திங்கள், 21 அக்டோபர், 2019

கள்ளர் வளரி தொடர்பு ஆயுதம் boomarang

aathi tamil aathi1956@gmail.com

செவ்., 17 ஜூலை, 2018, பிற்பகல் 1:56
பெறுநர்: எனக்கு

செவ்வாய், 27 மார்ச், 2018

திகிரி / கள்ளர் தடி / வளரி



1) காடும் காடு சார்ந்த இடமும் முல்லை, முல்லைத் திணை தலைவன் மால் எனப்படும் மாயோன் 'கள்வன்'. அவன் ஆயுதம் வளரி. (கலித்தொகை)
2) மால் எனப்படும் சோழன் “வளரி படை” உடையவன். (சிலப்பதிகாரம்)
3) கள்ளர்களின் பெயராலேயே “கள்ளர் தடி” என்றே அழைக்கப்பட்டது. (தமிழ் அகராதி)
4) வளைதடி - கள்ளர்களின் திருமணத்தில் முக்கிய அம்சமாக இருந்தது (British archaeologist Robert Bruce)
5) ஆங்கிலேயர்கள் கள்ளர்களின் பெயராலேயே "COLLERY” என்று அழைத்தனர். (Mr.Welsh)
6) புதுக்கோட்டை மன்னர்களிடம் வளரி படை என்று தனி படை இருந்தது. (புதுக்கோட்டை வரலாறு)
7) ஆங்கிலேயர்களுக்கு எதிராக வளரியை கொண்டு கள்ளர்கள் "பெருங்காம நல்லூரில் " தாக்கியதால் வளரி பயன்படுத்த நாட்டில் தடை விதிக்கப்பட்டது. (தமிழ் ஆய்வுக் கட்டுரை)

“வளரியை உருவாக்கியவனும், வீசியவனும், அதை இந்த மண்ணை விட்டு மறைய செய்தவனும் கள்ளனே”


திகிரி, கள்ளர் தடி, வளரி, வளைதடி, பாராவளை, எறிவளை என்ற பெயரால் தமிழகத்தில் வழங்கப்பட்ட ஆயுதமே பூமராங் என்பதாகும். பூமாராங் எனும் ஆயுதமானது கையால் வீசியெறியக்கூடிய வகையில் வளைந்த வடிவத்துடன், ஏறக்குறைய பிறை வடிவமாக இருக்கும். ஒரு முனை மிகவும் கனமாகவும் மறுமுனை கூர்மையாகவும் இருக்கும். இதனை மரம், இரும்பு, யானைத்தந்தம் போன்றவற்றால் செய்த வளரி வேட்டையாடுதலுக்கும் இரும்பால் செய்த வளரிப் போர் புரிவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.






வளரியை கனமற்ற நுனியைக் கையில் பிடித்துக் கொண்டு தோளுக்கு மேலே பலமுறை வேகமாகச் சுழற்றி விரைவாக இலக்கினை நோக்கி எறிந்திட அது இலக்கினைத் தாக்கிவிட்டு எறிந்தவரிடமே திரும்பவும் வந்து சேரும். எதிரியைத் தாக்கிவிட்டு வீசி எறிந்தவரிடமே வந்து சேரக்கூடிய அற்புதமான ஆயுதம். திரும்ப வரும்பொழுது கவனமாகக் கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வீசியெறிந்தவரைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது. (தமிழாய்வுக் கட்டுரைகள் (தொகுதி I) ப.31).



போர்புரியும் வீரர்கள் தம் கொண்டையில் வளரியைச் சொருகி வைத்திருப்பர். போர் மூளும்போது கொண்டையிலிருந்து உருவி வளரியின் மூலம் எதிரிகளைப் போரிட்டு வீழ்த்துவர். இத்தகுச் சிறப்புமிகு வளரியினைத் தற்போதும் சில கள்ளர் மற்றும் மறவர் இன மக்களின் பழைய குடும்பங்களில் காணலாம். பூசைக்குரிய பொருளாக வளரியைப் பயன்படுத்துகின்றனர்.


# திருமால் 'கள்வன்' ஆயுதமாகக் கலித்தொகை சுட்டுகிறது.
“மல்லரைமறம் சாய்த்த மலர்த்தண்தார் அகலத்தோன்
ஒல்லாதார் உடன்றுஓட உருத்துஉடன் எறிதலின்
கொல்யானை அணிநுதல் அழுந்திய ஆழிபோல்
கல்சேர்பு ஞாயிறு கதிர்வாங்கி மறைதலின்” (134:1-4)


பொருள்: யானையின் முறத்தைப் போன்ற செவியை மறைவிட மாய்க் கொண்டு பாய்ந்து மாறுபாடு செய்த புலியைச் சினந்து, மறம் பொருந்திய நூற்றுவர் தலைவனான துரி யோதனனைத் தொடையில் உள்ள உயிரைப் போக்குகின்ற வீமனைப் போன்று, தன் நீண்ட கொம்பின் கூர்மையான முனையினால் குத்தி, புலியின் மார்பைப் பிளந்து பகைமை நீங்கிய யானை, அது மல்லரின் மறத்தை அழித்த திருமால் போல் கல் உயர்ந்த அகன்ற சாரலில் தன் சுற்றத்துடனே திரியும்.
Vishnu, 12th century. His wheel was used a returnable weapon (like boomerang) and his conch was used to initiate war - Thanjavur Royal Palace

# சோழ மன்னன்

பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் 
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்; மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால்”



பொருள்: சோழ மன்னன் பொன்னால் செய்த அழகிய வளரி என்னும் போர்ப்படையை உடையவன்

காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு – இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம், புகார்க் காண்டம் 1.5


பொருள்: காவிரியை உடைய சோழனது சக்கரம்போல் பொன்போல் தோற்றமளிக்கும்.

இவ்வளரியானது வேட்டைக் கருவியாகவும் பிறரைத் தாக்கும் கருவியாகவும் சங்க காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர்.


பொன்புனை திகிரி

# நடுகல் கல்வெட்டில்



கூடலூரைச் சேர்ந்தவர்கள் ஆனிரையைக் கவர்ந்து செல்ல முயன்ற போது அந்தவன் என்பவன் ஆனிரையை மீட்டு அந்தப் பூசலில் இறந்து போன செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்ளர் குலத்தவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். புறநானூறு பாடலில் ‘மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்’ என்று உள்ளது. கூடல் நகர் ஆட்சி செய்த அகுதை என்ற குறுநிலத் தலைவன் ‘பொன்புனை திகிரி’ (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (‘அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ’) கூறப்பட்டுள்ளது.

# கலிங்கத்துப்பரணி

“களித்த வீரர் விரட்ட நேமி
கண்டு வீசு தண்டிடைக்
குளித்த போழ்து கைப்பிடித்த
கூர்மழுக்கள் ஒக்குமே” (கலிங்கத்துப்பரணி:418)


# புறநானூற்றில்

“எரிகோல் அஞ்சா அரவின் அன்ன “(புறம்.89-5) எனும் அடியில் உள்ள எரிகோல் என்பது இங்கே வளரியைச் சுட்டுகின்றது.
வளரி என்பது குறுங்கோல் வளைதடி என்பதைக் “குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் (புறம்.339:4)” எனும் அடி குறிப்பிடுகின்றது.


# ஐங்குறுநூற்று


மாலை வெண்காழ் காவலர் வீச
நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும் (ஐங்குறு.421:1-2)


வெண்காழென்றது மாலைக்காலத்து முயலெறியும் தடியை என்னும் வளரியாகிய வளைதடியாகும். இவ்வடியில் ‘காவலர்’ எனும் சொல்லினை ஆராய்ந்து நோக்குகையில் காவலர் என்பார் ஊர்க்காவலை மேற்கொண்டவராவார்.




பிரிட்டிஷ் தொல்லியல் நிபுணர் ராபர்ட் புரூஸ் ஃபுட் அவர்கள் கள்ளரின் மணமகள் மற்றும் மணமகன் குடும்பங்களுக்கு இடையில் வளரி பரிமாற்றம் செய்யப்பட்டது என்றும் வளைதடியை அனுப்பிப் பெண்ணைக் கொண்டு வரும் வழக்கமும் இவர்களிடையே இருந்துள்ளது என்றும் திருமணத்திற்கு முன் வளைதடியை இருவீட்டாரும் மாற்றிக் கொள்வதும் உண்டு என்றும் கூறுகிறார்.

# புதுக்கோட்டை மன்னர்கள்

புதுக்கோட்டை மன்னர்கள் எப்போதும் தங்கள் ஆயுதக்கிடங்கில் வளரி ஆயுதங்களை இருப்பு வைத்திருந்தனர். புதுக்கோட்டை மன்னர்களிடம் வளரி படை என்று தனி படை இருந்தது.



சின்ன மருது காளையார்கோவிலின் கோபுரத்தை பெரிதாக கட்டியபோது வைத்தியலிங்க தொண்டைமான் அழைத்து கோபுரம் எப்படி என கேட்க இவர் ஒரு பனைமரம் அளவே உள்ளது என வேடிக்கையாக கூறினார். அதற்க்கு மருது என்ன பனைமரம் அளவா எப்படி சொல்கிறீர்கள் என வினா எழுப்ப. ஒரு வளரியை வாங்கி தான் பனைமரம் அளவு வளரி வீசுவேன் என வைத்தியலிங்க தொண்டைமான் வளரியை கோபுரத்தின் மேல் வீசி அந்த கோபுரத்தை தாண்டி வீசி எறிந்து காட்டினார் என ஒரு சம்பவம் தெரிவிக்கின்றது.

தளசிங்க மாலையில் சேதுபதிகள் முற்காலத்து எட்டன் எனப் பெயர் கொண்ட ஒருவனோடு வளரி போர் புரிந்து அவன் தலையையே தம் வீரக்கழலில் அணிந்து கொண்டனர் எனும் செய்தியைக் கூறுகின்றது.

“விஜய சேதுபதி (கி.பி.1710-1725) மன்னர் தனது மகள் அகிலாண்டேஸ்வரியைச் சிவகங்கைக்கு மணமுடித்து அனுப்பி வைத்தபோது சீர்களில் ஒன்றாகத் தம் குலமரபு ஆயுதமான வளரியையும் அனுப்பி வைத்ததாகக் கல்வெட்டு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி II, ப.43).



கள்ளர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் வளரியைப் பயன்படுத்தியதாக எட்கர் தர்ஸ்டன் பதிவு செய்துள்ளார். வளரியைக் கண்டு ஆங்கிலேயர்கள் மிகவும் அஞ்சினார்கள் என்றும் இதனாலேயே போர் முடிந்ததும் கர்னல் அக்னியு சிவகங்கைப் பகுதியில் பத்தாயிரம் வளரிகளைக் கைப்பற்றியதாகவும் சென்னைப்படை வரலாறு தெரிவிக்கின்றது (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி I), ப.40).


ஆங்கிலேயத் தளபதி கர்னல் வெல்த் என்பவர் (1795இல்) சின்னமருதுவிடம் வளரி வீசும் பயிற்சியினைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். வளரியை பயன்படுத்தி ஆங்கிலேயர்களுடன் மருது சகோதரர்கள் சண்டையிட்டார்கள்.






கி.பி.1915 இல் மதுரை மாவட்டத்தில் கொண்டு வரப்பெற்ற குற்றச்சட்டத்தை எதிர்த்துப் பிறமலைக் கள்ளர் சமுதாயம் கி.பி.1921-இல் கிளர்ந்தெழ உசிலம்பட்டி வட்டம் பெருங்காம நல்லூரில் பெருங்கிளர்ச்சி வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். இக்கிளர்ச்சியின்போது இம்மக்கள் பயன்படுத்திய ஆயுதம் வளரியாகும். இதன் காரணமாக இவ்வாயுதத்தைப் பயன்படுத்த ஆங்கில அரசு தடை விதித்தது. வீடுகளில் வளரி வைத்திருந்தால் அவர்களைக் குற்றவியல் தண்டனைக்கு உட்படுத்தினர். எனவே இதனை வழிபாட்டிற்குரிய பொருள்களுள் ஒன்றாகக் கோயில்களில் வைத்துப் பாதுகாத்தனர் (தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி I, மணிமாறன், 2016, ப.41).

வளரியைப் பூமராங் எனும் பெயரில் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களான அபோர்ஜினியர்கள் பயன்படுத்தி வருவதாகச் கூறுகின்றன. ஆனால் அதற்கு முன்பாகவே தமிழ் நாட்டில் பயன்படுத்த பட்டது. திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வின் மூலம் இரண்டு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவ்விரண்டு மண்டை ஓடுகளை ஆராய்ந்த அறிஞர்கள் திராவிடரும் அபோர்ஜினியரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர் என்ற முடிவினைக் கருதியுள்ளனர். மேலும் இங்குக் கண்டெடுத்த மண்டை ஓடுகளில் ஒன்று திராவிடருக்கும் மற்றொன்று ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் முன்னோருக்கும் உரியது என ஜி.எலியட் ஸ்மித் கூறியுள்ளார்.

இவ்வாறு சிறப்புமிக்க ஆயுதமான வளரி தற்போதும் பாதுகாப்பாகவும் கண்காட்சியாகவும் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இராமநாதபுரம் ராமவிலாசத்தில் தொல்லறிவியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் இவ்வளரி பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

நன்றி
சே. முனியசாமி - முனைவர்பட்ட ஆய்வாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக