வியாழன், 30 ஜனவரி, 2020

சூயஸ் நிறுவனம் கோவை குடிநீர் கார்ப்பரேட் பற்றி

aathi1956

<aathi1956@gmail.com>
27 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 5:17
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
கோவையில் தன் ஆட்டத்தை மெதுவாக தொடங்கியது சூயஸ் தண்ணீர் நிறுவனம்

பொலிவியாவின் கொச்சபாம்பா (Cochabamba) மற்றும் எல் அல்டோ (El Alto) விலிருந்து துரத்தி அடிக்கப்பட்ட "பெக்டெல் (Bechtel) மற்றும் சூயஸ் (Suez)" பன்னாட்டு நீர் நிறுவனங்கள்

தண்ணீர் அடிப்படை மனித உரிமைகளின் கீழ் வராது என்றும், இது மற்ற உணவுப் பண்டங்களைப் போல் விற்பனைச் சரக்காக மாற்றப்பட வேண்டுமென்றும் பேசியுள்ளார். தண்ணீர் ஒரு முக்கியமான கச்சாப் பொருள் என்றும், மற்ற பண்டங்களுக்கு இருப்பதைப் போல் இதற்கும் ஒரு சந்தை மதிப்பு இருக்க வேண்டும் - பன்னாட்டுக் கம்பெனியான நெஸ்லேவின் சேர்மன் பீட்டர் ப்ரெபெக் (Peter Brabeck-Letmathe, a former chairman and CEO of Nestlé, said that water is not a human right.Should be Privatized)

காணொளி:- https://www.disclose.tv/water-is-not-a-human-right-claims-ceo-of-nestle-peter-brabeck-letmathe-312122

70-களின் மத்தியில் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை சந்தை மதிப்பாக மாற்ற முயற்சித்த நெஸ்லேவின் ‘பாரம்பரியம்’ பிரபலமானது. குழந்தைகளுக்கான தனது ஊட்டச்சத்து பானத்தின் சந்தையை விரிவுபடுத்துவதற்காக தாய்மார்கள் தாய்ப் பாலூட்டுவதைத் தவிர்க்கச் செய்ய தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டது நெஸ்லே. இதற்காக பல்வேறு நாடுகளின் மகப்பேறு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் லாபி செய்து தனது ஊட்டச்சத்து பானத்தை குழந்தைகளுக்கு கொடுக்குமாறு அரசின் செலவில் பிரச்சாரம் செய்ய வைத்தது. சுத்தமான நீர் கிடைக்காத ஏழை நாடுகளில், தாய்ப்பாலுக்கு பதிலாக தூய்மையற்ற நீரில் கரைத்த நெஸ்லேவின் ஊட்டச்சத்து பானம் கொடுக்கப்பட்டது பல குழந்தைகளின் இறப்புக்கு காரணமானது.

இப்போது, நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் பேசியுள்ள இந்தக் கருத்துக்கள் ஆண்டுக்கு $6.9 பில்லியன் (சுமார் ரூ 38,000 கோடி) பாட்டில் நீர் விற்பனை செய்யும் அதன் சந்தையை விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்டவை என்பதை விரிவாக விளக்கத் தேவையில்லைதான்.

மூன்றாம் உலக நாடுகளில் குடிநீர் வினியோகத்தை மேற்கத்திய பன்னாட்டு தனியார் கம்பெனிகளிடம் தாரைவார்க்கும் போக்கு எண்பதுகளிலேயே துவங்கி விட்டது. இந்த வகையில் தென்னாப்பிக்கா மற்றும் பல்வேறு தென்னமெரிக்க நாடுகள் ஏற்கனவே ‘சூடு கண்ட பூனைகளாக’ நம்முன் சிறந்த உதாரணமாக உள்ளன.

உலகமயமாக்கலும் தண்ணீர் அரசியலும்

உலக வர்த்தக கழகத்தின் காட் (GATT) ஒப்பந்தம் தண்ணீரை வர்த்தகப் பண்டமாக பார்க்கிறது. ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு வர்த்தக அடிப்படையில் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யக் கூடாது என்று காட் ஒப்பந்தம் கூறுகிறது. இயற்கை வளங்களை சுரண்டி பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் வர்த்தகத்தை சமூக நலன், சூழலியல் பாதுகாப்பு என்னும் பெயரில் தடை செய்யக் கூடாது என்பதுதான் இதன் பொருள்!

உலக வர்த்தக கழகத்தின் கொள்கைப்படி தண்ணீர் வினியோகம் மற்றும் மேலாண்மை போன்றவற்றை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட வேண்டும். அதாவது அரசு என்பது தண்ணீரை வினியோகம் செய்யும் சேவை மையமாக இருப்பதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அந்த பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு விட்டுவிட வேண்டும். உலக வர்த்தக கழகத்தின் மற்றொரு ஒப்பந்தமான காட்ஸ் (GATS) தண்ணீரின் பிற வர்த்தக பயன்பாடுகளை பற்றிக் கூறுகிறது. இந்த ஒப்பந்தம் நீர் தொடர்பான பிற வணிகச் செயல்பாடுகளை பட்டியலிடுகிறது.

அவை: நீர்கழிவு மேலாண்மை, குடிநீர் வழங்குதல், கழிவு நீர் அகற்றல், நீர் குழாய்களை அமைத்தல், குடிநீர் தொட்டிகளை அமைத்தல், நிலத்தடி நீர் மேலாண்மை, விவசாயத்திற்கான நீர் பாசனம், அணைகள் கட்டுமானம், தண்ணீர் வியாபாரம் மற்றும் தண்ணீர் போக்குவரத்து சேவை. இந்தப் பணிகளை மேற்கொள்ளும் பல பன்னாட்டு இன்னாட்டு நிறுவனங்களை நாம் அறிவோம்.

விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங்கள், 150 நாடுகளில் 200  கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தண்ணீர் தனியார் மயமாக வேண்டும் என்று உலக வர்த்தக கழகம் கூறுகிறது. உலக வங்கியும் கூறுகிறது.

பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளைக் கொண்டு தண்ணீர் தனியார்மயமாகும் வழிவகைகளாக மூன்றை கூறலாம்: முதலாவது, ஒட்டுமொத்தமாக தண்ணீர் வினியோகம் மற்றும் மேலாண்மையை தனியாரிடம் ஒப்படைத்துவிடுவது. இந்த முறை இங்கிலாந்து நாட்டில் பின்பற்றப்படுகிறது.

இரண்டாவது, நீர் வினியோகம் மற்றும் மேலாண்மையை நீண்ட காலத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை விடுவது. இந்த முறை பிரான்சு நாட்டில்பின்பற்றப்படுகிறது. மூன்றாவது முறை தனியாரிடம் நீர் மேலாண்மையின் நிர்வாகத்தை ஒப்படைத்துவிடுவது. உலக வர்த்தக கழகத்தில் உறுப்பினராக உள்ள இந்தியா மேற்கூறிய கொள்கைகளை பின்பற்றி சட்ட திட்டங்களை மாற்றி அமைத்து வருகிறது.

தேசிய நீர் கொள்கை

இயற்கையின் கொடையான எண்ணெய்க்கு அடுத்தபடியாக நீர் இன்று மிகப்பெரிய வர்த்தகப் பொருளாக மாறிவருகிறது. கடந்த 2012ம் ஆண்டு “தேசிய நீர்க் கொள்கை வரைவு  2012”  என்கிற திட்ட வரைவு ஒன்றை அன்றைய காங்கிரஸ் அரசு வெளியிட்டது. இதற்கு முன் 2002ல் ஒரு தேசிய நீர்க்கொள்கை வெளியிடப்பட்டு அது அமலிலும் இருந்து வந்த நிலையில், எவ்வித காரணமும், முன்தேவையும் கூறாமல் புதிய தேசிய நீர்க்கொள்கை வரைவு தீட்டப்பட்டது.

“இந்தியாவில் மிகவும் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம் தண்ணீர்தான். இதை மாற்றியமைக்க வேண்டும்” என்று கூறிய அன்றைய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவின் வழிகாட்டுதலில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளுக்கு உலக வங்கி கடன் அளிக்கும்போது விதிக்கும் முக்கிய நிபந்தனை தண்ணீர் தனியார்மயமாக வேண்டும் என்பதுதான்.

தண்ணீர், சுகாதாரம் முதலான மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டியதில்லை என்பதும் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி. இதுபோன்று நீர் வியாபாரத்தை ஊக்குவிக்கும் வகையில்தான் இந்த புதிய வரைவு கொண்டுவரப்பட்டது. இந்த வரைவுக்கான அடிப்படை, உலக வங்கியின் கீழ் இயங்கும் “நீர் ஆதாரக் குழு 2030” என்ற அமைப்பு வழங்கிய “தேசிய நீராதார திட்டவரைவுக்கான பரிசீலனை  சீர்திருத்தங்களுக்கான திசை வழிகள்” என்ற அறிக்கையே ஆகும். 

முதல்படியாக நீர் குறித்தான மாநில அரசுகளின் அதிகாரத்தை மறுத்து, பொது அதிகாரப் பட்டியலுக்கோ அல்லது மத்திய அரசின் அதிகார பட்டியலுக்கோ மாற்றியமைக்க மத்திய அளவிலான சட்டமாத நீர் உருவமை சட்டம் (Water Framework Act) இயற்றப்பட வேண்டும் என்று இக்கொள்கை வரைவு கூறியது. இதன்படி சட்டத்தை வரைவு செய்ய முன்னாள் திட்டக் குழு தலைவர் ஆலாக் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தது.

இந்த குழுவிற்கு முன்பாக முன்னாள் மத்திய நீர்வளத்துறை  செயலாளர் ராமசாமி ஐயர் தலைமையிலான குழு, தேசிய திட்டக் குழுவிற்கு 2011ம் ஆண்டு ஒரு சட்டவரைவு வழங்கியது. ராமசாமி குழுவின் சட்டவரைவில் இடம்பெற்றுள்ள பல சரத்துக்கள் 2012 திட்ட வரைவில் இடம்பெற்றுள்ளன. மேலும் நதிகள் வாரிய சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய நீர்வளத் துறை முன்னாள் நீதிபதி டோபியா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

1882ம் ஆண்டின் இந்திய சொத்துக்களின் மீதான உரிமை கட்டுப்பாடு சட்டம் திருத்தப்பட்டு, நிலத்தடி நீரின் மீது நிலச் சொந்தக்காரர்களுக்கு உரிமையில்லை என்று மாற்ற வேண்டுமென்கிறது தேசிய நீர் கொள்கை. நீரின் மீது உள்ள மக்களின் பாரம்பரிய உரிமையையும், மாநிலங்களின் உரிமையையும், உள்ளாட்சி அமைப்புகளின் உரிமையையும் ஒருங்கே பறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முழு அதிகாரத்தையும் கொண்டு செல்ல மறைமுகமாக வழி செய்கிறது புதிய தேசிய நீர்க் கொள்கை முன்வரைவு.

மின்சாரத்தை தனியார் மயமாக மாற்றுவதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட்டது போல, மத்திய அளவிலான நீர் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று இக்கொள்கை வரைவு கூறுகிறது. இந்த ஆணையம் கட்டண நிர்ணயம், நீர் ஒதுக்கீடு, கண்காணித்தல், ஆலோசனை வழங்குதல் முதலானவற்றை செய்யும். நீர் வர்த்தக பண்டமாக கருதப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறுகிறது இக்கொள்கை.

இந்த வரைவு கொள்கையானது, தண்ணீர் துறையில் சேவையை அளிப்பவர் என்ற பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதற்கு பதிலாக, சமூகக் குழுக்களும் தனியார் துறையினரும் இச்சேவையை அளிப்பதை ஊக்குவித்து ஆதரிக்க வேண்டும் என்கிறது. தண்ணீர் மற்றும் கழிவுநீருக்கு வரி விதிப்பது அவசியம் என்றும் இந்த வரைவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அளவிலான நிரந்தர நீர் தீர்ப்பாயம் ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்றும் இவ்வரைவு கூறுகிறது. காங்கிரஸின் தேசிய நீர் கொள்கையில் இருந்த அனைத்து அம்சங்களும் பாரதிய ஜனதா கொண்டு வந்துள்ள சட்ட மசோதாக்களில் இடம் பெற்றுள்ளன. இதன்படி தண்ணீர் தனியார் மயமாகும். குடிநீர் அடிப்படை உரிமை தான். ஆனால் அதற்கு நீங்களும் நானும் விலை கொடுக்க வேண்டும். நம் நிலத்தில் இருந்து நீர் எடுக்கவும் கட்டணம் செலுத்த வேண்டும்.

மாற்றத்தை எதிர் நோக்கி

ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 லட்சம் குழந்தைகள் மாண்டு போகின்றன. மிகக்கொடிய இரு பெரும் நோய்களான எய்ட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட, தூய குடிநீர் கிடைக்காமல் மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம். ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.

உலகின் 88  கோடியே 40 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. 260 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. இந்த நிலையில் இந்தியாவில் தண்ணீர் தனியார் மயமானால் அது மேல்தட்டு மக்களை மட்டுமே சென்றடையும் என்பதை கூறத் தேவையில்லை. இதற்கு உதாரணமாக தில்லியில் தனியார் மயமாக்கப்பட்ட தண்ணீர் எப்படி மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே பயன் அளிக்கிறது என்பதை ஓர் ஆய்வு தெளிவுபடுத்துகிறது (பார்க்க : Sujith koonan & Preeti Sampat, “Delhi Water Supply Reforms”, EPW, 28th April 2012).

உலகமய பொருளாதார கொள்கைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக திகழும் சமூக-பொருளாதார சமத்துவக் கொள்கைகளுக்கு நேர் எதிராக உள்ளது. இந்த முரண்பாட்டுடன்தான் பல உலகமய கொள்கைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இவற்றில் பல சட்டங்களை இந்திய நீதிமன்றங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.

தற்போதைய தலைமுறை உலகமய ஆதரவு மனப்பான்மையை ஊடகங்கள் மூலம் பெற்று வளர்ந்தவர்கள். இதன் விளைவாக எதையும் வர்த்தகப் போட்டி அடிப்படையில் காணும் போக்கு பெருகி வருகிறது. அந்த வகையில் இயற்கை வளங்கள் கூட வியாபாரப் பண்டமாக மாறி வருகின்றன. நுகர்வு கலாச்சாரம் தொடர்ந்து மக்களிடையே போதிக்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். கலாச்சார, பண்பாட்டு அளவில் நாம் உலகமய கொள்கைகளை எதிர்க்கும் மனநிலையை வளர்க்க வேண்டும்.

கௌதம புத்தர் இப்படி கூறுகிறார்: “பசியாறுவதற்கு உணவை உட்கொள்ளுங்கள், தாகத்தைத் தணிப்பதற்கு நீரை அருந்துங்கள், ஒரு பூவின் அமைப்பையும், நறுமணத்தையும் அழிக்காமல் பூவிலிருந்து தேனைச் சுவைக்கும் வண்ணத்துப் பூச்சியைப் போல் வாழ்க்கையில் அடிப்படை தேவைகளை நுகருங்கள்.”

பொலிவியாவில் பெக்டெல் மற்றும் சூயஸ் நீர் நிறுவனங்கள்

1990-களில் உலக வங்கியின் வழிகாட்டுதலின் படி, தென்னமெரிக்க நாடான பொலிவியா (Bolivia)-வின் கொச்சபாம்பா (Cochabamba) பகுதியின் நீர் வளம் முழுவதும் பெக்டெல் (Bechtel) என்கிற பன்னாட்டு நிறுவனத்தின் பாதங்களில் ஒப்புவிக்கப்பட்டது. ‘தண்ணீர் சந்தையில்’ தனது ஏகபோகத்தை நிலைநாட்டிக் கொண்ட பெக்டெல், அதைத் தொடர்ந்து குடிநீரின் விலையை அசாத்தியமான அளவுக்கு உயர்த்திக் கொண்டே போனது. வறண்ட வாய்க்குத் தண்ணீர் கூட கிடைக்காது என்கிற நிலைக்கு கொச்சபாம்பா மக்கள் தவிக்க விடப்பட்டனர். அதைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டில் ஆத்திரமுற்ற மக்கள் கொச்சபாம்பா தெருக்களில் போராட்டங்களில் இறங்கினர். தங்கள் உரிமைகளுக்காக போராடிய மக்களின் எழுச்சி நிலைத்து நின்றது – பெக்டெல் நிறுவனம் விரட்டியடிக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செமாப்பா (City's Municipal Water supply Company SEMAPA) என்ற பொதுத்துறை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்டெர்லைட்-ற்கு எதிரான போராட்டம் போலவே, பெக்டெல்-ற்கு எதிரான போராட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட, அதை ஒடுக்க நினைத்த அரசு, தன் சொந்த நாட்டு மக்களை 6 பேரை சுட்டு கொன்றது. கார்ப்ரேட்டுக்கு ஆதரவான அரசுகளின் ஒடுக்குமுறை முகங்கள் உலகம் முழுக்க ஒரே முகமாக உள்ளது.

Cochabamba Water War

The Cochabamba Water War, was a series of protests that took place in Cochabamba, Bolivia's second largest city, between December 1999 and April 2000 in response to the privatization of the city's municipal water supply company SEMAPA

Arrested: 20+
Total number of deaths: 6

Bechtel vs Bolivia: Details of the Case and the Campaign

https://democracyctr.org/archive/the-water-revolt/bechtel-vs-bolivia-details-of-the-case-and-the-campaign/

Video

Water war in cochabamba bolivia and future scenarios (from Blue Gold: World Water Wars)

https://www.youtube.com/watch?v=hn9wujK0ho4

https://www.youtube.com/watch?v=G71OBHx_Gro

ஆனால், நாட்டின் பிற பகுதிகளில் தண்ணீர் தனியார் மய முயற்சிகள் தொடர்ந்தன. பொலிவிய தலைநகரின் எல் அல்டோ (El Alto) பகுதியில் தண்ணீர் வழங்கும் ஒப்பந்தம் பன்னாட்டு நீர் நிறுவனமான சூயஸிடம் (Suez) ஒப்படைக்கப்பட்டது. 2005-ம் ஆண்டில் எல் அல்டோ மக்கள் தெருக்களில் இறங்கி போராடிய பிறகு சூயஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

Bolivia: Privatized Water Company Defeated

https://nacla.org/article/bolivia-privatized-water-company-defeated

தென்னாபிரிக்காவில் சூயஸ் மற்றும் பைவாட்டர் நீர் நிறுவனங்கள்

தென் ஆப்பிரிக்காவில் உலக வங்கி, ஐஎம்எப் மற்றும் மேற்கத்திய நாட்டு அரசுகளின் வழிகாட்டல்களை பின்பற்றி பன்னாட்டு நீர் நிறுவனங்களான சூயஸ், பைவாட்டர் போன்றவற்றின் வற்புறுத்தலுக்கு பணிந்து தண்ணீர் தனியார் மயம் செயல்படுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தண்ணீர் வினியோகத்துக்காக ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டு, தனியார் நிறுவனங்கள் பங்கெடுப்பதற்கான நிதி ஏற்பாடுகளை அரசு உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து பல உள்ளாட்சி அமைப்புகள் தண்ணீர் வினியோகத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க ஆரம்பித்தன.

இதன் உடனடி விளைவாக ஏழை மக்களுக்கு தண்ணீர் வழங்கும் சேவைகளுக்கான கட்டணம் பெருமளவு உயர்த்தப்பட்டது. சூயஸ் நிறுவனத்தின் தனியார் சேவை அமல்படுத்தப்பட்ட 1994க்கும் 1996க்கும் இடையே கேப்டவுனிலுள்ள ஒரு நகரில் தண்ணீர் கட்டணம் 6 மடங்கு உயர்த்தப்பட்டு மாதத்துக்கு R60 (இன்றைய மதிப்பில் சுமார் ரூ 350) என்று உயர்த்தப்பட்டது. கேப்டவுனின் பிற நகரங்களிலும் ஜோகன்னஸ்பர்க்கிலும் சுரங்கங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்குவதற்கான திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது.

உலக வங்கியின் ஆலோசனைப் படி தண்ணீருக்கான கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு தண்ணீர் இணைப்பை துண்டிக்கும் கொள்கையும் அமல்படுத்தப்பட்டது. 2005-ம் ஆண்டு மதிப்பீட்டின் படி 1 கோடி ஏழை தென் ஆப்பிரிக்கர்களின் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நிலுவைகளை வசூலிக்கும் சட்ட நடைமுறைப் படி 20 லட்சத்துக்கும் அதிகமான பேர் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆதாரங்கள் மறுக்கப்பட்ட குடும்பங்கள் மாசுபடுத்தப்பட்ட தண்ணீர் ஆதாரங்களிலிருந்தும் தொலை தூர கிணறுகளிலிருந்தும் தண்ணீர் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

இதன் காரணமாக 2000-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய காலரா கொள்ளை நோய் ஜூலு நேட்டாலில் பரவியது. 1.2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சூயஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்திருந்த ஜோகன்னஸ்பர்க்கின் அலெக்சாண்டிரா நகரீயத்தில் ஏற்பட்ட காலரா கொள்ளை நோய் பரவலில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு அரசின் தலையீடுதான் நோய் பரவலை தடுக்க முடிந்தது.

கோவையில் சூயஸ்

கோவை மாநகராட்சிக்கான குடிநீர் விநியோகத்துக்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துடன் 400 மில்லியன் யூரோ மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டங்கள்மூலம் நாளொன்றுக்கு, 220 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை மக்களுக்கு  24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, 30 ஆண்டுகளுக்கு, 3,100 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

பொலிவியாவில், தென்னாப்பிரிக்காவில் வஞ்சித்ததுபோல் கோவையையும் வஞ்சிக்கப்போகிறதா? அல்லது ஒழுங்காக தண்ணீர் சேவையை வழங்கப்போகிறதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக