அவருக்குத்தானாம். இன்னொருவர் சொல்கிறார், ‘காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரையிலும் கேரளம் . . .’ ஆனால், நீலகரி, கோயம்புத்தூர், குடகு இந்த மூன்றும் இந்த ராஜ்ஜியத்தில் சேர்ந்தால்தான் கேரள ராஜ்ஜியம் சிறப்பாக அமைய முடியுமாம். அவர்களில் யோக்கியமானர்கள். . . இரண்டு மாவட்டங் களைக் கொண்ட மலபாரையும், திரு - கொச்சியையும் சேர்ந்த ஒரு கேரள ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.


றிஏனைய்யா . . . தெற்கு கிழக்கு பாகங்களிலும், மலைகளிலும் தமிழர்கள் இருக்கிறார்களே அவர்கள் கதி என்னறீ என்று கேட்டால், ‘பரசுராமன் கோடரி எறிந்து உண்டாக்கிய எல்லையில் யாருக்குமே தலை போட உரிமை இல்லை’ என்று சொல்கிறார்கள். கன்னியா குமரியில் சென்னை கவர்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறிய ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. கன்னியாகுமரியில் ரோட்டரி கிளப்பினர் கொடுத்த விருந்து ஒன்றில் கவர்னர் பேசுகையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார் . . .


. . . அசாம் மக்களும் உங்கள் திரு - கொச்சியைப் போல் பரசுராமன் தான் அவர்களது நாட்டைச் சிருஷ்டித்ததாகக் கூறுகிறார்களாம். நல்லவேளை, இந்தத் தாமோதர மேனன் ஒருவரும் அங்கு இல்லையே என்று மகிழ்ந்தேன். அவர் இதைக் கேட்டால் அசாமையும், கேரளத் தோடு சேர்க்க வேண்டுமென்று கிளர்ச்சி ஆரம்பித்து விடுவார்களே! அப்பொழுது நம்மைப் பிடித்து இருக்கும் தலைவலி அவர்களையும் பிடிக்குமே என்று நினைத்தேன் . . .றீ
பரசுராமர் கதையை இழுத்து அர்த்தமற்ற விவாதத்தைக் கேரளியர் கள் கிளப்புகிறார்கள் என்பதை நாம் சொல்லவில்லை . . . சென்னை கவர்னர் சொல்கிறார் என்பதற்காகவே மேற்கண்ட பிரசங்கத்தை எடுத்துக் காட்டினோம். திரு - தமிழ்பிரதேசம் பிரியக்கூடாது என்ப தற்குக் கேரளியர்கள் கூறும் பல விதண்டாவாதங்களை நாளை சொல்வோம். (ஜூலை 24,’54 ‘தினமலர்’ தலையங்கம்.)


ஐக்கிய கேரளமும் - ஐக்கிய தமிழகமும் - 3


திரு - கொச்சி தமிழ்ப் பிரதேசத்தைப் பிரிக்கக் கூடாது என்று கேரளியர்கள் கூறுவதற்குரிய காரணங்களைப் பார்ப்போம். 1) பரசு ராமன் சிருஷ்டித்தது. 2) இயற்கையான சகியமலைத் தொடருக்குள் இந்தப் பகுதி இருப்பது. 3) தமிழ்ப் பிரதேசங்களைப் பிரித்துவிட்டால் நெல், ரப்பர், தேயிலை, ஏலம், மின்சார நிலையங்கள் உற்பத்திகளை இழக்க வேண்டி வருவதால் பட்ஜெட்டைச் சரிக்கட்ட முடியாது. 4) அப்படியே தமிழர்கள் தங்களுடன் இருக்க இஷ்டப்படாவிட்டால் இந்தப் பகுதியை விட்டுப் போய் விடட்டும். அவர்கள் இங்குப்பிழைக்க வந்தவர்கள்தான். 5) இனி ஒரு விசித்திரமான காரணத்தையும் கேளுங்கள் . . . ‘நீங்கள் அங்குப் போக வேண்டும் என்று சொல்கிறீர் களா . . . தமிழ்நாட்டில் இதுபோல பள்ளிக்கூடம் உண்டா . . . ஆஸ் பத்திரி கள் உண்டா . . . போலீஸ் பாதுகாப்பு உண்டா . . . அடிப்படைத் தீர்வை உண்டா . . . இவ்வளவு சாலைகள் உண்டா . . . இவையெல்லாம் இதுபோல் உங்களுக்கு அங்கு ஏற்பட வேண்டுமானால் இன்னும் நூறு வருடம் ஆகுமே . . .’


இதையெல்லாம் நாம் ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

1) பரசுராமர் காலத்தைப் பார்ப்போம்: இப்பொழுதுள்ள ஆப்கானிஸ் தானம், பாரதத்திலுள்ள காந்தார ராஜ்ஜியம். காந்தார ராஜனின் மகள்தான் காந்தாரி. ஆகையினால், எந்த வகையிலும் ஆப்கானிஸ் தானத்தை நாம் விடக்கூடாது. அதேபோல் இப்பொழுது இருக்கும் மேற்குப் பாகிஸ் தான் புராதன பாரதத்தின் ஹிருதயஸ் தானம். ஆதலால், அதையும் நாம் திரும்ப அடைய வேண்டும். அசாமும், பரசுராமனுடைய சிருஷ்டி ராஜ்ஜியமானதால் அதையும் கேரளத் துடன் சேர்க்க வேண்டும். இதெல்லாம் சரிதான் என்றும் நடக்கக்கூடிய தென்றும் கருதுவதாயிருந்தால் கேரளமும் சரிதான்.


2) மேற்கு மலைத் தொடருக்கு மேற்கே அமைந்திருக்கும் இடம் என்றால், மலைத் தொடருக்குக் கிழக்கே அமைந்திருக்கும் இடம் அத்தனையும் ஒருங்கே சேர்க்க வேண்டாமா? அப்படியானால் ஆந்திரம் எப்படி சாத்தியம்? இன்னும் மேற்கு மலைத் தொடருக்குள் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றனவே . . . அவற்றையும் சேர்க்க வேண்டாமா . . . இது என்ன அபத்த வாதம்.


3) ஒரு மக்களைக் கூட்டாகக் கொண்ட ஒரு பகுதிக்குச் சவுகரியங்கள் வேண்டுமென்றால் அதற்கு இன்னொரு பகுதி என்ன பழி செய்தது. ஒருவருக்கு வீடில்லை என்பதற்காக இன்னொருவருடைய வீட்டை பறித்துக் கொடுப்பார்களா? பயிருக்காகத் தந்த தண்ணீரிலே கொஞ்சம் மின்சாரம் எடுக்கிறேன் என்றால் விடுகிறார்களா பாருங்கள். ‘கிருஷ்ணா நதியில் தண்ணீர் பாழாய்ப் போகிறது. எங்கள் ஆற்காட்டிற்குக் கொஞ்சம் கொடு ஐயா’ என்று ஆந்திரர்களைக் கேட்டுப்பாருங்கள்; அப்போது தெரியும். இன்னொரு பகுதி செழிப்பாய் இருக்க வேண்டும் என்பதற்காக யாராவது தன்னிடத்தை விட்டுக் கொடுப்பார்களா?


4) ‘கூலிகள் . . . பிழைக்க வந்தவர்கள்’ என்று அற்பத்தனமாய், ‘மனோரமா’ போன்ற பத்திரிகைகள் எழுதுவது வெட்கக்கேடானது. இங்கு வாழும் தமிழர்கள், மலையாளிகளையும் விடப் பூர்வகுடிகள். மேலும், உண்மையிலேயே கூலிகளாய் இலங்கைக்குப் போன இந்தியர் களை நாம் திரும்ப அழைக்கத் தயாரா . . . ‘எந்த நியாயத்தில் கூடாது?’ என்பதை நாம் பல பத்திரிகைகளிலும் சர்ச்சை செய்ததை அறிவோம்.


5) நாங்கள் கேட்கிறோம் . . . ‘நீங்கள் மலபார் மக்களோடு சேர்ந்து வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அங்குப் பள்ளிக்கூடம், ஆஸ் பத்திரி, சாலை, பாலம், போலீஸ் , அடிப்படைத் தீர்வை எல்லாம் உண்டா?’ அது மலேரியா நிறைந்த காடாச்சே! திரு - கொச்சித் தமிழர்களும் இது நாள்வரை சும்மாதான் இருந்தார்கள். எவ்வளவோ அவமதித்தும் கூட, உங்களுக்கு மலபார் பைத்தியம் பிடித்தவுடன்தான் எங்களுக்கும் தமிழ்நாடு பித்துப் பிடித்தது! ஒன்றுமே இல்லாத மலபாரை நீங்கள் விருத்தி செய்யலாம் என்று நினைக்கிறீர்களல்லவா? அதுபோல் தரிசாய்க் கிடக்கும் தமிழ்நாட்டையும் பொன் விளையும் பூமி ஆக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். கடைசியாக ஒரு வார்த்தை . . . ‘மற்ற ஏழு தாலுகாக்களையும் கூட விடலாம்; தேவிகுளம், பீர்மேடு என்ற இடத்தை எப்படி விடுவது?’ என்கிறது ஒரு குரல். ஒரு விஷயத்தை மக்கள் நன்றாகப் பதிய வைக்க வேண்டும். அதவாது, பள்ளிவாசல் என்ற இடத்தைத் தமிழர்கள் கேட்கவில்லை. அதைத் தவிர உள்ள இடத்தைத்தான் கேட்கிறார்கள். எனவே, மின்சாரத் திட்டம் போய்விடும் என்று மக்கள் மனத்தைக் குழப்ப வேண்டாம்.


மேலும், திவான் வாட்ஸ் காலத்திற்கு முன் திருவிதாங்கூர்காரருக்கு இப்படி ஓர் இடம் இருப்பதாகவே தெரியாது. நேரியமங்கலம் பாலம் வந்தபிறகுதான் திருவிதாங்கூர் மக்கள் அந்த இடத்தைப் பற்றி அறியத் தொடங்கினார்கள். அங்கு இன்னும் பெரும்பான்மைத் தோட்ட முதலாளிகள் தமிழர்களும், வெள்ளையர்களும்தான். கண்ணன்தேவன் மலைத் தோட்டத்தில் ஆரம்ப காலந்தொட்டு, அதாவது, கடந்த நூறு வருடமாய் நூற்றுக்கு நூறு தமிழர்கள்தான் தொழிலாளர்கள்.








ஆதலால், தமிழர்கள் அதைக் கேட்பதில் ஒரு தவறும் இல்லை. எந்தக் குருடனும் அதற்குச் சம்மதிப்பான். ஆகையால், ஐக்கிய கேரளம் வேண்டுமென்று என்ன முறையில் கேட்கிறார்களோ, அதே நியாயம் ஐக்கிய தமிழகத்துக்கும் பொருந்தும். ‘நீங்கள் ஐக்கிய கேரளம் என்ற பூதத்தைக் கிளப்பி விட்டீர்கள்; அதற்குரிய பலியைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் அது உங்களை விடாது. (ஜூலை 25, ’54 ‘தினமலர்’ தலையங்கம்)


அரசு வக்கீலின் விவாதம்


இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் மள்ளூர் கோவிந்தபிள்ளை. அன்றைக்கு அவர் மிகப் பெரிய கிரிமினல் வழக்கறிஞர். அதோடு மட்டுமல்லாமல், முதல் அமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளைக்கு மிக மிக நெருக்கமானவராகவும் இருந்தார்.
முதலமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளைக்கு, நாஞ்சில்நாடு, தமிழகத் துடன் இணைய வேண்டும் என்று கேட்பதைச் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சுதந்திரம் வந்த பின், மொழிவழி மாகாணங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கை பற்றித் தெரிந்திருந்தும், நாஞ்சில் நாட்டு மக்களின் கோரிக்கையை அவர் ஏற்றுக் கொள்ளாதவராக மட்டுமல்லாது, எப்படியும் நாஞ்சில் நாட்டு மக்களின் எழுச்சியை அடக்கியே தீருவது என்று பிடிவாதமாக இருந்து வந்தார். அவருடைய முதல் கணக்கு, ஏதோ ஒரு சில அரசியல்வாதிகள் மட்டுமே இந்தக் கிளர்ச்சிக்கு காரணம் என்பதாக இருந்தது. இந்த கோரிக்கையை, ஒரு சில தலைவர்கள் மக்களிடம் கொண்டு சென்று விட முடியாது என அவர் நம்பி இருந்தார்.


அவரும், அவருக்கு மிக நெருக்கமானவர்களும், திருவனந்தபுரத்தில் இருந்து வெளிவந்த சில மலையாள நாளிதழ்களும், இந்த நியாயமான இயக்கத்தை, மலையாளி - தமிழர் எதிர்ப்பியக்கமாக்கித் திசை திருப்ப முயன்றது. ஆனால், நாஞ்சில் நாடு தமிழகத்துடன் இணையும் போராட்டத்தில், நாஞ்சில் நாட்டில் ஒரு மலையாளி கூடத் பாதிக்கப்படவோ, தாக்கப்படவோ இல்லை. இன்னும் சொல்லப் போனால், மலையாளி களிடையே இந்த இயக்கத்தின் உண்மை நிலைகள் நன்கு புரிந்து கொள்ளப்பட்டே இருந்தது. சாத்வீகமாக, காந்திய அறவழியில் பேராடும் தமிழர்களைத் தன் துப்பாக்கி கொண்டு அடக்கிவிடலாம் என நம்பினார் பட்டம் தாணுப்பிள்ளை. ஆனால், ஒரு சில அரசியல்வாதிகள் மட்டுமே ஈடுபட்டுள்ளதாக பட்டம் நினைத்த நினைப்பை அடியோடு மாற்றி, இதை ஒரு பெரிய மக்கள் இயக்கமாக மாற்றியதும், மலையாளிகள் - தமிழர்கள் இடையே எந்த கசப்புணர்ச்சியும் ஏற்படாமல் தடுத்ததோடு, இயக்கத் தின் நியாயமான தன்மையை மலையாளிகளே உணர்ந்து கொள்ளச் செய்ததும், ‘தினமலர்’ பத்திரிகைதான் என்பதை உணர்ந்த பட்டம் தாணுப்பிள்ளை, ‘தினமலர்’ பத்திரிகை மீதும், அதன் நிறுவனர் மீதும் பெரும் ஆத்திரம் கொண்டார்.
தமிழர்களிடையே தனக்குள்ள தனிப்பட்ட வெறுப்பால், ஒரு துப்பாக்கிச் சூட்டை நடத்திய அவர், எப்படியும், ‘தினமலர்’ மீது ஒரு பெரும் களங்கத்தை உருவாக்க எண்ணியே, நீதிமன்றத்திற்கும், ‘தினமலர்’ இதழை இழுத்து வந்தார். முதல்வரின் நோக்கத்தின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது அரசு வக்கீலான மள்ளூர் கோவிந்தப்பிள்ளையின் நீண்ட இறுதி வாதம். இனி அவரது இறுதிக் குற்றச்சாட்டைப் பார்க்கலாம் . . .


தி.த.கா., போராட்ட நிகழ்ச்சிக்குத் ‘தினமலர்’ முக்கியத்துவம் கொடுத்து வந்தது. தி.த.கா.,வின் பிரசாரக் குரலாக, ‘தினமலர்’ இருந்து வந்தது. தேவிகுளம் 144 தடையுத்தரவை விமர்சனம் செய்து ஒரு தலையங்கமும் எழுதியிருந்தது. இந்தப் பத்திரிகையின் உரிமை யாளர் ஒரு தனவந்தர்; மற்றொரு தனவந்தரின் மருமகனுமாவார். ‘தினமலர்’ நடத்துவதில் அவருக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், அவர் தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். விசேஷமாக எந்தவித உத்தேசமும் இல்லாமல், சொந்தக் கையிலிருந்தே நஷ்டப்பட ஒருவர் தயார் ஆவாரா என்று நினைக்கவே முடியவில்லை. அந்தப் பத்திரிகை யில் வெளியிடப்பட்ட அறிக்கைகளும், செய்திகளும் உண்மையென்றும், உத்தரவாதமுள்ளவை யென்றும் பத்திரிக்கை அதிபர் தமது வாக்கு மூலத்தில் கூறியிருக்கிறார். ஜூன் 6ம் தேதிக்கு முன்பே தமிழ்நாட்டுக் காங்கிரஸ் சம்பந்தமான செய்திகள் முக்கியத்துவத்தோடு வந்து கொண்டிருந்தன. (நவ., 20, ’54 ‘தினமலர்’ செய்தி)


நடந்தது என்ன?


போராட்டத் தளபதி நேசமணி, ‘11ம் தேதி முழுவதும் அகிம்சாப் பூர்வமானதாகவே இயக்கம் இருக்கும்’ என்று அறிவித்த பின்னரும் நடந்தது என்ன? பரிபூர்ண ஹர்த்தால் என 11ம் தேதி அறிவித்த பின்னரும், மார்த்தாண்டத்தில் ஓர் ஆங்கிலப் பள்ளியை மட்டும் அதன் தலைமை ஆசிரியர் திறந்து வைத்துள்ளார். மாணவர்கள் கேட்டுக் கொண்டும், பள்ளியை மூட முடியாது என மறுத்துவிட்டார். இதன் காரணமாகப் பள்ளியின் மீது கல்வீச்சு நடந்துள்ளது. அதற்கு மேல் இரண்டு மாணவர்களைப் பிடித்து உதைத்துப் போலீஸ் வேனில் ஏற்றிச்சென்றனர். போலீஸ் பிடித்த மாணவர்களை மீட்டுத் தர மாணவர்கள் தலைமை ஆசிரியரை அணுகியபோது, ‘அது எனக்குச் சம்பந்தமில்லாதது’ என அவர் மறுத்துவிட்டார்.


மாணவர்கள் இதனால் கொந்தளித்தனர். இதற்கிடையே வெளியில் ஒரு பஸ் தீ வைக்கப்பட்டுச் சாக்கடையில் தள்ளப்பட்டதாகவும், தந்திக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டுக் கிடந்ததாகத் தான் பார்த்ததாக வும் தலைமை ஆசிரியர் போலீசுக்கு அறிக்கை தந்தார். மற்றொரு சம்பவம் ஏற்கனவே திட்டமிட்டு அறிவிக்கப்பட்டபடி குழித்துறை முதல் வகுப்பு மாஜிஸ் திரேட் அலுவலகம் முன்பாகக் கோர்ட் மறியலில் 16 தொண்டர்கள் ஈடுபட்டனர். இந்தத் தொண்டர் களைச் சுற்றி சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டு நின்றதை தான் பார்த்ததாக மாஜிஸ் திரேட் கூறுகிறார்.கோர்ட்டைப் பாதுகாக்க பலத்த போலீஸ் இருந்த போதிலும், தொண்டர்கள் எந்த சாகசம் மூலமோ கோர்ட்டுக்குள் வந்துவிட்டன ராம். பின்னர் அவர்களைக் கலைந்து செல்ல மாஜிஸ் திரேட் கேட்டுக் கொண்டும் அவர்கள் கலையாததால் தடியடிப் பிரயோகத்திற்கு உத்தரவிட்டாராம். கூட்டம் தடியடியில் கலைந்ததே தவிர, மறியல் வீரர்கள் கலையவில்லை; அவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.


இதுபற்றி சப் - இன்ஸ் பெக்டர் கொடுத்த சாட்சியத்தில், தடியடி மூலம் கலைந்து சென்ற சுமார் 10 ஆயிரம் பேர், பின்னர் ஒன்று திரண்டு என் வீட்டைத் தாக்கினார்கள் என்று கூறியுள்ளார். ஆனால், அதே கூட்டத்தில் இருந்து தி.தா.கா., உறுப்பினர்கள் வேறுவிதமாகச் சாட்சியம் கூறியுள்ளனர். அவர்கள், ‘கூட்டத்தைக் கலைந்து செல்லுமாறு மாஜிஸ் திரேட் கூறவில்லை; கல்லெறி எதுவும் அங்கு நடக்கவும் இல்லை’ என்று கூறியுள்ளனர்.









நீதிபதியின் தீர்ப்பு

இவ்விரண்டையும் தனது தீர்ப்பில் கூறும் நீதிபதி, கலைந்து சென்றவர்கள்தான் பஸ் களுக்குத் தீ வைத்தனர் என்று கூறியுள்ளார். காவல்துறைக் கண்காணிப்பாளர் தடியடி மூலம் இந்தக் கூட்டத் தைக் கலைக்க முடியாது எனக் கருதி, துப்பாக்கிச் சூடு ஏற்படும் என எச்சரித்தார். இதன் மேல் துப்பாக்கிச் சூடு நடந்தது. பின்னரும் கூட்டம் கலையவில்லை. காவல்துறைக் கண்காணிப்பாளர் நிலைமை யைச் சமாளிக்க, மேலும் இரண்டு ரவுண்ட் சுட உத்தரவிட்டார். இதில் ஒரு நபர் மரணமடைந்தார்.


கூட்டம் இப்போதும் கலையவில்லை; பின் வாங்கிச் சென்றது. போலீசார் தங்களைச் சூழ்ந்துள்ள அபாயங்களைப் புரிந்து கொண்டு மேலும் இரண்டு ரவுண்டு சுட உத்தரவிட்டனர். இதில் பாப்புப் பணிக்கர் என்பவர் இறந்து போனார். சாலையில் வேறு ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் இறந்து கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நபர் தொடுவட்டியைச் சேர்ந்த இராமையப்பன் என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, அம்சி அருகில் ஒரு பஸ் சிற்குப் பாதுகாப்பாகச் சென்ற போலீசாரைக் காங்கிரஸ் தொண்டர்கள் மோசமான நிலையில் சூழ்ந்து கொண்டனர். இதன் விளைவாக இங்கும் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்த நேர்ந்தது. இங்குக் கூடியிருந்த கூட்டம் சுமார் 10 ஆயிரம் இருக்கலாமென மதிப்பிடப்படுகிறது. இங்கும்கூடத் தடியடிக்கு உத்தரவிட்டும் அது பயன்படாது போகவே துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டதாக நீதிபதி கூறி உள்ளார்.


இங்கு நான்கு ரவுண்டுகள் சுடப்பட்டன. போலீஸ் சாட்சியங்களைத் தவிர, இதர சாட்சியங்கள் போலீசார் தங்களைக் கலைந்து போகக் கூறவில்லையென்றும், தடியடியும் நடத்தவில்லையென்றும் துப்பாக்கிச் சூடு நடக்கப் போகிறது என எச்சரிக்கை செய்யவில்லையென்றும் சாதிக்கிறார்கள். இது ஏற்கத் தக்கதில்லை என்கிறார் நீதிபதி. மார்த்தாண்டம் அதன் சுற்று வட்டாரத்தில் 11ம் தேதி ஏற்பட்ட சூழ்நிலைகளைச் சமாளிக்க போலீசார் ஐந்து இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். புதுக்கடையில் நான்கு ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்துள்ளது. அடுத்து 24 ரவுண்டு துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளது.


இந்தத் துப்பாக்கிச் சூட்டில் நான்கு நபர்கள் இறந்து போனார்கள். 1) பீர் முகம்மது. 2) செல்லப்பன் பிள்ளை. 3) நாதன்குட்டி குமரன். 4) அன்புடையான் அருளப்பன். ‘இவை தவிர்க்க முடியாதவை; போலீசார் நியாயமாகத்தான் நடந்துகொண்டுள்ளனர்’ எனவும், நீதிபதி சங்கரன் தமது தீர்ப்பில் கூறி உள்ளவார்.

தினமலர் மீது குற்றச்சாட்டு


நீதிபதி சங்கரன் தனது நீண்ட தீர்ப்பில், சமயம் வாய்ந்த போதெல்லமாம், ‘தினமலர், திருவிதாங்கூர் காங்கிரசின் பிரசாரக் குரல் என்பதை இங்கு மீண்டும் ஒருமுறை குறிப்பிட வேண்டியது இருக்கிறது’ என்பதை வலியுறுத்திக் கூறிக்கொண்டே சென்றுள்ளார். குறிப்பு: இவ்வழக்கில் சாட்சியமாக உயர்நீதிமன்றம் பயன்படுத்திய, ‘தினமலர்’ ஜூன் 8, 19, 21, 25, ஜூலை 4ம் தேதி முதல் 14ம் தேதி முடிய, 1954ல் உள்ள அனைத்து இதழ்களின் செய்திகள், அறிக்கைகள், பிரசாரங்கள், தலையங்கங்கள் எல்லாவற்றையும் நீதிபதி சாட்சியமாகப் பயன்படுத்தி உள்ளார். ஷ் தென் திருவிதாங்கூரில் ஆக.,11, ’54ல் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணைக்கு மேதகு ராஜப் பிரமுகரின் ஆணைப்படி தலைமைச் செயலாளர் பி.வி.கே. மேனன் குழு அமைத்தார்.


விசாரணைக் குழுவின் தலைமையகம் திருவனந்தபுரம் உயர்நீதி மன்றத்தில் திறக்கப்பட்டு, அக்., ’54ல் விசாரணை தொடங்கப் பட்டது. 111 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இவர்களில் 78 சாட்சிகள் திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்தில் உள்ள ஒரு பெஞ்ச் அறையில் விசாரிக்கப்பட்டனர். ஷ் தீர்ப்பை நீதிமன்றக் கட்டிடத்தில் இயங்கி வந்த விசாரணைக்குழு அலுவலகம் நவ., 27, ’54ல் வெளியிட்டது. ஷ் விசாரணையை நடத்தித் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.சங்கரன், விசாரணைக்குழு (கே.சங்கரன் நீதிபதி - உயர்நீதிமன்றம்) திரு விதாங்கூர் - கொச்சி மாநிலம் எனக் கையப்பம் செய்துள்ளார்.


நீதிபதி சங்கரன் தீர்ப்பு மிகவும் விரிவானது. அதில் இருந்து தெரிவது, பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு வீரமிக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தடியடி பிரயோகத்திற்கும் அஞ்சாது தொண்டர்கள் காந்திய வழியில் மறியலில் ஈடுபட்டுக் கைதாகி உள்ளனர். கூட்டத்தைக் கலைக்க எந்தவிதமான முன் எச்சரிக்கையும் இல்லாமல் பல ரவுண்டு சுட்டும் கூட கூட்டம் பின் வாங்கவில்லை. போலீசாரின் வாக்குமூலங் கள் மற்றும் அதிகாரிகள் சாட்சியங்களைத் தவிர மற்றவர்கள் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாகவே கூறி உள்ளனர். ஒரு பெரிய மக்கள் இயக்கத்தைப் பற்றி விமர்சிக்க வந்த நீதிபதி வரிக்கு வரி, ‘தினமலர்’ மீது குற்றம் சாட்டி வந்துள்ளது வியப்பாகவே இருக்கிறது. சட்டத்திற்குப் புறம்பாகத் ‘தினமலர்’ தொடர்ந்து செய்திகள் வெளியிட்டிருப்பது உண்மையானால், ‘தினமலர்’ மீது சட்டப்படி தனியாக வழக்குத் தொடர்ந்திருக்கலாம். அதைத் தடுத்தது யார் எனவும் தெரியவில்லை. மொத்தத்தில் குமரி மாவட்ட மக்களின் வீரம் செறிந்த போராட்டம் இது என்பதையே இந்த நீண்ட விசாரணை நமக்குப் புலப்படுத்துகிறது.



தெய்வ ஆபரணங்களுக்கு வந்ததே ஆபத்து
கேரளாவுடன் இணைந்திருந்த நாஞ்சில் நாட்டுப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைந்து விடும் சூழ்நிலைகளை மாற்ற முடியாது என்பது கேரள அரசுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. அவர்களுக்கு மத்திய அரசிலும், தமிழக அரசிலும் இருந்த செல்வாக்கைக் கொண்டு, தமிழகத்துடன் நியாயமாக இணைய வேண்டிய பெரும் பகுதிகளைத் தங்களிடம் வைத்துக்கொள்ள முடிந்தது. குறிப்பாகத் தேவிகுளம், பீர்மேட்டுப் பகுதிகளை நாம் இழந்ததை டி.வி.ஆர்., கடைசிவரை ஏற்றுக்கொள்ளவே இல்லை. உணர்ச்சிகரமான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும், பொது மக்களுக்கு அது பற்றியெல்லாம் முழுதும் தெரிய வாய்ப்பில்லை. அரசியல்வாதிகளுக்கோ மெஜாரிட்டி கோரிக்கை வெற்றி என்றால் அதுவே போதும் என விழாக் கொண்டாடப் போய்விடுவர்.






கேரள அரசும் கொஞ்சம் கூட உணர்ச்சி வசப்படாமல், மிகுந்த ராஜதந்திரத்துடன் நாஞ்சில் நாட்டுத் திருக்கோயில்களின் ஆபரணங் களைத் திருவனந்தபுரத்திற்கு கொண்டுபோய்விடத் திட்டமிட்டு அநேகமாக வெற்றியும் பெற்றுவிட்டது.
இதில் டி.வி.ஆர்., மட்டும் மிகவும் விழிப்பாக இருந்தார். அந்த நகைகளைக் காப்பாற்ற அவர் எடுத்துக்கொண்ட முயற்சிக்குத் தனி முக்கியத்துவம் உண்டு. திருவிதாங்கூர் தேவஸ் சம்போர்டு தலைவராக 1954ம் ஆண்டு சாமிநாதபிள்ளை இருந்தார்; அவர் தமிழர். நாஞ்சில் நாட்டுத் திருத்தலங்களில் இருந்து ஆபரணங்களை அகற்ற அவர் ரகசியமாக வாக்குமூலம் தயாரிப்பதாக டி.வி.ஆருக்கு தகவல் வந்தது. அதிகாரிகள் மூலமே இந்த ரகசியம் டி.வி.ஆருக்கு எட்டி இருக்க வேண்டும். தனக்குக் கிடைத்த தகவல் ஆதாரப்பூர்வமானது என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு, சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினார். முதலில் பிரச்னையைப் பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டுபோக வேண்டும் என, ‘ஆபரணங்களுக்கு ஆபத்தா?’ என்ற தலைப்பில் ஆக., 24, ’54 ‘தினமலர்’ இதழில் ஒரு தலையங்கம் எழுதினார்.


. . . நமக்குக் கிடைத்துள்ள தகவல் உண்மையாக இருக்கக் கூடாது என்று பிரார்த்திக்கின்றோம். செய்தி வாஸ் தவமாக இருக்குமானால், அதை நிராசாரமாக ஒதுக்கிவிட முடியாது. ஆபரணங்களை ஓர் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு அகற்ற வேண்டுமென்ற நினைப்பே தெய்வ தோஷமாகும். நல்லவேளையாகத் தேவஸ் சம் போர்டின் தலைவராக ஒரு தமிழர் இப்போது இருப்பதற்குத் திருவிதாங்கூர் தமிழகத்தில் உள்ள எல்லாத் தெய்வங்களுக்கும் நாம் நன்றி செலுத்த வேண்டும். பொறுப்பில் உள்ள அவருக்கும் தனது சொந்தக் கருத்தை எடுத்துக்காட்ட முடியாத தர்மசங்கட நிலை வரலாம். தென் திருவிதாங்கூர் ஆலயங்களில் உள்ள ஆபரணங் கள் விலை மதிக்க முடியாதவை. பற்பல வேண்டுதல்களுக்காக நேர்ச்சையாக போடப்பட்ட நகைகள் அவை. இப்போது நாம் அந்த நகைகளை அகற்றக்கூடாதென்று திடமாக தெரிவிக்க வேண்டும். திருட்டுக்குப் பயந்து மாற்றப் போவதாகக் கூறுவார்களானால், அதை நாம் ஏற்க முடியாது. இந்தப் பகுதி தமிழ்நாட்டுடன்தானே சேரப் போகிறது என்று கருதி, அதற்குள் அகற்றி விட முனைகிறார் களோ என்ற ஐயம் நமக்கு வருகிறது. அப்படிப்பட்ட கருத்தை நாம் உண்மை என்று கருதவில்லை. தேவஸ் சம் போர்டார் உண்மையை விளக்கிப் பகிரங்மாக ஓர் அறிக்கை வெளியிட வேண்டும். பொதுமக்கள் விழிப்புடன் இப்பிரச்னையில் இருப்பார்கள் என நம்புகிறோம் . . .




- ஒ- ஒரு நீண்ட தலையங்கத்தின் சுருக்கம்தான் மேலே தரப்பட்டுள் ளது. ஓர் இரகசியமான தகவலை வெளியிட்ட பின்னரும் அதுபற்றி மிக அக்கறையாகக் கவனித்து, மீண்டும் நவம்பர் 5ம் தேதி, ‘தினமலர்’ இதழில் தாம் வெளியிட்ட செய்தி ஊர்ஜிதமாகிறது என்று திட்டவட்ட மாக டி.வி.ஆர்., அறிவிக்கிறார்.
மேலே சொன்ன ஆலயங்களின் ஆபரணங்களைப் பாதுகாக்க வருடந்தோறும் போலீஸ் இலாகாவிற்கு ஏராளமான செலவு வருவதால் திருவனந்தபுரத்திற்கு மாற்றத் தீர்மானித்திருப்பதாக அரசு கூறி விட்டது. அப்போது, ‘அநாகரிகமும், அராஜகமும் மலிந்திருந்த காலங்களில் கூட அவை பாதுகாப்பாக இருந்துள்ளபோது, இப்போது மாற்றுவதற்கு என்ன அவசியம் வந்தது?’ என்று, ‘தினமலர்’ கேட்டது. இதற்கிடையில் மற்றும் ஒரு விவகாரம் தேவஸ் சம் விஷயமாக எழுந்தது. பிரிந்து போகும் தேவஸ் தங்களின் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கிற்கு மட்டும் ராஜ்ய சீரமைப்புக் கமிட்டி வகை செய்தது. றிஇது நியாயமற்ற முடிவுறீ என்று, கச்சைக்கட்டிக் கொண்டு எழுதினார் டி.வி.ஆர்., முதலில் ஆபரணங்கள்; அடுத்து சொத்து. இரண்டிலுமே நமக்குப் பெரும் பாதகமான முடிவுதான்.



ஏப்., 3, ’56ல் டி.வி.ஆர்., எழுதுகிறார் . . .


ஜனத்தொகை அடிப்படையில் இத்தொகை விதிக்கப்பட்டிருப்ப தாகக் கமிஷன் கூறுவது பொருத்தமற்றது. முதலில் இந்த தேவஸ் சங்கள் இந்துக்களுக்கே சொந்தமானது. ஆகவே, ஜனத்தொகை அடிப்படையில் பங்கு வைப்பது என்பது ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. மொத்தம் 51 இலட்ச ரூபாய் கிடைக்கிறது. பத்மநாபசுவாமிக்கு 6 இலட்ச ரூபாய் போக, 45 இலட்ச ரூபாயில் பத்தில் ஒரு பங்கான, 4.5 இலட்ச ரூபாய்க்கு மசோதா வழி செய்துள்ளது. திருவிதாங்கூரின் மேஜர் தேவஸ் தானங்கள் பிரிந்து செல்லும் பகுதியிலேயே உள்ளன. சுசீந்திரம், பூதப்பாண்டி, நாகர்கோவில், வடிவீஸ் வரம், மருங்கூர் போல், மான்யமும் மகோன்னதமும், பழம்பெருமையும் கொண்ட கோயில்கள் திருவிதாங்கூரில் இல்லை. பத்மநாபசுவாமி 6 இலட்ச ரூபாய் பெற்று, மீதமுள்ள வைக்கம், ஹரிப்பாடு, ஆலப்புழை (முல்லைக்கல்), செங்கன்னூர், ஆறன்முளை, ஏற்றமனானுபர், கோட்டயம் (திருநனக்கரை) இப்படிக் கொஞ்சம் தேவஸ் தானங்களே கேரளத்தில் உண்டு. இதில் எதுவும் அந்தஸ் தில் சுசீந்திரம் கோயிலுடன் எடை போட முடியாது.


அங்குள்ள தேவஸ் சங்களுக்கு 41.5 இலட்சமும், நமக்கு 4.5 இலட்ச மும் சரியாகுமா? மத்திய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது. விவரங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல நாம் கடமைப்பட்டுள் ளோம். தேவஸ் சம் ஆண்டுதோறும் 51 இலட்சம் கொடுப்பது தானமாக அல்ல. கோயில் நிலங்களை அரசு எடுத்துக்கொண்ட போது, அதற்கு ஈடாகக் கொடுப்பதாகச் சொன்ன தொகைகள்தான் என்பதை நாம் நினைவூட்டுகிறோம். அந்த அடிப்படையில் பிரிந்து செல்லும் நமது பகுதிக்கு 50 சதம் ஒதுக்க வேண்டியது நியாயமானது. இதுபோக, தேவஸ் சம் மிச்ச நிதியாக 1.13 கோடி உள்ளது. இதில் தென் தாலுக்காக்களுக்கு 50 இலட்ச ரூபாய் உரிமையாகிறது. இதில் தமிழ்நாட்டு அரசாங்கம் மிதமாக இராது என்று நம்புகிறோம்.



முதலில் ஆபரணங்கள், அடுத்து தேவஸ் சம் சொத்துக்கள் பற்றி தீவிரமான பிரச்னைகளை டி.வி.ஆர்., கிளப்பினார்.
டி.வி.ஆருக்கு ஒரு தனிக்குணம் உண்டு. ஒரு பொதுப் பிரச்னை என்று வந்தால், அதன் உண்மைகளை முழுக்க சேகரித்து, அதை முதன்முதலாகப் பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டுபோவது; அடுத்து அதற்காக ஒரு மாநாடு கூட்டுவது; அந்த மாநாட்டில் எவ்வளவு கஷ்டப்பட்டாவது சம்பந்தப்பட்டவரைக் கலந்து கொள்ளச் செய்து, அவர் வாக்குமூலத்திலிருந்தே உண்மைகளை வரவழைப்பது. இவை அவரது பொது வாழ்க்கையில் காணப்படும் முறைகளாக இருந்துள்ளன.


தேவஸ் சம் பிரச்னையிலும் இதே நடைமுறையைக் கையாண்டு, ஏப்., 4, ’56ல் தெங்கம்புதுவரில் இதற்காக இந்துமத மாநாட்டைக் கூட்டினார். மூன்றாம் நாள் நிகழ்ச்சிக்கு டி.வி.ஆரே தலைவர். அம்மாநாட்டில், திருவிதாங்கூர் தேவஸ் சம் போர்டு தலைவர் சுவாமிநாதபிள்ளை பேசியதாவது . . .


தமிழ் -மலையாளப் பகுதிக் கோயில்களுக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்ததை அரசாங்கத்தினர் பறிமுதல் செய்தனர். சென்னையுடன் சேரும் கோயில்களுக்கு நிதி யார் தரவேண்டுமென்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. சென்னையுடன் சேரும் ஆலயங்களுக்கு இன்று செலவாகும் தொகை 13.5 இலட்சம். மசோதாப்படி, 4.5 இலட்சத்தை வைத்து என்ன செய்ய முடியும் . . . இதுகுறித்து தி.த.நா., தேவஸ் சம் கமிட்டி உறுப்பினர்கள் மத்திய மற்றும் சென்னை அரசு, மந்திரிகளைப் பார்க்கச் சென்றுள்ளனர். நல்ல முடிவு வரும் என்று நானும் நம்புகிறேன் என்றார்.


இந்தப் பிரதிநிதிகள் இரு அரசாங்கத்தையும் அணுகிப் பிரச்னையை விளக்க ஏற்பாடு செய்ததே டி.வி.ஆர்., தான். அடுத்து கோயில் சொத்துக்கள், கடந்த 150 வருடங்களாக ஏற்பட்ட மாற்றங்கள், கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் எல்லாவற்றையும் திரட்டி, புள்ளி விரங்களின் அடிப்படையில் ஒரு பக்கக் கட்டுரையாக, ஏப்., 8ம் தேதி வெளியிட்டார். அதுவே கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில் சொத்துக்களின் சரியான வரலாறு ஆகும். இக்கட்டுரை ஆதாரப் பூர்வமாகச் சில பிரச்னைகளை உடைத்து வெளியிட்டது . . .


* தென் இந்தியாவை ஆண்டு வந்த சேர, சோழ, பாண்டிய, வேணாடு, விஜயநகர இந்து மன்னர்களின் உதவி, மானியங்களால் ஊக்கம் பெற்ற இப்பகுதிக் கோயில்கள் 201.


* இந்த கோயில்கள் கிராமசபை, யோகம் போன்ற *தல நிர்வாக சபைகள் மூலம் நடத்தப்பட்டன.


* இது கொல்லம் வருடம் 987 வரை (1811) இவ்வாறு தான் நடைபெற்றது.


* ரெசிடெண்டாகவும், திவானாகவும் இருந்த கர்னல் மன்றோ, கோயில் நிலங்களை அரசாங்க உடைமையாக்கினார். நிலங்கள், அதன் வரி வசூல் அரசாங்கத்தின் கைக்கு மாறியது.


* கோயில் செலவிற்கு அரசாங்கத்தின் ரெவின்யூவில் முதல் இடம் தருவதாக உறுதி கூறினர்.


* கொல்லம் ஆண்டு 1097 (1922) தேவ*சம் இலாக்கா தனியாக அமைக்கப்பட்டது.


* மொத்த ரெவின்யூவில் 40 சதம் திருக்கோயில்களுக்கு வழங்கப் பட்டது. பல மாற்றங்களுக்குப் பின், 40 சதம் தர இயலாது என்றும், ஆண்டிற்கு 25 இலட்ச ரூபாய் அரசாங்கம் தரும் என்றும், மன்னர் பிரகடனப்படுத்தினார். இரண்டாவது மகாயுத்தத்தின் காரணமாக ஏறிய விலைவாசிகளைக் கணக்கிட்டு, 51 இலட்ச ரூபாய் தர அரசு முன்வந்தது.


* கர்னல் மன்றோ, கோயில் நிலங்கள், 68 ஆயிரத்து 500 ஏக்கர் நஞ்சையையும், 62 ஆயிரத்து 900 ஏக்கர் தோட்டத்தையும் எடுத்துக்கொண்டார். இவற்றில் 17 ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள் தென் திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்தது.


* இதில் இருந்து தெரிவது, கடந்த 140 வருடங்களாக மொத்தம் நிலங்களில் நான்கில் ஒரு பகுதி, தென் தாலுகா கோயில்களின் உடைமைகளாகும். தேவ*சம் வருமானத்தில் நேர்பாதியை இவையே கொடுத்து வந்தன. (நிலவரி இதர பகுதிகளுக்கு ஏக்கருக்கு 1.40 ரூபாயாக இருந்தபோது, நாஞ்சி நாட்டுநிலங்களுக்கு ஏக்கருக்கு வரி மட்டும் 12.40 ரூபாய் என்பதைக் கணக்கிட்டு பார்த்து கொள்க.)


* ஆகவே, பிரிந்து போகும் பகுதிக் கோயில்கள் 20 இலட்ச ரூபாய் பெற உரிமை உள்ளது. இது கிராண்டல்ல; தர்மம் அல்ல; கோயில் சொத்துக்களை அரசாங்கம் எடுத்தபோது ஒப்புக் கொண்ட சட்டப்படியான தொகையாகும்.


* இவை ஜனத்தொகை அடிப்படையில் பிரித்து கொடுக்கப்பட வேண்டியதல்ல.


* திரும்பிச்செல்லும் பிரதேசக் கோயில்களின் நகைகள், நிலங்கள், தோட்டங்கள், அந்தந்த பிரதேச கோயில்களுக்குக் கிடைத்தாக வேண்டும்.


- மேலே சில ஆதாரங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதர மாநிலங்கள் பிரிந்தபோது, இதுபோல ஒரு பிரச்னை மொழி அடிப்படையில் ஏற்பட்டதா, அவற்றிற்கு ஏதாவது இதுபோல இயக்கம் இருந்ததா, வெற்றி பெற்றதா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால், சரியான ஆதாரங்களோடு 150 ஆண்டுக்கால ரெக்கார்டுகளின் துணையோடு, சட்ட ரீதியில் பிரச்னையைக் கிளப்பி உள்ளார் டி.வி.ஆர்., என்பது மட்டும் தெளிவாகிறது.


மே 6ம் தேதி தலையங்கம், ஒரு முக்கியமான நல்ல செய்தியைக் கூறுகிறது. ராஜப் பிரமுகரின் ஆலோசகராகப் பி.எ*.ராவ் பதவி ஏற்கிறார். அவர் பதவிக்கு வந்த குறுகிய காலத்தில் இப்பிரச்னையின் நியாயத்தை உணர்ந்து, தமிழ்த் தாலுகாக்களின் நிர்வாகச் செலவிற்கு 15 இலட்ச ரூபாய் ஒதுக்குவது அவசியம் என, மத்திய அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்தார். இது ஒரு பெரிய வெற்றி. ‘ராவ் தனது பதவியின் கவுரவத்தை மிகவும் உயர்த்திவிட்டார்’ என்று, பாராட்டித் தலையங்கம் எழுதப்படுகிறது. மேலே கண்ட விடா முயற்சியின் காரணமாகக் கன்னியாகுமரி மாவட்ட தேவ*சங்கள் தங்களது பங்கைச் சரியாகப் பெற்றதின் காரணமாகவே, இன்றைக்கு ஓரளவாவது தாக்குப் பிடித்து வருகிறது என்பதைப் பார்க்கும்போது, அனைவரும் கவனிக்காமல் விட்ட ஒரு முக்கிய பிரச்னையில் எவ்வளவு உறுதியாக, சட்டரீதியாக வாதாடி வெற்றி பெற்றுள்ளார் டி.வி.ஆர்., என்பதை நினைத்துப் பெருமைப்பட முடிகிறது.

மண்மீட்பு குமரி வரைபடம் துப்பாக்கிச்சூடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக