திங்கள், 28 செப்டம்பர், 2020

இலக்கியம் யாழ் பறை ஒப்பீடு காதல் உடன்கட்டை

 

aathi1956 aathi1956@gmail.com

புத., 14 நவ., 2018, பிற்பகல் 1:11
பெறுநர்: எனக்கு

Rajokkiyam Thangaraj
நூல்:
நான்மணிக்கடிகை
இயற்றியவர்:
விளம்பி நாகனார்
உரையாசிரியர்:
தி. சு. பாலசுந்தரம்
செய்யுள்:
பறை நன்று, பண் அமையா யாழின்; நிறை நின்ற
பெண் நன்று, பீடு இலா மாந்தரின்; பண் அழிந்து
ஆர்தலின் நன்று, பசித்தல்; பசைந்தாரின்
தீர்தலின் தீப் புகுதல் நன்று.
பொருள்:
பண் அமையா - பண்ணிசை யமையாத, யாழின் - ‘யாழ்' என்னும் இன்னிசைக் கருவியினும், பறை நன்று - ‘பறை' யென்னும் பேரோசைக் கருவி நன்றாம்; பீடு இலா - பெருந்தன்மை அமையாத, மாந்தரின் - ஆண் மக்களினும், நிறை நின்ற - கற்பில் நின்று அடக்கமுடைய, பெண் நன்று - பெண் மக்கள் நல்லர்; பண் அழிந்து-பதங்கெட்டு, ஆர்தலின் - உண்டலினும், பசித்தல் நன்று - பசியுடன் வருந்துதல் நன்று; பசைந்தாரின் - தம்மை விரும்பினாரினின்றும், தீர்தலின் - நீங்கி உயிர் வாழ்தலை விட; தீப்புகுதல் நன்று - எரியில் வீழ்ந்து உயிர் விடுதல் நல்லது.
விளக்கம்:
எனவே, ‘யாழ் இசையமைதல் வேண்டும்' என்பது முதலாக இந்நான்கிற்கும் உடம்பாட்டிற் பொருளுரைத்துக் கொள்க. பண் இசைவான ஒலியமைப்பு. நிறை : தொழிற்பெயர். நினைவையுஞ் சொல்லையுஞ் செயலையும் ஒருவழி நிறுத்தல் என்பது பொருள். நிறை நின்ற : ஏழன் தொகை. பெண் நன்று என்புழி, நன்றென்பதை உயர்திணையாகக் கொள்க. நன்று நான்குங் குறிப்பு வினைமுற்று. பீடு - ஆள் வினைத்திறத்தின் மேலும், மாந்தர் - ஆடவர்மேலுங் குறிப்பால் நின்றன. ஆள்வினைத்திறத்திற் பெண்மக்கள் ஆடவரினும் ஆற்றல் குறைந்தவராகலின், அத்திறமமையா ஆடவரினும் பெண்டிர் நல்லரென்றார். பண் அழிவு - இங்குப் பண்டங்களின் பதனழிவை யுணர்த்திற்று. ‘அழிந்த ஆர்தலின்' என்றுரைப்பினுமாம். பசைதல் - நெஞ்சு நெகிழ்ந்து அன்பு கொள்ளல்; ‘பசைதல் பரியாதா மேல்' (துறவு. 10) என்னும் நாலடியாரிலும் இஃது இப் பொருட்டாயது காண்க. ‘இன்' என்னும் ஐந்தனுருபுகள் எல்லைப் பொருளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக