புதன், 30 செப்டம்பர், 2020

இடவொதுக்கீடு ஆங்கிலேயர் கொணர்ந்து சுப்பராயன் செயல்படுத்தியது அந்த சட்டதிருத்தம் முதலாவது இல்லை நான்காவது

 

aathi1956 aathi1956@gmail.com

புத., 13 பிப்., 2019, பிற்பகல் 3:14
பெறுநர்: எனக்கு
› Home
View web version Tuesday, February 12, 2019
தமிழ்த் தேசியன் | நேரம் : 4:10 PM இட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா? - பெ. மணியரசன் கட்டுரை!
இட ஒதுக்கீட்டுக்குப்
பெரியார்தான் காரணமா?
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் கட்டுரை!
வெற்றி பெற்றவர்கள் வரலாற்றை
எழுதுகிறார்கள் என்பது ஒரு மரபுத்
தொடர். அவர்கள் சமூகத்தின் பன்முக
வரலாற்றை எழுதாமல் தங்களை
மட்டும் முதன்மைப்படுத்தி எழுதிக்
கொள்வார்கள் என்பது இதன் பொருள்.
இலட்சியத்தில் வெற்றி
பெறாதவர்களும் இலட்சியத்தைப்
பாதியில் கைவிட்டவர்களும்
வரலாற்றைத் திரிபுபடுத்தி எழுதிக்
கொள்ளலாம் என்பதற்கு பெரியாரியத்
திராவிடவாதிகளே சான்று!
பெரும்பான்மை மக்கள் எழுதப் படிக்கத்
தெரியாமல் இருந்த காலத்தில் -
படித்தவர்களில் - கட்டுக்கோப்பான
சிறுபான்மையினர் வரைந்ததே
வரலாறு என்று இருந்தது. இன்று 90
விழுக்காட்டினர் கற்றவர்களாக உள்ள
காலத்தில் - மேடைப்பேச்சையும் -
பிறர் எழுதிய தையும் மட்டுமே
சான்றாக வைத்துக் கொண்டு,
திரிபாக வரலாற்றைப் பேசுவோர்
நிறைந்த நாடாகத் தமிழ்நாடு
இருக்கிறது.
பெரியாரியத் திராவிடவாதிகள் - “பெரியார் இல்லையென்றால்
தமிழர்கள் மாடு மேய்த்துக்
கொண்டுதான் இருந்திருப்பார்கள்”
என்கிறார்கள். தமிழர்கள் படித்திருக்க
மாட்டார்கள், உயர் பதவிகளுக்குப் போய்
இருக்க மாட்டார்கள் என்ற
பரப்புரையைக் கோயபல்சு இருந்தால்
கூச்சப்படும் அளவிற்குக் கூறி
வருகிறார்கள்.
பெரிய புராணத்தை எதிர்த்தவர்கள்
பெரியார் புராணத்தை
எழுதினார்கள்.
பெரியார் புராணத்தில்
கூறப்பட்டுள்ள இரண்டே இரண்டு
கருத்துகளை மட்டும் இங்கு
விவாதத்திற்கு எடுத்துக்
கொள்கிறோம். ஒன்று தமிழ்நாட்டில்
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட
ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்குப்
பெரியார்தாம் முதல்
பெருங்காரணமாவார் என்பது.
இன்னொன்று இந்திய அரசமைப்புச்
சட்டத்தில் செய்யப் பட்ட முதல் திருத்தம்
இடஒதுக்கீட்டிற்கு வழி
வகுத்திடத்தான்; அந்த முதல்
திருத்தமும் பெரியாரால் தான்
வந்தது என்பது!
இட ஒதுக்கீட்டின் மூலவர்கள்
ஆங்கிலேய அதிகாரிகள்தாம் முதல்
முதலாக - இட ஒதுக்கீட்டுக்கான
மூலக்கருத்தை விதைத்தார்கள்.
பிராமணரல்லாத இந்துக்கள் மற்றும்
முசுலிம்களில் கல்வி கற்றோர் தங்கள்
வகுப்பு களுக்கான இட ஒதுக்கீட்டுக்
கோரிக்கையை பல வடிவங்களில்
வெளிப்படுத்தினார்கள்.
வெள்ளையராட்சி 19ஆம்
நூற்றாண்டில் அனைவருக்குமான
பொதுக் கல்வி முறையை
உருவாக்கிக் கல்வி நிலையங்களைத்
திறந்தது. 1835இல் வந்த மெக்காலே
கல்வித் திட்டம் கல்வியை மேலும்
முறைப்படுத்தி விரிவுபடுத்தியது.
இக்கல்வி முறையில் பயின்று
ஆங்கிலேய ஆட்சியில் அலுவலர்கள்
ஆனவர்களில் 100க்கு 90 பேர்
பிராமணர்கள். இந்தியாவெங்கும்
இதுதான் நிலைமை.
பிராமணரல்லாதார் தங்களுக்குரிய
விகிதத்தில் வேலை வழங்க வேண்டும்
என்று கோரிக்கை எழுப்பினர்.
பிராமணரல்லாத மண்ணின் மக்களின்
கோரிக்கையை வெள்ளை
அதிகாரிகள் பரிவுடன் பார்த்தனர்.
ஆங்கிலேய அரசின் வருவாய் வாரியம் (Revenue Board) 1854ஆம் ஆண்டு மாவட்ட
ஆட்சியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை
அனுப்பியது. அது வருமாறு :
நிலை ஆணை எண் 128 / 2
“மாவட்ட அளவிலான அலுவலர்கள்
பணியமர்த்தத்தில் செல்வாக்குள்ள சில
குடும்பங்களுக்கு மட்டும் பணிகள்
ஏகபோக உரிமை ஆகிவிடாமல் மாவட்ட
ஆட்சியாளர்கள் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும்
முதன்மையாக உள்ள (பெரும்பான்மையாக உள்ள)
சாதிகளுக்கு வேலைகள்
பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.” - இதுவே
அந்த ஆணை!
மேற்கண்டவாறு ஆணை
பிறப்பிக்கப்பட்டும் அது சரிவர செயல்
படுத்தப்படவில்லை. ஆனால் இட
ஒதுக்கீட்டிற்கான - ஆட்சி யாளர்களின்
தொடக்க நிலை ஒப்புதல் என்று இந்த
முன்னெடுப்பைக் கருதலாம்.
1854ஆம் ஆண்டு இவ்வாறு தொடங்கிய
அரசின் இட ஒதுக்கீட்டு ஆணை - 1871இல்
மேலும் வலுப்பட்டது. 1871ஆம் ஆண்டு
மக்கள் தொகைக் கணக்கு
எடுக்கப்பட்டது. சாதியும்
கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டது. மக்கள்
தொகைக் கணக்கெடுப்பின்
கண்காணிப் பாளர் டபுள்யு. ஆர்.
கார்னீஷ்!
1871-க்கு முந்தைய 15 ஆண்டுகளில்
மெட்ரிகுலேசன் கல்வி கற்றவர்களில் 55 விழுக்காட்டினர் பிராமணர்கள் என்ற
கணக்கும் வந்தது. அப்போது கார்னீஷ்
கூறியது கவனிக்கத்தக்கது. கார்னீஷ்
அவர்களின் கூற்றை திராவிடர் கழகத்
தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது
நூலில் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டின் முன்னேற்றம் தொடர்பான
எந்தச் செய்தியையும் பார்ப்பனக்
கண்ணாடி போட்டுக் கொண்டு
பார்க்கக் கூடாது. அரசின்
உண்மையான கொள்கை - அரசு
அலுவலர்கள் எண்ணிக்கையில்
பார்ப்பனர்களுக்கு வரம்பு
கட்டுவதாகவும், பார்ப்பனரல்லாத
இந்துக்கள் மற்றும் முசுலிம்கள் அரசு
அலுவலகங்களுக்குள் நுழைவதை
ஊக்கப்படுத்துவதாகவும் இருக்க
வேண்டும். எந்த ஒரு சாதிக்கும் தனி
முக்கியத்துவம் கொடுப்பதாக
இருக்கக் கூடாது.”
- Report on the Census of Madras Presidency 1871, Vol - 1, page 197 (தமிழில் : கி. வீரமணி, ‘வகுப்புரிமை வரலாறு’, மூன்றாம்
பதிப்பு - 2000).
வகுப்புரிமைக் கோரிக்கை
தமிழ்நாட்டில் 1850களில்
எழுப்பப்பட்டுள்ளது. அப்போது
பெரியார் பிறக்கவில்லை. 1871 மக்கள்
தொகைக் கணக்கெடுப்புக்
கண்காணிப்பாளர் கார்னீஷ், நாட்டின்
முன்னேற்றத்தைப் பிராமணக்
கண்ணாடி போட்டுக் கொண்டு
பார்க்காதீர்கள்.
பிராமணரல்லாதவர்க்கு
வேலைவாய்ப்பு உரியவாறு
கொடுங்கள் என்று கூறியபோதும்
பெரியார் பிறக்கவில்லை.
1850களில் - 60களில் மெட்ரிகுலேசன்
படித்தவர்களில் 55 விழுக்காடு
பிராமணர்கள், 45 விழுக்காடு
பிராமணரல்லாதார் என்ற கணக்கைக்
கொடுத்தவர் கார்னீஷ். பெரியார்
அப்போது பிறந்திருக்கவில்லை!
தமிழனும் தமிழச்சியும்
படித்திருக்கவே மாட்டார்கள் என்று
கூறும் பெரியார் பக்தர்களுக்குக்
கார்னீஷ் கணக்கெடுப்பு காணிக்கை
யாகட்டும்!
1881 மற்றும் 1891 ஆம் ஆண்டுகளில்
மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள்
நடந்தபோது பிராமணரல்லாதார்க்கு
இட ஒதுக்கீடு கேட்டு பெரிய அளவில்
மக்கள் கோரிக்கை எழுப்பினர்.
இட ஒதுக்கீடு இந்தியத் துணைக்
கண்டத்தில் முதல் முதலாகச்
செயல்படுத்தப்பட்ட இடம் மராட்டிய
மாநிலம் - கோலாப்பூர் குறுநிலம் (சமஸ்தானம்). செயல்படுத்தியவர் -
கோலாப்பூர் மன்னர் சாகு மகாராசா!
அவர் 1902ஆம் ஆண்டு கல்வியில் 50
விழுக்காடு இட ஒதுக்கீடு -
பிராமணரல்லாத பின்தங்கிய
வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்தார்.
பள்ளிகளில் படிப்போர்க்கு இலவச
உணவு - உறைவிட விடுதிகளைத்
திறந்தார். தீண்டாமையைக்
குற்றமாக்கினார்.
அப்பொழுதெல்லாம் பெரியார்
சமூகப்பணிக்கு வரவில்லை.
பெரியார் பிறந்த ஆண்டு 1879
செப்டம்பர் 17.
நீதிக்கட்சியின் தோற்றம்
மருத்துவர் நடேச முதலியார்
சென்னை திருவல்லிக்கேணி பெரிய
தெருவில் வசித்து வந்தார். அவர்
பிராமணரல்லாதார்க்கு இட ஒதுக்கீடு
கோரிக்கை வைத்தது 1910 வாக்கில்!
பிராமணரல்லாத மாணவர்கள் கல்வி
கற்க ஊக்கப்படுத்தும் செயல்களில்
ஈடுபட்டார். பிராமணரல்லாத அரசு
ஊழியர்கள், மாணவர்கள், மற்றவர்களின்
உரிமைகளுக்காக அவர் 1912இல் “மெட்ராஸ் யுனைடெட் லீக்” என்ற
அமைப்பை உருவாக்கினார். இந்த லீக் -
பிராமணரல்லாதார்க்கான இட
ஒதுக்கீட்டுக் கோரிக்கையை எழுப்பி
வந்தது.
இந்த மெட்ராஸ் யுனைடெட் லீக் என்ற
அமைப்பின் பெயரை 1913இல்
திராவிடர் சங்கம் (Dravidian Association)
என்று மாற்றினார்.
அக்காலத்தில் பிட்டி. தியாகராய
செட்டியும், தாரவாத் மாதவன்
நாயரும் காங்கிரசுக் கட்சிப்
பிரமுகர்கள். இருவரும் சென்னை
மாநகராட்சி உறுப்பினர்கள். ஆனால்
ஒருவருக்கொருவர் ஆகாது.
இருவரும் எதிரும் புதிருமாகச்
செயல்பட்டனர். பிராமணரல்லாதார்
உரிமைகளை மீட்பதற்காக
இவ்விருவரிடமும் பேசி
இருவரையும் ஒன்றாக இணைத்தவர்
நடேச முதலியார்.
இம்மூவர் முன்முயற்சியில் மற்றும் பல
முக்கியக் கல்விமான்கள் - பிரமுகர்கள்
ஆகியோரைக் கொண்டு 1916
இறுதியில் உருவாக்கப் பட்டதுதான்
நீதிக்கட்சி! (அதன் அசல் பெயர் -
தென்னிந்திய நல உரிமைச் சங்கம்).
நீதிக்கட்சி அமைப்பதற்கான முதல்
கூட்டம் 20.11.1916 அன்று
சென்னையில் நடந்தது. அப்போது
பெரியார்க்கு 38ஆம் அகவை
தொடங்கி இருந்தது. அந்தக்
கூட்டத்தில் கலந்து கொண்ட 26
பிரமுகர்கள் பெயர்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளன. அப் பட்டியலில்
ஈ.வெ. இராமசாமி பெயர் இல்லை.
ஆனால் எஸ். முத்தையா முதலியார்
பெயர் அப்பட்டியலில் உள்ளது. (அவர்தான் 1928இல் வகுப்புவாரி இட
ஒதுக்கீட்டை அமைச்சராக இருந்து
முதலில் செயல்படுத்தியவர்).
1916 டிசம்பர் 20ஆம் நாள் - பிட்டி.
தியாகராயர் கையொப்பத்துடன்
வெளியான நீதிக்கட்சியின்
பிராமணரல்லாதார் அறிக்கையில் (Non Brahmin Manifesto) வகுப்புவாரி இட
ஒதுக்கீட்டு முறை கோரப்
பட்டிருந்தது. கல்வி - வேலை
வாய்ப்பில் மட்டுமின்றி, அரசியலிலும்
பிராமணரல்லாதார் உரிய இடம் பெற
வேண்டும் என்று கூறப் பட்டிருந்தது.
பெரியார் 1919இல் அரசியலுக்கு
வந்தார். அவர் நீதிக்கட்சியில்
சேரவில்லை. காங்கிரசுக் கட்சியில்
சேர்ந்தார். அதுவும் இராச
கோபாலாச்சாரியாரின் அழைப்பை
ஏற்றுக் காங்கிரசுக் கட்சியில்
சேர்ந்தார். திராவிடத்தின் தாய்க்கட்சி
நீதிக்கட்சி என்று சொல்லிக்
கொள்கிறார்கள். ஆனால், “திராவிடத்தின் தந்தை” அந்தத் தாய்க்
கட்சியில் சேராமல் - அவரது
மொழியில் “பார்ப்பன - பனியா
கட்சியான” காங்கிரசில் சேர்ந்தார்.
நம்மைப் பொறுத்தவரை, பெரியார்
தமது தொடக்க காலத்தில் காங்கிரசில்
சேர்ந்ததைத் தவறாகக் கருதவில்லை.
சிந்தனை வளர்ச்சிக்கேற்ப அரசியல்
நிலைபாடுகள் மாறலாம்.
நீதிக்கட்சி சென்னை மாகாண
ஆட்சியை 1920 தேர்தலில் பிடித்தது. 1922இல் அவ்வாட்சி வேலை வாய்ப்பில்
வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு ஆணை
பிறப்பித்தது.
இந்த ஆணையையும் நீதிக்கட்சி ஆட்சி
செயல்படுத்தவில்லை. 1926 சட்டமன்றத்
தேர்தலில் நீதிக்கட்சி தோற்றுவிட்டது.
ஆட்சி அமைத்திடப் பெரும்பான்மை
கிடைக்கவில்லை. பெரும்பான்மை
பெற்ற காங்கிரசு சுயராஜ்ஜியக்
கட்சியார் ஆட்சி அமைக்க மறுத்து
விட்டனர்.
நீதிக்கட்சி அல்ல, சுப்பராயன்
ஆட்சியே
இட ஒதுக்கீட்டைச்
செயல்படுத்தியது
கட்சி சார்பற்ற சுயேச்சையான
சுப்பராயன் அவர்களை ஆட்சி
அமைக்கும்படி ஆளுநர் கேட்டுக்
கொண்டார். காங்கிரசுக் கட்சியைச்
சேர்ந்த எஸ். முத்தையா முதலியார்
அக்கட்சியின் பிராமண ஆதரவுப்
போக்கைக் கண்டித்து,
அக்கட்சியிலிருந்து விலகி,
சுப்பராயன் அமைச்சரவையில்
சேர்ந்தார். அவர்தாம் முதல் முதலாக -
புதிய வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுச்
சட்டத்தை 04.11.1927 அன்று சென்னை
மாகாண சட்டசபையில் அறிமுகம்
செய்தார். சுப்பராயன் அமைச்சரவை 1927இல் வகுப்புவாரி இட
ஒதுக்கீட்டிற்குப் புதிய ஆணை
பிறப்பித்தது (G.O. M.S. No 1021).
எஸ். முத்தையா முதலியார் -
பிராமண ஆதிக்க எதிர்ப்பையும்,
பிராமணரல்லாதார் இட ஒதுக்கீட்டுக்
கோட்பாட்டையும்
பெரியாரிடமிருந்து கற்றுக்
கொள்ளவில்லை! பெரியாருக்கு
முன்பே - அவர் இக்கோட்பாடுகளைப்
புரிந்து கொண்டவர்; ஏற்றுக்
கொண்டவர்.
அதனால்தான், 1916இல் நீதிக்கட்சி
அமைப்பதற்கு முன்னோட்டமாக
அமைந்த பிராமணரல்லாதார்
கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்
முத்தையா முதலியார். அதில்
பங்கேற்காதவர் பெரியார்.
நீதிக்கட்சியில் ஆந்திரர் ஆதிக்கமே
மேலோங்கி இருந்தது. அது
தோற்றதால் தமிழரான சுப்பராயன்
முதலமைச்சர் ஆனார் (1926 - 1930).
சுப்பராயன் இடஒதுக்கீட்டுக்
கோட்பாட்டில் ஆர்வமாய் இருந்தார்.
முதலமைச்சர் சுப்பராயனும், அமைச்சர்
முத்தையா முதலியாரும்தாம் முதன்
முதலாக 1928இல் வகுப்புவாரி இட
ஒதுக்கீட்டை செயல்படுத்திக்
காட்டினர். நீதிக்கட்சி வகுப்புவாரி
இட ஒதுக்கீட்டைச் செயல் படுத்தவில்லை.
பெரியார் காங்கிரசில் சேர்ந்து மிகத்
தீவிரமாகச் செயல்பட்டார்.
காந்தியராகவும் இருந்தார். கதர்த்
துணிகளை சுமந்து விற்றார்.
கள்ளுக்கடை மூடலுக்காகத் தம்
துணைவியார் நாகம்மையார் வீட்டுத்
தென்னை மரங்களை வெட்டி
வீழ்த்தினார்.
இவற்றையெல்லாம் நாம் குறையாகக்
கூறவில்லை. இவ்வளவு தீவிரக்
காங்கிரசுக்காரராக இருந்த
பெரியாரின் தாய்க்கட்சி நீதிக் கட்சி
என்று கூறுவதை நாம்
மறுக்கிறோம். பின்னர், நீதிக்கட்சியின்
வகுப்புவாரி இடஒதுக்கீட்டுக்
கோரிக்கையை ஏற்றார். காங்கிரசும்,
நீதிக்கட்சி போல் வகுப்புவாரி இட
ஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன்
வைக்க வேண்டும் என்றார். இது
தொடர்பாக 1925இல் காஞ்சிபுரம்
காங்கிரசு மாநாட்டில் பெரியார்
கொண்டு வந்த தீர்மானம்
நிறைவேற்றப்படாததால் அவர்
காங்கிரசை விட்டு வெளியேறினார்.
பின்னர் தனி அமைப்பு
தொடங்கினார். காங்கிரசை விட்டு
வெளியேறிய பிறகு, பெரியார்
தொடர்ந்து இட ஒதுக்கீட்டுக்
கோரிக்கைக்குக் குரல் கொடுத்தார்.
மாநாடுகள் நடத்தினார். பெரியாரின்
இந்த முயற்சிகளை நாம்
பாராட்டுகிறோம். ஆனால்,
தமிழ்நாட்டில் வகுப்புவாரி இட
ஒதுக்கீட்டுக் கொள்கையைக்
கொண்டு வந்தவரே பெரியார்தாம் -
நீதிக்கட்சிதான் பெரியாரின்
தாய்க்கட்சி என்று சொல்கின்ற கட்டுக்
கதைகளைத்தான் நாம் மறுக்கிறோம்.
ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி, இட
ஒதுக்கீட்டு ஆணை போட்டதே தவிர,
அதைச் செயல்படுத்தவில்லை.
விடுதலைக்கு முந்தைய காங்கிரசு
ஆட்சிகளும், அன்றைய சென்னை
மாகாணத்தில் கல்வி, வேலை
வாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்
கொள்கையை செயல்படுத்தின. 1937இல் முதலமைச்சரான
இராசாசியும் வகுப்புவாரி இட
ஒதுக்கீட்டைச் செயல்படுத்தியதுடன்
மாவட்ட நீதிபதி தேர்வுக்கும் அதை
விரிவுபடுத்தினார் என்கிறார்
பேராசிரியர் க. அன்பழகன் (நூல் :
வகுப்புரிமைப் போராட்டம், கம்யூனல்
ஜி.ஓ. - பேராசிரியர் க. அன்பழகன்,
திராவிடர் கழக (இயக்க) வெளியீடு).
இட ஒதுக்கீட்டுக்குத் தடை
விடுதலைக்குப் பின் 1950 சனவரி 26இல் இந்திய அரசமைப்புச் சட்டம்
செயல்பாட்டுக்கு வந்தது. அதன்பின்
இட ஒதுக்கீடு கேள்விக்குள்ளானது. “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற
அரசமைப்புச் சட்ட உறுப்புகளுக்கு இட
ஒதுக்கீடு எதிரானதாகும் என்ற
கருத்துகள் பேசப்பட்டன.
இட ஒதுக்கீட்டு அடிப்படையில்
மருத்துவக் கல்லூரி மாணவர்
சேர்க்கை நடந்தததால் - தகுதியுள்ள
பிராமணராகிய தனக்கு இடம்
கிடைக்க வாய்ப்பில்லை எனவே
வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை இரத்து
செய்ய வேண்டும் என்று செம்பகம்
துரைராஜ் என்பவர் சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்.
புதிய அரசமைப்புச் சட்ட உறுப்பு 15-
க்கு எதிரானது இட ஒதுக்கீடு என்று
உயர் நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை இரத்து
செய்தது. உச்ச நீதிமன்றமும்
அத்தடையை உறுதி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச
நீதிமன்றமும் செல்லாது என்று
தீர்ப்பளித்த ஆணை சுப்பராயன் - எஸ்.
முத்தையா ஆகியோர் 1927இல்
கொண்டு வந்து 1928இல்
செயல்படுத்திய G.O. M.S. No. 1021
ஆணைதான். நீதிக்கட்சி 1922இல் போட்ட
ஆணை அன்று! அது எப்போதும் உயிர்
பெறவில்லை.
இட ஒதுக்கீடு விவரம்
முதல்வர் சுப்பராயன் - அமைச்சர்
முத்தையா முதலியார் ஆகியோர்
முயற்சியில் கொண்டு வரப்பட்ட 1927ஆம் ஆண்டின் வகுப்புவாரி இட
ஒதுக்கீடுச் சட்டம் - பின்வருமாறு
ஒதுக்கீடு வழங்கியது.
வேலை வாய்ப்பில் 12 இடங்கள்
இருப்பதாகக் கணக்கிட்டு, அதைப்
பின்வருமாறு பிரித்தார்கள்.
பிராமணர் அல்லாத இந்துக்களுக்கு
- 5 இடம்
பிராமணர்களுக்கு
- 2
இடம்
முகமதியர்களுக்கு
- 2
இடம்
கிறித்துவர்களுக்கு
- 2
இடம்
(ஆங்கிலோ இந்தியர் உட்பட)
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
- 1 இடம்
மொத்தம்
- 12 இடம்
இந்த விகிதத்தில் வேலை
வாய்ப்புகளைப் பகிர்ந்து அளிப்பது
என்பதே வகுப்புவாரி இட ஒதுக்கீடு!
அதாவது நூறு விழுக்காடும்
வகுப்பு அடிப்படையில்
பிரிக்கப்பட்டது. இது 1928ஆம் ஆண்டு
தான் செயல்படுத்தப்பட்டது.
பின்னர் 1947இல் காங்கிரசு
முதலமைச்சர் ஆன ஓமந்தூர்
இராமசாமி ரெட்டியார் 1948இல்
பின்தங்கிய வகுப்பார்க்கு (தனி இட
ஒதுக்கீடு) இரண்டு இடம் வழங்கி, இட
ஒதுக்கீட்டின் மொத்த எண்ணிக்கையை 14 ஆக்கினார். அதுவும் சுப்பராயன் -
எஸ். முத்தையா வெளியிட்ட 1927ஆம்
ஆண்டு ஆணையில் செய்யப்பட்ட
கூடுதல் சேர்க்கையே!
தடையை நீக்கிட போராட்டம்
இவை அனைத்தும் செல்லாது என்று
ஆக்கியது சென்னை உயர் நீதிமன்றம்.
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை
எதிர்த்துத் தமிழ் நாட்டில்
போராட்டங்கள் நடந்தன. அதுபற்றி
பேராசிரியர் க. அன்பழகன் மேற்படி
நூலில் பின்வருமாறு
குறிப்பிடுகிறார்.
“மாணவர் கூட்டமே தமிழர்
பெரும்படையின் முன்னணியாகத்
திகழ்ந்தது. சென்னை பச்சையப்பன்
கல்லூரிக் காளைகள் ஊதிய அபாயச்
சங்கொலி கேட்டு குமரிமுனை வரை
உள்ள கல்லூரிகளிலும், உயர் நிலைப்
பள்ளிகளிலும் எதிரொலி
கிளம்பிற்று..
“வகுப்புரிமைத் தந்தை அறிஞர் எஸ்.
முத்தையா அவர்களும், திராவிடர்
கழகத் தலைவர் பெரியார் இராமசாமி
அவர்களும், திராவிட முன்னேற்றக்
கழகப் பொதுச் செயலாளர் அறிஞர்
அண்ணாதுரை அவர்களும் மற்றும் பல
திராவிட இயக்கத் தலைவர்களும்
வகுப்புரிமைச் சட்டத்தின்
அவசியத்தை விளக்கி வெளியிட்ட
அறிக்கைகளும் நிகழ்த்திய
விரிவுரைகளும் மக்கள்
விழிப்பிற்கும் உரிமை எழுச்சிக்கும்
காரணமாயின”.
சென்னை மாகாணக் காங்கிரசு
ஆட்சியும் இந்திய அரசியல் சட்டத்தைத்
திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்
அதற்கான முயற்சிகளை எடுத்துக்
கொள்வோம் என்று அமைச்சரவையில்
முடிவு செய்து, உறுதி கூறியது.
கல்வி அமைச்சர் மாதவ மேனன் ஆணித்
தரமாக உறுதி கூறினார் என்கிறார்
அன்பழகன்.
மேலும் க. அன்பழகன் கூறுகிறார் :
“இந்த உறுதிமொழிகள் கிடைக்கக்
காங்கிரசு இயக்கத்தவரிலும் பலர்
காரணமாயினர். காங்கிரசு சட்டசபை
உறுப்பினர்களான தோழர்கள்
கோசல்ராம், பட்டாபிராமன், கக்கன்,
கன்னியப்பன், சேலம் சுப்பிரமணியன்
ஆகியோர் கம்யூனல் ஜி.ஓ.வை
நிலைநிறுத்த எல்லா முயற்சிகளும்
எடுத்துக் கொண்டனர்.
காங்கிரசுத் தலைவர் காமராசரும்
மற்றும் பலரும் கூட கம்யூனல்
ஜி.ஓ.வை ஆதரித்துப் பேசினர்.
காங்கிரசு ஏடுகளான “தினசரி”, “காண்டீபம்”, “பிரசண்ட விகடன்”
போன்றவைகளும் கம்யூனல்
ஜி.ஓ.வை ஆதரித்து எழுதின.
- பேராசிரியர் க. அன்பழகன் நூல், பக்கம் 95, 96, 97.
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பைத்
தள்ளுபடி செய்து கம்யூனல்
ஜி.ஓ.வுக்கு உயிர் கொடுக்கக் கோரி
சென்னை மாகாணக் காங்கிரசு
ஆட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்
முறையீடு செய்தது. அங்கு ஏழு பேர்
கொண்ட அரசமைப்புச் சட்ட ஆயம் -
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை
உறுதி செய்து - கம்யூனல் ஜீ.ஓ.வைத்
தள்ளுபடி செய்தது.
பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட
மக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு -
இல்லாமல் போனது. ஒட்டு மொத்தத்
தமிழ்நாடும் கவலையில் உறைந்தது.
பெரியார் கம்யூனல் ஜி.ஓ. மாநாடு
ஒன்றைத் திருச்சியில் போட்டார்.
அண்ணா - கம்யூனல் ஜி.ஓ. கேட்டும்,
நீதிமன்றத் தீர்ப்புகளைச் சாடியும்
கட்டுரைகள் எழுதினார். (அக்கட்டுரைகள் பின்னர் “பொன்விலங்கு” என்ற தலைப்பில் 1953இல் நூலாக வந்தது.)
மாணவர்கள் போராடினர். அரசமைப்புச்
சட்டத்தைத் திருத்த வேண்டும் அல்லது
அரசமைப்புச் சட்டம் ஒழிய வேண்டும்
என்று தமிழ்நாட்டில் பரவலாகப்
பேசப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரசின்
செல்வாக்குமிக்கத் தலைவராக
விளங்கிய காமராசர் தலைமை
அமைச்சர் பண்டித நேருவுடன்
பேசினார். அரசமைப்புச்
சட்டத்திருத்தம் தேவை என்றார்.
இதுபற்றி காங்கிரசுத் தலைவர்களில்
ஒருவரான ஆ. கோபண்ணா “தமிழ்
இந்து” நாளேட்டில் “ முதல்
திருத்தத்தின் மூலவர் காமராஜர் ”
என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று
எழுதியுள்ளார் (15.07.2014).
பெரியாரின் தனி போராட்டமா?
கல்வி, வேலை வாய்ப்பில் இட
ஒதுக்கீட்டை மீட்கும் போராட்டத்தில்
பெரியாரின் பங்களிப்புப்
பாராட்டத்தக்கது. அதே வேளை அவர்
மட்டுமே போராடவில்லை -
கருத்துகள் கூற வில்லை.
பெரியாரியத் திராவிடவாதிகள் -
இதில் அண்ணாவின் பங்களிப்பை,
தி.மு.க.வின் போராட்டங்களைக் கூடக்
கணக்கில் எடுப்பதில்லை. பிறகு
எங்கே, காங்கிரசுக்காரரான
எஸ்.முத்தையா அவர்கள் பங்களிப்பை,
காங்கிரசுத் தலைவர் காமராசர்
பங்களிப்பை கவனிக்கப் போகிறார்கள்!
பெரியார் 1950 - 51 காலத்தில்
கடுமையான காங்கிரசு
எதிர்ப்பாளராக இருந்தார். 1947 ஆகத்து 15 வரை வெள்ளை யராட்சியை
ஆதரித்து, காங்கிரசை எதிர்த்து
வந்தார். அதன் போக்கில் இந்திய
விடுதலை நாளை - 1947 ஆகத்து 15ஐ
துக்க நாளாகக் கடைபிடித்தார். 1949இல் தி.க.விலிருந்து தி.மு.க.
பிரிந்தது முதல் தி.மு.க. ஒழிப்பு
வேலைத் திட்டத்தை முதன்மைப்
படுத்தினார் பெரியார்.
1952 முதல் பொதுத் தேர்தலில்
பெரியார் கம்யூனிஸ்ட்டுக் கட்சியை
ஆதரித்துப் பரப்புரை செய்தார்.
காங்கிரசை எதிர்த்தார். இந்தப்
பின்னணியில் - வகுப்புவாரி இட
ஒதுக்கீட்டுப் போராட்டத்தை
முன்னெடுத்தார் பெரியார்.
1954இல் இருந்து காமராசரையும்
காங்கிரசையும் நிபந்தனையற்று
ஆதரித்தார் பெரியார். அவ்வாறான
சூழலில் 1954க்குப் பின் இட
ஒதுக்கீட்டை நீதிமன்றங்கள் தள்ளுபடி
செய்திருந்தால், இட ஒதுக்கீட்டிற்கு
ஆதரவாகவும், பார்ப்பன பனியா
காங்கிரசு அரசுக்கு எதிராகவும், 1950இல் பரப்புரை செய்ததுபோல்
பெரியார் செய்திருப்பாரா என்ற
ஐயமும் எழுகிறது. ஏன் இந்த ஐயம்?
1938இல் இந்தித் திணிப்பை எதிர்த்துப்
போராடிய பெரியார், 1965இல் இந்தித்
திணிப்பை எதிர்த்து நடந்த வரலாறு
காணாத மாணவர் - மக்கள்
போராட்டத்தை எதிர்த்தார். “காவல்துறையின் கையில் உள்ள
துப்பாக்கிகள் பூப்பறிக்க
இருக்கிறதா? நாலு காலிகளை
சுட்டுத் தள்ளினால் போராட்டம்
ஒடுங்கும்” என்று அறிக்கை விட்டார்.
அவ்வாறு பெரியார் அறிக்கை
விட்டதற்குக் காரணம், தி.மு.க.
ஒழிப்பை முதன்மைப்படுத்தி, 1954
முதல் 1967இல் தி.மு.க. ஆட்சிக்கு
வரும்வரை காங்கிரசை அவர்
ஆதரித்ததுதான்!
அது ஒருபக்கம் இருக்கட்டும். இட
ஒதுக்கீட்டை மீட்க, 1950 - 51இல்
பெரியார் நடத்திய தீவிரப்
பரப்புரைகளையும் அவரது
செயல்பாடுகளையும்
பாராட்டுவோம்; நன்றி
தெரிவிப்போம்!
அதேவேளை பெரியார் புராணம்
எழுதுவோர் தி.மு.க., காங்கிரசு,
முத்தையா முதலியார், அண்ணா,
காமராசர் உள்ளிட்ட பலரின்
பங்களிப்பை மறைப்பதைத் தவறு
என்போம்.
அடுத்து, அரசமைப்புச் சட்டத்தின்
முதல் திருத்தம் இட ஒதுக்கீட்டிற்காக
மட்டும் வந்ததா என்பதைப் பார்ப்போம்.
முதல் திருத்தம் எப்படி ஏற்பட்டது?
1950 சனவரி 26 இல் புதிதாக
செயலுக்கு வந்த இந்திய அரசமைப்புச்
சட்டம் நடைமுறையில் சில முட்டுச்
சந்துகளில் மாட்டிக் கொண்டது.
அவற்றில் முதன்மையானதும், இந்திய
ஆட்சியாளர்களுக்குத் தலைவலியாக
இருந்ததும் குடிமக்களுக்குக்
கருத்துரிமை, பேச்சுரிமை
ஆகியவற்றை வழங்கிய உறுப்பு 19(1)(a).
புதிதாக இந்த உரிமையைப் பெற்ற
நிலையில் ஏடுகளும், பிரமுகர்களும்
ஆட்சியாளர்களைப் பற்றி - குறிப்பாகத்
தலைமை அமைச்சர் நேருவைப் பற்றிக்
கடுமையாக விமர்சித்தனர்.
மும்பையில் இருந்து வெளிவந்து
கொண்டிருந்த “கிராஸ் ரோட்” (CROSS ROAD) என்ற இடதுசாரி ஆங்கில வார
இதழ் நேருவின் கொள்கைகளைக்
கடுமையாகத் தாக்கி எழுதியது.
அவ்விதழைச் சென்னை மாகாண
அரசு 1950 இல் தடை செய்தது.
அவ்விதழின் வெளியீட்டாளர்
ரொமேசு தாப்பர் தடையை நீக்கிட
வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில்
வழக்குத் தொடுத்தார். உச்ச நீதிமன்றம்
கருத்துரிமை உறுப்பு 19(1)(ணீ)ஐக்
காரணம் காட்டி இதழ் மீதான தடையை
நீக்கி 26.05.1950இல் தீர்ப்பளித்தது.
நீதிமன்றச் சுத்தியல் நேரு அரசின்
தலையில் அடித்தது போல்
ஆட்சியாளர்களுக்கு சுரீர் என்று
வலித்தது. அரசமைப்பின் அடிப்படை
உரிமைகள் உறுப்பு 19(1)(a)க்கு
திருத்தம் கொண்டு வர இந்திய
ஆட்சியாளர்கள் சிந்தித்தார்கள்.
இந்திய ஆட்சியாளர்கள் அரசமைப்புச்
சட்டத்தின் அடுத்த முட்டுக்கட்டையாகப்
பார்த்த உறுப்பு 19(1)(g). இவ்வுறுப்பு,
இந்தியக் குடிமக்கள் தாங்கள்
விரும்பும் வேலை, தொழில்,
உடைமை ஆகியவற்றை மேற்கொள்ள
முழு உரிமை பெற்றவர்கள்
என்பதாகும். மக்கள் நலனுக்காக, சில
தொழில்களை அரசுடைமை
ஆக்குவதற்கு இந்தப்பிரிவு
இடையூறாக இருந்தது.
எனவே மேற்கண்ட 19(1)(a) மற்றும் 19(1)(g) ஆகியவற்றிற்கு “ஞாயமான
கட்டுப்பாடுகளை” (Reasonable Restrictions)
விதிக்க நேரு அரசு விரும்பியது.
மூன்றாவதாக நிலச்சீர்திருத்தம்
செய்திட, உச்ச வரம்புச் சட்டம்
கொண்டுவர, ஜமீன்தாரி முறையை
நீக்கிடத் தடையாக இருந்த உறுப்பு 31 (4), (6) ஆகியவற்றைக் கடக்கப் புதிய
பிரிவுகள் தேவைப்பட்டன. இப்புதிய
திருத்தம் பற்றியும் நேரு அரசு
சிந்தித்துக் கொண்டிருந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான்
நான்காவது சிக்கலாக சென்னை
மாகாண அரசின் வகுப்புவாரி இட
ஒதுக்கீடு செல்லாது என்ற உச்ச
நீதிமன்றத் தீர்ப்பு வந்தது.
எதிர்க்கட்சிகளும், மாணவர்களும்,
சென்னை மாகாண அரசும், சென்னை
மாகாண ஆளுங்கட்சியும் இட
ஒதுக்கீட்டை நிலைநிறுத்த
அரசமைப்புச் சட்டத்தில் 15, 16
உறுப்புகளில் திருத்தம் கோரினர்.
இந்த நான்கு சிக்கல்கள் மட்டுமின்றி,
நாடாளுமன்றம், சட்டமன்றங்கள்
ஆகியவற்றின் செயல்பாடுகள்,
அதிகாரங்கள் தொடர்பான
சிக்கல்கள், தேவையான பழைய
சட்டங்களைத் தொடர்வதற்கான
திருத்தம் என மொத்தம் 14 திருத்தங்கள்
அரசமைப்புச் சட்டத்தில் ஒரே ஒரு
முன்மொழிவின் மூலம் - முதல்
திருத்தம் (First Amendment of the Constitution) என்ற பெயரில்
செய்யப்பட்டது. அந்த முதல்
திருத்தத்தைத் தலைமை அமைச்சர்
பண்டித நேரு 10.05.1951 அன்று
நாடாளுமன்றத்தில் முன் வைத்தார். 18.05.1951 அன்று நாடாளுமன்றம்
மிகப்பெரும் பெரும் பான்மையுடன்
நிறைவேற்றி அதனைச்
சட்டமாக்கியது.
அரசின் முன்னுரிமை வரிசைப்படி
நாலாவது இடத்தில் இட ஒதுக்கீட்டுத்
திருத்தம் இருந்தது. ஆனால்
அரசமைப்புச் சட்ட உறுப்புகளின்
வரிசையில் பார்த்தால் இட
ஒதுக்கீட்டுக்கான திருத்தம் உறுப்பு 15இல் வருகிறது.
இந்த முதல் திருத்தத்தின்
நோக்கங்களும் காரணங்களும் (Statement of Objects and Reasons) என்ற
முன்னுரையில் இந்திய அரசு
கூறியுள்ள பகுதி கவனிக்கத்தக்கது.
“கடந்த 15 மாதங்களாக அரசமைப்புச்
சட்டம் செயல்பட்டதில் சில சங்கடங்களைத்
தங்கள் தீர்ப்புகளின், அறிவிப்புகளின்
வழியாக நீதிமன்றங்கள் வெளிக்
கொண்டு வந்தன. குறிப்பாக
அடிப்படை உரிமைகள்
தொடர்பானவை!”.
இவ்வாறு கூறிவிட்டு முதல்
நோக்கமாக “அரசமைப்புச் சட்ட
உறுப்பு 19இல் கருத்துரிமைக்கு
ஞாயமான கட்டுப்பாடுகள் (Reasonable Restriction) விதிக்க வேண்டி உள்ளது”
என்று அந்நோக்க உரை கூறுகிறது.
உறுப்பு 15இல் செய்ய வேண்டிய
திருத்தம் முதன்மையானது என
அந்நோக்க உரை கூறவில்லை.
கருத்துரிமைக்குக் கட்டுப்பாடு
விதிப்பதை முதல் நோக்கமாகக்
கொண்டதேன்? நேருவை விமர்சித்த
ரொமேஷ் தாப்பரின் “கிராஸ் ரோட்ஸ்”
இதழுக்கு சென்னை மாகாண அரசு
விதித்த தடை செல்லாது என்று உச்ச
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாள் 26.05.1950. அதாவது அரசமைப்புச் சட்டம்
செயலுக்கு வந்த ஐந்து மாதத்தில்
முதல் சிக்கலாக இத்தீர்ப்பு வந்தது.
அதுவும் செல்வாக்கு மிக்க ஆட்சித்
தலைவர் பண்டித நேருவை
இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி
செய்யப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம்
நீக்கிவிட்டது; நேருவை “இழிவுபடுத்தியது” கருத்துரிமை
என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது
என்று காங்கிரசார் பதறினார்கள்.
எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காமல்
இருப்பதற்காக உறுப்பு 19இல்
உட்பிரிவு 2 (கருத்துரிமைக்கு
ஞாயமான கட்டுப்பாடுகள் - விதிகள்
பிரிவு) புதிதாக சேர்க்கப்பட்டது.
அடுத்து தொழில், வணிகம்
ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும்
வகையில் அதே 19இல் பிரிவுகள் (6), i, ii ஆகியவை சேர்க்கப்பட்டன. நிலம்
கையகப்படுத்திட 31இல் புதிதாக, A
மற்றும் B பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இட
ஒதுக்கீட்டிற்கு வாய்ப்பளிக்கும்
வகையில் உறுப்பு 15இல் உட்பிரிவு 4
சேர்க்கப்பட்டது.
நாடாளுமன்றம் தொடர்பாக உறுப்பு 85 மற்றும் 87, சட்டப்பேரவை தொடர்பாக
உறுப்பு 174 மற்றும் 176, தேவையான
பழைய சட்டங்களைத் தொடர்வது
தொடர்பாக உறுப்பு 372 ஆகியவை
திருத்தப்பட்டன. இவ்வாறாக 14
திருத்தங்கள் செய்யப்பட்டன.
“கிராஸ் ரோடு” இதழ் தடை நீக்கம்
“கிராஸ் ரோடு” இதழ் தடை நீக்கம் 26.05.1950 அன்று உச்ச நீதிமன்றத்
தீர்ப்பில் வந்தது. சென்னை மாகாண
இட ஒதுக்கீடு நீக்கத் தீர்ப்பு 09.04.1951
அன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது.
சென்னை உயர் நீதிமன்றம் இட
ஒதுக்கீட்டைத் தடை செய்த தீர்ப்பு 27.07.1950 அன்று வந்தது. “கிராஸ்
ரோடு” இதழ்த் தடை நீக்கம்தான்
முதலில் வந்தது. அது முதல் நிகழ்வு
என்பது மட்டுமின்றி, நடுவண் அரசு
தொடர்பானது என்ற அடிப்படையில்
அரசமைப்பு திருத்தத்தில் உறுப்பு 19(2)-க்கு முன்னுரிமை தரப்பட்டது.
பெரியார் புராணம் பாடும்
பகுத்தறிவுப் பாகவதர்கள் இந்திய
அரசமைப்புச் சட்டத்தையே முதல்
முதலில் திருத்தியவர் ஐயாதான்
என்பார்கள். ஆனால் அவர்களுக்குச்
செவி கொடுக்கும் இளையோருக்கு
வரலாற்று உண்மைகள் தெரிய
வேண்டும் என்பதற்காக
இவற்றையெல்லாம் எழுத நேர்ந்தது.
பெரியாரியத் திராவிடவாதிகள்
அண்ணாவின் பங்களிப்பைக் கூட
உரியவாறு பேசுவதில்லை. அண்ணா
தமிழர்களின் வரலாற்றுப்
பெருமைகளை, தமிழ் மொழியின்
ஆற்றல்களை, சங்கத்தமிழ் நூல்களின்
சிறப்புகளை - திருக்குறள்,
சிலப்பதிகாரச் செழுமைகளைப்
பாராட்டி எழுதியும் பேசியும்
வந்தார், இது பெரியாரியர்களுக்குப்
பிடிக்க வில்லையோ என்னவோ!
மற்றபடி இட ஒதுக்கீட்டு சமூக
நீதிக்காக பெரியார் தொடர்ந்து குரல்
கொடுத்ததையும் பரப்புரை
செய்ததையும் ஆட்சியாளர்களை
வலியுறுத்தியதையும் நாம்
மதிக்கிறோம்; பாராட்டுகிறோம்.
அதே வேளை, மற்றவர்கள் பங்களிப்பை
மறைத்து ‘ஐயாவே அனைத்திற்கும்
ஆதிமூலம்’ என்று கூறுவதையும்,
அவரன்றி தமிழ்நாட்டில் எதுவும்
அசையவில்லை என்று
பேசுவதையும் நாம் மறுக்கிறோம்!
வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை முதல்
முதலில் செயல்படுத்தியது ஆந்திரர்
தலைமையிலான நீதிக்கட்சி அல்ல;
தமிழ்நாட்டுத் தமிழரான சுப்பராயன்
தலைமையிலான ஆட்சியே
என்பதையும் எடுத்துக்
காட்டியுள்ளோம்.
நம் முன்னோர்களின் உண்மை
வரலாற்றைப் படிப்பது
நிகழ்காலத்தையும்,
எதிர்காலத்தையும் சீரமைக்கத்
தேவையான பாடம்!
(தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள், “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” – 2019 பிப்ரவரி 1 - 15 இதழில் எழுதியுள்ள கட்டுரை இது).
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============

ஈவேரா இடவோதுக்கீடு ஜஸ்டிஸ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக