சனி, 4 ஆகஸ்ட், 2018

காவிரி நீர்வரத்து கடந்த பத்தாண்டு மிகமோசம் 5 கோடி மக்கள் குடிநீர்




aathi1956 <aathi1956@gmail.com>

மார். 31





பெறுநர்: எனக்கு




Posted Date : 14:11 (29/03/2018)
Last updated : 14:11 (29/03/2018)



தமிழக மக்களுக்கு! காவிரிக் கரையோரம் வசிப்பவனின் மனம் திறந்த மடல்...! #WeWantCMB

நமது நிருபர்




தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடியில், புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லையை ஒட்டியிருக்கிறது எங்கள் ஊர். கல்லணையிலிருந்து கிளம்பும் பெருங்கால்வாய் கிளைபிரிந்து ஒரு சிற்றோடையாக எங்கள் கிராமத்தைக் கடந்து ஓடும். சிற்றோடையாக இருந்தாலும் அதில் நீர் வருங்காலம்தான் எங்களுக்கு வசந்தகாலம். நாவல்மரங்கள் சாலையெல்லாம் கனிகளைத் தூவிக்கொண்டிருக்கும். ஊரைச்சுற்றியிருக்கும் காஞ்சனாங்குண்டு, செங்குண்டு குளங்களுக்கெல்லாம் முறைவைத்து மடைதிறப்பார்கள். குளங்கள் சிறிது சிறிதாக நிறைந்து தளும்புவதே கண்கொள்ளாக்காட்சி. வயற்காடுகளில் உழவுப்பணி துரிதமாகும். ஊத்துப்பாலத்தில் சாக்குப்பைகளைக் கட்டி, துள்ளிவிழும் மீன்களைப் பிடிக்க ஒரு கூட்டம் அலையும். ஊரில், மனதுக்கு இதமான ஓர் ஈர வாசனை படர்ந்திருக்கும். குறிப்பாக, இரவுநேரத்தில் எல்லா வீடுகளிலும் அடுப்பெரியும்.



கடந்த 10 ஆண்டுகளில் அந்த ஈரவாசனை தொலைந்து போனது எங்கள் கிராமத்தில். ஆறு மணிக்கெல்லாம் ஊர் அடங்கி விடுகிறது. கொண்டாட, குதூகலிக்க, அரட்டையடிக்க, விவாதிக்க, ஆலோசிக்க டாஸ்மாக்கைத் தவிர வேறு ஏதுமில்லை.

Advertisement




ஊரில் ஏதேனும் இறப்பு நடந்துவிட்டால், ஆண்கள் யாரும் சட்டை அணிய மாட்டார்கள். வேளாண் வேலைகள் எதுவும் நடக்காது. உறவைப் பறிகொடுத்தவர் சோகத்தோடு அமர்ந்திருக்க, யாராரோ பந்தல் போடுவார்கள். ஊர்த்தொழிலாளிகளுக்கு, கொட்டுக்காரர்களுக்கு ஆள்போகும். சுடுகாட்டில் தகனத்திற்கான ஏற்பாடுகள் தானாக நடக்கும்.

எவரேனும் ஒருவர் கம்பு வெட்டுவார். எவரோ ஒருவர் தேர் கட்டுவார். வண்ணக்காகிதங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் இறந்தவரின் உடல் கிடத்தப்படும். இறுதிச்சடங்கு செய்யும் உரிமைக்காரர் தீச்சட்டியோடு முன்நடக்க, வலுவான நான்கைந்து இளைஞர்கள் அத்தேரைத் தோளில் சுமந்து பின் நடப்பார்கள். குவிந்துகிடக்கும் மாலைகளை சிறுவர்கள் பிய்த்து சாலையில் எறிந்தபடி வருவார்கள் சிறுவர்கள். வேட்டு, கொட்டோடு அத்தனை ஆண்களும் இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்று அப்பால் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்து திரும்புவார்கள். பெண்கள் எல்லாம் சோகத்தோடு தங்கள் வீடுகளில் நின்று அந்த இறுதி ஊர்வலத்தை வேடிக்கை பார்ப்பார்கள். இறந்த மனிதரின் அருமை பெருமைகளை அலசுவார்கள்.

அண்மையில் ஓர் உறவுக்காரரின் இறப்புக்குச் சென்றிருந்தேன். நைந்து பெயர்ந்த ஒரு ஆம்புலன்ஸ் வந்து நிற்கிறது. அதற்குள், இறந்து போனவரின் உடல் ஒற்றை மாலையோடு கிடத்தப்படுகிறது. முன்னிருக்கையில் இறுதிச்சடங்கு செய்யவுள்ள உரிமைக்காரர் அமர, ஆம்புலன்ஸ் கிளம்புகிறது. பின்னால் நான்கைந்து பேர் பைக்கில் தொடர்கிறார்கள். பத்திருபது பேர் மயானத்தில் நின்று காரியத்தை முடித்துவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். அறுபதாண்டு காலம் அந்த மண்ணில் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதனின் இறுதிச்சடங்கு, சிறு சத்தமில்லாமல், வெளியில் தெரியாமல் முடிந்துவிட்டது.

Advertisement






இறுதிச்சடங்கு தொடங்கி குதிரையெடுப்புத் திருவிழா வரை எல்லாமே களையிழந்து விட்டது. காரணம், கிராமத்தில் பிணம் சுமக்கும் திறனுள்ள இளைஞர்கள் இல்லை. பிழைப்பு நாடி சென்னைக்கும் திருப்பூருக்கும் ஈரோட்டுக்கும் போய்விட்டார்கள். ``இந்த நாசமத்த விவசாயம் நம்மோடு போகட்டும்" என்று சாபம்விட்டு, இருந்த நிலத்தை விற்று தங்கள் பிள்ளைகளைத் துபாய்க்கும் மஸ்கட்டுக்கும் அனுப்பிவிட்டார்கள் சிலர். யாருக்கெல்லாம் நகரத்துக் காற்று ஒவ்வாமையோ அவர்கள் மட்டும்தான் இன்னும் கிராமத்தில் ஜீவிக்கிறார்கள்.

திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களின் ஒரு பகுதியையும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களையும் உள்ளடக்கிய காவிரி டெல்டாவில் 4 லட்சம் விவசாயிகள், 16 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வசிக்கிறார்கள். வேளாண்மையை விட்டால் வேறு தொழில் தெரியாது இவர்களுக்கு.

ஜூன் மத்தியில் மேட்டூர் அணை திறக்கப்படும். ஆகஸ்ட் மத்தியில் குறுவை அறுவடை முடியும். ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில், சம்பாவுக்கான ஆயத்தங்கள் தொடங்கும். பொங்கலுக்கு முன்பு அறுவடை தொடங்கிவிடும். இடைப்பட்ட நேரத்தில் கொஞ்சம் பேர் தாளடி பருவத்தில் மூன்றாம் போகம் பயிர் செய்வார்கள். இடையிடையே கிடைத்த இடைவெளியில் கோடைப்பயிர்களாக உளுந்து, கடலை போன்ற தானியங்கள் பயிரிடப்படும். ஆக, வேலைக்கோ, பணத்துக்கோ, உழைப்புக்கோ எக்காலமும் குறையிருக்காது. தீபாவளியையொட்டி குறுவை அறுவடை முடிவதால் பண்டிகை களைகட்டும். பொங்கலுக்குச் சம்பா அறுவடை கைக்கு வந்து விடும். அந்தக் கொண்டாட்டத்துக்கும் குறைவிருக்காது. கிராமங்கள் வண்ணமயமாக இருந்தன.

கடந்த 10 ஆண்டுகளில் காவிரிப் படுகையில் குறுவையும் நிறைவாக நடக்கவில்லை. சம்பாவும் நடக்கவில்லை. காரணம், கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறைகூட மேட்டூர் அணை முறையான தேதிகளில் திறக்கப்படவில்லை. அதனால் கடந்த 5 ஆண்டுகளில் வேளாண் மக்களுக்குத் தீபாவளியும் இல்லை. பொங்கலும் இல்லை. இதைப்பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை.

காவிரிப் பிரச்னை என்பது, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் பாசனப் பிரச்னை என்ற அளவில்தான் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் விஷயம் பதிந்துகிடக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆள்கிற ஆட்சியாளர்களும் அப்படித்தான் கருதியிருக்கிறார்கள். அதனால்தான், அப்பட்டமாக காவிரி விவகாரத்தில் துரோகம் இழைக்கப்படுகிறபோதெல்லாம் ஒட்டுமொத்தமாக தமிழகம் வீதிக்கு வரவில்லை.



காவிரி நீர் என்பது நமக்குக் கர்நாடகம் போடுகிற பிச்சை அல்ல. அது நமது உரிமை. ஒரு நதி உருவாகும் மாநிலத்துக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதைவிட அதிக உரிமை அதன் வடிகால் பகுதிக்கு இருக்கிறது. இது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி. ஆனால், கர்நாடகாவும் டெல்லியும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 1974-ல் 378 டிஎம்சியாக இருந்த நம் காவிரி உரிமை, 205 டிஎம்சியாக மாறி, 192 டிஎம்சியாகக் குறைந்து, தற்போது 177.25 டிஎம்சியாக தணிந்துவிட்டது. ஆனால், அதையும் கூட தர மறுக்கிறது கர்நாடகம். காவிரி பங்கீட்டை கண்காணிக்க உச்ச நீதிமன்றம் உருவாக்கச்சொன்ன காவிரி மேலாண்மை வாரியத்தை உருவாக்க மறுக்கிறது மத்திய அரசு. கர்நாடக ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, பல்வேறு காரணங்களைச் சொல்லி நீதிமன்ற உத்தரவை துச்சமென தூக்கி எறிகிறது மத்திய அரசு. தங்கள் நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக காவிரி உரிமையைக் காவுகொடுத்து தலைகவிழ்ந்து நிற்கிறது தமிழக அரசு.

அன்பர்களே... காவிரிப் பிரச்னை என்பது காவிப்படுகை மக்களின் பிரச்னை மட்டுமல்ல... காவிரியில் நமது உரிமை பறிபோனால் பாதிக்கப்படப்போவது தஞ்சையிலும் நாகையிலும் கடலூரிலும் திருவாரூரிலும் திருச்சியிலும் வாழும் வெறும் 2 கோடி வேளாண் மக்கள் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த தமிழகமும் தாகத்தில் தவித்துப்போகும். ராமநாதபுரத்திலிருந்து சென்னை வரை 5 கோடி பேருக்குக் குடிக்க தண்ணீர் கிடைக்காது. இன்று தமிழகத்தின் 80 சதவிகித மாவட்டங்களுக்குக் குடிநீர் தருவது காவிரிதான். காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் தற்போது உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ள 177.25 டிஎம்சி நீரேனும் நமக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மேலாண்மை வாரியம் அமையாவிட்டால், வெறும் வடிகால்வாயாக மட்டுமே தமிழகம் இருக்கும். கர்நாடகம் மூழ்கும் நிலை வந்தால் தானாக வழிந்து வரும் நீர் மட்டுமே தமிழகத்துக்குக் கிடைக்கும். சட்டபூர்வமாக நாம் கைவிடப்பட்டுவிடுவோம்.

உலகின் ஆகச்சிறந்த நதிநீர் படுகைகளில் காவிரிப்படுகை முதன்மையானது. மிக வளமான மண். முற்காலச் சோழன் முதல், பிற்கால சாளுக்கிய சோழர்கள் வரை ஒவ்வோர் ஆட்சியாளனும் பார்த்துப் பார்த்து வடித்தெடுத்த நிலப்பரப்பு அது. பத்தடி, இருபதடியில் எல்லாம் தண்ணீர் கொப்பளிக்கும். மாடுகளின் கால்களில் எப்போதும் மஞ்சள் பூத்திருக்கும். காரணம், தினமோர் உழவு. களையெடுக்க, கதிர் அறுக்க, நாற்றுப்பறிக்க என மக்களுக்கு எக்காலமும் வேலை இருக்கும்.

இப்போது, 100 அடி, 200 அடி தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கவில்லை. தமிழகத்தில் கேன் வாட்டர் அதிகம் விற்பனையாகும் பகுதிகளில் காவிரிப்படுகையும் சேர்ந்திருக்கிறது. தமிழகத்திற்கே தண்ணீர் கொடுக்கும் காவிரிப்படுகை, குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறது. மோட்டார் வைத்து விவசாயம் செய்தவர்கள் கூட இப்போது நிலத்தைக் கைவிட்டுவிடுவார்கள். விவசாயத்தை விட்டுத் தள்ளுங்கள்... குடிக்கத் தண்ணீர் வேண்டாமா? கடலோரத்தில் 20 கிலோ மீட்டருக்கு இந்தப் பக்கம் உள்ள நிலத்தடி நீரில் கடல் நீர் புகுந்து விட்டது. உப்பு... உப்பு...



ஊருக்கே சோறுபோட்ட வேளாண் குடிப் பெண்கள் கட்டுமான வேலைகளுக்குச் சித்தாள்களாக போய்க்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வாய் குடிநீரையும் குடிக்கும்போதும் ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட வேண்டாமா? வேதனைப்பட வேண்டாமா? டெல்டாக்காரனை விடுங்கள்... நாளைக்கு வீராணம் வற்றிப்போனால் சென்னைக்குக் குடிநீர் கிடைக்குமா? ராமநாதபுரத்து மக்கள் கடல்நீரைக் குடிக்க முடியுமா? தர்மபுரி மக்களுக்குத் தாகமே எடுக்காதா?

எல்லாப் பூர்வகுடிகளுக்கும் நடப்பதுதான் நண்பர்களே காவிப்படுகையில் வாழும் வேளாண் குடிகளுக்கும் நிகழ்த்தப்படுகிறது. நிலத்துக்குக் கீழேயிருக்கிற எரிவாயுவையும், நிலக்கரியையும் எண்ணெயையும் குறிவைத்து விட்டார்கள். மக்களை அப்புறப்படுத்தினாலே ஒழிய அவற்றைச் சுரண்ட முடியாது. சட்டங்களைப் போட்டு எப்படிப் பழங்குடி மக்களை வனங்களை விட்டு விரட்டி கீழிறக்க முயற்சி செய்தார்களோ, அப்படித்தான் இப்போது காவிரிப்படுகை வாழ் மக்களை வேளாண்மையை விட்டு விரட்ட முயற்சி செய்கிறார்கள். அதற்கு சட்டமெல்லாம் தேவையில்லை. காவிரி போதும். அதுதான் வேளாண்மைக்கு ஜீவாதாரம். அதை மறித்து விட்டால் போதும். தானாகவே நிலம் வறண்டு போகும். மக்கள் தொழில் நாடி வேறு பகுதிகளுக்கு நகர்ந்து விடுவார்கள். அல்லது தற்கொலை செய்து செத்துப்போவார்கள். நிலத்தை அகழ்ந்து, அதன் தொப்புள்கொடி அறுத்து தேவையானதை உறிஞ்சிக்கொள்ளலாம்.

இப்போது 33 கிணறுகளில் 35 லட்சம் கனமீட்டர் எரிவாயுவை உறிஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் கிணறு தோண்டலாம். காவிரிப்படுகையில் ரத்தத்தை உறிஞ்சி அடுப்பெரிக்கலாம். தொழிற்சாலைகளில் இரும்பு தயாரிக்கலாம். நிலக்கரி எடுத்து பன்னாட்டு நிறுவனங்களுக்கெல்லாம் தடையற்ற மின்சாரம் வழங்கலாம்.

காவிரிப் பிரச்னையை கர்நாடகம் இனப்பிரச்னையாக, தங்கள் மாநிலத்தின் உரிமைப்பிரச்னையாக அணுகுகிறது. இப்போதும் அணுகிக்கொண்டிருக்கிறது. அதுதான் அவர்களது பலம். அதுதான் டெல்லியை அச்சுறுத்துகிறது. நீதிகளைப் பாதிக்கிறது. தமிழகம் அதை சிறு நிலப்பரப்பின் பாசனப்பிரச்னையாகவே அணுகியது. இப்போதும் அணுகுகிறது. காவிரிப் பிரச்னையின் அத்தனை செயல்பாடுகளும் ரகசியமாகவே வைத்திருந்தார்கள் நம் ஆட்சியாளர்கள். மக்கள் அதன் உண்மைத்தன்மையை, வீரியத்தை உணரவேயில்லை. ஒவ்வோர் ஆட்சி மாறும்போதும் தங்கள் விருப்பத்துக்கு வழக்கறிஞர்களை மாற்றினார்கள். தேசியக் கட்சிகளும் சரி, மாநிலக்கட்சிகளும் சரி, இதை ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்னையாக அணுகாமல் வெறும் ஓட்டு லாப நட்டங்களை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்பட்டதால்தான் இப்போது கையறு நிலையில் நிற்கிறோம்.



காவிரிப்படுகையிலிருந்து சென்னை போன்ற பிற நகரங்களுக்கு வந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் கூட தங்கள் பூர்வீக நிலப்பரப்பில் நிகழ்ந்துகொண்டிருக்கும் துயரம் புரியவில்லை என்பதுதான் சோகம். அது குறித்துக் கவலைப்படக்கூட நேரமில்லை. காவிரிப்படுகை சுரக்கும் குடிநீரை அருந்துகிற 5 கோடி மக்களுக்கும் இதன் வீரியம் புரியவில்லை. அப்பட்டமாக, மத்திய அரசும் கர்நாடக அரசும் காவிரி உரிமையைப் பறிக்கும்போதும், படிப்படியாக காவிரி மீதான நம் பிடிப்பு நழுவும்போதும், போனால் போகிறதென்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைக் கூட நிறைவேற்றாமல் புறக்கணிக்கும்போதும் நமக்கென்ன, அது டெல்டா மாவட்டங்களின் பிரச்னை என்று ஒதுங்கியிருப்போமானால்... நிச்சயம் தாகம் நம்மைத் தண்டிக்கும். இதேபோலத்தான், தேனி மாவட்டத்தின் நியூட்ரினோ... தூத்துக்குடியின் ஸ்டெர்லைட், கிழக்கு மாவட்டங்களின் மீத்தேன் அத்தனை பிரச்னைகளும். அவற்றையும் அந்தந்தப் பகுதிகளின் பிரச்னைகளே என நாம் ஒதுங்கி நின்றால்... ஒட்டுமொத்த தமிழகமும் ஒடுங்கிப்போகும் ஒரு நாளில். உடனடியாக களத்திற்கு வரவேண்டிய காலகட்டம் இது.

விவசாயச் சங்கத்தலைவர் ஆறுபாதி கல்யாணம் கோரிக்கை விடுத்திருப்பதைப் போல, ஏதேனும் ஒரு நாள் குறித்து, தமிழகத்தில் இருக்கிற 32 மாவட்ட மக்களும், தங்கள் கிராமத்தில் குறைந்தபட்சம் 2 மணி நேரம் மனிதச்சங்கிலி நடத்துங்கள். குமரி தொடங்கி, திருவள்ளூர் மாவட்டம் வரை, கட்சி மறந்து, சாதி மறந்து, மதம் மறந்து ஒட்டுமொத்தமாகத் தமிழகம் கைகோத்து நிற்கட்டும். அந்த ஒற்றுமையைக் கண்டு கர்நாடகமும் டெல்லியும் நடுங்கட்டும்.

ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். இது நாம் காவிரிப்படுகை மக்களுக்குச் செய்யும் உதவியல்ல. நாம் குடிக்கிற குடிநீருக்காக தங்கள் வாழ்வாதாரத்தையும் விட்டுத்தந்துவிட்டு நிர்கதியாக நிற்கிற வேளாண் மக்களுக்குச் செய்கிற நன்றிக்கடன். அடுத்தவேளை தாகத்துக்குத் தண்ணீரை உறுதி செய்வதற்கான போராட்டம்.

உணர்வோமா... உணர்வோமா?




காவேரி காவிரி நதிநீர் கர்நாடகா கன்னடர் விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக