வியாழன், 5 மார்ச், 2020

கருணாநிதி 2009 பிறந்தநாள் கொண்டாட்டம் சாவு மங்கள இசை எடுத்துக்காட்டு மதிமுக இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 21 ஆக., 2018, முற்பகல் 9:51
பெறுநர்: எனக்கு
“ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈரம்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூ அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்ற அப் பண்பு இலாளன்;
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே” -புறநானூறு (194)


காலம் வசப்படும் கடமை ஆற்றுவீர்! வைகோ கடிதம்
Issues: Economy , Environment , Human Rights,
Law & Order , National, Politics , Poverty
Region: Chennai - North , Chennai - South ,
Coimbatore - Urban , Coimbatore - Rural ,
Cuddalore , Dharmapuri , Dindigul, Erode,
Kancheepuram , Kanyakumari , Karaikal , Karur ,
Krishnagiri , Madurai - Urban , Madurai - Rural ,
Nagapattinam, Nammakal , Nilgris, Perambalur ,
Pudhukottai , Puducherry, Ramanathapuram ,
Salem , Sivagangai , Tanjore , Theni , Thiruvallore,
Thiruvannamalai , Thiruvarur , Tirunelveli - Urban,
Tirunelveli - Rural , Tiruppur, Trichy - Urban , Trichy - Rural , Tuticorin , Vellore - East , Vellore - West ,
Viluppuram , Viruthunagar , Tamil Nadu
Category: Articles , Headlines
Date: Wed, 21/05/2014
காலம் வசப்படும்
கடமை ஆற்றுவீர்!
வைகோ கடிதம்
இமைப்பொழுதும் நீங்காது
என் இதயத் துடிப்போடும்
இரத்தச் சுழற்சியோடும்
கலந்துவிட்ட கண்ணின் மணிகளே!
சே வல் பூபாளக்குரல் எழுப்பும் முன்னரே கண்விழித்து, பரபரப்போடு...ஏன்? பதற்றத்தோடு பாடப்புத்தகங்களைப் படித்து, தேர்வு எழுதும் அரங்கத்தில், விடைத்தாள்களில் வேக வேகமாக எழுதி முடித்து, “அப்பாடா! தேர்வை எழுதி விட்டோம்” என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டு வீட்டுக்கு வந்தபின்னர்,
தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் நெருங்க நெருங்க, மாணவக் கண்மணி களுக்கும், அப்பிள்ளைச் செல்வங்களின் பெற்றோருக்கும் தேர்வு முடிவினைக் குறித்து எத்தகைய எதிர்பார்ப்பு நெஞ்சில் கவலையுடன் இழையோடுமோ, அத்தகைய மனநிலையில் கழகத்தின் கண்மணிகள் இருக்கும்போது இக்கடிதத்தை எழுதுகிறேன்.
ஒன்றை மட்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இனி கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. இதுவரை ஏற்பட்ட சோதனைகள் நம்மை வார்ப்பிப்பதற்கே; புடம் இடுவதற்கே; ஆயத்தப்படுத்து வதற்கே!
இப்போது நாம் வலிமையான வார்ப்புகள்; புடம் போட்ட பொன்; எத்தகைய படையெடுப்பையும் மோதி முறியடிக்கும் விதத்தில் ஆயத்தமான படைக்கலன்கள்!
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், 2011 இல், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நாம் போட்டியிடாமல் விலகி நின்றபோது, ‘நம் அரசியல் வாழ்வு முடிந்தது’ என்று எக்காளமிட்டோர் பலர்; ஏகடியம் பேசியவர்கள், ஏளனம் செய்தோர் பலர்; இத்தோடு நாசமாகப் போகட்டும்’ என்று மனதிற்குள் சபித்த சில பெரிய மனிதர்களும் உண்டு.
பேரறிஞர் அண்ணா உறங்கும் சென்னைக் கடற்கரையில், ஒரு நடுச்சாம நேரத்தில் காலாற உலவிவிட்டு, முழங்கால் அளவு கடல் நீரில் நின்றவாறு, ஈழத் தீவு இருக்கும் திசையைப் பார்த்தவாறு, தவமான சிந்தனைகளை நெஞ்சிலே தாவ விட்டு, சில உறுதியான முடிவுகளை மனதிற்குள் வடித்தேன்.
“சட்டமன்றப் பொதுத் தேர்தலைப் புறக்கணிப்பது; கடுமையாக உழைப்பது; போராடுவது; மக்கள் மன்றத்தில் செயல்படுவது; மதுவின் கொடுமையால் பாழாகும் தமிழகத்தை மீட்பதற்கு, தாய்மார்களின் கண்ணீரை நிரந்தரமாகத் துடைப்பதற்கு மக்களைத் திரட்டுவது; அதற்காகக் கால்கள் வலித்தாலும் நடைப்பயணம் செல்வது” என அப்போது மேற்கொண்ட முடிவுகளை, அடுத் தடுத்துச் செயல்படுத்தினேன்.
கடந்த மூன்று ஆண்டுகளில், முல்லைப் பெரியாறு, கூடங்குளம், ஸ்டெர்லைட்டை நீக்கும் களம், அணுஉலை அகற்றும் களம், மதுவை ஒழிக்கும் களம், மீனவரைக் காக்கும் களம், விவசாயிகள் துயரில் பங்கேற்கும் களம், ஊழலை ஒழிக்கும் களம், ஈழத்தமிழரைப் பாதுகாக்கும் களம், கொடியோன் ராஜபக்சே கூட்டதைத் தண்டிக்கக் குவலயத்தின் மனச் சாட்சியைத் தட்டும் களம், ஈழத் தமிழர் படுகொலையை கோடிக்கணக்கான மக்கள் நெஞ்சில் நிறுத்தும் களம், இப்படி எத்தனையெத்தனையோ களங்கள்!
அனைத்திலும் என்னோடு அணிவகுத் தீர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அல்லது அனைத்திந்திய அண்ணா தி.மு.க. தலைமை என்ற இரண்டு வலிமையான ஆதிக்கங்களின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிப்பதை, நமது இலக்காகக் கொண்டோம்.
அந்த இரண்டு இயக்கங்களில் இலட்சோப இலட்சம் தூய தொண்டர்கள் உள்ளனர். ஏன், நல்ல மனம் படைத்த இரண்டாம் நிலைத் தளகர்த்தர்களும் உள்ளனர்.
ஆனால், இரண்டு கட்சிகளின் தலைமையும் சுயநலம் மிக்கவை. கூச்சம் இன்றி ஊழல் செய்பவை. ஏய்த்துப் பிழைப்பதில் வல்லமை கொண்டவை. தமிழகத்தின் பண்பாட்டை, நாகரிகத்தை நம் முன்னோர் வகுத்த அறநெறிகளை, சுயநலத்திற்காக அடியோடு சீர்குலைக்கத் துடிப்பவை.
நான் நீண்ட நாட்களாகச் சொல்லி வருகிறேன்.
There will be a breaking point. இருகட்சிகளின் ஆதிக்கம் உடையும்; நிலைமை தலைகீழாக மாறும் என்று.
இதோ, அந்த வேளை வந்துவிட்டது!
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.
நாம் விரும்புகின்ற மாற்றம் கருக்கொண்டு விட்டது.
‘முன்னேறிச் செல்கின்றோம்’ என்று கடந்த மடலில் எழுதினேன் அல்லவா?
கரூரில் சூளுரைத்ததுபோல, ‘அதிகாரத்தைக் கைப்பற்றத்தான்’ போகிறோம்.
தடைகளைக் கடந்து இலக்கை வெல்வதற்குப் போராடுவது என் குருதியில் ஊறிய உணர்வு.
கடந்த இருபது ஆண்டுகளில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து பல படிப்பினைகளைப் பெற்று இருக்கின்றேன்.
இனி நாம் வகுக்கின்ற வியூகங்கள், மேற்கொள்ளும் நடைமுறைகள் சற்று மாறுபட்டதாகவே இருக்கும்.
உலத்திலேயே மிகவும் விலைமதிக்க முடியாத பொருள் எது தெரியுமா?
தங்கத்தைவிட, வைரத்தைவிட, வைடூரியத்தைவிட, கோமேதகம் மாணிக்கங்களை விட, இயற்கை தரும் செல்வங்கள் அனைத்தையும்விட, கடந்த மடலில் நான் குறிப்பிட்ட ஐம்புலன்களின் நுகர்ச்சியைவிட மிக மிக உயர்ந்தது... உன்னதமானது எது தெரியுமா?
அதுதான் காலம். கண் இமைக்கும் நேரமும் நொடிப்பொழுதும்!
அறுபது நொடிகள் அடங்கிய ஒரு நிமிடம்; அறுபது நிமிடங்களைக் கொண்ட ஒரு மணித் தியாலம்; 24 மணி நேரத்தைக் கொண்ட ஒரு நாள்; ஏழு நாட்கள் கொண்ட ஒரு வாரம்; நான்கு வாரங்கள் கொண்ட ஒரு மாதம்; 12 மாதங்களால் ஆன ஒரு ஆண்டு என காலத்தை, கடந்து செல்லும் பொழுதை, நெடுங்காலத்திற்கு முன்னரே தமிழர்கள் ‘நாழிகை’ என்றும், ‘யாமம்’ என்று சரியாகவே கணித்து இருக்கின்றார்கள்.
இமைக்கும் ஒரு நொடிப்பொழுது கூட, நமக்குத் திரும்ப வருவது இல்லை. சென்றது இனி மீளாது.
ஒரு ஆங்கிலக் கவிஞன் அழகாகச் சொன்னான்:
‘ஒருமுறைதான் இந்த வாழ்க்கைப் பாதையில் செல் கின்றேன். திரும்ப வரப்போவது இல்லை’ என்று.
நாம் கடக்கும் ஒவ்வொரு நொடியும், சகமனிதர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கும், துன்பத்தைப் போக்குவதற்கும் பயன்பட வேண்டும். அதுதான் இந்த மனித வாழ்க்கையின் பொருள்.
தமிழ்க் குலத்தின் தவப் புதல்வன், இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழரின் சகாப்த நாயகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் கொடிய புற்று நோய்க்கு ஆளானார். உலகத்தின் சிறந்த மருத்துவம் அவருக்குத் தரப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போதே, புற்று நோய் குறித்த அனைத்து நூல் களையும் விரும்பிப் படித்தார். மரண நிழல் நம்மைச் சூழ்ந்து விட்டது. உலகில் இருந்து செல்லும் நேரம் வந்து விட்டது என்பதை முற்றிலும் உணர்ந்தார்.
நுங்கம்பாக்கம் வீட்டில், எலும்பும் தோலுமாக முண்டா பனியனோடு அவர் உட்கார்ந்து இருந்த நிலையில், சட்டக் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் அவரைச் சந்தித்ததும், அன்பொழுக எங்களிடம் அவர் உரையாற்றியதும் என் நினைவை விட்டு என்றென்றும் அகலாது.
தாம் பிறந்த தாயகத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டும் விழாவில், அவரது கரகரப்பான குரல் ஒலிக்கத் தொடங்கிய போது விம்மி விம்மி அழுதவர்கள் எண்ணற்றோர்.
தனிநாடு கோரிக்கை அவரது நெஞ்ச வேட்கை. அதனால்தான் நமது மண்ணுக்குத் ‘தமிழகம்’ என்று பெயரிடாமல், ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டினார்.
அன்னிய மொழியும், அதன் வழியாகப் பிற தேசிய இனத்த வரின் ஆதிக்கமும் தமிழகத்தில் படர்ந்து விடக் கூடாது என்பதால் தான் ‘இந்திக்கு இங்கே இடம் இல்லை’ என்றார்.
ஆங்கிலம் உலக மொழி; அதன்மூலம் பிற தேசிய இனத்தவர் ஒருக்காலும் நம்மை ஆதிக்கம் செய்யப்போவது இல்லை என்பதால், இரு மொழித் திட்டத்தை அறிவித்தார்.
தனது குருநாதர் தந்தை பெரியாரின் உண்மையான சீடர் என்பதால், சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் தந்தார்.
இன்று உயிரோடு அவர் தொடர்ந்து வாழ்ந்து இருப்பின், உலக வரைபடத்தில் சுதந்திரத் தமிழ்த்தேசம் என்றோ மலர்ந்து இருக்கும்.
ஆனால், அறிஞர் அண்ணா இன்று இருந்தால் எதைச் செய்வாரோ, அதைச் செய்யக் கூடிய தீரர்களாக நாம் தலை நிமிர்ந்து நிற்கிறோம்.
பூமிப்பந்தில், இந்தத் தரணியின் தொல்குடிகளாகிய தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லையே?
அந்த நாட்டின் விடுதலைக் கொடி ஐ.நா. முற்றத்தில் பறக்கவில்லையே?
என்று நீங்கும் இந்த ஏக்கம்?
எப்போது பூக்கும் ஈழத்தமிழ் தேசம்?
என்று, இருபத்து ஐந்து ஆண்டு களுக்கு முன்பு, ஆயிரக்கணக் கான மைல்களுக்கு அப்பால் நியூ யார்க் பட்டணத்தில் இருந்த போது, என் ஏக்கத்தை வெளிப் படுத்தி, அன்றைய தி.மு.கழகத் தோழர்களுக்கு ஏறத்தாழ ஆயிரம் கடிதங்கள் அனுப்பி இருந்தேன். இன்றைக்கும் பெரும்பாலோர் அதனைப் பத்திரப்படுத்தி வைத்து உள்ளனர்.
நோயால் நலிந்த, சாவின் பிடியில் மரண வாசலில் இருந்த அறிஞர் அண்ணா குறித்துத் தொடர்கிறேன்.
தம்பிக்குக் கடிதம் எழுதுவது, அண்ணாவுக்கு மிகமிகப் பிடித்தமான ஒன்று.
அதனால்தான், 1969 இல் ஜனவரியில் தைப் பொங்கல் விழா மடலாகத் தம்பிக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். அதுவே அறிஞர் அண்ணா அவர்களின் கடைசிக் கடிதம்.
அந்தக் கடிதத்தில், நேரத்தின் இன்றியமையாமை குறித்து எவ்வளவு அழகாகச் சொல்கிறார்!
“ கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தக்க முறையிலே பயன்படுத்தி னால் சமூகத்தை நிச்சயமாகத் திருத்தி அமைத்திடலாம். ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறுவதற்குக் காரணம் தம்பி! எங்கோ படித்ததாக நினைவு.
ஒரு நிமிடத்தில் விண்ணில் இருந்து 6000 விண்கற்கள் விழுகின்றன;
பூமி தன்னைத் தானே 950 மைல் வேகத்தில் சுற்றுகிறது.
100 பேர் இறந்துபடுகிறார்கள்; 114 குழந்தைகள் பிறக் கின்றன.
34 திருமணங்கள், 16 விவாக விடுதலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
68 மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதாக.
காலம் அத்துணை மதிப்பு வாய்ந்தது. கடமை உணர்ந்த நீ, காலத்தையே கனியச் செய்திடும் ஆற்றல் பெற்ற நீ, தமிழக அரசியலையே மாற்றி அமைத்த நீ, உன் கடமையைச் செய்வதிலே கண்ணுங் கருத்துமாக இருப்பாய் என்பதனை நான் அறிவேன் எனினும், அண்ணன் என்ற உரிமை யுடன் உனக்கு அந்தக் கடமையை நினைவு படுத்துவது எனக்கோர் மகிழ்ச்சி தந்திடுவதுபோல உனக்கும் மகிழ்ச்சி தந்திடும் என்பதிலே ஐயப்பாடு இல்லை.
என்னைப் பொறுத்தமட்டிலே தம்பி, வலியைத் தாங்கிக் கொண்டபடி என்னால் இயன்றதைச் செய்து வருகிறேன்”
(காஞ்சி - இதழில் 12.01.1969 இல்)
நான் உங்களுக்குச் சொல்வதை விட, அறிஞர் அண்ணா அவர்களது வார்த்தைகளிலே சொன்னால் அது உங்கள் மனதில் ஆழப்பதியும் அல்லவா?
மே 16 க்குப் பின்னர் இயக்கத்தை எப்படி வேகமாக முன்னெடுப்பது என்று இப்போதே திட்டமிட்டு விட்டேன்.
நமது இயக்கம் தோன்றிடக் காரணமான ஐந்து வீரத்தியாகிகள் நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், உப்பிலியாபுரம் வீரப்பன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், கோவை காமராசபுரம் பாலன் நமக்கு ஐம்பெரும் காப்பியங்கள் அல்லவா?
கழகத்தைக் காக்கவும், வளர்க்கவும், அர்ப்பணித்து உழைத்து உலகைவிட்டு மறைந்த உத்தமர்கள் அனை வருமே என் நெஞ்சக் கூட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கின்றார்கள்.
ஐயா தினகரன் கே.பி.கந்தசாமி, மாவீரன் சென்னை ஏழுமலை, கவிஞர் குடியரசு, துறைமுகம் செல்வராஜ், வீரன் ஜி.வி.சிவா, கரூர் சாமியப்பன், குமரி திரவியம், கோவை மாணிக்கவாசகம், ஆண்டு நாச்சிமுத்து, மண்ணச்ச நல்லூர் நடராசன், வீர.இளவரசன், நாகர்கோவில் இரத்தினராஜ், தோப்பூர் சுப்பிரமணியன், இஞ்ஜினியர் டி.என்.ஷேக் முகம்மது, பூங்கொடி சாமிநாதன், புளியங்குடி பழநிச்சாமி, கடையநல்லூர் ஆ.திராவிடமணி, சங்கரன் கோவில் பி.காம் பழநிசாமி, சுரண்டை அ.கா.சாமி, கரூர் டி.பி.மூர்த்தி, சிங்கப்புலி பாண்டியன், டாக்டர் எஸ்.எம். அசன் இப்ராஹிம், வழக்கறிஞர் மு.சுப்புரத்தினம், டாக்டர் அப்துல்லாஹ் பெரியார்தாசன், ஈரோடு ஈ.ஏ.மதார்சா, ஆச்சியூர் எம்.மணி....
இன்னும் இன்னும் எத்தனை எத்தனை கழகக் கண்மணிகள்? பட்டியல் எழுதி அடங்குமா?
இவர்கள் அனைவருமே இயக்கத்தின் வலுவான அடித்தளக் கற்களாகி விட்டார்கள். கம்பீரமாக உயர்ந்து எழும் நமது இயக்கக் கோபுரத்தை, அவர்களின் உண்மையான உழைப்பும், தியாகமும், என்றைக்கும் தாங்கி நிற்கும். எத்தகைய கனவுகளோடு அவர்கள் பாடுபட்டார்களோ, அந்தக் கனவுகளை நனவாக்க உறுதி பூண்டு விட்டேன்.
இனி வெற்றி ஒன்றே நமது இலக்கு. புறப்பட்டு விட்டோம். எத்தகைய தடைகள் வரினும் இடறி எறிவோம்!
இப்போது உங்களைக் கேட்ப தெல்லாம், என் எண்ணத்தைச் செயல்படுத்த வேண்டிய உங்களின் ஒத்துழைப்பு ஒன்றையே.
கடந்த இருபது ஆண்டுகளில் நீங்கள் அளப்பரிய பொருள் நட்டத்திற்கு ஆளாகி இருக் கின்றீர்கள். உங்களில் பலர், சொந்த வாழ்க்கைக்காகச் சம்பாதிக்கின்ற நேரத்தைக் கட்சியின் வளர்ச்சிக்காகச் செலவிட்டீர்கள். மாநாடுகள், நடைப்பயணங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் என இடை விடாது உங்களிடம் வேலை வாங்கி இருக்கிறேன்.
நீங்களும் முகம் சுழிக்காமல் சிரமங்களை ஏற்றீர்கள். உங்களில் யாராவது ஒருவருக்கு உடல் நலக் குறைவு என்றாலும் வேதனையில் துடிப்பவன் நான். உங்கள் கண்ணில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டும். நீங்களும் உங்கள் குடும்பத்தின் பெற்றோர் உற்றார் உள்ளிட்ட அனைவரும் உடல் நலனோடும், உள்ள மகிழ்வோடும் இருக்க வேண்டும் என்றே எப்போதும் ஆசைப்படுவேன்.
ஆனால் தோழர்களே, இனிமேல் சில கடுமையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
என் எண்ணச் செயல் திட்டத் திற்கு ஈடு கொடுக்க முடியாது என்று கருதுபவர்கள் பொறுப்பில் இருப்பீர்களே யானால், தாங்களாகவே அப்பொறுப்புகளை விட்டு விலகி, உழைக்க முற்படுபவர் களுக்கு வாய்ப்புக் கொடுக்க முன் வாருங்கள்.
ஒரு இயக்கத்தில் தன் முனைப்பும் (ego) சுய விருப்பு வெறுப்பும், பொறாமையும்  தலைதூக்குமானால் அந்த இயக்கம் வளராது; வலிமை பெறாது.
இயக்கத்தையும், இலட்சியத்தையும் உயிராக நேசிப்பவர்களுக்கு இந்தக் குறைபாடுகள் எற்படாது. நம்முடைய இயக்கத்திற்கு நிகரான கட்டுப்பாடுள்ள ஓர் இயக்கத்தை, இந்தத் துணைக் கண்டத்தில் நான் பார்க்க வில்லை.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னணியினர் நம் தாயகத் திற்கு வந்தபோது, ஒன்றரை மணி நேரம் அவர்களுடன் உரையாடிய வேளையில் ஒன்றைச் சொன்னேன்.
தேர்தல் குறித்தோ, கூட்டணி குறித்தோ யாராவது எங்கள் கட்சியில் பத்திரிகைகளுக்கு, தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி அளித்தது உண்டா?
அவர்கள் பேசும் பொதுக் கூட்டங்களில் கூட்டணி குறித்து கருத்துச் சொன்னதுண்டா?
இதை நீங்கள் எந்தக் கட்சியில் காண முடியும்? என்றேன்.
திகைத்தனர்; ஆச்சரியப்பட்டனர். ‘ஆமாம்! ஆமாம்!’ என்று மகிழ்ச்சி பொங்க ஒப்புக்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழியில் மக்கள் பிரச்சினைகளுக்காக தன் சொந்தச் செலவில் நாள்தோறும் தட்டி போர்டு வைக்கின்ற ஆரல் பி.எஸ்.கே முதல், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் சுய விளம்பரம் எதிர்பாராமல் உழைக்கின்ற கண்மணிகளை நான் நன்கு அறிவேன்.
சில வேளைகளில் தோழர் களிடம் கடுமையாக வேலை வாங்குவேன்.
முன்பு இருந்த ஒரு மாவட்டச் செயலாளர், இராணுவத்தில் மேஜராக இருக்க வேண்டிய ஆள்கிட்ட வந்து சிக்கிக்கிட்ட மோ? தானும் தூங்காமால், அடுத்தவனையும் தூங்க விடாமல் வேலை வாங்கு கிறாரே?’ என்று நகைச் சுவையாகச் சொல்வது உண்டு.
‘கடி தோச்சி மெல்ல எறிக’ என்ற குறளை அடியொற்றி நடப்பவன் நான். செய்யும் வேலையில் பிசகு ஏற்பட்டால் தாமதம் ஏற்பட்டால் உரிமையோடு கோபிப்பேன். அடுத்த ஒருமணி நேரத்துக்குள் அரவணைப்பேன்.
இப்படிப்பட்டவன்தான் வைகோ.
எதற்காக இவ்வளவு பீடிகை போடுகிறேன்? என்று யோசிப்பீர்கள்.
எல்லாம் காரியத்தோடுதான்!
இந்தக் கடிதத்தை எழுதுகின்ற நாள் எது தெரியுமா?
2014 மே 6! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 21 ஆவது பிறந்தநாள். கடுமையான கோடை அக்கினி நட்சத்திர வெயில் காலம். ஆனால் இன்றோ காலையில் இருந்து மழை பொழிகிறது. மழைத்துளிகள் எழுப்பும் ஓசையை இரசித்துக் கொண்டே இக்கடிதத்தை எழுதுகிறேன்.
கோடை வெப்பத்தால், தாகத்தால் நா உலர்ந்து தவிக்கின்ற சாகரப்பறவைக்கு வானத்து மழைத்துளிகள் எப்படி அமுதமாகுமோ, அதுபோலவே கழகத்திற்கு அமுதத்துளிகளாக, வாராது வந்துதித்த மாமணிகளாக, நாம் போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் கழகத் தோழர்களும், இதுவரை நாம் முன்பின் அறியாத இளைய தலைமுறையினர், புதிய வாக்காளர்கள் சாதி, மதம் கட்சி கடந்து தமிழ் இன மீட்சிக்கு ஏங்குவோரும் உழைத்தனர். கைக்காசைச் செலவிட்டனர்; தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் எண்ணம் இன்றியே பணி முடித்துச் சென்றனர்.
அவர்கள்தான் பாடப்படாத கதாநாயகர்கள் (unsung hero).
அத்தகையோர், நமது இயக்கத்திற்கு மேலும் பொலி ñட்டிட உள்மனதில் விழை கின்றனர். அவர்களைத் தேடி நாடி கரம் கோர்த்து அரவணைத் திட நம்மவர்கள் முன்வர வேண்டும்.
உள்ளதை உள்ளபடிச் சொல்லி விட வேண்டியதுதானே இனி?
பல இடங்களில் கழகத்தின் அமைப்புகள் முறையாக இல்லை. ஒரு உண்மையை நான் ஒப்புக் கொள்கிறேன். ஒரு இயக்கம் தோல்வி மேல் தோல்வியைச் சந்திக்கின்றபோது, ஏடுகளில் செய்திகளே வராமல் இருட்டடிப்புத் தொடர்கிறபோது, மற்ற சில பெரிய கட்சிகளில் இருப்பவர்கள் பட்டம், பதவி களில் வலம் வருவதும், அவர் களது வசதிகள் பெருகுவதுமான சூழ்நிலை ஏற்படும்போதும், கழகத்திற்காக உழைப்பது மிகக் கடினமான வேலைதான்.
இந்த வேளையில் மனதிலே சோர்வு மேலோங்கவே செய்யும். வேதனைகளையும் ஏமாற்றத்தையும் சுமந்து கொண்டு நமது இயக்கத்தில் தொடர்ந்து நீடித்து வருவதே ஒரு தியாகம்தான். இதை நான் உணராமல் இல்லை. ஆனால், மலைகளை நிகர்த்த ஊழல் பணபலம்; அதனால் விளைந்த தொலைக்காட்சி ஊடக விளம்பர பலம், காஞ்சித் தலைவரும், மக்கள் திலகமும் உருவாக்கி வைத்த தொண்டர்பலம், அவர் களால் ஏற்பட்ட வாக்கு வங்கி பலம், இவைகளைக் கவசங் களாகக் கொண்டு தமிழகத்தைப் பாழ்படுத்தும் இரண்டு சுயநல ஆதிக்கத் தலைமைகளை எதிர்த்துக் களம் கண்டு வெல்வதற்கு மிகக் கடுமையான முனைப்பும், உழைப்பும் இன்றியமையாத தேவை ஆகும்.
எண்ணற்ற ஊர்களில் நம்மை நேசிக்கின்ற நல்லவர்கள் இருக்கின்றார்கள். நம்மால் ஈர்க்கப்படுகின்ற வாலிபர்கள் இருக்கிறார்கள். ஆனால் அங்கே கழக அமைப்பு இல்லை. இருக் கின்ற அமைப்பும் வெறுங் கூடாகவே இருக்கின்றது.
பெயரளவில் அமைப்பு; ஆனால், செயல்படுவது இல்லை.
புதிய வாக்காளர்களான இளம் தலைமுறையினரிடம் நம் இயக்கம் அணுகுவதற்கு ஏற்ற விதத்தில், ஈடுபாடு உடைய இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். எனவே, செயல்படாத நிர்வாகிகள் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். இதில் எனக்குச் சொந்த விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது.
நான் சாதிகளுக்கு அப்பாற் பட்டவன், மதங்களுக்கு அப்பாற் பட்டவன். மனித நேயம்தான் எனது அணுகுமுறை.
நமது இயக்கம் பலம் பெறு வதற்கு எது தேவையோ, வலுப்பெறுவதற்காக அதைச் செய்வேன்.
‘நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது; எனவே ஜனநாயகத்தைப் பணநாயகம் வெல்லக் கூடும்’ என்று ஒரு வாரப்பத்திரிகை கட்டுரை எழுதி இருக்கின்றது.
இருப்பினும், மதிக்கத்தக்க வெற்றியை நாம் பெற முடியும் என்றே நம்புகிறேன்.
நான் இந்தத் தேர்தலைக் கடந்து, 2016 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு, இப்போதே திட்டங் களை வகுத்துக் கொண்டு இருக்கின்றேன்.
நான் கடைசியாக நாடாளு மன்றத்தில் உரை ஆற்றிய நாளும் நினைவிற்கு வருகிறது.
2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள். நாடாளுமன்றத்தில் மிகப்பரபரப்பாக நடைபெற்றது ஒரு விவாதம்.
அனைத்து உறுப்பினர்களும் அவையில் அமர்ந்த நிலை. அந்த விவாதம் நிறைவுறும் தறுவாயில் அப்போதைய மத்திய அமைச்சர் நிதிஷ்குமார் எழுந்து, ‘இன்றைய விவாதத்தின் கதாநாயகன் வைகோ’ என்று பாராட்டினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் அனைவருமே மெச்சினார்கள். எனது நண்பர்களான காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள், ‘இன்றைய விவாதம் எங்களுக்குச் சாதகமாகவே சென்று கொண்டு இருந்தது. நீ தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டாய்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.
அந்த விவாதத்தின்போதுதான், ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை நான் நேற்றும் ஆதரித்தேன்; இன்றும் ஆதரிக்கின்றேன்; நாளையும் ஆதரிப்பேன்” என்று முழங்கினேன்.
இதனைத் திருமங்கலம் பொதுக் கூட்டத்தில் மேற்கோள் காட்டியதற்குத்தான் 19 மாத பொடா சிறைவாசம்.
விவாதம் முடிந்தபின், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, உயிர் நண்பர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், நான் நேசிக்கின்ற யஷ்வந்த் சின்கா, சிவசேனா கட்சியைச் சேர்ந்த மனோகர் ஜோஷி அனைவருமே என்னை வெகுவாகப் பாராட்டி னார்கள்.
குஜராத் நிலவரம் குறித்துத்தான் அந்த விவாதம். மத நல்லிணக் கத்தை மையமாக வைத்து, புள்ளி விவர ஆதாரங்களோடு பேசினேன்.
அன்று இரவு 10 மணிக்கு என் தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் குஜராத் முதல் அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி!
‘நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரைக்கு என் மனம் நிறைந்த நன்றி’ என்றார்.
ஆண்டுகள் 12 உருண்டு ஓடி விட்டன. வரலாற்றின் விசித்திரத்தைப் பாருங்கள். எந்த நரேந்திர மோடி அரசு குறித்த விவாதத்தில் நான் கூறிய கருத்துக்காகச் சிறைக்குச் சென்றேனோ, பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து அதே நரேந்திர மோடியை இந்தியப் பிரதமராக ஆக்கும் தேர்தல் களத்தில் போட்டியிடும் நிலைமை ஏற்பட்டு உள்ளது.
இப்போதும் நான் ஒய்வு எடுக்க வில்லை. நெல்லை பெருமாள் புரம் தென்றல் நகரில், நெல்லை-தூத்துக்குடி மாவட்ட அளவிலான கைப்பந்து விளை யாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்து உள்ளேன்.
இப்பந்தயத்தில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு, என் தந்தையார் வையாபுரியார் நினைவு கைப்பந்தாட்டக் கழகத்தின் சார்பில், ‘சிவந்தி ஆதித்தனார் விருது’ வழங்கப் போகிறேன்.
சொன்னால் திகைத்துப் போவீர்கள். தினமும் காலையில் இரண்டு மணி நேரம், முன் இரவில் மின் ஒளியில் இரண்டு மணி நேரம் நான் வாலிபால் விளையாடிக் கொண்டு இருக் கின்றேன். மதுவின் பிடியிலும், ஒழுக்கச் சிதைவிலும் சிக்காமல், இளம் தலைமுறையைப் பாது காக்க விளையாட்டுதான் சரியான கருவி ஆகும். ஊர்கள் தோறும் நகரங்கள் தோறும் விளையாட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும். வீரர்களை உருவாக்க வேண்டும்.
பரபரப்பான தேர்தல் பரப்புரைப் பயணத்திலும் ஒருநாள் நள்ளிரவு 12 மணிக்குக் கலிங்கப் பட்டிக்கு வந்து, இரண்டு மணி வரையிலும் 15 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர் களை நேர்காணல் கண்டு, 25 பேரைத் தேர்வு செய்து, ஒரு சிறந்த பயிற்சியாளரைக் கொண்டு அவர்களுக்கு வாலிபால் பயிற்சி அளித்துக் கொண்டு இருக்கின்றேன்.
உலக அளவில் கைப்பந்து ஆட்டத்தில் இந்தியா ஒளிர்ந்திட வாய்ப்புகள் உள்ளன. அதிலும் தமிழ்நாடு அனைத்து இந்திய அளவில் முதல் இடம் பெற்று உள்ளது.
கைப்பந்து ஆட்டம் குறித்தும், மொத்தத்தில் விளையாட்டுத்துறை குறித்தும் வேலூர் மத்தியச் சிறையில் இருந்தபோது, “காமராஜ்கள் உருவாகட்டும்” என்ற தலைப்பில் சங்கொலியில் எழுதிய மடலை நினைñட்டு கிறேன்.
தற்போது நெல்லையில் எனக்கும் சேர்த்துக் கைப்பந் தாட்டப் பயிற்சி கொடுப்பவர் யார் தெரியுமா?
இந்தியாவை உலக அளவில் வெற்றி பெறச் செய்த, இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த உயர்திரு செந்தூர் பாண்டியன் ஆவார்.
இந்தியக் கைப்பந்து ஆட்டக் குழுவில் இடம் பெற்று இருந்த தம்பி இராதாசங்கர், எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறார்.
கைப்பந்தாட்டத்துக்கும், விளையாட்டுக்கும் நான் முக்கியத்துவம் ஏன் தருகிறேன் தெரியுமா?
இளம் தலைமுறையினர் சாதீய, மதவாத எண்ணங்களில் சிக்காமல், மது, போதை, வக்கிரமான எண்ணங்கள் பிடியில் அகப்படாமல் வார்ப்பிக்க, ஊர்களில், தெருக்களில் சமூக ஒற்றுமை ஏற்பட விளையாட்டு பெரிதும் துணை செய்யும்.
********
மகிழ்ச்சியும் துக்கமும் இணைந்ததுதான் வாழ்க்கை!
சங்க இலக்கியத்தில் ஒரு புலவர் அழகாகச் சொன்னார்:
“ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந்தன் முழுவின் பாணி ததும்ப
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண் கண் பனி வார்ப்பு உறைப்ப
படைத்தோன் மன்ற, அப்பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ்வுலகம்
இனியது காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே”
(புறநானூறு 194 ஆவது பாடல்: பக்குடுக்கை நன்கணியார் பாடியது)
ஒரு இல்லத்தில் மணவிழா நடக்கிறது. கொட்டு மேளச் சப்தம். மகிழ்ச்சிகரமான மங்கல இசை.
அதேநேரத்தில், அருகாமையில் இன்னொரு வீட்டில் ஈமச் சடங்கிற்காகப் பிலாக்கணச் சப்தமாகப் பறை ஒலிக்கின்றது.
இதுதான் வாழ்க்கை!
கடந்த ஒரு வார காலத்திற்குள் நிகழ்ந்த மூன்று சம்பவங்கள் என் மனதை வாட்டி வதைத்து விட்டன.
முகுந்த் வரதராஜன் எனும் இந்திய இராணுவ மேஜர், காஷ் மீரத்தில் கடமை ஆற்றும்போது, தீவிரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
அழகான குடும்பம், அருமை யான பெற்றோர், நேசித்து மணந்து கொண்ட காதல் மனைவி, சிந்து எழில் சிந்தும் அன்பு மகள். இவர்களது வாழ்க்கையே சூன்யமாகி விட்டது.
முகுந்த் வரதராஜனின் மனைவியின் கண்களில் கண்ணீர் உறைந்து விட்டது; இதயத்தில் துக்கம் நிறைந்து விட்டது.
யார் ஆறுதல் கூறிட முடியும்?
வீராதி வீரனாகக் கடமை ஆற்றிய அந்த இராணுவ மேஜரின் அருமை மகள், தனது தந்தையின் சடலம் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டி, அதன் மேல் போர்த்தப்பட்டுள்ள மூவர்ண தேசியக் கொடி, அதனைச் சுற்றிலும் மலர் வளையங்கள், இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துப் புன்னகை யோடு ‘டாட்டா’ காட்டுகின்ற அச்சின்னஞ்சிறு பிஞ்சுவின் புகைப்படம்; காணும்போதே கண்களில் மழை கொட்டுகிறது.
“தி இந்து” தமிழ் பத்திரிகையில், ‘காலத்துக்கும் உறுத்தும்’ என்ற தலைப்பில் நிலா சிற்றரசி எழுதி உள்ள கண்ணீர்க் கவிதையை இதோ தருகிறேன்:
காலத்துக்கும் உறுத்தும்!
- நிலா சிற்றரசி
“அப்பாவைத் தைத்தது
தோட்டா!
பாப்பா காட்டுகிறாள்
டாட்டா!
காலத்துககும் உறுத்துமிந்தப்
போட்டோ!
குண்டடிபட்ட
அப்பாவை
குண்டு முழக்கத்தோடு
நெருப்புக்
குழியில் தள்ளினர்;
அறியுமோ இந்தப் பிஞ்சு?
வீர் சக்ராவிருது
தந்தை மூட்டும்
கிச்சுகிச்சுக்கு
ஒப்பாகுமோ?
அசோக் சக்ரா விருது
அப்பாவின்
அரவணைப்புக்கு
ஈடாகுமோ?
அடுத்த சிறுமியின்
அப்பாவைக்
குண்டடியிலிருந்து
தடுப்ப தெப்படி?
இப்படத்தைப் பார்க்கும்
தோட்டாக்களே -இனி
இயங்க மாட்டோமெனத்
துப்பாக்கிகளுக்கு
டாட்டா காட்டினாலென்ன?”
**********
நெஞ்சைப் பதற வைத்த இன்னொரு நிகழ்வு, சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் குண்டு வெடித்த கோர நிகழ்ச்சி.
விதி என்பதை நம்பத்தான் வேண்டுமோ? என்று எண்ணத் தோன்றுகிறது, இந்தச் சம்பவத்தை அறிகிறபோது!
வியாழக்கிழமை (1.5.2014) காலை, சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திற்கு வந்த குவாஹாட்டி இரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் இரு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த பெண் எஞ்ஜினியர் சுவாதி உயிர் இழந்தார். 14 பேர் காயம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள ஜகர்லாமுடியைச் சேர்ந்த விவசாயி பருசூரி ராமகிருஷ் ணாவின் மூத்த மகள்தான் சுவாதி. சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்து, குண்டூரில் கல்லூரிக் கல்வியில் 91 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ந்தார். இதனால் அரசு ஊக்கத்தொகை பெற்று, ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் பி.டெக் சேர்ந்தார்.
ஓவியம், கவிதை, புகைப்படக் கலை என பல திறமைகளைக் கொண்ட சுவாதி, படிப்பிலும் படுசுட்டி. பல்கலைக் கழக அளவில் பி.டெக்கில் அதிக மதிப்பெண்கள் பெற்றதால், அங்கேயே எம்.டெக் படிக்க வாய்ப்பு கிடைத்தது; நல்ல திறமை இருந்ததால் பெங்களூருவில், பிரபல கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
‘அறிமுகம் இல்லாத பெங்களூருக்குப் போக வேண்டாம்’ எனப் பெற்றோர் வலியுறுத்தினர்.
‘இது முதல் வேலை; நல்ல வேலை’ என்பதால், பெற்றோரை ஆற்றுப்படுத்தி, பெங்களூ ருவில் டாடா கன்சல்டிங் சர்வீஸ் என்கிற தனியார் நிறுவனத்தில் கடந்த டிசம்பர் மாதம் பணியில் சேர்ந்தார்.
எவ்வளவு பணி நெருக்கடி இருந்தாலும், மாதத்திற்கு ஒருமுறை பெற்றோரைப் பார்க்கத் தவறாமல் ஊருக்கு வந்து விடுவார். ஒவ்வொரு முறையும், தற்போது பயணித்த அதே குவாஹட்டி இரயிலில்தான் போவார்.
இந்தமுறை அவர் ஊருக்குப் போவதற்கு முன்கூட்டியே திட்டமிடவில்லை.
கடைசி நேரத்தில் மே 1 உழைப்பாளர் தினம், மே 2 பசவண்ணா ஜெயந்தி என கர்நாடகாவில் தொடர்ச்சியாக அரசு விடுமுறை என்பதால், நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்தது. எனவே, கடைசி நேரத்தில் இரயிலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியவில்லை. எனவே, புதன்கிழமை காலை தத்கல் டிக்கெட் பதிவு செய்தார்.
பயணம் புறப்படுகையில், விடுதியிலேயே காலதாமதம் ஆகிவிட்டது. பெங்களூரு சிட்டி இரயில் நிலையத்திற்குச் சென்றால் இரயிலைப் பிடிக்க முடியாது என்பதால், பெங்களூரு கண்டோன்மெண்ட் இரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் வேகமாகச் சென்றார்.
தான் இறக்கப் போகும் இரயிலை இவ்வளவு விரட்டிப் பிடிப்பார் என்பது விதிதானே?
இரயிலில் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை (9, 10 - S4, S 5 பெட்டிகளில்) ஒரு குடும்பத்தார் சேர்ந்து இருக்கிறோம் என்று விரும்பிக் கேட்டதால் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, வேறு படுக்கையில் (28, 29) மாறி அமர்ந்து, தன் தோழியுடன் பயணித்தார்.
சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கியபோது விடைபெற்ற தோழிக்கு ‘டா டா’ காட்டிக் கொண்டு இருந்த அடுத்த நொடியில் குண்டு வெடித்துச் செத்துப் போனார்.
அந்தக் குடும்பத்தின் மொத்த நம்பிக்கையும், குலவிளக்கு மாகத் திகழ்ந்த சுவாதி, ஜனவரி மாதம் முதல் சம்பளம் வாங்கிய உடனே தனது பாட்டி ராஜ்யலட்சுமிக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்.
‘என் பேத்தி வாயில்லாத பூச்சி. ஈ எறும்புக்குக் கூடத் துரோகம் செஞ்சதில்ல. அவளைக் கொல்ல எப்படித்தான் மனசு வந்துச்சோ?’ என அந்தப் பாட்டி கதறிய வார்த்தைகள் ஈட்டியாய்க் குத்துகிறது.
ஹைதராபாத் கல்லூரியில் சுவாதி படித்தபோது, நண்ப ரோடு காதல் மலர்ந்தது. சாதாரண விவசாயக் குடும்பத்தில் மூத்த மகளாகப் பிறந்ததால், குடும்பப் பொறுப்பு களால் தள்ளிப் போட்டார் ஸ்வாதி.
தன்னுடைய காதலைப் பெற்றோரிடம் சொல்லிச் சம்மதமும் பெற்று இருந்தார். இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் காதல் திருமணம் நடக்க இருந்தது.
சென்னையில் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த சுவாதியின் உடலைப் பார்த்து தந்தை ராமகிருஷ்ணனும், தாய் காமாட்சி தேவியும் கதறி அழுதனர். மணக்கோலம் காணச் சில நாள்களே இருந்த நிலையில் மகள் இறந்ததை எண்ணி அவரது பெற்றோர்கள் துக்கத்தில் கதறி அழுது துடித்த செய்தியைப் படிக்கும்போதே இதயம் நடுங்குகிறது.
இது கொடுமை! கொடுமை! தாங்கிட முடியாத கொடுமை!
***************
இன்று காலை (06.05.2014) தினத்தந்தி ஏட்டில் ஓர் செய்தி படித்தேன். மனம் சுக்கல் சுக்கலானது.
சென்னை அசோக் நகர் 10-ஆவது தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீராம். அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
ரேகா என்ற இளம்பெண் கிண்டியில் உள்ள ஒரு கால் சென்டரிலும், நெசப்பாக்கத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளராகவும் வேலை பார்த்து வந்தார்.
இருவரும் காதலித்தனர். இரு வீட்டாரின் சம்மதத்தோடு இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு முன்பு கால் சென்டரில் வேலை செய்தபோது, ரேகா உள்ளிட்ட ஊழியர்களைக் காரில் ஏற்றிச் செல்லும் பணியை மாதவரம் சீத்தாபதி நகரைச் சேர்ந்த டிரைவர் சாம்சன் செய்து வந்தார்.
அவர், அழகின் திரு உருவமான ரேகாவை ஒருதலை ராகமாகக் காதலித்து வந்தார். தனது காதலை ரேகாவிடம் பலமுறை தெரிவித்தார். ஆனால், தான் வேறு ஒருவரைக் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்ப தாகவும் கூறி, ரேகா மறுத்து உள்ளார்.
இருப்பினும் சாம்சன் ரேகாவுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். ரேகாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சாம்சனை வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.
இதற்கு இடையில் ரேகா-ஸ்ரீராம் திருமணம் நடந்தேறியது. அந்த ஆத்திரத்தில், தனக்குக் கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைத்து, வேலைக்குச் சென்ற ரேகாவைக் கடத்திச் சென்று கொடூரமாகக் கொலை செய்து, கை கால்களைத் துண்டு துண்டாக வெட்டி, மூட்டையாகக் கட்டி போரூர் ஏரியில் வீசிவிட்டுச் சென்று விட்டான் கொடியவன் சாம்சன்.
நாம் எங்கே போகிறோம்? நாடு எங்கே போகிறது?
இத்தகைய குரூரமான கொலைவெறிக்கு, மதுவும் அண்மைக்காலத் திரைப்படக் காட்சிகளும்தான் காரணம் என்று உறுதியாகச் சொல்லலாம்.
நான் திரைப்படங்களின் பரம இரசிகன்.
‘300 ஸ்பார்ட்டா வீரர்களின் போர்க்களக் காட்சி; மாவீரன் உமர் முக்தாரின் தீரமிக்க யுத்த களங்கள்; ‘பென்ஹர்’ ரதப் போட்டி; ‘செங்கிஸ்கான்’ திரைப்படம்; போலந்து நாட்டின் பழங்குடி மக்களின் வீரப் போரைச் சித்தரிக்கும் ‘தாராஸ் புல்பா’; அண்மையில் நான் பார்த்த Twelve years ...A slave’ என்ற அமெரிக்க நீக்ரோக்கள் அனுபவித்த சித்திர வதைகளைச் சித்தரிக்கும் படம்;
இப்படி எத்தனை எத்தனையோ அமர காவியங்கள்! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை. வீர உணர்ச்சியை ஊட்டுபவை.
1964 களுக்குப் பின்னர் இந்தித் திரைப்படங்களைப் பார்ப்பதை நான் தவிர்த்துக் கொண்டாலும் அதற்கு முன் நான் பார்த்த ‘மொகல்-இ-ஆஜம்’ எனும் அக்பர், ‘எந்த நாட்டில் கங்கை பாய்கிறதோ?’ என்ற ராஜ்கபூரின் படம், ‘பூர்வஜென்ம வாழ்வைப் படம் பிடித்த திலீப் குமாரின் மதுமதி, இவை எல்லாம் சிந்தனைக்குக் கிளர்ச்சி தரும் படங்கள்.
நான் பார்த்த தமிழ்ப் படங்களில் ஜெமினியின் ‘சந்திரலேகா’ எம்.கே.இராதாவின் ‘அபூர்வ சகோதரர்கள்’ நடிகர் திலகம் சிவாஜியின் ‘பராசக்தி’, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், பாசமலர், பாவமன்னிப்பு, பாலும் பழமும், பாகப்பிரிவினை, ஞானஒளி, ஆலயமணி, பாவை விளக்கு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சாரதா, தெய்வத்தின் தெவம், கைகொடுத்த தெய்வம், மல்லியம் ராஜகோபாலின் சவாலே சமாளி, கே.பாலச் சந்தரின் அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, நீர்க்குமிழி, பாரதி ராஜாவின் காதல் ஓவியம், புதியவார்ப்புக்கள், 16 வயதினிலே, முதல் மரியாதை, புகழேந்தி தங்கராசுவின் உச்சிதனை முகர்ந்தால், தங்கர் பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு, பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை, மூடுபனி, சேரனின் பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி,
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
முன்பெல்லாம் திரைப் படங்களைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது கூட்டுக் குடும்ப வாழ்க்கை, சுயநலமற்ற தியாகம், பிறருக்கு உதவும் மனிதநேயம், நேர்மை தவறாமை, இப்படியெல்லாம் படிப்பினை களை மனதில் கொள்வோம்.
அன்றைய திரைப்படங்களின் சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்.தான். ஆயினும் இரத்தம் கொட்டுகின்ற கொலை வெறிக் காட்சிகள் இருக்காது.
ஆனால் இன்றைய திரைப் படங்களில் ‘கொடூரமான கொலை’, ‘கோரமான கற்பழிப்பு’ வக்கிர உணர்வைத் தூண்டும் பாலியல் காட்சிகளை அப்படியே காட்டுகிறார்கள்.
அப்படி ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அதேபோலக் கொலை செய்தேன் என்று கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்தான் ஒரு கொலை காரன்.
கதை வசனங்களில் இரட்டை அர்த்தம் தொனிப்பது பண் பாட்டுச் சிதைவுக்கு அடையாளம். பாடல்களிலும் இரட்டை அர்த்தம்; நகைச்சுவை என்ற பெயரால் அருவருப்பான காட்சிகள்.
ஒரு தீக்குச்சியைக் கிழித்து, அடுப்பு எரித்து உணவு சமைக்கலாம்; அகல்விளக்கை ஏற்றிடலாம்.
அதே தீக்குச்சியைக் கொண்டு ஒரு ஊரையே கொளுத்தி எரித்தும் விடலாம்.
இப்போது கலைத்துறை செயல்படுவது, நான் கூறிய இரண்டாவது நிலையில்தான்.
இன்னும் நிறைய இருக்கின்றது. அடுத்த வாரத்தில் தருகிறேன்.
எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்.
பாசமுடன்
வைகோ
(சங்கொலி, 16.5.2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக