திங்கள், 28 செப்டம்பர், 2020
அழிந்த பழங்குடி இனம் பட்டியல் சென்டினல் கடிதம்
aathi1956
வியா., 29 நவ., 2018, பிற்பகல் 1:41
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
விகடனில் வெளிவந்த இந்தக் 'கடித'த்தை நம்மில் எத்தனைப் பேர் படித்திருப்போமென்று தெரியவில்லை. இங்காவது படிப்போம் நண்பர்களே, முகத்தில் வலுவாய் அறையும் உண்மைகளை!
"உங்களிடமிருந்து ஏன் நாங்கள் ஒதுங்கியே இருக்கிறோம்?" செண்டினல் சார்பாக ஒரு கடிதம்!
நிலம் என்பது வாழ்க்கையை ஓட்டுவதற்குத் தேவைப்படும் ஓர் இடம் மட்டுமல்ல. இது ஓர் இனத்தின் வரலாறு. இங்குதான் எங்களின் மூதாதையர்கள் கலாசாரத்தை, அவர்கள் பின்பற்றிய பண்பாட்டை வளர்த்தெடுத்தனர்.
அன்பார்ந்த வெளியுலகுக்கு, இன்னமும் 'நாகரிகமடையாத' செண்டினல் மக்கள் சார்பாக எழுதுவது,
நீங்கள் பல வருடங்களாக எங்களைத் தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்.
எதற்கு? செண்டினல் தீவுக்கு நீங்கள் வரத் துடிப்பது ஏன்?
எங்களுக்கு உதவப்போவதாகச் சொல்கிறீர்கள். எங்களிடம் பல ஆயிரம் வருடங்களாகப் புதைந்திருக்கும் மனிதகுல வரலாற்றைப் புரிந்துகொள்ள முயல்வதாகச் சொல்கிறீர்கள்.
என்ன உதவிகளைச் செய்வீர்கள்? மனிதகுல வரலாற்றைப் புரிந்துகொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
இதையெல்லாம் நீங்கள் செய்வது எங்கள் வாழ்வியலைச் சிறப்பிக்கவா? ஆனால், இப்போதே நாங்கள் நன்றாகத்தானே வாழ்கிறோம். எங்கள் சுதந்திரத்துக்கு எப்போதும் இடைஞ்சல் செய்துகொண்டே இருப்பதன் காரணம்தான் என்ன?
இன்று நீங்கள் வாழும் உங்கள் வீடு, உங்களுடைய நிலம் எதுவும் நாளை உங்களுக்குச் சொந்தமில்லை என்று கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் உண்டு உறங்கிக் கொண்டிருந்த இடம், ஆனந்தமாக உலவித்திரிந்து இயற்கையின் எண்ணற்ற பொக்கிஷங்களைக் கண்டு கற்றுணர்ந்த அமைதியான வாழ்வியலைச் சுமந்திருந்த இடம் நாளை சாலையாகவோ ஒரு தொழிற்சாலையாகவோ மாறினால்?
இப்படியெல்லாம் நடக்கவா போகிறது!" என்று நீங்கள் சொல்வீர்களேயானால் எங்களைப் போன்ற பழங்குடிகள் உங்களோடு தொடர்பு வைத்துக் கொண்டபோது நடந்தவற்றைப் பாருங்கள். அப்படியும் நடக்குமென்பதும் அதைவிட மோசமாகக்கூட நடக்குமென்பதும் புரியும். காலம் காலமாகத் தலைமுறைகள் தழைத்தோங்கிய நிலப்பகுதியைப் பிடுங்கும்போது அவர்களது அடையாளமும் அந்த நிலத்தில் நீங்கள் கட்டும் கட்டடத்துக்கான அஸ்திவாரத்தோடு புதைந்துவிடுகிறது.
நிலம் என்பது வாழ்க்கையை ஓட்டுவதற்குத் தேவைப்படும் ஓர் இடம் மட்டுமல்ல. இது ஓர் இனத்தின் வரலாறு. இங்குதான் எங்களின் மூதாதையர்கள் கலாசாரத்தை, அவர்கள் பின்பற்றிய பண்பாட்டை வளர்த்தெடுத்தனர். அந்தக் கலாசாரத்தை, அவர்களின் நடைமுறைகளைக் காலம் காலமாகக் காப்பாற்றி வருவது நுற்றாண்டுகள் பழமைகொண்ட இந்த வாழிடமும் அதைச் சார்ந்துள்ள எங்கள் வாழ்வியலும் மட்டுமே. அதை நாங்கள் மாற்றிக்கொண்டால் இடத்துக்குத் தக்கவாறாக எங்கள் தொழிலையும் மாற்றவேண்டும். அல்லது உங்கள் பேச்சைக் கேட்டுத் தொழிலை மாற்றினால் தொழிலுக்குத் தகுந்தவாறாக இடத்தை மாற்றவேண்டும். இரண்டில் எதைச் செய்தாலும் எங்கள் இனத்தின் தனிச்சிறப்புகளை இழந்துவிடுவோம். அந்த ஆபத்தை உணர்ந்த நாங்கள் எதையும் மாற்ற விரும்பவில்லை.
நம் மூதாதையர்களின் வரலாற்றைச் சுமந்து வாழ்ந்துகொண்டிருக்கும் வாழும் பதிவுகளான எங்களில் (பழங்குடிகளில்) தற்போது உலகளவில் 37 கோடி பேர் மேற்குறிப்பிட்ட இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் எங்களுக்கு மட்டும் உங்களால் என்ன நன்மைகளைச் செய்துவிட முடியும்?
எங்களோடு இந்தத் தீவில் பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்துவந்த சில இனங்களுக்கு நீங்கள் செய்த 'நன்மைகளை' உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதன்மூலம் எங்கள் இந்த அணுகுமுறைகள் ஏனென்று புரிந்துகொள்ளக் கொஞ்சம் முயலுங்கள்.
அகா-காரி, அகா-கோரா, அகா-போ, அகா-ஜெரு போன்றவர்களைக் கூட்டாகச் சேர்த்து அந்தமானியப் பழங்குடியினம் என்கிறீர்கள். ஆனால் எங்களுக்கு அவர்கள் ஒவ்வொருவரின் தனித்த ஆதி அடையாளங்களும் தெரியும். தெரிந்திருந்து என்ன பிரயோஜனம், அத்தனை பேரையும் சேர்த்து அவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது எவ்வளவு தெரியுமா? அதிகபட்சம் ஐம்பது முதல் அறுபது பேர் மட்டுமே இருப்பார்கள். அதுவும் காரி, ஜெரு மக்கள் மட்டுமே. இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே கோரா இனம் முற்றிலும் அழிந்துவிட்டது. எட்டு வருடங்களுக்குமுன் இறந்த போ இனத்தின் கடைசிப் பெண்மணியோடு அந்த இனமும் அவர்களின் மொழியும் அழிந்துவிட்டன.
முன்பே பல நூற்றாண்டுகளாகப் பல கடற்கொள்ளையர்கள் கடத்தல்காரர்களால் நாங்கள் தாக்குதல்களுக்க
ு உள்ளானோம். அதில் வேற்று மனிதர்கள் மீது ஒருவித பயமும் ஆபத்துணர்வுமே மேலோங்கியிருந்த
து. அதைப் போலவே இருநூறு ஆண்டுகளுக்குமுன் வெள்ளைத் தோலோடு இருந்த சிலர் எங்கள் தீவில் கத்தி, துப்பாக்கிகளோடு கரையிறங்கினார்கள். ஆயுதங்களோடு வருபவர்களைப் பார்த்த எங்களுக்கு முதலில் எழுந்தது தற்காப்பு உணர்வே. அவர்களைத் தாக்கினோம். அதில் எங்களால் அவர்களில் சிலர் கொல்லப்பட்டார்கள். பல்லாண்டு காலமாக வேற்று நிலத்தவர்களால் கொலைகளையும், வன்கொடுமைகளையும் மட்டுமே அனுபவித்த எங்களுக்கு அதுதான் சரியாகத் தோன்றியது. அதற்குப் பழிவாங்க எங்கள் இனத்தில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தார்கள்.
அந்நியர்களிடம் ஆதிக்கவெறியையும் அதன் விளைவாக ரத்தக் கரைகளையும் கடற்கரை முழுக்கப் பரவிய ரத்த வாடையையும் மட்டுமே பரிசாகப் பெற்ற எங்களுக்கு அது பழகிவிட்டது. ஆனால் அவர்கள் கொண்டுவந்த தேங்காய், வாழை, புகையிலை, கஞ்சா போன்றவை அந்தமானியப் பழங்குடிகளை மயக்கிவிட்டன. அவர்கள் அந்நியர்களோடு நட்பு பாராட்டினார்கள். அவர்களை இங்குக் குடியேற அனுமதித்தார்கள். நாங்கள் இங்கேயே பல ஆண்டுகளாக வாழ்பவர்கள். இந்த நிலத்தைத் தாக்குப்பிடிக்கப் போதுமான அளவுக்குத்தான் எங்கள் எதிர்ப்புசக்தி உள்ளது. அவர்கள் கொண்டுவந்த புதிய தொற்றுகளைச் சமாளிக்க முடியவில்லை. அதோடு அவர்களின் ஆதிக்கத்தை ஏற்கமறுத்த பழங்குடிகளைக் கொன்று குவித்தார்கள். எங்களை அடக்கி ஆள நினைத்தார்கள். அந்தமானிய இல்லங்களைத் தோற்றுவித்தார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஆயிரக்கணக்கான காரி, கோரா, போ, ஜெரு மக்கள் அந்த இல்லங்களில் அடைக்கப்பட்டார்கள். அங்குப் பிறந்த எங்கள் குழந்தைகளில் ஒன்றுகூட இரண்டு வயதைத் தாண்டி உயிர் பிழைத்திருக்கவில்லை. அவ்வளவு கொடுமைகள் எங்கள் சகோதர இனங்களுக்கு இழைக்கப்பட்டன. அதற்குப் பிறகும் அந்த ஆதிக்க வெறியர்களால் 'நவநாகரிக' மிருகங்களால் பல குடியேற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. எங்கள் சகோதர இனங்களின் வாழிடங்கள் பலவும் பறிக்கப்பட்டன. ஆயிரங்களில் வாழ்ந்த அவர்களின் எண்ணிக்கை சில நூறுகளாகக் குறைந்து தற்போது சில பத்துகளில் இன்றோ நாளையோ அழிந்துவிடும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நாகரிக மிருகங்கள் இழைத்த அநீதியின் வாழும் அடையாளங்களாக நிற்கும் அவர்களைப் பார்த்த பிறகும் எப்படி நாங்கள் வெளியுலகோடு தொடர்புகொள்வோம்?
இன்னொன்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அந்தமானியப் பழங்குடியினம் என்று உங்களால் பொத்தாம் பொதுவாக அழைக்கப்படும் அந்தக் குழு எத்தனை இனங்களைக் கொண்டது தெரியுமா? எத்தனை வரலாறுகளை எத்தனை மொழிகளை எத்தனை வாழ்வியல்களை எத்தனைக் காடறிவுகளைச் சுமந்திருந்தது தெரியுமா? மேற்குறிப்பிட்ட நான்கு இனங்கள் உட்பட அகா-கெடெ, அகா-கோல், ஒகோ-ஜுவோய், புஸிக்வார், பாலி, பீ என்றவற்றோடு சேர்த்து மொத்தம் பத்து பழங்குடியினங்கள் இருந்தன. இப்போது அவையெல்லாம் எங்கே போயின? இந்த ஆறு இனங்களும் 1920 முதல் 1930-க்குள் எப்படி ஒரேயடியாக அழிந்துபோயின? இருந்ததில் எட்டு பூர்வகுடியினங்கள் அழிந்துவிட்டன. அவர்களோடு அவ்வினங்களின் மூதாதையர்கள் சேர்த்து வைத்திருந்த அறிவுப் பொக்கிஷங்களும் அழிந்துவிட்டதன. இதற்கெல்லாம் யார் காரணம்? இத்தனை அழிவுகளுக்கும் காரணம் உங்களைப் போன்ற நாகரிக மனிதர்கள்தானே? அவர்களின் வழித்தோன்றல்களான நீங்களும் இப்போது உலகளவில் மற்ற பழங்குடிகளுக்கு எவ்வளவு 'நன்மைகளை'ச் செய்துகொண்டு இருக்கிறீர்களென்றும் நாங்கள் அறிவோம். போகுமிடமெல்லாம் இயற்கையின் அழிவுக்கு வித்திடும் உங்கள் 'நன்றிக்குரிய' நாகரிகத்தையா நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
அவர்களைப் போலவே எங்களோடு வாழ்ந்த இன்னோர் இனம், ஓங்கே. இது நடந்து நூறு வருடங்கள் இருக்கும். ஒரு கப்பல் அவர்கள் நிலத்தில் கரையொதுங்கியது. வந்தவர்கள் எங்கள் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தார்க
ள். விழுந்த சருகுகளையும் ஆங்காங்கே மீண்டும் தழைக்கக்கூடிய கிளைகளை வெட்டியெடுத்தும் மட்டுமே பயன்படுத்தியவர்கள் ஓங்கே மக்கள். மரங்களை மொத்தமாகக் கொன்று குவித்த அந்தக் குழுவைப் பார்த்துக் கோபப்படாமல் அழைத்துவைத்துக் கொஞ்சிக் கொண்டிருப்பார்களா? அந்தப் பாவச்செயலில் ஈடுபட்டிருந்த எட்டு பேரையும் தாக்கினார்கள். தற்காப்புத் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் வீரியமடையவே அவர்களும் கொல்லப்பட்டார்கள். அதற்குத் தண்டனை வழங்க வந்த குழு ஓங்கே இனத்தைச் சேர்ந்த எழுபது பேரைக் கொன்றது. எங்கள் நிலத்தில் வந்து எங்களுக்கே தண்டனை வழங்க அவர்கள் யார்? தங்கள் வீட்டைப் பாதுகாத்ததுதான் அவர்கள் செய்த குற்றமா?
அதற்குப் பிறகும் சமாதானம் செய்து அவர்களோடு நட்புக் கரங்களை நீட்டினார்கள் அந்த வேற்று நிலத்தவர்கள். அவர்கள் ஆக்கிரமித்த அந்தமானிய மக்களின் நிலங்களில் அவர்கள் கட்டிய துறைமுகத்திலேயே இவர்களுடனும் வர்த்தகம் மேற்கொண்டார்கள். தன்னைப் போன்றவர்களை அழித்த நிலத்தில்தானே இந்தத் துறைமுகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்பதை மறந்த அவர்களும் அதே கதியைச் சந்தித்தார்கள். சர்க்கரை, புகையிலை என்று பலவற்றைக் காட்டி அவர்களை ஆசைக்கு அடிமையாக்கினார்கள். அதன்மூலம் அவர்களுக்கு அடிமையாக்கினார்கள். இப்படியாக அவர்களை ஏமாற்றிய அந்நியர்கள் நாற்பது வருடங்களுக்குமுன் அவர்களின் ஆதி நிலத்தில் பல நூறு சதுர கிலோமீட்டர்களைப் பிடுங்கி அதில் அரசாங்கக் கட்டடங்களைக் கட்டினார்கள். அதற்குப் பிறகு பல்லாயிரம் ஏக்கர்களைப் பிடுங்கி படகுத்துறை, சுற்றுலா, சாலைகள், கட்டுமானங்கள் என்று பலவற்றைச் செய்தார்கள். நாங்கள் எல்லோருமே வேட்டையாடுவதையும், மீன் பிடிப்பதையும், வனப் பொருள்களைச் சேகரிப்பதையுமே வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். இந்த அநீதிகளைச் செய்தவர்களுக்கும் அது தெரியும். அப்படியென்றால் எங்களோடு நட்புறவு பாராட்டிய, எங்களுக்கு உதவ வேண்டுமென்ற 'தயாள' குணம்கொண்ட அந்த 'நல்லவர்கள்' செய்தவற்றில் எது எங்களுக்குப் பயனளித்தது? அவை எங்களுக்கானதல்ல. உங்களுக்கானது. தற்போது அவர்களின் எண்ணிக்கை வெறும் 101 பேர். இன்று எங்கள் இன்னொரு சகோதர இனமான இதே ஓங்கேவைச் சேர்ந்த கால்வாசிப் பெண்கள் மலடிகளாக்கப் பட்டுள்ளார்கள். எதிர்ப்புச் சக்தி குறைவான இவர்களுக்கு நீங்கள் தந்துள்ளது இதைத்தான். எங்கள் நிலத்தில் எங்களுக்கே இடம் கொடுக்காமல் ஒதுக்கிவிட்டு உங்கள் சுயநலத்துக்குப் பல செயல்களைச் செய்த உங்களையா நாங்கள் நம்பவேண்டும்?
இந்த இரண்டு இனங்களை விடவும் மோசமான கொடுமைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் ஜாரவா மக்கள். முதல்முறையாக நாகரிக மனிதர்கள் அந்தமானுக்கு வந்தபோது மற்ற இனங்களின் எதிர்ப்பில் பாதியைக்கூட இவர்கள் காட்டவில்லை. அதேசமயம், அந்த நாகரிகக் குடியிருப்புகள் எங்கள் நிலத்தில் செய்த மாற்றங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தப் புதிய அந்நியக் குடியிருப்புகளில் இருந்து விலகிப் போய்க்கொண்டே இருந்தார்கள். ஆனாலும், புதிதாகக் குடியேறிய நாகரிக மனிதர்கள் அவர்களை ஒவ்வோர் இடமாகத் துரத்திக் கொண்டேயிருந்தார்கள். தங்கள் வாழிடத்திலிருந்து மேற்கே இடம்பெயர்ந்து சென்றவர்களைத் தெற்கே துரத்தியடித்தார்கள். அதையும் தங்கள் ஆளுகைக்கு உட்படுத்தி ஜாரவா மக்களை வடக்கே துரத்தினார்கள். அங்காவது எங்கள் சகோதரர்களை நிம்மதியாக வாழவிட்டார்களா? இவர்கள் ஏற்கனவே பொருளாசையைத் தூண்டி அடிமையாக்கி வைத்திருந்த எங்கள் அந்தமானியச் சகோதரர்களை வைத்துப் பலவந்தமாக அடிமையாக்குவதும் அப்புறப்படுத்துவதுமாக அட்டூழியங்கள் தொடர்ந்தன. அந்தமானியச் சகோதரர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்கள் போதைகளுக்கு அடிமையாகி இருந்தார்கள். அது பொருள்களின் மீதான போதை. அவ்வளவு விரைவில் அவர்களை விடுவிக்கவில்லை. இப்படியாகத் தொடர்ந்த கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் திருப்பி அடிக்கத் தொடங்கினார்கள். இப்படியாகத் தொடர்ந்த சண்டைகளைக் காரணம் காட்டிச் சுமார் அறுபது வருடங்களுக்குமுன் சில நூறு பேரே இருந்த அந்த இனத்தில் 37 ஜாரவா மக்களைக் கொன்று குவித்ததும் இங்கே குறிப்பிட வேண்டிய கொடுமைகளில் முக்கியமானது.
இவை போதாதென்று சுதந்திரத்துக்குப் பிறகு எங்கள் நிலத்துக்குள் குடியேறிய பலரும் ஜாரவா மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். உங்களைப் போன்றோரால் இப்போது அவர்கள் தங்கள் நிலத்திலேயே ஒதுங்கி வாழ்ந்து கொண்டுள்ளனர். தீவுக்கூட்டம் முழுக்கச் சுற்றித் திரிந்தவர்கள் இப்போது எழுநூறு சதுர கிலோமீட்டர் நிலப்பகுதிக்குள் மட்டுமாகச் சுருங்கிவிட்டனர். நிலத்தோடு அவர்களின் எண்ணிக்கையையும் சுருக்கிவிட்டது நீங்கள் அவர்களுக்கு இழைத்த மிகப்பெரும் அநீதியன்றி வேறென்ன? அவர்களின் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அரசாங்கங்களால் பலவந்தமாகப் பிடுங்கப்பட்டது. அவர்களுக்கென்று நீங்கள் 'கருணையோடு' ஒதுக்கித் தந்த நிலத்தையாவது விட்டு வைத்தீர்களா? அதற்குள்ளும் ஒரு சாலையைப் போட்டீர்கள். எங்கள் மக்களையும் அவர்களின் வாழ்வியலையும் சுற்றுலாப் பயணிகளிடம் அடகு வைத்தீர்கள். அவர்களின் வாழிடத்தைச் சரணாலயங்களைப் போலவும் அவர்களைக் காட்சிப் பொருள்களைப் போலவும் விலங்குகளைப் போலவும் பாவித்து வருமானம் பார்த்தீர்கள். அவர்கள் உங்களுடைய பொழுதுபோக்குப் பண்டமல்ல. பல்லாயிரம் வருட மனித வரலாற்றைச் சுமந்திருக்கும் வாழும் மூதாதையர்கள். அவர்களை வித்தைக் காட்டும் குரங்கைப் போல் நடத்தினீர்கள். எங்களைப் பொறுத்தவரை விலங்குகளை அடிமையாக்குவதே இயற்கைக்கு விரோதமானது. அப்படியிருக்க மனிதர்களையே அடிமையாக்கி ஆடிப்பாட வைத்துச் சந்தோசப்பட்ட உங்களிடமா செண்டினல் மக்களான நாங்கள் நட்புறவாட வேண்டும்?
மேலே குறிப்பிட்ட அனைவருமே ஒருகாலத்தில் இந்தத் தீவு முழுவதும் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தவர்கள். இன்று உங்களைப் போன்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அவர்களுடைய நிலத்திலேயே சில சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் அகதிகளாகக் குறுகி வாழ்கிறார்கள்.
இதற்கெல்லாம் யார் காரணம்? இல்லை, எது காரணம்?
உங்களைப் போன்ற நவநாகரிக மனிதர்களும் அவர்களின் நாகரிகமும் தானே. நாங்களும் எங்கள் நிலத்துக்குள் உங்களை அனுமதித்தால் நாளை எங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்.
எங்குச் சென்றாலும் முதலில் நீங்கள் விதைப்பது என்ன?
மரத்தையா? நம்பிக்கையையா? இரண்டுமே இல்லை, ஆசையை. எங்களோடு வாழ்ந்த மற்றப் பழங்குடிகளிடம் அந்த ஆசைகள் ஏற்படுத்திய ஆபத்தை நாங்கள் பார்த்துக்கொண்ட
ு தானிருக்கிறோம். அக்கறை என்ற பேரில் வந்து அதே ஆசையை எங்களிடமும் விதைப்பீர்கள். இன்று எத்தனை நூறு இனங்கள் தங்கள் வாழ்வியலை அது கொண்டிருந்த அறிவுக் களஞ்சியத்தைத் தொலைத்துவிட்டு உங்களிடம் கையேந்தி நிற்கின்றன என்றும் நாங்கள் அறிவோம். அதேபோல் நாங்களும் நிற்கமாட்டோம். உங்களிடம் இறுதியாக ஒன்றைச் சொல்லிக்கொள்ள வேண்டும். எதையெல்லாம் தந்து எங்களுக்கு உதவ வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவையெல்லாம்தான் மனிதக் குலத்தின் அனைத்து நற்குணங்களையும், மனித இனத் தோற்றத்தின் அறியப் பயனையும் மறக்கடித்து மழுங்கடித்துவிட்டது. இன்று எங்களுக்கு இருக்கும் காடறிவு, ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்குக் குறிபார்த்து ஈட்டியெறியும் உடற்திறன் என்று அறிவு, ஆரோக்கியம் இரண்டையும் அழிக்கும் வல்லமை கொண்டது உங்கள் வரவு. அதை நாங்கள் ஒருநாளும் அனுமதிக்கமாட்டோம். எங்களை நாங்களாகவே வாழ வழிவிடுங்கள். எங்களுக்கு நீங்கள் வேண்டாம். உங்கள் கருணை, கனிவு, உதவி எதுவுமே வேண்டாம்.
எங்களுக்கு அவநம்பிக்கையை மட்டுமே தந்துவிட்ட உங்களோடு, பூமியை ஓயாது வன்கொடுமை செய்துகொண்டிருக்கும் உங்களோடு தொடர்புகொள்ள நாங்கள் விரும்பவில்லை. எங்களைத் தனியாக வாழவிடுங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் தனியாக இல்லை. இங்கு இயற்கை அவளாகவே இருக்கிறாள். அவள் எங்களுக்குத் துணை நிற்கிறாள். அவளோடும் அவள் பெற்றெடுத்த காடு, மலையோடும், நீரோடும், மற்ற உயிர்களோடும் ஆனந்தமாக வாழ்கிறோம். அதைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்றுதான் கேட்கிறோம். இல்லை எச்சரிக்கிறோம். நாங்கள் செண்டினல் மக்கள். நாங்கள் காவலாளிகள். இறுதிவரை இந்த நிலத்தை அதன் இயற்கையைக் காத்து நிற்போம்.
- விகடன்
5 மணி நேரம் · Facebook for Android ·
அந்தமான் கொலை மதமாற்றம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக