aathi tamil <aathi1956@gmail.com> மார். 8
பெறுநர்: எனக்கு
முகப்பு தமிழ்நாடு
கர்ப்பிணி மரணம்: காமராஜ் மீது கொலை வழக்கு; கைதானவர்களை விடுவிக்க காவல்துறை ஒப்புதல்
By DIN | Published on : 08th March 2018 01:30 PM | அ+அ அ- |
திருவெறும்பூர்: திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் கர்ப்பிணி உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
திருவெறும்பூரில் வாகன சோதனையின் போது போக்குவரத்துக் காவலர் எட்டி உதைத்ததால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உஷாவின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவத்துக்குக் காரணமான போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியுள்ள உஷாவின் உறவினர்கள், கொலை வழக்குப் பதிவு செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் என்று கூறினர்.
மேலும், உஷாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய காரணத்துக்காக கைது செய்யப்பட்ட பொதுமக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும் காவல்துறை ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு போராட்டத்தைக் கைவிட்டு உடலைப் பெற்றுக் கொள்வதாக உஷாவின் உறவினர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே உஷாவின் கணவர் ராஜாவை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சம்பவம் குறித்து விசாரணை நடத்துகிறார்.
சம்பவத்தின் பின்னணி: போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் திருவெறும்பூரில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 3 மாத கர்ப்பிணி உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போக்குவரத்துக் காவலரின் மோசமான நடவடிக்கையால் கர்ப்பிணி உயிரிழந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தை தொடங்கினர்.
இரவு 7.30 மணியளவில் தொடங்கிய போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. ஒரு காவலர் செய்த தவறை தட்டிக் கேட்ட பொதுமக்கள் மீது தடியடி நடத்துவதா? என்று போராட்டத்தில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்கள் ரத்தம் சொட்ட சொட்டக் கதறினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
போக்குவரத்து காவலர் தாக்கியதில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
-----------------
கர்ப்பிணி மரணம்: எட்டி உதைத்த காவல்துறை ஆய்வாளரை கைது செய்ய வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
Published on 08/03/2018 (08:18) | Edited on 08/03/2018 (08:19) வே.ராஜவேல்
திருச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை காவல்துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் மரணம் அடைந்தார். இதற்கு நியாயம் கேட்டு மறியல் செய்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீசார் தடியடி நடித்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது,
திருச்சியில் இன்று இரவு சுமார் 07.30 மணியளவில் தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில், துவாக்குடிக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை பின்தொடர்ந்து சென்று காவல்துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததில் உஷா என்ற கர்ப்பிணி பெண் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார், அவரது கணவர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பதற்றமடைந்து சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளரை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். அமைதியான முறையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிகின்றன. காவல்துறையினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
கர்ப்பிணி பெண் உஷா மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, உடனடியாக அவரை கைது செய்ய வேண்டுமெனவும், அமைதியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கைது செய்யப்பட்ட பொதுமக்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு கூறியுள்ளார். |
| | | |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக