சனி, 26 செப்டம்பர், 2020

பணமதிப்பிழப்பு தோல்வி பொருளாதாரம் பாதிப்பு பாஜக பணத்தாள்

 

aathi1956 aathi1956@gmail.com

சனி, 10 நவ., 2018, பிற்பகல் 6:28
பெறுநர்: எனக்கு
கலைச்செல்வம் சண்முகம் ராசசேகரன் மன்னை மற்றும் Ambalarajan Nalladurai உடன் உள்ளார்.
பண மதிப்பு நீக்கம்
பொருளாதாரத்தை உயர்த்தியதா? வீழ்த்தியதா?
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே முன் அறிவிப்பு ஏதுமின்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அன்று நள்ளிரவு முதல் புழக்கத்தில் இருக்கும் ௹.500. 1,000 பணத்தாள்கள் சட்டப்படி செல்லாது (No more legal tender) என்று அறிவித்தார்.
உங்களுக்கு ஏற்படும் சிரமங்களை
50 நாட்களுக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று நாட்டு மக்களை கேட்டுக்கொண்ட மோடி, இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு கடும் சவாலாக இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்றவும், பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வதைத் தடுக்கவும் இப்படிப்பட்ட
ஒரு அதிரடி நடவடிக்கை தேவைப்படுவதாகக் கூறினார்.
அந்த நாளில் இருந்து அடுத்த
3 மாதங்கள் இந்நாட்டு மக்கள் எதிர்கொண்ட சொல்லொனா துயரங்களை வார்த்தைகளில் வடிப்பதெனில் அதை ஒரு புத்தகமாகவே எழுதி விடலாம், அந்த அளவிற்கு இந்நாட்டின் 90 விழுக்காடு மக்கள் தங்களிடம் இருந்த பணத்தை மாற்றிக்கொள்ளவும், உழைத்ததற்கு ஊதியம் பெறவும், அன்றாட வாழ்விற்கு தேவையான ரொக்கமின்றி பெரும் பரிதவிப்பிற்கு ஆட்படுத்தப்பட்டார்கள்.
ஆனால் மோடி சொன்ன
அந்த 50 நாட்களுக்குப் பிறகு இந்நாட்டில் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப்பட்ட கருப்புப் பணம் சிக்கியதா? இல்லை புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதா? அல்லது இருந்த இடம் தெரியாமல் மறைந்ததா? என்றால்
எதுவும் நடக்கவில்லை!
பண மதிப்பு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்பட வேண்டிய ரூ.15,417.93 இலட்சம் கோடியில் ரூ.15,310.73 இலட்சம் கோடி வங்கிக்கு திரும்பி விட்டதாக ஓராண்டுக்குப் பிறகு இந்திய மைய வங்கி (ஆர்பிஐ) அறிவித்தது!
வெறும் ரூ.10,720 கோடி மட்டுமே வங்கிக்கு வாராத – அதாவது கருப்புப் பணமாகும். இவ்வளவுதான் இந்நாட்டின் புழக்கத்தில் இருந்த கருப்புப் பணமா? பதில் சொல்ல முடியாமல் திணறியது மோடி அரசு.
இதில் வேடிக்கை என்னவெனில் நேபாளத்திலும் இந்திய ரூபாய்கள் பெருமளவிற்கு புழக்கத்தில் உள்ளது, அவைகள் இந்தக் கணக்கிலேயே கொண்டு வரப்படாமல் மாற்றப்பட்டதாம்! அதையும் கொண்டு வந்திருந்தால் பண மதிப்பு நீக்க நடவடிக்கை இன்னமும் பெரிய கேலிக் கூத்தாக முடிந்திருக்கும். ஏனெனில் நமது நாட்டின் பொருளாதாரத்தில் கருப்புப் பணப் புழக்கம் என்பது இந்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) ஈடாக உள்ளதென்றுதான் உலக வங்கி முதல் சர்வதேச நிதியம் வரை கூறியுள்ளன. இதில் பெரும் பகுதி பினாமி சொத்துக்களாகவும், மற்றொரு பெரும் பகுதி அயல் நாட்டு வங்கிகளின் ரகசிய கணக்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் பலமுறை சொல்லியுள்ளன.
ஆனால் இந்நாட்டின் பிரதமர் மேற்கொண்ட மாபெரும் அதிரடி நடவடிக்கையில் சிக்கியதோ
வெறும் ரூ.10,730 கோடி மட்டுமே!
ஆக மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை பெரும் தோல்வியடைந்துவிட்டது என்பதை இந்திய மைய வங்கி கொடுத்த கணக்கே நிரூபித்துவிட்டது.
ஆனால் இந்த நடவடிக்கையால் இந்நாட்டு மக்களின் வாழ்வும் உழைப்பும் வணிகமும் வர்த்தகமும் கொடூரமாக சிதைக்கப்பட்டதே? தங்களுடைய பணத்தை மாற்றிக்கொள்ள வழிவகையின்றி அலைந்து திரிந்து
அந்த ரூ.2,000 பணத்தாளைப் பெற மேற்கொண்ட முயற்சியில் உடல் நலம் கெட்டு 150 பேருக்கு மேல் உயரிழந்தனரே? பல இலட்சக் கணக்கான கோடி ரூபாய்
பொருளாதார இழப்பு ஏற்பட்டதே? இதற்கெல்லாம் என்ன பதில்?
பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்த பிரதமர் மோடி இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறிவில்லை, இரண்டு ஆண்டுகள் நிறைவுற்ற பிறகும்!
ஆனால் பதில் கூறியுள்ளார் இந்நாட்டின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
“ரொக்கப் புழக்கத்தை முடக்கும் நோக்கமில்லை, மாறாக இந்நாட்டின் பொருளாதாரத்தை முறைப்படுத்தவே பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று கூறியுள்ளார்.
நமது கேள்வி என்னவெனில், புழக்கத்தில் இருந்த ரூ.500, 1,000
பணத் தாள்களை செல்லாததாக்கியத
ு ரொக்கப் புழக்கத்தை முடக்காதா?
ஓர் இரவில் தங்களிடம் இருந்த
பணத் தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மறுநாள் காலை தங்களுக்கான அத்யாவசியப் பொருட்களை வாங்குவதற்கு இந்நாட்டு மக்களிடம் ரொக்கம் இருக்குமா என்று சிந்தித்து எடுத்த முடிவா அது? அன்றைக்கு எல்லோரிடமும் இருந்தது மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500, 1,000 பணத் தாள்கள்தானே? பிறகு ரொக்கப் புழக்கத்தை முடக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று கூறுவது அறிவற்றப் பேச்சாக அல்லவா இருக்கிறது?
சரி, புழக்கத்தில் இருந்த ரூ.15 இலட்சம் கோடி பணத் தாள்களை மதிப்பு நீக்கம் செய்தீர்கள். அதற்கான மாற்றுத் தாள்கள் அடித்து தயாராக வைக்கப்பட்டிருந
்ததா?
வெறும் ரூ.2,000 தாள்களை மட்டும் – அதுவும் மிகக் குறைந்த அளவிற்கு வங்கிகளுக்கு அனுப்பி மக்களை வதைத்தீர்களே மறுக்க முடியுமா?
பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து 50 நாட்களுக்குப் பிறகும் சற்றேறக்குறைய இரண்டு இலட்சம் ௹பாய் அளவிற்கு மட்டுமே புதிய தாள்கள் புழக்கத்திற்கு வந்தது. இதனால் அல்லவா சந்தைகளும், சிறு குறு தொழில்களும் ரொக்கமின்றி சிதைந்தன? விவசாயிகளின் விளைப் பொருட்களைக் கொள்முதல் செய்த வணிகர்கள் அவர்களுக்கு கொடுக்க பணமின்றி திருப்பி அனுப்பிய கதை நாளிதழ்களில் பரவலாக வெளிவந்ததே? கண்டுகொண்டதா இந்நாட்டு அரசு?
இல்லையே..
அப்போதுதான் டிஜிட்டல் முறையில் பொருள் வர்த்தகத்தையும், பணமாற்றத்தை செய்ய வாருங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுக்கிறார். இந்நாட்டு மக்களில் எத்தனை விழுக்காடினருக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை பரிச்சயமாக இருந்தது? சிந்தித்தீர்களா?
எருதின் புண் காக்கை அறியாது என்பதுபோல் டிஜிட்டல் வியாபாரத்தை பெருக்க ரொக்கப் புழக்கத்தை அதிகரிக்காமல் காரியமாற்றினீர்களே, மறக்க முடியுமா?
பெங்களூருவை அடுத்த கோலாரில்தான் ஆசியாவின் 2வது பெரிய தக்காளிச் சந்தை, அங்கு தங்களுடைய உற்பத்தியை விற்க வந்த விவசாயிகள் ரொக்கத் தட்டுப்பாட்டால் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றனரே, ஜெட்லிக்குத் தெரியுமா?
இதுதான் தமிழ்நாடு முதல் இந்தியாவின் அனைத்து மாநில விவசாயச் சந்தைகளிலும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடி, இழப்பு யாருக்கு? அன்று விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்று மோடி அரசு கணக்கிட்டுள்ளதா? காப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கும் உங்களுக்கு விவசாயிகளின் துயரம் தேர்தல் வந்தால்தானே தெரியும்?
வரி வருவாய் பெருகியுள்ளது யாரால்?
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு அதன் காரணமாக வரி வருவாய் பெருகியுள்ளது என்கிறார் அருண் ஜெட்லி.
அக்டோபர் 31ஆம் தேதி வரையிலான வரி வருவாய் வசூல் கடந்த ஆண்டை விட 20.2 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் அதில் குறிப்பாக கார்ப்பரேட் வரி வசூல் 19.5 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் 6.6 மற்றும் 9 விழுக்காடாக இருந்த நேரடி வரி வருவாய் வசூல் இந்த இரண்டு ஆண்டுகளில் 14.6 மற்றும் 18 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
கார்ப்பரேட் வரி வருவாய் கூடியுள்ளது என்று கூறியுள்ளதே இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் எந்தப் பாதிப்பும் கார்ப்பரேட்டுகளுக்கு இல்லை என்பதை உறுதி செய்கிறது.
அதுமட்டுமல்ல, ஏராளமான நிழல் நிறுவனங்களை வைத்து வரி ஏய்ப்பு செய்தது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அந்த நிழல் நிறுவனங்களை தொடங்கி ஆண்டாண்டுக் காலமான வரி ஏய்ப்பு செய்தவர்கள் பட்டியலை ஏன் வெளியிடவில்லை? வெளியிட்டால் தெரிந்திருக்கும் அவர்கள் இந்நாட்டை ஆளுகின்ற ஆளும் கட்சிகளுக்கு அதிக நன்கொடைத் தருபவர்கள் என்பது.
சரி, வரி வருவாயைப் பெருக்க
பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான் வழியா? கருப்புப் பணப் புழக்கத்தை ஒழித்தல் என்பதே வரி ஏய்ப்பை கண்டுபிடித்து வரி வசூல் செய்யும் நோக்கம் கொண்டதுதானே? அதனைக் கண்டுபிடிக்க ஒரு வணிக நிறுவனம் வைத்துள்ள பல்வேறு வங்கிக் கணக்குகளை ஆராய்ந்தாலே கண்டுபிடித்துவிடலாமே? இதை வருமான வரித்துறை மூலமாக செய்திருக்கலாமே? எதற்கு பண மதிப்பு நீக்க நடவடிக்கை?
நிதியமைச்சர் அருண் ஜெட்லி அளித்துள்ள மற்றொரு புள்ளி விவரம் மிகவும் கவனிக்கத்தக்கது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் மறைமுக வரி வருவாய் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 விழுக்காட்டில் இருந்து 5.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.
அதாவது ஒரு விழுக்காடு உயர்வு என்றால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில்! இந்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2.6 டிரில்லியன் டாலர் ஆகும். இது உலகின் ஆறாவது பெரும் பொருளாதாரம். இந்திய ரூபாயில் சொல்வதெனில் 190 இலட்சம் கோடி. இதில் ஒரு விழுக்காடு என்பது ரூ.1.90 இலட்சம் கோடி!
இந்த மறைமுக வரி என்பது இந்நாட்டு மக்கள் வாங்கிப் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் வசூலிக்கப்படும் உற்பத்தி உள்ளிட்ட வரிகள் அல்லவா?
இதை மட்டும் ஜிடிபியில் சொல்பவர் வருமான வரி வசூலை மட்டும் கடந்த ஆண்டை விட… என்று கூறி மழுப்புவது ஏன்? உண்மை வேறாக இருப்பதால்!
ஆம். இந்திய ஒன்றிய அரசின் மைய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் புள்ளி விவரத்தின் படி, 2009-10ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, இந்திய அரசின் ஒட்டுமொத்த வரி வருவாயில் நேரடி வரியின் மூலம் பெற்றது 38 விழுக்காடு வரி. ஆனால் மோடி ஆட்சியில் இதே நேரடி வரி வருவாய் 2017-18ஆம் ஆண்டில் 32 விழுக்காடாக குறைந்துள்ளது. எப்படி? வரிச் சலுகைகளால்!
பெரும் பணக்காரர்களின் சொத்து வரி 30 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக குறைக்கப்பட்டது அல்லவா? இப்படி பல்வேறு
வரிச் சலுகைகளால் நேரடி வரி வருவாய் அளவு குறைந்துகொண்டே வருகிறது.
அதுமட்டுமல்ல, ஆண்டுக்கு வாடகை மூலம் மட்டும் ரூ.500 கோடிக்கு மேல் வருமானம் உள்ள இந்தியர்கள் எண்ணிக்கை 3,500க்கும் அதிகம் என்று கிரெடிட் சூஸ் எனும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கடன் தர நிர்ணய அமைப்பு கூறியுள்ளது. ஆனால் நேரடி வரி விதிப்பு வாரியப் புள்ளி விவரத்தின்படி, ௹.500 கோடிக்கு மேல் வருவாய் உள்ளவர்கள் வெறும் 179 பேர் மட்டுமே! யாரைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது
மோடி அரசு?
கடைசியாக, நேற்று முதலில் ஜெட்லி டிவிட்டரில் பதிவிட்டபோது, பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கிகளுக்கு பெருமளவிற்கு வந்த சேர்ந்த நிதியால் வங்கிகளின் கடன் கொடுக்கும் திறன் உயர்ந்துள்ளது என்று கூறியிருந்தார். அப்படியென்னால் நிதியமைச்சர் அவர்களே, எதற்காக இப்போது இந்திய மைய வங்கியிடம் இருக்கும் காப்பு நிதியில் (Reserve fund) இருந்து ரூ.3.60 இலட்சம் கோடியை வங்கிகளின் நிதித் தேவைக்கு கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள்?
எல்லாம் முரண்.
பிறகு இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கம்தான் என்ன?
நேரடி நோக்கங்கள் என்று கூறப்பட்ட அனைத்தும் உண்மையற்றவை என்பது நிரூபணமாகிவிட்டது.
ஆனால் விவசாயிகள், சிறு குறு தொழில்கள் சிதைந்ததால் ஏற்பட்ட வேலை வாய்ப்பு இழப்பு, உற்பத்தி இழப்பு, ஏற்றுமதி பாதிப்பு ஆகியவற்றால் இந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழுந்த கட்டமைப்புகள் சீரழிக்கப்பட்டுள்ளன.
இந்த நாட்டில் இருக்கும் பணப் புழக்கத்தை வணிகமாக்கும் திட்டத்துடன் கொண்டு வரப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை பல நூறு மடங்கு – அதனை ஜெட்லி சுட்டிக்காட்டியுள்ளார் – பெருகியுள்ளது.
அதனால் யாருக்கு லாபம்? எவ்வளவு வேலை வாய்ப்புக்களை டிஜிட்டல் இந்தியா உருவாக்கியது?
பதில் சொல்வார்களா?
ஆனால் டிஜிட்டல் மயமாக்க இந்நாடு முழுவதும் தானியங்கி பணப் பட்டுவாடா (ஏடிஎம்) இயந்திரங்கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன!
ஆக, இந்நாட்டின் பொருளாதாரத்தின் பாதையை அவர் நினைத்த புதிய இந்தியாவை உருவாக்கும் பாதையில் செலுத்த தொடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை இந்நாட்டின் பொருளாதார முதுகெலும்பை முறித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் பின்புலத்தில் சர்வதேச சக்திகளின் தூண்டுதல் இருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அந்த உண்மைகள் வெளிவரும்போது பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் உருவானதை விட
ஒரு பெரும் அதிர்வு இந்திய அரசியல் அரங்கில் ஏற்படும்.
கா. ஐயநாதன்.
Ayyanathan K
சென்னை, நவம்பர் 09, 2018.
5 மணி நேரம்

வங்கி மோடி மதிப்பிழப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக